2018

Yearly Archives

  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    வாழ்க மனித அறிவு!                                                                                                                                  வளர்க மனித அறிவு!!

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    (தொடர்ச்சி)

    நாள்: 13-05-2018-ஞாயிறு

    உ.ச.ஆ.13-05-33

    lotus

    Maharishiguru seedan

    gurussss

    சீடன்: வாழ்க வளமுடன்!

    குரு: வாழ்க வளமுடன்! உட்கார். இன்றைக்கு என்ன வினாவோடு வந்துள்ளாய்?

    சீடன்:  ‘நான்’ என் தத்துவமே நாமாகியுள்ளோம் என்று கூறுகின்றார்களே? எப்படி ஸ்வாமி?

    குரு:  சொல்கிறேன்… உதாரணத்திற்கு… சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இதில் பொதுவான விஷயம் ஏதாவது உள்ளதா?

    சீடன்:  ம்ம்..பொதுவான விஷயம்… இருக்கிறது ஸ்வாமிஜி!

    குரு:  என்ன அது?

    சீடன்:  தண்ணீர் ஸ்வாமிஜி.

    குரு:  Good!இப்போது சொல்.. தண்ணீர் என்று ஒரு பொதுப் பெயர் இருக்கும்போது ஏன் சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று கூறவேண்டும்?

    சீடன்:  சமுத்திரம் மிகப் பெரியது… மற்ற இடங்களில் உள்ள நீரின் இருப்பு, தன்மை, ஓட்டம் மற்றும் சுற்றுப்புறம் இவற்றிக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    குரு: சரியாகச் சொன்னாய். வாழ்க வளமுடன்! இப்போது ஆதி எனும் பரம்பொருள் மெய்… என்ற இறைவணக்கப் பாடலை முழுவதுமாகப் பாடு பார்க்கலாம்.

    சீடன்: (கண்களை மூடிக்கொண்டு)

    …….. ……. …… (சிறிது மெளனம்)

    ஆதியெனும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
    அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
    மோதியிணைந்து இயங்குகின்ற  நிலைமைக்கு ஏற்ப
    மூலகங்கள் பலவாகி  அவையிணைந்து
    பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
    நீதிநெறி உணர்  மாந்தராகி வாழும்
    நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

    (சிறிது நேரம் நிசப்தம் நிலவுகிறது)

    குரு:  வாழ்க… வாழ்க…வளமுடன்! பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி தனித்த நிலையில் நான் என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.

    சீடன்: … … … … …

    குரு:  இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

    சீடன்: இறை=நான்=நாம்=எல்லாம்.

    குரு:  Excellent!!  வாழ்க வளமுடன்! ஞானக்களஞ்சியம் பாகம் ஒன்று வைத்துள்ளாயா?

    சீடன்:  (தன் தோள் பையிலிருந்து எடுக்கிறார் சீடன்) இதோ ஸ்வாமி!

    குரு:  (கண்களில் ஆச்சரியத்துடன்) பரவாயில்லையே! கையிலேயே வைத்துக்கொண்டுள்ளாயே! எங்கே மகரிஷி அவர்கள் எழுதிய “நான்” என்ற தத்துவமே நாம் என்று தொடங்கும் பாடலைப் படி. பாடல் எண் 876 என நினைக்கிறேன்.

    சீடன்: ஆம் ஸ்வாமி 876 தான்.

    (பாடலைப் படிக்கிறார்)

    நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
    நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
    ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
    ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
    தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
    தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்து,
    ஆன்ம நிலையறிந்ததனால், பேதமற்ற

    அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்!.”

    குரு:  சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று தண்ணீர் அழைக்கப்படுவது போல ‘நான் என்ற தத்துவம்தான் – அரூபசக்தி தான்,நாம் என்ற பலராக, அனேகக் கோடி சீவன்களாக, மனிதர்களாக அறிவியக்கங்களாக இருக்கிறது.

    சீடன்: இப்போது புரிகிறது. நன்றி ஸ்வாமிஜி!  ஆனால் இந்த ஆறாவது அறிவின் நோக்கம் என்ன?

    குரு:  நாளை சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வாழ்க அறிவுச் செல்வம்!!

    மறுநாள் சீடன் குருவை சந்திக்க வருகிறான். அந்த நிகழ்வை அடுத்த ஞாயிறன்று அறிந்து கொள்வோம்.

    Loading

  • குரு-சீடர் உரையாடல்-2

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    குரு-சீடர் உரையாடல்-2

    ஆறாம் அறிவு

    நாள்: 06-05-2018-ஞாயிறு

    உ.ச.ஆ.06-05-33

    lotusIMAGE-கு-சீ- உ- நோக்கம்

    (நிகழ்வு-குருவை அன்றாடம் தரிசித்து ஆசிகளைப் பெறுவதில் ஆனந்தம் அடைவது போன்று அன்றும் வழக்கம்போல் குருவை தரிசிக்க வருகிறான் சீடன்.)

    guru seedan

    (சீடன் வருவதனை பார்த்ததும்)

    குரு: வா… வா..  உட்கார்.  ஏதோ தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் வேகமும் உன்முகத்தில் தெரிகின்றதே!? 

    சீடன்:  ஆம் ஸ்வாமி. ஆறாம் அறிவு பற்றி அறிய எனது அறிவு விரும்புகிறது குருவே!

    குரு:    ஆறாம் அறிவு பற்றி அறிய ஆறாம் அறிவு விரும்புகிறது என்று கூறு. அதாவது உன்னைப் பற்றியே அறிய விரும்புகிறாய். அப்படிதானே?

    சீடன்: ம்ம்……ஆம் குருவே!

    குரு: மிக்க மகிழ்ச்சி!  உன் சிந்தனையை தூண்டிய வினா தான் என்ன? 

    சீடன்: மகா கவி பாரதியார் சுத்த அறிவே தெய்வம் என்கிறாரே! அப்படியானால் ஆறாம் அறிவையா தெய்வம் என்கிறார் குருவே?

    குரு: ஆம். இதில் என்ன உனக்கு சந்தேகம். ஐயமின்றி ஆறாம் அறிவுதான் தெய்வம். தாயுமானவரும் அறிவைத் தான் தெய்வம் என்றார். தாயுமானவரை மானசீகக் குருவாகக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களும் அறிவைத்தான் தெய்வம் என்கிறார்.

    சீடன்: அடுத்த கேள்வி கேட்கலாமா குருவே?.

    குரு: கேள்.

    சீடன்: ஐந்தறிவு உயிரினம் இருக்கும்போது ஆறாவது உயிரினம் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

    குரு: நான் இப்போது உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்.

    சீடன்: கேளுங்கள் குருவே! உங்கள் ஆசீர்வாதத்தால் விடை தெரிந்தால் பதில் கூறுகிறேன்.

    குரு: உனக்கே விடை தெரியும். விடை கூறுவாய். ஐந்தறிவு சீவன்கள் எதை உணர்கின்றன?

    சீடன்:  அழுத்தம், ஒலி,ஒளி, சுவை மணம் ஆகிய வற்றை உணர்கின்றன குருவே.

    குரு:  இதோடு தன்மாற்றம்(பரிணாமம்) நின்று விடாமல் ஏன் ஆறாவது உயிரினம் தோன்றியது என்று சிந்திக்கலாமே. நீ.

    (சற்று நேரம் மௌனமாக இருந்து சிந்தித்துவிட்டு சீடன் பதில் கூறுகிறான்)

    சீடன்: பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்து. ஐந்தையும் உணர்ந்த பிறகு உணர்வதற்கு வேறு ஏதும் இல்லை. ஆனால் இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்தும் ஏன் தோன்றுகின்றன, எவ்வாறு தோன்றுகின்றன, எதிலிருந்து தோன்றுகின்றன என்பதனை அறிவு உணரவேண்டியவற்றில் மீதம் உள்ளதால் அதனை உணரவே ஆறாம் அறிவு தோன்றியது எனலாமா குருவே!

    குரு: இதில் என்ன ஐயம் உனக்கு? நீ சொல்வது சரியே. அதாவது அறிஞர் திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல் பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்தின் வகை அறியும்போது தெய்வமே நானாக உள்ளது அறியப்படும். இதுவே ஆறாவது அறிவின் நோக்கம்.

    சீடன்: தெய்வமே அறிவாக இருந்தும் மனிதன் அல்லலுருகிறான். ஏன் குருவே?

    குரு: ஐந்தாம் அறிவுக்கப்பால் அறிவு இறைநிலை நோக்கி எழுகிறது. அதன் வேகத்தைத் தடுத்து நோக்கத்தை திருப்பி புலன் உணர்ச்சியில் விடும்போதுதான் முரண்பாடுகள் விளைகின்றன என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சீடன்: அப்படியானால் புலன் உணர்வு கூடாதா குருவே?

    குரு: புலன்கள் இருப்பது உணர்வுகளை அறிவதற்காகத்தான். ஆனால் அறிஞர் திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல்(கு.எண்.6.) வாழ்வதற்கு புலன் இன்பத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் இன்ப-துன்ப சாம்யமான ‘அளவும் முறையும்’ கடைபிடிப்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.

    சீடன்: அப்படியானால் இன்றைய உலகத்தின் சிக்கல்கள், குழப்பங்கள், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் அறிவிற்குத் தன் லட்சியப் பூர்த்தி கிடைக்காத நிலைதானா குருவே?

    குரு: ஆம். அந்த லட்சியத்தை மறந்து, அறியாமையில், தன்னை அறிய எழுந்த வேகம் புலன் உணர்வில் மட்டுமே செயல்படும்போது துன்பங்களின் எண்ணிக்கையும், அளவும் மிகுகின்றன.

    சீடன்:  ஆறாம் அறிவின் பயன் என்ன?

    குரு:  ஆறாம் அறிவாகிய பிரம்மம் தன்னைத் தானே உணர்ந்து கொள்வது ஆறாம் அறிவின் பயன்.

    சீடன்:  பரிணாமத்தின் நோக்கமும் ஆறாம் அறிவின் பயனும் ஒன்றா?

    குரு:  ஆம் ஒன்றுதான்.

    சீடன்:  பரிணாமம் பூர்த்தியாகி விட்டதா இப்போது?

    குரு:  இதற்கான பதிலை, தத்துவ ஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான இராதாகிருஷ்ணன் ‘Evolution is still incomplete’ என்று கூறுயிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    சீடன்: அப்படியானால் பரிணாமம் இன்னு பூர்த்தியாக வில்லை என்று சொல்கீறீர்களா சுவாமி?

    குரு: நீயே பதில் கூறலாமே.

    சீடன்: நீங்களே பதில் கூறுங்களேன் சுவாமி

    குரு: அமைதியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய பிரம்மம் இறுதியாக மனிதனில் முடிவடைகின்றது என்பதனை நீ அறிவாய் அல்லவா?

    சீடன்: ஆம். அறிவேன் சுவாமி.

    குரு: அப்படியானால் மனித குலம் பூர்வீக சொத்தான(hereditary wealth) அமைதியினை தற்போது அனுபவிக்கின்றதா?

    சீடன்: இல்லையே சுவாமி!

    குரு: பின்னர் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இன்று மனிதகுலம்?

    சீடன்: இன்பம் துன்பம் என்கின்ற சுழலில் (cycle of enjoyment and suffering)அல்லவா மாறி மாறி உழன்று கொண்டிருக்கின்றது.

    குரு: மனதின் மூன்றாவது இயக்க நிலைக்கு வருவதற்கு வழி தெரியாமல் அல்லவா தவிக்கின்றது மனித குலம்.

    சீடன்: மனதின் மூன்றாவது இயக்க நிலை என்பது என்ன?

    குரு: கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கிறாய். எனக்கு கேள்வி கேட்டால் பிடிக்கும். ஏன் தெரியுமா உனக்கு? கேள்வி எழுந்தால் மனிதன் சிந்திக்கிறான் என்று பொருள். மனிதன் சுயமாகச் சிந்திக்க வேண்டுமல்லவா? மனதின் மூன்றாவது இயக்க நிலை அமைதி. அமைதி நிலைக்கு வருவதற்கு வழி தெரியாமல் அல்லவா மனிதகுலம் தவித்துக் கொண்டிருக்கின்றது!

    சீடன்: அமைதி இழந்த தற்போதைய நிலை எப்போது மாறும் குருவே?

    குரு: நீ வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து இருக்கிறாயா?

    சீடன்: அவரை அறிவேன். கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நூல்களைப் படித்திருக்கிறேன்.

    குரு: அவரது எந்த எந்த நூல்களைப் படித்திருக்கிறாய்? உலக சமாதானம் என்கின்ற நூலைப் படித்திருக்கிறாயா?

    சீடன்: ஆம். உலக சமாதானம் என்கின்ற நூலைப் படித்திருக்கிறேன்.

    குரு: அப்படியானால் நீயே ‘அமைதி இழந்த தற்போதைய நிலை எப்போது மாறும்?’ என்கின்ற வினாவிற்கு பதில் கூறலாமே!

    சீடன்: வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள உலக சமாதானத் திட்டம் அமுலுக்கு வரும்போது மனிதகுலம் தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க முடியும் குருவே.

    குரு: நீ ஒரு சிந்தனையாளரே! பல கேள்விகளை உன்னுள் வைத்துள்ளாய். சில கேள்விகளுக்கான பதிலும் உன்னுள்ளே இருக்கின்றது. அதனை நீ அறியவில்லை. கேள்விகளைக் கேட்டு நீயே பதிலை அறிந்து கொள்ளும முயற்சியில் ஈடுபடு. சிந்திப்பவர்களுக்கு இயற்கையே ஆசான் என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள். வாழ்க வளமுடன்! உன் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை நிறைவு செய்து கொள்வோமா? நாளை சந்திப்போமா மகனே?

    சீடன்: ஆம் குருவே! நாளை  வருகிறேன் சுவாமி. வணக்கம் சுவாமி.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                     வளர்க அறிவுச் செல்வம்!!

    ——

    (குருவை  மறுநாளும் சந்திக்கின்றான் சீடன்.  அந்த நிகழ்வு பற்றி அடுத்த ஞாயிறன்று இணையதள சத்சங்கத்தில் அறிவோம். வாழ்க வளமுடன் அன்பர்களே!)

    Loading