இன்றைய விருந்து
-
-
குருவை மதித்தொழுகலும் தப்பாது பிறவிப்பயனில் வெற்றியும்
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
குருவை மதித்தொழுகலும்
தப்பாது பிறவிப்பயனில் வெற்றியும்
FFC-335
14-08-2022-ஞாயிறு
அமைதி வேள்வி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!
இன்று நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் 112 து ஜெயந்தி தினம்.
வாழ்க வளமுடன்!
மேலே குறிப்பிட்டுள்ள கவி, ‘ஞானக் களஞ்சியம்’ என்கின்ற நூலில் ‘குருவின் சேர்க்கை’ என்கின்ற தலைப்பில் பத்தாவது கவியாகவும், ‘ஞானமும் வாழ்வும்’ என்கின்ற நூலில் ‘குருசீடர் உறவு — இயல்பூக்க நியதி’ என்கின்ற தலைப்பில் 150 கவியாகவும் இடம் பெற்றுள்ளது. இக்கவியின் உட்பொருளையும், முக்கியத்துவத்தையும், பயனையும் அறிய ஆராய்வதே இன்றைய சிந்தனையின் நோக்கம்.
மனிதகுலம் வாழ்கின்ற சூழல்
எனினும் நேரிடையாக இக்கவியின் உட்பொருளுக்குள் செல்வதற்கு முன்னர் தற்போது மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழல் பற்றி சிந்திப்போம். முதலில் அச்சூழலை சிந்திப்பதற்கும் இன்று சிந்திக்க எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பாகிய ‘குருவை மதித்தொழுகலும் தப்பாது பிறவிப்பயனில் வெற்றியும்’ என்பதற்கும் என்ன தொடர்புள்ளது என சிலருக்கு ஐயம் எழலாம்.
இன்று மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழல் வரவேற்கத்தக்கதா? இந்நிலை இப்படியே நீடித்துக்கொண்டே போகலாமா? இன்றைய மனிதகுல சூழலைப்பற்றி சிந்தித்தால் இச்சூழலிலிருந்து மனிதகுலம் உய்வதற்கு (மீள்வதற்கு) தீர்வு இருக்கின்றதா, என்ன தீர்வு அது என்று தெரிய வரும். சிந்தித்தால் மனிதகுலம் சுலபமாக எளிதாக சிரமின்றி துன்பமில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதற்கு யாருடைய துணையும், வழிகாட்டுதலும் தேவை என்றும் தெரிய வரும். அது தெரிய வந்தால் மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் இன்றைய சிந்தனையின் அவசியம் விளங்கப் பெறும்.
அத்திப்பூ பூத்தாற்போல்
வாழ்கின்ற மக்களில் ‘அத்திப்பூ பூத்தாற்போல்’ என்று கூறுவது போல் எங்கோ ஒருவர் தான் சிந்தனையாளராக இருக்கிறார். கோடியில் ஒருவரேதான் சிந்தனையாளராக இருக்கிறார் என்று கூட சொல்லலாம். உதாரணத்திற்கு, தெரிந்த அளவில் 14-08-1911 அன்று அல்லது 1911 ஆண்டு பிறந்த பல குழந்தைகளில் ஒரு குழந்தைதான் பின்னாளில் சிந்ததைனயாளராகியது. அவரே நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
கோடியில் ஒருவர் சிந்தனையாளராகும்போது அந்த சிந்தனையாளரை அவர் வாழ்கின்ற சமுதாயத்தில் ஒரு சிலரே போற்றுகின்றனர். அந்த ஒரு சிலர் சிந்தனை செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம். சிந்திப்பதை நேசிப்பவர்களாகவும் இருக்கலாம். சிந்தனையைப் போற்றுபவர்களாகவும் இருக்கலாம். எனவே சிந்தனையாளரைப் போற்றுகின்றனர். அந்த சிலாில் வேறுபலர் சிந்தனையை ரசிக்கலாம் ஆனால் சிந்தித்தலில் விருப்பம் கொண்டு சிந்திக்க முயற்சி செய்யாதவர்களாக இருப்பர். ரசிப்பதோடு முடிந்துவிடும் அவர்களது ரசனை. ஆனாலும் கோடியில் ஒருவரான அச்சிந்தனையாளரை அவர் வாழும் சமுதாயத்திலேயே உள்ள சகமனிதர்களாகிய அனைவரும் போற்றுவதில்லை. அச்சிந்தனையாளர் சொற்ப அளவில்தான் பிற மக்களால் அறியப்படுகின்றார். போற்றப்படுகின்றார். அப்படி சொற்ப அளவில் மக்கள் அறிந்து போற்றினாலும் போற்றுகின்ற அளவிலேயே இருந்துவிடுகின்றனர். ‘நாம் ஏன் கோடியில் ஒருவரான சிந்தனையாளரைப்போன்று சிந்திக்கவில்லை. சிந்திக்க முடியவில்லை’ என ஏங்குவதில்லை. சிந்தனை அவசியமில்லையா? கோடியில் ஒரு சிந்தனையாளர் கண்டுபிடித்தது சரிதானா என உறுதி செய்துவிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவரலாமன்றோ. இல்லையே! நல் மாற்றத்திற்கு, பண்பேற்றத்திற்கு தயார் இல்லை. அப்படி நல் மாற்றத்திற்கு தயாராக இருந்தாலும் ஏற்கனவே பழகிய செயல் பழக்கப்பதிவுகள், விளக்கப்பதிவுகள் வெற்றியை அடைவதற்கு (பெறுவதில்) குறுக்கிடுகின்றன. தடையாக உள்ளன.
சிந்தனையாளரின் கண்டுபிடிப்பினை சுயமாக சிந்தித்து உறுதிப்படுத்தி சிந்தனையாளரின் அமுதமொழிகளை ஆனந்தமாக பருகி நல்லுரைகளை, பின்பற்றி வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வருவதில்லை. போற்றிய அளவிலேயே இருந்துவிடுகின்றது சமுதாயம். போற்றுதலும், நடைமுறைபடுத்துதலும் மனிதப்பிறவியின் இறுதிப்பயனை அடையும் வரை தொடர்வதில்லை.
ஏன் சிந்திக்க வேண்டும்?
ஒரு சிந்தனையாளர் சிந்திக்கிறார் என்றால் எதற்காக அவர் சிந்திக்கிறார்? யாருக்காக சிந்திக்கிறார்? சிந்திப்பது ஆறாம் அறிவின் கடமை அன்றோ! எனவே சிந்திக்கிறார். தொலைக்காட்சியில் பல Channels உள்ளது போல், மனித மனதில் உள்ள பல அலைவரிசைகளான இன்ப அலைவரிசை, துன்ப அலைவரிசை, அமைதி அலைவரிசை, சிந்தனை (பேரின்ப அலைவரிசை)அலைவரிசைகளில் அவர் சிந்தனை அலைவரிசைக்கு மாற்றி எப்போதும் திறந்தே வைத்துள்ளார்(always stay tuned) என்பது கண்கூடாகத் தெரிகின்றது. இது சிரமமே கிடையாது. இதுவரை பழக்கமில்லை. பழகிவிட்டால் சிந்தனை வழக்கமாகிவிடும் அறிவை சிந்தனை அலைவரிசைக்கு திருப்பிவிட்டார் சிந்தனையாளர்.
முதலில் கடமையாகத் தனக்காக சிந்திக்க ஆரம்பிப்பார். பிறகு சமுதாயத்திற்காகவும் சிந்திக்கிறார். அவர் நன்கு சிந்தித்து அதன் விளைவாக வரும் பயன் முதலில் அவரிடம் பேரின்பமாகச்(ecstasy) சேரும். பிறகு சமுதாய நலன் கருதி ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற உயர்ந்த பெருநோக்கத்தில் அச்சிந்தனையை அவர் சமுதாயத்திற்கு தெரியப்படுத்தும்போது சமுதாயத்தில் மறைந்திருக்கும் சிந்தனைத்திறன் வளரும். சமுதாயம் பயன் பெற ஆரம்பிக்கும். எப்படி? சமுதாயத்தில் அதுவரை மலராது இருந்த சிந்தனைச் செடிகள் ஒவ்வொன்றாக மொட்டு எடுத்து மலர்ந்து ஆறாம் அறிவின் சிறப்பாகிய சிந்தனை மணத்தைப் பரப்பும்.
இன்று மனிதகுலம் எத்தகையச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதனை தன்னை அறிந்தவர்கள், இறைஉணர்வு பெற்றவர்கள், அறவோர்கள், சமுதாயநல விரும்பிகள்- ஆர்வலர்கள், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சிந்தனையாளர்கள் ஆகிய அனைவரும் அறிவர்.
மனிதனாகப் பிறந்தும் தான் யார் என்று தெரியாத அறியாமை நிலை. இப்படிக்கூறுவது வியப்பாகவும் இருக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சன உண்மை. எப்படி? விலங்கினங்களுக்கு தான் யார் என்று தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை.
பாம்பிற்கு தான் பாம்பு என்று தெரியாது. எலியைக்கண்டால் மகிழ்ச்சி தான். அதனை கவ்விப் பற்றிக்கொண்டு கொன்று உணவாக்கிக்கொள்ளும். அது ஒன்றுதான் அதன் நினைப்பு.
அதுபோல் புலிக்குத் தான் யார் என்று தெரியாது. மானைக் கண்டால் துரத்திச் சென்று, பாய்ந்து கொன்று உணவாக்கிக்கொள்ளும். அது ஒன்றுதான் அதற்குத் தெரியும். மற்ற எல்லா விலங்கினங்களின் வாழ்க்கை நிலையும் இதுபோன்றுதான்.
மனிதன் அப்படியல்லவே!
ஆனால் மனிதன் அப்படியல்லவே! மனிதனும் அவ்வாறே தான் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?! தான் மனிதன் என்பது தெரியும். அதுவல்ல தான் யார் என்று அறிந்துகொள்ள வேண்டும் என இங்கே நாம் கூறுவது.
உணவைக் கண்டால் உண்பது.
புலன்வழி இன்பங்களை அனுபவிப்பது. அதில் இன்பமும் இருக்கலாம். துன்பமும் இருக்கலாம்.
மரணம் வந்தால் மரித்துவிடுவது. உயிரை விட்டுவிடுவது என்று இருக்க முடியுமா?
மனிதன் குழந்தையாகப் பிறந்து முதியவனாகிறான். குழந்தைப் பருவத்தில் அவனுக்கு தான் யார் எனத் தெரியாது. ஏன் சற்று வளரும் வரையிலும் குழந்தைக்கு தான் ஆணா, பெண்ணா என்று கூடத் தெரியாது. சற்று வளர்ந்த பிறகே குழந்தைக்கு தான் ஆணா, பெண்ணா என்று தெரிகின்றது. அப்போது ஆடையில்லாமல் இருக்க நாணம் வருகின்றது. அப்போது நாணத்தைப் போக்க ஆடை உடுத்திக்கொள்கின்றது.
சிந்திக்கும் திறனைக் கொண்ட ஆறாம் அறிவுடைய மனிதனுக்கு
- தான், மனிதன் என்பதால் எப்படி வாழவேண்டும்,
- மனிதப்பிறவிக்கு நோக்கம் உள்ளதா,
- முக்கியமாக பிறவியின் பயன் என்ன என்று என்று தெரிவது இல்லை.
மனிதப்பிறவியின் நோக்கம்/மனிதப்பிறவியின் பயன் என்ன என்று தெரிந்து வாழ்வது மனிதனுக்கு அவசியமா என வினா எழலாம்! தான் யார் எனத்தெரியாமல் வாழ்வது முன்பு கூறிய குழந்தையைப் போல் அல்லவா வாழ்வதாகின்றது. இது சரியா? களங்கமில்லா குழந்தை உள்ளம் இருக்கலாம் மனிதனுக்கு.
ஆனால் அறிவு வளரவேண்டாவா? ‘ஆளும் வளரனும், அறிவும் வளரனும்’ என்பர். பின்னர் என்ன தெரிந்து கொண்டு வாழ வேண்டும் வளர்ந்த மனிதன்? மேலும் சிந்திக்க வேண்டியதனை அவரவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றது இச்சிந்தனை.
சமுதாயத்தில் வறுமை காணப்படுகின்றது.
ஏற்றத்தாழ்வு உள்ளது.
நோயின் அச்சுறுத்தல் வேறு.
போர், பகை, பொய், களவு, சூது, கற்பழிப்பு, வஞ்சம், முறையற்ற பால்கவர்ச்சி போன்ற மாணாநிலைதான் மனிதகுலத்தை வதைத்துக்கொண்டிருக்கின்றது.
அமைதியின்மை உலகெங்கிலும் காணப்படுகின்றது. உத்திரவாதமில்லாத வாழ்வு(insecurred life) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விளைவு..? தனிமனித அமைதியின்மை. அதன் விளைவு உலக அமைதியின்மை. இந்தச் சூழலிலிருந்து மீள்வதற்கு வழியிருக்கின்றதா என்று ஆராயவே இன்றைய சிந்தனை.
மனிதகுலத்தை திருத்துகின்ற வல்லமை இயற்கைக்கு உண்டு
எது மனிதகுலம் இயற்கைதானே/இறைதானே தன்மாற்றத்தில் கடைசியாக மனிதகுலமாக வந்துள்ளது. இப்பிரபஞ்ச தோற்றத்தை நினைத்துப்பார்க்க வேண்டும். பிரபஞ்சம் தோன்றிய விதத்தை நினைத்துப் பாா்க்க வேண்டும். பிரமிக்கத் தக்கதாக இல்லை!? கோடான கோடி நட்சத்திரங்களைக் கொண்டது இப்பிரபஞ்சம். அத்துடன் அது முடிந்துவிடவில்லை. அதற்கு அப்பாலும், அப்பாலுக்கு அப்பாலாய் எல்லையற்று(Infinite) சூழ்ந்துள்ளது வெளி. அது தூய்மையானது. தூய்மையானது என்றால் என்ன பொருள் இங்கே? சுத்தமானது என்று மட்டுமா பொருள்?! ‘தூய்மை’ என்று நாம் இப்போது கொண்டிருக்கும் பொருள் மட்டுமா அதற்கு!? தூய்மைக்கெல்லாம் தூய்மையானது ஆது. அதுமட்டுமல்ல அது. பேராற்றலும் பேரறிவும் கொண்டது அத்தூயவெளி. இயற்கையின் ஆயிரமாயிரம் அதிசயங்களில் முதன்மையான இந்த ஒன்றே போதும் இயற்கையின்/இறையின் எல்லா வல்லமைகளையும், சிறப்புகளையும் அறிந்து இரசிப்பதற்கு, மதித்துப்போற்றுவதற்கு. அவ்வாறிருக்க இயற்கைக்கு/இறைக்கு மனிதகுலத்தை திருத்தி நல்வாழ்வு வாழ்வதற்கான வல்லமையும் அறிவும் இல்லாமலா போகும்? அந்த வல்லமை இல்லையெனும்பட்சத்தில்(கற்பனை) மனிதகுலம்(அதாவது இயற்கையே/இறையே) என்றைக்கும் துன்புற்றே வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிருக்க வேண்டுமா?
அவ்வாறான நிலையே தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்க முடியுமா? விடிவுநிலை கொண்டு வர முடியாதா இயற்கைக்கு/இறைக்கு? தன்மாற்றத்தில் மனிதஇனத்தைத் தவிர மற்றவற்றில் வெற்றி பெற்ற இயற்கைக்கு/இறைக்கு மனிதனை சீர்செய்து மனிதனாக்க இயலாத நிலையா இருக்கும்?! நிச்சயமாக தீர்வு இயற்கையால்/இறையால் காணமுடியும் என்கின்ற எண்ணம் மனிதர்களிடையே அழுத்தமாக, பரவலாகி விட்ட சூழலில் இன்றைய இச்சிந்தனையை எடுத்துக்கொள்ளப்பட்டது இயற்கையின்/இறையின் ஒரு திட்டமிட்ட திரு- ஏற்பாடே! “மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
யாரும் விரும்பிப் பிறப்பதில்லை என்பது அனைவரும் அறிவோம். இன்னாருக்குத்தான் பிறக்கவேண்டும் என முடிவு செய்து பிறப்பதில்லை. அப்படி ஓர் ஏற்பாடுதான் இயற்கையில் இருந்திருக்குமானால் எப்படி இருந்திருக்கும்?!
உடலை நான் என நினைக்கும் மனிதன் விரும்பியா பிறப்பு என்னும் நிகழ்ச்சி நடக்கின்றது? உடல் நானல்லவே. ஆன்மாதான் நான். ஆன்மாவில் பல்லாயிரம் பிறவிகளாகப் பதிந்துள்ள வினைப்பதிவுகளின் விளைவுகளை (பயன்களை) அனுபவிக்க இயற்கையில் உள்ள ஏற்பாடே பிறவி.
அப்படியானால் எப்படி, ஏன் பிறப்பு நடக்கின்றது? நிஜத்திற்கு வருவோம். ஆன்மாவிற்குத்தானே பிறப்பு. அரூபா-ரூபமான ஆன்மா ரூபமான உடல் எடுக்கின்றது. ஏன் என்பது ஆறாம் அறிவின் சிந்தனைக்குரியது. முற்பிறவிகளில்
எண்ணிய பல நிறைவேறாத நல்ல/தீய ஆசைகள்
மற்றும் பல பிறவிகளில் செய்துள்ள பல்வேறு வினைகள் ஆன்மாவில் செயல்பதிவுகளாகப் பதிந்துள்ளதால்
அவற்றின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டும் என்பது இயற்கை நீதி. அதற்கான இயற்கையின் ஏற்பாடே பிறப்பு.
‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற பட்டினத்து சுவாமிகளின்(பட்டடினத்தார்) அமுத மொழியினை நாம் இங்கே நினைவிற்கொள்வது நம் தெளிவான புரிதலுக்கு மிக்க பயனை அளிக்கும். பட்டினத்து சுவாமிகள் ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற உண்மையை மனிதனுக்குக் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது வினைப்பயனை அனுபவிக்க மனிதனின் ஆன்மா உடல் எடுக்கின்றது என்பதால் மனிதஆன்மா அவர் கூறுவதனைக்கேட்டு மனித உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து மனிதனிடம் கூறுகிறார். ஆன்மாதான் முந்தையது. உடல் பிந்தையது. எந்த நோக்கத்தோடு மனிதனுக்கு இவ்வுண்மையைக் கூறுகிறார் பட்டினத்து சுவாமிகள்?
வினைகள் புரிந்து அதன் பயன்களை அனுபவிக்கவே பல்லாயிரம் பிறவிகள் எடுத்துவருகின்றது ஆன்மா.
திருவள்ளுவர், ஆன்மா எடுத்து வருகின்ற பிறவியின் எண்ணிக்கையை பிறவிக்கடலோடு ஒப்பிடுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த நிலையில் தற்போது மீண்டும் பிறவி எடுத்து இன்பதுன்பங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் மீண்டும் பிறவி எடுக்காமல் இப்பிறவியோடு பிறவிச்சுழற்சியை (birth cycle) முடித்துக்கொள்வதற்கு கருணையோடு ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற உண்மையைக் கூறி எச்சரிக்கைப்படுத்துகிறார் பட்டினத்து சுவாமிகள்.
மனிதப்பிறப்பு ஓர் அரிய இயற்கை நிகழ்வு. மனிதப் பிறவி, உயிரினங்களிலேயே சிறந்த பிறவி -உயர்ந்த பிறவி. இயற்கையின்/இறையின் உயிரினத் தன்மாற்றத்தில் கடைசியும் உன்னதப் பிறவியாகும் மனிதப்பிறவி என்பது அனைவரும் அறிந்ததுதான். இதற்கு மேலும் உயிரினத் தன்மாற்றத்தில் அடுத்த கட்டம் இயற்கைக்கு/இறைக்கு ஏதும் இல்லை. தேவையும் இல்லை இயற்கைக்கு/இறைக்கு. மனிதனின் உருவ நிலை வரை தன்மாற்றமடைந்து விட்டது இயற்கை/இறை. இனி மனிதனின் தன்மாற்றத்தில், அதாவது குணநலத்தில்தான் ஏற்றம் பெறவேண்டும். இதனை மனிதர்களாகிய நாம் எப்படிக் கூற முடியும்?
நாம் யார்? நாமும் இயற்கையின் அங்கம்தானே! வேறு எந்த உயிரினமும் இதனைச் சொல்ல முடியாது. மனிதனுக்கு மட்டும்தான் அந்த உரிமையும், புரிதலும், இயற்கையை ரசிக்கும் திறனும் உண்டு. அதனால்தான் இயற்கைக்கு, மனிதனைவிட மேலும் உயரினத் தன்மாற்றத்தில் அடுத்த கட்டம் ஏதும் கிடையாது என மனிதர்களாகிய நாம் உறுதியாகக் கூறுகிறோம். ஆனாலும் அதே நேரத்தில் உயிரினத்தன்மாற்றம் இன்னமும் முடிவுறவில்லை என்கின்ற ஆதங்கமும் நமக்கு இருந்து வருகின்றது. ‘When fraction demands Totality supplies’ என்கின்ற இயற்கை நீதியை அறிந்து, அதனை மனதில்கொண்டே ‘பரிணாமம்-மனிதஇனப்பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை-Evolution is still incomplete’ என்கின்ற நமது எண்ணத்தை இயற்கைக்கு தெரிவித்து வருகிறோம். இயற்கையிடம்/இறையிடம் முறையிடுகிறோம். இயற்கையும்/இறையும் அந்த எண்ணத்தை நிறைவேற்ற, அதற்கேற்ற மனித-மன-சூழலுக்குக்காக காத்துக்கொண்டிருந்தது. இயற்கையின் அந்த காத்திருப்பு இருபதாம் நூற்றாண்டில் இயற்கைக்கு வெற்றியைத் தந்துள்ளது மனவளக்கலை என்கின்ற மனித பண்பேற்ற கலையின் வாயிலாக. தெய்வமே தன்னை அப்பட்டமாக வெளிபடுத்திய மகா மா மனிதர்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
எண்ணம் என்கின்ற ஊக்கி
இயற்கையின்/இறையின் உயிரினத்தன்மாற்றம் நிறைவு பெற நாம் என்ன செய்து வருகிறோம்? ‘எண்ணம்’ என்கின்ற ஊக்கி நம்மிடம் உள்ளதே! ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனையும் நாம் அறிந்துவிட்டதால் அந்த எண்ணத்தையே பயன்படுத்துகிறோம். எண்ணமே இயற்கையின் உச்சம் என்பதால் எண்ணத்தையே இயற்கைக்கு எண்ண அலையாகக் கூறிவருகிறோம்.
அந்த இயற்கையின் தன்மாற்ற உயர்வு எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதனை சிந்தித்துவிட்டோம். மலர இருக்கின்ற அந்த தன்மாற்ற உயர்வு ‘மனிதஇனம் மனிதப்பண்பேற்றத்தில் உச்சத்தை எட்ட வேண்டும்’ என்பதே. மனதை அறிந்த பெரியவர்கள் தற்போது மனித மனம் உள்ள நிலையைக் கண்டு வெகுண்டு இறையே மனித மனமாக இருந்தும் என்ன பயன்? மனம் இறைத்தன்மையை வெளிப்படுத்தாத நிலையில் தானே உள்ளது என நினைந்து அந்த நிலை மாறி மனிதமனம் தன் மூலத்தை பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற ஆதங்கத்தில் மனித மனத்தைப் பற்றி கூறும்போது ‘எது எதுவாக இருந்தாலும், அது அதுவாக இல்லையோ என்று புதிராகவே கூறிவந்துள்ளனர். அந்த மனதைப்பற்றிய புதிரை உடைக்கின்ற/விடுவிக்கின்ற நிலைக்கு மனிதப்பண்பேற்றம் உச்சத்தை எட்ட வேண்டும். புதிர் உடைக்கப்பட்டால்/விடுவிக்கப்பட்டால் என்ன விடை? ‘இறையே மனமாக இருப்பதால், மனம் இறைத்தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது’ என்பது தான் அந்த புதிரை விடுவித்த நிலை.
திருமணம் என்கின்ற புனித உறவு
பிறப்பு என்பது என்ன? மனிதப்பிறப்பு எவ்வாறு நடக்கின்றது? இயற்கையில் எல்லா உயிரினங்களும் விருத்தி அடைய ஆண், பெண் என இரு பாலினங்களாக இயற்கையே தன்மாற்றமடைந்து பாலின வேட்கையும் இயல்பாகவே ஏற்பட்டு இனவிருத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மனிதனிடம் இயல்பாக ஏற்படும் பாலுணர்வு வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்கு உற்ற வயதில், இயற்கை, ஆணையும் பெண்ணையும் திருமணப்பந்தம் என்கின்ற புனித உறவில் இணைத்து வைக்கின்றது. மனிதஇன விருத்தியைத் தொடரவும், அதே நேரத்தில் இயற்கை ‘தன்னுடைய செயல்விளைவு நீதியை’ நினைவில் கொண்டே அந்த இருவரின் கருத்தொடராகக் கொண்டு வந்த வினைப்பதிவுகளின் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கின்ற அனுபவிக்கவேண்டும் என்கின்ற ஏற்பாட்டினையும் இணைத்தே வைத்துள்ளது இயற்கை, திருமணப்பந்தம் என்கின்ற புனித உறவில் என்பதனை மனிதர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.
அந்த ஆணோ பெண்ணோ கருத்தொடராக அவரவர் ஆன்மா கொண்டுவந்துள்ள சஞ்சிதகர்மாவின் வினைப்பதிவுகளின் விளைவுகளை அவர்களோ அல்லது அவர்களின் வருங்கால/எதிர்கால சந்ததிகள் மூலமாகவோ அனுபவிக்கின்ற ஒரு புனித ஏற்பாடுதான் திருமணம் என்பது.
அறிவின் தெளிவில் மனவளக்கலைஞர்களாகிய நாம் “மனிதன் வாழ்கிறான் என்பதனைவிட வினைவாழ்கின்றது என்பதே சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்” எனக் கூறி வருகிறோம். ஏன் அவ்வாறு கூற வேண்டியுள்ளது? நாம் வினையின் விளைவை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், அந்த அனுபவத்தில் மேலும், மேலும் வினைகளைச் சோ்த்துக்கொள்ளாமல் இருப்பதில் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கவுமே இவ்வாறு கூறி வருகிறோம். எப்போதும் விழிப்போடு இருக்க நம் குருவின் துணை நமக்கு என்றென்றும் இருக்க இறையருளை வேண்டுகிறோம். வாழ்க வளமுடன்! வாழ்க அறிவுச்செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.
. , . தொடரும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
-
அ.வி. 334 சாகாவரமும் பரிபக்குவ நிலையும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
இனிய ‘சுபகிருது’ வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
அ.வி. 334
சாகாவரமும் பரிபக்குவ நிலையும்
14-04-2022-வியாழன்
படம்: வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தது
வாழ்க வளமுடன்!
நேற்றைய (13.04.2022) சத்சங்கத்தில் சிந்திக்க வினாக்கள் பகுதியில் தொடுக்கப்பட்ட வினாவின் தொடர்ச்சியாக…
வள்ளல் பெருமானாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடங்கள் இருந்து அருள்பாலித்தது மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.
வள்ளலாரின் கடைசி செய்தி:
- இதுவரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தேன். ஒருவரும் கேட்டுத் திருந்தவில்லை; ஒருவரும் தேறவில்லை.
- அகவினத்தாருக்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்அளிப்பேன்.
- இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
- திருத்திடுவோம். அஞ்சவேண்டாம்.
- ஏன் வள்ளலாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடம் இருந்தது?
- ஒருவரும் தேறவில்லை என்று எதனை குறிப்பிடுகிறார்?
- அகவினத்தார் என்பவர்கள் யார்?
- சாகாவரம் என்றால் என்ன ?
- ஏன் அகவினத்தாருக்கு மட்டும் சாகா வரம் தருகிறேன் என்கிறார்?
- ஏனையோர்கள் என்பவர்கள் யாவர்?
- ஏன் அவர்களுக்கு பரிவக்குவ நிலை அளிப்பேன் என்கிறார்?
- பரிபக்குவ நிலை என்றால் என்ன?
- அகவினத்தார்க்கு சாகாவரம் தருவேன் என்கின்ற வரிசையில் மகரிஷி அவர்களிடம் வள்ளலார் ஆன்மா இருந்ததா?
- பரிபக்குவநிலை அளிப்பேன் என்ற நம்பிக்கையளிக்கும் உறுதியளிப்பு கவனிக்கப்பட வேண்டியதல்லவா?
- “திருத்திடுவோம். அஞ்சவேண்டாம்” என்கிறாரே, அதன் பொருள் என்ன?
- திருத்துதல் நடந்துகொண்டிருக்கின்றதா? அதனால் கவலைப்படவேண்டாம் என்கிறாரே வள்ளலார் அவர்கள்?
- இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்தால் சாகா வரம் எப்போது?
- அடுத்த பிறவியிலா? காத்திருக்க வேண்டுமே!( வள்ளலார் அவர்கள் அருட்தந்தை அவர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி பற்றி அறிய –please read page 111- of ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல்)
- இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்து அடுத்த பிறவியில் சாகாவரம் கிடைக்கும் என்றால் அடுத்த பிறப்பு கருவிலே திருஉடையபிறப்பா?
- நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளதா?
- ஆனால் அடுத்த பிறவி என்றால் நாம் இல்லையே அப்போது?
- நாம் இல்லை என்றால் என்ன ?
- நம் பிறவியின் தொடரான மகன் அல்லது பேரன் அல்லது கொள்ளுப் பேரன் அல்லது வம்சாவளி இருப்பார்களன்றோ!?
- பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருந்தாலும் இப்பிறவி ஒன்றே போதும் என உறுதி(ஞா.க.கவி.எண் 1743) அளிக்கின்றாரன்றோ நம் அருட்தந்தை அவர்கள்.
21.அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- மற்றொரு உறுதி மொழியும் அளித்துள்ளாரே! அது என்ன?
- எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறாரே வையகத்துள்ளோரை வாழ்வாங்கு வாழவைக்க வந்த விடிவெள்ளி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வள்ளலார் அருள் தனக்கு கிடைத்ததுபற்றி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவுகூர்தல் நலம்பயக்கும்.
வாழ்க வளமுடன்!
வேறொரு சத்சங்கத்தில் குருவை மதித்தொழுகல் பற்றி விரிவாக சிந்திப்போம். அதற்கு இறையருளும் குருவருளும் துணை புரியுமாக!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
-
நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2
அ.வி. 333
03-04-2022-ஞாயிறு
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் பயிற்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு மனதைப் பற்றிய பாடம் நடத்துகிறார்.
ஐந்தறிவு சீவன்கள் வரை உருவாகிய புலன் உணர்க்கருவிகள் புற நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமே உணர்வதற்காக உருவாகின. ஆனால் ஆறாம் அறிவிற்கு என்று தனியாக புலன் உணர்க்கருவி ஏதும் உருவாகாவிட்டாலும், புலன்களின் உதவியின்றி, ஆறாம் அறிவு உணர வேண்டியது ஒன்று இருக்கின்றது.
பேரறிவு ஒரறிவிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஆறு அறிவு வரை தன்மாற்றம் அடைந்துள்ளதால், ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை உணர்வதற்கென்று தனித்தனியாக, தொடுஉணர்வு, சுவை உணர்வு, ஒலி உணர்வு, ஒளி உணர்வு, நுகர் உணர்வு என்று ஐவகை உணர்வுகள் இருந்தது போல் ஆறாம் அறிவிற்கு உணர்வதற்கென்று ஓர் உணா்வு இருக்கின்றது. அதனை உணர்ந்தே ஆக வேண்டும் ஆறாம் அறிவு. அந்த பிரத்யேக உணர்வைப் பெற்றால்தான் மனிதன், வள்ளுவர் கூறும் பிறப்பாகிய பெருங்கடலில் நீந்தி கரை சேர முடியும். மனக் கவலையையும் மாற்ற முடியும்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
இறைவன் அடி சேராதார்”.“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”.இந்த இரண்டு குறளிலும் “இறைவன் அடி சோ்தல்” என்றும், “தாள்சோ்ந்தார்க்கு அல்லால்” என்றிருக்கின்றது. அதன் பொருள், அரூபமாகிய இறையினுடைய “பாதங்களைச் (அடி,தாள்) சோ்தல்” என்பதன் பொருள், பின்னப்பட்ட (Fractioned) அரூபமாகிய சிற்றறிவு, அகண்ட அரூபமாகிய பேரறிவுடன் ஒன்றிணைதலாகும். இது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் – அறிவு முழுமை அது முக்தி” என்பதாகும்.
அந்த பிரத்யேக உணர்வு என்பது, புறத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகத்தையும் உணர்வதாகும். அகத்தை உணர்வதற்கு புலன்கள் தேவையில்லை. ஏன்? புறத்தே காணப்படுபவைகள் எல்லாம், பரிமாணங்களைக் (DIMENSIONS) கொண்ட (shape and image) பருப்பொருட்களும், அதிலிருந்து வரும் நிகழ்ச்சிகளாகும். எனவே புற உணர்விற்கு புலன்கள் தேவையிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காகத் தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது.
அகமாகிய உள்ளத்தில் எந்த பருப்பொருளும் இல்லை.
மாறாக அரூபம் ஆனால், பருப்பொருள் உருவாகக் காரணமாக இருந்த மெய்ப்பொருளாகிய பேரறிவே மனதின் மறுமுனையான உள்ளமாக உள்ளது.
எனவே அரூபமாகிய ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காக வந்துள்ளதால், அதற்கெனப் பிரத்யேகப் புலன் ஏதும் உருவாகவில்லை.
ஆகவே விலங்கினங்கள் வரையில் புற நிகழ்ச்சிகளை உணர்ந்த பேரறிவு மனித வடிவில், புற நிகழ்ச்சிகளுக்கான காரணம் என்ன, அவற்றின் மூலமும், முடிவும் என்ன, அவை எவ்வாறு உண்டாகின்றன என அறிந்து வாழ்வதுதான், திருவள்ளுவர் கூறும் இயற்கையின் ஆதிநிலை/இறை ஆறாம் அறிவாக மலர்ந்ததன் நோக்கம். இயற்கையே/இறையே, அறிவாக வந்துள்ளதால் நான் என்பது அறிவே, ‘நான் பார்க்கிறேன்’ என்கின்ற செயலில் யார் பார்க்கின்றது? அறிவுதானே பார்க்கின்றது. அப்டியானால் நான்=அறிவு என்கின்ற சமன்பாடுதானே வருகின்றது. ஆகவே நான் என்பது அறிவு. அறிவு இயற்கையின்/இறையின் ஆதிநிலையைிலிருந்து வந்துள்ளது. அப்படியானால் இயற்கையேதான்/இறையே தான் நானாக உள்ளது. இயற்கை/இறை நானாக (oneself) இருப்பதோடு மட்டுமல்லாது உலக மக்களாகிய 790 கோடி நான்களும் இயற்கையே/இறையேயாகும். இயற்கையே ‘நானாக’ இருப்பதால், ‘நானின்’ (aim of Self)நோக்கமும் இயற்கையின் நோக்கமும் ஒன்றேயாகும். இவ்வாறாக நான் யார் என்கின்ற வினாவிற்கு விடை கருத்தியலாக அறியவேண்டும். அவ்வாறு நான் யார் எனக் கருத்தியலாக அறிந்ததோடு மட்டுமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம், தற்சோதனை) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயனை அடைய முடியும். அப்பயன் துன்பமில்லா பேரின்பவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவை ஆகும்.
செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது. அந்தக் காலத்தின் அளவு
அவரவா்களின் ஆர்வம்,
கைமேல் பலனை எதிர்பார்க்காத தளரா விடாமுயற்சியினைப் பொருத்திருக்கும்.
புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.
இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும். அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.
ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life) வரும். பிறவிப்பிணிக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.
எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். ‘நான் யார்?’ என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும், ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் துன்பங்களையும் அறிய வேண்டும். நான்யார் என அறிதலின் லாபமும், அறியாததன் நஷ்டமும் “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில் அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இறைவனை அறிவதை விட வேறு என்ன லாபம் உள்ளது? மற்ற லாபங்களெல்லாம் இதற்கு துணை இலாபங்களே.
இங்கே ஆதிசங்கரரின் கூற்றை நினைவு கூறுவோம்.
எது லாபம் என சொல்லத் தக்கது?
ஆன்மாவை அறிதல் என்கிறார் ஆதிசங்கர்.
அறிவு இருந்தும், அறிய வேண்டியதை அறியாமல் இருப்பதால் மயக்க நிலைதான் சாதாரண மனிதனிடம் காணப்படுகின்றது. இதனால் தனக்கும் இழப்பு. அவ்விழப்பால், பிறருக்கும் (சமுதாயத்திற்கும்) நஷ்டம் தானே.
இழப்பால் துன்பம் தானே!? தனி மனிதனுக்குத் துன்பம் இருக்கும் போது சமுதாயக் கூட்டுறவில் வாழும் அம்மனிதனால் பிறருக்கும் துன்பம் போய்ச்சேரும் .
இங்கே ‘ஒன்றே பலவானதை’ எடுத்துச் சொல்லும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த ஜகத்குரு ஆதிசங்கரர் என்ன அருளுகிறார் என்பதனை கவனிக்க வேண்டும்.
“நான் பிரம்மம் அல்ல என்பது அறியாமை. அந்த அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர்”
. . . ஆதிசங்கரர்.
இறைவனை அறியாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
அறியவேண்டியது அறியாமலே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
அறிய வேண்டியதை அறியாமல் வாழ்க்கை முடிந்து விடுவது என்பதா வாழ்ந்ததன் லாபம்!?
அறியாமையிலேயே பிறந்து,
அறியாமையிலேயே வாழ்ந்து,
அறியாமையிலேயே இறந்துவிடுவதுதானா மனிதப் பிறவி எடுத்ததன் பயன்?
அடைய வேண்டியதை அடையவில்லை அல்லது அடைய முயற்சி செய்யவில்லை என்றால் அது இழப்பு தானே? நஷ்டம் தானே?
நஷ்டம் ஏற்பட்டால் அறிவிற்கு கவலை தானே?
கவலை என்பது துன்பத்தின் விளைவு தானே?
ஆகவே ஜகத்குரு ஆதிசங்கரர் அறியாமை எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்று எவ்வளவு உண்மை என்பது விளங்குகின்றது.
வருங்காலத்தில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில் மனிதர்கள் அனைவருமே விஞ்ஞானத்தின் துணைகொண்டு எளிதாக தான் யார் என மிகத்தெளிவாக அறியும் நிலை உருவாகி வந்து கொண்டுதான் உள்ளது மனவளக்கலையால் என்றால் அது மிகையாகாது.
எனவே நீதிநெறி உணர்மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
-
நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2
நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2
அ.வி. 332
30-03-2022 புதன்
வாழ்க வளமுடன்
‘நான் யார்?’, என்கின்ற வினாவிற்கு விடையை கருத்தியலாக ஒவ்வொரு மனிதனுமே அறிவது எப்படி? ஆன்மீகத்தில் ‘நான் யார்?’ (Who am I ?) என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’ என்பார்களே அது போல் ‘நான் யார்?’ என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக இருந்தாலும் இந்த வினாவின் விடைதான், அறிவின் வளா்ச்சியில் உச்ச நிலையை அடைந்து மனிதனின் கீர்த்தியை வெளிப்படுத்துவதாகும்.
இயற்கையாகிய பேரறிவு / இறை, தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில், ஏன் உயிரினங்களாக வந்தது என்கின்ற காரணத்தை அறிந்தால், நான் யார் என்கின்ற வினாவிற்கான விடைகிடைக்கும்.
இயற்கை/இறை உயிரினங்களாக வந்தக் காரணம் என்ன என்று சிந்தித்தால், பஞ்சபூதங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை. மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, பேரறிவாகிய இயற்கை, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாக ஒவ்வொன்றாகப் படிப்படியாக (stage by stage) தன்மாற்றமடைந்து வந்தது. பிரபஞ்சத்தில், பஞ்ச பூதங்களிலிருந்து நடந்து கொண்டிருந்த பஞ்சதன்மாற்ற நிகழ்ச்சிகளை (Physical Transformation of Pancha Boothas) உணர்ந்தாகிவிட்ட பிறகு, அத்துடன் இயற்கை தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாமே! உயிரினங்களாக வந்து பின்னர் மனிதனாக ஏன் வந்தது?
அதனை நாம் யார் கேட்பதற்கு? தாயைப் பார்த்து பிள்ளை “நீ ஏன் என்னைப் பெற்றாய்?” எனக் கேட்க முடியுமா? முடியாது. அது போல் இயற்கை அன்னையையும் நாம் கேட்க முடியாது. ஆனால் அந்தக் காரணத்தை அறிய உரிமையும், தகுதியும் உள்ளது நமக்கு. காரணத்தைக் கேட்போம். விடையை அறிவோம். அறிய விழைந்தால் இயற்கை அன்னையே காரணத்தை உற்சாகத்துடன் கூறி மகிழ்வாள். “நீயே அதுவானால் அதுவே சொல்லும்” என்பதும் இதுதான்.
ஐந்தறிவிலிருந்து, ஆறாம் அறிவிற்கு, ஏன் தன்மாற்றப் பயணத்தைத் தொடர்ந்து இயற்கை அன்னை மனிதனாகவும் வந்தாள் என வினா எழலாம். ஏன் அவ்வாறு வினா வருகின்றது. காரணம், இன்று மனித குலத்தின் நிலை அவ்வாறு உள்ளது. இன்று சமுதாயத்தில் வறுமை நிலவுகின்றது. சூது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்கின்ற துன்பங்கள் மலிந்து விட்டன. வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிட்டது. உத்திரவாதமின்மையான வாழ்க்கை (unsecured life) வாழ வேண்டியுள்ளது. இயற்கை/இறை மனிதனாக வராதிருந்தால், மனித குலம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டியதில்லையே என எண்ணத்தோன்றலாம். இப்பிரபஞ்சத்தில் இவ்வளவு குற்றங்களே இருந்திருந்திராதே!
என்ன செய்வது? இயற்கையின் ஆதிநிலை, பேரறிவையும் கொண்ட அளப்பரிய பேராற்றல் உடையது. ஆற்றல் என்றாலே இயக்கத்திற்கு வந்தால்தானே சிறப்பு. இயக்கத்தில் இருந்தால் தானே அது ஆற்றல் என்கின்ற பெருமையைப் பெறுகின்றது. மின் கலம் (Battery) உள்ளது. மின்கலத்தை இயக்கினால் தான் அதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்த முடியும். மின் கலத்தை இயக்காமல் இருந்தால் அது ஒரு பயனற்ற பெட்டியாகத்தான் இருக்கும். அதுபோல் பேராற்றல் தன்னையே இறுக்கிக் கொண்டு நொறுங்கி இயக்கத்திற்கு வந்தது. பேராற்றலுடன் கூடவே, அறிவென்றாலே அறியும் இயல்புடையதாகிய அறிவு பேரறிவாக இருந்ததால், பேரறிவு உயிரினங்களாக மாற்றம் அடைந்தது.
இங்கே சிந்திக்க வேண்டும் மனிதன். மனிதன் வேறு, இயற்கை வேறா? அல்லவே. இயற்கையின் ஒரு மிகச் சிறிய அங்கம் தானே மனிதன். ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குடும்பத்தலைவன் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் போது, பொறுப்புள்ள மகன், மகள் குடும்பச்சூழலை உணர்ந்து, தந்தையுடன் சேர்ந்து உழைத்து பொருளாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவதில்லையா? இது நடைமுறையில் நடக்கவில்லையா? தந்தையைக் குறை சொல்கிறார்களா பிள்ளைகள்? அதுபோல்தான் இயற்கை அன்னையுடன் அதன் மகன்கள், மகள்களான நாமும் சேர்ந்து, இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ, அதனைத் திட்டமிட்டு செயலுக்கு கொண்டுவர வேண்டும்.
செயல் மனிதனுடையதாக இருக்கும் போது இயற்கையின் நியதிப்படி விளைவை இயற்கை தருமல்லவா? இந்தச் சமுதாயம் உய்வதற்கான வழிகளை வேதாத்திரி என்கின்ற திருமகனார் வழியாக சமுதாயச் சிக்கல்களையும் கூறி, அதற்கான தீர்வுகளையும், இயற்கை அன்னை அருளியுள்ளாள். அதனை நாமெல்லோரும் முதலில் எண்ணத்தால், இதயத்தால் ஆமோதிக்க வேண்டும்(endorse). ஆமோதித்தலின் வலிவு அதிகமாக அதிகமாக திணிவு பெறுவதால், இயற்கை தன்னுடைய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது எளிதாகிவிடும் (Fraction demands. Totality supplies.) இயற்கை அன்னையும் நம் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி எதனையும் செய்யமாட்டாள்.
இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கே உண்டு.
இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்றார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே ஆதங்க எண்ணங்கள் வலுப்பெற்றால்தான் பூரணத்துவமாகிய இயற்கையின் மனிதகுலத் தன்மாற்றம் பூரணத்துவம் பெறும்.
மனிதன், “கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்” என்கின்ற பாடல் வரியின் மூலம், அறியாமையிலும், அறிந்தும் மனிதன் செய்கின்ற செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றவனாக இருக்கிறான் இறைவன் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆனால் இறையை உள்ளத்திலே வைத்துக்கொண்டுள்ள நற்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது.
இங்கே ஆழ்ந்து சிந்தித்தால் இயற்கை ஏன் மனிதனாக வந்தது என்று தெரியவரும். அதுவேதான் மனிதப் பிறவியின் நோக்கமும், அந்த நோக்கத்திற்கேற்ப வாழ்தலால் அடைகின்ற பயனுமாகும்.
இயற்கை ஓரறிவிலிருந்து ஐயறிவு வரை சீவ இனங்களாக தன்மாற்றமாகி வரும்போது ஒவ்வொரு புலன் உணர் கருவிகள் கூடிக் கொண்டே வந்தது தெரிய வருகின்றது. ஆனால் ஆறாம் அறிவாக வரும்போது புலன் உணர் கருவி ஏதும் உருவாகவில்லை. புலன் உணர் கருவி ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவிற்கு புலன்கள் வழியாக ஏதும் உணர்வதற்கில்லை என்பதும் தெரிய வருகின்றது. ஆனால் ‘தான் ஆறாம் அறிவுடையவன்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் உயிரினமான மனிதனாக வந்துள்ளது இயற்கை. இதற்கு என்ன காரணம்?
இயற்கையில் எதற்கும் காரணமில்லாமல் இருக்காது. எல்லா இரகசியங்களையும், காரணங்களையும் ஆறாம் அறிவு அறிய முடியாவிட்டாலும், வாழ்க்கைக்கு அவசியமானதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சோ்ந்தது தான் நான் யார் என்கின்ற இயற்கை இரகசியமும்.
ஆறாம் அறிவிற்கு ஏன் புலன்கள் உருவாகவில்லை, இயற்கையின் நோக்கமும் ‘நானின்’ நோக்கமும் ஒன்று என்பது பற்றியும், நான் யார் அறிதலால் வரும் பயன்கள் மற்றும் அறியாதலால் வரும் துன்பங்கள் பற்றியும் அடுத்து வரும் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில் அறிவோம்.
வாழ்க வளமுடன்.
தொடரும்.