FFC-279-வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/?

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

lotus

வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/?

FFC-279

14-01-2018-ஞாயிறு

உ.ச.ஆ. 14-01-33

pongal greeting-2018

Scientist of Consciousness

வாழ்க வளமுடன்!

சென்ற இரண்டு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,
அகராதி என்றால் என்ன,
வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
அவ்வாறு அவசியமாக இருப்பதிலும் இயல்பூக்கம் செயல்படுவது,
சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
சாலச்சிறந்த வழிபாடு செய்வது,
வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

வாழ வேண்டிய முறை,
அறத்தின் தோற்றம்,
அறத்தின் மூன்று கண்கள்,
‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
தன்னை அறியாத அறியாமை,
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்,
வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
திருமணப்பந்தம் எதற்காக,
இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்
சிந்தித்து வந்துள்ளோம்.

இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

விரும்பி யாரும் பிறப்பதில்லை:

அப்படி என்றால் என்ன பொருள்? சற்று சிந்திப்போம். ‘நாம்’ என்று தனியாக இருந்து கொண்டு இன்னாருக்குப் பிறக்கவேண்டும் என்று விரும்பிப் பிறப்பதில்லை என்பதைத்தான் ‘விரும்பி யாரும் பிறப்பதில்லை’ என்கிறோம். பிறப்பு இயற்கையின் நிகழ்வு. நாமும் இயற்கையின் ஒரு சிறு அங்கம்தானே! நாம் யார்? ஆன்மாதானே நாம்! ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற பிறப்பின்-விதிக்கேற்ப, வினைப்பதிவின் சுமையை இறக்கிவிட்டுத் தூய்மை பெறுவதற்கு(ஞா.க.1646-17,18 அடிகள்) ஆன்மாவிற்கு பிறவி(உடல்) தேவையாகின்றது. எனவேதான் வினைப்பதிவுகளின் சுமை தாங்கிய ஆன்மாவாக உள்ள நாம் பிறவி எடுக்கின்றோம். இல்லை. ‘நாம் பிறவி எடுக்கின்றோம்’ என்று சொல்வதைவிட ‘ஆன்மா பிறவி எடுத்துள்ளது’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஆன்மாஞானம் பெற . . .

வேதாத்திரிய வாழ்வியல் அகராதி நம்முள் இறக்கி வைத்திருப்பதால், நாம் ‘மனிதன் வாழ்கிறான் என்று சொல்வதைவிட வினை வாழ்கின்றது’ என்கிறோம் நாம். ஏன்? இதில் பொருள் உள்ளதுதானே? எவ்வாறு, இவ்வாறு கூறமுடிகின்றது? ‘மனிதன் வாழ்கிறான்’ என்பதற்கான பொருள் ‘வினை வாழ்கின்றது’ என்பதாகும். ஆன்மாதான் மனிதனாக உள்ளது. இந்த புரிதல் அவசியமா? இல்லையா? அவசியம்தான்! ஏனெனில் ஆன்மாவே மனிதனாக உள்ளது என்கின்ற ஆன்மஞானம் பெறுவதற்கு இந்த புரிதல் அவசியமே! இந்த புரிதல் வேதாத்திரியத்தால் கிடைப்பதால், வேதாத்திரியத்தை அகராதி; வாழ்வியல் அகராதி என்று அகம் மகிழ்ந்து கூறுகிறோம் நாம்.

வாழ்வதில் இரண்டு வகை:

பிறந்துவிட்டோம். வாழ்ந்தே ஆக வேண்டும். எப்படியாவது வாழ்வது மனிதவாழ்க்கை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ வேண்டும். இதுவரை எப்படி வாழ்வது என்று தெரியாமல் வாழ்ந்து விட்டது சமுதாயம். வாழ்வதில் இரண்டு வகை இருப்பதாக தெரிந்து கொள்கிறோம்.

அவையாவன:

1. புலன் வழி வாழ்க்கை
2. அறிவு வழி வாழ்க்கை

புலன் வழி வாழ்க்கை:

‘மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்’ என்று ஆன்றோர்கள் அறிவுறுத்தியும், அதனை செவிமடுக்காமல், மனம் போன போக்கினில் வாழ்வது ஒன்று. இது புலன் வழி வாழ்க்கை. அளவு மீறியும், முறையும் மாறியும் (Limit, Method), புலன்களை கருவியாகப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அதுவரை கருவிகளாக இருந்த புலன்கள். பொறிகளாகி(திருவள்ளுவர் புலன்களை ஐம்பொறிகள்–five traps என்று கூறுவதுபோல்) அறிவை அதில் சிக்கவைத்து அடிமையாக்கிவிடுவது. மயக்க.வாழ்வு. ஐந்தில் அளவு, முறை காத்தல் என்பதனை விளக்கியது வேதாதத்திரிய வாழ்வியல் அகராதியால்.

மயக்க வாழ்வு என்பது என்ன?

விழிப்பு நிலையிலேயே மயக்கத்துடன் இருப்பது. They are not conscious of themselves (not in coma). So to say they are not in awareness of their existence resulting in not being conscious of their deeds; of their life. அதாவது மயக்க வாழ்வு வாழ்பவர்கள் ஐயுணர்வில் மயங்கியவர்கள். இவர்களை வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள். அருட் கவிஞர் எதனோடு ஒப்பிடுகிறார் பாருங்களேன்? வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார் (ஞா.க. பாடல் எண் 1399). ஏன்? இது எதனைக் காட்டுகின்றது? சமுதாயத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது. வேறு வழி யாது? மயக்கத்தில் உள்ள உலக சமுதாயத்தை விழுத்தெழுத்தச் செய்வதற்கு?

சுய சிந்தனையில் ஓங்க . . :

சுயமாக சிந்தித்தால்தான் விழிப்புநிலையிலேயே இருக்கும் மயக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வது சாத்தியமாகும். அந்த சுய சிந்தனையை ஊக்குவிக்கும் முகமாகத்தான் நம் அருட் கவிஞரான நம் குருநாதர் ஐயுணர்வில் மயங்கியவர்களை சாய்ந்து கீழே விழ இறக்கின்ற வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார். இவ்வாறாக அருளாளர்கள் அனைவருமே ஐயுணர்வில் மயங்குவது பற்றி கூறி எச்சரித்து இருக்கின்றனர். காரணம் உண்மையைக் கூறுவது அச்சுறுத்துவதற்காக அல்ல. அப்படியாவது ஓரிருவராவது உணர்ந்து கடைத்தேறட்டுமே என்றுதான் அவ்வாறு ஒப்பிடுகிறார்கள். ஓரிருவர் என்று கூறுவதுகூட discouraging ஆக இருப்பதுபோன்றோ அல்லது மிகைப்படுத்திக் கூறுவதுபோன்றோ தோன்றலாம்! உண்மையில் அப்படியல்ல. எதார்த்த நிலையே அதுதான்! நாம் ஒவ்வொருவருமே இதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அருட்கவிகளை வாசிப்பவர்கள் அனைவருமே சுயசிந்தனை ஓங்கி பயன் பெற்றார்களானால் நன்மைதான். 1911 பிறகு தான் சமுதாயத்தில் சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்களைக் காண முடிகின்றது. ஆனால் அதே நேரத்தில் சிந்தனையுடன் பந்தித்து நிற்றல்தான் உண்மையில் நலம் பயக்கும் என்பதனையும், சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது. ஐயுணர்வில் மயங்காமலோ அல்லது புலன்மயக்கத்தில் இருந்து விடுபடவோ அல்லது விழிப்புநிலையிலேயே மயக்கமுற்றிருப்பதிலிருந்து விழித்தெழவோ, இன்பதுன்ப இயலின் தாரக மந்திரமான அளவும், முறையும் காக்கின்ற நினைவில் உறுதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

‘ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து திருந்துவது எந்நாளோ’ என அறிந்த உலக நல ஆர்வலரும், உலக நலத் தொண்டரும், நாம் பெருமிதம் கொள்ளத்தக்கவருமான நம் குருநாதர் வகுத்துக் கொடுத்த உலக சமாதானத்திட்டங்கள் தான் ஒட்டு மொத்த சமுதாயத்தையே(en masse) புலன் மயக்கத்திலிருந்து விழித்தெழச்செய்யும் என்பதில் ஐயமே இல்லை. இதனைக் கருதிதான் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தையும், மகரிஷி அவர்களின் பிறந்தநாள் விழாவினையும் உலக அமைதி வேள்வி தினமாக கொண்டாட அன்புடன் நம்மைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் மகரிஷி அவர்கள்.

திருவள்ளுவரின் எச்சரிக்கை:

திருவள்ளுவர் ஐயுணர்வில் எச்சரிக்கையாக இருக்க ஐம்பொறிகளை கருவி(instrument) என்கின்ற பொருளில் பயன்படுத்தவில்லை. ‘பொறி’ என்பதற்கு கருவி என்றொரு பொருள் இருந்தாலும், அதற்கு மற்றுமொரு பொருளும் இருப்பதனை மறந்துவிடக்கூடாது. அதாவது ‘பொறி’* என்பதற்கு வசப்படுத்தும் கருவி (உதாரணம்: எலிப்பொறி. ஆங்கிலத்தில் trap) என்கின்ற பொருளில்தான் அறிஞர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். சமுதாயத்தில் துன்பம் நிலவுவதற்கு உள்ள பல காரணங்களில் முதன்மை வகிப்பது, ஐயுணர்வில் மயங்குவது. (நமது சத்சங்க அறிவிற்கு விருந்தில் 22.07.2015 அன்று சிந்தித்த ஐவகை மயக்கம் சிந்தனையைக் காண Click here) புலன்களை கருவிகளாக மட்டுமே பயன்படுத்தத் தெரியாமல் அதனை வசப்படுத்தும் கருவியாக நாம் ஆக்கி, அதனுள் அகப்பட்டுக் கொள்வது. ஞானம் என்பதற்கு விளக்கம் கொடுக்க வந்த மகரிஷி அவர்கள், ‘தெளிவு என்பது பொதுவான விளக்கம், எனினும் அறிவை அறிந்த தெளிவு என்பதே சிறப்பான விளக்கம்’ என்கிறார். அவர்தான் அறிவை அறிந்து அதனை சமுதாயத்திற்கு வெளிப்படுத்தி, அறிவிற்கே இயல் ஏற்படுத்திய குருநாதர் ஆயிற்றே! ஆகவே அவர் ஞானம் அடைந்த ஞானிக்கு இலட்சணம் கூறுகையில் இன்பதுன்ப இயல் அறிந்து ‘அளவும், முறையும்’ காப்பதே ஆகும் என்பார்.

இன்பத்தின் அளவு முறை மாறும்போது
ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்,
இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.’

என்கிறார். எதார்த்தத்தில் இன்பம்தானே துன்பமாகின்றது?! உதாரணத்திற்கு உணவு ருசியாக இருக்கின்றது என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணமாகின்றதல்லவா? அஜீரணம் துன்பம்தானே! எனவே எல்லாப் புலன்களையும் பயன்படுத்துகையில் எச்சரிக்கையாக இருந்து அளவும், முறையும் காக்க வேண்டும். அதற்கு அறிவு-வழி வாழ்க்கை வாழவேண்டும். இனி அறிவு வழி வாழ்க்கை வாழ்வது எப்படி எனப்பார்ப்போம்.

* பொறிவாயில்(trap) ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.                                                      . . . குறள் எண். 6

தத்துவச் சிந்தனையாளர்கள் காலம்காலமாக இந்த பொறியில் (trap) சிக்கிக் கொள்வதை ‘விட்டில் பூச்சி’ உதாரணம்  மற்றும் சுவையற்ற எலும்பினைக் கடிக்கும் நாய், தன் வாயில் இருந்து வரும் தனது ரத்தத்தை, அது எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் சுவைத்து இன்புற்று மேலும்  வேகமாய் கடிக்கும் உதாரணத்தையும் கூறி  நம்மை எச்சரித்துள்ளனர்.

அறிவு-வழி வாழ்க்கை:

சான்றோரைச் சார்ந்திருக்க வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதனை உணர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். சான்றோரைச் சார்ந்திருந்து, அவர்களின் துணைகொண்டு சிந்தனையில் உயர்வதால், அளவும், முறையும் காத்து, புலன்பொறிகளில் சிக்காமல் வாழ்வாங்கு வாழ்வது. இது அறிவு-வழி(ஆறாம்) வாழும் வாழ்க்கை. இவ்வாறு வாழ்வது அரிதினும் அரிதாக இருந்தது 1911 வரை. ஆனால் 1911 லிருந்து ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனை ஏற்பட்டு இன்ப-துன்ப இயல் உருவாகியிருப்பதால் அளவு மாறாமலும், முறை மீறாமலும் அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் வாழ்வாங்கு வாழும் நிலை மனவளக்கலைஞர்களால் அதிகரித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. அறிவு வழி வாழ்வது அயரா-விழிப்புணர்-வாழ்வு(life in constant awareness). ஏனெனில் அறிவு வழி வாழ்வு எப்போதுமே விழிப்புணர்வில்(constant awareness) இருக்கச் செய்கின்றது.

புகழொடு தோன்றுக!

மனம்போன போக்கில் வாழும் வாழ்க்கையை பல்லாயிரம் பிறவிகளாக வாழ்ந்து விட்டது சமுதாயம். அவ்வாறு வாழ்ந்ததன் விளைவுகளை சமுதாயத்தில், அதன் அங்கமான நாம் இப்போதுதான் அறிந்து கொள்கிறோம். மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறக்காமல் இருப்பதே நல்லது என்கிறார் திருவள்ளுவர். அதனை அவர் வாய்மொழியாகவே கேட்போம்.

dheaivappulavar

தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’              . . .   குறள் 236.

மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரண குணத்தோடு பிறக்க வேண்டுமெனில் யார் அதற்குப் பொறுப்பு? பிறந்தவனா பொறுப்பு? பெற்றோர்களே பொறுப்பு. வித்து நன்றாக இருந்தால்தான் முளைக்கும் பயிரும் நன்றாக இருக்கும். வித்து சரியில்லை என்றால் பயிரைக் குறை கூறி என்ன பயன்? அதாவது பெற்றோர்கள் தங்களது வம்சாவளியை கருவில் திருவுடையவர்களாகப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். அதற்கு பெற்றோர்கள் வாழ்வு ஆங்கு(இல்லறத்தில்) இருக்கும்படி வாழவேண்டும். பெற்றோர்களின் கருமையங்களில் புகழுக்கு எதிரான கலங்கங்கள் இருப்பின் அவர்களின் வம்சாவளி எப்படி புகழுக்குக்காரண-குணத்தோடு பிறக்க முடியும்?

ஆகவே திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் ஒழுக்கச்சீலர்களாக திகழ்வதற்கான மனவளக்கலை போன்ற அரிய பயிற்சிகளை மேற்கொண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகின்றது.

அகம் பூரிப்படைகின்றது:

எதனால் அகம் பூரிப்படைகின்றது? எப்படி வாழ்வது என்று அறியுங்கால், இதுவரை ஒரு பயனும் இல்லாமல் வாழ்ந்து விட்டோமே என எண்ணத் தோன்றுகிறது இப்போது! பிறவி தொடர்ந்து கொண்டே போகின்றதே என்கின்ற வருத்தம் வந்துவிட்டது. இந்நேரத்தில் இருபத்தோறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இப்போதாவது, இந்த நூற்றாண்டிலாவது ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றி அறிந்துகொள்கிறோம் என்பதனை நினைத்து அகம் பூரிப்படைகின்றது. ‘பூரிப்பு’ என்றால் என்ன என்று தெரியும். ‘பூரி’ என்பது வினைச்சொல். பூரிப்பு என்பது பெயர்ச்சொல். ‘பூரி’ என்றால் பெருமித உணர்வு ஏற்படுதல்(BE ELATED). ‘பூரிப்பு’ என்றால் பெருமித உணர்வு; மிகுந்த மகிழ்ச்சி(ELATED FEELING; EXULTATION) என்று பொருள்.

பல்லாயிரம் பிறவிகளாக எப்படியாவது வாழ்வது என்கின்ற நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணம் இப்போது புரிகின்றது. என்ன புரிதல்?

அன்று வேதாத்திரி வாழ்வியல் அகராதி இல்லை:

எவ்வாறு வாழவேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி 1911 வரை உருவாகவில்லை. ஆகவே இதுவரை ஆன்மா பல்லாயிரம் பிறவிகளை வீணாக்கிவிட்டது என்று புரிய ஆரம்பித்து விட்டது.

இருப்பினும், பல்லாயிரம் பிறவிகள் வீணாகிப்போனாலும், இப்போதாவது, வாழ்வாங்கு வாழ்வது பற்றி தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி உருவாகியுள்ளதால், அறிவு சிந்திக்க ஆரம்பித்துள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்து பிறவியின் பயனை இப்பிறவியிலாவது அடைவோம் எனத் தீர்மானிக்கின்றது. ஆனால் எவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்வது’ என்பது ஆறாம் அறிவிற்குத் தெரியவில்லை.

வாழ்வாங்கு வாழ்வதனைத் தெரிவிக்கின்றது வேதாத்திரிய அகராதி:

இதுவரை ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றித் தெரியாமல் இருந்ததை இப்போது தெரிந்து கொள்வதற்கு, எப்படி மொழியில் தெரியாத சொற்களுக்கு பொருள் தெரிந்து கொண்டு பயன் பெறுவதற்கு அகராதி இருகின்றதோ அதுபோன்று, வாழ்வாங்கு வாழ்தலுக்கானப் பொருளைத் தெரிந்து கொண்டு மனித சமுதாயம் பயன் பெறுவதற்கு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது. எனவே வேதாத்திரியம் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வதற்கு என்னவெல்லாம் திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்குத் தெரிய வைத்துள்ளது என்கின்ற கோணத்தில் இன்றைய சிந்தனை மேற்கொள்ளப்படுகின்றது.

அகராதி என்பது என்ன, அதன் பயன் என்ன என்று அறிவோம். அதனை நினைவில் கொண்டே, திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்கு என்னவெல்லாம் தெரிய வைக்கின்றது என்பதனை ஆராய்கிறோம். முடிவில் வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்துகின்றது என்று உறுதியாக ஒப்புக்கொள்ள இருக்கிறோம். எதற்கெல்லாம் வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனையும் முடிவு செய்ய இருக்கிறோம். இஃதெல்லாம் எதற்காக? நம் சுயநலத்திற்காக! இங்கு சுய நலம் என்பதால் தவறில்லை. எப்படி?

பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை:

ஒருவர் பண்பேற்றம் பெறுவதில் சுயநலம் மட்டும் இல்லை. அதில் பிறர் நலமும் இருக்கின்றது. சுவர் நன்றாக இருந்தால்தானே அதில் சித்திரம் வரையமுடியும். எனவே ஒருவரின் பண்பேற்ற-சுயநலத்தின் பயன், சமுதாயத்திற்கும் அல்லவா போய்ச் சேர்கின்றது! ஒரு மனிதனின் பண்பேற்றம் அவன் பயன்பெறுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒருவரின் பண்பேற்றம் சமுதாயத்திற்கு துன்பம் அளிக்காமல், நன்மையே செய்து கொண்டிருக்கும் கடமையையும் வளர்க்கின்றதல்லவா? இரண்டொழுக்கப் பண்பாடு அல்லவா வளர்கின்றது! ஒருவரின் பண்பேற்றம் வான்காந்தக் களத்தை அல்லவா தூய்மை செய்கின்றது! இப்படியெல்லாம் நினைந்து பண்பேற்றம் பெறுவதற்கு இயல்பூக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.

அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்:

இப்போது அகராதி என்பது என்ன என்று நினைவில் கொள்வதற்கு எளிதாக, ஒரு சில வரிகளில் அதனை வரையறை(Define) செய்து கொள்வோம். அகராதியின் வரையறைக்கேற்ப(Definition) வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது எவ்வாறு பொருந்தி வருகின்றது என அறிந்துகொள்வோம்.

அகராதி என்பது ஒரு மொழியில் நமக்குத் தெரியாமல் உள்ள புதிய புதிய சொற்களுக்குப் பொருளும் அச்சொற்களுக்கான இலக்கணமும், அவற்றை எவ்வாறு உபயோகிப்பது பற்றியும் தெரிந்து கொள்வதன் மூலமாக அம்மொழியில் வளம் பெற்று, அம்மொழியில் ஆளுமை பெறுவதற்கு பயன் படும் ஒரு நூல். சுருக்கமாக அறியாமை நீங்கி, அறிவு வளம் பெற்று அறிவை உடைமையாக்கிக் கொள்ள உதவுகின்ற ஒரு அரிய நூல் அகராதி.

அகராதியின் இந்த வரையறை வேதாத்திரியத்திற்கு பொருந்தி வருமானால் ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது சரியாக இருக்கும் அல்லவா? மொழியின் மீது ஆளுமை பெறும் கலைக்கு அகராதி உதவுவதுபோல், மனித அறிவு, மனம் போன போக்கினில் போகாமல், புலன்களின் மீது ஆளுமை புரிந்து அறிவு ஆட்சி செய்யும் கலையை கைவல்யம் செய்துகொள்வதற்கு (அறிவாட்சித்தரம் உயர்வதற்கு) வேதாத்திரியம் உதவுவதால் வேதாத்திரியத்தை அகராதி(வாழ்வியல்) என்கிறோம்.

அகராதியை வரையறை செய்து கொண்டோம். அந்த வரையறையை வைத்து வேதாத்திரியம் எவ்வாறு அகராதி வரையறையில் பொருந்தி வருகின்றது என மேலும் அறிந்து கொள்வோம்.

வேதாத்திரியம் என்பது என்ன?

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்திய எல்லா இயல்களையும் உள்ளடக்கிய (all Sciences needed for successful and peaceful living) வாழ்வியல் முறையே வேதாத்திரியமாகும். ஆன்மா உடலெடுக்கின்றது. ஒரு நாள் உடலை உதிர்த்துவிடுகின்றது. இதற்கிடையில் நடப்பதுதான் வாழ்க்கை. துன்பமில்லாமல் வாழவேண்டும். அதற்கான வழிமுறைகளையும், அதே நேரத்தில் எல்லா உயிரினங்களையும் விட மனிதஇனம் சிறப்புடையதால் பெரு வாழ்வு வாழவேண்டும். அதற்கு வழிகாட்டுதல் வேண்டும். அந்த வழியைத் தெரிந்து கொள்வதற்கு உதவுவதுதான் வேதாத்திரிய அகராதி. எப்படி?

ஒரு மொழியில், தெரியாத புதிய வார்த்தைகளுக்கு பொருள் அறிந்து கொண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு அகராதி உதவுவதுபோல், இதுவரை தெரியாதிருக்கின்ற, நன் முறையில் வாழ்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு,

  • வாழ்வு ஆங்கு (இல்லறத்தில்) நடைபெறும் வண்ணம்,
  • திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ்வதற்கு உதவுகின்றது
  • இருபதாம் நூற்றாண்டின் திருவள்ளுவரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள வாழ்வியல் அகராதி.

இப்போது வேதாத்திரிய வாழ்வியல் அகராதியில் என்னென்ன அறிந்து கொள்ளமுடிகின்றது என்பதனை தெரிந்துகொள்ள மாதிரிக்காக(sample) சுருக்கமாக சிறு அளவிலே ஒரு பட்டியல் வரைவோம். அதற்கு முன்னர் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம்.

அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்:

அறிய வேண்டியவை எல்லாம் இருப்பதால் திருவேதாத்திரியத்தை ஏற்கனவே சத்சங்கத்தில் ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’  (click here) எனப் போற்றியிருக்கிறோம். மனவளக்கலைஞரல்லாத யாராவது ஒருவர் “நீங்கள் வேதாத்திரிய தாசனாக உள்ளீர்களே, அப்படி என்னதான் உள்ளது வேதாத்திரியத்தில்?” என்று நம்மை வினவினால் என்ன கூறுவோம்? வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என பட்டியலிட்டுக் கூறுவதற்கு பதிலாக, “கேளுங்கள்! சொல்லப்படும்” என்போம். உங்கள் அறிவு எதனை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றதோ அதனைக் கேளுங்கள். அது வேதாத்திரியத்தில் இருக்கின்றது எனக் கூறுகிறேன்” என்போம். ஏனெனில் அவர்கள் ஒருவர் அறிய வேண்டியது/விரும்புவதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில். திருவேதாத்திரியத்தில் அறியவேண்டியவைகள் ஏராளம்! ஏராளம்!! எவ்வாறு அப்படிக் கூறமுடிகின்றது? எல்லையில்லாததைக்(Infinite) காண்பித்துவிட்டது; உணர்த்திக்கொண்டே இருக்கின்றது திருவேதாத்திரியம். எல்லையில்லாதனை உணர்த்துகின்ற திருவேதாத்திரியத்தில் உள்ளதனை பட்டியலிட்டு கூறமுடியுமா? பட்டியலில்தான் அடங்குமா திருவேதாத்திரியக் கண்டுபிடிப்புகள்? எனவேதான் நாம் அவ்வாறு கூறவேண்டியுள்ளது. சிந்தனை வளம் பெறுவதற்கு என்ன வளம் இல்லை இந்த திருவேதாத்திரியத்தில்? ஒழுங்காய் பாடுபட்டால் வாழ்வாங்கு வாழலாம். முயற்சியின் அளவே ஞானம் என்கிறார் நம் குருநாதர். அதனை அவரே மொழிய நாம் அதனைக் கேட்டு இன்புறுவோம்.

அறிவுத்தேனீக்கள்

முயற்சியின் அளவே ஞான விளைவு(1955)

வித்து, நிலம் உரம் தண்ணீர் காவற்கேற்ப
விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
அதற்கொழுக்கம் என்றஉரம், அறிவை ஒன்றும்
நித்ததவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
நீ சலனமுற்று அறு குணங்கள் ஆகா
வித்தைஎனும் காவல், இவையனைத்தும் வேண்டும்.
விளைவாக நீயடையும் கனியே ஞானம்.
                                                                                                          . . . ஞா.க. 1483.

குறிப்பு: காவற்கேற்ப, அத்துவித தத்துவ, வித்தறிவி லிட்டால், வித்தைஎனும் காவல்ஆகிய அருஞ்சொற்களைக் கவனிக்கவும் அன்பர்களே!

ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமையும்:

இங்கே புத்தர் வாழ்வைப்பற்றிக் கூறுவதனை நினைவிற்கொள்வோம். என்ன கூறுகிறார்? நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார். என்ன கூறுகிறார் புத்தர்? எப்படி வாழவேண்டும் என்பதற்கு நிபந்தனை ஏதும் வைத்துள்ளாரா புத்தர்? ஆம்! அந்த நிபந்தனை என்ன? கடினமானதல்ல அந்நிபந்தனை! ஒருவர் அறிவாளியாக வாழவேண்டும் என்கிறார் புத்தர். அவ்வளவுதான். ஒருவர் நூறு ஆண்டுகள்கூட வாழலாம். நூறு ஆண்டுகள் வாழ்வதால் மட்டுமே அவர்தான் என்ன பயன் பெற்றிருக்கப்போகிறார்?! இவ்வையகம் தான் என்ன பயன் பெற்றுவிடமுடியும்? ஆகவே ஒருவர் எவ்வாறு வாழ்கின்றார் என்பதனை அறிய ஆவல் கொள்கின்றது இவ்வையகம். அவர் வாழ்வதைப் பொருத்து இவ்வையகம் பயன் பெறும்.

இருபத்தாறு நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா:

அறியாமையில், அளவு மீறியும், முறை மாறியும் புலன்வழி வாழ்க்கை மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ்வதால் பயன் அடைவது யார்? புலன் மயக்கத்தில் மயங்கிய அறிவு ஐம்புலன்கள் தான் (தான்-நான்) பயன் அடைகின்றன என ஒருவேளை சொல்லலாம். இங்கே ஆழ்ந்து சிந்திக்கலாமே வேதாத்திரிய இன்பதுன்ப அகராதியின் துணையுடன். அறிவு புலன் உணர்விற்கு அடிமையாகி புலன்கள் மறைமுகமாக விரித்திருக்கும் வலையில்(trap) சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் எஞ்சுகின்றது என்பதனை அறியமுடியும்.

உதாரணத்திற்கு நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களையே எடுத்துக் கொள்ளலாம். புத்தருக்குப் பின்னர் அவர்(புத்தர்) விரும்பியபடி, வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த ஆன்மாக்கள் பலர். இருபதாம் நூற்றாண்டில் உடலெடுத்த ஆன்மாக்களில் நமக்குத் தெரிந்த அளவில்,

உலகம் உள்ளவரை நினைவு கொள்ளக் கூடிய வகையில்
*புத்தரின் ஆதங்கத்தை தீர்ப்பதற்காக 90 ஆண்டுகளுக்கும் மேலாக (96-5=91) அறிவுடன் வாழ்ந்த ஆன்மாவாக,
உலகமக்களுக்கெல்லாம் ஆன்ம ஞானத்தை எளிமையாக அருளியிருக்கின்ற ஒர் ஆன்மா
வாழ்ந்திருக்கின்றது என்றால் அது ‘வேதாத்திரி’ என்கின்ற ஆன்மா. அத்தகைய ஆன்மாவை, நமக்கு குருநாதராக அமைத்துக் கொடுத்தமைக்கு, நமது பெற்றோர்களுக்கும், குருநாதருக்கும், இயற்கைக்கும்/இறைக்கும், நன்றி கூறும் வகையிலே, இப்பிறவியிலேயே பிறவிப்பயனை பெற்றிடுவோம் என்கின்ற உறுதிமொழியனை அளிக்க மனம் விழைகின்றதல்லவா?

இப்போது, புத்தர், ‘வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்’ என்று கூறியதை நேரிடையாகவே அவர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.

amudhamozhi_38

* “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” என்கிறார் கௌதம புத்தர்.
இதற்கான விளக்கத்தை அடுத்த சத்சங்கத்தில் ஆராய்வோம். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை நிறைவு செய்துகொள்வோம் அடுத்த சத்சங்கத்தில், அதாவது அடுத்த ஞாயிறன்று(21-01-2018) சிந்தனையைத் தொடர்வோம். வாழ்க வளமுடன்! இவ்வையகம் வாழட்டும்!!

 

வாழ்க அறிவுச் செல்வம்!          வளர்க அறிவுச் செல்வம்!!