March 2018

Monthly Archives

  • சிந்திக்கக் கவிகள் பயிற்சி – 2

    வாழ்க மனித அறிவு!                                             வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி – 2

    வாழ்க வளமுடன்!

    மகரிஷி அவர்கள் பாடுவதைக் கேட்போம்.  பிறகு சத்சங்கத்தைத் தொடங்குவோம்.

    20-03-2018-செவ்வாய்

    உ.ச.ஆ. 20-03-33

    வாழ்க வளமுடன்!

    vet        இன்றைய சத்சங்க நிகழ்வாக, சிந்தனைப்பயிற்சியில் ஒன்றான ‘சிந்திக்கக் கவிகள்’ பயிற்சியினை எடுத்துக் கொண்டுள்ளோம். ‘கவியின் ஆற்றல்’ பற்றி மகரிசி அவர்கள் அருளியுள்ள கவியினையே பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறோம். ஆற்றல் என்பது என்ன என்று யாவரும் அறிந்ததே! ஆற்றலில் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு மின்னாற்றல்(Electrical energy) இயந்திராற்றல் (Mechanical energy), வெப்ப ஆற்றல்(Heat energy) போன்றவை. கவியால் ஆற்றல் வருகின்றது என்றால் அது என்ன ஆற்றல்?

    பொதுவாக ஆற்றல் எனில் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய சக்தி, திறன்(capability, ability, capacity) என்று பொருள். மேலும் இயந்திரங்களை இயக்கக்கூடிய சக்தி(Motive power). இங்கே கவியின் ஆற்றல் என்பது என்ன? அதாவது கவியின் சக்தி என்பது என்ன? கவி வாசிப்போரின் சிந்தனைத் திறனை வளர்ப்பது, அதாவது

    ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி’

    என்று கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அறிவின் வளர்ச்சி பற்றிக் கூறியுள்ளதுபோல் அறிவை வளர்ப்பது. ஆகவே கவியின் ஆற்றல் மனிதனின் அறிவாற்றலை வளர்க்கும். அறிவு வறுமைகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றைக் களைந்து அறிவை முழுமை அடையச்செய்தால்தான் அறிவின் வளர்ச்சியைக் காணமுடியும் கவியின் ஆற்றல்.

    மேலும் கவிஞரின் சிந்தனைத்திறனை, உணர்வை, பல நாட்களில்/ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களை எளிதாக ஒரு சில மணித்துளிகளில் கவி வாசிப்பவர் அறிந்து பயன்பெற கவிகள் பேருதவியாக இருக்கின்றன. கவிகள் மனிதன் பண்பேற்றம் பெற இயல்பூக்க நியதினை பயன்படுத்திக் கொள்ளும். இனி சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள பாடலுக்குள் செல்வோம்.

    song1

     

    (ஓரிரு முறை பாடலை வாசிக்கவும்)

    song2

    பதினோறு வினாக்கள் உள்ளதே என்று மலைக்க வேண்டாம். இப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால், ஒரு சில நொடிகளிலேயே நம் மனதில் இத்தனை வினாக்களும் எழுந்து விடும். அந்த மனதுடன் கவியின் பொருளைக் காண்போமேயானால் கவியின் உட்பொருள் கவிஞர் எந்த உள்ளுணர்வுடன் கவியை அருளினாரோ அந்த உள்ளுணர்வும் கவி வாசிப்போரின் மனதிலும் எழும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம்/பயன் நிறை வேறும். கவிஞர் கவி அருளிய நோக்கம் நிறைவேறுவதுதானே தேவை! கவியை வெறும் புற மனதளவிலே மட்டும் தெரிந்து வைத்திருந்து, அதாவது ஞாபகத்தில் வைத்திருப்பதனாலேயே மட்டும் என்ன பயன் வந்துவிடப்போகின்றது?

    எதற்காக கவிஞர் தன் அனுபவ-கண்டுபிடிப்புகளை கவியாக்குகிறார்? ‘ஒருவர் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும்’ என்கின்ற பெருநோக்குடன்தானே, கவிஞர்களின் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கும் தெரிவித்து கவிஞர்கள் மகிழ்வதோடு மட்டுமன்றி, சமுதாயத்தையும் மகிழச்செய்து, சமுதாயம் பண்பேற்றத்தில் வெற்றி காண்பதற்குத் தானே கவிகள் பிறக்கின்றன. மேலே கூறிய புதிய யுக்தியுடன்/அணுகுமுறையுடன் கவியின் உட்பொருளை அறியாததால்தான் மகரிசி அவர்கள் கூறுவதுபோல்அறநூல்கள் கூறியிருக்கின்ற நெறிகள் சாதனைக்கு வராமல் போய்விட்டன இதுவரை(ஞ.க.பாடல்எண்-533). அந்த நிலை 1911 ற்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது என்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

    இதுபோன்ற புதிய யுக்தியுடன்/அணுகுமுறையடன் கூடிய வினாக்கள் எல்லா அருளாளர்கள் அருளிய கவிகளுக்கும் பொருந்தும். இருப்பினும் மகரிசி அவர்களின் சிந்தனாப்பள்ளியில்(school of thoughts) அணுக்கச் சீடராக நாம் இருந்து வருவதனால், அப்பயனை முழுவதுமாக அடைவதற்கு, மகரிசி அவர்கள் அருளியுள்ள 1854 கவிகளையும் இந்த அணுகுமுறையோடு/யுக்தியோடு அணுகி பயன் பெற விரும்பப்படுகின்றது.

    இப்போது பாடலின் பொருளை அறிந்து கொண்டு அதன் உட்பொருளை விரிவாகக் காண்போம். வாழ்க வளமுடன்!

    பொருள்: பாடல்கள் படிப்பதனால் பகுத்துணர்வு தோன்றும். மூடர்கள் பேரறிஞர்களாவர். படிப்பவர்களின் செயல் திறமை கூடும். ஆற்றலுள்ள கவிதைகள் உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

    உட்பொருள்:
    இருளைப் போக்குகின்ற கதிரவன் போல் மக்களின் துன்பத்தைப் போக்குவது பாடல்கள். அப்பாடல்கள் மனித வாழ்க்கையை மனம்போன போக்கில் செல்லவிடாது மனித சமுதாயத்திற்கும் உலக உயிர்களின் உய்விற்கும் வழிகாட்டும்.

    பாடல் படிக்கும் பழக்கம்:
    இன்று மக்கள் அறியாமை என்ற மயக்கத்தில் ஆழ்ந்து துயருறுகிறார்கள். வேதாத்திரியப் பாடல்களைப் படிக்கும் பழக்கமுடையவர்கள் இயற்கையமைப்பு, மனித இனவரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப்போக்கு, தனது அறிவுநிலை, விஞ்ஞானம், கலைகள் இவைகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து தெளிவு காண்பர். மனிதனை மனிதன் அறிந்தும், உயிர்களின் நேயம் பேணும் மனிதனாகவும் வாழும் சூழல் உருவாகும். பகுத்துணர்வும் ஆராய்ந்து செயலாற்றும் பண்பும் பாடல் படிப்பவர்க்கு ஏற்படும்.

    பாடல் படிக்கும் பழக்கம் ஒருவரின் நற்சிந்தனையைத் தூண்டும். சிந்திக்கச் சிந்திக்கப் பழக்க வழக்கத்தின் நன்மை தீமைகள் அறிவுப் பரப்பில் தெளிவுறும். சிந்தனை வளமும் நலமும் சீர்மை பெறும். சொல், செயல், எண்ணங்களை மனிதன் பகுத்துணர்ந்து செயலாற்ற முடியும்.

    செய்தி படிப்பதற்கும் கவிதை படிப்பதற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. உள்ளதை அப்படியே எழுதுவது செய்தி. கவிஞன் தான் உணர்ந்ததைச் சமூகம் நோக்கித் தருவது கவிதை. செய்தியை மீண்டும் மீண்டும் படிக்கும் போது சலிப்பு தோன்றும். கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டும். கவிஞனின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும் அதன் உட்பொருள் காணவும் திரும்பத் திரும்பக் கவிதையைப் பன்முறை படிக்க வேண்டும்.

    திருக்குறள் ஒன்றே முக்கால் வரி கவிதை. அதனைப் படிக்கப் படிக்கப் புதுப்புதுப் பொருள் புலப்படும். அது காலந் தோறும் நலம் பேணுகின்றது.

    இன்று வரை திருக்குறள் காணும் உரைவளம் இதற்கோர் உரைகல். திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிசியும் திருக்குறளுக்கு உட்பொருள் கண்டவர்தானே! வேதாத்திரியக் கவிதைகளைப் படிக்கப் படிக்க அவரின் ஆழ்மன ஓட்டம் காணமுடிவதால் அது படிப்பவர் சிந்தனைக்கு ஒளிதரும் சுடராகின்றது.

    வேதாத்திரி மகரிசி அவர்களின் ஆழ்மன ஓட்டமானது தான் பெற்ற இறை உணர்வைப் பாமரமக்களும் பெற்று அவர் யார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள அறிவொளி பாய்ச்சுகிறது.

    ஒருவர் தன்னை உணருவதற்கும், அகத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து பயணிப்பதற்கும், இறையுணர்வு பெறுவதற்கும் வேதாத்திரியப் பாடல்களே வித்து.

    பகுத்துணர்வு பெறுதல்:

    இறையுணர்வு பெறும்போது மனிதனிடம் பகுத்துணர்வு தோன்றும். பகுத்துணர்வு தொகுத்துணர்வும் பண்பாட்டை உயர்த்தும். அதுவே கருமயோக வழிகாட்டியாகும்.
    தான்பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்பது வேதாத்திரியக் கோட்பாடு. இக்கோட்பாடே “வாழ்கவளமுடன்” என்னும் வாழ்த்துக் கோட்பாடாக மலர்ந்து வையம் பேணுகிறது.
    முன்செய்த தவறுகளின் விளைவுகள், தற்பொழுது செய்த செயல்களின் பழக்கப் பதிவுகள் இவ்விரண்டினாலும் ஒருவர் பெற்றுள்ள விளைவின் மூலம் மனிதனின் இன்ப துன்ப வாழ்க்கை அமைகிறது. சிக்கலிலிருந்து விடுபட முயற்சியும் விழிப்புநிலையும், பழக்கத்தை மாற்றி விளக்கம் பெற்று வாழும் துணிவும் மகரிசி அவர்களின் கவிதைகளில் மிகுதியாகக் காணமுடிகின்றன.

    முக்கால ஞானம்:
    கடந்தகால அனுபவங்கள், தற்காலச் சூழ்நிலைகள், எதிர்கால விளைவுகள் மூன்றையும் இணைத்து அறியும் திறனே முக்கால ஞானம். இஞ்ஞானத்தால் ஒருவர் இயற்றும் திட்டங்களும் செயல்களும், போதனைகளும் சிறந்தவையாக அமையும்.

    நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவையற்று.– குறள் 407.

    நுணுகி நுணுகி ஆராய்ந்து ஊடுருவி கண்ட தெளிவே நுண்மாண் நுழைபுலமாகும். இது முக்கால ஞானத்தால் தோன்றும்.

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.– குறள் 373.
    எனக்கூறிய வள்ளுவர்,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு.– குறள் 423.
    என்பார்.

    மெய்ப்பொருள் என்பது உண்மையறிவு. மெய்ப்பொருளை அடைய தவமும் தற்சோதனையும் வழிப்படுத்தும். இவை உள்ளதை உணர்ந்து அல்லதை விடுக்கும், அறிவினை நல்கும். அறிவுத் தேர்ச்சியில் ஒருவர் பெற்றதை, அறிந்ததை, உணர்ந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் எண்ணம் பெருகும்.

    மூடர்களும் பேரறிஞர்களாவர்:

    அறநெறியும் இறையுணர்வும் மக்கள் பெறவேண்டும் என்னும் நன்னோக்கில் கவிகளைத் தத்துவமாகவோ வாய்மொழிப் பாடல்களாகவோ மட்டுமின்றி மக்களின் ஆன்மபசிக்கு உணவாகவும் கர்மவினைகளுக்கு மருந்தாகவும் தந்துள்ளது வேதாத்திரியம். மக்கட் சமுதாயம் அனைத்துக்கும் தேவையான அன்பு, தொண்டு என்னும் பண்புகளைத் தாங்கிக் கர்மயோகக் கொள்கையர்களாக மக்கள் வாழ்தல் வேண்டும். மகரிசி அவர்களின் விருப்பமே மூடர்களைக்கூடப் பேரறிஞர்களாக்கும் வரியாக மலர்ந்துள்ளது.

    நிலைத்தகவி:
    “அறம் செய விரும்பு” – ஆத்திசூடி
    “வாழ்தல் வேண்டிப்பொய்கூறேன் மெய் கூறுவல்” – புறநானூறு 139.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தரவாரா” – புறநானூறு 192.

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” – குறள் 50.

    போன்ற கவிகள் உயிரோட்டம் மிக்கன. வேதாத்திரியக்கவிகளோ உயிர்ப்பானவை. அவை உயிருக்கு உரமூட்டி இறையுணர்வு அறிய ஊன்றுகோல்களாகின்றன. அறவுணர்வோடு வாழும் பக்குவத்தையும் பண்பாட்டையும் நிலைப்படுத்துகின்றன. பாமரனையும் மனவளக்கலை பயிற்சியால், கல்வியால் பண்டிதனாக்குகின்றன. தன்னையறிந்தால் தனக்கொரு கேடில்லை என்னும் தத்துவத்தின் விளக்கமே வேதாத்திரியக் கவிமொழி.

    சுயசோதனை வினாக்கள்:
    (தன்னையே சோதித்துக் கொள்ளும் வினாக்கள்)

    1. செய்திக்கும் கவிதைக்கும் உள்ளவேறுபாடு யாது?
    2. உண்மை அறிவு என்பது என்ன?
    3. முக்கால ஞானம் என்பது என்ன?
    4. பகுத்துணர்வு என்றால் என்ன?
    5. செயலாற்றும் திறமை என்று எதனைக் குறிப்பிடுகின்றார் மகிரிசி அவர்கள்?
    6. ‘ஈடற்ற ஆற்றல்’ என்றால் என்ன?
    7. அகத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து பயணித்தல் என்றால் என்ன?

         அடுத்த செவ்வாய் கிழமை(27-03-2018) வேறொரு கவியினை சிந்திக்கக் கவிகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!

  • அறிவிப்பு-14-03-2018-புதன்

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிப்பு

    14-03-2018-புதன்

    அன்பர்களே!
    வாழ்க வளமுடன்!

    இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

    தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

  • FFC-283-மனவளம் என்றால் என்ன?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

    மனவளம் என்றால் என்ன?

    FFC-283

    14-03-2018-புதன்.

    உ.ச.ஆ.14-03-33.

    வாழ்க வளமுடன்!

    வளம் என்பது என்ன என்று தெரியும். இருப்பினும் வளம் என்பதன் பொருளை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    வளம் என்றால்

    • நிறைவு,
    • செழுமை,
    • மேம்பட்ட நிலை,
    • வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ள தன்மை என்பதாகும்.

    வளம் என்கின்ற சொல்லுக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்களைக்கொள்ளமுடியும். இத்தகைய ‘வளம்’ என்கின்ற சொல் வேறு சொல்லுடன் சேரும் போது என்ன பொருள் வருகின்றது என அறிவோம். உதாரணத்திற்கு ‘வளம்’ என்கின்ற சொல் ‘மண்’ என்கின்ற சொல்லுடன் சேரும்போது என்ன பொருள் வரும்?

    அதாவது ‘மண்வளம்’ என்கின்ற சொல்லிற்கு என்ன பொருள்? பயிரிடப்படுகின்ற பயிருக்கு மண் உகந்ததாக இருந்து நல்ல விளைச்சலைக் கொடுத்தால், அம்மண் வளமாக இருக்கின்றது என்போம்.

    மண்வளமாக இருந்தால் அதில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். பயிருக்கு ஏற்றதாக உள்ளதா என விவசாயத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பயிருக்கு மண் ஏற்றதாக இல்லை என்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டு என்ன குறைபாடு உள்ளது என்று எடுத்துரைத்து பயிருக்கு ஏற்றவாறு மண்வளத்தை அதிகரிக்க என்ன உரம் இட வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றது விவசாயத்துறை. இல்லையெனில் பயிர் விளைச்சல் குறைவாகலாம். அல்லது பயிர் விளைச்சலில் குறைகள் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் இது சாத்தியமில்லை.

    வளம் என்றால் என்ன என்று பார்த்தோம். தலைப்பில் ‘மனவளம்’ என்றிருக்கின்றது. மனதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மனம் உருவமற்றது. ஆனால் இல்லை என்று கூறமுடியாது. மனம் என்பது என்ன என்று தெரிந்தால் தான்,

    • மனம் வளமாக உள்ளதா, இல்லையா,
    • மனம் வளமில்லாமல் இருந்தால் என்ன தீமை மனிதனுக்கு,
    • மனம் வளமில்லாமல் இருந்தால் மனதை எவ்வாறு வளப்படுத்துவது,
    • மனதை வளப்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்,
    • மனதை வளப்படுத்தியே ஆக வேண்டுமா,
    • மண்ணை பரிசோதித்து வளமில்லாது இருந்தால், அதற்கு ஏற்ற பரிந்துரைகள் விவசாயத்துறை வல்லுனர்கள் அளிப்பதுபோன்று
    • மனவளம் இல்லாமல் இருந்தால் அதனை யார் பரிசோதித்து பரிந்துரைகள் வழங்குவது போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காணமுடியும்.

    FFC-264-5-11-17-Maharishi takin claass

    மனம் என்பது பற்றி அறிவுப்பூர்வமாக திருவேதாத்திரியம் தெரிவிக்கின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் அருளியுள்ளார். ஒரு முறை ஆங்கிலத்தில் திருவான்மீயூரில் சிறப்பு பயிற்சி நடத்தும் போது மகரிஷி அவர்கள் கூறியதை நினைவிற்கொள்வோம். தன்முனைப்பின் அறிவியலை (Science of Ego) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்கள்,

    I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind” என்றார்.

    நம் குருநாதர் சொல்வது உண்மைதானே! அத்தகைய பெருமைக்குரியவரை நாம் குருநாதராக அடைந்தது நாம் செய்த பாக்கியமன்றோ?!. காரணம், துன்பங்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பிற்கான(Ego) அறிவியலைத் தந்து நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க தன்முனைப்பைக்களைய தக்க அறிவுரைகளும் பயிற்சிகளும் தந்துள்ளாரே மகரிஷி அவர்கள்.

    மனம் என்பது என்ன என்று மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

    • உயிரின் படர்க்கை நிலையே மனம்.
    • மனதின் மறுமுனை தெய்வம். (The other end of mind is God.)
    • மனம் என்பது காந்த அலை.

    மேலே கூறியுள்ளவை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மற்றொரு அறிஞர் கூறுவதனைக் கவனிப்போம்.

    Untitled

    இக்கூற்றில் அறிஞரின்  ஆதங்கம் தெரிகின்றது. மனதைப் பற்றி புதிராக உள்ளது. இக்கூற்றிலிருந்து எது மனமாக உள்ளது என அறிய முடிகின்றதா? மனவளக்கலைஞர்களால் அறிய முடிகின்றது. அறிவதுமட்டுமல்லாமல் புதிரும் விடுவிக்ப்படுகின்றது. என்ன அறிய முடிகின்றது? மனவளக்கலைஞர்கள் மனதை பற்றி அறிந்தவர்கள் என்பதால் எது மனமாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. ஆகவே புதிரும் விடுவிக்கப்படுகின்றது.

    ‘I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind’ என்று நம்முடைய குருநாதர் கூறியதிலிருந்து அவரின் திறமையை, சிறப்பை அறிந்து மகிழ முடிகின்றது. அவரது மாணவர்களுக்கும் அது பொருந்துவதாக அமைகின்றதல்லவா?

    எவ்வாறு?

    ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பதுபோல் நாம் அவருடைய பூரண, முழுமனது கொண்ட மாணவர்களாக (implicit obedient students) இருப்பதால் நாமும் அவரைப்போன்றே மனதைப் பற்றி அறிந்துகொண்டது முதலில் பெருமையும், அதனோடு இணைந்துள்ள பயனையும் தருகின்றதல்லவா? புதிர் எவ்வாறு விடுவிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

    புதிர் விடுவிக்கப்படுகின்றது:

    ‘இறையே மனமாக இருந்தாலும், மனம் இறைவனாக இல்லையே!’ என்பதுதான் புதிர் அவிழ்ந்த பிறகு வெளிப்படையாகவே தெரிகின்றது மனதிற்கான வரையறை. இந்நிலைக்கான காரணத்தையும் மனவளக்கலைஞர்கள் அறிவரே! என்ன காரணம்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட பரிணாமக் கசடான(Evolutionary Effluent) விலங்கினப்பண்பே, இறையே மனமாக இருந்தும் மனம் இறையாக இல்லாமல் செயல்படுவதற்குக் காரணம். இதற்கு வழியே இல்லையா? ஏன் இல்லை? வழி இருந்ததால்தான் இன்று நம் சத்சங்கத்தில் இது பற்றி சிந்திக்கிறோம். 1911 க்குப் பிறகு வழி பிறந்துவிட்டது. இதற்கு வழி மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலையேயாகும்.

    வேறொரு அறிஞர் கூறுவது:-

    Untitled-2

    வளம் என்கின்ற சொல்லின் பொருளுக்கேற்ப வளமுடைய மனம் எவ்வாறிருக்க வேண்டும்? மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே அறமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    ஆகவே மனம்,

    நிறைவுடையதாகவும், 

    மேம்பட்ட நிலையிலும், 

    வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

    மனம்போல் வாழ்வு எனப்படுகின்றது, மண் வளமாக இருந்தால் எப்படி பயிர் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ, அது போன்று மனம் வளமாக இருந்தால் வாழ்வும் வளமுடையதாகவும் இருக்கும். மனவளத்திற்கு என்ன இலக்கணம்? மனம் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். தூய்மையான மனம் எவ்வாறிருக்க வேண்டும்?

    • எண்ணமே வாழ்க்கையின் சிற்பி என்பதால் நல்ல எண்ணங்களையே எண்ணுவதாக இருத்தல் வேண்டும்.
    • பேராசை பெரும் நஷ்டம் என்பதால் ஆசையை சீரமைக்க வேண்டும்.
    • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் வளமுடைய மனம் சினத்தைத் தவிர்க்க
    • வேண்டும்.
    • வளமுடைய மனதில் கவலை இருக்கக் கூடாது.
    • ஆறாம் அறிவுடைய மனமாக இருப்பதால் தான் யார் என்கின்ற அறிவு இருக்க வேண்டும்.

    இந்த ஐந்தும் இல்லாத மனம் வளமுடையது என்று சொல்ல முடியுமா? முடியாது. இதனை ஆராய்ந்த மகரிஷி அவர்கள் மனதை வளப்படுத்த உளப்பயிற்சியினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

    அப்பயிற்சியே தவமும், தற்சோதனையும் ஆகும்.

    கூடா ஒழுக்கம் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் அருளியுள்ள

    மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம்,
    பழித்தது ஒழித்து விடின்.”

    என்கின்ற கடைசிக் குறளையும்,
    அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் உள்ள

    மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்;அனைத்துஅறன்
    ஆகுல நீல பிற.”

    என்கின்ற குறளையும் மனதில் கொண்டு மனவளக்கலை பயில்வோம். மனதை வளமாக்கி, இதமாக வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.

    வாழ்க மனவளக்கலை!   வளர்க மனவளக்கலை!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                       வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!


    அறிவிப்பு

                                          14-03-2018-புதன்

    அன்பர்களே!

         வாழ்க வளமுடன்!

    இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும்.

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன் படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

    தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்!

    www.posperspiritually.com

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!