இன்றைய விருந்து

 • FFC – 304(268)செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

  வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

  lotus

  FFC – 304(268)
  அ.வி. 304(268)

  09-08-2020-ஞாயிறு

  செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

  சொல்

  நன்முத்துக்கள்:

  நற்சொற்கள் நன்முத்துக்கள் போன்றவை. மனிதனின் முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ என்பது பற்றி ஆராய்வோம். சொல் வருவதற்கு முன்னர் அது எண்ணமாக உருவெடுத்த பிறகுதான் வரும். எனவே எண்ணம் வரும்போதே ஆராய்ந்து அவ்வெண்ணம் நல்லதாக இருந்தால் அதனை மனதில் வளர விடலாம். இல்லை எனில் துன்பம் விளைவிக்கும் என்று கருதினால், வேண்டாத செடியினை முளையிலேயே கிள்ளி எறிவதுபோல் தீய எண்ணங்களை முதன் முறையாகக்கூட உள்ளே விடக்கூடாது. ஒரு முறை விட்டுவிட்டாலே அந்த எண்ணம், அந்த மனஅலைச்சுழல் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அடுத்த கட்டமான (next stage) சொல்லாக வெளியே வந்துவிடும். அல்லது எண்ணம் அழுத்தம் அழுத்தமாகவும். தீவிரத்துடன் இருந்தால் சொல்லாக வராமல், மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான நேரிடை செயலாகவே வந்துவிடும்.

  எது இறைவழிபாடு?

  ‘சொல்லாகிய’ செயலுக்கும்  விளைவு நிச்சயம் உண்டு. நல்ல சொற்கள் இனியவையாக இருக்கும். நல்ல சொற்கள் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கும். ‘மனிதன்’ என்கின்ற சொல்லிற்கு இலக்கணமாக (மனம்+இதம்=மனிதன்) நல்ல சொற்கள் இதமாக இருக்கும். நல்ல சொற்களைப் பேசுபவருக்கும் இதமாக இருக்கும். யாரிடம் நல்ல சொற்கள் பேசப்படுகின்றனவோ அவருக்கும் இதமாக இருந்து இன்பத்தை அளிக்கும். எண்ணம் தீயதாக இருந்தால் அதனால் வரும் சொல்லும் தீயதாக இருக்கும்.

  மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் யாதெனில், பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து மதித்து இரங்கி உதவி செய்வதாகும்.

       பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. புலிக்கு மானின் உணர்வு தெரியாது. தெரிந்தால் பாம்பிற்கும், புலிக்கும் உணவு இல்லை. பட்டினியால்  இறக்க வேண்டியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்லவே! இனியவை கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறினால் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் இல்லையா? அதனால் நட்பு நலம் கெடும் இல்லையா? பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து இரக்கம் கொண்டு உதவி செய்வதில்தான் அறவுணர்வு மலர்கின்றது.

        ‘இறைவழி வாழும் அறவாழ்க்கையே இறைவழிபாடு’ என்றிருக்கும்போது இனிய (அன்பான) சொற்களைப் பேசுவதுதானே இறைவழி வாழும் இறைவழிபாடு.

  இறை உணர்வின் பிரதிபலிப்பே அறவுணர்வு:

       அறவுணர்வு என்பது இறைவுணர்வின் பிரதிபலிப்பே ஆகும் இல்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடித்த திருவள்ளுவர் 2051 வருடங்களுக்கு முன்னரே ‘இனியவை கூறல்’ என்கின்ற அதிகாரத்தை(எண் 10) வைத்து அதில் பத்து கோணங்களில் ‘இனியவை கூறலின்’ பயன்களை எடுத்துரைக்கிறார். மேலும் ‘புறங்கூறாமை’ பற்றி எடுத்துரைக்க ஒரு அதிகாரத்தையே(எண் 19) வைத்து அதில் வழக்கம் போல் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

     மேலும் இறையின் பிரதிநிதியான மனிதன் எப்போதும் தனக்கும் சமுதாயத்திற்கும் அவனது முத்தொழில்களில் அதிகமாக பயன்படுத்தும் சொற்கள் பயனுள்ளனவாகவே அமைய வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘பயனில சொல்லாமை’ (அதிகாரம் எண் 20) என்கின்ற அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.

  திருவள்ளுவரை நம்முடைய மானசீகக் குருவாக வணங்குவோம்:

  dheaivappulavar

  ‘இனியவை கூறல்’ மட்டுமே ‘சொல்’ வகையில் சேர்ந்ததல்ல, ‘புறங்கூறாமையும்’, ‘பயனில சொல்லாமையும்’ ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே என்பதனை அறிந்து ‘பேசும் சொல்லிலும், சொல்லை பயன் படுத்துவதிலும்’ விழிப்போடு இருக்க வேண்டும்.

       அறிவின் முழுமைப்பேற்றினை (முக்தி) அடைய அகத்தை ஆய்வு செய்து கொண்டுவரும் அகத்தாய்வாளர்களாகிய நாம், குருநாதரின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவரை நாமும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு திருவள்ளுவரின் அருளையும் பெறுவோம்.

      திருவள்ளுவர் அருளியுள்ள அந்த அந்த முப்பது குறட்பாக்களையும் ஒரு முறை வாசித்து பயன் பெறலாமே! மனனம் செய்து கூட பயன் பெறலாமே! பெறுவோமா? வாழ்க வளமுடன்.

       நேரம் கிடைக்கும்போது புனித நூலான திருக்குறள் நூலைத் திறந்து பார்த்து, அன்றைக்கு என்ன இயற்கை/இறை ஆன்மசாதகனுக்கு அறிவுறுத்த நினைக்கின்றதோ அதனை வாசித்து அப்போதே இன்புற்று, அந்த இன்புறுதல் தொடர, ‘இன்புறுதலாகவே’ மாற அதனை நடைமுறைக்கு கொண்டுவராலாமே!

  அந்த முப்பது குறட்பாக்களில் ஒரு சில குறட்பாக்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

  இனியவை கூறல் – அதிகாரம் 10

  அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
  நாடி இனிய சொலின்.”                                             . . .  குறள் எண் 96

  பொருள்: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் தேய்ந்து புண்ணியம் வளரும்.

  ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்று பட்டிணத்தடிகள் கூறியதுபோல் வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆன்மா உடலெடுத்துள்ளது. எனவே ஆன்ம-தூய்மை சாதகர்கள் சொல்லைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சொல்தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

  புறங்கூறாமை அதிகாரம் – 19

  அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன்
  ‘புறம்கூறான்’ என்றல் இனிது                                         . . .  குறள் எண் 181

  பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும். அறச்செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறங்கூறாதிருத்தல் நன்று என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். இவ்வாறு கூறுவதால்  பாவங்களைச் செய்வது பரவாயில்லை என்று பொருள் அல்ல. மனிதன் வாழ்க்கையில் புறங்கூறாமையை பாவமாகக் கருதுவதில்லை என்பதனை மனிதன் உணரவேண்டும் என்பதனை திருவள்ளுவர் வலியுறுத்த விரும்புகிறார். பாவமாக கருதுவதையே பழக்க தோஷத்தால்(பழக்கப்பதிவின் அழுத்தத்தால்) மறந்து பாவங்களைச் தொடர்ந்து செய்து வருகிறான் மனிதன். அப்படியிருக்கும்போது இதுவரை பாவம் என்று கருதாத ‘புறங்கூறுதலை’ இனிமேலும் செய்து விடக்கூடாது எனக் கருதி புறங்கூறாமை அதிகாரத்தில் இக்குறளை முதலாவதாக வைத்துள்ளார். புறங்கூறுவதால் என்ன பாவம் நடக்கின்றது?

      ஒருவரின் image கெடுகின்றது.

      புறங்கூறப்படுவதால் இருவருக்கும் பகைமை ஏற்படலாம்.

     பகைமை ஏற்படின் துன்பங்கள் வரலாம்.

    இவ்வளவு துல்லியமாகவா மனிதன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கலாம். உயிரற்ற சடப்பொருட்களில் மிக மிக துல்லியமாக இயங்குகின்ற ஒழுங்காற்றலே மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது என்பதனை நினைவிற் கொள்க.

   இவ்விடத்தில் மகரிஷியின் கண்டுபிடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதை அவர் வாய் மொழியாகவே அறிவோம்.

  உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
  உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
  உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்,
  உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.’

  சடப்பொருட்கள் அணுக்களாக கலைந்துவிடும்:

  சடப்பொருட்களில் துல்லியமாக ஒழுங்காற்றல் செயல்படவில்லையானால் அந்த சடப்பொருட்கள் சடப்பொருட்களாக காட்சியளிக்க முடியாது. அணுக்களாக கலைந்துவிடும்.

      சாலையில் மகிழுந்து ஓட்டுனர் மற்றொரு வாகனத்தின் மோதாது விபத்து நடக்காமல் இருக்க துல்லியமாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். விபத்து நடந்தபோது ‘மயிர் இழையில்’ உயிர் தப்பினார் என்கிறோமே! அது என்ன? அவ்வாறிருக்கையில் மனிதனும் துல்லியமாகத்தான் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அயராவிழிப்போடு வாழக்கற்றுக் கொண்டால் துல்லியமாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது.

       இறையேதான் மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது, இறையிடம் உள்ள தன்மையைத்தானே மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இறையிடம் இல்லாத தன்மையையா எதிர்பார்க்கப்படுகின்றது? இறையிடம் இல்லாத தன்மை என்றே சொல்ல முடியாது.

      சொல்லால் நன்மையே விளைய வேண்டும் என்று சிந்தித்து வந்தோம். எப்போதும் இனியவை கூறுதலாலும், எப்போதும் புறங்கூறாதிருத்தலாலும் புண்ணியக்கணக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாம் என்றும் அதனால் இறை அருள் பெருகிவரும் எனவும் சிந்தித்தோம். சொல்லின் மூன்றாவது வகையான ‘பயன் இல சொல்லாமை’யைப்பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிவோம்.

  பயன் இல சொல்லாமை:

  பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
  மக்கள் பதடி எனல்.                                                             . . . குறள் எண் 196

  பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல முறை சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

       திருவள்ளுவர் ‘பதர்’(பதடி) என்று சொல்கிறாரே என்ன அர்த்தம்? ஏன் பதருடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பதனை கவனிப்போம்.

      பதர் என்றால் உள்ளீடற்ற நெல்(empty ears of grain, chaff) மற்றும் உபயோகமற்ற நபர் (worthless person)என்று பொருள்.

      சொல் எப்படி உருவாகிறது? சொல்லை வெளிப்படுத்துவதற்கு நாக்குதான் கருவி. இருப்பினும் அதற்கான ஆற்றல் சீவகாந்தம். சீவகாந்தம் என்பது என்ன? இறையின் ஆற்றல்தானே சீவகாந்தமாக செயலாற்றுகின்றது. சீவகாந்தத்தைப் பயன்படுத்தி பயனில்லாத சொற்களைப் பேசுவதால் இறை ஆற்றலான சீவகாந்தம் தான் வீணாகின்றது. எனவே யாருக்கும் பயனில்லாத சொல் பேசுதலை நெல்மணிகளுடன் பயன்படாது இருக்கும் பதருடன் ஒப்பிடுகிறார். பயன் படாது போனாலும் பரவாயில்லை. பேசுவரின் சீவ காந்தமும் விரயம் ஆகின்றது. கேட்பவரின் சீவகாந்தமும், நேரமும்(இறை ஆற்றல்) விரயமாகின்றது.

  மேலும் சொல் வகையைச் சார்ந்தவை எவை எவை?

      மேலும் அறிய வேண்டியது யாதெனில் நன்றியுணர்வும், பாராட்டுதலும் கூட ‘சொல் வகையை’ச் சார்ந்ததே. எப்படி? ஒருவர் செய்த உதவிக்கு பயன் பெற்றவர் நன்றி கூறுதல் அவசியம். ‘நன்றி’ என்று கூறுவது நாவினால் சொல்கின்ற சொல்தானே! இனியவை கூறல் அதிகாரத்திற்கு பின்னர் செய்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ள காரணத்தை அறிய வேண்டும். ‘நன்றி’ என்று கூறுவது இனியவை கூறல்தானே! நன்றி கூறுதலோடு நின்றுவிடக்கூடாது. அதனை நினைவில் கொண்டு அவருக்கு ஏதாவது தேவை ஏற்படுகின்ற சூழல் வந்தால் திருப்பி உதவி செய்ய(reciprocation) வேண்டும்.

  செய்நன்றி அறிதல்:

  எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு”                                  . . . குறள் எண்-107

  பொருள்: துன்பத்தைப் போக்கினவரின் நட்பை ஏழுபிறப்பிலும் நினைப்பர் பெரியோர்.

  (எழுமை வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினைக் குறிக்கின்றது)

  பாராட்டு:

  பாராட்டு என்பதும் ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே. பாராட்டு என்பது உயர்வாகக் கூறுதல், மெச்சிப் புகழ்தல் என பொருளாகின்றது. ஒருவர் செய்த செயலால் பயன் வருகின்றபோது அச்செயலை பாராட்ட வேண்டும்.  ‘மிகைபடச் சொல்லேல்’ என அவ்வைத்தாய் ஆத்திச் சூடியில்(89) அறிவுரை கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

     பாராட்டு என்கின்ற சொல்லிற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தினை நினைவு படுத்திக் கொள்வோம்.  பாராட்டு என்பது இரண்டு சொற்களைக் கொண்டது, பார்+ஆடு=பாராட்டு. ஒருவர் செய்த செயலால் உலகமே(பார்) பயனடைந்து அதனால் மகிழ்ச்சி பொங்கி ஆடுதலால் வரும் சொற்களே பாராட்டு எனப்படுகின்றது என்பார் மகரிஷி அவர்கள்.

  அவ்வைத்தாய் எவ்வாறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திச்சூடியில் அமுதமொழிகளால் அறிவுரைகளை கூறுவதனை நினைவு கூர்வோம்.

   அவ்வையின் ‘சொல்வகை’யைச் சார்ந்த அமுதமொழிகள்:

   

   

  இவ்வாறாக ஆத்திச்சூடியில் 108 ஒரு வரி அறிவுரைகளில் சொல்லை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று,

      திருவள்ளுவர் ஒரு அறிவுரையை ஒரு அதிகாரத்தில் பத்து கோணங்களில் அறிவுறுத்துவதுபோல்,

      அவரது சகோதரியும் நம்முடைய அருட்தாயுமான அவ்வை ‘பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பத்திற்கும் மேலான கோணங்களில் அறிவுறுத்துகிறார். 

  அல்லது கற்றுத்தருகிறார் என்பதனை அறிந்து மகிழ்வோம்.

  ஆத்திச்சூடி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆன்மீகத்தில் வெற்றி பெரும் வரை அனைவருமே ஒரு வகையில் குழந்தைகள்தான். எனவே ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை படித்து அவ்வைத்தாய் கூறியுள்ளதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

  விரும்பும் இனியவை ஈடேற …. ?

   

  எல்லோரும் இனியவையே விரும்புவர்.

  ‘அறிவினர் சேர்தல், இனிது என்றும், அதனினும் இனிது, அவரை கனவிலும் நனவிலும் காண்பது தானே’ என்கின்ற அவ்வைத்தாய்

     ஆத்திச்சூடியில் ‘சான்றோர் இனத்திரு’ என்று ஒரு வரியில் கூறுகிறார். அதாவது சான்றோர்களிடம் சேர்ந்து இரு என்கிறார். இனியதை அனுபவிக்க சான்றோர்களிடம் சேர்ந்திருப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்?

  சான்றோர்களிடம் சேர்ந்திருக்க …..?

      சான்றோர்களிடம் சேர்ந்திருப்பதற்கு என்ன சான்று? சான்றோர்களிடம் சார்ந்திருப்பவர் நல்ல சொற்களையே பேசாமல் இருந்தால் சான்றோரைச் சேர்ந்திருப்பதற்கு சான்றாகுமா? சான்றோர்களிடம் சேர்ந்திருத்தலின் பயனை அனுபவிக்க முடியுமா?

  எனவே சொற்களைப் பயன்படுத்துவதில் ‘மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற அறிவுரையை நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும் என்பதே இதுவரை ‘சொல்’ பற்றி சிந்தித்ததின் பயன் என அறிந்து கொள்வோம்.

  நல்லதையே எண்ணுவோம். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். .

  எப்போதும் விழிப்புணர்வோடு இருப்போம்.

   இது வரை மனிதனின் முத்தொழில்களில் ஒன்றான சொல் பற்றி அறிந்து கொண்டோம். அடுத்ததாக ‘நேரிடை செயல்’(Direct action) பற்றி அடுத்த அறிவிற்கு விருந்தில்(12-08-2020-புதன்)

  வாழ்க அறிவுச் செல்வம் !                          வளர்க அறிவுச் செல்வம்!!


 • FFC-303(267)-செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

   

  வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC – 303

  அ.வி. 303

            

                                                    05-08-2020-புதன்

    

   செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

           ‘செயல்’

  சென்ற அறிவிற்கு விருந்தில் தத்துவம்(philosophy) என்கின்ற சொல்லிற்கு பொருள் ‘அறிவை நேசி, ஞானத்தை நேசி, (Love wisdom)’ என்று  அறிந்து கொண்டோம். தத்துவத்தின் பொருள் அவ்வாறிருக்க இனிமேலும் ‘செயலுக்கு விளைவு வருவதனை’ தத்துவம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாகின்றது. அப்படியானால் ‘செயல், விளைவு, கருமையம்’ என்றே தலைப்பாக வைத்துக்கொண்டு சிந்தனையைத் தொடங்குவோம்.

    ‘செயல்’ என்றால் என்ன?

   தலைப்பின் முதல் சொல்லான ‘செயலுக்கு’ வருவோம்.

   செயல் புரியாமல் வாழ்க்கை இல்லை:

        உடல் உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது செயல். பொதுவாக செயல் எனப்படுவது பிறர் அறிய செய்வது எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.  உடலால் செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது.   புற உறுப்புகளான  கைகள், கால்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால் பிறரால் அறிய முடியாத எண்ணமும் எண்ணுகின்றவரின் செயல்தான்.  மேலும் ஒருவர் பேசுவதும் செயல்தான்.  எனவே செயல் என்பது மூன்று வழிகளில் நடக்கின்றது.  அதாவது எண்ணம், சொல். செயல்(thought, word, deed) ஆகிய மூன்றின் வழியாக வாழ்க்கை நடக்கின்றது.  எனவே செயல் புரியாமல்  வாழ்க்கை இல்லை.  இதில் யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்காது. 

     ஆனால்  ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற நியதியினை(உண்மையினை) மறந்துவிட்டு செயல் செய்வதற்கு முன்னரே, அச்செயல் செயலால் உடனோ அல்லது பின்னரோ வரவிருக்கின்ற விளைவு நல்லதாக இருக்குமா, அல்லது தீமையாக இருக்குமா என்று  முன்னரே யோசனை செய்யாமல், செயல் புரிந்துவிட்டு பின்னர் ஒருவேளை விளைவு தீமையாக வந்தால் அப்போது வருந்துவர்.  செயல் செய்து விட்ட பிறகு விளைவைத் தடுத்து நிறுத்த முடியாது.   வில்லைவிட்டு சென்ற அம்பிற்கு ஒப்பாகும்.   செயலுக்கு விளைவினை முன்னரே கணிக்காது செயல்புரிவதனை என்னவென்று சொல்வது?

      அறியாமை என்று சொல்வதா? 

      அலட்சியம் என்று சொல்வதா?

      உணர்ச்சிவயம் என்று சொல்வதா?

   சிந்தனையின் உச்சம் அறிவின் தெளிவு!

      சிந்தனையின் உச்சம் அறிவு   தெளிவு அடைதலே! அறிவு  விரைவாகத் தெளிவடையக் கூடிய தன்மையுடையது.  தெளிவும், விரைவும்  ஆகிய இரண்டும் சேர்ந்திருப்பதைத்தான், அறிவை ‘விரைந்துணர் அறிவாற்றல் உடையது’ என்று போற்றி மகிழ்கிறோம்.  இதனையேத்தான்  அறிவின் சிறப்புத் திறனாக  நுண்மாண்நுழைபுலன் (perspicacity) என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  செயல் வகையைச் சேர்ந்ததுதான் எண்ணமும்:

           எண்ணம் மனிதனின் முத்தொழில்களில் முதலிடம் வகிக்கின்றது. இதனை சற்று நேரத்திற்கு முன்னர்தான்  அறிந்தோம்.  இருப்பினும் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதால் மீண்டும் எண்ணத்தைப் பற்றி தனியாக சற்று ஆராய்வோம்.  ‘எண்ணம்தானே, நான் எண்ணியதை பிறர் யாரும் அறியமுடியாது’ என நினைக்க முடியாது. பிறர் நம் எண்ணத்தை அறிய முடியாவிட்டாலும் நம்  உடம்பினுள்ளே கோவில் கொண்டிருக்கின்ற  உத்தமன் அறிவான்.  இது பற்றி கருமையம் தலைப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’  என்பது ஆன்றோர் மொழி.  அகத்தில் இருப்பதனை முகம் காட்டிக்  கொடுத்து விடும் என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.

   எண்ணம் போல் வாழ்வு. 

  எண்ணமே வாழ்க்கையின் சிற்பி.  

   நல்  வாழ்வு வாழ வேண்டுமெனில் நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும். 

  எண்ணமே இயற்கையின் சிகரமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

  எண்ணத்திற்கேற்ப உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் தீய எண்ணங்களினால் ஏற்படும் இரசாயன மாற்றம் உடல் நலத்தைகெடுக்கும்  என்கிறார்கள். 

  எண்ணம் உயர்ந்த பதவி வகிப்பதால், உயர்ந்த பதிவிற்கேற்ப அதிகாரமும் பொறுப்பும்(duties and responsibilty) எண்ணத்திற்கு வந்துவிடுகின்றது.  என்ன அந்த உயர்ந்த பதவி?

       எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளது. ஏன் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இயற்கையின் ஆதிநிலையே   பேரறிவு. அது மனிதனிடம அறிவாக உள்ளது. எண்ணுவது யார்? அறிவுதான் எண்ணுகின்றது. எனவே அறிவும் எண்ணமும் ஒன்றே.  ஆகவே  இயற்கையின் சிகரம் எண்ணம் என்கிறார்.  இயற்கையின் ஆதிநிலையில் அறிவு இல்லாவிட்டால் என்னவாகும்? கற்பனை செய்து பார்ப்போமே! ஆதிநிலை வெளியும், அறிவும் நிறைந்தது. இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.

   எண்ணங்கள் பற்றி நம் குருநாதர் கூறுகின்ற அமுத மொழிகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம்.

  உணவும் எண்ணமும்(18-12-1956)

   உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

  எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்”  . . . மாக்கோலம் 

   மேற்கண்ட பாடலை 1956 ல்(18-12-1956) அருளியவர் ஒருவருடம் கழித்து மேலும் எண்ணத்தைப் பற்றி உணவும் எண்ணமும் என்கின்ற தலைப்பிலேயே மேலும் இரண்டு அடிகளைச் சேர்த்து அருளிய பாடலையும் நினைவு படுத்திக் கொள்வோம்.

   உணவும் எண்ணமும்(21-12-1957)

  உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

  எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்

  எண்ணமோ உணவில் எழுச்சி பெறும் இயக்கமே

  உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பாரீர் உறவையறி.”   

                                                                                                         … மாக்கோலம்

       முதல் பாடலில் எண்ணத்தின் தன்மையை எடுத்துக் கூறுகிறார்.  இரண்டாம் பாடலில் உணவின் தன்மைக்கேற்ப எண்ணம் எழும் என்று கூறி உணவிற்கும் எண்ணத்திற்கும் உறவை அறிந்து நல்ல எண்ணங்களை உருவாக்கும் நல் உணவை உண்ணச் சொல்கிறார்.

       எண்ணம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள அமுத மொழிகளை(பாடல்கள்) 28 ஐயும் ஞானக் களஞ்சியம்  (பாகம் 2) 6.23 இல் காணவும்.

        எண்ணத்திற்கு விளைவு உண்டு என்றால் எவ்வாறு விளைவு வரும்?  எண்ணத்திற்கு விளைவு நேரிடையாக வராததுபோல் தோன்றும்.  அப்படியானால் எண்ணத்திற்கு அடுத்த நிலையான  சொல்லாக வரும்.  சொல்லாக வரும்போது, சொல்லைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த சொல் தனக்கும், பிறர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்குமானால் அது நற்சொல்.  அப்போது பேசியவரின்  ‘புண்ணியம் என்கின்ற அருட்கணக்கில்’(Divine Grace Account) ஒரு மதிப்பெண்(positive mark) வந்து சேரும்.  ஒரு வேளை ஒருவரது சொல் நன்மை பயக்காமல். தீமையை தரும் பட்சத்தில் அவரது பாவக் கணக்கில்(Sin Account) ஒரு மதிப்பெண்(minus mark) வந்து சேரும். பாவக்கணக்கு அதிகமானால் துன்பம் வந்து சேரும்.  புண்ணியக் கணக்கு அதிகமானால் இறையிடமிருந்து அருள் வந்து சேரும்.

     எண்ணத்தை பற்றி மேலும் நன்கு தெளிவடைய மகான் மகா கவி பாரதியார்  அருளியுள்ள பாடலின் வழியாக நினைவு கூர்வோம்.

   அன்னையை வேண்டுதல்

  எண்ணிய முடிதல் வேண்டும்

  நல்லவே எண்ணல் வேண்டும்;

  திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

  தெளிந்த நல்லறிவு வேண்டும்;

  பண்ணிய பாவ மெல்லாம்

  பரிதிமுன் பனிபோல,

  நண்ணிய நின்முன் இங்கு

  நசித்திடல் வேண்டும் அன்னாய்.

  . . .  மகா கவி பாரதியார்.

   

      பக்திமார்க்கத்தில் இறைவழிபாடு செய்பவர்களுக்காக இறைவியிடம்  எவ்வாறு வேண்ட வேண்டும் என எடுத்துக்காட்டுவதற்கு இப்பாடல் இயற்றியுள்ளார்.  பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த அருளுரை என்பது கிடையாது.  ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த அருளுரை பொருந்தும்.  எப்படி? ஞானமார்க்கத்தில் உள்ளவர் எண்ணம் ஆராய்தலை அக்கறையாகச்  செய்ய உதவும்.  மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால் உள்ளத்திற்கு அந்த உறுதிமொழியினை சங்கல்பமாக செய்ய வேண்டும். இப்போது பாடலின் பொருளுக்குள் செல்வோம்.

       பக்தியில் ‘வேண்டிப் பெறவேண்டும்’ என்கின்ற கோட்பாடு உள்ளதால், முதலில் தன் தேவைக்காக வேண்டச் சொல்கிறார். அதாவது ‘எண்ணியது முடிய வேண்டும்’ என வேண்டச் சொல்கிறார்.  தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது நல்லவையாகத்தானே இருக்க யாவரும் விரும்புவர்.       

     எனவே தான் எண்ணிய நல்லது நடக்க வேண்டுமென்றால் (விளைவு),  அந்த நல்ல விளைவிற்கேற்ற செயல் புரிதல் வேண்டும்.  இங்கே எண்ணுவதுதான் அச்செயல்.  செயலுக்கேற்ற விளைவுதான் வரும் என்பதால் நல்ல விளைவு கிடைக்க அடுத்ததாக ‘நல்லவையே எண்ணல் வேண்டும்’ என வேண்டச்சொல்கிறார்.  ஒரு வகையிலே பார்த்தால் வேண்டுதலையும் கேட்கச்சொல்லி, ‘அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வேன்’ என்கின்ற உறுதிமொழியினை இறைவியிடம் அளிக்கச் சொல்கிறார். இறைவியிடம் அளித்த உறுதியினை மீறமுடியாது அல்லவா?( Devotee has committed and a binding  to think good)   ஆனால் எதார்தத்தில் நடப்பது வேறாக உள்ளது. ‘எண்ணம்போல் வாழ்வு’ ‘மனம்போல் வாழ்வு’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள். எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுகின்றனர்.

  வேதாத்திரி மகரிஷி அவர்கள் அற-எண்ணத்தைப் பற்றிக் கூறுவது: 

      ஆழியாரில் இருக்கும்போது மகரிஷி அவர்கள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முப்பது நாள் மௌன நோன்பது இருப்பது வழக்கம்.  அப்போது அவருடன் சேர்ந்தே அன்பர்களும் மௌன நோன்பு இருப்பர்.  அப்போது ஒவ்வொருநாளும் அன்பர்கள் சிந்திப்பதற்காக  காலையில் சிந்தனை விருந்தினை அவர் எழுதி அன்பர்களுக்கு தரப்படும். அவ்வாறு 1988 ஆம் வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஆற்றிய மௌன நோன்பின் கடைசி நாளான 23-12-1986 (உ.ச.ஆ 23-12-03) அன்று மகரிஷி அவர்கள் ‘சிந்தனைத் தொகுப்பு’ என்கின்ற தலைப்பில் அருளிய சிந்தனை விருந்தில் எண்ணத்தைப்பற்றி அருளுவதை அவர் வாய்மொழியாகவே அறிந்து மகிழ்வோம்.

  “நல்ல பயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம்  இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும், சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும்; அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக!.”

       அற-எண்ணத்திற்கேற்ற(தூய),  செயல்களை  யார் செய்கின்றனரோ அதற்கேற்ப அவருக்கு ஏற்படும் தெய்வீக நல் விளைவைப்பற்றிக்(அருள்) கூறுகிறார்,  இந்த அனுபவம் அவருக்குமட்டும்தான் கிடைக்கும்  என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, ‘உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது’ என்று உறுதியளிக்கின்றவர் இங்கே நல்ல எண்ணங்களின் விளைவுகளை கூறுவதோடு நின்றுவிடாமல் அதனை நம் ‘அனுபவத்தில் கண்டு இன்புறுவீர்களாக’ என வாழ்த்துகிறார் மகரிஷி அவர்கள்.

      மேலும் அவரது 80 வயதில் ஒரு நாள்,

  இப்பவும் ஏதாவது எண்ணம் எனக்கு வருமானால், அது ஏன் வந்தது, எதற்காக வந்தது  என்று  ஆராயாமல் (gate keeper போல் இருந்து கொண்டு) உள்ளே விடுவதில்லை” என்றார்.

  இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டியது?  அவரைப் பொறுத்த வரை ஆயிரம் பிறை கண்ட ஞானி அவர் அப்போது. எனவே அப்போது வருகின்ற எண்ணங்கள் சாதாரண மனிதனுக்கு வருவதுபோன்ற எண்ணங்கள் வருவதற்கே வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது நல்ல எண்ணங்கள் தான் வரும்.  இருந்தாலும் அந்த எண்ணங்களைக் கூட ஆராய்ந்த பிறகுதான் உள்ளே விடுவார் என்று அறியமுடிகின்றது.  பிறருடைய எண்ணங்கள் நம்முள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். நல்லவைகளாக இருந்தால் சரி, அவ்வாறில்லாமல் பிறருடைய எண்ணமாக தீயதாக இருந்து அவரால் செயல்படுத்த முடியாததாகிய நிலையில், அது நம்மை கருவியாக்கிவிடக்கூடாது என்பதனை எச்சரிக்கவே  தன்னுடைய ‘எண்ண ஆராயும் விதத்தை’ க் கூறி நமக்கு எண்ணத்தின் இயல்பை  எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.

       மேலும் நம் குருபிரான் அவர்கள் பிறர் எண்ணங்கள் நம்மைத் தாக்கக் கூடாது என்பதற்காக அவர் வாழ்க்யைில் நடந்த நிகழ்ச்சியினை அறிவோம்.  அந்நிகழ்ச்சி  மதமும் மனிதனும் என்கின்ற நூல் எழுதும்போது நடந்தது.   அந்நூலில் முகவுரை எழுதிவிட்டார்(பக்கம் 3-5).  பிறகு அந்நூலை ஆரம்பிப்பதற்கு முன் குருவணக்கம் செலுத்துகிறார் பக்கம்11 ல், அப்போது அவர் கூறுவதனை நாம் அப்படியே அறிவோம்.

  மதமும் மனிதனும் என்ற தலைப்பில் எனது சிந்தனையில் உதித்த கருத்துக்களை எழுதி அன்பர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக உதவ வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக எனது உள்ளத்தில் அழுத்தம் பெற்று வந்தது.  இத்தகைய உயர்ந்த சிந்தனைக்குரிய கருத்துக்களைத் தொகுப்பதற்கோ ஓய்வு வேண்டியுள்ளது.   இந்தக் கருத்துக்களைத் தொகுக்கும்போது வேறு சில அன்பர்களின் உரையாடலோ, செயல்களின் தாக்கமோ ஏற்படாது இருக்கத் தக்க நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து(17-11-2001) இந்த ஆண்டு மௌன நோன்பு தொடங்கியிருக்கிறேன்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு இந்த உயர்ந்த நன்நோக்கக் கருத்துக்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளேன்.”  என்கிறார் எண்ணமே இயற்கையின் சிகரம் என்று கண்டுபிடித்த  மகரிஷி அவர்கள்.

   

  இதுவரை செயலின் முதல் நிலையான எண்ணத்தைப் பற்றி முடிந்த வரை விரிவாகப் பார்த்தோம்.  இனி முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ பற்றி ஆராயலாம்.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்    (09-08-2020-ஞாயிறு) சிந்திப்போம்.

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                  வளர்க அறிவுச் செல்வம்!!


 • FFC-302(266) செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

  வாழ்க மனித அறிவு!                                                                      வளர்க மனித அறிவு!!

  lotus
  FFC – 302
  அ.வி. 302

  02-08-2020-ஞாயிறு

  செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

  (தத்துவம் என்றால் என்ன பொருள்?)

  Jun2004-17a

  வாழ்க வளமுடன்!

  செயலுக்கு விளைவு உண்டா, வருமா?

  செயலுக்கு விளைவு வருவது உண்மையைச் சேர்ந்ததா?

  தத்துவைத்தைச் சோ்ந்ததா?

  அல்லது  அறிவியலைச் சேர்ந்ததா?

  செயலுக்கு விளைவு வருவதனை, அறிவியல் அடிப்படையில் நிரூபித்தால்தான்  மனிதஅறிவு ஏற்றுக்கொள்ளுமா, இல்லை எனில் ஏற்றுக் கொள்ளாதா  போன்ற வினாக்கள் எழுவதால், 

  முதலில் தத்துவம் என்றால் என்ன என்று அறிந்துகொள்வோம்.

  சிந்தனைக்கு எடுத்துக்கொண்ட தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

  1) செயல்
  2) விளைவு
  3) தத்துவம்
  4) கருமையம்.

  இவற்றில் தத்துவம் என்கின்ற சொல் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தாலும் அதனை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தனை செய்வோம். ஏனெனில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருள் அறிந்து கொண்டால் இத்தலைப்பின் கீழ், இதுவரை அறியப்படாத முக்கியமான வாழ்வியல் உண்மைகள் முழுநம்பிக்கையுடன் உறுதிபடுத்தப்பட்டு, எவ்வளவு தூரம் உண்மையைவிட்டு விலகி உண்மையை கைவிட்டுவிட்டோம் என வருந்தி அறிவு எளிதில் தெளிவினைப் பெற்றுவிடும்.

  சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?

  பொதுவாக ‘தத்துவம்’ அநேகருக்கு ஒவ்வாமையாக(allergy) உள்ளது. தத்துவம் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் .இல்லை. காரணம் என்ன என்று தெரியவில்லை என்று சொல்வதற்கில்லை. தத்துவம் என்பது தனிநபரின் தேர்வாக(choice) உள்ளது. சுவாசித்தல் என்பது தனிநபரின் தேர்வாகவா உள்ளது? சுவாசித்தல் என்பது இயல்பாகவே நடக்கின்றது. யாராவது ஒரு தனிநபர் ‘எனக்கு சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?’ ஆனால் ‘தத்துவத்தில் எனக்கு ஆர்வம் இல்லை’ என்பார்கள் பலர். சுவாசிப்பதே உயிர் இருப்பதற்கு அடையாளம். எனவே வாழ்வதற்கு எல்லோருக்கும் சுவாசித்தல் அவசியம் என்பது போன்று தத்துவம் என்பதும் எல்லோருக்குமே அவசியம்தான். ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருளை அறிந்து கொண்டால் தத்துவம் எல்லோருக்கும் அவசியம் என்பது விளங்கிவிடும். எனவேதான் இச்சிந்தனையில் தத்துவம் என்பதனை முதலில் எடுத்துக்கொண்டோம்.

  தத்துவமும் நூல்கண்டும்:

  தத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

  தத்துவம் மிக எளிமையானது. அதைத் தெரியாதவர்கள் எடுத்து கையாளும்போதுதான் சிக்கலாகின்றது. உதாரணத்திற்கு நூல்கண்டில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே நூல்தான் உள்ளது. அதை நன்றாகச் சுற்றி வைத்திருப்பதால் அதில் சிக்கல் இல்லை. தையல் கலைஞர்கள் அதை உபயோகிக்கும்போது சரியான முறையில் உபயோகித்துவிட்டு மீண்டும் அதனை அதற்குரிய இடத்தில் வைத்துவிடுவார்கள். ஆனால் அதே நூல்கண்டு இரண்டு வயது குழந்தையிடம் கிடைத்தால் என்னவாகும்? மொத்த நூலையும் பிரித்து கலைத்துப்போட்டு விடும். சிக்கலாக்கிவிடும். குழந்தைக்கும் உபயோகப்படுத்தத் தெரியாது. மற்றவர்களும் அதனை உபயோகப்படுத்த முடியாது. அதுபோல, இன்று உலகத்தில் சிக்கல்கள் இருப்பதற்குக் காரணம் முறையாகக் கையாளாமைதான்.’

  மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

  இயற்கை நியதிகளில் சில கருத்துக்கு எட்டுவதாக இருக்கும். ஆனால் கணக்குக்கு எட்டாது. கணக்குக்கு எட்டி அதன் காரணம் கருத்துக்கு எட்டாதபோது அது விஞ்ஞானம் என்று கூறப்படுகின்றது. கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாதபோது அது தத்துவம் அல்லது மெய்ஞ்ஞானம் எனப்படுகின்றது. பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்துமே கணக்குக்கு எட்டாது. ஆனால் நுண்மையாகக் கூர்ந்து தொடர்ந்து, ஆழ்ந்து கவனித்து வந்தால், அறிவுக்கு இயற்கை இரகசியமும் புரியாதது அல்ல. ஏனெனில் இயற்கையே அறிவாகவும் இருப்பதால்.’ 

  . . . வேதாத்திரி மகரிஷி

  தன் கதையை தான் தெரிந்து கொள்வதில் அறிவிற்கு சிரமம் இருக்க முடியுமா என்ன?

  ஏன் தத்துவம் தனிமனிதனின் தேர்வாக இருந்து வருகின்றது?

  அதற்குக் காரணம் தத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது அல்ல என்று நினைப்பதும்,
  தத்துவத்திற்கு அறிவியல் அடைப்படை இல்லை என்று எண்ணுவதும் காரணம்.
  மேலும் தத்துவத்தின் மீது ஆர்வம் கொள்ள சிந்தனைத்திறன் அவசியமாகின்றது.
  எனவே சிந்திப்பவர்களே பெரும்பாலும் தத்துவத்தை விரும்புகின்றனர்.
  புலன்மயக்கத்தில் இருக்கின்ற, அதாவது பஞ்ச கோசங்களில் முதல் இரண்டு கோசங்களிலேயே
  வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு சிந்திக்காமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது.

   ஆகவே பிராணமய கோசத்திற்கும், அதற்கு அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கும், ஆனந்தமய கோசத்திற்கும் அவர்களால் வரமுடிவதில்லை. பிராணமய கோசத்திற்கு வந்தால்தானே தத்துவத்தில் நாட்டம் வரும். மேலும் தத்துவத்தில் நாட்டம் இல்லாது இருந்தாலும் அதனால் உடன்பாதிப்பு(immediate effect) வருவதில்லை என்பதால் தத்துவத்தை உதறித்தள்ளி விடுகின்றனர். ஆனாலும் தத்துவத்தை உதறித்தள்ளுவதால் பாதிப்பு உண்டு. எப்படி? தத்துவம் என்ன சொல்கின்றது? ‘நல்லதையே செய். நல்லவனாக இரு’ என்கின்றது. ‘அறம் செய விரும்பு’ என்கின்ற அமுதமொழியை கவனித்தாரில்லை. அறம்தான் துன்பம் வராமல் காப்பாக அமையும். ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் தான் சமுதாயத்தை காக்க வல்லது.

  அமுத மொழிகள் அபயம் தரும்:

  பல்லாயிரம் அருளாளர்கள் தோன்றி அபயம் தரும் அமுத மொழிகளை பாடல்களாகவும், உரைநடைகளாகவும் உதிர்த்திருந்தாலும் அவைகளை தத்துவங்கள் என்று கூறி ஒதுக்கிவிடுகின்றனர். தத்துவம் என்ன கூறுகின்றது? மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது. எதற்காகக் கூறுகின்றது? அறத்தை வலியுறுத்துவதற்காக மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது? அறம் சமுதாயத்திற்கு தேவையில்லையா? அறத்தை போதித்தல் தத்துவமா? மூடநம்பிக்கையா? பகுத்தறிவைச் சான்றதில்லையா அறம்?

  மறைபொருட்களைக் காட்டவும் முடியாது. புலன்களால் அவற்றை காணவும் முடியாது. எனவே அவை மறைபொருட்கள் எனப்படுகின்றன. மறைபொருட்களை அவரவர்களேதான் உணரவேண்டும். உணர்வதற்கு அருளாளர்களின் வழிகாட்டுதல்கள் உள்ளன. மறைபொருட்கள் என்னென்ன?

  1) உடலிலே ஓடிக்கொண்டிருக்கின்ற உயிர்,

  2) அதனால் இயங்குகின்ற மனம்,

  3)  இவற்றிற்கு மூலமான இறை.

  தத்துவம் கூறும் மறைபொருட்களை புலன்களால் உணரமுடியாததால் தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை. தத்துவத்தை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியவில்லை. அதாவது மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைக்கப்படவில்லை. ஆகவே தத்துவம் என்பது அநேகருக்கு கசப்பாகவே உள்ளது.

  தத்துவம் ஒவ்வாமையாக இருப்பது ஒரு கற்பனையே!

  கற்பனையான ஒவ்வாமையை, நீக்கிக்கொள்வதற்கு, முதலில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லுக்கான வார்த்தை விளக்கம் காண்போம். தத்துவம் என்பது அறிவியல் அடிப்படையில் இல்லாதது, அல்லது மூடநம்பிக்கையானது என்கின்ற தவறான கருத்து உள்ளது. அதனால்தான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனையே உலகப்புகழ் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன்,

  விஞ்ஞானமில்லாத மெய்ஞ்ஞானம் குருடு, மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி என்கிறார்.

  ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கமும் அச்சிடப்பட்டிருந்தால்தான் அந்த நாணயம், பணபரிமாற்றத்தின்போது(transaction) செல்லத்தக்கதாக இருக்கும். ஒரு பக்கம் அச்சிடப்படவில்லை எனில் அந்த நாணயம் செல்லாததாகிவிடும்.

  அதேபோன்று அறிவு நாணயமாக(நேர்மை-honesty) வாழ்வதற்கு, அறிவிற்கு இரண்டு துறைகளின் அறிவும் வேண்டும். அதாவது விஞ்ஞானமும் வேண்டும்; மெய்ஞ்ஞானமும் வேண்டும். இல்லை எனில் வாழ்க்கை செல்லாததாகவிடும். அதாவது வாழ்க்கையில் துன்பம்தான் மிகும். துன்பம் மிகுந்தால் வாழ்க்கை சிறப்புறாது போகும். எப்படி என ஐயம் எழலாம்! திருவள்ளுவர் கூறுவதனைக் கவனிப்போம்.

  அருளைப் பற்றி திருவள்ளுவர்:

  திருவள்ளுவர் அருள் உடைமை எனும் அதிகாரத்தில் அருளைப்பற்றிக் கூறுவதனை நினைவு கூர்வோம். தலைப்பிற்கு ‘அருள் உடைமை’ என பெயர் வைத்துள்ளது எதனைக் குறிக்கின்றது? உடைமை என்றால் செல்வம் என்று பொருள். எனவே அருள் உடைமை என்றால் அருட்செல்வம் என்று பொருள்.
  கேள்விச் செல்வமே மற்றைய எல்லா செல்வங்களிலும் உயர்வானது (கு. எண்.411) எனக் கூறுகின்ற திருவள்ளுவர், அருளைப்பற்றி கூறும் போது அருளால் வரும் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வமாகும் என்றும் அதைத்தவிர்த்த மற்றைய பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தோரிடமும் உள்ளன(குறள் எண் 241) என்கிறார். மேலும் அருள் உடைமையைப் பற்றி கூறுவதனை அறிவோம்.

  dheaivappulavar

  பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
  அற்றார்மற்று ஆதல் அரிது”                                        . . .  குறள் எண் 248

  பொருள்: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

  அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு
  இவ்வுலகம் இல்லாகி யாங்கு”                                  . . .  குறள் எண் 247

  பொருள்: பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை இல்லாதவாறு போல, அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

  அறவாழ்க்கையே இறைவழி வாழும் இறைவழிபாடு என்பதனை உணர்ந்தாரில்லை.

  தத்துவத்தின் மீது நாட்டம் இருந்தாலும் தத்துவம் கூறும் அறிவுரைகளை மதிக்கத் தவறிவிடுகின்றனர். தத்துவம் வழிகாட்டும் பாதையில் செல்வதில்லை.

  இந்த சூழலில்தான் இரண்டு அறிஞர்களான சுவாமி விவேகானந்தரும், விஞ்ஞானியான ஐன்ஸ்டீனும், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். சமுதாயத்தில் தத்துவத்தின் மீது நாட்டம் உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. தத்துவத்தை ஆன்மிகம் என்கின்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். தத்துவத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் சரி, அல்லது தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களுக்கும் சரி தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் பயன் உள்ளதாக இருக்கும். அதாவது தத்துவத்தில் ஏற்கனவே நாட்டம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்தும். தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களை நாட்டம் வருவதற்கு சிந்திக்கவாவது செய்யும். இப்போது தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிந்துகொள்வோம்.

  amudhamozhi_44

  ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிவோம்!

  இது சற்று புதியதாக இருக்கலாம். ‘தத்துவம்’ என்கின்ற சொல் ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ எனப்படுகின்றது. ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ என்கின்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து உருவானது. லத்தீன் மொழியிலுள்ள ‘ஃபிலோ (Philo)’ மற்றும் ‘ஸோப்ஃபியா’ என்கின்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானதுதான் ‘பிலாஸபி’ என்பது. ‘ஃபிலோ’ என்கின்ற சொல்லிற்கு ‘நேசி’ என்று பொருள். ‘ஸோப்ஃபியா’ என்கின்ற சொல்லிற்கு ‘அறிவு (Wisdom)’ என்று பொருள். ஆக ‘தத்துவம்’ என்றால் ‘அறிவை நேசிப்பதாகும்’.

  ஞானத்தை நேசிப்பதாகும். ஞானத்தை நேசித்தல் என்றால் என்ன பொருள்? ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக வந்தததே ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வதற்காக. ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வது என்பதுதான் ஞானம் பெறுவது. ஞானம் என்றால் தெளிவு என்பது பொதுவான விளக்கம். ஆனால் அறிவிற்கு சிறப்பான விளக்கம் தருகிறார்   அறிவிற்கு அறிவியல் ஏற்படுத்தி தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  அந்த சிறப்பான விளக்கம் யாதெனில் ‘அறிவை அறிந்த தெளிவு’. என்பதாகும்.

  எனவே ‘ஞானத்தை விரும்பு’ என்கின்ற பொருள் கொண்ட ‘philosophy’ என்கின்ற தத்துவத்தில் ஆழ்ந்த/மூழ்கிய விருப்பம் கொள்வதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு! அறிவை அறிந்த தெளிவில்தான் அறிவு பரிணாமத்தால் வந்த கசட்டினை, அதாவது விலங்கினப்பண்பை போக்கிக் கொள்ளமுடியும். ஆகவே மனிதப்பிறவி  எடுத்த ஆன்மா இந்தப் பிறவியிலேயே தன் வினைப்பதிவுகளை போக்க வேண்டுமென்றால் அறிவை அறிகின்ற பயிற்சியில் ஈடுபட்டு முடிவாக தெளிவிலும் தெளிவினைப் பெற வேண்டும். ஞானத்தை நேசி என்கின்ற பொருள் கொண்ட தத்துவம் அனைவருக்கும் அவசியம், அவசியம், அவசியமே!

  கிரேக்க நாட்டில் பிறந்த சாக்ரடீசை தத்துவஞானி என்று கூறுவதற்குக் காரணம் அவர் அறிவை நேசித்து வந்ததே காரணம். அதனால்தான் அறிவு பற்றிய தெளிவினைப் பெற்றவர் அறிவை நேசிக்கத்தானே செய்வார். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற அறிஞர்களின் உன்னத நோக்கத்திற்கிணங்க இளைஞர்களை ‘அறிவை நேசி’ (Love wisdom) என்றும், அதற்கு ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறி சிந்திக்க வைத்தார் சாக்ரடீஸ். 

       அன்று அறிஞர் சாக்ரடீஸ் மனிதன் சிந்திக்கவேண்டும் என்று எண்ணியதை  பலநூற்றாண்டுகள் கழித்து மகரிஷி அவர்கள் இந்த நூற்றாண்டில் பல லட்சம் மக்களை சிந்திக்க வைத்து நிறைவேற்றி வருகிறார் என்றால் அதுமிகையாகாது

  பேரறிவை நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

  தன் உடல் உறுப்புகளை நேசிப்பதில்லையா மனிதன்? அவை நன்றாக இருந்தால்தானே அவன் சிரமமின்றி வாழமுடியும்! கைகள், கால்கள் ஆரோக்யமாக இருந்தால்தானே நகரவும்(movement), வேலையும்(work) செய்ய முடியம்! அக்கறை கொண்டு உடல் உறுப்புகளை பராமரித்தல் போல் உணர்வதற்கும், அறிவதற்கும் காரணமாகிய அறிவை பராமரிக்க வேண்டாம்? எப்படி? ‘தத்துவம் என்றால் ‘அறிவை நேசி‘ என்றுதான் பொருள் அறிந்துகொண்டோம். அறிவை அறிந்த அறிஞரை குருவாகப் பெற்றதன் பயனாக ‘அறிவே தெய்வம்’ என்பதனை கருத்தியலாகவும், செய்முறையாகவும் மனவளக்கலைஞர்களாகிய நாம் அறிந்து வருகிறோம். எனவே தெய்வம் அறிவாக உள்ளது என்பதனை, தத்துவம் என்பதற்கு இதுவரை அறிந்த பொருளில் எடுத்துக் கொள்ளாமல், ‘அறிவை(ஞானம்-wisdom) நேசித்தல்’ என்கின்ற பொருளில் அல்லவா எடுத்துப் பழக வேண்டும்! அப்படியானால் அறிவாகிய தெய்வத்தை நேசிக்க வேண்டாமா நாம்? Should we not love Consciousness, the God?

  அறிவாகிய தெய்வத்தை நேசிப்பது என்றால் என்ன?

  உருவத்தைத்தான் நேசிக்க முடியும் என்பதல்ல. அருவமாகிய அறிவை(தெய்வத்தை) எவ்வாறு நேசிப்பது என ஐயம் இருக்கலாம். உருவத்தை நேசிப்பது பாசம். பாசம் என்பது எதிர்பார்த்து நேசிப்பது. அது அன்பு அல்ல.
  அறிஞர் திருமூலர் கூறுகின்ற அமுத மொழியினை கவனத்தில் கொண்டால் அரூபாமன அறிவை எவ்வாறு நேசிப்பது என்கின்ற உபாயத்தை அறிந்து கொள்ளலாம்.

  உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்

  உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
  உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்.
  உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
  உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.   

                                                                                              … திருமந்திரம் 725

  ஓம்புதல் என்றால் பேணிப் பாதுகாத்தல் என்று பொருள். ‘உடற்பயிற்சி செய்வதே இறைவனுக்கு செய்கின்ற சேவை’ என்பார் மகரிஷி அவர்கள். பேரறிவாகிய தெய்வமே நம்மிடம் அறிவாகத் திகழ்கின்றது. அதுவே தான் மனிதன் செய்யும் செயல்களுக்கான இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது.

  கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்பம் துன்பமவன்”

  என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் முதல் பாடலிலேயே!.

    எனவே நம்முடைய செயல்களால் நம்முள் இருக்கும் உத்தமனுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்வதே அறிவை நேசிப்பதுதானே!

  எப்படி குழந்தையை நேசிக்கும் தாய் குழந்தையை ஈ, எறும்பு தீண்டாதவாறு பார்த்துக் கொள்வாளோ அதுபோல் எப்போதும் உணர்ச்சிவயத்தை தவிர்த்து அமைதியைப்பேணுவதே அறிவை நேசிப்பதுதானே!

  உணர்ச்சிவயம் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் எப்போதாவது பழக்க தோஷத்தால் (பழக்கப் பதிவின் அழுத்தத்தால்) உணர்ச்சிவயம் ஏற்பட்டதானால் அப்போது ‘உணர்ச்சிவயத்தால் அமைதியே வடிவான இறைக்கு துன்பம் கொடுத்துவிட்டேனே’ என்று மனதார எண்ணி வருந்துதல் வேண்டும்.

     தூங்கும் குழந்தை அதிர்ச்சியால் எழுந்து கொள்ளுமாறு சப்தமிடுவாளா தாய்?

   அதுபோன்றுதானே உணர்ச்சிவயப்படுவதும். உணர்ச்சிவயப்படுவது விழிப்புணர்வு இழத்தல்தானே.

   விழிப்புணர்வை இழப்பது அயராவிழிப்புணர்வான இறைக்கு துன்பம்தானே!

   ‘பொறுமை  கடலினும் பெரிது’   என்பது சாதாரணமாக  சொல்லப்படுவது.  ஆனால், மகரிஷி அவர்கள்  ‘பொறுமைக்கு எல்லையே கிடையாது’ என்பார். காரணம், பொறுமைக்கு எல்லை வந்துவிட்டால் அது பொறுக்க முடியாமையாகிவிடும். அதுவரை கடைபிடித்து வந்த பொறுமை நோன்பு கலைந்துவிடும். இயற்கையின் ஆதிநிலைக்கு எல்லையில்லாதது போல் மனிதனின் நற்குணங்களில் சிறந்ததான பொறுமைக்கும் எல்லை என்பதே கிடையாது. அப்படியிருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் பொறுமை காப்பதே அறிவாகிய இறையை நேசிப்பதாகும்.    பொறுமையை இழப்பது நம்முள் உறையும் உத்தமனை துன்பப்படுத்துவதற்கு ஒப்பாகாதா?

  ஆகவே அறிவாகிய தெய்வத்தை நேசிக்கவேண்டிய ஆன்ம சாதகன் தன் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றை போக்கி அறிவை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தி அறிவை செல்வமாக்கிக் கொள்ள வேண்டாமா?

      தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் தன்னை அறிய இச்சை கொண்டு வந்த அறிவு இப்போது புலன்களில் சிக்கித் தவிக்கின்றது.  

     ஆங்காங்கே அத்திப்பூ பூத்தாற்போல் ஞானிகள் தோன்றி மறைவது நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் இப்பூவுலகம் தொடர்ந்த அமைதியினை அனுபவிக்க முடியவில்லையே!

    கிருஷ்ண பராமாத்மா, பகவத் கீதையில் ‘கோடியில் ஒருவர் தான் என்னிடம் வந்து சேர்கின்றனர்’ என்று கூறுகின்ற விகிதாசாரம்தான்(1 : 1,00,00000) அறிவியல் வளர்ந்தும் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கின்றது.

    அறிவியல் மெய்யறிவியலுக்கு துணை செய்ததாகத் தெரியவில்லை. மனிதன்தான் அறிவியலின் துணை கொண்டு பேரறிவை அறிந்துகொண்டு பேரறிவிற்கு ஒப்ப தன் அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

   அதாவது மெய்ஞ்ஞானத்தை மெய்யறிவியலாக்கி பாடங்களாக்கி கற்பித்தால்தான், ‘கோடியில் ஒருவர்’ என்கின்ற விகிதாசாரத்தை உயர்த்த முடியும்.

  ‘தத்துவம்’ என்பது வாழ்வியல் கண்டுபிடிப்பே!

     பெரும்பாலும் தத்துவத்தில் நாட்டமில்லாத சமுதாயத்தில் இருந்துதான் வந்திருக்கிறோம்.

    எனவே ‘தத்துவத்தில் நாட்டமில்லாதிருக்கின்ற’ வாசனை ஆரம்பகால ஆன்மீக சாதகர்களுக்குள் மறைந்து இருக்கலாம்.

    தத்துவத்தில் நாட்டமில்லாத, நம்பிக்கையில்லாத நிலையில் இன்னமும் இருந்தால், அறிஞர் கண்டுபிடித்த உண்மைகளை ‘தத்துவம்’ என்கின்ற இதுவரை இருந்த அர்த்தத்தில் பொருள் கொண்டால் அறிவை நேசிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆகவேதான் தத்துவம் என்பதனை ‘உண்மையின் கண்டுபிடிப்பு’ என்று கூறிவருகிறோம். காலங்காலமாக அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை தத்துவம் என்கின்ற பெயரால் அழைக்கப்படுவதை ‘வாழ்வியல் உண்மைக் கண்டுபிடிப்புInvention of Life Science Truth)’ என்றேக்கொள்ளலாம்.

  விஞ்ஞானி கண்டுபிடித்தால் அது கண்டுபிடிப்பு என போற்றப்படுகின்றது. ஆனால் மெய்ஞ்ஞானி வாழ்வியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொன்னால் அது தத்துவம் என்று கூறி இந்த சமுதாயத்தில் பலர் மதிப்பதில்லை.

    எனவே செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையினை தத்துவம்(Cause and effect System in English) என்று கூறாமல் ‘செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு’ என்பதனை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம். தத்துவத்திற்கான பொருள் புதிய கோணத்தில் பார்த்தோம்.  இதுவரை தத்துவம் என்றால் ‘அறிவை – ஞானத்தை நேசி’ என்று அறிந்துகொண்டோம். ‘அறிவை நேசி – ஞானத்தை நேசி’ என்கின்ற பொருளுடைய ‘தத்துவம்’ என்கின்ற சொல்லிற்கு ஏற்ப ‘அறிவிற்கான அறிவியலை’த் தந்துள்ளது வேதாத்திரியத்தத்துவம் என்பதனை நினைத்து மனவளக்கலைஞர்கள் பெருமை கொண்டு முழுப்பயனையும் இப்பிறவியிலேயே அடைந்துவிட வேண்டும் என்பதே அவா.

  ஞானத்தை நேசிக்க மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அதன் விளைவைப்பற்றியும் அறியவேண்டும். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(05-08-2020-புதன்கிழமை) அறிந்து கொள்வோம்.

  வாழ்க அறிவுச் செல்வம்!                                       வளர்க அறிவுச் செல்வம்!!

 • FFC-301 துறவறம்

   வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC-301

  29.07.2020-புதன்

  துறவறம்

  Analysis_of_Thought

  -வேதாத்திரி மகரிஷி அவர்கள்

  வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பாடலுக்கு அவரே அருளிய விளக்கம்


  (உலக சமாதானம் – மூன்றாம் பாகம்: தத்துவ விளக்கம், 1957ம் ஆண்டு பதிப்பு)

   

  வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!


 • FFC-300(264) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?3/3

  வாழ்க மனித அறிவு!                                                                   வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC-300(264)

  26.07.2020-ஞாயிறு

  சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 3/3

   

  [rev_slider home-slider-1]

   

  சென்ற அறிவுக்குவிருந்தில்

  1) சிந்திக்க வினாக்கள்

  2) சிந்திக்க அமுதமொழிகள்

  3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்.

  4) சிந்திக்க குரு – சீடர்உரையாடல்.

  ஆகியநான்கு செய்முறைப்பயிற்சிகள் (PRACTICALS) மற்றும் அதன் நோக்கங்களைஅறிந்து கொண்டோம்.  இனி அடுத்த பயிற்சிக்குள் செல்வோம்.

  5. சிந்தித்தலின்அன்றாடசுயசோதனை:

  இப்பயிற்சியின் நோக்கம்:

     அவரவர்களே தங்களை சோதித்துக்கொள்ளுதலாகும்.  பயிற்சி என்றிருந்தால் அதன் முடிவில் தேர்வும், தேர்ச்சியும் இருக்க வேண்டுமல்லவா?

      நான்கு பயிற்சிகளையும் செய்து வரும்போது, தினந்தோறும் இரவில் தாங்களே சோதனை செய்து சிந்தித்தலில், தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிந்து கொள்வதாகும்.

     அதாவது பயிற்சியின் முடிவில் சிந்தனை என்பது இயல்பாகிவிட வேண்டும்.

     எவ்வாறு உயிர் வாழ்வதற்கு தொடர்ந்து சுவாசித்தல் அவசியமாகின்றதோ, அதுபோல் சிந்தனை என்பதும் வாழ்க்கையில் அவசியமாகிவிடவேண்டும்; இயல்பாகிவிட வேண்டும்.

      சிந்தனையுடன் செயலும்,  செயலுடன் சிந்தனையும் ஒன்றுக்கொண்டு பிரியாது இணைந்திருக்க (பந்தித்து நிற்க-உறவு கொண்டிருக்க வேண்டும்). இது நல்லோர் இயல்பு என்றும், பண்பு என்றும் கூறுகிறார் சிந்தனைச் செல்வரும், மற்றவர்களையும் சிந்தனைச் செல்வர்களாக்கி, மனிதனை தெய்வ நிலைக்கு உயர்வதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்  சிந்தனைச் சிற்பியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல்லோர் இயல்பு பற்றி அவரே மொழிவதனைக் கேட்போம்.

  பயண வாகனமான ரயில் வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியம்போல், வாழ்க்கை எனும் அறிவின் பயணத்திற்கு சிந்தனையும், செயலும் அவசியம். 

  சிந்தனை செய்து விட்டு செயலில் இறங்காமலும் இருக்கக் கூடாது. 

  செயல் செய்யும் முன்னரே சிந்தித்தும் செயல்பட வேண்டும்.  அப்போதுதான் அறிவின் திறனான நுண்மாண் நுழை புலன் வெளிப்படும்.

  இவ்வாறு பழகி வர வர,  வினைகள்  நல்லவைகளாகவே இருக்கும்.  பழைய தீயவினைப்பதிவுகளும் செயலுக்கு வராமல் தடுக்கப்பட்டு, எப்போதும் பேரறிவின் அயராவிழிப்புணர்வு நிலையிலேயே இருக்கலாம்.  

  எவ்வாறு தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்? 

  இப்பயிற்சிக்கு,  குறிப்பெடுத்துக் கொள்வதற்காக, ஒரு நாட்குறிப்பை (diary)  வைத்துக் கொள்ளுங்கள்.

  அதில் காலையிலிருந்து இரவு படுக்கைக்குச்செல்லும்வரை நீங்கள் சிந்தித்ததை எழுதுங்கள்.  

  ‘ஒன்றே பலவாகியும், அந்த ஒன்றே எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்ற’ அத்வைத விஞ்ஞானத்தை அறிந்ததால், காலை உறக்கத்திலிருந்து விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை

      சந்திக்கின்ற மனிதர்கள்,

     கண்ட காட்சிகள்,

     நடந்த நிகழ்வுகள்,

    தான் செய்த செயல்கள்

  ஆகிய அனைத்திலுமே ஒன்றாகிய இயற்கையை/இறையின் திருவிளையாடல்களை  காணக்கூடிய வல்லமை இருப்பதால், விழிப்புணர்வோடு சிந்திக்க முடிவதால், ஒவ்வொரு நிகழ்விலும் கண்ட உண்மைகளை எழுதி வாருங்கள்.

  ஏற்கனவே அறிஞர்களின் வாயிலாக அறிந்து கொண்டதில் எது உங்களுடன் ஒத்து வருகின்றதோ அதனையும் எழுதுங்கள்.

  அதுவரை அறிஞர்களின் சிந்தனைகள் அவருடையதாக இருந்து வந்தது, இன்று உங்களுடையதாகிவிடுவதை உணரலாம்.

  நினைவுபடுத்தி நீங்கள் தெரிந்துகொண்டது, மற்றும் நீங்கள் சிந்தித்தது ஆகியவைகளை குறித்து வாருங்கள்.  

  உலாவச் செல்லும்போதுகூட  நாட்குறிப்பை எடுத்துச்செல்லுங்கள்.

  சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும்.

  அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம்.

  மீண்டும் நினைவிற்கு வராமல் கூட போகலாம்.

  ஏன் வராமல் போகின்றது? எந்த அலைச்சுழலில் ஒரு எண்ணம் வந்ததோ, மீண்டும் அந்த அலைச்சுழல் வரும்போதுதான் அவ்வெண்ணம் மீண்டும் வரும். அது பிறருடைய எண்ணங்களாக இருந்து நம்முள்ளே நுழைந்திருக்கலாம்.  அதனை சிந்தித்து சரியாக உள்ளதா என உறுதிப்படுத்தி நம்முடையதாக்கிக் கொண்டால் அது மறந்து போகாது. சரியில்லை எனில் ஒதுக்கிவிடலாம். 

   உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.

    பழக்கம்: 

      பழக்கத்தை(Habits) எடுத்துக் கொள்வோம். 

      ‘ஒரு செயலின் விளைவு நல்லதல்ல’ என்று

       அறியாமலோ, (அதாவது அறியாமையில் விளைவை அறியாமலோ)

                        அல்லது

       அறிந்து அலட்சியப்படுத்தியோ

                        அல்லது

        உணர்ச்சிவயத்தாலோ,

  அச்செயலை   மீண்டும் மீண்டும்  செய்து பழகிவிட்ட பிறகு, ‘அச்செயல் நல்லதல்ல’ என்று அறிவிற்கு எட்டிய பிறகு, அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பயிற்சிகளை செய்து வரும்போது, பல இடர்பாடுகள் வருவதனைக் காண முடியும்.  திருந்த வேண்டும் என்று உளமார நினைக்கின்றவர்கள்  இச்சிரமத்திற்கு உள்ளாவர்.   

       ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருசில வேண்டாத பழக்கங்கள்  இருக்கலாம். சிலருக்கு வேண்டாத பழக்கங்கள் நிறைய இருக்கலாம். அப்பழக்கத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்து வெற்றி பெறாமல் போனால் ‘இப்பழக்கத்தை நம்மால் மாற்றி அமைக்க முடியாது’ என்று  தீர்மானித்து,  தீமை தரக்கூடிய அப்பழக்கத்தை மீண்டும் தொடர ஆரம்பித்து விடுவதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

     அந்நிலையில் இருக்கும் ஒருவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள பல்லாயிரம் அமுத மொழிகளில் ஒன்றைான ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற சீவன் மனிதன்’ என்பதனை கண்ணுறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

       இப்போது, நாம்   தான் விடமுடியாத பழக்கத்தையும், ‘பழக்கத்தைப்’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.  அவ்வாறு இணைத்துப் பார்க்கும்போது தனக்கு மட்டும் அந்நிலை இல்லை, பொதுவாகவே எல்லா மனிதர்களுக்குமே அந்நிலை உள்ளது என்பதனை அறிய முடியும். 

  எனவே  ‘திருந்த முடியவில்லையே’ என்கின்ற நம் தாழ்வு மனப்பான்மை நிலையைத் தள்ளி வைத்துவிட்டு,  

         மீண்டும் வேண்டாத பழக்கத்தை மாற்றி அமைப்பதற்கு,

       கைவிட்டு விட்ட பயிற்சியினை மீண்டும்   தொடர்வதற்கு உந்துகோலாக அமையும்.  

     தன்னம்பிக்கை பிறக்கும். இறுதியில் வெற்றியும் பெற முடியும். ஒன்றில் வெற்றி பெற்று விட்டால்,  மற்ற வேண்டாத பழக்கங்களை, விட்டுவிடுதலில் வெற்றி பெறுவது சுலபமாகிவிடும்.  இது எதனால் சாத்தியமாகின்றது?  சிந்திப்பதால் சாத்தியமாகின்றது.  ‘பழக்கத்தை’ பற்றி மற்றொரு அமுதமொழியின் வாயிலாகக் கவனிப்போம்.

  மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்”   . . .வேதாத்திரி மகரிஷி

  தற்போதைய மனிதனையும், அவனிடம் இருக்க வேண்டிய மனிதத்தையும், ஆனால் நடைமுறையில் அவனிடம் காணப்படும் மனிதத்தையும் ஆராய்ந்து உதிர்த்திருக்கிறார் உலக அமைதி அறிவியல்(Science of World Peace) அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள். சமுதாயத்தின் இன்றைய நிலைக்கு காரணம் ‘மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்’ என்பதுதான்.  780 கோடி மக்களைக் கொண்டதுதானே இன்றைய உலக சமுதாயம்.

      ஒழுக்கத்தில் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்று இரண்டு இருப்பதுபோல் பழக்கத்தில் நற்பழக்கம், தீயபழக்கம் என்று இரண்டு உள்ளன. தீமையைத் தருமானால் அது தீயபழக்கம். நன்மையைத் தருமானால் அது நற்பழக்கம். ‘பழக்கம்’ என்று மேற்கண்ட அமுதமொழியில் மகரிஷி அவர்கள் பொதுவாகக் கூறக்காரணம் பழக்கத்தின் வலிமையை  உணர்த்துவதற்காகவே.    

  நல்வழி நடப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டும்,

  அதனை செவிமடுக்காமல் இருப்பது ஒரு நிலை.  

  செவி மடுத்தாலும், நல்வழிக்கு திரும்புவதற்கு  பழகிய பழைய வேண்டாப் பழக்கங்கள் (பழக்கப்பதிவுகள்) தடையாக இருந்து கொண்டு அழுகணிசித்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சம்பவிப்பது மற்றொரு நிலை. ஆனால் அவருக்கு அச்சம்பவங்கள் ஏற்பட்டாலும் உறுதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் அவர். அதனால்தான் அவரை நாம் இப்போதும் நினைவு கூர்கிறோம். 

  பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்:

   ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” “தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்”

  என்கின்ற ஆன்றோர் மொழிகளைக் கவனிக்க வேண்டும்.  எந்த நற்பழக்கத்தையும் இளம் வயதிலேயே பழக வேண்டும்.  இதற்கு, முதல் ஆசிரியர்களான பெற்றோர்களின் கடமை பெரும் பங்கு அளிக்கின்றது.  பிறகு ஐந்து வயதிலிருந்து  கற்பிக்கப்படும்  ஒழுக்கவியல் கட்டாயப் பாடத்தால்தான் ஒழுக்கத்தை பழக்கிவிடச்செய்து ஒழுக்கப்பழக்க அறிவினை ஏற்படுத்த முடியும்.

  அமுத மொழிகள் அபயம் தருபவை:

   ‘அமுத மொழிகள் அபயம் தருபவை’ என்று அறிஞர்கள் கூறுவதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  அபயம் என்றால் என்ன?  அபயம்(அ+பயம்=பயமின்மை) என்றால் அச்சமின்மை, அடைக்கலம், பாதுகாப்பு(refuge, protection) என்று பொருள். 

  குருவருள் இன்றேல் திருவருள் இல்லை. ஆகவே மகான்களின் அமுத மொழிகள் அபயம் தருகின்றன என்றால் என்ன பொருள்?

  மகான்களின் சன்னிதானத்தில்(அமுதமொழிகளில்)  அடைக்கலம் புகுதல் என்றாகின்றது. அடிமைப்படுத்திக் கொள்வது என்று பொருளல்ல. மகரிஷி அவர்கள் கூறும்  ‘சுயமாய் சிந்தித்தே தெளிவாய்’ என்பதற்கான   ‘information, confirmation, transformation’ ஆகிய மூன்று வழிகளைப் பின்பற்றி ஏற்றுக்கொள்வதாகும்.

  அறிவு, குரு/மகான்களிடம் அடைக்கலம் புகுந்தால் என்ன பயன்?  எப்போதும், பூதஉடலோடு வாழும்போதும் சரி அல்லது பூதவுடலை நீத்தநிலையிலும் சரி, அவர்களின் சூட்சும–கண்காணிப்பு நம்மீது இருந்து கொண்டு நம்மை நற்பாதையில் வழிநடத்தும்.  நற்பாதையில் வழிநடத்துதல் என்றால்  தவறான பழக்கம்  செல்லவிடாது தடுக்கும். அதாவது எச்சரித்துக் கொண்டே இருக்கும்.  அது பாதுகாப்புதானே! அருட்காப்பு தானே!

  எனவே அமுதமொழிகளை  சிந்தித்து பின்பற்ற வேண்டியது அறிவின் பயணமாகிய வாழ்வில்  அவசியம்தானே (in Journey of Consciousness)! மேலும் குரு/மகான்களின் அமுதமொழிகளில் தோய தோய, அது ‘எப்படி வாழ வேண்டுமோ அப்பாதைக்கு  மாற்றிக்கொள்வதில் ஏற்படும்  பயத்தை நீக்கி அஞ்சாமல் இருக்கவும்,  பழைய பழக்கப்பதிவால் தடங்கல்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறச் செய்யவும் உதவும்.

  ‘Fear is the Greatest Sin” என்பார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  சிந்தனை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்:

  இதுவரை இப்பூவுலகம் காணாத மாபெரும் சிந்தனாவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘சிந்தனை’ பற்றி கூறுவதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.  

  1) சொல்லால் மட்டும் நம்பாதே, சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்.  

  2) தெய்வத்தைப்போற்றி வழிபாடு செய்து வாழ்பவர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துய்வார்.

  3) இன்பத்தும் துன்பத்தும்,  இயற்கையும் கற்பனையும், சிந்தித்து அறிபவன்,  சிறப்பாகவாழ்வான்.

  4) சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு. 

  5) சிந்தனையாளர்களின் கடமைதான் முதன்மையானது.   மற்றோரும் சிந்தனையில் உயரவேண்டுமெனில், அதற்குச் சிந்தனையாளர்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

  மேலும் சிந்தனையின் சிறப்பை வலியுறுத்த 1985 சனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ள, சென்னை தலைமை மன்றத்தில் 1984 ல் ‘சிந்தனை மூலம் சீரான வாழ்க்கை’ என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் ஆற்றிய உரையின்  ஒரு சிறு பகுதியினை நினைவு கூர்வோம்.

  ANBOLI95-3-14-11-2017

  சிந்தனை செய்வது அவசியம் தானா; அது தேவைதானா; அப்படியென்றால் எப்படி அதைச் செய்ய வேண்டும்?”  என்றால் அது மிக மிக அவசியம்; தேவை.  அளவு, முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால் உலகமே அமைதி நிலைக்கு வந்துவிடும்.  இந்த தத்துவம் கடினமானதே அல்ல.  முனைந்து பயின்றால் இயல்பாகிப்போகும்.   ஏற்கனவே உள்ள பழக்கப்பதிவுகளின் காரணமாக தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும்—– மோட்டார் சைக்கிளை start செய்வதுபோல,  வண்டி ஓடத் தொடங்கிவிட்டது என்று சொன்னால் balance தானாக வந்துவிடும்.

  நாம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும் பொழுது அந்த சிந்தனையில் தவறு வந்தால் அதைத் திருத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.  சிந்தனையே  இல்லாமல் வாழ்வது, மிதந்து கொண்டிருப்பதற்கு ஈடாகும்.  வெள்ளம் வந்தால் நம்மை அடித்துக்கொண்டு போகும்; அவ்வளவுதான்; நாம் எங்கே போகின்றோம் என்று தெரியாது; எதை பிடிக்க வேண்டும் என்று தெரியாது.  இந்த நிலையிலிருந்து மாறி நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் சிந்தனை செய்ய இன்றே, இப்பொழுதே தொடங்க வேண்டும்.”

                                                                 … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  வாழ்நாளில் தனது வம்சாவளிக்கு சொத்து சேர்த்து வைப்பதுபோன்று,  ஒவ்வொருவரும் தனது அனுபவம், ஆராய்ச்சி, சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு  ஐம்பது அமுத மொழிகளையாவது உருவாக்கித் தருவோம்.

  சிந்திப்போம்   சீர்பெறுவோம்.

  வாழ்க வையகம்         வாழ்க வளமுடன்

  வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு.

  வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச்செல்வம்.

  வாழ்க திருவேதாத்திரியம்  வளர்க திருவேதாத்திரியம்.

  வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!