FFC – 306 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

வாழ்க மனித அறிவு!                                      வளர்க மனித அறிவு!!

lotus

FFC – 306

அ.வி. 306

16-08-2020-ஞாயிறு

   செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

விளைவு

FFC-270_Fish_bone_cause_and_effect

    

இதுவரை ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில் நான்கு நாட்களாக சத்சங்கத்தில் சிந்தித்து வருகிறோம்.  தத்துவம் மற்றும் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் தனித்தனியாகச் சிந்தித்தோம்.  இன்று செயலுக்கான விளைவு பற்றி, அதாவது மனிதனின் முத்தொழில்களின் விளைவு பற்றி  சிந்திக்க குழுமி இருக்கிறோம்.   

     ஒவ்வொரு மனிதனும் செயல் புரியாமல் இருக்க முடியாது.

   இருப்பினும்  விழிப்புணர்வோடு இருந்து செயல் புரிவதில் பெரும்பாலோர் தவறிவிடுகின்றனர்.

   அவ்வாறு  சமுதாயத்தில் ‘செயல் புரிவதற்கு  முன்னரே அதற்கான விளைவை அறியாமலும்

                            அல்லது

    விளைவை சரியாக கணிக்காமலும்

                  அல்லது

  விளைவறிந்து ஆனால் அலட்சியத்தால் செய்கின்ற  செயல்களால் ஏற்படும் குழப்பங்கள்/துன்பங்கள் சமுதாயத்தில் மல்கிவிட்டன.

   எனவே ‘செயலுக்கு விளைவு’ பற்றிய ஏராளமான ஐயங்கள்  கீழே குறிப்பிடப்பட்ட வினாக்களாக உருவெடுத்துள்ளன. அவற்றிற்கெல்லாம் இன்றைய சிந்தனையில் விடை காண்போம்.

இன்றைய சிந்தனையில்

  1. விளைவு என்றால் என்ன?
  2. மனிதனின் செயலுக்கு விளைவு உண்டா இல்லையா?
  3. மனிதனின் செயலுக்கு விளைவு இருப்பின் அந்த விளைவினைத் தருவது யார்?
  4. மனிதனின் செயலுக்கு விளைவு வந்தேதான் தீருமா?
  5. செயலை செய்துவிட்டு விளைவைத் தவிர்க்க முடியாதா மனிதன்?
  6. தீயவினையைத் தவிர்ப்பதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
  7. செயல் புரிவதில் மனிதன் விழிப்புணர்வோடு துல்லியமாக இருந்தே ஆக வேண்டுமா?
  8. செயலுக்கு விளைவு உண்டு என்பது எந்த நியதியின் கீழ் வருகின்றது?
  9. இந்த வினாக்களுக்கு விடை காண்கின்ற பொறுப்பு ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு  மட்டுமேவா உள்ளது?  மற்றவர்களுக்கு இல்லையா?
  10. மற்றவர்கள் ‘செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற நியதிக்கு உட்பட்டவர்கள்  இல்லையா?
  11. செயலை செய்வதற்கு முன்னர் விளைவை எவ்வாறு அறிவது?
  12. செயலுக்கான விளைவைத் தரும் அறிவியல் என்ன?

என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் இன்று விடை காணவே வேண்டும். அதற்கு நம் குருநாதரும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளும் நமக்குத் துணை நிற்குமாக.

1. விளைவு என்றால் என்ன?

      முதலில் விளைவு என்றால் என்ன என்று அறிவோம்.  

   ‘விளைவி’ என்பது வினைச்சொல்.  விளைவு என்பது அதன் பெயர்ச்சொல். 

 ‘விளைவி’ என்றால் நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை ஏற்படுத்துதல்; உண்டாக்குதல்(cause, produce, bring about) என்று பொருள்.

‘செயல்’ என்கின்ற சொல்லும், ‘விளைவு’ என்கின்ற சொல்லும் பந்தம் உடையன.

   விளைவை இப்போது காண்கிறோம்/அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு   பந்தமான செயல் முன்னர் நடந்திருக்கும். 

    இன்று செயலை செய்கிறோம் என்றால் என்றால் அதற்கான விளைவும் உண்டு; வந்தே தீரும். 

   உதாரணத்திற்கு மாணவன் இன்று தேர்வு எழுதுகிறான்.  அது செயல்.  அதற்கான விளைவுதான் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘தேர்ச்சி பெற்றான்(pass) அல்லது தோல்வி அடைந்தான்(Fail) என்பதனை அறிவிக்கும் தேர்வின் முடிவு.  கடல் இருந்தால் அலையும் இருக்கும்.  

    எனவே செயலுக்கு விளைவு உண்டு என்பதில்  எந்தவித சிறு ஐயப்பாடும்  இருக்கக் கூடாது. Every action having  its own result is quite logic.  In Physics what does Newton third law of motion say?  For every action there is equal and opposite reaction.

‘விளைவு’ என்றால் விளைவது(result of action). செயலின் மூலமாக விளைவது. ஒன்றைச் செய்ததற்கு பலனாகத் திரும்பிக் (consequence, result, effect) கிடைப்பது.

செயலிலிருந்து  வெளிப்படுவது  விளைவு. விளைவு இல்லாத செயல் இல்லை. செயல் இல்லாத விளைவு இல்லை.

செயல் மனிதனுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தருவதில்லை. அதன் விளைவுதான் மனிதனுக்கு இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருகின்றது.

எனவே என்ன விளைவு வேண்டுமோ, அதற்குரிய செயலைச் செய்து விளைவை அனுபவிக்க வேண்டும். மனிதன் விரும்புவது  இன்பமே.  எனவே இன்பம் தரும் செயலையே மனிதன் தேர்வு செய்ய வேண்டும் என்றாகின்றது.

 2. ஆன்ம சாதகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும்  விளைவு இல்லாமல் நடப்பதில்லை.  ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அதேபோல் ‘Nobody can hurt you unless there is an imprint in you’ என்பார் மகரிஷி அவர்கள்.   இதன் நேரிடையானப்  பொருள் என்ன? 

  ‘உன்னிடம் தவறு செய்த பதிவு இருந்தாலொழிய யாரும் உன்னைத் துன்புறுத்த முடியாது’ என்பது பொருள்.  அதாவது  ‘இப்போது துன்பமாக வருவது ஒருவர்  முன்னர் செய்த செயலின் விளைவே’ என்பதனை அவ்வாறு கூறுகிறார்.  துன்பம் வரும்போது மற்றவர்களைக் காரணம் காட்டுவதில் பொருள் இல்லை.  குறிப்பாக ஆன்ம சாதகர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

   ‘ஒருவர் ஆன்ம சாதகம் பல வருடங்களாக  செய்து வருபவராகக்கூட இருக்கலாம்.   ஆனால் தனக்குத் துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறர் என்று கூறுவாரேயானால்  அவர் இன்னமும் ஆன்மீக பயிற்சியில்  ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் பொருள்’ என்கிறார் ஓர் அறிஞர்.   அது எவ்வாறு சரியாக இருக்க முடியும் என்கின்ற ஐயம் எழலாம் ஒரு சிலருக்கு.  சிந்திப்போம்.

 3. ஆன்மக சாதகம் எதற்காக செய்யப்படுகின்றது?

 ஆன்மாவை உணர்வதற்காகத்தான் ஆன்ம சாதகம் செய்யப்படுகின்றது.  ஆன்மாவை உணர்வது என்பது என்ன? இறையேதான் தனது ஆன்மாவாகவும் 760 கோடி ஆன்மாக்களாகவும்(மற்றவர்களது ஆன்மாவாகவும்) உள்ளது என்கின்ற உண்மையை உணர்வதுதான் ஆன்மஉணர்வு.  அதாவது ஆன்மஉணர்வேதான் இறை உணர்வு.  இறைஉணர்விற்காக ஆன்ம சாதகம் செய்து வரும்போது ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இறைநீதியினை அறியாமல் இருந்தால் ‘இறைவன் இருக்கின்றான்’ என்கின்ற இறைநம்பிக்கை இல்லாததாக அல்லவா பொருளாகின்றது?!

   நம்பிக்கையில் ஆரம்பிப்பதுதான் இறைஉணர்வு அப்பியாசம்(பயிற்சி).  இறை நம்பிக்கையில்லாமல் இறைஉணர்வு அப்பியாசம் பலன் தராது.

 இறைநம்பிக்கை இல்லாமல் இறைஉணர்வு அப்பியாசமும் செய்ய முடியாது.

  ஆர்வமும் இருக்காது. தொய்வு ஏற்படும். 

  ஆகவே தனக்கு ஒரு வேளை துன்பம் வந்தால், அது, தான் இப்பிறவியில் செய்த  செயலுக்கான விளைவோ, அல்லது பிறக்கும்போது தான் கொண்டு வந்த ‘சஞ்சிதகர்மா’ (சஞ்சி — Sanchi என்றால் மூட்டை என்று பொருள்) என்னும் வினைமூட்டையிலிருந்து வெளிவந்ததுதான்  என்கின்ற புரிதல் வேண்டும். 

  அப்படியொரு  புரிதல் ஏற்படுமாயின், அறிவு,  தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு கவலையுறாமல், துன்பத்திலிருந்து விடுபட ஆவன செய்ய முடியும். 

  தீயவினைப்பதிவுகள் சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையில் ஒரு வேளை இருப்பின்   அதனை வினைமூட்டையிலிருந்து நீக்குவதிலும்  அக்கறை கொள்ளுதல் வேண்டும்.   

   மேலும் எதிரியையும் வாழ்த்தக் கூடியவர்கள் தனக்கு வரும் துன்பங்கள் பிறரால்தான் வந்தது என்கின்ற    தவறான புரிதல்   கொண்டிருந்தால் அவர்களால்  எப்படி எதிரியை வாழ்த்த முடியும்?

 4. மனவளக்கலை பிறவிப்பிணியைப் போக்கும் அருமருந்து:

   பெற்றோர்களாவதற்கு  முன்னரே இளைஞர்கள் தங்கள்  சஞ்சிதகர்மா எனும் வினை மூட்டையில் தீயவினைப்பதிவுகள் இருப்பின் அதனை வினைமூட்டையிலிருந்து காலி செய்துவிடவேண்டும்.

அப்போதுதான் குழந்தைகளுக்கு கொடுக்கவிருக்கும்   ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையில் நல்ல வினைவுப்பதிவுகளையே நிரப்பிக்   கொடுக்க முடியும்.  அதற்கு துணைபுரிவதுதான் மனவளக்கலை எனும் அருமருந்து. 

 அருமருந்து என்பதால் அது மருந்தல்ல. ஆனாலும் ஒருவகையில் மருந்தில்லா மருந்து மனவளக்கலை.

பொதுவாக மருந்து எதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது? நோயினால் வரும் துன்பத்தைப் போக்குவதற்கு மருந்து அவசியமாகின்றது.

     துன்பமில்லாமல் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு வாழ்வதற்கும்,

   ஒரு வேளை துன்பம் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பயிற்சியை  உடல், உயிர், மனம் ஆகிய மூன்றிற்கும் அளிப்பதால் மனவளக்கலை  அருமருந்து எனப்படுகின்றது.

  மேலும் பிறவிப்பிணியினைப் போக்கும் மருந்தாகவும் மனவளக்கலை இருப்பதால் அது அருமருந்து எனப்படுகின்றது, மனவளக்கலை பயிற்சியினை ஆணும், பெண்ணும் 15 வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 

திருமணத்திற்கு முன்னர்  பத்து வருடத்திலிருந்து பதினைந்து வருடம் செய்த மனவளக்கலை பயிற்சியின் பயன் அவர்களுக்கும் அவர்களது  வம்சாவளிக்கும் போய்ச் சேரும்.

 5. செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு  நிரூபணம் அவசியமா?

    செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு என்ன நிரூபணம் தேவை?  நிரூபணம் என்றாலே அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு அறிவியல் நிரூபணம் தேவையா? 

   கைப்புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி அவசியமா?  அவசியமே இல்லை. அதுபோல்தானே மனிதனின் செயலுக்கு விளைவு நிச்சயமாக உண்டு என்பதற்கு நிரூபணம் அவசியமில்லை.

‘Good is ever good; But bad is never good.

நல்லது எப்போதுமே நல்லது; தீயது எப்போதுமே நல்லதல்ல’ என்கின்ற கோட்பாட்டில் ஆறாம் அறிவிற்கு உடன்பாடு இல்லையா?

‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற உண்மையினை  கணிதத்திற்கு உட்படுத்தியோ, அல்லது கருவிகளுக்கு உட்படுத்தியோ, அல்லது சாம்யத்திற்கு உட்படுத்தியோ அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் தான், ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற    இயற்கைநீதியினை/இறைநீதியினை  அறிவு மதித்து நடக்குமா? 

அறிவியலாக  இருந்தால்தான் அறிவு ஏற்றுக்கொள்ளுமா?  அறிவுப்பூர்வமாக இருந்தால் அறிவு ஏற்றுக்கொள்ளாதா? அறிவிற்கே அது தெரியாதா? தெரியவில்லை எனில் அறிவிற்கு யார் தெரிவிப்பது? 

                         அறிவிற்கு அறிவே தெரிவிப்பதுதான் சிறப்பு.

   அதாவது சுயமாக சிந்திக்க வேண்டும்.

தவறிழைப்பது மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.  மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்ல  எப்படி முடியும்?  முடியாது; தொடர்ந்து செல்ல முடியாது.” என்கிறார் மகரிஷி அவர்கள்.

 6. செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் ஏன் (dilemma)?

 தடுமாற்றம் என்பது என்ன?  செயலுக்கு விளைவு உண்டா அல்லது இல்லையா என்பதில் தெளிவின்மை.   தான் ஆற்றும் செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் (dilemma)உள்ளது. ஏன்? 

   தடுமாற்றம் இல்லை என்றாலும் அலட்சியம் உள்ளது மனிதனிடம்.   

                       அல்லது அறியாமை உள்ளது. 

               அல்லது உணர்ச்சிவயம் உள்ளது.

செயலுக்கான விளைவு உண்டு என்பதனை  மனிதன் மறந்துவிடுகின்றானா?

அல்லது செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தாலும் விளைவைக் கணிக்காமல் ஏன் செயலைச் செய்கின்றான்?

விளைவைக் கணிக்கின்ற திறமை இல்லையா மனிதனிடம்?

செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தும்,  விளைவைக் கணிக்கின்ற திறமை இருந்தும் விளைவைக்கணிக்காமல்(யோசனை செய்யாமல்) செயல் புரிந்து விட்டு பின்னர் துன்பம் வரும்போது கவலையுறுகின்றான் மனிதன். இதற்கு காரணம் வினைப்பதிவுகளின் அழுத்தமே.

 7. செயலுக்கான விளைவு எப்போது வரும்?    

விளைவு என்றால் என்ன என்று பார்த்தோம்.  செயலுடனே விளைவும் தொக்கி நிற்பதால், விளைவு,

  செயல் செய்கின்றபோதே வரலாம்.

  செயலுக்குப்பின் உடனேயும் வரலாம்.

  அல்லது பிறகும் வரலாம்.

  ‘பிறகும்’ என்பது

செயலின் தன்மை, நோக்கம் பொறுத்து,

அடுத்த நிமிடமும் வரலாம். அல்லது

அடுத்த நாள் வரலாம். அல்லது

அடுத்த வாரமும் வரலாம். அல்லது அடுத்த மாதமும் வரலாம்.

அல்லது அடுத்த வருடமும் வரலாம்.

அல்லது சில ஆண்டுகளோ பல ஆண்டுகள் கழித்தோ,

ஏன் நூற்றாண்டு கழித்தும் வரலாம்.

ஏழ் பிறவிக்குள்ளும் வரலாம்.

 8. இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா?

சிலருக்கு ஐயம் எழுகின்றது.    

என்ன ஐயம் அது? 

செயலுக்கான விளைவு  துல்லியமாகவா(precisely) வரும்?!

பேரறிவின் தன்மாற்ற பயணத்தில்தான் (Journey of Transformation of Consciousness) மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்(வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்) 

ஆரம்ப நிலையைில் வெட்டவெளி நொறுங்கி துகள்களாகி பஞ்சபூதங்களானது பேரறிவின் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்றின் செயல்பாடுகளினாலும் தான் சாத்தியமாகியது என்பதனை அறிவோம். 

  ஆகவே உயிரற்ற சடப்பொருள்கள் உருவானதற்கு காரணமான அறிவின் மூன்று செயல்பாடுகளில்   ஒன்றான ‘துல்லியமும்’   மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்த போதும் செயல்படவேண்டுமல்லவா? ஆறாம் அறிவுதான் தனது  ‘விரைந்துணர் அறிவாற்றலை’க் கொண்டு (நுண்மாண்நுழைபுலன்-Prespicacity) ‘செயலுக்கு விளைவு என்ன’ என்று அறிந்து துல்லியமாக மனிதன் செயல் புரிய வேண்டும் என்பதில் இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா? எதிர்பார்ப்பது என்பதனைவிட செயலுக்கு விளைவு உண்டு என்பது இயற்கைஅமைப்பின்/இறையின் inbuilt mechanism என்று பகர்வதே மிகப்பொருத்தமாக இருக்கும்.

 செயலுக்கு விளைவு உண்டு என்பதனை நினைவில் கொண்டு, விளைவினை முன்யோசனையுடன் (முன்னரே) கணித்து, நல்விளைவுகளை தரும் செயல்கள் புரிவதில் ஆரம்பத்தில் சிரமம் இருப்பது போல் தெரியலாம்.   ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.  ஆறாம் அறிவு விரைந்துணர் ஆற்றல் பெற்றது. இதுவரை பழக்கமில்லாது இருந்ததினால் அது சிரமமாக இருப்பதாக தெரிகின்றது.  பழகப்பழக இயல்பாகிவிடும்.

 9. விளைவு வரும்போது செயல் புரிந்தவர் இல்லாதுபோனால். . . ? 

 எந்த ஒரு செயலும்(மனிதன்) விளைவிலிருந்து தப்பவே முடியாது(No action will go waste). 

   பல ஆண்டுகள் கழித்து வரும்போதோ,

  நூற்றாண்டு கழித்து வரும்போதோ,

 ஏழ் பிறவிக்குள்ளும் வரும்போதோ

செயல்புரிந்தவர் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  செயல்புரிந்தவர் இல்லாமல் இருக்கும்போது அந்த விளைவு யாரைத் தாக்கும்?  தன் வழியாக வந்த வம்சாவளியைத் தாக்கும்.  உயிர்த் தொடர்தானே வம்சாவளி.

  இங்கே அநேகருக்கு ஐயம் எழுகின்றது. ஒருவன் செய்த தவறுக்கு தண்டனை(விளைவு) அவனது மகனோ/மகளோ, அல்லது பேரன்/பேத்தியோ அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் என்ன நியாயம் உள்ளது என்கின்ற ஐயம்தான் அது. 

வம்சாவளி என்பதற்கு உயிர்த் தொடர்பு என்பது  மட்டுமே பொருளாகுமா? சிந்திக்கவும்!

 10. மாதா பிதா செய்தது மக்களுக்கு:

ஒருவன் உலகியல் வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்து மகனுக்கோ/மகளுக்கோ, தாத்தா சொத்து பேரனுக்கோ உரிமை இருப்பதுபோல், செயலின் விளைவையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். 

 பின்னர்   தவறான செயலின் தீய விளைவை செய்தவர் இல்லாதுபோது வேறுயார் அனுபவிப்பது?  இதனைக் கருத்தில் கொண்டுதான் குடும்பங்களில் பெரியவர்கள் ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.

   ஒரு நடைமுறை உதாரணத்தின் மூலம்  ஒருவர் செய்த செயலின் விளைவு அவரது வம்சாவளிக்கும் சேரலாம் என்பதனை அறிவு ஏற்றுக்கொள்ளட்டும்.

   தந்தை வீட்டினை அடமானம் வைத்து கடன் வாங்கி திருப்பி செலுத்துவதற்கு முன்னர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவருக்கு மகன்கள் இருக்கின்றனர்.  தந்தை வாங்கிய கடனை மகன்கள் திருப்பி செலுத்திய பிறகுதான் மகன்கள் அந்த வீட்டினை விற்க முடியும்.  ‘எங்களது தந்தை வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை’ என்று சொல்ல முடியுமா?  அதுபோல்தான் ஒருவன் செய்த  செயலிற்கான விளைவினை அனுபவிக்க முடியாமல்போனால்  அவன் சந்ததி அனுபவிக்க வேண்டியிருக்கும்.   இங்கே மகரிஷி அவர்கள்,  பாபம் எது புண்ணியம் எது என்று கூறுவதனை அறிந்துகொள்வோம்.

 11. பாபமும் புண்ணியமும்:

 இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாபம், புண்ணியம் பற்றி தெரிந்திருக்கின்றது.  ஆனால் அவற்றின் வரையறை(defintion) முழுவதுமாக தெரியவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான்  அந்த வரையறையை மனதில் இருத்திக்கொண்டு மனிதன் செயல்கள் புரிய வேண்டும் என எண்ணி 1955 ஆம் வருடம் பாபம் புண்ணியம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் பாடலை அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

Scientist of Consciousness

 பாபம் புண்ணியம்(1955)

 எண்ணம் சொல் செயல்என்ற மூன்றினாலும்,

எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ,

மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ,

மாசுஎனும் துன்பம்எழா வகையினோடும்,

உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே,

உலக இயல்பொடு ஒட்டிவாழும் செய்கை

புண்ணியமாம்; இதற்கு முரணான எல்லாம்

புத்திமிக்கோர் பாபம் என விளங்கிக் கொள்வார்.

. . . வேதாத்திரி மகரிஷி.

மிக எளிமையாக பாபம் புண்ணியம் என்பது பற்றி கூறியுள்ளார்.  இதற்கான அறிவியல் வார்த்தை முறையே தீயொழுக்கம், நல்லொழுக்கம் என்பதாகும்.  நல்ல செயல்களெல்லாம் புண்ணியம் — நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  தீய செயல்களெல்லாம் பாபம் — தீயொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  பாடலை முடிக்கும் போது ‘புத்திமிக்கோர்’ என கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். என்ன பொருள் எடுத்துக் கொள்வது?  சமுதாயத்தில் பெரும்பாலோர், அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் குறைபாடுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அறிவின் குறைபாடுகளோடு வாழ்ந்தால் அறிவு துன்பத்தைத்தான் அனுபவிக்க முடியும் அல்லவா?  ஆகவே அறிவு முழுமை அடையவேண்டும்(perfection of consciousness) என்பதனை கருத்தில் கொண்டு மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதுவே தமிழ் கூறும்  அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதுமாகும்.

 Check list ஐ சரி பார்ப்போமா!

     சிந்தனையின் தொடக்கத்தில் பன்னிரண்டு  ஐய-வினாக்களை எழுப்பியுள்ளோம். அவற்றிற்கான விடைகளை இன்றைய சிந்தனையில் கண்டுபிடித்துவிட்டோமா எனப் பார்ப்போம்.

 FFC-270_table

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில்(check list) வினாக்களுக்கான விடைகள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் வினாக்கள் இருக்குமானால் அவ்வினாக்களுக்கு விடைகளை தாங்களாகவே சிந்தித்து பயன் பெறவும்.  இத்துடன் ‘விளைவு’ பற்றிய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  இதன் தொடர்ச்சியாக அடுத்த அறிவிற்கு விருந்தில் (19-08-2020 புதன்)  கருமையம் பற்றி சிந்தனை செய்வோம்.  வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                வளர்க அறிவுச் செல்வம்!!