குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

(தொடர்ச்சி)

ஆறாம் அறிவு

நாள்- 20-05-2018-ஞாயிறு
உ.ச.ஆ.20-05-33.

lotus

 

Maharishi

guru seedan

IMAGE-கு-சீ- உ- நோக்கம்

சீடன்: (இரு கைகளைக் கூப்பி.. சற்று உரத்த குரலில்) வாழ்க வளமுடன் ஸ்வாமிஜி!

குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? இன்றைக்கு குரல் பலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறதே?! சரி சரி உட்கார். நேற்றைக்கு ஆறாவது அறிவின் நோக்கம் என்ன என்று கேட்டாயல்லவா?

சீடன்:  ஆம் ஸ்வாமிஜி.

குரு: கூறுகிறேன்… எல்லாம் வல்ல தெய்வமே, நானாகவும் நாமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோமல்லவா? அதனைச் செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் அறிவதே ஆறாவது அறிவின் நோக்கமும், பயனும்.

சீடன்:  ஸ்வாமிஜி தங்களுடைய விளக்கம் மனதிற்கு திருப்தியைத் தருகிறது. ஆனால்…

குரு: என்ன ஆனால்… என்று இழுக்கிறாயே…?

சீடன்:  ஒன்றுமில்லை ஸ்வாமிஜி. செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் இருப்பதில் தான் ஸ்வாமிஜி எனது சிக்கல். அந்த நிலையில் எப்போதுமே இருக்க முடிவதில்லை. இல்லை..இல்லை அந்த நிலையே எனக்குக் கிட்டவில்லைதான் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி புரிந்தும் அந்த நிலை கிடைக்காததற்கு காரணம் என்ன ஸ்வாமிஜி?

குரு:  கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பிச் சேரும் வரை நீருக்கு அமைதி இல்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக… ஆறாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால்தான் அதற்கு ஓய்வும் அமைதியும்.

சீடன்: பிரம்மம் தன்னைத் தானே அறிவதற்குக் கடலோடு ஒப்பிடலாமா ஸ்வாமிஜி?

குரு: பிரம்மம் அதன் நிலையிலேயேதான் இருக்கிறது. உண்மையில் தன்னைத் தானே அறியவேண்டியது யார் என்றால் இந்த தனித்த நிலையில் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரும் மனிதன் தான்.

சீடன்: மனிதன் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரக்காரணம் என்ன ஸ்வாமிஜி?

குரு:  மனிதனிடம் தன்னிலையை அறியத் தக்க ஆறாவது அறிவு கூடியுள்ள போதும் அவன் உடலளவிலும் ஐயுணர்வு மயக்கத்திலும் தான் வாழ்ந்து வருவதுதான் சிக்கல்களுக்கெல்லாம் காரணம்.

சீடன்: எப்போது அந்த மயக்கம் தெளிந்து விழிப்பு ஏற்படும்?

குரு:  மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப் பொருள் – என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற விழிப்பு ஏற்படும்.

சீடன்: ஸ்வாமிஜி, ‘விளக்கம் பெற்றால் தான்’ என்று கூறாமல், ‘உண்மை விளக்கம் பெற்றால் தான்’ எனக் கூறுகிறீர்களே?

குரு: நவயுக வியாசரான நம்முடைய குருதேவர் கூறுவது போல், விளக்கம் என்பது information. உண்மை விளக்கம் என்பது confirmation. இந்த confirmation கிடைத்துவிட்டால் போதும், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற Transformation ஏற்பட்டு விடும். இன்னும் சற்று விரிவாகக் கூறுகிறேன் கேள்!

சீடன்: (இரு கைகளைக் கூப்பி..) I am all ears swamiji!

குரு: பள்ளி, கல்லூரிகளில் கருத்தியல் செயல்முறை பயிற்சி இருக்கிறதல்லவா?! அதுபோல்தான் information என்பது கருத்தியல். confirmation என்பது செயல்முறை.

சீடன்: ! ! ! !

குரு: இப்படி confirmation கிடைத்து Transformation ஏற்படும்போது தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்கிற உறுதிப்பாட்டில் நிலைக்கமுடிகிறது.

சீடன்: அருமை ஸ்வாமிஜி. நன்றி !

குரு: ஆனால் இந்நிலையை அடைய அயரா விழிப்புநிலை தேவை.

சீடன்: அவ்விழிப்புநிலையை அடைவது எப்படி ஸ்வாமிஜி!

குரு: இவ்விழிப்பைத் தருவது எளிய முறைக் குண்டலினி யோகமே. நீ உன்னை அறிந்து கொள்ள முயற்சி செய். மனிதன் என்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப் பதிவுகளையும் கழித்துப்பார். உன்னில் மிஞ்சுவது எல்லாம்வல்ல பரம்பொருளே. உருவத்திலே தான் மனிதன், ஆனால் அதைக் கடந்து விண்ணறிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய் விட்டால், எந்தப் பொருளுமே சிவம் தான். இறை நிலையே தான். இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.
பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளி தான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும், புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவீசத் தொடங்கிவிடும். படிப்படியாகப் பிரம்மமே தானாக இருக்கும் அறிவாட்சித்திறம் உண்டாகும்.

சீடன்: ….!!!!

குரு: என்ன..? அறிவாட்சித்திறம் எப்படி கைவல்யமாகும் என்றுதானே உனது மனம் வினவுகிறது?

சீடன்: (ஆச்சரியத்துடன்) ஆம் ஸ்வாமிஜி !

குரு: இன்னும் சற்று நேரத்தில் இறைநிலைத் தவம் தொடங்கவிருக்கிறது. தவம் முடியட்டும். மாலை சந்திப்போம்!

சீடன்: உத்தரவு ஸ்வாமிஜி !

வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!