2014

Yearly Archives

  • அயரா விழிப்புணர்வு-2/?

    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு-2/?

    FFC – 35

    07-12-2014-ஞாயிறு

    (Constant Awareness)

    இப்போது திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதைக் கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

    ”பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

    புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். அவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை (புலன்களை) அகப்படுத்தும்(trap) கருவியாகத்தான் கருதுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். (எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது.) ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

    இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனி்த சமுதாயம், இன்பம் அனுபவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது.  தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது. புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலனின்பம். இதில் சலிப்பும், துன்பமும் ஏற்படலாம். அளவு மீறும்போதும். முறை மாறும்போதும் இன்பமே துன்பமாகிவிடும். ஆனால் புலன் கருவிகள் இல்லாமல் உணரும் இன்பம் ஒன்று இருக்கின்றது, அதுதான் பேரின்பமாகும். இதில் சலிப்பும் இராது. துன்பமும் வராது. தெய்வீகப் போதைதான் வரும்.

    அயரா விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? உறங்கும்போது உணர்வு கிடையாது. விழித்திருக்கும் போது உணர்வு உண்டு. ஏற்கனவே உணர்வு இருக்கும் விழிப்பு நிலைக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? அதுவும் அயரா விழிப்புணர்வு வேண்டும் எனப்படுகின்றது. விழிப்பில் இருக்கும் போது உணர்வு இருக்கின்றது என்பது சரிதான். புலன்கள் வழியாக அறிவு உணர்ந்து கொண்டிருக்கின்றது. விழித்துக் கொண்டிருக்கின்ற போது மனிதன் எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்கிறான். அப்போது மனிதன் விழிப்புடன் இருக்க வேண்டும். அதனைத்தான் நாம் அயரா விழிப்புணர்வு” என்கின்ற தலைப்பில் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம். சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் இருக்க வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

    குருவை அடைவதற்கு முன்னர் ”அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

    தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்.

    அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கை அன்னையின் குழந்தைகள்தான் மனிதன். மனிதன் அந்த பரிபக்குவத்திற்கு வரவேண்டுமே.! வந்தால்தானே அதற்கான கனிந்த நேரம் வரும். இப்போது வந்துள்ளது.

    அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவுச் சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்திருக்க வேண்டும்” என்று. இங்கே இயற்கையியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் இயற்கையின் நிகழ்வை ”When fraction demands Totality Supplies” என்கின்ற உண்மையைச் சிந்தித்து நாமும் அவ்வுண்மை மக்களிடம் பரவ வலுசேர்ப்போம். இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் ”எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் உய்ந்து வரும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, ”நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என வினா எழுந்து, தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். பரிணாமத்தில் இப்போதுதான் மனவளக்கலை வழியாக அந்த தருணத்தை உருவாக்கியுள்ளது இயற்கை.

    இங்கே மற்றொரு  உண்மையினை கூடவே அறிந்து கொள்ள வேண்டும்.   தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை.  இது சரிதானே?  அப்படியானால் கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை என்றாகின்றதல்லவா?  இதுவும் சரிதானே? தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன்.  அரூபமான கடவுளை உணர்வதற்கு அரூப வழிபாட்டின் மூலமாகத்தான் சாத்தியம் என்றாகின்றதல்லவா?  இதுவரை பரவலாக இல்லாத அரூப வழிபாட்டினைத்தான் மனவளக்கலை ஏற்படுத்தி வருகின்றது.     புதனன்று தொடா்வோம்.

    வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
           வாழ்க அறிவுச் செல்வம்.   வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 18

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                            06-12-2014

                       “பிறப்பும் இறப்பும் உருவத்தோற்றமான உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல”

     

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     

    குறிப்பு:  கருத்தைச் சிந்திக்கவும்.

     

    1)   உடல் அழியக் கூடியது.  அழிந்து விடும் ஒரு நாள்.

     

    2)   உயிர் அழியாதது.  இது, யாவருக்கும் இப்போது தெரிய வருகின்றது.  ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஒரு சிந்தனை இல்லை. மரணத்திற்கு பின் அதாவது உயிர் உடலை விட்டு வெளியேறிய பிறகு, உடல் தான் எரிக்கப்படுகின்றது அல்லது புதைக்கப்படுகின்றது.   உயிரை எரிப்பதில்லை.  அல்லது உயிரைப் புதைப்பதில்லை. ஆகவே உயிர் அழியாதது எனத் தெளிவாகின்றது.

    3)   இப்படிப்பட்ட உயிரின் நிலை பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கும் பின்னும் என்ன?

     

    4)   உயிரறிவு என்பது என்ன?  ஏன் உயிரறிவு பெறவேண்டும் மனிதர்கள்?

     

    5)   அதனால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் என்னென்ன பயன்கள்?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

     

                                                         05-12-2014

      வாழ்க வளமுடன்,

     

    தவிர்க்க முடியாத  காரணங்களைக் கருதி இணையதள சத்சங்கத்தில் சந்திப்பதில் (Meeting in Web Satsang) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    1)     வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அது செய்வாய்க் கிழமையாக இருக்கட்டும்.

     

    2)     அறிவிற்கு விருந்திற்காக ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    3)    சிந்தித்தல் பயிற்சிகளில் ஒன்றான சிந்திக்க வினாவிற்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    4)    சிந்தித்தல் பயிற்சிகளில் மற்றொன்றான சிந்திக்க அமுத மொழி பகுதியில்; வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    இந்த தற்காலிக ஏற்பாடு நாளை முதல்(06-12-2014) அமலுக்கு வருகிறது.

     

                                                         வாழ்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                            வளர்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                               வாழ்க இணையதள பார்வையாளர்கள்

                                                                 வளர்க இணையதள பார்வையாளர்கள்

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading