குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

வாழ்க மனித அறிவு!                                                                                                                                  வளர்க மனித அறிவு!!

குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

(தொடர்ச்சி)

நாள்: 13-05-2018-ஞாயிறு

உ.ச.ஆ.13-05-33

lotus

Maharishiguru seedan

gurussss

சீடன்: வாழ்க வளமுடன்!

குரு: வாழ்க வளமுடன்! உட்கார். இன்றைக்கு என்ன வினாவோடு வந்துள்ளாய்?

சீடன்:  ‘நான்’ என் தத்துவமே நாமாகியுள்ளோம் என்று கூறுகின்றார்களே? எப்படி ஸ்வாமி?

குரு:  சொல்கிறேன்… உதாரணத்திற்கு… சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இதில் பொதுவான விஷயம் ஏதாவது உள்ளதா?

சீடன்:  ம்ம்..பொதுவான விஷயம்… இருக்கிறது ஸ்வாமிஜி!

குரு:  என்ன அது?

சீடன்:  தண்ணீர் ஸ்வாமிஜி.

குரு:  Good!இப்போது சொல்.. தண்ணீர் என்று ஒரு பொதுப் பெயர் இருக்கும்போது ஏன் சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று கூறவேண்டும்?

சீடன்:  சமுத்திரம் மிகப் பெரியது… மற்ற இடங்களில் உள்ள நீரின் இருப்பு, தன்மை, ஓட்டம் மற்றும் சுற்றுப்புறம் இவற்றிக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

குரு: சரியாகச் சொன்னாய். வாழ்க வளமுடன்! இப்போது ஆதி எனும் பரம்பொருள் மெய்… என்ற இறைவணக்கப் பாடலை முழுவதுமாகப் பாடு பார்க்கலாம்.

சீடன்: (கண்களை மூடிக்கொண்டு)

…….. ……. …… (சிறிது மெளனம்)

ஆதியெனும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந்து இயங்குகின்ற  நிலைமைக்கு ஏற்ப
மூலகங்கள் பலவாகி  அவையிணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
நீதிநெறி உணர்  மாந்தராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

(சிறிது நேரம் நிசப்தம் நிலவுகிறது)

குரு:  வாழ்க… வாழ்க…வளமுடன்! பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி தனித்த நிலையில் நான் என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.

சீடன்: … … … … …

குரு:  இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

சீடன்: இறை=நான்=நாம்=எல்லாம்.

குரு:  Excellent!!  வாழ்க வளமுடன்! ஞானக்களஞ்சியம் பாகம் ஒன்று வைத்துள்ளாயா?

சீடன்:  (தன் தோள் பையிலிருந்து எடுக்கிறார் சீடன்) இதோ ஸ்வாமி!

குரு:  (கண்களில் ஆச்சரியத்துடன்) பரவாயில்லையே! கையிலேயே வைத்துக்கொண்டுள்ளாயே! எங்கே மகரிஷி அவர்கள் எழுதிய “நான்” என்ற தத்துவமே நாம் என்று தொடங்கும் பாடலைப் படி. பாடல் எண் 876 என நினைக்கிறேன்.

சீடன்: ஆம் ஸ்வாமி 876 தான்.

(பாடலைப் படிக்கிறார்)

நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்து,
ஆன்ம நிலையறிந்ததனால், பேதமற்ற

அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்!.”

குரு:  சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று தண்ணீர் அழைக்கப்படுவது போல ‘நான் என்ற தத்துவம்தான் – அரூபசக்தி தான்,நாம் என்ற பலராக, அனேகக் கோடி சீவன்களாக, மனிதர்களாக அறிவியக்கங்களாக இருக்கிறது.

சீடன்: இப்போது புரிகிறது. நன்றி ஸ்வாமிஜி!  ஆனால் இந்த ஆறாவது அறிவின் நோக்கம் என்ன?

குரு:  நாளை சந்திப்போம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வாழ்க அறிவுச் செல்வம்!!

மறுநாள் சீடன் குருவை சந்திக்க வருகிறான். அந்த நிகழ்வை அடுத்த ஞாயிறன்று அறிந்து கொள்வோம்.