September 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 217

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    30-09-2016 — வெள்ளி.

    “உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க,
    உனது தன்மை ஒளிர, என துள்ளம் தூய்மை பெற்றேன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘உன்னிலே நானடங்க’ என்பதன் பொருள் என்ன?
    2) ‘என்னுளே நீ விளங்க’ என்பதன் பொருள் என்ன?
    3) ‘இறைவனது தன்மை ஒளிர்வது என்பது என்ன?
    4) இறைவனது தன்மை ஒளிர உள்ளம் தூய்மை பெற்றதாக மகரிஷி அவர்கள் கூறுவதனை வேறு அருளாளர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்- 215

      வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    29-09-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    (அ)
    எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

                                                                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    (ஆ)
    ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • 230-ஒழுங்கும் ஒழுக்கமும்

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     
    ஒழுங்கும் ஒழுக்கமும்

    அறிவிற்கு விருந்து—230

     28-09-2016—புதன்.

     வாழ்க வளமுடன்.

          சென்ற மூன்று விருந்துகளில் அறிவின் மூன்று வறுமைகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவைகளைப் பற்றிச் சிந்தித்தோம். இன்று அறிவைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற தலைப்பை இன்றைய விருந்தாக எடுத்துக் கொண்டுள்ளோம். ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடர் சற்று வித்தியாசமாக உள்ளது. இச்சொற்றொடர் உருவானதற்குக் காரணம் ‘வேதாத்திரிய அறிவிற்கு அறிவியல்’ காரணமாக உள்ளது. வேதாத்திரியத்தில் அறிவிற்கு என தனி அறிவியலே உள்ளது. வேதாத்திரியம் பல இயல்களை உள்ளடக்கியது. இயற்கையியல்/இறையியல், மானுடவியல், உளவியல், ஒழுக்கவியல், இன்ப-துன்ப இயல், இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த வாழ்வியல், உலக சமாதான இயல் ஆகிய இயல்களைக் கொண்டது வேதாத்திரிய மகா இயல்(Greater Science of Sciences).

          ‘அறிவே தெய்வம்’ என்று அருளாளர்களால் கூறப்பட்டாலும் எப்படி அறிவு தெய்வமாகின்றது என இதுவரைக் கூறப்படவில்லை. ஆனால் வேதாத்திரியத்தில் அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,
    அறிவின் இருப்பிடத்திலிருந்து ஆரம்பித்து,
    அதன் தன்மாற்றப்பயணத்தின் நோக்கம்; அந்த நோக்கமே மனிதப்பிறவியின் நோக்கம் எனவும்,
    மற்றும் தன்மாற்றப்பயணம் எவ்வாறு நடைபெற்றது, நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை படிப்படியாக விளக்கி, தெளியவைத்து,
    முடிவாக அதன் தன்மாற்ற பயணம் மனிதனில் எவ்வாறு நிறைவுறுகின்றது என்பதனை தெளிந்த நீரோடையில் உள்ள பொருள் தெளிவாகத் தெரிவதுபோல் தெளிவாக்கப்பட்டுள்ளது.
    தலைப்பிற்குள் செல்வோம்.
    தலைப்பு சொற்றொடராக உள்ளது; ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்று உள்ளது. காரணம் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணத்திற்கு ‘இன்பமும் துன்பமும்’ என்கின்ற சொற்றொடரில் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் தொடர்புள்ளதுபோல் ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடரில் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்புள்ளது. வழக்கம்போல் முதலில் வார்த்தை விளக்கம் காண்போம்.

    ஒழுங்கு என்றால் என்ன?

    ஒழுங்கு = 1) ஒவ்வொரு செயலையும் சரியாக செய்வதற்காக ஏற்பட்டிருக்கும் நியதி அல்லது பொருத்தமான முறை(regularity).
    2) சீர்(orderly way or manner)
    3) ஒற்றுமைக்காக அல்லது அமைதிக்காக வேண்டிய பொறுப்பான நடத்தை(Law and order)
    ஒழுங்கு என்பது நியதி. இயற்கையில்/இப்பிரபஞ்சத்தில் நியதி இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் நடைபெறுவதே இல்லை. எந்த ஒரு சடப்பொருளும் ஒழுங்கிற்கு உட்பட்டுத்தான் சடப்பொருளாக இருக்க முடியும். உதாரணத்திற்கு நீரை எடுத்துக் கொள்வோம். நீர் என்பது ஒரு சடப்பொருள் இயக்கம். அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்கின்ற இரு மூலகங்கள் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு கொத்தியக்கம்(bunch of atoms). இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்து இயங்குகின்ற இயக்கம் நீர்(H2O). இந்த ஒழுங்கு இப்பிரபஞ்சத்தில் அல்லது இப்புவியின் எந்த கண்டத்திலும் (continent) எங்கு நீர் காணப்பட்டாலும் இந்த ஒழுங்கிற்கு உட்பட்டேதான் இருக்கும்.
    மனித உடல் உறுப்புகளின் அனிச்சை இயக்கமும் ஒழுங்கிற்கு உட்டுபட்டுத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அறியாமையால் அல்லது அலட்சியத்தால் அல்லது உணர்ச்சி வயத்தால் அல்லது மூன்றின் சேர்க்கையாலோ அல்லது மனிதனின் இச்சையாலோ மனிதனால் செய்யப்படுகின்ற செயல்களால் உடல் உறுப்புகளின் அனிச்சை இயக்கம் பாதிப்படையலாம். பாதிப்படையலாம் என்பதில்லை; பாதிப்படைகின்றது. அதுவே நோயாகவும் மனதில் களங்கமாகவும் வெளிப்படுகின்றது. இயற்கையின் அமைப்பை பற்றிச் சிறப்பாகக் கூறுவதானால் அது ஒழுங்கமைப்புடன்(ஒழுங்கு+அமைப்பு) இயங்கிக்கொண்டிருக்கின்றது என்கிறோம். இயற்கை ஒழுக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று கூறுவதில்லை. ஒழுங்கு என்கின்ற சொல்லுக்கு விளக்கம் அறிவதில் சடப்பொருட்களைப்பற்றியே ஆய்ந்து கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

    ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடரில் ஒழுக்கம் என்கின்ற சொல்லிற்கு வார்த்தை விளக்கம் காண்போம்.

    ஒழுக்கம் என்றால் என்ன?

    ஒழுகுதல் ஒழுக்கம். ‘ஒழுகு’ என்றால் என்ன? பின்பற்றி நடத்தல், ஒத்து வாழ்தல் என்று பொருள்.(conduct- adhering to principles).
    மனிதன் ஒரு சமூகப்பிராணி(Social animal). மனிதன் தனித்து வாழமுடியாது. சேர்ந்துதான் வாழ முடியும். அவ்வாறு இருக்கும்போது பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழவேண்டும். இது கட்டாயமா என்று கூட ஐயம் எழலாம். அல்லது பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழ்வது என்பது எப்போதும் சாத்தியமா என்றும் ஐயம் எழலாம். ஏனெனில் நடைமுறையில் பிறர்க்குத் துன்பம் அளிக்காமல் வாழ்வது என்பது இல்லாமையால் இந்த ஐயம் எழலாம்.

    மனிதன், பிறர் தனக்கு துன்பம் அளிப்பதை விரும்புவானா? விரும்பமாட்டான். அதேபோன்றுதானே இவனும் யார் ஒருவருக்கும் துன்பம் அளிக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதில் உறுதியாகவும் இருக்க வேண்டுமல்லவா? இது தர்க்க ரீதிதானேLogical reason)?! எனவே இங்கே தேவைப்படுவதுதான் ஒழுக்கம் என்பது. இங்கே தான் ஒழுக்கம் பிரவேசிக்கின்றது. ஒழுக்கம் என்பது எங்கோ தனியாக இருந்து கொண்டு இப்போது உள்ளே பிரவேசிக்கின்றது என்று பொருளல்ல. எந்த ஒன்றிலிருந்து இப்பிரபஞ்சம் மற்றும் மனிதன் உள்பட எல்லா சீவராசிகளும் உருவாகியுள்ளதோ அந்த ஒன்று ஒழுங்காற்றலாய்(பேரறிவு) உள்ளது.

    பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழும் நெறியை ஒழுகி நடப்பதைத்தான் மனிதன் ‘ஒழுக்கம்’ என்கின்ற புனிதச் சொல்லால் அழைக்க ஆரம்பித்தான்.

    அப்படிப்பட்ட ஒழுக்கத்திற்கு என்ன பொருள்? மனிதன் ஒழுங்கமைப்புடன் நெறி தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கையின் ஒரு சிறு அங்கம். ஒரு பொருள் எந்தப்பொருளிலிருந்து(மூலப்பொருள்) உருவாகியதோ, அந்த மூலப்பொருளின் தன்மையை அது கொண்டதாக இருக்கும் என்பது இயற்கை நியதி. அதேபோல் ஒழுங்கமைப்புடன் நெறியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கையின் அங்கமான மனிதனும் நெறியுடன் வாழ்வது என்பதுதான் ஒழுக்கம் எனப்படுகின்றது.

         ஆகவே ஒழுக்கம் என்பது உரிய முறையில் நடந்துகொள்வது. தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொதுநலன் மற்றும் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தனிமனிதன் கடைபிடிக்கும் நெறியே ஒழுக்கம் என்பது.

        எனவேதான் 2041 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் ஒழுக்கத்தை செல்வமாக்கிக்கொள்ள(உடைமை) வேண்டும் மனிதன் என்று கருதி ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார், ஒழுக்கம் சிறப்பைத்தருவதால் ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும் என்கிறார். ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள முதல் குறளை நினைவுகூர்வோம்.

    ஒழுக்கம் உடைமை

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும்.”                     . . .    குறள் எண் 131

    ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் உள்ளதால், ஒழக்கத்தைப்பற்றி மேலும் கூறுவதற்கு ஒன்பது குறட்பாக்களை இயற்றியுள்ளார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்குப் பிறகு இருபது நூற்றாண்டுகள் கழித்து அவரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட அவரது அருமைச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதனையும் நினைவு கூறலாம். மனித வாழ்வில் ஒழுக்கம் மிக மிக அவசியம் என்பதால் ஒழுக்கத்தைப்பற்றிய புரிதலை சமுதாயத்திற்கு தெளிவாக்குவதற்கு பல்வேறு விதங்களில் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  அவைகள் பின்வருமாறு:-

    1) பிறருக்குத் துன்பம் இல்லாமில்லாமல் செயலாற்றுவதே ஒழுக்கம்.

    2) துன்பம் விளைவிக்காமல் காக்கின்ற வாழ்க்கைத்திறனே, செயல் திறமையே ஒழுக்கம் எனப்படும்.

    3) எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றில் எழும் விளைவறிந்து, உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கம்.

    4) துன்பம் தவிர்க்க வேண்டும் என்ற அளவுக்கு விழிப்போடு ஆராய்ச்சியோடு செய்யும் பண்பே ஒழுக்கம். இந்த சூத்திரத்தை முறைப்படுத்தி வைத்துக் கொண்டால், எந்த இடத்திலும், எந்தக் காலத்திற்கும் ஒருவரின் ஆயுள் முழுவதும் இது உதவியாக இருக்கும். ஒழுக்கத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறியவற்றில் ஒருசில மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    5) இவ்வாறு பல்வகைகளில் ஒழுக்கத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறியிருந்தாலும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகக் கொண்டு ஒழுக்கத்திற்கு கூறும் வரையறையாவது—

     தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உயிர் உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காத எண்ணம்தான் ஒழுக்கம்” என்கிறார்.

    மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப்பற்றி 1982 இல் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    ஒழுக்கம்(மார்ச் 1982)

    உயிர்கட்குத் துன்பமிலா வகையி லாற்றும்
    உயர்ந்தசெயல் ஒழுக்கமாம்; உலகில் வாழும்
    உயிர்கட்கு அதுகாப்பாம்; அமைதி வித்து;
    உயர்வினால் உயிரைவிட ஒழுக்கம் மேலாம்;
    உயர்அறிவில் தெறிவுபெற்று, முழுமை எய்த
    ஒழுக்கமே பெருந்துணையாம்; அறிவறிந் தோர்
    உயிர்காக்கும் கருணையால் ஒழுக்கம் காட்டி,
    உய்யும்வகை அறிவித்தார். உண்மை காண்போம்.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஒழுக்கம் உயிர்கட்கு(தன்னையும் சேர்த்து) காப்பாக உள்ளதையும், அதுவே அமைதிக்கு வித்தாக உள்ளதையும் எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள். தெளிவு பெறவும், முழுமையடையவும் ஒழுக்கமே பெருந்துணையாக உள்ளது என்கிறார். ‘எல்லாம் வல்லது தெய்வம், அது எங்கும் நீக்கமற உள்ளது’ என்று கடவுள் நிலையை கூறிவிட்டு “சுயமாயச் சிந்தித்தே தெளிவாய்” என்று ஆலோசனையையும் கூறி கடவுள் நிலையை உறுதிபடுத்தி பயனடையும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டது போல், இங்கேயும் ஒழுக்கம் என்பது எது என்று கூறினாலும், கடைசியில், அதன் “உண்மை காண்போம்“ என்பதனைக் கவனிக்க வேண்டும். ‘வேறு எது ஒழுக்கமாக இருக்க முடியும்’ என்பதனை நாம் சிந்தித்து முடிவுசெய்து அதனை ஒருபோதும் தவறாமல் பின்பற்றி ஒழுக்கச்சீலர்களாகத் திகழவேண்டும்.

         ஒழுங்கு என்றால் என்ன என்றும், ஒழுக்கம் என்றால் என்ன என்றும் தனித்தனியாக விளக்கம் கண்டோம். இப்போது ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் இணைத்துள்ள ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடருக்கான பொருள் என்ன? அல்லது அச்சொற்றொடரை ஏற்படுத்தி சிந்தனை விருந்தாக எடுத்துக் கொண்டதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.

         ஒழுக்கத்தைப் பற்றி இந்த அளவு துருவித் துருவி சிந்திப்பது யார்? மனிதன். மனிதன் என்பவன் யார்? அறிவேதான் அவன். இந்த அறிவு எங்கிருந்து வந்தது? இயற்கையின்ஆதிநிலை/இறைநிலையேதான்  தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனின் ஆறாம் அறிவாக வந்துள்ளது. உயிர்களாக தன்மாற்றம் ஆகும் முன்னர் சடப்பொருட்கள் உணர்வற்றதாக இருந்தாலும் சடப்பொருட்கள்-பஞ்சபூதங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தது. சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லாதபோது, உணர்கின்ற தன்மை உடைய அறிவு எவ்வாறு உணர்வற்ற சடப்பொருட்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்கின்ற நியாயமான ஐயம் எழுவது நியாயமே!

         இந்த நியாயமான ஐயம், அறிவிற்கு இயலை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில் அறிவின் அறிவியலாளரான மகரிஷி அவர்களுக்கும் எழுந்தது. பின்னர் அதற்கானக் காரணத்தை கண்டுபிடித்துவிட்டார். அந்தக்காரணத்தைக் கண்டுபிடிக்காதிருந்தால் வேதாத்திரிய அறிவின் அறிவியல் இன்னமும் முற்றுப் பெறாமலே இருந்திருக்கும். என்ன கண்டுபிடித்தார் மகரிஷி அவர்கள்? அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

    பேரின்ப ஊற்று

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா! – எங்கும்
    இன்ப ஊற்றாய் பெருகும் இறைவா!
    அன்பு ஊற்றாய் தோற்றங்கள் அனைத்துக் குள்ளும்அறிவாய்,
    இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா!

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா!

    உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு  முன்னம்  விண்ணில்  ஒழுங்காற்றலாய்  விளங்கும்,
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா!
    ……………………………………………………………………………………………………….
    ………………………………………………………………………………………………………..

                                         . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         பொதுவாக மனித அறிவிற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கின்றவெளியே இன்றுகாணப்படும் அனைத்துமாகவும் வந்துள்ளது என்பது எவ்வாறு அதற்கு சாத்தியமாகியது? எந்தப்பொருளும் அணுக்களால் ஆனது என்று விஞ்ஞானம் கூறுவது வெட்டவெளிக்கு(Space) எவ்வாறு சாத்தியமாகியுள்ளது? எந்தப்பொருளும் அணுக்களால் ஆனாதாக இருந்தாலும், அந்த அணுக்களையெல்லாம் முறைப்படுத்தி ஒரு அமைப்பாகவும், துல்லியமாகவும் ஒழுங்குடனும் வைத்துள்ளதால்தான் அந்தப் பொருள் பொருளாகக் காட்சியளிக்கின்றது. ஒரு பொருள்(ஒரு மூலகம்) மட்டும் அல்ல இதுபோல் இன்னும் 118 வெவ்வேறு பொருட்களாகவும்(இதுவரை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்கள் 119) காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. யார் அந்த அமைப்புகளில் எல்லாம் அணுக்களை அடுக்கியது? கைகள் இல்லாத பேரறிவுதான் அணுக்களையெல்லாம் அடுக்கியுள்ளது. அணுக்களையெல்லாம் முறைமைப்படுத்தியுள்ளதை வேறு எந்த சொல்லால் அழைக்க முடியும்? ஒழுங்கு என்கின்ற சொல்லால் சொல்லலாமே! பேரறிவு ஆற்றலையும் கொண்டது. அதே நேரத்தில் அதனிடம் ஒழுங்கும் உள்ளது. எனவே பேரறிவு தன் தன்மாற்றப் பயணத்தில் உயிர்களாக மாற்றம் அடைவதற்கு முன்னர்(உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில்) சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்ந்து கொண்டிருந்தது.

         அதே ஒழுங்காற்றலாய் திகழ்ந்து கொண்டிருந்த அறிவே உயிர்களாக தன்மாற்றம் அடையும்போது உணர்கின்ற அறிவாகவும் செயல்படுகின்றது. ஐந்தறிவு சீவன்களில் உணர்ந்து கொண்டிருக்கின்ற அறிவே மனிதனாக தன்மாற்றம் அடையும்போது ஆறாம் அறிவாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதாவது பேரறிவு தன்மாற்றப்பயணத்தில் ஆரம்பத்தில் சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் பணியாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் ஐந்தறிவு சீவன்களாக வந்தபோது உணர்ச்சியை அறியும் பணியையும் செய்து கொண்டிருக்கின்றது. பின்னர் மனிதனாக வரும்போது சிந்தனையாகவும் செயல்படுகின்றது. ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் ஆறாம் அறிவாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு ஒழுங்காற்றலே மனிதனிடம் அறிவாக செயல்படும்போது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் மட்டும் ஒழுங்குடன் செயல்படுவதுதானே நியாயம்?! Is it not a simple logic?சடப்பொருட்களில் பேரறிவின் தன்மை ஒழுங்காகவும், மனிதனின் ஆறாம் அறிவில் ஒழுக்கமாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இவ்வாறு கூறுவதனால் மனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு பேரறிவேதான் பேரறிவேதான் பொறுப்பு எனக் கருதிக்கொண்டு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

          பேரறிவு தன்மாற்றப்பயணத்தில் பரிணாம வாகனத்தை ஐந்தறிவு சீவன்கள் வரையில் தானே ஓட்டி வந்துள்ளது. ஆறாம் அறிவாக வந்தபோது எவ்வாறு மகிழுந்தை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம்(driving License) வழங்கப்பட்டதும், பயிற்சியின்போது கூடவே இருந்து வந்த பயிற்சியளிப்பவர்(Driving Instructor) மகிழுந்தின் சாவியைக் கொடுத்துவிட்டு உரிமம் பெற்றவரையே ஓட்டச் சொல்கின்றாரோ அதுபோல் பேரறிவு பரிணாமவாகனத்தை மனிதனையே தனது மறைமுகப்பார்வையில் ஓட்டச்சொல்லிவிட்டது. இப்போது மனிதன் விபத்தில்லாமல் மகிழுந்தை எவ்வளவு நிதானமாகவும், கவனத்துடனும், விழிப்புடனும் ஒட்டுவானோ அதேபோன்று, இறைவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பரிணாம வாகனத்தை ஒழுக்கம் என்கின்ற நிதானத்திலும், கவனத்திலும், விழிப்பிலும் ஓட்டி வாழ்க்கையை செம்மையாக நடத்தி வாழவேண்டும்.

    சடப்பொருட்களில் ஒழுங்கிற்குக் காரணமாக இருந்ததே ஆறாம் அறிவின் செயல்பாட்டில் சரியாக செயல்படுவது ஒழுக்கமாகக் கொள்ளப்படுகின்றது. ஒழுங்கே ஒழுக்கம். இந்த ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள இணைப்பை அறியும்போது ஒழுக்கவாழ்வு வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதில் தெளிவு ஏற்படும்.  இதுவரை இருந்து வந்த ஒழுக்கமிலாப் பழக்கப்பதிவுகளை வெல்வதற்கு, இப்போது பெறுகின்ற ஒழுக்கத்திற்கான விளக்கப்பதிவு போதிய வலிமை பெறுவதற்காகவே ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடர் அமைத்து அதனை சிந்தித்தோம்.  

          இது போன்று அன்பர்களும் ஓய்வு நேரங்களில் மனதை அலையவிடாமல் இருக்க இதுபோன்று  பல தலைப்புகளை அடிக்கடி உருவாக்கிக் கொண்டு சிந்திக்கப் பயிற்சி செய்து பழக்கமாக்கிக் கொள்ளலாம்.  சிந்தித்தவற்றை எழுதிப் பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் பிற அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழலாம்.   இதுவும் சத்சங்கத்தைச் சார்ந்ததுதான். இவ்வாறு சிந்திக்கும்  பழக்கத்தை வழக்கமாகக் கொள்ளும்போது எண்ணுகின்ற எண்ணங்கள் மௌனமாக இருந்தாலும், அது வலிமையுடையதாக இருக்கும்.  மனிதர்கள் உடலால் வேறுபட்டிருந்தாலும், அறிவு எனும் அரூப ஆற்றலால் ஒன்று பட்டிருப்பதால்  நலம் சார்ந்த எண்ணங்கள் மற்றவர்களின் மனதிலும் உதிக்கச் செய்யும் வல்லமை உடையது.   வாழ்க வளமுடன். வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.
    .

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்