FFC-267-செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

 

வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

lotus

FFC – 267

              அ.வி. 267     

          

                                                  15-11-2017-புதன்

vethavyasar and navayugavyasar  

 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

         ‘செயல்’

சென்ற அறிவிற்கு விருந்தில் தத்துவம்(philosophy) என்கின்ற சொல்லிற்கு பொருள் ‘அறிவை நேசி, ஞானத்தை நேசி, (Love wisdom)’ என்று  அறிந்து கொண்டோம். தத்துவத்தின் பொருள் அவ்வாறிருக்க இனிமேலும் ‘செயலுக்கு விளைவு வருவதனை’ தத்துவம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாகிறது. அப்படியானால் ‘செயல், விளைவு, கருமையம்’ என்றே தலைப்பாக வைத்துக்கொண்டு சிந்தனையைத் தொடங்குவோம்.

  ‘செயல்’ என்றால் என்ன?

 தலைப்பின் முதல் சொல்லான ‘செயலுக்கு’ வருவோம்.

 செயல் புரியாமல் வாழ்க்கை இல்லை:

      உடல் உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது செயல். பொதுவாக செயல் எனப்படுவது பிறர் அறிய செய்வது எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.  உடலால் செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது.   புற உறுப்புகளான  கைகள், கால்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால் பிறரால் அறிய முடியாத எண்ணமும் எண்ணுகின்றவரின் செயல்தான்.  மேலும் ஒருவர் பேசுவதும் செயல்தான்.  எனவே செயல் என்பது மூன்று வழிகளில் நடக்கின்றது.  அதாவது எண்ணம், சொல். செயல்(thought, word, deed) ஆகிய மூன்றின் வழியாக வாழ்க்கை நடக்கின்றது.  எனவே செயல் புரியாமல்  வாழ்க்கை இல்லை.  இதில் யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்காது. 

   ஆனால்  ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற நியதியினை(உண்மையினை) மறந்துவிட்டு செயல் செய்வதற்கு முன்னரே, அச்செயல் செய்வதானால் உடனோ அல்லது பின்னரோ வரவிருக்கின்ற விளைவு நல்லதாக இருக்குமா, அல்லது தீமையாக இருக்குமா என்று யோசனை செய்யாமல் செயல் புரிந்துவிட்டு பின்னர் ஒருவேளை விளைவு தீமையாக வந்தால் அப்போது வருந்துவர்.  செயல் செய்து விட்ட பிறகு விளைவைத் தடுத்து நிறுத்த முடியாது.   இதனை என்னவென்று சொல்வது?

    அறியாமை என்று சொல்வதா? 

    அலட்சியம் என்று சொல்வதா?

    உணர்ச்சிவயம் என்று சொல்வதா?

 சிந்தனையின் உச்சம் அறிவின் தெளிவு!

    சிந்தனையின் உச்சம் அறிவு   தெளிவு அடைதலே! அறிவு  விரைவாகத் தெளிவடையக் கூடிய தன்மையுடையது.  தெளிவும், விரைவும்  ஆகிய இரண்டும் சேர்ந்திருப்பதைத்தான், அறிவை ‘விரைந்துணர் அறிவாற்றல் உடையது’ என்று போற்றி மகிழ்கிறோம்.  இதனையேத்தான்  அறிவின் சிறப்புத் திறனாக  நுண்மாண்நுழைபுலன் (perspicacity) என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

செயல் வகையைச் சேர்ந்ததுதான் எண்ணமும்:

         எண்ணம் மனிதனின் முத்தொழில்களில் முதலிடம் வகிக்கின்றது. இதனை சற்று நேரத்திற்கு முன்னர்தான்  அறிந்தோம்.  இருப்பினும் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதால் மீண்டும் எண்ணத்தைப் பற்றி தனியாக சற்று ஆராய்வோம்.  ‘எண்ணம்தானே, நான் எண்ணியதை பிறர் யாரும் அறியமுடியாது’ என நினைக்க முடியாது. பிறர் நம் எண்ணத்தை அறிய முடியாவிட்டாலும் நம்  உடம்பினுள்ளே கோவில் கொண்டிருக்கின்ற  உத்தமன் அறிவான்.  இது பற்றி கருமையம் தலைப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’  என்பது ஆன்றோர் மொழி.  அகத்தில் இருப்பதனை முகம் காட்டிக்  கொடுத்து விடும் என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.

 எண்ணம் போல் வாழ்வு. 

எண்ணமே வாழ்க்கையின் சிற்பி.  

 நல்  வாழ்வு வாழ வேண்டுமெனில் நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும். 

எண்ணமே இயற்கையின் சிகரமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

எண்ணத்திற்கேற்ப உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் தீய எண்ணங்களினால் ஏற்படும் இரசாயன மாற்றம் உடல் நலத்தைகெடுக்கும்  என்கிறார்கள். 

எண்ணம் உயர்ந்த பதவி வகிப்பதால், உயர்ந்த பதிவிற்கேற்ப அதிகாரமும் பொறுப்பும்(duties and responsibilty) எண்ணத்திற்கு வந்துவிடுகின்றது.  என்ன அந்த உயர்ந்த பதவி?

     எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளது. ஏன் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இயற்கையின் ஆதிநிலையே   பேரறிவு. அது மனிதனிடம அறிவாக உள்ளது. எண்ணுவது யார்? அறிவுதான் எண்ணுகின்றது. எனவே அறிவும் எண்ணமும் ஒன்றே.  ஆகவே  இயற்கையின் சிகரம் எண்ணம் என்கிறார்.  இயற்கையின் ஆதிநிலையில் அறிவு இல்லாவிட்டால் என்னவாகும்? கற்பனை செய்து பார்ப்போமே! ஆதிநிலை வெளியும், அறிவும் நிறைந்தது. இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.

 எண்ணங்கள் பற்றி நம் குருநாதர் கூறுகின்ற அமுத மொழிகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம்.

உணவும் எண்ணமும்(18-12-1956)

 உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்”  . . . மாக்கோலம் 

 மேற்கண்ட பாடலை 1956 ல்(18-12-1956) அருளியவர் ஒருவருடம் கழித்து மேலும் எண்ணத்தைப் பற்றி உணவும் எண்ணமும் என்கின்ற தலைப்பிலேயே மேலும் இரண்டு அடிகளைச் சேர்த்து அருளிய பாடலையும் நினைவு படுத்திக் கொள்வோம்.

 உணவும் எண்ணமும்(21-12-1957)

உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்

எண்ணமோ உணவில் எழுச்சி பெறும் இயக்கமே

உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பாரீர் உறவையறி.”     … மாக்கோலம்

     முதல் பாடலில் எண்ணத்தின் தன்மையை எடுத்துக் கூறுகிறார்.  இரண்டாம் பாடலில் உணவின் தன்மைக்கேற்ப எண்ணம் எழும் என்று கூறி உணவிற்கும் எண்ணத்திற்கும் உறவை அறிந்து நல்ல எண்ணங்களை உருவாக்கும் நல் உணவை உண்ணச் சொல்கிறார்.

     எண்ணம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள அமுத மொழிகளை(பாடல்கள்) 28 ஐயும் ஞானக் களஞ்சியம்  (பாகம் 2) 6.23 இல் காணவும்.

      எண்ணத்திற்கு விளைவு உண்டு என்றால் எவ்வாறு விளைவு வரும்?  எண்ணத்திற்கு விளைவு நேரிடையாக வராததுபோல் தோன்றும்.  அப்படியானால் எண்ணத்திற்கு அடுத்த நிலையான  சொல்லாக வரும்.  சொல்லாக வரும்போது, சொல்லைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த சொல் தனக்கும், பிறர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்குமானால் அது நற்சொல்.  அப்போது பேசியவரின்  ‘புண்ணியம் என்கின்ற அருட்கணக்கில்’(Divine Grace Account) ஒரு மதிப்பெண்(positive mark) வந்து சேரும்.  ஒரு வேளை ஒருவரது சொல் நன்மை பயக்காமல். தீமையை தரும் பட்சத்தில் அவரது பாவக் கணக்கில்(Sin Account) ஒரு மதிப்பெண்(minus mark) வந்து சேரும். பாவக்கணக்கு அதிகமானால் துன்பம் வந்து சேரும்.  புண்ணியக் கணக்கு அதிகமானால் இறையிடமிருந்து அருள் வந்து சேரும்.

   எண்ணத்தை பற்றி மேலும் நன்கு தெளிவடைய மகான் மகா கவி பாரதியார்  அருளியுள்ள பாடலின் வழியாக நினைவு கூர்வோம்.

 

FFC-127-அறிவிற்கு விருந்து - தெனிந்த நல்லறிவு வேண்டும்

அன்னையை வேண்டுதல்

 

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

                              எதற்கு?

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்.      . . .  மகா கவி பாரதியார்.

 

    பக்திமார்க்கத்தில் இறைவழிபாடு செய்பவர்களுக்காக இறைவியிடம்  எவ்வாறு வேண்ட வேண்டும் என எடுத்துக்காட்டுவதற்கு இப்பாடல் இயற்றியுள்ளார்.  பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த அருளுரை என்பது கிடையாது.  ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த அருளுரை பொருந்தும்.  எப்படி? ஞானமார்க்கத்தில் உள்ளவர் எண்ணம் ஆராய்தலை அக்கறையாகச்  செய்ய உதவும்.  மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால் உள்ளத்திற்கு அந்த உறுதிமொழியினை சங்கல்பமாக செய்ய வேண்டும். இப்போது பாடலின் பொருளுக்குள் செல்வோம்.

     பக்தியில் ‘வேண்டிப் பெறவேண்டும்’ என்கின்ற கோட்பாடு உள்ளதால், முதலில் தன் தேவைக்காக வேண்டச் சொல்கிறார். அதாவது ‘எண்ணியது முடிய வேண்டும்’ என வேண்டச் சொல்கிறார்.  தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது நல்லவையாகத்தானே இருக்க யாவரும் விரும்புவர்.   எனவே தான் எண்ணிய நல்லது நடக்க வேண்டுமென்றால் (விளைவு),  அந்த நல்ல விளைவிற்கேற்ற செயல் புரிதல் வேண்டும்.  இங்கே எண்ணுவதுதான் அச்செயல்.  செயலுக்கேற்ற விளைவுதான் வரும் என்பதால் நல்ல விளைவு கிடைக்க அடுத்ததாக ‘நல்லவையே எண்ணல் வேண்டும்’ என வேண்டச்சொல்கிறார்.  ஒரு வகையிலே பார்த்தால் வேண்டுதலையும் கேட்கச்சொல்லி, ‘அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வேன்’ என்கின்ற உறுதிமொழியினை இறைவியிடம் அளிக்கச் சொல்கிறார். இறைவியிடம் அளித்த உறுதியினை மீறமுடியாது ( Devotee has committed and a binding  to think good) அல்லவா?  ஆனால் எதார்தத்தில் நடப்பது வேறாக உள்ளது. ‘எண்ணம்போல் வாழ்வு’ ‘மனம்போல் வாழ்வு’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள். எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுகின்றனர்.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் அற-எண்ணத்தைப் பற்றிக் கூறுவது: 

    ஆழியாரில் இருக்கும்போது மகரிஷி அவர்கள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முப்பது நாள் மௌன நோன்பது இருப்பது வழக்கம்.  அப்போது அவருடன் சேர்ந்தே அன்பர்களும் மௌன நோன்பு இருப்பர்.  அப்போது ஒவ்வொருநாளும் அன்பர்கள் சிந்திப்பதற்காக  காலையில் சிந்தனை விருந்தினை அவர் எழுதி அன்பர்களுக்கு தரப்படும். அவ்வாறு 1988 ஆம் வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஆற்றிய மௌன நோன்பின் கடைசி நாளான 23-12-1986 (உ.ச.ஆ 23-12-03) அன்று மகரிஷி அவர்கள் ‘சிந்தனைத் தொகுப்பு’ என்கின்ற தலைப்பில் அருளிய சிந்தனை விருந்தில் எண்ணத்தைப்பற்றி அருளுவதை அவர் வாய்மொழியாகவே அறிந்து மகிழ்வோம்.

நல்ல பயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம்  இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும், சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும்; அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக!.”

     அற-எண்ணத்திற்கேற்ற(தூய),  செயல்களை  யார் செய்கின்றனரோ அதற்கேற்ப அவருக்கு ஏற்படும் தெய்வீக நல் விளைவைப்பற்றிக்(அருள்) கூறுகிறார்,  இந்த அனுபவம் அவருக்குமட்டும்தான் கிடைக்கும்  என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, ‘உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது’ என்று உறுதியளிக்கின்றவர் இங்கே நல்ல எண்ணங்களின் விளைவுகளை கூறுவதோடு நின்றுவிடாமல் அதனை நம் ‘அனுபவத்தில் கண்டு இன்புறுவீர்களாக’ என வாழ்த்துகிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் அவரது 80 வயதில் ஒரு நாள்,

இப்பவும் ஏதாவது எண்ணம் எனக்கு வருமானால், அது ஏன் வந்தது, எதற்காக வந்தது  என்று  ஆராயாமல் (gate keeper போல் இருந்து கொண்டு) உள்ளே விடுவதில்லை” என்றார்.

இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டியது?  அவரைப் பொறுத்த வரை ஆயிரம் பிறை கண்ட ஞானி அவர். அப்போது வருகின்ற எண்ணங்கள் சாதாரண மனிதனுக்கு வருவதுபோன்ற எண்ணங்கள் வருவதற்கே வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது நல்ல எண்ணங்கள் தான் வரும்.  இருந்தாலும் அந்த எண்ணங்களைக் கூட ஆராய்ந்த பிறகுதான் உள்ளே விடுவார் என்று அறியமுடிகின்றது.  பிறருடைய எண்ணங்கள் நம்முள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். நல்லவைகளாக இருந்தால் சரி, அவ்வாறில்லாமல் பிறருடைய எண்ணமாக தீயதாக இருந்து அவரால் செயல்படுத்த முடியாததாகிய நிலையில், அது நம்மை கருவியாக்கிவிடக்கூடாது என்பதனை எச்சரிக்கவே  தன்னுடைய ‘எண்ண ஆராயும் விதத்தை’ க் கூறி நமக்கு எண்ணத்தின் இயல்பை  எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.

     மேலும் நம் குருபிரான் அவர்கள் பிறர் எண்ணங்கள் நம்மைத் தாக்கக் கூடாது என்பதற்காக அவர் வாழ்க்யைில் நடந்த நிகழ்ச்சியினை அறிவோம்.  அந்நிகழ்ச்சி  மதமும் மனிதனும் என்கின்ற நூல் எழுதும்போது நடந்தது.   அந்நூலில் முகவுரை எழுதிவிட்டார்(பக்கம் 3-5).  பிறகு அந்நூலை ஆரம்பிப்பதற்கு முன் குருவணக்கம் செலுத்துகிறார் பக்கம்11 ல், அப்போது அவர் கூறுவதனை நாம் அப்படியே அறிவோம்.

மதமும் மனிதனும் என்ற தலைப்பில் எனது சிந்தனையில் உதித்த கருத்துக்களை எழுதி அன்பர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக உதவ வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக எனது உள்ளத்தில் அழுத்தம் பெற்று வந்தது.  இத்தகைய உயர்ந்த சிந்தனைக்குரிய கருத்துக்களைத் தொகுப்பதற்கோ ஓய்வு வேண்டியுள்ளது.   இந்தக் கருத்துக்களைத் தொகுக்கும்போது வேறு சில அன்பர்களின் உரையாடலோ, செயல்களின் தாக்கமோ ஏற்படாது இருக்கத் தக்க நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து(17-11-2001) இந்த ஆண்டு மௌன நோன்பு தொடங்கியிருக்கிறேன்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு இந்த உயர்ந்த நன்நோக்கக் கருத்துக்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளேன்.”  என்கிறார் எண்ணமே இயற்கையின் சிகரம் என்று கண்டுபிடித்த  மகரிஷி அவர்கள்.

மனிதனும் மதமும் படம்

 

இதுவரை செயலின் முதல் நிலையான எண்ணத்தைப் பற்றி முடிந்த வரை விரிவாகப் பார்த்தோம்.  இனி முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ பற்றி ஆராயலாம்.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்    (19-11-2017-ஞாயிறு) சிந்திப்போம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்