May 2018

Monthly Archives

  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

    வாழ்க மனித அறிவு!                                வளர்க மனித அறிவு!!

    lotus

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

    பேரின்பம்

    நாள்- 27-05-2018-ஞாயிறு
    உ.ச.ஆ.27-05-33.

    Maharishi

    guru seedan

    கண்களில் தாரையாக வழிந்தோடும் கண்ணீரை துடைத்தவாறு அமைதியுடன் அமர்ந்துள்ளார் சீடன். தான் வருவதை அறிந்து எழுந்திருக்க முயல்வதை கவனிக்கிறார் குரு.

    குரு: உட்கார் குழந்தாய்! உட்கார்.

    சீடன்: (வார்த்தைகள் ஏதும் வராதநிலையில் இருகரங்களைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறார்)

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? நீண்ட நேரம் அழுதுள்ளாய் போலுள்ளது. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா?! எவரொருவருக்கு இறைவனை நினைக்கும்போதே கண்களில் நீர்வருகிறதோ அவருக்கு அதுவே கடைசி பிறவி. இதை நான் கூறவில்லை. அவதார வரிஷ்டரான* இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். அது சரி இறைநிலை தவம் அப்படியென்ன உன்னில் மாற்றத்தை கொடுத்துள்ளது?

    சீடன்: எப்படி கூறியுள்ளார் கவனித்தீர்களா ஸ்வாமிஜி, நம் மகரிஷி அவர்கள் இறைநிலைத்தவத்தில்! இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தை அப்பட்டமாகவல்லவா கூறிவிட்டார்!

    குரு: That is our Vethathiri Maharishi!

    சீடன்: Absolutely swamiji! Maharishi is Great! ஸ்வாமிஜி. நான் பலமுறை இங்கு இறைநிலைத் தவத்தில் கலந்துகொண்டு தவம் இயற்றியுள்ளேன். ஆனால் இன்று கிடைத்த இன்ப அனுபவத்தைப்போல் என்றுமே கிடைத்ததில்லை. அப்படி ஒரு அனுபவம்! அப்படி ஒரு திருப்தி!

    குரு: இன்ப அனுபவம்… திருப்தி….ஆஹா..!

    சீடன்: ஆம் ஸ்வாமிஜி!  மனதிற்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இதுபோல எப்பொழுதும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்.

    குரு: என்ன சொன்னாய்..!? ‘ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான் என்று கூறாமல், ‘ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்’ என்று கூறுகிறாய். வாழ்க வளமுடன்! ஆம் இந்த மனமேதான் பந்தந்திற்கும் காரணம்; மோட்சத்திற்கும் காரணம்.

    சீடன்: ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வாமிஜி!

    குரு: சந்தேகமா!?

    சீடன்: ஆம் ஸ்வாமிஜி. இன்றைய தினம் தவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏன் ஸ்வாமிஜி எப்பொழுதும் கிட்டுவவதில்லை?

    குரு: உன்போன்ற ஆரம்பகால சாதகர்களுக்கு இப்படியொரு அனுபவம் கிட்டுவது பாக்கியமே! மகரிஷி அவர்கள் தான் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் எனும் புத்தகத்தில் மூன்றாம் சிக்கல் எனும் மூன்றாவது அத்தியாயத்தில் மனித உடலும் மனமும் சார்ந்த செயல்களையும் மதிப்புகளையும் அறியாமை; இன்ப துன்பத்தின் இயல்பு; அவற்றிற்கான உண்மைக் காரணங்கள்; மனதின் தன்மையும் அதன் அகநிலை மற்றும் புறநிலை செயல் வல்லமைகளும்.’ எனத்தலைப்பு வழங்கி அதில் பேரின்பத்திற்க்கான வரையறையைக் கொடுத்துள்ளார்.

    சீடன்: பேரின்பத்தை வரையறுத்துள்ளாரா!!!?

    குரு: ஆம். அப்பேரின்பத்தை வரையறுக்க நம் அருளாளர்கள்தான் எப்படி முட்டிமோதியுள்ளனர் தெரியுமா? ஒரு அருளாளர் தனக்கு துன்பம் வந்தபோதும் அந்த ஈசன்நிலையை, மாசில்லாத வீணையின் நாதம் (ஒலி), அந்திபகலில்லா மாலை நேர மதி(ஒளி), தென்றலின் இதமான தீண்டல் (அழுத்தம்) நறுமணம் வீசும் மலர்களை (மணம்) வட்டமிட்டு தேனைச் சுவைக்கும் வண்டுகளின் ரீங்காரம், குளிர்ச்சியான பொய்கை போன்றது என சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பஞ்ச தன்மாத்திரைகள் மூலம் விவரிக்கிறார். வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறை, சற்று மாறுபட்ட கோணம்.

    (இச் சம்பாஷணைக்கிடையில் மகரிஷி அவர்கள் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் புத்தகத்தை ஒரு தொண்டர் கொண்டு வருகிறார். அப்புத்தகத்தை பெற்றுக்கொண்ட குரு அதனை சீடனிடன் கொடுத்து….)

    எங்கே அந்த 23ம் பக்கத்தில் உள்ள பேரின்பத்திற்க்கான வரையரையை படி பார்க்கலாம்!!


    சீடன்: “இறைநிலையான மனஅலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக்காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே பேரின்பம் ஆகும்”.


    குரு: இதில் கவனித்தாயா அபூர்வமாக (Rarely) என்று கொடுத்துள்ளார். மனமானது துன்பம், இன்பம், அமைதி என்ற படிகளைக் கடந்த நிலையில்…இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால் மனம் ஒடுங்கிய நிலையில் அமைதியாக இருக்கும் போது இந்த அபூர்வநிலை நமக்கு வாய்த்து விடுகிறது. மனம் விரிந்த நிலையிலேயே இருக்கும்போது நீ கூறியவாறு இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வு அதாவது பேரின்ப நிலை சித்திக்கிறது. எப்பொழுதெல்லாம் அமைதி நிலையில் மன விரிவு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் பேரின்பமயம் தான்! உறைந்து உறைந்து இந்நிலையை பழகிக் கொள்ளச்சொல்கிறார் நம் குருதேவர். இந்த பேரின்ப – பிரம்மானந்த நிலையைப் பற்றி மேலும் விரிவாக மற்றோரு சமயத்தில் discuss செய்வோமா?

    சீடன்: அப்படியே ஸ்வாமிஜி! மிக்க நன்றி ஸ்வாமிஜி!

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

    *அவதாரங்களுள் தலை சிறந்தவர்

    வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!


  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

    (தொடர்ச்சி)

    ஆறாம் அறிவு

    நாள்- 20-05-2018-ஞாயிறு
    உ.ச.ஆ.20-05-33.

    lotus

     

    Maharishi

    guru seedan

    IMAGE-கு-சீ- உ- நோக்கம்

    சீடன்: (இரு கைகளைக் கூப்பி.. சற்று உரத்த குரலில்) வாழ்க வளமுடன் ஸ்வாமிஜி!

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? இன்றைக்கு குரல் பலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறதே?! சரி சரி உட்கார். நேற்றைக்கு ஆறாவது அறிவின் நோக்கம் என்ன என்று கேட்டாயல்லவா?

    சீடன்:  ஆம் ஸ்வாமிஜி.

    குரு: கூறுகிறேன்… எல்லாம் வல்ல தெய்வமே, நானாகவும் நாமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோமல்லவா? அதனைச் செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் அறிவதே ஆறாவது அறிவின் நோக்கமும், பயனும்.

    சீடன்:  ஸ்வாமிஜி தங்களுடைய விளக்கம் மனதிற்கு திருப்தியைத் தருகிறது. ஆனால்…

    குரு: என்ன ஆனால்… என்று இழுக்கிறாயே…?

    சீடன்:  ஒன்றுமில்லை ஸ்வாமிஜி. செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் இருப்பதில் தான் ஸ்வாமிஜி எனது சிக்கல். அந்த நிலையில் எப்போதுமே இருக்க முடிவதில்லை. இல்லை..இல்லை அந்த நிலையே எனக்குக் கிட்டவில்லைதான் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி புரிந்தும் அந்த நிலை கிடைக்காததற்கு காரணம் என்ன ஸ்வாமிஜி?

    குரு:  கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பிச் சேரும் வரை நீருக்கு அமைதி இல்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக… ஆறாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால்தான் அதற்கு ஓய்வும் அமைதியும்.

    சீடன்: பிரம்மம் தன்னைத் தானே அறிவதற்குக் கடலோடு ஒப்பிடலாமா ஸ்வாமிஜி?

    குரு: பிரம்மம் அதன் நிலையிலேயேதான் இருக்கிறது. உண்மையில் தன்னைத் தானே அறியவேண்டியது யார் என்றால் இந்த தனித்த நிலையில் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரும் மனிதன் தான்.

    சீடன்: மனிதன் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரக்காரணம் என்ன ஸ்வாமிஜி?

    குரு:  மனிதனிடம் தன்னிலையை அறியத் தக்க ஆறாவது அறிவு கூடியுள்ள போதும் அவன் உடலளவிலும் ஐயுணர்வு மயக்கத்திலும் தான் வாழ்ந்து வருவதுதான் சிக்கல்களுக்கெல்லாம் காரணம்.

    சீடன்: எப்போது அந்த மயக்கம் தெளிந்து விழிப்பு ஏற்படும்?

    குரு:  மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப் பொருள் – என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற விழிப்பு ஏற்படும்.

    சீடன்: ஸ்வாமிஜி, ‘விளக்கம் பெற்றால் தான்’ என்று கூறாமல், ‘உண்மை விளக்கம் பெற்றால் தான்’ எனக் கூறுகிறீர்களே?

    குரு: நவயுக வியாசரான நம்முடைய குருதேவர் கூறுவது போல், விளக்கம் என்பது information. உண்மை விளக்கம் என்பது confirmation. இந்த confirmation கிடைத்துவிட்டால் போதும், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற Transformation ஏற்பட்டு விடும். இன்னும் சற்று விரிவாகக் கூறுகிறேன் கேள்!

    சீடன்: (இரு கைகளைக் கூப்பி..) I am all ears swamiji!

    குரு: பள்ளி, கல்லூரிகளில் கருத்தியல் செயல்முறை பயிற்சி இருக்கிறதல்லவா?! அதுபோல்தான் information என்பது கருத்தியல். confirmation என்பது செயல்முறை.

    சீடன்: ! ! ! !

    குரு: இப்படி confirmation கிடைத்து Transformation ஏற்படும்போது தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்கிற உறுதிப்பாட்டில் நிலைக்கமுடிகிறது.

    சீடன்: அருமை ஸ்வாமிஜி. நன்றி !

    குரு: ஆனால் இந்நிலையை அடைய அயரா விழிப்புநிலை தேவை.

    சீடன்: அவ்விழிப்புநிலையை அடைவது எப்படி ஸ்வாமிஜி!

    குரு: இவ்விழிப்பைத் தருவது எளிய முறைக் குண்டலினி யோகமே. நீ உன்னை அறிந்து கொள்ள முயற்சி செய். மனிதன் என்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப் பதிவுகளையும் கழித்துப்பார். உன்னில் மிஞ்சுவது எல்லாம்வல்ல பரம்பொருளே. உருவத்திலே தான் மனிதன், ஆனால் அதைக் கடந்து விண்ணறிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய் விட்டால், எந்தப் பொருளுமே சிவம் தான். இறை நிலையே தான். இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.
    பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளி தான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும், புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவீசத் தொடங்கிவிடும். படிப்படியாகப் பிரம்மமே தானாக இருக்கும் அறிவாட்சித்திறம் உண்டாகும்.

    சீடன்: ….!!!!

    குரு: என்ன..? அறிவாட்சித்திறம் எப்படி கைவல்யமாகும் என்றுதானே உனது மனம் வினவுகிறது?

    சீடன்: (ஆச்சரியத்துடன்) ஆம் ஸ்வாமிஜி !

    குரு: இன்னும் சற்று நேரத்தில் இறைநிலைத் தவம் தொடங்கவிருக்கிறது. தவம் முடியட்டும். மாலை சந்திப்போம்!

    சீடன்: உத்தரவு ஸ்வாமிஜி !

    வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!

  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    வாழ்க மனித அறிவு!                                                                                                                                  வளர்க மனித அறிவு!!

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    (தொடர்ச்சி)

    நாள்: 13-05-2018-ஞாயிறு

    உ.ச.ஆ.13-05-33

    lotus

    Maharishiguru seedan

    gurussss

    சீடன்: வாழ்க வளமுடன்!

    குரு: வாழ்க வளமுடன்! உட்கார். இன்றைக்கு என்ன வினாவோடு வந்துள்ளாய்?

    சீடன்:  ‘நான்’ என் தத்துவமே நாமாகியுள்ளோம் என்று கூறுகின்றார்களே? எப்படி ஸ்வாமி?

    குரு:  சொல்கிறேன்… உதாரணத்திற்கு… சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இதில் பொதுவான விஷயம் ஏதாவது உள்ளதா?

    சீடன்:  ம்ம்..பொதுவான விஷயம்… இருக்கிறது ஸ்வாமிஜி!

    குரு:  என்ன அது?

    சீடன்:  தண்ணீர் ஸ்வாமிஜி.

    குரு:  Good!இப்போது சொல்.. தண்ணீர் என்று ஒரு பொதுப் பெயர் இருக்கும்போது ஏன் சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று கூறவேண்டும்?

    சீடன்:  சமுத்திரம் மிகப் பெரியது… மற்ற இடங்களில் உள்ள நீரின் இருப்பு, தன்மை, ஓட்டம் மற்றும் சுற்றுப்புறம் இவற்றிக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    குரு: சரியாகச் சொன்னாய். வாழ்க வளமுடன்! இப்போது ஆதி எனும் பரம்பொருள் மெய்… என்ற இறைவணக்கப் பாடலை முழுவதுமாகப் பாடு பார்க்கலாம்.

    சீடன்: (கண்களை மூடிக்கொண்டு)

    …….. ……. …… (சிறிது மெளனம்)

    ஆதியெனும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
    அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
    மோதியிணைந்து இயங்குகின்ற  நிலைமைக்கு ஏற்ப
    மூலகங்கள் பலவாகி  அவையிணைந்து
    பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
    நீதிநெறி உணர்  மாந்தராகி வாழும்
    நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

    (சிறிது நேரம் நிசப்தம் நிலவுகிறது)

    குரு:  வாழ்க… வாழ்க…வளமுடன்! பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி தனித்த நிலையில் நான் என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.

    சீடன்: … … … … …

    குரு:  இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

    சீடன்: இறை=நான்=நாம்=எல்லாம்.

    குரு:  Excellent!!  வாழ்க வளமுடன்! ஞானக்களஞ்சியம் பாகம் ஒன்று வைத்துள்ளாயா?

    சீடன்:  (தன் தோள் பையிலிருந்து எடுக்கிறார் சீடன்) இதோ ஸ்வாமி!

    குரு:  (கண்களில் ஆச்சரியத்துடன்) பரவாயில்லையே! கையிலேயே வைத்துக்கொண்டுள்ளாயே! எங்கே மகரிஷி அவர்கள் எழுதிய “நான்” என்ற தத்துவமே நாம் என்று தொடங்கும் பாடலைப் படி. பாடல் எண் 876 என நினைக்கிறேன்.

    சீடன்: ஆம் ஸ்வாமி 876 தான்.

    (பாடலைப் படிக்கிறார்)

    நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
    நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
    ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
    ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
    தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
    தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்து,
    ஆன்ம நிலையறிந்ததனால், பேதமற்ற

    அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்!.”

    குரு:  சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று தண்ணீர் அழைக்கப்படுவது போல ‘நான் என்ற தத்துவம்தான் – அரூபசக்தி தான்,நாம் என்ற பலராக, அனேகக் கோடி சீவன்களாக, மனிதர்களாக அறிவியக்கங்களாக இருக்கிறது.

    சீடன்: இப்போது புரிகிறது. நன்றி ஸ்வாமிஜி!  ஆனால் இந்த ஆறாவது அறிவின் நோக்கம் என்ன?

    குரு:  நாளை சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வாழ்க அறிவுச் செல்வம்!!

    மறுநாள் சீடன் குருவை சந்திக்க வருகிறான். அந்த நிகழ்வை அடுத்த ஞாயிறன்று அறிந்து கொள்வோம்.