இறை அருள் பெற…….

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

இறை அருள் பெற…….

FFC — 116

06-09-2015–ஞாயிறு

 

இறையே அறிவாக மனிதனிடம் உள்ளது. இறையையே மனிதன் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏன் துன்பத்துக்குள்ளாக வேண்டும்? மனிதனின் செயலில் விளைவாக வருவது இறை என்கின்ற நியதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறையே மனிதனிடம் அறிவாக இருந்தாலும், மனிதனுடையச் செயல்களுக்கேற்ப விளைவுகள் துன்பமாகக் கூட வரலாம். இறையே, முதல் மனுநீதிச் சோழன்.
அறிவிற்கு விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் விளைவைக் கணித்து அச்செயலைச் செய்ய வேண்டும். ஏற்கனவே அச்செயலைச் செய்து அதன் விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அனுபவித்திருக்கலாம். மீண்டும் அச்செயலை இப்போது செய்ய வேண்டிய சூழல் வருமானால், ஏற்கனவே அச்செயலைச் செய்து அனுபவித்த அனுபவம் கவனத்திற்கு வந்து அச்செயலை செய்வதா வேண்டாமா என்கின்ற முடிவை அந்த நொடியிலேயே அறிவு எடுக்க வேண்டும் (Quick insight of the mind). நுண்மாண் நுழைபுலன் (விரைந்துணர் அறிவாற்றல், தெளிவும் விரைவும் கூடிய தன்மை = perspicacity) வேண்டும். நுண்மாண் நுழைபுலன் மூன்று சொற்களை உள்ளடக்கியது.
1) நுண்: – நுண் என்றால் நுட்பம் அல்லது நுண்ணியது, கூர்மையானது என்று பொருள்.
2) மாண்: – மாண் என்றால் மாண்புடையது என்று பொருள். அதாவது நுண்மாண் என்பது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை எனலாம்.
3) நுழைபுலன்: – நுழைபுலன் என்றால் ஊடுருவி அறியும் திறன்.

dheaivappulavar

தவறு செய்வது, நாணத்தை(வெட்கத்தை) ஏற்படுத்த வேண்டும். திருவள்ளுவர் மனிதனுக்கு இருக்க வேண்டிய உடைமைகளை(சொத்து, உரிமையுடையது) வலியுறுத்துவதற்கு,

  • அன்புடைமை,
  • அடக்கம் உடைமை,
  • ஒழுக்கம் உடைமை,
  • பொறை உடைமை,
  • அறிவு உடைமை,
  • அருள் உடைமை,
  • ஊக்கம் உடைமை,
  • ஆள்வினை உடைமை,
  • பண்பு உடைமை,
  • நாண் உடைமை                

 ஆகிய பத்து அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார். மனிதனுக்கு இருக்க வேண்டிய மற்றவைகளைக் கூறிவிட்டு கடைசியாக நாணம் இருக்க வேண்டும் என்கிறார். அப்போது மனிதன் முழுமை அடைகிறான். எனவேதான் நாணமுடைமையை கடைசியாகக் கூறியிருக்கிறார். நாணமில்லை என்றால் குடும்பத்திலிருந்து சமுதாயம் வரைக் குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். நாணம் என்பது சான்றோர்களுக்கு அணிகலன் என்கிறார். ஆகவே, வெட்கப்படவேண்டியிருக்கச் செய்கின்ற செயல்களாகிய தவறுகளைச் செய்யக் கூடாது. அந்த சான்றோன்மையாகிய பெருந்தன்மை இருந்தால், அறிவு எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நுணுகி ஊடுருவி அறிந்து முடிவு எடுக்கும். இதற்கு நினைவாற்றல் மிக மிகத் தேவை.
ஆறாம் அறிவு கற்கும் திறனுடையது. எனவே ஆறாம் அறிவு தன்னுடைய எல்லாத் திறன்களையும் கற்க வேண்டும். வெறும் புலன்வழி வாழ்க்கையையே முக்கியமாகக் கருதி வாழ்ந்தால், அதாவது வெறும் அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே மனிதனின் எண்ணம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அறிவு தன்னுடைய முக்கியமான, தன்னிடம் மறைந்து இருக்கின்ற திறன்களைக் கற்க இயலாது.

பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவோடுபரிணாமக் கசடும் வந்து விட்டது. (கசடு என்றால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் கழிவு). பரிணாமக் கசடுகள் என்றால் என்ன என்று அடுத்த விருந்தில்(09-09-2015) சிந்திப்போம்.