March 2022

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-326-எண்ணமும் பரிணாமமும்

     

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

     

    lotus

    சிந்திக்க வினாக்கள்-326

    எண்ணமும் பரிணாமமும்

                                                                                           24-03-2022-வியாழன்                            

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 326 

    எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?

    2) எண்ணம் என்பது என்ன?

    3) எண்ணத்திற்கும்  பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?

    4) எதற்காக இயற்கை இரண்டிற்கும்  தொடர்பு வைத்துள்ளது?  இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட ,  எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே  உள்ளது. அவ்வாறெனில்   அது  எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?

    5) பரிணாமத்திற்கு  வாகனம்    என்றால் என்ன பொருள்?

    6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?

    7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?

    8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!

    9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?

    10)  அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட  உள்ளது?

    11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?

    12) அவசியமெனில் நாம் எவ்வாறு  பரிணாமத்திற்கு உதவலாம்? 

    13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?! 

    14) இயற்கையின்/இறையின்  மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில்  மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை,  மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!

    15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?

    16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட   மனித   எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்? 

    17)  “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?!  வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

    18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி ‌நீங்களே சிந்திக்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                    வளர்க அறிவுச்   செல்வம்!!


     

     

  • FFC-310- வேதாத்திரியார் – ஓர் அகராதி- 4/5

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி– 4/5

                                FFC-310           

    23-03-2018-புதன்

    உ.ச.ஆ. 23-03-37

    gurudevar

    வாழ்க வளமுடன்!

                சென்ற மூன்று  சத்சங்கங்களில் வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சத்சங்கத்திலும்  அச்சிந்தனையைத் தொடர்கிறோம்.  இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

     முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    1. அகராதி என்றால் என்ன,
    2. வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    3. ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    4. சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    5. அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,
    6. சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    7. சான்றோரின் துணை சாலச்சிறந்த வழிபாடு,
    8. வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

      இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,   

    1. வாழ வேண்டிய முறை,
    2. அறத்தின் தோற்றம்,
    3. அறத்தின் மூன்று கண்கள்,
    4. ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    5. தன்னை அறியாத அறியாமை,
    6. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்,
    7. வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    8. திருமணப்பந்தம் எதற்காக,
    9. இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    10. இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்சிந்தித்து வந்துள்ளோம் .

     மூன்றாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில், 

    1. ஏன் விரும்பி யாரும் பிறப்பதில்லை,
    2. ஆன்மாஞானம் பெறுவது,
    3. வாழ்வதில் இரண்டு வகை,
    4. மயக்க வாழ்வு பற்றி,
    5. சுய சிந்தனையில் ஓங்குவது,
    6. திருவள்ளுவரின் எச்சரிக்கை,  
    7. அறிவு-வழி வாழ்க்கை,
    8. புகழொடு தோன்றுதல்,
    9. அகம் பூரிப்படைதல்,
    10. அன்று வேதாத்திரி வாழ்வியல்  அகராதி இல்லை,
    11. வாழ்வாங்கு வாழ்வதனை வேதாத்திரிய அகராதி தெரிவிப்பது,
    12. பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை,
    13. அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்,
    14. வேதாத்திரியம் என்பது என்ன, 
    15. அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்,
    16. முயற்சியின் அளவே ஞான விளைவு,
    17. ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமைவது,
    18. இருபத்தாறு  நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா,

     சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!

    வ்வொரு துணைத் தலைப்புமே விரிவாக அறிய வேண்டிய  செய்தியை சுருக்கமாகத் தெரிவிக்கின்றன. வேதாத்திரி ஓர் அகராதி என்கின்ற தலைப்பில், இதுவரை மொத்தம் 36(8+10+18) துணைத்தலைப்புகளில்(subheadings) விருந்து(rich feasts) படைத்து அருந்தியிருக்கிறோம்.  அவற்றை நினைவு படுத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு துணைத்தலைப்புகளுமே ஒரு செய்தியினை தெரிவிக்கின்றதாக அமைந்துள்ளதல்லவா?   சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற முதன்மை தலைப்போடு(Main Heading) தொடர்பு கொண்டுள்ளது என அறியலாம்.  (விரும்பினால்  ஏதேனும் ஒன்றிரண்டு துணைத்தலைப்புகளை எடுத்துக் கொண்டு சிறு சிறு கட்டுரைகள் எழுதி அகம் மகிழுங்களேன். சிந்தனை வளம் பெருகும்)

          36 துணைத்தலைப்புகளையும்  நினைவில் இருத்திக்கொண்டு இன்றைய சத்சங்கத்தில் விருந்து படைத்து அருந்துவோம்.  நம் குருபிரான் துணையும், வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த  அனைத்து அருளாளர்களின் பார்வையுடன் இன்றைய சத்சங்கத்தினை தொடங்குவோம்.    அந்த ஒரே பேரறிவுதானே பல அருளார்களாக வெவ்வேறு பரிணாம/தன்மாற்ற காலகட்டத்தில் மலர்ந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.

    வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்:

    கௌதமபுத்தர் அறியாமை, அறிவுடன் வாழ்தல் பற்றி கூறுவதனை ஆழ்ந்து சென்று புரிந்து  கொள்ள இருப்பதால்,  வேதாத்திரிய அகராதிகளுள்  பிரதானமானது அறிவைப்பற்றிக் கூறும்  அறிவியல்(அறிவு+இயல்).   மூளையில் பதிந்துவைத்துள்ள அலமாரியிலிருந்து அகராதியை  எடுத்துக் கொள்வோம். புத்தரின், அபயம் தரும் இந்த அமுதமொழியினை ஏற்கனவே 12-01-2018 அன்று நமது சத்சங்க நிகழ்ச்சியான சிந்திக்க அமுத மொழிகள் பயிற்சிக்காக எடுத்துக் கொண்டோம். (Click here)  அதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    amudhamozhi_38

    “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” . . .  புத்தர்.

       பயிற்சிக்கான வினாக்கள் பல இருந்தாலும் அவற்றை  சுருக்கி ஒன்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இத்தருணத்தில் அதற்கும் விடைகாண்போம்.

    கௌதமபுத்தரின் பொன்மொழிகளில் சிந்திக்க வைப்பது என்னென்ன?

    அறியாமை,

    அறிவுடன்,

    வாழ்க்கை,

    நூறு ஆண்டுகள் வாழ்வது,

    ஒரு நாள் வாழ்வது

    ஆகியவை நம்மை சிந்திக்க வைக்கின்றன.

        முதல் மூன்று சொற்களுக்கு பொருள் தெரிந்து விட்டால் ஏன் கௌதமபுத்தர் அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்று கூறுகின்றார் என்பது விளங்கிவிடும். அறியாமை, அறிவுடன் என்கின்ற வார்த்தைகளுக்கு வேதாத்திரிய அறிவியல் (அறிவு+இயல்) அகராதியிலிருந்தும், வாழ்க்கையைப் பற்றி பொருள் தெரிந்து கொள்வதற்கு வேதாத்திரிய வாழ்வியல் அகராதியிலிருந்தும் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்.  புத்தர் காலம் இருபத்தேழு நூற்றாண்டுகள் முந்தையது.  ‘Fraction(அகம்) demands; Totality(முழுமை-இயற்கை-இறை) supplies’ என்கின்ற அடிப்படையைக்கொண்டு இயற்கையின் பரிணாமம் இயங்குவதால்,   பரிணாமம்/தன்மாற்றம் அடைந்துவரும் வளர்ச்சிக்கேற்ப/மலர்ச்சிக்கேற்ப, அதாவது தனது குழந்தைகளிள் அகம் விரும்புவதற்கேற்ப, இயற்கை அன்னை   தனது மறைந்திருக்கும் அருமை, பெருமைகளைக்கொண்ட ஆற்றலை வெளிப்படுத்தி  வருகிறாள்.  அப்படி 1911 இல் மலர்ந்து ஆல்போல் வளர்ந்து வருவதுதான் திருவேதாத்திரியம்.

    புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது:  

     புத்தர் அருளியுள்ள அபயம் தருகின்ற அமுதமொழிக்குள் செல்வோம்.  நூறு ஆண்டுகள் அறியாமையுடன் வாழும் வாழ்க்கையை அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறார்.  இந்த ஒப்பீடே  நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றது.  என்ன சிந்திக்க வைக்கின்றது?  எவ்வளவு ஆண்டுகள்  வாழ்ந்தாலும், அறியாமையுடன்   வாழ்வது  வீணே என்பது விளங்குகிறதல்லவா? புத்தரின் இளவலான திருவள்ளுவர் கூறுவதுபோன்று  வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கின்றது இந்த அமுதமொழி. இச்சிந்தனை அறிவுடன் வாழவேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துகின்றது.   ஆகவே இந்த உந்துதலை பயன்படுத்திக் கொள்ள ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்று எவற்றைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கௌதபுத்தரின் அறிவுநிலையில் நின்று அறிந்துகொள்வோம்.  ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்றால், அதற்கு    வேதாத்திரிய அறிவியல் அகராதியின் ஏடுகளைப் புரட்டுவோம்.  அறிவிற்கென பிரத்யேகமாக அமைந்துள்ள அறிவியலை  (Exclusive Science of Consciousness) நாம் வேதாத்திரிய அறிவியல் என்று கூறி மகிழ்கிறோம்.

    அகராதியின்  ஏடுகளிலிருந்து  என்னென்ன அறிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது?

    1)   அறிவு என்பது என்ன?

    2)   பொதுவாக வறுமை என்றால் என்ன?

    3)   அறிவின் வறுமை என்றால் என்ன?

    4)   ‘வறுமை’ என்கின்ற சொல்லின்  பொதுவான பொருளை வைத்துக்கொண்டு, வறுமை அறிவுடன் சேறும்போது அறிவின் நிலை என்ன என்று ஆராய்ந்து,  ‘அறிவின் வறுமை’ என்ன என்று வேதாத்திரிய அறிவியல் அகராதி தெரிவிப்பதோடு ஒப்பீடு செய்து நாம் அறிவின் வறுமையைப்பற்றி சிந்தித்தது  சரியாக உள்ளதா என அறிந்துகொள்வோம்.

    1) அறிவு என்பது என்ன?

    இப்போது அறிவு என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.

    கண்களால் காணமுடியாதது அறிவு.

    தன்னையே காணமுடியாதது அறிவு.

    காரணம் அறிவு அரூபமானது.  அதற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் அறிவு என்கின்ற ஒன்று இல்லை என்றும் கூறவும் முடியாது.

    பின்னர் எதுதான் அறிவு?  அரூபம் என்பதால் ‘அறிவு என்று ஒன்று இல்லை’ என்று சொல்லிவிடத்தான் முடியுமா?

    உணர்கின்ற ஒன்றினை உயிர் என்கிறோம். உணர்வது என்றால் என்ன?

    உணர்வதன் மூலம் உயிர் புறத்தே உள்ளதனை  அறிந்து கொள்கின்றது.

    உணர்வதன் மூலம் எது அறிந்து கொள்கின்றது? 

    உணர்தலின் மூலம் எது அறிந்துகொள்கின்றது எதுவோ அது அறிவு ஆகும். இதனை முடிவு செய்வதே அறிவுதான்!

    அறிகின்ற காரணத்தால் அது அறிவு என்கின்ற காரணப்பெயரைப் பெறுகின்றது.

    இதுவரை அறிவைப்பற்றி அறிவு இவ்வாறு சிந்தித்திருக்காது?  இப்போது எது  இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது? வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி சிந்திக்க வைக்கின்றது.

    ‘உருவமில்லாமலும் இருக்கின்றது’ என்கின்ற கோட்பாடு:

        உருவமில்லாத ஒன்றினை இல்லை என சொல்லிவிடவும் முடியாது என்கின்ற கோட்பாட்டினையும் அறிந்து கொள்ளவேண்டும்.  அறிவைப்பற்றி சிந்திக்கும்போது ‘உருவமிருப்பதுதான் இருப்பது, உருவமில்லாததை  இல்லாதது என்று எப்போதுமே கருதமுடியாது.’ என்று அறிந்துகொண்டோம்.  எப்போதுமே என்றால் ..?? மெய்ப்பொருள் விஷயத்தில் அது பொருந்தாது என்பதுதான் ‘எப்போதுமே’ என்பது.  ஆனால் பொருட்களால் ஆன  உலகில், (உலகியல் வாழ்க்கையில்) ‘உருவமில்லாததை இல்லாதது’ என்றுதான் உலக வழக்கில் சொல்ல முடியும். ஆனால் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தும் அறிவு, தான் இருப்பதனை ஏற்றுக்கொள்கின்றதோ, அதே ஒப்புவமையில்(analogy),  மெய்ப்பொருளை- ஆதிநிலையை- இறையைத்  தீர்மானம் செய்யும் விஷயத்திலும் ஒன்று மில்லாதது போல் வெட்டவெளி தோன்றினாலும் வெட்வெளியை ‘சாதாரணப் பொருளில் அது  வெளி தான்(empty) என்றுகொள்ளாமல், உறுதிப்பாட்டோடு அந்தவெளி எல்லாம் வல்ல ஆற்றல் மிக்கதுதான் என அறிந்து கொள்ள வேண்டும்.  இதில் இரண்டாவது புரிதலுக்கே இடமில்லை(Second thought).  வெளி ஆற்றல் மிக்கது எனக் கருத்தியலாக புரிந்துகொள்வதில் எள்ளளவும் ஐயம் இருக்க அவசியமில்லை.

       இயற்கையின் ஆதிநிலையான(திருவள்ளுவர் கூறும்) வெட்டவெளியிலிருந்துதானே அறிவு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றது.  உயிர்களிடத்தில் உள்ள அறிவு ‘உருவமில்லாது இருந்தாலும் அது இருக்கின்றது’ என ஏற்றுக் கொண்ட அறிவு, வெட்டவெளியைப்பற்றி சிந்திக்கும்போதும் இதே நிலைப்பாட்டைத் தானே எடுக்க வேண்டும். ஆதிநிலையிலேயே அறிவு  இருக்கின்றது. ஆக, ‘உருவமில்லாத, ஆனால் இருக்கின்ற தனிச்சிறப்பினை’ பெற்ற பேரறிவே ஆதிநிலை – வெட்ட வெளி. ஆகவே தான்  ஆதிநிலையான வெட்டவெளிக்கு உருவமில்லாததால், ஒன்றுமில்லாததுபோல் காணப்படுகின்றது.  ஆய்வு செய்ததில் இன்று அறிவைப்பற்றிய சிறப்பான விளக்கத்தினைப் பெற்றுள்ளோம்.

     2) பொதுவாக வறுமை என்றால் என்ன?

       வறுமை  என்கின்ற சொல்லிற்கான பொருள் தெரியும்.  ஆனால் வார்த்தைகளால் எவ்வாறு சொல்வது?  எனவே வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருள் என்ன என்று பார்ப்போம்.  வறுமை என்பது அடிப்படைப் பொருளாதார வசதி  இல்லாத  நிலை(poverty) என்று பொருள்.  அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவற்றை பெறுவதற்குக்கூடப்  பொருள் வசதி இல்லாமை என்று பொருள். வறுமையால் வரும் துன்பங்கள் எண்ணிலடங்கா?  தனிமனிதன் மட்டும் துன்பமடைவதில்லை. அதன் காரணமாக, பிறரும், சமுதாயமும் துன்பங்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

     3) அறிவின் வறுமை என்றால் என்ன?

        அறிவு, வறுமை(பொதுவான பொருளில்)  என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டோம்.  அறிவுடன் வறுமை சேர்ந்துவிட்டால் அறிவின் நிலை என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும். ‘அறிவின் வறுமை’  என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சொற்றொடர்.  நமக்குத் தெரிந்தவரையில் 1911 வரை இப்படியொரு சொற்றொடர் இதுவரை  அறியப்பட்டதாக தெரியவில்லை. 1911  க்கு பிறகு வேதாத்திரிய அறிவைப்பற்றிய அறிவியல் (அறிவு+ இயல்) அகராதிதான் இச்சொற்றொடரை வெளியிட்டுள்ளது.  இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. எனவே நாம் கவனிப்போம்.  அறிவின் வறுமை என்றால் என்ன? வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருளை  சற்று முன்னர்  நினைவிற்கு கொண்டு வந்துள்ளோம். அதனை நினைவில் கொண்டு அறிவின் வறுமை என்ன  என்பதனை அறிந்து கொள்வோம்.

         வறுமை என்பது அடிப்படைத் தேவைக்குக்கூட, அதாவது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்ற  பொருளாதாரம் இல்லாத நிலை. அறிவு+வறுமை  அறிவின் வறுமை ஆகின்றது. ஆகவே அறிவோடு வறுமை சேர்வதால் ஏற்படுகின்ற நிலை என்ன? அறிவின் அடிப்படைத் தேவைக்கே வறுமை ஏற்பட்டுவிட்டது என்றாகின்றது. அப்படியானால் அறிவின் அடிப்படைத் தேவை என்பதனை ஆராய வேண்டும்.

     அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?

         இப்போது அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.  உயிரினங்களிலே மனித உயிரினம் மிகச்சிறப்புடையது.  எதனால் சிறப்புடையதாகின்றது?  இதனை இயற்கை சொல்லவில்லை.  மனிதன்தான்  கூறுகின்றான். ஆறாம் அறிவு இருப்பதனால் தன்னை சிறப்புடையவன் என்கிறான் மனிதன். உண்மைதான். அத்தகைய சிறப்புடைய ஆறாம் அறிவு வறுமையில் இருந்தால் விளைவு என்ன?  இழப்புதானே! தனக்கும். பிறர்க்கும், அவன் வாழும் சமுதாயத்திற்கும்.!!  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன பொருள்?  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் அதனை எவ்வாறு பொருள்கொள்வது?

        ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டுமோ அவ்வாறு திகழ்வதுதான்  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவையாகின்றது.

     எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

                      அறிவு திகழவேண்டிய நிலை உருவாகவில்லை என்றால் அப்போது அறிவு வறுமையில் இருப்பதாகத்தானே கொள்ள முடியும்?!  ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டும்   எனச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இரண்டொழுக்கப் பண்பாடான அன்பும் கருணையும் வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.  அவ்வாறில்லை எனில்  அறிவு வறுமையில் உள்ளதாகத்தானே கொள்ள முடியும்?!  அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ள  அறிவின் அறிவியலாரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு வறுமை இருப்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.  இதற்கு ஏதும் விஞ்ஞான நிரூபணம் தேவையா?  தேவையில்லை.  ஆழ்ந்த பல நாள் தொடர் ஆராய்ச்சியின் முடிவில் அறிவு,  அறிவுபூர்வமாக அறிந்துகொண்டாலே அது அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புதான். அப்படிப் பார்க்கும்போது அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படவில்லை எனில் அறிவு வறுமையில் உள்ளது என்று அறிவே ஏற்றுக்கொள்கின்றது.

      அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படாமல் இருப்பதற்குக் காரணத்தை என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? அதனை அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் என்றுதானே மகரிஷி அவர்களால் சொல்ல முடியும். ஆகவேதான் அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும்  அறிவு வறுமை நிலவுகின்றது என்று கூறுகிறார்  மகரிஷி அவர்கள்.  ‘இந்த மூன்றும் நீங்கிய  நிலையே’ புத்தர் கூறும் ‘அறிவுடன்’ என்பது. இப்போது கௌதமபுத்தர் கூறும் அபயம் தரும் அமுதமொழி விளங்கிவிட்டதல்லவா?  அறியாமையால் தனக்கும், பிறர்க்கும், தான் வாழும் சமுதாயத்திற்கும் சொல்லொனாத்(ஒன்றா, இரண்டா) தீமைகள் வருவதால் அறியாமையுடன் வாழ்பவன் தானும் அவதியுற்று, பிறரையும் அவதியுறச்செய்வதே நடக்கின்றது.  இரு தரப்பினரும் அவதியுறுவது முதலாமவரின் அறியாமைச் செயல்களால் நடக்கின்றது. எப்படி இருந்தாலும், ‘விளைவை அறிந்து தவறு செய்தாலும், விளைவை அறியாது தவறு செய்தாலும்’ விளைவு ஒன்றுதான்.  அறியாமையில் தவறு செய்தாலும் விளைவு உண்டு. இதனைத்தான் ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று இறைவனே துன்பப்படுகிறான் என எடுத்துக் காட்டியுள்ளாரே இறைவணக்கத்தில் முதல் பாடலிலேயே மகரிஷி அவர்கள்.  எனவேதான் நூறு ஆண்டுகள் அறியாமையில் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார் கௌதமபுத்தர்.  மற்றொரு சத்சங்கத்தில் அறிவின் வறுமைபற்றி தனியாக ஆராய்வோம். இப்போது ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது  அகராதி  என்பதற்கேற்ப எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதற்குள்  செல்வோம்.  அதனை அடுத்த சத்சங்கத்தில்  (27-03-2022 ஞாயிறு)ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்.

      

    வாழ்க அறிவுச் செல்வம்!           வளர்க அறிவுச்செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-325–எண்ணம்

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    எண்ணம்

    சிந்திக்க வினாக்கள்-325

                                                                                              21-03-2022-திங்கள்

                                                                                               உ.ச.ஆ.21-03-2037 

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 325

             எண்ணமே இயற்கையின் சிகரம்,    இயற்கையின் உச்சமே எண்ணம் என்று எப்படிக்  கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1)  எண்ணம் என்பது என்ன?

    2)  எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?

    3) எண்ணம் எவ்வாறு தோன்றுகின்றது?

    4)  எண்ணத்தைப் பற்றி  மனிதகுலம் ஏன், என்ன அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து 28 கவிகளை(ஞா.க. 6.23. 1525—1552) வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார்? நேரம் ஒதுக்கி,  நேரம் கிடைக்கும்போது, அனைத்து கவிகளையும்  வாசித்து பயனடையலாமே!

    5) இன்று மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சூழலில் எண்ணத்தைப் பற்றி மனிதன் அறிந்துகொள்ள வேண்டியது  அவசியமாகின்றதா?  எப்படி?

    6) மனவளக்கலையில்  தற்சோதனைப் பயிற்சியில் எண்ணம் ஆராய்தல் பயிற்சியினை ஏன் முதலாவதாக வைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    7) வேறு ஏதேனும் வினாக்கள் உங்களுள் எழுந்தால் அதனையும் எழுப்பி ஆராய்ந்து விடை காணவும்.

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!               வளர்க அறிவுச்   செல்வம்!!