FFC-266 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

வாழ்க மனித அறிவு                                                                       வளர்க மனித அறிவு

lotus
FFC – 266
அ.வி. 266

12-11-2017-ஞாயிறு

செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

(தத்துவம் என்றால் என்ன பொருள்?)

Jun2004-17a

வாழ்க வளமுடன்!

செயலுக்கு விளைவு உண்டா, வருமா?

செயலுக்கு விளைவு வருவது உண்மையைச் சேர்ந்ததா?

தத்துவைத்தைச் சோ்ந்ததா?

அல்லது  அறிவியலைச் சேர்ந்ததா?

செயலுக்கு விளைவு வருவதனை, அறிவியல் அடிப்படையில் நிருபித்தால்தான்  மனிதஅறிவு ஏற்றுக்கொள்ளுமா, இல்லை எனில் ஏற்றுக் கொள்ளாதா  போன்ற வினாக்கள் எழுவதால், 

முதலில் தத்துவம் என்றால் என்ன என்று அறிந்துகொள்வோம்.

சிந்தனைக்கு எடுத்துக்கொண்ட தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

1) செயல்
2) விளைவு
3) தத்துவம்
4) கருமையம்.

இவற்றில் தத்துவம் என்கின்ற சொல் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தாலும் அதனை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தனை செய்வோம். ஏனெனில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருள் அறிந்து கொண்டால் இத்தலைப்பின் கீழ், இதுவரை அறியப்படாத முக்கியமான வாழ்வியல் உண்மைகள் முழுநம்பிக்கையுடன் உறுதிபடுத்தப்பட்டு, எவ்வளவு தூரம் விலகி உண்மையை கைவிட்டுவிட்டோம் என வருந்தி அறிவு எளிதில் தெளிவினைப் பெற்றுவிடும்.

சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?

பொதுவாக ‘தத்துவம்’ அநேகருக்கு ஒவ்வாமையாக(allergy) உள்ளது. தத்துவம் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் .இல்லை. காரணம் என்ன என்று தெரியவில்லை என்று சொல்லவதற்கில்லை. தத்துவம் என்பது தனிநபரின் தேர்வாக(choice) உள்ளது. சுவாசித்தல் என்பது தனிநபரின் தேர்வாகவா உள்ளது? சுவாசித்தல் என்பது இயல்பாகவே நடக்கின்றது. யாராவது ஒரு தனிநபர் ‘எனக்கு சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?’ ஆனால் ‘தத்துவத்தில் எனக்கு ஆர்வம் இல்லை’ என்பார்கள் பலர். சுவாசிப்பதே உயிர் இருப்பதற்கு அடையாளம். எனவே வாழ்வதற்கு எல்லோருக்கும் சுவாசித்தல் அவசியம் என்பது போன்று தத்துவம் என்பதும் எல்லோருக்குமே அவசியம்தான். ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருளை அறிந்து கொண்டால் தத்துவம் எல்லோருக்கும் அவசியம் என்பது விளங்கிவிடும். எனவேதான் இச்சிந்தனையில் தத்துவம் என்பதனை முதலில் எடுத்துக்கொண்டோம்.

தத்துவமும் நூல்கண்டும்:

தத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

தத்துவம் மிக எளிமையானது. அதைத் தெரியாதவர்கள் எடுத்து கையாளும்போதுதான் சிக்கலாகின்றது. உதாரணத்திற்கு நூல்கண்டில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே நூல்தான் உள்ளது. அதை நன்றாகச் சுற்றி வைத்திருப்பதால் அதில் சிக்கல் இல்லை. தையல் கலைஞர்கள் அதை உபயோகிக்கும்போது சரியான முறையில் உபயோகித்துவிட்டு மீண்டும் அதனை அதற்குரிய இடத்தில் வைத்துவிடுவார்கள். ஆனால் அதே நூல்கண்டு இரண்டு வயது குழந்தையிடம் கிடைத்தால் என்னவாகும்? மொத்த நூலையும் பிரித்து கலைத்துப்போட்டு விடும். சிக்கலாக்கிவிடும். குழந்தைக்கும் உபயோகப்படுத்தத் தெரியாது. மற்றவர்களும் அதனை உபயோகப்படுத்த முடியாது. அதுபோல, இன்று உலகத்தில் சிக்கல்கள் இருப்பதற்குக் காரணம் முறையாகக் கையாளாமைதான்.’

மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

இயற்கை நியதிகளில் சில கருத்துக்கு எட்டுவதாக இருக்கும். ஆனால் கணக்குக்கு எட்டாது. கணக்குக்கு எட்டி அதன் காரணம் கருத்துக்கு எட்டாதபோது அது விஞ்ஞானம் என்று கூறப்படுகின்றது. கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாதபோது அது தத்துவம் அல்லது மெய்ஞ்ஞானம் எனப்படுகின்றது. பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்துமே கணக்குக்கு எட்டாது. ஆனால் நுண்மையாகக் கூர்ந்து தொடர்ந்து, ஆழ்ந்து கவனித்து வந்தால், அறிவுக்கு இயற்கை இரகசியமும் புரியாதது அல்ல. ஏனெனில் இயற்கையே அறிவாகவும் இருப்பதால்.’ 

. . . வேதாத்திரி மகரிஷி

தன் கதையை தான் தெரிந்து கொள்வதில் அறிவிற்கு சிரமம் இருக்க முடியுமா என்ன?

ஏன் தத்துவம் தனிமனிதனின் தேர்வாக இருந்து வருகின்றது?

அதற்குக் காரணம் தத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது அல்ல என்று நினைப்பதும்,
தத்துவத்திற்கு அறிவியல் அடைப்படை இல்லை என்று எண்ணுவதும் காரணம்.
மேலும் தத்துவத்தின் மீது ஆர்வம் கொள்ள சிந்தனைத்திறன் அவசியமாகின்றது.
எனவே சிந்திப்பவர்களே பெரும்பாலும் தத்துவத்தை விரும்புகின்றனர்.
புலன்மயக்கத்தில் இருக்கின்ற, அதாவது பஞ்ச கோசங்களில் முதல் இரண்டு கோசங்களிலேயே
வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு சிந்திக்காமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது.

 ஆகவே பிராணமய கோசத்திற்கும், அதற்கு அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கும், ஆனந்தமய கோசத்திற்கும் அவர்களால் வரமுடிவதில்லை. பிராணமய கோசத்திற்கு வந்தால்தானே வந்தால்தானே தத்துவத்தில் நாட்டம் வரும். மேலும் தத்துவத்தில் நாட்டம் இல்லாது இருந்தாலும் அதனால் உடன்பாதிப்பு(immediate effect) வருவதில்லை என்பதால் தத்துவத்தை உதரித்தள்ளி விடுகின்றனர். ஆனாலும் தத்துவத்தை உதரித்தள்ளுவதால் பாதிப்பு உண்டு. எப்படி? தத்துவம் என்ன சொல்கின்றது? ‘நல்லதையே செய். நல்லவனாக இரு’ என்கின்றது. ‘அறம் செய விரும்பு’ என்கின்ற அமுதமொழியை கவனித்தாரில்லை. அறம்தான் துன்பம் வராமல் காப்பாக அமையும். ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் தான் சமுதாயத்தை காக்க வல்லது.

அமுத மொழிகள் அபயம் தரும்:

பல்லாயிரம் அருளாளர்கள் தோன்றி அபயம் தரும் அமுத மொழிகளை பாடல்களாகவும், உரைநடைகளாகவும் உதிர்த்திருந்தாலும் அவைகளை தத்துவங்கள் என்று கூறி ஒதுக்கிவிடுகின்றனர். தத்துவம் என்ன கூறுகின்றது? மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது. எதற்காகக் கூறுகின்றது? அறத்தை வலியுறுத்துவதற்காக மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது? அறம் சமுதாயத்திற்கு தேவையில்லையா? அறத்தை போதித்தல் தத்துவமா? மூடநம்பிக்கையா? பகுத்தறிவைச் சான்றதில்லையா அறம்?

மறைபொருட்களைக் காட்டவும் முடியாது. புலன்களால் அவற்றை காணவும் முடியாது. எனவே அவை மறைபொருட்கள் எனப்படுகின்றன. மறைபொருட்களை அவரவர்களேதான் உணரவேண்டும். உணர்வதற்கு அருளாளர்களின் வழிகாட்டுதல்கள் உள்ளன. மறைபொருட்கள் என்னென்ன?

1) உடலிலே ஓடிக்கொண்டிருக்கின்ற உயிர்,

2) அதனால் இயங்குகின்ற மனம்,

3)  இவற்றிற்கு மூலமான இறை.

தத்துவம் கூறும் மறைபொருட்களை புலன்களால் உணரமுடியாததால் தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை. தத்துவத்தை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியவில்லை. அதாவது மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைக்கப்படவில்லை. ஆகவே தத்துவம் என்பது அநேகருக்கு கசப்பாகவே உள்ளது.

தத்துவம் ஒவ்வாமையாக இருப்பது ஒரு கற்பனையே!

கற்பனையான ஒவ்வாமையை, நீக்கிக்கொள்வதற்கு, முதலில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லுக்கான வார்த்தை விளக்கம் காண்போம். தத்துவம் என்பது அறிவியல் அடிப்படையில் இல்லாதது, அல்லது மூடநம்பிக்கையானது என்கின்ற தவறான கருத்து உள்ளது. அதனால்தான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனையே உலகப்புகழ் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன்,

விஞ்ஞானமில்லாத மெய்ஞ்ஞானம் குருடு, மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி என்கிறார்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கமும் அச்சிடப்பட்டிருந்தால்தான் அந்த நாணயம், பணபரிமாற்றத்தின்போது(transaction) செல்லத்தக்கதாக இருக்கும். ஒரு பக்கம் அச்சிடப்படவில்லை எனில் அந்த நாணயம் செல்லாததாகிவிடும்.

அதேபோன்று அறிவு நாணயமாக(நேர்மை-honesty) வாழ்வதற்கு, அறிவிற்கு இரண்டு துறைகளின் அறிவும் வேண்டும். அதாவது விஞ்ஞானமும் வேண்டும்; மெய்ஞ்ஞானமும் வேண்டும். இல்லை எனில் வாழ்க்கை செல்லாததாகவிடும். அதாவது வாழ்க்கையில் துன்பம்தான் மிகும். துன்பம் மிகுந்தால் வாழ்க்கை சிறப்புறாது போகும். எப்படி என ஐயம் எழலாம்! திருவள்ளுவர் கூறுவதனை கவனிப்போம்.

அருளைப் பற்றி திருவள்ளுவர்:

திருவள்ளுவர் அருள் உடைமை எனும் அதிகாரத்தில் அருளைப்பற்றிக் கூறுவதனை நினைவு கூர்வோம். தலைப்பிற்கு ‘அருள் உடைமை’ என பெயர் வைத்துள்ளது எதனைக் குறிக்கின்றது? உடைமை என்றால் செல்வம் என்று பொருள். எனவே அருள் உடைமை என்றால் அருட்செல்வம் என்று பொருள்.
கேள்விச் செல்வமே மற்றைய எல்லா செல்வங்களிலும் உயர்வானது (கு. எண்.411) எனக் கூறுகின்ற திருவள்ளுவர், அருளைப்பற்றி கூறும் போது அருளால் வரும் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வமாகும் என்றும் அதைத்தவிர்த்த மற்றைய பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தோரிடமும் உள்ளன(குறள் எண் 241) என்கிறார். மேலும் அருள் உடைமையைப் பற்றி கூறுவதனை அறிவோம்.

dheaivappulavar

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது”                                                            . . .  குறள் எண் 248

பொருள்: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்ககையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”                                                            . . . குறள் எண் 247

பொருள்: பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை இல்லாதவாறு போல, அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

அறவாழ்க்கையே இறைவழி வாழும் இறைவழிபாடு என்பதனை உணர்ந்தாரில்லை.

தத்துவத்தின் மீது நாட்டம் இருந்தாலும் தத்துவம் கூறும் அறிவுரைகளை மதிக்கத் தவறிவிடுகின்றனர். தத்துவம் வழிகாட்டும் பாதையில் செல்வதில்லை.

இந்த சூழலில்தான் இரண்டு அறிஞர்களான சுவாமி விவேகானந்தரும், விஞ்ஞானியான ஐன்ஸ்டீனும், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். சமுதாயத்தில் தத்துவத்தின் மீது நாட்டம் உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. தத்துவத்தை ஆன்மிகம் என்கின்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். தத்துவத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் சரி, அல்லது தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களுக்கும் சரி தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் பயன் உள்ளதாக இருக்கும். அதாவது தத்துவத்தில் ஏற்கனவே நாட்டம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்தும். தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களை நாட்டம் வருவதற்கு சிந்திக்கவாவது செய்யும். இப்போது தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிந்துகொள்வோம்.

amudhamozhi_44

‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிவோம்!

இது சற்று புதியதாக இருக்கலாம். ‘தத்துவம்’ என்கின்ற சொல் ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ எனப்படுகின்றது. ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ என்கின்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து உருவானது. லத்தீன் மொழியிலுள்ள ‘ஃபிலோ (Philo)’ மற்றும் ‘ஸோப்ஃபியா’ என்கின்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானதுதான் ‘பிலாஸபி’ என்பது. ‘ஃபிலோ’ என்கின்ற சொல்லிற்கு ‘நேசி’ என்று பொருள். ‘ஸோப்ஃபியா’ என்கின்ற சொல்லிற்கு ‘அறிவு (Wisdom)’ என்று பொருள். ஆக ‘தத்துவம்’ என்றால் ‘அறிவை நேசிப்பதாகும்’.

ஞானத்தை நேசிப்பதாகும். ஞானத்தை நேசித்தால் என்றால் என்ன பொருள்? ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக வந்தததே ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வதற்காக. ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வது என்பதுதான் ஞானம் பெறுவது. ஞானம் என்றால் தெளிவு என்பது பொதுவான விளக்கம். ஆனால் அறிவை அறிந்த, அறிவிற்கு அறிவியல் ஏற்படுத்தி தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஞானம் என்பதற்கு சிறப்பான விளக்கம் தருகிறார்.

அந்த சிறப்பான விளக்கம் யாதெனில் ‘அறிவை அறிந்த தெளிவு’. என்பதாகும்.

எனவே ‘ஞானத்தை விரும்பு’ என்கின்ற பொருள் கொண்ட ‘philosophy’ என்கின்ற தத்துவத்தில் ஆழ்ந்த/மூழ்கிய விருப்பம் கொள்வதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு! அறிவை அறிந்த தெளிவில்தான் அறிவு பரிணாமத்தால் வந்த கசட்டினை, அதாவது விலங்கினப்பண்பை போக்கிக் கொள்ளமுடியும். ஆகவே இந்தப் பிறவி எடுத்த ஆன்மா தன் வினைப்பதிவுகளை போக்க வேண்டுமென்றால் அறிவை அறிகின்ற பயிற்சியில் ஈடுபட்டு முடிவாக தெளிவிலும் தெளிவினைப் பெற வேண்டும். ஞானத்தை நேசி என்கின்ற பொருள் கொண்ட தத்துவம் அனைவருக்கும் அவசியம், அவசியம், அவசியமே!

கிரேக்க நாட்டில் பிறந்த சாக்ரடீசை தத்துவஞானி என்று கூறுவதற்குக் காரணம் அவர் அறிவை நேசித்து வந்ததே காரணம். அதனால்தான் அறிவு பற்றிய தெளிவினைப் பெற்றவர் அறிவை நேசிக்கத்தானே செய்வார். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற அறிஞர்களின் உன்னத நோக்கத்திற்கிணங்க இளைஞர்களை ‘அறிவை நேசி’ (Love wisdom) என்றும், அதற்கு ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறி சிந்திக்க வைத்தார் சாக்ரடீஸ். 

     அன்று அறிஞர் சாக்ரடீஸ் மனிதன் சிந்திக்கவேண்டும் என்று எண்ணியதை  பலநூற்றாண்டுகள் கழித்து மகரிஷிஅவர்கள் இந்த நூற்றாண்டில் பலலட்சம் மக்களை சிந்திக்க வைத்து நிறைவேற்றி வருகிறார் என்றால் அதுமிகையாகாது

பேரறிவை நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

தன் உடல் உறுப்புகளை நேசிப்பதில்லையா மனிதன்? அவை நன்றாக இருந்தால்தானே அவன் சிரமமின்றி வாழமுடியும்! கைகள், கால்கள் ஆரோக்யமாக இருந்தால்தானே நகரவும்(movement), வேலையும்(work) செய்ய முடியம்! அக்கறை கொண்டு உடல் உறுப்புகளை பராமரித்தல் போல் உணர்வதற்கும், அறிவதற்கும் காரணமாகிய அறிவை பராமரிக்க வேண்டாம்.‘? எப்படி? ‘தத்துவம் என்றால் ‘அறிவை நேசி‘ என்றுதான் பொருள் அறிந்துகொண்டோம். அறிவை அறிந்த அறிஞரை குருவாகப் பெற்றதன் பயனாக ‘அறிவே தெய்வம்’ என்பதனை கருத்தியலாகவும், செய்முறையாகவும் மனவளக்கலைஞர்களாகிய நாம் அறிந்து வருகிறோம். எனவே தெய்வம் அறிவாக உள்ளது என்பதனை, தத்துவம் என்பதற்கு இதுவரை அறிந்த பொருளில் எடுத்துக் கொள்ளாமல், ‘அறிவை(ஞானம்-wisdom) நேசித்தல்’ என்கின்ற பொருளில் அல்லவா எடுத்துப் பழக வேண்டும்! அப்படியானால் அறிவாகிய தெய்வத்தை நேசிக்க வேண்டாமா நாம்? Should we not love Consciousness, the God?

அறிவாகிய தெய்வத்தை நேசிப்பது என்றால் என்ன?

உருவத்தைத்தான் நேசிக்க முடியும் என்பதல்ல. அருவமாகிய அறிவை(தெய்வத்தை) எவ்வாறு நேசிப்பது என ஐயம் இருக்கலாம். உருவத்தை நேசிப்பது பாசம். பாசம் என்பது எதிர்பார்த்து நேசிப்பது. அது அன்பு அல்ல.
அறிஞர் திருமூலர் கூறுகின்ற அமுத மொழியினை கவனத்தில் கொண்டால் அரூபாமன அறிவை எவ்வாறு நேசிப்பது என்கின்ற உபாயத்தை அறிந்து கொள்ளலாம்.

உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.                      … திருமந்திரம் 725

ஓம்புதல் என்றால் பேணிப் பாதுகாத்தல் என்று பொருள். ‘உடற்பயிற்சி செய்வதே இறைவனுக்கு செய்கின்ற சேவை’ என்பார் மகரிஷி அவர்கள். பேரறிவாகிய தெய்வமே நம்மிடம் அறிவாகத் திகழ்கின்றது. அதுவே தான் மனிதன் செய்யும் செயல்களுக்கான இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது.

கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்பம் துன்பமவன்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் முதல் பாடலிலேயே!.

  எனவே நம்முடைய செயல்களால் நம்முள் இருக்கும் உத்தமனுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்வதே அறிவை நேசிப்பதுதானே!

எப்படி குழந்தையை நேசிக்கும் தாய் குழந்தையை ஈ, எறும்பு தீண்டாதவாறு பார்த்துக் கொள்வாளோ அதுபோல் எப்போதும் உணர்ச்சிவயத்தை தவிர்த்து அமைதியைப்பேணுவதே அறிவை நேசிப்பதுதானே!

உணர்ச்சிவயம் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் எப்போதாவது பழக்க தோஷத்தால் (பழக்கப் பதிவின் அழுத்தத்தால்) உணர்ச்சிவயம் ஏற்பட்டதானால் அப்போது ‘உணர்ச்சிவயத்தால் அமைதியே வடிவான இறைக்கு துன்பம் கொடுத்துவிட்டேனே’ என்று மனதார எண்ணி வருந்துதல் வேண்டும்.

   தூங்கும் குழந்தை அதிர்ச்சியால் எழுந்து கொள்ளுமாறு சப்தமிடுவாளா தாய்? அதுபோன்றுதானே உணர்ச்சிவயப்படுவதும். உணர்ச்சிவயப்படுவது விழிப்புணர்வு இழத்தல்தானே. விழிப்புணர்வை இழப்பது அயராவிழிப்புணர்வான இறைக்கு துன்பம்தானே!

 ‘பொறுமை  கடலினும் பெரிது’   என்பது சாதாரணமாக  சொல்லப்படுவது.  ஆனால், மகரிஷி அவர்கள்  ‘பொறுமைக்கு எல்லையே கிடையாது’ என்பார். காரணம், பொறுமைக்கு எல்லை வந்துவிட்டால் அது பொறுக்க முடியாமையாகிவிடும். அதுவரை கடைபிடித்து வந்த பொறுமை நோன்பு கலைந்துவிடும். இயற்கையின் ஆதிநிலைக்கு எல்லையில்லாதது போல் மனிதனின் நற்குணங்களில் சிறந்ததான பொறுமைக்கும் எல்லை என்பதே கிடையாது. அப்படியிருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் பொறுமை காப்பதே அறிவாகிய இறையை நேசிப்பதாகும்.பொறுமையை இழப்பது நம்முள் உறையும் உத்தமனை துன்பப்படுத்துவதற்கு ஒப்பாகாதா?

ஆகவே அறிவாகிய தெய்வத்தை நேசிக்கவேண்டிய ஆன்ம சாதகன் தன் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றை போக்கி அறிவை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தி அறிவை செல்வமாக்கிக் கொள்ள வேண்டாமா? தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் தன்னை அறிய இச்சை கொண்டு வந்த அறிவு இப்போது புலன்களில் சிக்கித் தவிக்கின்றது.  

   ஆங்காங்கே அத்திப்பூ பூத்தாற்போல் ஞானிகள் தோன்றி மறைவது நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் இப்பூவுலகம் தொடர்ந்த அமைதியினை அனுபவிக்க முடியவில்லையே!

 கிருஷ்ண பராமாத்மா, பகவத் கீதையில் ‘கோடியில் ஒருவர் தான் என்னிடம் வந்து சேர்கின்றனர்’ என்று கூறுகின்ற விகிதாசாரம்தான்(1 : 1,00,00000) அறிவியல் வளர்ந்தும் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கின்றது. அறிவியல் மெய்யறிவியலுக்கு துணை செய்ததாகத் தெரியவில்லை. மனிதன்தான் அறிவியலின் துணை கொண்டு பேரறிவை அறிந்துகொண்டு பேரறிவிற்கு ஒப்ப தன் அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதாவது மெய்ஞ்ஞானத்தை மெய்யறிவியலாக்கி பாடங்களாக்கி கற்பித்தால்தான், ‘கோடியில் ஒருவர்’ என்கின்ற விகிதாசாரத்தை உயர்த்த முடியும்.

‘தத்துவம்’ என்பது வாழ்வியல் கண்டுபிடிப்பே!

பெரும்பாலும் தத்துவத்தில் நாட்டமில்லாத சமுதாயத்தில் இருந்துதான் வந்திருக்கிறோம். எனவே ‘தத்துவத்தில் நாட்டமில்லாதிருக்கின்ற’ வாசனை ஆரம்பகால ஆன்மீக சாதகர்களுக்குள் மறைந்து இருக்கலாம். தத்துவத்தில் நாட்டமில்லாத, நம்பிக்கையில்லாத நிலையில் இன்னமும் இருந்தால், அறிஞர் கண்டுபிடித்த உண்மைகளை ‘தத்துவம்’ என்கின்ற இதுவரை இருந்த அர்த்தத்தில் பொருள்கொண்டால் அறிவை நேசிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆகவேதான் தத்துவம் என்பதனை ‘உண்மையின் கண்டுபிடிப்பு’ என்று கூறிவருகிறோம். காலங்காலமாக அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை தத்துவம் என்கின்ற பெயரால் அழைக்கப்படுவதை ‘வாழ்வியல் உண்மைக் கண்டுபிடிப்புInvention of Life Science Truth)’ என்றேக்கொள்ளலாம்.

விஞ்ஞானி கண்டுபிடித்தால் அது கண்டுபிடிப்பு என போற்றப்படுகின்றது. ஆனால் மெய்ஞ்ஞானி வாழ்வியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொன்னால் அது தத்துவம் என்று கூறி இந்த சமுதாயத்தில் பலர் மதிப்பதில்லை.

எனவே செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையினை தத்துவம்(Cause and effect System in English) என்று கூறாமல் ‘செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு’ என்பதனை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம். தத்துவத்திற்கான பொருள் புதிய கோணத்தில் பார்த்தோம்.  இதுவரை தத்துவம் என்றால் ‘அறிவை –ஞானத்தை நேசி’ என்று அறிந்துகொண்டோம். ‘அறிவை நேசி-ஞானத்தை நேசி’ என்கின்ற பொருளுடைய ‘தத்துவம்’ என்கின்ற சொல்லிற்கு ஏற்ப ‘அறிவிற்கான அறிவியலை’த் தந்துள்ளது வேதாத்திரியத்தத்துவம் என்பதனை நினைத்து மனவளக்கலைஞர்கள் பெருமை கொண்டு முழுப்பயனையும் இப்பிறவியிலேயே அடைந்துவிட வேண்டும் என்பதே அவா.

ஞானத்தை நேசிக்க மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அதன் விளைவைப்பற்றியும் அறியவேண்டும். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(15-11-2017-புதன்கிழமை) அறிந்து கொள்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                       வளர்க அறிவுச் செல்வம்