FFC—294(158)-வள்ளலாரிடம் இறைமையை வேண்டி அருள் விண்ணப்பம்

வாழ்க மனித அறிவு!                       வளர்க மனித அறிவு!!

வள்ளலாரிடம் இறைமையை வேண்டி அருள் விண்ணப்பம்!!!

FFC—294(158)

28-06-2020—ஞாயிறு

27-01-2016—புதன்

appeal.jpg-2

 

சென்ற அறிவிற்கு விருந்தில் (24.06.2020) வள்ளலாரின் திருக்காப்பிட்டுச் செய்தியினை அறிந்தோம். ‘திருத்திடுவோம், அஞ்ச வேண்டாம்’ என்கின்ற சத்திய வாக்கு கொடுத்துவிட்டு ஜோதிமயமானார் வள்ளலார் அவர்கள். ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என ஆதங்கத்துடன் சென்றிருக்கிறார். ஆனால், மகரிஷி அவர்கள், ‘வள்ளலார் கடை விரித்தது விரித்ததுதான். மூடவில்லை. அவரவர்கள் வேண்டும் அளவிற்கு எடுத்துக் கொண்டு செல்கின்றனர்’ என்கிறார். மகரிஷி அவர்கள் இவ்வாறு கூறியது இப்போது திருவேதாத்திரியத்தால் நடந்து கொண்டு வருகின்றது என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.

எல்லா அருளாளர்களுமே தான் பெற்ற பேரின்பத்தை இவ்வையகத்தில் உள்ள அனைவருமே அனுபவிக்கவேண்டும் என்றுதான் எண்ணுவர். தங்களது கண்டுபிடிப்புகளை அறநூல்களாக அருளியுள்ளனர். வள்ளலார் அவர்கள் ஏறக்குறைய ஆறாயிரம் பாடல்களை அருளியிருந்தாலும் அவர் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது கடைசியாக திருவாய் மலர்ந்து சொன்ன வாக்குகள் நம்மை மிகவும் ஈர்த்து, நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வைக்கின்றன. அவர் பூதவுடலைவிட்டுச் சென்றாலும் ஆன்ம உலகில் இருந்துகொண்டு பூவுலகிலுள்ளவர்களுக்கு அருளுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

எனவே அவரே நம்மைத் தேடி வந்து அருளுவதற்கு முன்னர் அவரிடம் நாமே அருள் வேண்டி தயாராக இருக்கிறோம் என்பதனை தெரிவிக்கவே இந்த மடலை வரைந்து அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.

அருட்பிரகாச வள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி அருள் விண்ணப்பம்.

ஜூன்,28, உலக சமாதான ஆண்டு-35(2020)

 

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை. அருட்பெருஞ்சோதி

சுவாமி!! தங்களுடைய பாதங்களை வணங்கி, அருள் வேண்டி எழுதும் மடல். கோடி கோடி வணக்கங்கள்.

1) பிறந்த நோக்கத்தை அறிந்து, அதனை இப்பிறவியிலேயே அடைய வேண்டும் என்கின்ற பேரார்வத்துடனும், ஆன்மீகத் துறையிலே மேலும் மேலும் ஈடுபட்டு அறிவுத்தொண்டு செய்து வரவேண்டும் என்பதற்காகவும் தங்களால் அருள்பாலிக்கப்பட்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிந்தானப்பள்ளியிலே மாணவர்களாக இருந்து வருகிறோம் ஐயா.

2) தாங்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இந்நன்னாளில் நினைவு படுத்திக் கொள்கிறோம். அந்த அருட்செய்தி கூறுவதாவது:-
“இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டு திருந்தி எழுச்சி பெற்று திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். – – – – – இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம், இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். – – – – – அகவினாத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”

வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் நாங்கள், தங்களின் திருகாப்பிட்டு அருட்செய்தியினை கண்ணுறும்போது எங்களுக்கு தோன்றிய மகிழ்ச்சியினையும் சிந்தனையையும் மனம் திறந்து தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் ஐயா.

இது வரை எண்ணிலடங்கா அருளாளர்கள் அவ்வப்போது தோன்றி இந்த சமுதாயம் உய்ய அறநெறிகளைக்கொண்ட அறிவுரைகளை அளித்துள்ளனர். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று ஒரு அருளாளா் வாய்விட்டு கூறியிருந்தாலும், அனைத்து அருளாளர்களின் எண்ணமும் இதுதான். அந்த வகையில் வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் தாங்களும் வந்துள்ளீர்கள். எனவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற அருளாளர்களின் அருள் நிறைந்த ஆதங்க எண்ணத்தில் இணைந்துள்ளீர்கள். தாங்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளும்பொழுது திருவாய் மலர்ந்தருளிய செய்தி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. ஆன்மாவை நாடும் புத்துணர்ச்சியை அதிகரிக்கின்றது. (The words You have uttered are most merciful, willful and powerful.) காரணம் தங்களின் செய்தி விசித்திரமாக உள்ளது. அந்த அருட்செய்தி மந்திரமாக உள்ளது. எடுத்துக்காட்டாக அதில் வருகின்ற ஆற்றலுடைய அழுத்தம் கொடுக்கின்ற வார்த்தைகளைக் கவனிக்கின்றோம் ‘

1) இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம்.
2) இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.
3) எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
4) திருத்தி விடுவோம்.
5) அஞ்ச வேண்டாம். ’

3) இந்த அருட்செய்தியின்படி எங்கள் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்கி அருள்பாலித்தீர்கள் என்பதனை அறிகிறோம். இது போல், தாங்கள் திருகாப்பிட்டு இந்த 142 ஆண்டுகளில்(24-01-2016 – 31-1-1874= சுமார் 142 வருடங்கள்) வேறு யார் யாருக்கு அருள்பாலித்தீர்கள் என எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. ஆனால் ‘திருத்திடுவோம், அஞ்ச வேண்டாம்” என தாங்கள் உறுதியாக மொழிந்துள்ளது போல் தாங்கள் அருட்பாலித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் அணுக்கச் சீடர்களாக இருந்து அறிவுத் தொண்டாற்றி வருகிறோம் என்பதனை நினைக்கும்போது எங்களுக்கு ஆனந்தமோ, ஆனந்தம்.

4) தங்களுடைய நேரிடை அருளாற்றல், மற்றும் தங்களின் அருளாற்றல் கலந்த வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளாற்றல், மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் துணையோடு, தெய்வீகத்தை முழுமையாக மலரச்செய்ய பழக்கப்பதிவுகளுடன் அறிவுப்போர் (தன்னைத் திருத்திக் கொள்ளும் தற்சோதனைப் பயிற்சியினை மகரிஷி அவர்கள் அறிவுப்போர் என்றும் தெய்வீகப்போர் என்றும் கூறுகிறார்) நடத்தி வருகிறோம். அதே நேரத்தில் எங்கள் குருபிரானும் தாங்கள் அருள்பாலித்தவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அருட்தொண்டாகிய அறிவுத் தொண்டு செய்தும் வருகின்றோம் ஐயா.

5) தாங்கள் எல்லாவுடம்பிலும், புகுந்து கொண்டு, எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருந்து கொண்டு திருத்திடுவோம் என அருள் வாக்கு அளித்துள்ளீர்கள். ஆகவே ‘திருத்திடுவோம்’ என்பது வேதாத்திரியத்தின் தற்சோதனைப் பயிற்சியால் நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே வேதாத்திரியத்தின் தற்சோதனைப் பயிற்சியில் மென்மேலும் நாங்கள் முன்னேறி இறுதிப்பயனாகிய பிறவிப்பயனை அடைய இந்நன்னாளில் தங்களின் அருளாசி வேண்டி நிற்கிறோம்.

6) அடுத்ததாக ‘திருத்திடுவோம்’ என பன்மையில் கூறியுள்ளீர்கள். அதாவது எங்களையும், உங்கள் திருச்செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உங்களுடன் உலகம் உய்ய–திருத்தும் திருப்பணியில் சேர்த்துக் கொண்டீர்கள் என நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதனை எங்களுக்கு கொடுத்த நல்வாய்ப்பு எனக்கருதி நாங்கள் மகிழ்ச்சியோடும், பணிவோடும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது போல் அவரது மாணவர்களாகிய எங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து உதவுமாறு இறைஞ்சி நிற்கிறோம் ஐயா.

7) அடுத்ததாக ‘அஞ்ச வேண்டா’ என்கின்ற ஆறுதலையும், உறுதியினையும் கூறியுள்ளீர்கள். இதனை இரண்டு கோணங்களில்/கண்ணோட்டங்களில் நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒன்று தனிப்பட்ட ஒரு நபருக்கு சொன்னதாகவும், மற்றொன்று  ‘உலகம் உய்வதற்குத் திருத்திடுவோம்’ என்கின்ற அருட்தொண்டில் எங்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டமையால் எங்களுக்கெல்லாம், இந்த அருட்தொண்டில் தொய்வு வராமல், நம்பிக்கையுடன் இருந்து பணியாற்றிட, ஆறுதலையும், உறுதியினையும் தெரிவிப்பதாகவே எடுத்துக் கொள்கிறோம்.

8) மேலும் “அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்” என உறுதியினையும் அளித்துள்ளீர்கள். அகத்தை ‘நான் யார்?’ என ஏற்கனவே வினவியருக்கு சாகா வரமும், அவ்வாறு வினவுவதற்கு தெரியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கு ‘அகத்தை நான் யார்?’ என வினவுகின்ற பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். இதன் மூலம் வாழ்வின் நோக்கத்தை உங்கள் திருச்செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிந்தது போல்(ஞா.க. பாடல் எண். 1849 -தலைப்பு இன்பம் இன்பம், இன்பம், இன்பம்) நாங்களும் அறிய, உற்சாக தாகத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சுவாமி! ஏற்படுத்தி விட்டீர்கள் சுவாமி!

தாங்கள் விரித்த அருட்கடையில், தங்களின் திருச்செல்வரும், எங்களுடைய பூர்வபுண்ணியத்தால் நாங்கள் தரிசித்து வருகின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக அருட்செல்வங்களை பெற்றுக்கொண்டுதான் வருகிறோம் என்பதனை எங்களின் கடமையாக தங்களுக்கு பணிவுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அருட்செல்வத்தை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உயர்ந்து வருவதனை தாங்களே அறிவீர்கள் ஐயா. அதற்கு அன்று இருந்த அறிவுத்திருக்கோயில்களின் எண்ணிக்கையை விட இன்று எண்ணிக்கை அதிகரித்துவிட்டதே சான்று. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழியாக தங்கள் அருட்செல்வம் கல்வியில் இணைக்கப்பட்டு விட்டதால் வருங்கால சந்ததிகளுக்கும் இந்த அருட்செல்வம் போய்ச் சேரும்.

9) திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது,

1) இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.
2) எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
3) திருத்தி விடுவோம்.
4) அஞ்ச வேண்டாம். ’

ஆகிய நான்கு அருட்தீர்மானங்களை வலிமையாக சத்திய வாக்காக வெளிப்படுத்திவிட்டு அருளார்களின் ஆன்ம உலகிற்கு சென்றுள்ளீர்கள். அங்கிருந்து கொண்டே இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாகாவரம் பெற்ற அருளாளர்களைத் தேடி (உ.ம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்) அவர்களுக்கு மேலும் அருளவும், மற்றவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப சாகா வரமும், பரிபக்குவநிலையை வழங்கவும் முடிவு செய்துள்ளீர்கள். எங்களுக்கு தெரிந்த வரை அந்த முதல் தீர்மானத்தின்படி எங்களது குருதேவரை தேடிவந்து அவருக்கு அருள் பாலித்திருக்கிறீர்கள்.

உங்களது தீர்மானங்களை உற்று நோக்கினால் அருட்துறையில்
1) அருள் துறையில் வெற்றி(இறை உணர்வு) பெற்றவர்கள்,
2) அருள் துறையில் பரிபக்குவ நிலையினை அடைந்தவர்கள் (வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்தவர்கள்),
3) அருள் துறையில் பரிபக்குவ நிலைக்குத் தயாராகின்றவர்கள்,

ஆகிய மூன்று நிலைகளில், இருப்பவர்களுக்கு பொறுப்பும், கடமையும் வைத்துள்ளீர்கள் என அறியலாகின்றது.

யாராக இருந்தாலும் ஒரு நாள் இப்பூவுலகைவிட்டுச் சென்றாக வேண்டும். எனவே இப்பூவுலகை விட்டுச் செல்லும் போது,

அருள்துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களைப்போன்ற தீர்மானத்துடன் செல்ல வேண்டும் என்றும்,

பரிபக்குவ நிலையினை அடைந்தவர்கள் இந்த பிறவியிலேயே அருள் துறையில் வெற்றி பெற்றிடுவோம் என்கின்ற மனஉறுதியுடன், தீர்மானமாக வாழ்க்கையை நடத்தி வெற்றிபெற்றிட வேண்டும் என்றும்,

பல்லாயிரம் பிறவிகளில் கொண்டு வந்த பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவியிலே மாற்றி அமைத்து மனிதனாகி தெய்வமாகலாம் என்கின்ற வேதாத்திரிய உறுதிப்பாட்டுடன், முன்பெல்லாம் பள்ளிகளில் மிகச்சிறப்புடைய மாணவருக்கு மேல்வகுப்பிற்குச் செல்வதற்கு இரட்டை பிரமோஷன் (double promotion) தருவதுபோல், அருள்துறையில் இரட்டை நிலைகளான பரிபக்குவ நிலையையும், அதன் பிறகு அருள்துறையில் வெற்றியினையும் ஒரு பிறவி காலத்திலேயே பெறலாம் (உதாரணம் – வழிப்பறி கொள்ளையனே பின்னர் வால்மீகி முனிவராகவில்லையா?) என்கின்ற நம்பிக்கையுடன், அருள்துறையில் பொறுப்புடனும், கடமையுடனும் பாடுபட்டுக் கொண்டுவருபவர்களுக்கு தெய்வமாகும் நல்வாய்ப்பு காத்திருக்கின்றது என்றும்,

சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் என்பது அறியலாகின்றது ஐயா!.

அருள் துறையில்

வெற்றி பெற்றிடுவோம் ஐயா!.
வெற்றி பெற்றிடுவோம் ஐயா!
வெற்றி பெற்றிடுவோம் ஐயா!.

தங்களது அருட் கண்பார்வை எங்கள் மீது தொடர்ந்து இருக்கட்டும் சுவாமி!

கடைசியாக உங்களிடம் அருள் வேண்டிய விண்ணப்பம்:- சாகாவரமும் தேவைப்படின் பரிபக்குவ நிலையையும் எங்களையும் உள்ளடக்கிய இந்த மனித சமுதாயத்திற்கு வழங்குமாறு சிரம்தாழ்த்தி, அன்புடன் வணங்கி இறைஞ்சுகிறோம்.

அருட்பெருஞ்சோதி!  அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை!  அருட்பெருஞ்சோதி!!

வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்!  வளர்க அறிவுச் செல்வம்!!

              இப்படிக்கு,

                தங்கள் அருள் வேண்டும்,
       இறைநேசச் செல்விகள் மற்றும் இறைநேசச் செல்வர்கள்

வாழ்க அறிவுச் செல்வம் !                 வளர்க அறிவுச் செல்வம்.!!

திருக்காப்பிட்டுக் கொண்டது –

விளக்கம்:-

திருக்காப்பிட்டுக் கொள்ளுதல் என்றால் என்ன என்று சில சத்சங்க அன்பர்கள் கேட்கின்றனர். வள்ளலார் அவர்கள் 30-01-1874(தைப்பூசம்) வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்தில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதிமயமானார். 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 12-00 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொண்டார் (கதவை தாழிட்டுக் கொண்டார்). தாழிட்டுக் கொள்வதற்கு முன் வள்ளலார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருட்செய்தியை இன்றும் சித்தி வளாகம் சுவற்றில் காணலாம். அதனைக் காணும்போது நமக்குள் எழுகின்ற சிந்தனைகள்தாம் எத்தனை, எத்தனை?   24-01-2016 24-06-2020 மற்றும் 27-01-2016 28-06-2020 ஆகிய தேதியிட்ட அறிவிற்கு விருந்தில் இடம் பெற்ற அந்த அருட்செய்தி முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது.

இங்கு அமைதியாகவும், மௌனமாவும் இருக்க வேண்டும்.

             அருட்பெருஞ் ஜோதி!                                அருட்பெருஞ் ஜோதி!!

             தனிப்பெருங் கருணை!                               அருட்பெருஞ் ஜோதி!!

 

30-1-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தருளியது.

“இதுவரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது. வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.

   இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்களுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கிலும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வருவார். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பல நிகழ்த்துவோம். திருவருட்செங்கோலாட்சி செய்வோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபக்குவ நிலையையும் அளிப்போம் நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் “ஆண்டவர் அருள் செய்வார்”

இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம் இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்ச வேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.“

                             வள்ளலார்

                                                      திருவருட்பா காரணப்பட்டு கந்தசாமி பதிப்பு(1924)

                                       பாலகிருஷ்ணன் பதிப்பு