சிந்திக்க கவிகள்

 • 2018 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்து (FFC- 277)

  Greetings-2018

    

   


   

  வாழ்க மனித அறிவு                                                                                                                             வளர்க மனித அறிவு

   

  வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/?

  FFC- 277                                             

                                                                                                                                                                                             01-01-2018-திங்கள்

   உலக சமய ஆண்டு 01-01-33

  உலக அமைதி வேள்வி

  வாழ்க வளமுடன்!

          ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு தினமும், உலக அமைதி வேள்வி தினமாகக் கொண்டாடப்படுவதை அறிவீர்கள்.  எனவே இப்போது இணையதள சத்சங்கத்திலும்  உலக அமைதி வேள்வியினை நடத்திவிட்டு இன்றைய அறிவிற்கு விருந்தினை அருந்துவோம். மனதிற்குள்ளாகவே உலக உருண்டையை நினைத்து வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் என்று ஒன்பது முறை கூறுவோம்.  உலக அமைதி நிறைவு செய்து, மேலும் சிந்தனையைத் தொடர்வோம்.

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

  maharishi lighting a new year lamp

   

  வாழ்க வளமுடன்!

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.  இந்தப் புத்தாண்டு இறைஉணர்வு ஆண்டாக மலர வேண்டும் என மகரிஷி அவர்கள் சூட்சுமமாக இருந்து கொண்டு  அனுப்பியுள்ள புத்தாண்டு செய்தியில் வாழ்த்தியுள்ளதனை சற்று முன் வாசித்து ஏற்றுக் கொண்டோம். எனவே இந்த ஆண்டு இறைஉணர்வு ஆண்டாக மலர சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். இந்த இறைஉணர்வு ஆண்டின்(2018) முதல் தினமான இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டும் முகத்தான் குழுமி உள்ளோம்.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்ட தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பதாகும்.  இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அன்பர்களே!

  மகரிஷியின் கும்பகோணம் நிகழ்ச்சி:

      பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கினில் புகுந்து அழுந்தி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதில் உள்ள அறிவியலை உணர்த்திய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கா  புகழ் தேவை?!  அல்ல. அவர்  வகுத்த  உயர்புகழ் இலக்கணத்திற்கேற்ப அவரே வாழ்ந்தவராயிற்றே! அவரா புகழை எதிர்பார்ப்பார்?  அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவருக்கும் நமக்கும் ஏற்பட்ட புனித உறவில் நடந்த  ஒரு நிகழ்ச்சியினை நினைவு கொள்வோம்.  கும்பகோணத்தில் மூன்று நாட்கள் சிறப்புக் கூட்டம் நடத்தினார் மகரிஷி அவர்கள். அப்போது நிறைவு நாளன்று கூறியதை நினைவு கூர்வோம். ஆன்மிகத் துறையில் சீடர்கள் குருவிற்கு காணிக்கைக் கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறாக மகரிஷி அவர்கள் குருகாணிக்கை ஏதும் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக அவர் சீடர்களை நோக்கி  “குருகாணிக்கையாக உங்களிடம் உள்ள  அறுகுணங்களை இன்றிலிருந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.    அது இப்போதும் பொருந்தும் அல்லவா?

  இயற்கை/இறை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? 

      மூத்தோர் சொல் வார்த்தை  அமிர்தம் என அவ்வைத்தாய் மொழிந்துள்ளதற்கேற்ப, மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கேட்டு, ஆராய்ந்த பிறகு திருத்த-மாற்றத்திற்கு(information, confirmation, transformation) முயன்று வெற்றி பெற வேண்டும் என்பதே மகரிஷி அவர்கள் எதிர்பார்ப்பது.  அவர்மட்டுமல்ல. இயற்கையே/இறையே அதைத்தான் எதிர்பார்த்து இருபதாம் நூற்றாண்டில் திருவேதாத்திரியத்தை அருளியுள்ளது.

  வான் காந்தத்தில் பரவவிட குழுமியிருக்கிறோம்:

      வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டுகிறோம்  என்று சொல்வதைவிட, வேதாத்திரியத்தின்  அருமை, பெருமை, அரும்பயன்களை உணர்ந்து கொண்டு அனுபவித்து வருவதற்கு மனிதஅறிவு அவரை வணங்கி கூறுகின்ற நன்றி வார்த்தைகளே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பது.அப்படியானால்  நாம் செலுத்தும் புகழாரம்  திருவேதாத்திரியத்திற்கே.  திருவேதாத்திரியத்தின் அருமை, பெருமைகள் சக நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த சமுதாயத்தின் 1520 கோடி(760×2=1520) காதுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற அடிப்படை நோக்கத்தில் திருவேதாத்திரியத்திற்கு புகழார எண்ண அலைகளை  வான்காந்தக் களத்தில் பரவவிட  குழுமி இருக்கிறோம். ‘Fraction demands Totality supplies’ என்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம்  நடைபெற்று வருவதால் அதனை நினைவில் கொண்டு உலகம் முழுவதும் திருவேதாத்திரியம் பரவ வேண்டும் என்கின்ற எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரவ விடுவோம்.  

  ஆனந்தத்தைத் தருகின்றது:

      எது ஆனந்தத்தைத் தருகின்றது?   ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று சொல்லக் கேட்பதற்கே மனதிற்கு  ஆனந்தத்தைத் தருகின்றது. எவ்வாறு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஓர் அகராதியாகத் திகழ்கின்றார் என்று ஆராய்ந்து அறியும்போது, நாம் அடைந்திருக்கும் மற்றும் இன்னும் அடைய இருக்கும் பயனை எண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது. எப்படி? பயன்கள் அடைகிறோம்; பயன்கள் அடைவதில் மகிழ்ச்சிதானே இருக்க முடியும்?

        என்ன பயன்கள்? ‘மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது’ என்று வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. எவ்வாறு எல்லையில்லா மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் திருவேதாத்திரியம் காரணமாக உள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சி மற்றும் பெருமை ஆகிய   சொற்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இருப்பினும் மகிழ்ச்சியும், பெருமையும் என்ன என்பதனை ஆழ்ந்து  சிந்தித்து அறிந்து கொள்வோம்.

  மகிழ்ச்சி என்பது என்ன?

       அனைவரும் அறிந்ததே!  மகிழ்ச்சி என்றால் இன்பம், உவகை, சந்தோஷம் என்று பொருள்.

  இன்பம் எப்போது ஏற்படும்?

       விரும்புகின்ற அல்லது மனதிற்கு நிறைவு தருகின்ற அனுபவத்தினால் மனதிற்கு ஏற்படுகின்ற இதமான உணர்வே இன்பம் என்பதாகும்.

       மேலும் மகிழ்ச்சி என்பது பணிவுடன் நன்றியைத் தெரிவிக்கும் போது கூறுகின்ற சொல் ஆகும்.  உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் கொள்வோம்.

  நன்றி தெரிவித்தல்:

       நூல் வெளியீட்டு விழா நடக்கின்றது. ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பதிப்பகத்தார்.அப்போது பதிப்பகத்தார், ‘தங்கள் நூலை வெளியிடுவதில்  நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்’ என்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? இங்கே ‘மகிழ்ச்சி’ என்கின்ற சொல், பணிவுடன் நன்றியினை தெரிவிக்கப் பயன்படுகின்றது.

     தான்  எழுதிய  நூலை பதிப்பதற்கு இசைவு தந்தமையால், அந்த சிறந்த நூலை வெளியிடுவதில் தங்களுக்கு ஏற்படவிட இருக்கின்ற  உயர்வு கருதி, பதிப்பகத்தார் தங்களது உளமார்ந்த நன்றியினை  பணிவோடு தெரிவிப்பதற்கு,  ‘பெரும் மகிழ்ச்சி’ அடைகிறோம்’ என்று கூறும்போது மகிழ்ச்சி என்கின்ற சொல் பயன்படுகின்றது.

  நன்றி உணர்வே ஆகும்:

      ஏன் நன்றி உணர்வாகின்றது?  மாதா, பிதா செய்த புண்ணியத்தால், ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பதற்கேற்ப குருவை காண்பித்துக் கொடுக்கும் நிகழ்வே மறைந்து விட்ட  சூழலில் பிறந்த நாம்  வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து அவரை ஆழ்மனதுடன்  குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்த  இயற்கைக்கும்/இறைக்கும் தெரிவிக்கும் நன்றி உணர்வே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பது. அடுத்ததாக பெருமை என்று கூறுவதற்கானக் காரணம் என்ன?

  பெருமை என்றால் என்ன?    

   பெருமை என்பதும்  மன உணர்வினை வெளிப்படுத்துகின்ற சொல்.

  உயர்ந்த நிலையினை அல்லது தகுதியினை அடைய இருக்கும்போதோ

  அல்லது அடைந்தபோதோ,

  அல்லது அதுபோன்று  வெற்றியினை அடைய இருக்கும்போதா

  அல்லது அடைந்தபோதோ,

  மனம் அடையும் இதமான உணர்வினை அனுபவிப்பதோ அல்லது நமக்கு நாமே தெரிவித்துக்கொள்வதோ   பெருமை எனக்கொள்ளப்படுகின்றது.

  அவ்வைத்தாயும் அறிஞர் திருவள்ளுவரும் மொழிவது என்ன?

  அவ்வைத்தாய்

  சான்றோர் இனத்திரு,                    (ஆத்திச்சூடி-44)

  சேரிடம் அறிந்து சேர்,                     (.. ” ….    49)

  செய்வனத்திருந்தச் செய்           ( …  ” …   50)

  நேர்பட ஒழுகு                                        ( …  ” …   72)

  புகழ்ந்தாரைப் போற்றி வாழ்   ( …  ” …  80)

  பெரியாரைத் துணைக்கொள் ( …  ” …  82)

  என மக்களுக்கு அறிவுரைக் கூறுகின்றாள்.

       திருவள்ளுவரோ ‘பெரியாரைத்துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தையே ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். இவ்வதிகாரம் அரசனுக்காக அருளியதுபோல் தோன்றினாலும் இது அனைவருக்குமே பொருந்தும்.  எப்படி?  அரசன் நாட்டை ஆள்கின்றவன்.  ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது.  வருங்கால வலிமையுள்ள சமுதாயத் தூண்களை(pillars of Society) உருவாக்குகின்ற பொறுப்பில், குடும்பத்தை நல்முறையில் நிர்வாகம் செய்ய கணவன், மனைவி தலைவன், தலைவியாக இருக்கின்றனர்.  எனவே அரசனுக்கு கூறும் அறிவுரை எல்லோருக்குமே அந்தந்த நிலையில் பொருந்தும்.

  ஏன் சான்றோர்களைத் துணைக் கொள்ள வேண்டும்?

         விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்துள்ள மனித இனம்  மனிதப்பண்பில் ஏற்றம் பெறுவது இன்ப வாழ்விற்கு நிச்சயமாக அவசியம். ஆகவே பண்பேற்றத்திற்கு  சான்றோர்களின் துணை அவசியம்.  எவ்வாறு சான்றோர்களின்  துணை பண்பேற்றத்திற்கு உதவுகின்றது என அறிந்துகொள்வோம்.  இயல்பூக்க நியதி அங்கும் செயல்படுகின்றது. அதாவது இயல்பூக்க நியதி கூறுவது யாதெனில்,  ‘எந்த  ஒரு பொருளை, எந்த ஒரு செயலை, எந்த ஒரு குணத்தை, எந்த ஒரு உயிரையும் அடிக்கடி ஒருவர் நினைந்து வர, வர  அப்பொருளின் தன்மையாக அவரது  ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்ற பெருமையை அடையச்செய்யும் என்பதே.  அதேபோன்று அறிவினரைச் சேர்ந்திருப்பதும் இன்பம் என்றும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது அதனைவிட இன்பம் என்றும் அவ்வைத்தாய் கூறியுள்ளதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.  ஒருவருக்கு பெருமை உணர்வு எப்போது ஏற்படும்?  சற்று முன்னர் ‘பெருமை’ என்கின்ற சொல்லுக்கான பொருள் கண்டோம்.  ஒருவர் உயர்ந்த நிலையினை, தகுதியினை அடைய இருக்கும் போது, அது இன்பமாகவும், அது பெருமைபடக்கூடிய உணர்வாகவும் அல்லவா இருக்கும்?  அதற்கேற்ப இன்பம்  ஏற்படும்.  ஆகவே .சான்றோர்களின்  உயர்ந்த நிலையை அறியும் போது, மனம் தனக்குள் பெருமை கொள்வது இயல்பு (தற்பெருமை கொள்வது தன்முனைப்பு போன்று ஆகாது இங்கு).  சார்ந்திருக்கின்ற சான்றோரின் உயர்ந்த நிலையை நினைக்க நினைக்க மனதிற்கு ஏற்படும் இதமான உணர்வும் பெருமைதான்.

  இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது உலக மக்கள் உய்ய மனவளக்கலை: 

  கடந்தது கடந்து போகட்டும்.  இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது,  

  இப்பூவுலக மக்கள் உய்வதற்கான நிரந்தர தீர்விற்காக(உலக சமாதானம்), திருவேதாத்திரியத்தை அருளுவதற்கு,

  இயற்கை/இறை அன்று(இருபதாம் நூற்றாண்டில்) வாழ்ந்த ஆன்மாக்களில்  ஒரு ஆன்மாவைத்  தேர்ந்தெடுத்த, பெருமைக்குரிய உத்தமர்  ஒருவரான

  வேதாத்திரியாரை குருநாதராக  அடைந்திருப்பதால்,

  ஏற்படுகின்ற நிறைவால் மனம் வளம் அடைந்து கொண்டு, முழுமையை நோக்கி அறிவு பயணித்துக்கொண்டிருப்பது   பெருமை கொள்ளக்கூடிய  நிகழ்வுதானே?!

  எனவேதான், நாம் அடைந்து கொண்டிருக்கும், இன்னும் முழுமையாக அடைய இருக்கின்ற பயன்களை எண்ணி, அவர் எவ்வாறு பயனடைய உதவியாக இருக்கின்றார் என்பதனை நன்றியோடு தெரிவிக்கும் முகத்தான்  ‘வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதியாகத் திகழ்கின்றார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:

       எதனால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை?  எல்லையில்லா பெருவெளியை நோக்கிய பயணத்தில் அடையும் மகிழ்ச்சியும் எல்லையில்லாமல் இருக்கும் என்பது உண்மைதானே? பேரறிவே ஆறாம் அறிவாகியும், பல லட்சம் ஆண்டுகளாகத் திக்குத் தெரியாத இருண்ட காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த நிலையில்  அறிவொளியைத் தந்து வழிகாட்டுகின்றது  திருவேதாத்திரியம்.

         எனவே பேரறிவு இதுவரை தனது பயணத்தில்/தன்மாற்றத்தில் ஆறாம் அறிவாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகியும், தெரிந்து கொள்ளாதிருந்த,  ஆனால் ‘அறிவின் இலக்கணத்திற்கேற்ப’ அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை அறிந்து  கொள்வதால் ஏற்படும்  பேரின்ப வார்த்தைகளே  ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற புகழாரமாக அமைகின்றன.

  மகரிஷி அவர்களை எதற்காக  அகராதி என்று கூறி மகிழ்கிறோம்?  

      அகராதி என்றால் என்ன என்றும், அகராதியின் பயன் என்ன என்றும் தெரியும். எனவே அதே ஒப்புவமையில் (analogy) அகராதியால் பெறும் பயன்களைப்போன்றே,  ஆறாம் அறிவின் பயன்களை திருவேதாத்திரியத்தால் நாம் பெறுவதால்  திருவேதாத்திரியத்தை இயற்றிய மகரிஷி அவர்களை அகராதி என்று கூறி மகிழ்கிறோம்.  அகராதியின் பயன்களை நினைவு கூர்ந்தால் மகரிஷி அவர்களை அகராதி என்று கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது விளங்கிவிடும்.

  அறிவுத்தேனீக்கள்

  அகராதி என்பது என்ன?

      அகராதி என்பது ஒரு நூல். சொற்களை அகர வரிசையில் அமைத்துப் பொருள் முதலியவற்றைத்  தருகின்ற நூல்.  ஒவ்வொரு மொழிக்கும் அகராதி உண்டு. உதாரணத்திற்கு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு அகராதிகள் இருக்கின்றன.  தமிழ்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் என்று பலவகை அகராதிகள் இருக்கின்றன.  அகராதி எதற்கு, எப்போது பயன்படுகின்றது? ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையெனில் அகராதியை நாடுகின்றோம். மேலும் பொருள் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அச்சொல்லைப்பற்றி இலக்கணமும் அறியப்படுகின்றது. அச்சொல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கின்ற புரிதலும் ஏற்படுகின்றது. ஆகவே  மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதற்கு (vocabulary) அகராதியை நாடுகிறோம்.

  மொழி வளம் என்றால் என்ன?

     மொழிவளம் என்பது பற்றி அறிந்து கொள்ள மொழி, மற்றும் வளம் என்பது என்ன என்று  தனித்தனியே அறிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது கருத்தையும், உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக்குறியீட்டுத் தொகுதி.  வளம் என்பது நிறைவு மற்றும் மேம்பட்ட நிலை ஆகும்.  மொழி வளம் என்பது மொழியின் மேம்பட்ட நிலை ஆகும். மொழி என்பது எப்போது மேம்பட்ட நிலையில் இருக்க முடியம்? மொழிவளம் என்பது ஒரு மொழியில் சொற்கள் அதிகமாகவும் இருந்து கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு பயன்படுபவையாகவும், பிறருக்கும் எளிதாகப் புரியவைப்பதாகவும் இருப்பதாகும். மொழி,  ‘வளமாக’ இருந்தால் ஒருவரின் மொழி ஆளுமையும் அதிகமாக இருக்க முடியும்.  மொழி ஆளுமை அதிகமாக இருந்தால் தான் எண்ணியதை பிறருக்கு தெரிவிக்க விரும்பும்போது தங்கு தடையின்றியும் சரளமாக பேசவும், எழுதவும் முடியும்.

   ‘DICTIONARY’ என்றால் என்ன?

      அகராதி  ஆங்கிலத்தில் ‘DICTIONARY’ எனப்படுகின்றது.  ஆங்கிலத்தில் அறிவாளியை  (knowledgeable person)  ‘He is walking or living Dictionary’ என்கிறோம்.அப்படி என்றால் ‘well informed person’ என்று பொருள். அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதி- ‘well informed person’ என்றால் என்ன பொருள்?  அவர் யாரால் அறிவிக்கப்பட்டவர்(informed by whom?) யார் அந்த அறிவித்தவர்  (Who  had informed him?)இயற்கையே/இறையேதான்   (Nature/God).  ஆகவே அருளாளரான  வேதாத்திரி மகரிஷியை அகராதி  என்கின்றபோது அவர் இயற்கையால்/இறையால் தெரிவிக்கப்பட்டவர்.  அறிவுறுத்தப்பட்டவர்  மட்டுமல்ல. சமுதாயத்திற்கு  இருபதாம் நூற்றாண்டின் உலகிற்கு அறிவிப்பாளராகவும்(informer) இயற்கையால்/இறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனவளக்கலையின் முதல் இறைத்தூதுவர் அவர்.  அவரை மனவளக்கலைக்கு முதல் வித்தாக்கி அவர் வழியாக  பல்லாயிரக் கணக்கில் இறைத் தூதுவர்களை உருவாக்கி வருகின்றது இயற்கை/இறை என்றால் அது மிகையாகாது.  எனவே மனவளக்கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பினை பாக்கியமாகக் கருதி நன்முறையில் பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் சாலச்சிறந்த இறைவழிபாடாகும்.

  Scientist of Consciousness

  வாழ்வாங்கு வாழ . . .    

      ஒரு மொழியில்  தெரியாத, புரியாத புதிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள உதவுவது அகராதி.

  அகராதி பயன்படுவதுபோல் திருவேதாத்திரியம் ஒருவர் ஆறாமறிவின் திறனையும், திறமையும் வளர்த்துக்கொண்டு வாழ்வாங்கு(வாழ்வு ஆங்கு-இல்லறத்தோடு கூட) வாழ்வதற்குப் பயன்படுவதால் திருவேதாத்திரியத்தின் பயனாளிகளான நாம் அவரை ஓர் அகராதி என்று கூறி மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வது என்பது எப்படிவேண்டுமானாலும் மனம்போன போக்கில் வாழ்வதைத் தவிர்த்து ‘வாழும் இயல்பை’க் கொண்டு வாழ வேண்டும்.  அப்படிப்பட்டவன்தான் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்கிறார் அறத்துப்பாலில் இல்லறத்திற்கென்று தனியாக ஓர் இயலை(science of living) ஏற்படுத்திக் கொடுத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

              இல்லறவியல்

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

  தெய்வத்துள் வைக்கப்படும்.                      . . . குறள் எண் 50

  பொருள்:

     இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார்.

      மேலும், ஒன்றே பலவாகியது என்கின்ற வோதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி(Vethathric Pure Advaidic Science) இறையே மனிதனாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அவன் எப்போது தெய்வத்திற்கு ஒப்பாகிறான்  என்பதனை மற்றொரு குறட்பாவில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதனை இங்கு நினைவுகூர்வதும் நலம் பயக்கும்.

   நீத்தார் பெருமை

  சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்

  வகைதெரிவான் கட்டே உலகு.                குறள் எண். 27

   

  இன்று இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.  இதன் தொடர்ச்சியை அடுத்த ஞாயிறன்று(07-01-2018)

  சிந்திப்போம். வாழ்க வளமுடன்!

   

  வாழ்க அறிவுச் செல்வம்                                                     வளர்க அறிவுச் செல்வம்


 • சிந்திக்கக் கவிகள்- பயிற்சி-1

  வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

  lotus

  சிந்திக்கக் கவிகள்- பயிற்சி–1

  நாள்: — 28-10-2014

  குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

  அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி, மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள். ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள் இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள். மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

  கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம். கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள். எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

  கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது, அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி என்றால் வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப்பெருங்கடலை நீந்தி பிறவிப்பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

  நல்ல கவி, கவியின் சிறப்பு, சிறப்புடைய கவிகள், கவியின் பெருமதிப்பு, கவியின் ஆயுளும் எண்ணிக்கையும், கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல், கவியின் ஆற்றல், அருட்பா, பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும். கவிகள் எவ்வாறு வருகின்றன?. கீழ்த்தரமான கவிகள், கவிகள் பொதுச் சொத்து. நிறைவாய் இருக்க ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார்.
  கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.
  பேச்சினைப் பெய்கின்ற மழையோடும், எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும், கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார், இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.
  கவியின் பெருமதிப்பு (1954)

  ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய
  ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி
  பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்
  பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்
  உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை
  ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்
  பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்
  பேரோட்ட முடை சீவநதி போலாகும்

  ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

  பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும். கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும். . கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும். அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள்.. மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேலாகக் கவிகள் எழுதியுள்ளார்.

  கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
  கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெருவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

  அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு, அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும், மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனைஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும். அவர்களின் கவிகளை வாசிப்பதும், நினைவில் கொள்வதும், உட்பொருளை நினைவில் கொள்ளுதலும் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.

  இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே ”அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.
  திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்? அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன, எனவேதான் மகரிஷி அவர்கள், அவர்களது சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார், ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அவா்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

  கவிகளால் சிந்தனை வளம் பெருகும். ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில் ”சிந்திக்கக் கவிகள்“ என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

  *****

  பயிற்சிக்குள் செல்வோம். நாள்: — 28-10-2014
  சிந்திக்கக் கவிகள்
  சி.க.எண்- 03-01
  இன்றையக் கவி – இனியது எது?

  சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியான ”சிந்திக்கக் கவிகள்” பயிற்சிக்கு இன்று எடுத்துக் கொள்ளும் கவி அவ்வையார் இயற்றிய கவி. ”சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ” என மாடு மேய்க்கும் இடையனாக வந்து முருகன் அவ்வையை நோக்கி கேட்டார் என்கின்ற கதையில் முருகன் ”உலகில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? என்று பல கேள்விகள் கேட்டார் என்கின்ற சம்பவம் வருகின்றது. அதற்கு விடைகளாகப் பாடல்களை அவ்வையார் பாடினார் என்பது கதை. அதில் ”இனியது எது” என்கின்ற பாடலை இன்றையச் சிந்திக்கக் கவிகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம்.

  இனியது எது?
  இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
  இனிது ! இனிது ! ஏகாந்தம் இனிது !
  அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்;
  அதனினும் இனிது ! அறிவினர்ச் சேர்தல்;
  அதனினும் இனிது ! அறிவுள்ளோரைக்
  கனவிலும் நனவிலும் காண்பது தானே !

  பொருள்: முருகன் கேட்டது இனியது எது என்கின்ற ஒரு கேள்விக்குப் பதிலாக நான்கு இனியவைகளை கூறுகிறார் அவ்வையார். அவ்வையார் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

  1) ஏகாந்தம் இனிது.
  2) அதனினும் இனிது ஆதியைத் தொழுவது.
  3) அதனினும் இனிது அறிவினரைச் சோ்ந்திருத்தல்.
  4) அதனினும் இனிது அந்த அறிவுள்ளோரைக் கனவிலும், நினைவிலும் காண்பது தான்.

  இந்த நான்கு இனியவைகளையும் வரிசையாக ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.

  1) ஏகாந்தம் இனிது:

  இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாத நிலை. எல்லோரும் விரும்புவது இன்பம். ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது. சலிப்பு என்பது என்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

  இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவன் மனம்? துன்பம் மிக மிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். மனிதன் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன் வழி இன்பம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் இன்பமே துன்பமாக மாறிவிடும்.

  இது வரை விஞ்ஞானம் கூட எடுத்துரைக்காத இன்ப துன்ப விஞ்ஞானத்தை(Science of Enjoyment) மகரிஷி அவர்கள் காந்தத் தத்துவம்(Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார். ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

  அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம். அவர் கூறும் ஏகாந்தம்(solitude) என்பது தனிமையும், அமைதியும் நிறைந்தது. தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலை. அதாவது புலன்களைத் தேவையில்லாது அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும் என்பதால் இன்பத்தை அனுபவிக்க முறையை மாற்றி தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

  2) அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்:

  ஏகாந்தத்தைவிட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார், தொழுதல் என்றால் என்ன என்று யாவரும் அறிந்ததே. தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள். பொதுவாக வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும். எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால் ஆதி கடவுளாகின்றது. ஆதியைத் தொழு என்று பொதுவாக கூறவில்லை அவ்வையார். ஆதியைத் தொழு என்று குறிப்பிட்டுத்தான் சொல்கிறார்.
  யார் இந்த ஆதி? முருகன், விநாயகர் போன்ற உருவகக் கடவுளா அவ்வையார் கூறும் ஆதி?. திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன் (ஆதியாகிய பகவன்) தான் அவ்வையார் கூறும் ஆதி. ஆதி எனும் இறைவன் உருவகக் கடவுள் இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதி எனும் பெயர் பெற்றார். ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.
  ஆதி என்கின்ற சொல்லிற்கானப் பொருட்கள்

  1. முதல்
  2.  தொடக்க காலம்
  3.  தொடக்கம் அறியப்பட முடியாத பழமை
  4.   அடிப்படை

  ஏதோ ஒன்றுதான், துகள்கள்(particle in science) முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம், அதனைத் தொடர்ந்து ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம் (self transformation) அடைந்துள்ளது. அந்தப் பொருள்தான்

  • காணுகின்ற பிரபஞ்சம் முதல் உயிர்கள் வரை எல்லாத் தோற்றங்களுக்கும் முதலாகி தன்மாற்றம் அடைந்துள்ளதாலும்,
  •   முதல் துகள் உருவாகிய காலத்திலிருந்தும் அதாவது, தொடக்க காலத்திலிருந்தும்,
  •   அதனுடைய தொடக்கம் அறிய முடியாத பழமையானதாகவும்,
  •   எல்வாவற்றிற்கும் அடிப்படையானதாகவும் இருந்தது.

  எனவே, அந்த ஒன்று ”ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால் அவ்வையார் அதனை ”ஆதி“ என்று அழைக்கிறார். கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும் உண்டு. அதாவாது மூலத்திற்கும் ஆரம்பமாக ஆதியாக உள்ளது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது. விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள். அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதி என்பதால் அது ஆதி மூலம் என அழைக்கப்படுகின்றது.

  ஆதி என்று மட்டும் சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார். எது இறைவனாக இருக்க முடியும்? இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு ஆறாம் அறிவு இறைவனைத் தேடினால் இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக் கொள்ளும். எது அல்லது யார் அந்த ஆதி? அதுதான் தன்னில் மறைந்திருந்த ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும் உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றே ஒன்று. அது வெளிப்படுத்தியதால் அது ”வெட்டவெளி” (Eternal Space)என்கின்றக் காரணப் பெயரை அதுவே எடுத்துக் கொண்டது.

  அது(அந்த ஒன்று) தற்போது, தானே ஆறாம் அறிவாகிய நிலையிலும்,
  ”வெளி(vacuum) என்றால் வெற்றிடம்,
  ஒன்றுமில்லாதது” என பொருள் கொண்டு,
  அதுவே இறைவன் என்றும்,
  இறைவனின் உண்மைநிலை அருவம் என மனித அறிவால் ஏற்றுக்கொள்ளத் தயக்கப்பட்டு இருந்து வருகின்றது,
  இப்பிரபஞ்சத்தின் ஆதி நிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார். தொழுதல் இனிது என்று கூறுவதயும் கவனிக்க வேண்டும். நடைமுறையில் இறைவனைத் தொழுவது எல்லோருக்கும் இனிதாக உள்ளதா என்பதனையும் கவனிக்க வேண்டும்.

  உருவமில்லா இறையை எவ்வாறு தொழுவது? அருவமான இறைதான்(பரமாத்மா) அறிவாகவும்(சீவாத்மா) மனமாகவும் வந்துள்ளது. எனவே மீண்டும் பரமாத்மாவுடன் சீவாத்மாவை இணைப்பது தான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால் அதனை எவ்வாறு தொழுவது எனில் அருவவழிபாட்டின் மூலமாகத்தான் தொழ முடியும். அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும். மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும். ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார். அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச் செல்வோம்.

  3) அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல்:

  ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு மனவளக்கலை யோகிகள் துரியாதீத தவத்தை இயற்றுவதே வேதாத்திரி மகரிஷி அவா்களைக் குருவாக ஏற்றுக் கொண்டததால் தானே சாத்தியமாயிற்று. ”குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும் ”குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும், அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல் அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில்(increasing order of ecstasy) மூன்றாவதாகக் கூறுகிறார்.

  அறிவினரைச் சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார். அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது, ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார்,

  4) அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது:

  இனியவைகளில் நான்காவதும் அதிகமானதுமான இனிது அறிவுள்ளோரைக் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும் போதும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். இந்த இரண்டும் எவ்வாறு சாத்தியமாகுமும்? விழித்துக்கொண்டிருக்கும் போது அறிவுள்ளோரை காண்பது சாத்தியம். அறிவினர்களை நேரில் சந்திப்பதால் அவர்களைக் காண்பது சாத்தியமாகும். அறிவினர்களைச் சந்திக்காத போதும் அவர்களை நினைவில் கொண்டு வந்து பார்க்கலாம். இது சாத்தியமென்றாலும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.

  அவா்களின் கருமையத்திற்கும் அறிவினரின் கருமையத்திற்கும் ஈர்ப்பு இல்லாததே காரணம். காதலர்கள் காதலிக்கும் காலத்தில் நேரில் சந்திக்காவிட்டாலும் ஒருவரையொருவர் எப்போதும் நினைந்து கொள்வது சாத்தியமாகவில்லையா?. ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவா் காதலிக்கின்றனர். அதுபோல் அறிவினரைக் காதலிக்க வேண்டும். காதலர்கள் சிலர் உடலளவில் காதலிப்பது போன்று அன்று குரு-சீடர் காதல். குருவிற்குக் கீழ்படிதலும் அவரின் போதனைகளையும் விரும்புவதாகவும் இருக்க வேண்டும் குரு-சீடல் காதல்.
  தூங்காமல் இருக்கும் போது அறிவினர்களைக் காண்பதிலேயே சிரமமான நிலை உள்ளதால், கனவிலும் அறிவினரைக் காண்பது எவ்வாறு சாத்தியம்? சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில்.கருமைய ஈர்ப்பு ஏற்பட்டு காதல் இருந்தால் இது சாத்தியமாகும். எவ்வாறு காதலர்கள் காதலிக்கும் காலத்தில் இரவிலும் தூக்கத்திலும் நினைந்து கொள்வதும், கனவிலும் ஒருவரை ஒருவா் காண்பது சாத்தியமாகின்றதோ அது போல் குரு-சீடர் காதல் மலர்ந்து விட்டால் கனவிலும் குருவைக் காண்பது சாத்தியமே.

  கனவிலும் நனவிலும் அறிவுடையோரைக் காண்பது இனிது என்கிறாரே இது எப்படி சாத்தியம்? இங்கே அறிஞர் திருமூலர் அறிவினைரச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

  குரு அருளே திருவருள்
  தெளிவு குருவின் திருமேனி காண்டல்
  தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
  தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
  தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

  …..திருமூலர்.

  இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே. ஆனால் அவ்வையார் அறிவினராகிய குருவைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். தெளிவும், இனிதிலும் இனிதும் ஒன்றா? ஆம் ஒன்றுதான். மகா கவி பாரதியாரும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவனை வேண்டச் சொல்கிறார் ஒரு பாடலில். தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதிலும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதையும் நினைவில் கொள்வோம். பிறவிப்பயனை எய்துவது இனிதிலிலும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

  குருவின் சேர்க்கை (15.08.1984)
  எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
  எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
  அப்பபொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
  அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
  இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்
  எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
  தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
  தரத்தில் உயர்த்திதப் பிவிப்பனை நல்கும்.

  ….. வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

  மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத சீவநதியான கவிகளை அருளியதால்தான் இன்று நாமும் இனிவரும் சமுதாயமும் அந்நதியில் குளித்து மன அழுக்கைப் போக்கிப் புத்துணர்வு பெற முடிகின்றது,

  ”சிந்திக்கக் கவி” பயிற்சியில் இன்று எடுத்துக்கொண்ட கவியின் உட்பொருளைத் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது சிந்திக்கவும் செய்யும் கவிகள். ஆகவேதான் சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியாக ”சிந்திக்கக் கவிகள்” என்கின்ற பயிற்சியை வைத்துள்ளோம். வாழ்க வளமுடன் வேறொரு நாள் வேறொரு கவியை எடுத்துக் கொண்டு சிந்தனைப் பயிற்சி செய்வோம்.

  வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் ்செல்வம்