இன்றைய விருந்து – ஐவகை மயக்கம் – FFC-297(102)

வாழ்க மனித அறிவு!                     வளர்க மனித அறிவு!!


ஐவகை மயக்கம்- FFC – 297 (102)

16-07-2020-புதன்

வாழ்க வளமுடன்!

இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம்’. மயக்கம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும். உறவினர் யாராவது மயக்கம் அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

எண்ணிக்கையிலோ இந்த மயக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன், இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்குள்ளாக நேரிடும்.

எனவே, அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

o இனிமேலாவது, புதிதாக தீய பழக்கங்களை பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
o ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்,

“பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கின்ற எதார்த்த நிலையைக் கூறுகிறார், இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். பழகிய பழக்கத்திலிருந்து வெளிவருவது ஆரம்ப நிலையில் கடினமாக உள்ளது என்கிற எதார்த்த நிலையை எடுத்துக் கூறப்படுவது, தேவையற்ற பழக்கங்களிலிருந்து விடுபடும் முயற்சியினை பாதியிலே விட்டுவதற்காக அல்ல. பழகிய பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, ஆரம்பத்தில் வெற்றி பெறமுடியாமையால், மனம் தளர்ந்து விடாமல் இருந்து ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து பழகிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், வேண்டாத தீயப்பழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் எச்சரிக்கப் படுத்தப்படுகின்றது.

அதே நேரத்தில்

this_birth_is_enough_for_liberation
என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வேதங்கள் “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?” என்கின்ற ஒரு கேள்வி எழுந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது, மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதை அறிவு இன்பமாக உணர்வதே. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி, அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.

‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கையே மயக்கத்தில் தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்களும் புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக,

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. குறள் எண் 6 என்று கூறுகிறார்.

dheaivappulavar

இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும், அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்க வேண்டும். இக்குறளில் உள்ள,

1) பொறி, அவித்தான்,
2) ஒழுக்க நெறி மற்றும்
3) நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெவ்வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.

“ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்து, இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்”. என்பது ஒருபொருள்.

மற்றொரு பொருள்

“மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர்.

மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.

இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.

ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.

அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.

“நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.

புலன்களை பயன்படுத்துவதில் ஒழுக்கம் கடைபிடிப்பது புலன் ஒழுக்கம். புலன்களில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிப்பது?

ஒழுக்கம் என்பது தீங்கு தராத நல்ல செயல்களாகும். ஆகவே புலன்களைப் பயன்படுத்தும்போது தீங்கு தராத செயல்களைச் செய்வது ஒழுக்கமாகும்.

புலன்களைப் பயன்படுத்தும் போது எப்போது தீங்கு வரும்? புலன்களில் இன்பம் துயக்கும்போது, அளவு மீறினாலும், முறையை மாற்றினாலும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது என்பதனை அறிவோம். ஆகவே புலனொழுக்கம் என்பது இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காப்பது ஆகும்.

ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும். அந்த ஒழுங்கே(order of function) அதற்கு ஒழுக்கமாகும்.

மற்றும் நீத்தார் பெருமையில்,

“ ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.” குறள் எண் 25                                                  என்கிறார் திருவள்ளுவர்.

புலன் மயக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அவருடைய கவியின் வாயிலாக அறிவோம்.

       நல்வினை தீவினை (அக்டோபர் 1982)

“புலன்கவர்ச்சி மயக்கத்தால் உணர்ச்சி மீறி,

புறத்தாற்றும் செயல்களெல்லாம் வீழ்ச்சி காட்டும்;

புலன்கள்தமை அறிவாலே ஆளக் கற்கும்

பொறுப்புடைய வாழ்க்கைநெறி ஆக்கம் நல்கும்,

புலன்மயக்கம் தன்முனைப்புப் பழிச்செயல்கள்,

புகழ்போக்கும் பொருட்கள் உயிர்ப் பற்றுயர்த்தும்,

புலன்அடக்கம் இம்மூன்றும் களங்கம் போக்கி,

புவிவாழ்வின் நிறைவுதரும், பிறப்பறுக்கும்.”

                         …..  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பாடல் வரிகளே அவற்றிற்கான விளக்கத்தை தெளிவாகத் தருவதால் தனியாக விளக்கம் அவசியமில்லை. தனியாக விளக்கம் அவசியமில்லை. புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. ஆன்மீகத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் பற்று. பற்று என்பது புலன்மயக்கத்திலிருந்து உருவாகின்றது. புலன் மயக்கத்தினால் களங்கங்கள் உருவாகின்றன. ஏனெனில் புலன்கவர்ச்சி மயக்கத்தினால் உணர்ச்சி மீறுகின்றது. உணர்ச்சி மீறும்போது பாவப்பதிவுகள் உருவாகும்.   அப்படி பிறவிதோறும் உருவாக்கிய பாவப்பதிவுகளினால்தான் இந்த பிறவி உண்டானது.

எனவே மனம் போனபோக்கெல்லாம் போகாமல், புலன்களை அறிவாலே ஆட்சி செய்து புவிவாழ்வில் நிறைவைப் பெற்று பிறப்பை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள், வைணவப் பெரியார் ஒருவரின் பாடலோடு சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

நன்றாய் ஞானம் கடந்து போய்,

நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்

உவப்பு இல் – அதனைத் உணர்ந்து உணர்ந்து,

சென்று ஆங்கு, இன்ப துன்பங்கள்

செற்றுக் களைந்து, பசை அற்றால்,

அன்றே அப்போதே வீடு,

அதுவே வீடு – வீடாமே. 

                        ….. வைணவப் பெரியார்.

உலகியல் வாழ்க்யைில் துன்பமில்லாமல் வாழவும்,  ஆன்மீகத்தில் முன்னேறவும் புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. புதிய சிந்தனை தொடரும்.

வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!