ஆன்ம அலங்காரம் – 3/3

வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

lotus

 FFC. C286.

04-04-2018–புதன்

3. மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம்

 

       ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும். அந்த உள்ளத்தின் அழுகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குச் சில விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரம் மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரம் என்பதிலோ ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலைக்கப்படாமல், மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகு கூடிக் கொண்டே இருக்கும். இன்முகமும் எளிமையும் செல்வமாகிவிடும்.

ஆன்ம அலங்காரம் என்பது

  • ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக,
  • பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான
  • பிராயச்சித்தம்,
  • மேல்பதிவு செய்தல்,
  • பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம்
  • ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்தலாகும்.

ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது.அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்?

மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஏதேனும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப்படுகின்றது.
ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாகத் தெரிவிப்பதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், இயல்பூக்கம் போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.
இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறுகிறார்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற.”

பொருள்: மனிதன், மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அறன் என்பது அவ்வளவுதான் என்கிறார். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை (vain show, pomp-outward show) உடையவை என்கிறார் திருவள்ளுவர். ஆகவே மனத்தூய்மையால் ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.

மகரிஷி அவர்கள் உடை ஒழுக்கம் பற்றி கூறுவதைக் கவனிப்போம். உடை அணிவதிலும் ஒழுக்கம் அவசியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

FFC-107-ஆன்ம அலஙகாரம்
எனவே தேகாபிமானத்தை(body consciousness) நீக்கி ஆன்மாபிமானம் (soul consciousness) ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியில், உடல் அலங்காரத்தைத் தவிர்த்தல் நலம் பயக்கும். உடல் அலங்காரத்தைவிட ஆன்ம அலங்காரத்திற்கு முக்கியம் அளிக்க வேண்டும். ஆன்ம அலங்காரத்தில் அக்கறை வந்துவிட்டால் உடல் அலங்காரம் எதற்கு என விளங்கிவிடும். உடல் அலங்காரம் அவசியமில்லை என்பது உடலைப் புறக்கணித்தலாகாது. உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மிகையான உடல்  அலங்காரம் உடல் சுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இன்முகமும் எளிமையும்தான் ஆன்மீகத்தின் உச்ச நிலையும் செல்வமுமாகும். இன்முகம் மற்றும் எளிமை பற்றியும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். இதனையெல்லாம் எதற்காக இயற்கை/இறை கூறுவதற்கு ஏற்பாடு(மகான்களின் வாயிலாக கவிகள் மற்றும் அருளுரைகள்) செய்துள்ளது? வருங்கால சமுதாயம் அதனை மதித்து நடக்கவே இயற்கை/இறை மகான்களின் வாயிலாக அருளி அறிவுறுத்துகின்றது.

FFC-107- ஆன்ம அலங்காரம்-துறவு

வாழ்க வளமுடன்!