FFC – 117-இறை அருள் பெற…….

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

இறை அருள் பெற…….

FFC – 117

09-09-2015-புதன்

பரிணாமக்கசடுகள்:

FFC-117-அறமே மதம்

என்கின்ற பாடலோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவோடு பரிணாமக் கசடும் வந்து விட்டது என்று பார்த்தோம். இன்று அதிலிருந்து தொடர்வோம். பரிணாமக் கசடு என்றால் என்ன? பரிணாமக் கசடு வந்து விட்டது என்பது, விலங்கினப் பண்பும் மனிதனிடம் வந்துவிட்டது என்பதனைக் குறிக்கின்றது.

விலங்கினப் பண்பு என்பது பிறர் வளம் பறித்துண்ணலாகும். புலி மானைக் கொன்று தின்பது பிறா் வளம் பறித்துண்பதாகும். பிறர் வளம் பறித்தலில், மூன்று கொடூரச் செயல்கள் நடக்கின்றன. அவையாவன,

  1. பிற உயிர் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
  2. பிற உயிரைச் சித்திரவதைச் செய்தல்
  3. கொலைசெய்தல்

ஆகிய மூன்று செயல்கள் நடை பெறுகின்றன. விலங்கினத்தில் அது செயல்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் மனிதனிடம் காணப்பட்டால் அது மூவகைக் குற்றங்களாகி விடுகின்றன.

புலி மானைக் கொன்று உணவாகக் கொள்வது இயற்கையால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மனித அறிவிற்கு பிறா்வளம் பறித்தல் என்பது அநீதியானது. எனவே இவ்வகைக் குற்றம் புரிந்தவா்களைத் தண்டிக்கச் சட்டங்கள் உள்ளன. இருப்பினும் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமலும் பிறர்வளம் பறித்தல் அடிப்படையாகக் கொண்டக் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எந்தவகைக் குற்றங்களாக இருந்தாலும் பெரும்பாலானக் குற்றங்கள் விலங்கினப் பண்பை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

புலி மானைக் கொல்லும் நிகழ்ச்சியில் புலிக்கு மானின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்கத் தெரியாது. ஒரு வேளைத் தெரிவதாக வைத்துக் கொண்டால் புலி மானைக் கொல்லாது. இது சாத்தியமில்லை புலிக்கு. புலி புல்லைத்தான் தின்ன வேண்டியிருக்கும். ஆகவே விலங்கினப் பண்பில் பிறா் உணர்வை தன்னுணர்வு போல் மதிக்கும் பண்பு கிடையாது. அந்த விலங்கினப் பண்பே மனிதனிடம் இன்னமும் அதாவது மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் மறைய வில்லை. மனிதனின் தரம் மனித அளவிற்கு உயரவில்லை. ஆகவேதான் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இரதாகிருஷ்ணனுக்கு  “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை– Evolution is still not complete) என்கின்ற உண்மையை நம்மிடம்பதியவைக்க வேண்டிய அவசியம் வந்தது.

புலி மானைக் கொன்று உணவாகக் கொள்கின்ற உதாரணத்தின் மூலம் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதனை விளக்கி, அந்த பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கசடாக உள்ளது என்பதால்.  “எல்லா மனிதர்களும் அவ்வாறு பிறர் வளம் பறித்தலாகிய கொலை செய்வதில்லை, எனவே விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் உள்ளது என்பது சரியில்லை” என ஒரு சிலர் நினைக்கலாம்.
குடும்பங்களிலேயேகூட பிறர்வளம் பறித்தலைக் காணமுடியும். மாமியார் தன்மகள் போல் பார்க்க வேண்டிய மருமகளைச் சொல்லால் கடிவது விலங்கினப் பண்பையேச் சாரும். எப்படி? விலங்கினப் பண்பில் உள்ள, பிறர் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்காமை மாமியாரிடமும் உள்ளது. அதாவது தான் கடிவதால் மருமகள் துன்புறுவதை மாமியார் தன்னுணர்வு போல் கருதாமை தான் காணப்படுகின்றது. தெரிந்திருந்தால் அன்பாகச் சொல்லியிருக்கலாம். இது மருமகளுக்கும் பொருந்தும். மருமகள் மாமியாரை தாய் போல் கருதுகின்ற பெருந்தன்மை இருக்க வேண்டும். பொருந்தா குடும்பச் சூழலில் பிறக்கும் வருங்கால சமுதாயச் செல்வங்களான குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?

நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயா்வு அளிக்கும் போது, அந்த உயர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பிற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்தான் தோ்ந்தெடுக்கப்படுவார். எப்படி பதவி உயர்விற்கு அப்பதவிக்கானக் கடமைகளை ஆற்றும் பொறுப்பிற்கானத் தகுதியும் திறமையும் அவசியமோ, அதுபோல் வாழ்க்கையில், மகளாக இருந்து மருமகளாக உயரும் போது அதற்கானப் பொறுப்பினை ஆற்றும் நற்குணத் தகுதிகளையும், நற்குணத் திறமைகளையும் பெற்று குணவதியாக, மகளாக இருக்கும் போதே பெற்றிருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் துணை புரிய வேண்டும். அம்மாவாக இருந்து மாமியாராக உயர இருக்கும் குடும்பத்தலைவிக்கும், மகளாக இருந்து மருமகளாக உயர இருக்கும் பெண்ணிற்கும் ஆலோசனைக் கூறும் பயிற்சி(counselling course) தேவையாக உள்ளது. அந்தத் தேவையினை ஏற்கனவே  ‘மனவளக்கலை’ பூர்த்தி செய்து வருகின்றது என்றால் மிகையாகாது. மனிதனை மாண்புடையவனாக்கும் பயிற்சியான மனவளக்கலையை திருமணத்திற்கு முன்பே, அதாவது பதினைந்து வயதிலிருந்து பத்து வருடங்கள் முறைப்படிக் கற்றுப் பயிற்சியும் செய்து வந்தால் இது போன்ற குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து இயல்பாகவே மாண்புடையக் குழந்தைகள் பிறக்க ஏதுவான சூழ்நிலை நிலவும்.

இச்சிந்தனையின் ஆரம்பத்தில் நினைவுகூர்ந்த பாடலில், தன்மாற்றம் என்கின்ற பரிணாமத்தில், ஆதிமனிதர்கள் கூட்டத்தில், அறம் தோன்றிய நாளை அறுதியிட்டு கூறுகிறார். ஆனால் அவ்வாறு தோன்றிய, மூன்று அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவற்றை உள்ளடக்கிய அறம், மனித குலத்தில் வளர்ந்து செழிக்கவில்லை என்பதுதான் இன்றைய மனிதகுலத்தின் அவல நிலை.

மனிதன் என்றால் அவனிடம் மனிதம் இருக்க வேண்டும். ஒழுக்கம், கடமை. ஈகை ஆகிய பண்புகள் இருந்தால்தானே அவனிடம் மனிதம் ஒங்கியிருக்கும். மனிதம் ஓங்கினால் அன்பும் கருணையும் மலரும். அன்பும் கருணையும் என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் தானே அன்பும், கருணையின் வெளிப்பாடுகள். ஒழுக்கம் கடமை, ஈகை ஆகியவை இல்லாமல் எவ்வாறு அன்பும் கருணையும் மலரும்?!
மனிதம் வெளிப்படுத்துகின்ற மனிதகுலநிலைக்கு இன்றைய மனிதகுலம் முன்னேறிவரவில்லை என்பதனை ஆதங்கத்துடன் தெரிவிக்கவே “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை-Evolution is still not complete) என்கின்ற உண்மையைக் கூறுகிறார் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இராதாகிருஷ்ணன். அடுத்த விருந்தில் 13-09-2015 ஞாயிறன்று தொடர்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *