பழக்கமும் விளக்கமும்- 2/?

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

 
அறிவிற்கு விருந்து—232

05-10-2016—புதன்.

 வாழ்க வளமுடன்.
இன்றைய விருந்தில் சிந்திக்க இருக்கின்ற உட்தலைப்புகளாவன(sub headings):
1) அறநூல்களின் தற்போதைய பயன்பாட்டு நிலை என்ன?
2) சாதனையே அறநெறி(21-12-1961)
3) அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை:
4) வீடு கட்டுவதற்கு வரைபடம் மட்டுமே போதுமா?
5) பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?
6) மனம் என்பது என்ன?
7) மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்.

சென்ற அறிவிற்கு விருந்தில் பதிதல், பழக்கம், விளக்கம் பற்றி அறிந்து கொண்டோம். சிறப்பாக வாழ்வதில் வெற்றி கண்ட நெறியைச் சார்ந்து நிற்கும் சான்றோர்கள் மற்றும் அறிவை அறிந்த அறிஞர்களிடமிருந்து நேரிடையாகவோ அல்லது அவர்கள் அனுபவத்தால் கண்டுபிடித்து மனிதகுலத்திற்குத் தெரிவிக்க அருளிய அறநூல்களிலிருந்து அறநெறி விளக்கத்தை அறிந்து கொண்டு, உறுதிபடுத்தி, அது சரி என அறிந்து கொண்டு பிறகு அவற்றை திட்டமிட்டு, அறநெறிகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

அறநூல்களின் தற்போதைய பயன்பாட்டு நிலை என்ன?

      திருவள்ளுவர் திருக்குறளை அருளியுள்ளார். ‘ஒழுக்கத்தைப் பற்றி பத்து குறட்பாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் அருளியுள்ளார். இதுபோன்று பல அறிஞர் பெருமக்கள் அறநூல்களை அருளியுள்ளனர். அவற்றின் பயன்கள் என்னவாயிற்று? எந்த அறிவுரையாக இருந்தாலும் சரி, ஆலோசனையாக இருந்தாலும் சிந்தித்து, அது சரியா என்று உறுதிபடுத்த வேண்டும். பிறகு அதனை சாதனைக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் தற்போது அறநூல்களின் பயன்பாட்டு நிலை என்ன? அறநூல்கள் கூறுவதனை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இத்தருணத்தில் அறிஞர் திருவள்ளுவர் நம்சிந்தனைக்குள் பிரசன்னமாகிறார். நம் சிந்தனைக்குப் பொருத்தமாக திருவள்ளுவர் கூறியுள்ளதை அறிவோம். என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கல்வி எனும் அதிகாரத்தில் முதல் குறட்பாவிலேயே கல்வி எவ்வாறு கற்க வேண்டும், எதற்காக கற்க வேண்டும் என்று கூறுகிறார்.

கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.”                                   குறள் எண் – 391

பொருள்:

கற்கத் தகுந்த நூல்களை நம்மிடம் உள்ள குற்றம் நீங்க கற்க வேண்டும். அங்ஙனம் கற்றதற்கேற்ப நிற்க வேண்டும். அதுவே நெறியுடன் வாழ்வதாகும்.

மனிதன் சிந்திக்க உரிமை உண்டு. அறிஞர் கூறுவது சரி எனத் தெரிந்தால் அதனை பின்பற்ற வேண்டும்.
       அவ்வாறு சரி என தெரிந்தும் பின்பற்றமால் இருப்பது பற்றி சீன அறிஞர் கன்பூசியஸ் கூறுவதனைக்(சிந்திக்க அமுத மொழிகள் 208 – 27-08-2016 – சனிக்கிழமை)கவனிப்போம்.

“சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்”

. . . கன்பூசியஸ்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கின்றது அதனை எவ்வாறு வாழ்வது என்பதுபற்றிக் கூறுவதனையும் அறிந்துகொள்வோம்.

“வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.” (சிந்திக்க அமுத மொழிகள் 201—05-08-2016-வெள்ளிக்கிழமை)

… சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் இந்த கண்டுபிடிப்பைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. என்ன கவனிக்க வேண்டியுள்ளது?

1) ஏன் வாழ்க்கை போர்க்களமாக இருக்கின்றது என்கிறார்?
2) யாருக்கு? வாழ்கின்ற அனைவருக்குமே வாழ்க்கை போர்க்களமாக இருக்குமா?
3) யாருடன் போராட வேண்டும்? பிறரிடமா?
4) அதில் வெற்றி கொள்ள கோழைத்தனம் இல்லாது அஞ்சாது நிற்க வேண்டிய மனநிலை தேவை என்பதால் வாழ்க்கை எனும் போராட்டத்தில் வெற்றி கொள்வது அவ்வளவு கடினமா?

இக்கேள்விகளுக்கெல்லாம் பின்னர் (சிந்தனையின் முடிவில்) விடை காண்போம்.
பொதுவாக சிந்திப்பது எதற்காக? சிந்தித்து செயல்படும்போது விளைவு நன்மையாக இருக்கும். அதுவும் அருள்துறையில் சிந்திப்பது என்பது, தானும், சமுதாயமும் எவ்வாறு நலமுடன் வாழமுடியும் என்பதனைக் கண்டுபிடிக்கவேதான்.

இன்றைய சிந்தனையில் இதுவரை மூன்று அறிஞர்கள் திருவள்ளுவர், கன்பூசியஸ் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறுவதனை நினைவு கூர்ந்தோம். இவ்வாறு அறிவிற்கு விருந்து படைக்கும் நம் சிந்தனையைத் தூண்டியுள்ள அருளாளர் நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனையும் அறிவோம். ஒரே உண்மையைப்பற்றி அறிஞர்கள் பலர் கூறுவதனை அறிந்து, அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து அதனைப் பின்பற்றி நடப்பதற்கானத் தெளிவிற்கு வருவோம்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் சாதனையே அறநெறி என்கிறார். இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார். சாதனைதான் அறநூல்களின் பயனை ஏற்படுத்த முடியும். போதனை சாதனையாக வேண்டும் என்கிறார். அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

FFC-88-3-6-15-சாதனையே அறநெறி-கவி

அறம்பிறழாமல் இருக்க அதற்கு ஏற்ற கல்வி அவசியம் என்கிறார். தேவையானதெல்லாம் அறம் வளரவேண்டும். அதற்கு அறத்தை மலர்த்தும் கல்வி வேண்டும் என்கிறார். கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார். கல்வியின் அங்கம் நான்காக இருக்க வேண்டும் என்கிறார். எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கையை அறிந்த அறிவு(இயற்கைத்தத்துவ அறிவு)

அருளாளர்களின் அறம் சார்ந்த ஆலோசனைகள், அறிவுரைகள் அறநூல்களில் எழுத்தளவிலேதான் உள்ளது. அல்லது தெரிந்து வைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தெரிந்து வைத்துக் கொள்ளப்படுவதால் எவ்வாறு நன்மை உண்டாகும்?

வீடு கட்டுவதற்கு வரைபடம் மட்டுமே போதுமா?

         வீடு கட்ட முடிவு செய்துவிட்டோம். அதற்கு என்ன செய்யவேண்டும்?
வீடு கட்டுவதற்கு வீட்டின் வரைபடம் (blue print) தயாரித்து, அதற்குரிய அங்கீகாரம்(approval) வாங்க வேண்டும். அங்கீகாரம் வாங்கி வைத்துவிட்டால் வீடு கட்டியதாகிவிடுமா? அங்கீகாரம் குறிப்பிட்ட கால கெடுவை தாண்டினால் அங்கீகாரம் செயலிழந்துவிடும். அதற்குள் வீடு கட்டி முடிக்க வேண்டும். அதுபோல் அறம் பற்றி தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே பலனளிக்காது. அறத்தால் பழிச்செயல்பதிவுகளைப் போக்கி இன்பம், அமைதி அனுபவிப்பது என்பது அறத்தை பின்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே அறநூல்கள் தெரிவிப்பவனற்றை சாதனை ஆக்கினால் மட்டுமே நன்மை உண்டாகும். அதனால்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறநெறியைப் போதிக்க இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும், இனிமேலும் அறநூல்கள் புதிதாக அவசியமில்லை எனத் தைரியமாக, நாமும் சிந்தித்து அவர் கண்டுபிடிப்பை நாமும் மற்றொருமுறை கண்டுபிடிக்கும் வகையில் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ஆனால் அவற்றை சாதனையாக்க பின்பற்றக்கூடிய கல்விமுறை வேண்டும் என்கிறார். இவ்வாறு கூறுவதற்கானக் காரணம் என்ன?

அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை:

ஏன் அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை? அறம் என்பது என்ன? ஒழுக்கம்தானே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் உயிரைவிட மேலானது ஒழுக்கம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் ஒழுக்கம் என்பது மனித வாழ்வில் இயல்பாகவில்லை. காரணத்தை அறிஞர் ரூஸோ கூறுவதிலிருந்து அறிந்து கொள்வோம். அறிஞர் ரூஸோ என்ன கூறுகிறார்? அறிஞர் ரூஸோ ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” (ஏற்கனவே சிந்திக்க அமுத மொழி பயிற்சியில் இதனை அறிந்திருக்கிறோம்) என்று கூறுகிறார். எனவே ஒழுக்கத்தைவிட்டுவிட முடியுமா? ஒழுக்கத்தில் வாழ்வதற்கு ஏன் போராடவேண்டும் என்கிறார்? ஒழுக்கத்தில் வாழ்வது அவ்வளவு கடினமா? ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளது அனைத்தும் சிறப்புடைய ஆறாம் அறிவிற்கான விளக்கங்களாகும்.

அவ்விளக்கங்கள் ஏன் செயலுக்கு வரமுடிவதில்லை?

1) அறநெறி விளக்கம் விளங்காமல் உள்ளதா?
2) அறநெறி விளக்கத்தின் பயன் தெரியவில்லையா?
3) அல்லது அறநெறி விளக்கம் விளங்கியும் அதனை சாதனைக்கு கொண்டு வருவதில் விருப்பம்
இல்லையா?
4) விருப்பம் இருந்து சாதனைக்கு கொண்டு வருவது கடினமாக உள்ளதா?
5) அறநெறி விளக்கம் பற்றிய விளக்கக்கல்வி தற்போதைய கல்வி முறையில் இருக்க வேண்டுமா?

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களில் முதல் இரண்டு காரணநிலையில் மனித சமுதாயத்தில் பெரும்பாலோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
மூன்றாவது காரணநிலையில் ஒரு சிலர் இருக்கின்றனர்.
நான்காவது காரணநிலையைில் வெகுசிலர் இருக்கின்றனர். அந்த வெகுசிலரிலும் அநேகர் ஒழுக்க வாழ்வு வாழ்வது கடினமாக உள்ளதால் அதனை கைவிட்டுவிடுகின்றனர்.

இந்த நான்கு நலைகளிலும் மனிதர்கள் உள்ளதால், ஐந்தாவதாக கூறப்பட்டுள்ள ‘விளக்கக் கல்வி’ கல்வி முறையில் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய மகரிஷி அவர்களின் அவா.

ஏன் ஆறாம் அறிவு ஒழுங்காற்றலிருந்து வந்தும்/பிறந்தும், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் அதற்கு ஏன் கடினமாக உள்ளது என்பதனை மகரிஷி அவர்கள் கூறுவதனையும், அதற்கானத் தீர்வாக, அவ்வைத்தாய் “இளமையில் கல்” என்று கூறியபடி இளமையிலிருந்தே கற்க வேண்டிய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்று அருளார்கள் வரிசையில் வந்துள்ள அவ்வையாரின் இளவல் மகரிஷி அவர்கள் கூறுவதனையும் விளங்கிக் கொண்டு பயன் பெறுவோம். மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?

       இந்தக் கேள்வியினைக் கேட்டுத்தான் அதற்கான விடையை விளக்கமாகக் கூறுகிறார். இக்கேள்வியில் உள்ள பழக்கம், விளக்கம் பற்றி சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம். இப்போது ஒழுக்க வாழ்வு வாழ ஏன் அறிவு போராட வேண்டியுள்ளது என்பதனை அறிந்து கொள்வோம். அறிவு விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் மனம் அதற்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே விளக்கம் என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மனம் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறார் மகரிஷி அவர்கள்.

FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

மனம் என்பது என்ன?

உயிரின் படர்க்கை நிலையே மனம் என்கிறார் மகரிஷி அவர்கள். மனம் பத்து படிகளில் இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார். உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம். ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்பனவாகும் அவை. இவற்றில் முதல் ஏழும் மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் பொது. முதல் ஏழும் உடற்கருவிகளைக் கொண்டே நடைபெறுவதால் அவை செயல்பதிவுகளாகின்றன. மற்ற மூன்றுமாகிய ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்பன மூளைச்செல்கள் மற்றும் கருமையத்தைக் கொண்டு நடைபெற வேண்டியுள்ளது. விளக்கத்தை விளங்கிக் கொள்ளவதால் இது விளக்கப்பதிவுகளாகின்றன. பெரும்பாலும் மனிதமனம் மனதின் கடைசி மூன்று படிகளான விளக்கப்படிகளுக்கு வருவதில்லை. அதாவது மனிதன் எப்போதும் விழிப்போடு சிந்தித்து செயல்படுவதில்லை. எனவே நெடுங்காலமாக பழகி வந்த பழக்கப்பதிவுகள் மற்றும் இப்போது பெறுகின்ற விளக்கத்தால் ஏற்படுகின்ற விளக்கப்பதிவுகளின் அழுத்த வித்தியாசத்தால் முரண்பாடு வருகின்றது. அதுவே போராட்டமாகத் தெரிகின்றது. சிலர் தொடர்விடாமுயற்சியுடன் விளக்கப்பதிவிற்கு வலிவு சேர்த்து வெற்றி பெறுகின்றனர். பலர் தொடர்விடாமுயற்சி செய்வதில்லை. எனவே பழக்கப்பதிவே வெற்றி பெறுகின்றது. இருப்பினும், பல்லாயிரம் பிறவிகள் ஏற்ற பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவியிலே மாற்றி அமைக்க முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். (கவி எண். 1743)

piRavipperunkadal

மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்:

        ‘மனிதனிடம் உள்ள தீமை, பழக்கம்’ என்பது யார் கூறியது? மகரிஷி அவர்கள். எப்படி அவ்வாறு கூறுகிறார்? மனிதனின் வாழ்வில் பெரும்பாலும் துன்பங்களே காணப்படுகின்றன. துன்பங்கள் வருகின்றது என்றால் அது மனிதன் கொண்டிருக்கின்ற பழக்கத்தால்(நடவடிக்கைகளால்) வருகின்றது. துன்பம் வந்தால் அது மனிதனுக்குத் தீமைதானே. எனவே ஒரு பழக்கம் துன்பத்தை தருகின்றது என்றால் அப்பழக்கத்தை நீக்குவதற்கான விளக்கம் பெற்று மாற்றாக நன்மை தரும் பழக்கத்திற்கு வரவேண்டும்.
மனிதவாழ்வில் துன்பத்தை அனுபவிப்பதற்கு ஒரே காரணம் பழக்கம்தானா? ஆம்! ஆன்மா இப்பிறவி எடுத்ததற்குக் காரணம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைப்பயனை அனுபவிக்கவே! இதனை ஒரு பெரியவர் ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார். அவ்வாறிருக்கும்போது எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளின் கணக்கு எங்குள்ளன? கருமையத்தில் பதிவுகளாக உள்ளன. அப்பதிவுகளே பிறவி எடுத்து வாழ்வதற்கு அடிப்படையாக உள்ளன. கருமையப்பதிவுகளே மனிதனின் தன்மையாக உள்ளன. மீண்டும் பிறவி எடுப்பதற்காக மனிதன் பிறப்பதில்லை. மீண்டும் பிறவாதிருக்கவே இப்பிறவி எடுத்துள்ளான். எனவே கருமையப்பதிவுகளை தூய்மை செய்து கொண்டு பிறப்பு-இறப்பு சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அறிவை அறிந்த குருவை தரிசித்து அவரது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு தெளிவு பெற விளக்கம் பெற வேண்டும். அவ்விளக்கத்தை செயலுக்கு கொண்டு வருவதன் மூலம் பழைய தீய பழக்கங்களை செயலிழக்கச் செய்ய வேண்டும்.
ஆனால் நடைமுறையில் நிலைமை அவ்வாறு இல்லை. பழக்கங்கள் தீயபழக்கமாக இருந்து துன்பம் அனுபவிக்கும் பட்சத்தில், இன்பம் அனுபவிக்க அத்தீயபழக்கத்தை நற்பழக்கமாக மாற்றுவதற்கு விளக்கம் பெற்று அதனை வாழ்வில் பழகவேண்டும். அவ்வாறு நற்பழக்கமாக மாற்றுகின்றபோது பெரும்பாலும் தீமை தரும் பழைய பழக்கப்பதிவுகளே வெற்றி கொள்வதாக உள்ளன. எனவேதான் மனிதனிடம் உள்ள தீமை, பழக்கம் என்கிறார். மேலும் மனிதனை ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம். அடுத்த விருந்தில் (09-10-2016—ஞாயிறு) அன்று ஏன் விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளிடம் தோற்றுப் போகின்றன என்பது பற்றி ஆராய்வோம்.   வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *