224-பிறவிப் பயனை நல்கும்! 8/?

வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

 
பிறவிப் பயனை நல்கும்! 8/?

அறிவிற்கு விருந்து—224

07-09-2016—புதன்.

gurudevar

சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்.

                                                                            . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.
ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்பவரின் நிலை,
எல்லாவற்றையும் துறந்துவிடுவதுதான் எனத் தவறாக எண்ணி அச்சம் கொண்டு,
வாழ்க்கையாகிய விருந்தில் ஆன்மீகத்தை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையினை மாற்றி,
சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கை ஏற்றி தொடர்ந்து எறியச் செய்து,
ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் வேறு வேறன்று, ஒன்றேயான வாழ்வியல் கலை என்கின்ற தெளிவினை ஏற்படுத்தி,
ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் கலந்த சரிவிகித உணவாக்கி
அறிவிற்கு இயற்கையின்/இறையின் கருணையினால் அருளப்பட்டுள்ள விருந்தாகிய
மனவளக்கலையின் பயனாகவே தொடர்ந்து பிறவிப்பயன் பற்றி சிந்தித்து வருகிறோம்.

சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கபட்டுள்ளது:

இருபதாம் நூற்றாண்டில் அருளப்பட்ட மனவளக்கலை சமுதாயத்தில் என்ன செய்து வருகின்றது என மனவளக்கலைஞரல்லாதோர் அறிய விரும்பி வினவினால் என்ன பதில் அவர்களுக்காக காத்திருக்கின்றது?
எண்ணெய், திரி இருந்தும் எரியாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு முதன் முதலாக தொடர் ஒளியை சமுதாயத்தில் வீசச் செய்துகொண்டுள்ளதே இந்த மனவளக்கலை’ என்பதே பதிலாகும்.
சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு, தொடர்ந்து சுடர்விடும்படி ஏற்றிவைக்கப்பட்டுள்ளதால், அதற்கு சான்றாக சிந்தனையின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்ள சிந்தனை என்பது என்ன என்று சிறிது நேரம் சிந்தித்துவிட்டு இன்றைய விருந்தை அருந்தச் செல்வோம். பொதுவாக அறிவிற்கு விருந்தே சிந்தனையின் அடிப்படையில் அமைந்திருந்தாலும்,  அடுத்தவிருந்தான,  ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரவர்களின் சுயசிந்தனையே உதவியாக இருக்கும் என்பதால் சிந்தனையைப்பற்றி இன்று சிந்தித்துவிட்டு அடுத்த விருந்தில் ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி (11-09-2016) சிந்திப்போம்.

சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்:

சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கின்ற சொற்றொடர் புதிதாகவும், புதிராகவும் உள்ளதே. சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்றால் என்ன? சிந்திப்போம்.

இப்பூவுலகில், சிந்தித்து வாழ்பவர்கள் வெகு சிலரே! வாழ்கின்ற மக்களின் தொகை எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், சிந்தித்து வாழ்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் உள்ளனர். மற்றவர்கள் சிந்திப்பதில்லையா என்கின்ற கேள்வி எழலாம். சிந்தனையோடு சிந்திப்பவர்கள்தான் சிந்திப்பவர்கள். சிந்தனையோடு, சிந்தனை செய்து, பிறகு செயலுக்கு வரவேண்டும். அவ்வாறுச் சிந்தித்து செயலுக்கு வருபவர்கள் அரிதாக உள்ளனர்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த சீன தேசத்து அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்கிறார். ஏன் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்? ‘சரியானது எது என்று உணர்ந்த பிறகும்’ என்று அறிஞர் கன்பூசியஸ் சொல்வது சிந்திப்பதைத்தான். எனவே இந்த அமுதமொழியை சிந்தனை செய்வதில் பொருத்திப் பார்த்தால், இரண்டு உண்மைகள், புலப்படும்.

ஒன்று சிந்திப்பது என்றால் என்கின்ற வரையறை.
மற்றொன்று சிந்தித்ததை செயல்படுத்தமால் இருப்பது கோழைத்தனம் என்பது.

‘சரியானது எது என்று’ உணர்வது எப்போது சாத்தியம்?

‘சரியானது எது என்று’ உணர்வது அறிவிற்கு எப்போது சாத்தியமாகின்றது? சிந்தனையோடு, சிந்திப்பவர்களுக்கு மட்டுமே  ‘சரியானது எது என்று’ உணர்வது சாத்தியமாகின்றது. சிந்திப்பதற்கு சிந்தனையையே அடைமொழியாகச் சேர்த்து ‘சிந்தனையோடு சிந்திப்பது’ என்று சொல்வதன் பொருள் என்ன?
ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது என்றிருக்கும்போது மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே சிந்திப்பதில்லை என்றும் ஒட்டு மொத்தமாகவும் கூறமுடியாது. சிந்திக்கின்ற ஒரு சிலர் ஒன்றைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றால் தொடர் விடாமுயற்சியாக, சிந்திக்க எடுத்துக்கொண்ட பொருளில் தெளிவு கிடைக்கும்வரை (அதற்கு விடை கிடைக்கும் வரை) அச்சிந்தனையைத் தொடர் சிந்தனையாக நீட்டிப்பதில்லை. அவர்களுக்கு மனச்சோர்வு (MENTAL FATIGUE) அதற்குள் வந்து விடுகின்றது. திக்கு முக்காடுகின்றனர். அதனைப்போக்க புலன் வழி இன்பத்திற்குச் சென்று விடுகின்றனர் அல்லது அறிவை வேறு திசை நோக்கிச் செலுத்தத் தயாராகின்றனர். அவ்வாறு தொடர் விடாமுயற்சியாக சிந்திக்கின்ற ஒரு சிலரில் வெகு சிலரே முடிவு வரும் வரைச் சிந்தித்து தெளிவு/விடை கண்டு தானும் பயனடைந்து, தெளிவு கண்டதற்கு நன்றி செலுத்தும் முகமாக, தனக்குள்ள பொறுப்பாலும், பொறுப்பின் காரணமாக சமுதாயத்தின் மீது வளர்த்துக் கொண்ட அக்கறையால் அதனை சமுதாயத்திற்கு பொன்மொழிகளாகவோ, கவிகளாகவோ, உரைநடைகளாகவோ அருளி அறிவுத் தொண்டாற்றுகின்றனர்.

அதனால் பயன் அடைந்த சமுதாயம் அவர்களை அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஞானிகள் என்று அழைத்துப் போற்றுகின்றது. அந்த அளவிலேயே அந்த பயன் நின்றுவிடுகின்றது. ஆனால் அறிஞர்களைப் போன்று தானும் சுயசிந்தனையாளராக வேண்டும் என்கின்ற அவா எழவேண்டும். சரியான சிந்தனை என்றால் அந்த சிந்தனையின் முடிவைக் கொண்டு புரியும் செயலின் செயலால் விளைவு நல்லதாக அமைய வேண்டும். இல்லை எனில் அந்த செயல் சிந்தித்து எடுத்த முடிவின்படிதான் செய்யப்பட்டது என்று சொல்வதில் அர்த்தமில்லை. சிந்திப்பது எதற்காக என்கின்ற புரிதலில் சிந்தனை செய்வதைத்தான் மகரிஷி அவர்கள் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். கேட்பதில் கவனத்தோடு கேட்பது சிறப்பு என்று சொல்வதில்லையா? அதுபோல் தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்று சொல்வதும். அதுபோல்தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். முதல் வாக்கியத்தில் கேட்பதற்கு கவனத்தோடு என்பது அடைமொழியாக உள்ளது. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் சிந்தனைக்கு சிந்தனையே அடைமொழியாக உள்ளது. சிந்தனையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொல்வதற்காக ‘சிந்தனையோடு’ என்கின்ற வார்த்தை அடைமொழியாக இல்லாமல் வேறு எந்த வார்த்தை பொருத்தமாக இருக்க முடியும்? எனவே சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அறிவின் பணி எண்ணுவது. எண்ணுவதுகூட ஒருவழியில் சிந்தனை என்றே கொண்டாலும் சிந்தனையோடு எண்ணுவது சிறப்பு. அதனைத்தான் சிந்தனையோடு சிந்திப்பது என்கிறார். சிந்தனையோடு சிந்திப்பது என்பதற்கு சிரத்தையோடு சிந்திப்பது என்றுகூட பொருள் கொள்ளலாம்.

சிந்தனைப் பற்றி மகரிஷி அவர்களின் ஒரு சில பொன்மொழிகள்:

சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் என்கிறார்.
சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு என்கிறார்.

விளக்கம்: சிந்திப்பதெல்லாம் எதற்காக? மனிதனின் நன்மைக்காகத்தானே! நன்மை எப்போது வருகின்றது? சிந்தித்த பிறகு அதனை செயல்புரிவதன் மூலம் வருகின்றது. நல்லது விளைவாக வருகின்றது என்றால் அச்செயல் நல்ல செயலாகத்தானே இருக்க முடியும். பண்பு என்றால் ஒன்றின் பண்பு என்று பொருள். எனவே தான் சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதலால் வருவது நன்மையாக இருப்பதால் அதனை நற்பண்பு என்கிறார்.

இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும் சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான் என்று, தான் வாழ்ந்து கண்ட அனுபவத்தால் உறுதி கூறுகின்றார்.
தெய்வத்தைப் போற்றி வழிபட்டு வாழ்வோர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்து உயர்வார் என்கிறார்.  சினம், அச்சம்(FEAR IS THE GREATEST SIN) ஒழியச் சிந்தனையை ஏற்றி சீவன் நிலைகளை நன்குணர வேண்டும் என்கிறார். சமுதாயத்தில் உள்ள தனிமனிதனும், குடும்பங்களும் துன்பங்களையும் சிக்கல்களையும் அனுபவிக்கிறார்களே தவிர அவற்றைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை செய்ய யாருக்கும் நேரம் இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார்.

யாவற்றையும் சிந்தித்து தங்கள் வாழ்க்கையில் கொண்டுவந்து, அப்புறம் அதை நாட்டிற்குக் கொடுங்கள் என்கிறார்.

பிறந்தவர்கள் அனைவருமே இறக்கும் வரை வாழ்கிறார்கள். அதனால் எல்லோரையும் வாழ்ந்ததாகக் கொள்கின்றதா இந்த சமுதாயம்? கொள்வதில்லையே!
இல்லையே! வாழ்கின்றவர்களில் ஒரு சிலரைத்தான் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்கின்றது இந்த சமுதாயம். ஏன்? அவர்கள் எல்லோரையும் போல், சிந்திக்காமல் வாழ்வதில்லை. அவர்களது மூச்சே சிந்திப்பதுதான். இடைவிடாது சுவாசம் நடந்த கொண்டிருப்பது போல் ஆராய்ச்சியும் சிந்தனையும் அவர்களிடம் நடந்துகொண்டே இருக்கும்.

இறக்கும் வரை எவ்வாறு சுவாசம் அவசியமாக இருக்கின்றதோ, அதுபோல் சிந்திப்பதும் நடந்திருக்கின்றது அவர்களது வாழ்வில். சுவாசிப்பது அனிச்சைச் செயல். தானாக நடப்பது. அதுபோல் சிந்திப்பதும் அவர்களின் வாழ்வில் அனிச்சையாக நடப்பது. எனவே அவர்களை சிறப்புப் பெயர்களால் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் எனப்படுகின்றனர்.

தவறு எப்போது நடக்கின்றது?

சிந்திக்காமல் செயல்படும்போது தவறு நடக்கின்றது. ஏனெனில் சிந்திக்காதபோது செயலின் உடன் அல்லது பின்விளைவு கணிக்கப்படுவதில்லை. எனவே செயலுக்கு விளைவு, நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம் ஆகிய ஐந்து காரணிகளுக்கேற்ப வருவதால், சிந்திக்காதபோது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்யப்படும் செயல்களின் விளைவு ஐந்தில் ஏதாவது ஒரு காரணி சரியாக அமையாவிட்டாலும் சரியானதாக இருக்காது. ‘விளைவு சரியானதாக இருக்காது’ என்பது விளைவு துன்பமாக வருவதைத்தான் குறிக்கின்றது. துன்பத்தை அனுபவிக்கவா மனிதன் செயல் புரிய வேண்டும்?’ தன் கண்களைத் தன்விரல் கொண்டே குத்திக் கொள்வதுபோல் அல்லவா உள்ளது சிந்திக்காது செயல்புரிவது!

சரியானதை செய்யாது இருப்பது எவ்வாறு கோழைத்தனம்?

சீன அறிஞர் கன்பூசியஸ் கூறும் ‘சரியாக எது என்று உணர்வது’ சிந்தனை என்று சிந்தித்து அறிந்து கொண்டோம். அவ்வாறு ‘சரியானது எது என உணர்ந்த பிறகும் அதனைச்
செய்யாது இருப்பது கோழைத்தனம்’ என்று அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது எவ்வாறு சரி என்றும்,
ஏன் இதனைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள சிந்திக்க வேண்டும்.

‘கோழை’ என்பது என்ன? கோழை என்றால் கபம், சளி(PHLEGM, SPUTUM) எனப்படும். கபமும், சளியும் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல் ஒரு மனிதன் கோழையாக. இருப்பதும் அவன் சிறப்புற வாழ்வதற்கு உகந்ததல்ல. கோழை என்கின்ற சொல் மனிதனின் மனதைப் பற்றிக் கூறும் சொல்லாகவும் உள்ளதையும் அறிவோம். ஒருவரை ‘கோழை’ என்றால் என்ன பொருள்? அவர் மன உறுதியோ, துணிச்சலோ இல்லாத நபர்(COWARD) என்று பொருள். ‘ஒரு கோழை இன்னொரு கோழையை உருவாக்குகிறான்’ என்கின்ற கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கோழையாக இல்லாமல் இருப்பதற்கு. கோழையாக இருக்கக் கூடாது எனில் பயம் கொள்ளக் கூடாது என்று பொருளாக இருந்தாலும், பயப்படுவதற்கு பயந்துதான் ஆக வேண்டும். உதாரணத்திற்கு ஒரு செயல் புரிவதற்கு முன் அதன் விளைவு நல்லதாக இருக்காது என்று தெரிந்தும் பயம் கொள்ளாமல் துணிச்சலோடு செய்வது விவேகமானதன்று. ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறைநீதியை மதித்து நடத்தல் கோழையன்று. பயம்கொள்வதன்று. பயத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது—‘FEAR IS THE GREATEST SIN’ என்பார். தேவையற்ற பயம் இருந்தால் கவலை வரும். அதற்காக அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

“சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்பதில் செய்யாமல் இருப்பது எவ்வாறு கோழைத்தனம் என்பதற்கு வருவோம்.
மகாக் கோழைத்தனம் என்பதால் மற்ற கோழைத்தனம் ஏதேனும் இருப்பின் அதனைவிட இது பெரிய கோழைத்தனம் என்றாகின்றது. கோழை என்பதால் சரி எனக் கண்டுபிடித்ததை செயல்படுத்தாதவர் மனஉறுதியோ, துணிச்சலோ இல்லாத தடுமாற்றம் (WAVERING) கூடிய மனத்தன்மை உடையவர் என்று பொருளாகின்றது என்பது. உண்மையன்றோ! ஏனெனில் சில அரிய சிந்தனைகள் மலர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருக்கும். அவ்வாறு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முடிவைச் செயலுக்குக் கொண்டுவராதவரை கோழை என்று சொல்லாமல் வேறு எவ்வாறு அழைக்க முடியும் சீன அறிஞர் கன்பூசியஸ். அவர்கள்?

சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவர முடியாமல் போவது ஏன்?

சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்தால்தானே சிந்தித்ததன் கனியை அருந்த முடியும்! சிந்திக்க முடிகின்ற அறிவிற்கு செயல்படுத்துவதற்கு ஏன் தயக்கம் ஏற்படுகின்றது? ஏன் பயம் ஏற்படுகின்றது? ஏன் கோழையாகிறான் செயல்படுத்துவதில் மனிதன்? ஒன்று அவன் சரி என சிந்தித்தது சரியில்லையோ என்கின்ற ஐயம் அவனுக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டு வந்தால் அதன் விளைவு சரியாக இல்லாமல்போனால் என்ன செய்வது என்கின்ற அச்சம் அறிவிற்கு. அல்லது தன்மீது நம்பிக்கையில்லைாமை. அல்லது சரியென சிந்தித்ததை செயல்படுத்தும்போது அவனது சுற்றத்தார் எழுப்புகின்ற எதிர்ப்பு இருக்கலாம். அவர்களையும் மீறி செயல்படுத்துவது முடியாமல் போகலாம். எது எப்படி இருந்தாலும் சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்தாதது சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது போன்று கோழைத்தனமே. பொதுவாக யாரும் தன்னை கோழை என்று கூறுவதனை ஏற்க மாட்டார்கள். காரணம் சுய கௌரவம். ஆனால் இதனை மேலும் துல்லியமாக அதாவது சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்திய உண்மைச் சம்பவத்தின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

என்ன சம்பவம் அது?

மகரிஷி அவர்கள் பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்து கொண்டார்? யாராவது சொல்லி அறிந்து கொண்டாரா? அல்லது தானாகவே அறிந்து கொண்டாரா? சான்றோர்களின் அறிவாற்றலின் துணையைக் கொண்டு, தானும் சுயமாகச் சிந்தித்து அறிந்து கொண்டதுதான் பிறவியின் நோக்கம் அறிந்தது. ‘பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது’ சரியென உணர்ந்ததை என்ன செய்தார் மகரிஷி அவர்கள்? செயலாக்கி வெற்றி பெற்றார். செயலாக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு உலகிற்கே விடிவெள்ளியாகத் திகழ்கின்ற வேதாத்திரியம் கிடைத்திருக்குமா? பிறவியின் பயன் இறைஉணர்வு பெறுவது சரி என சிந்தனையுடன் சிந்தித்து முடிவுசெய்ததே,

முதல்படியின் பேரின்பமே இரண்டாவது படி ஏற ஊக்கம்:

ஆரம்பத்திலேயே, முதல் படியிலேயே அவருக்கு பேரின்பத்தை கொடுத்ததால், மேற்கொண்டு பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவதற்காக ஊக்கத்தோடு அறநெறியில் நின்று விழிப்போடு இருந்து பொறுப்புடன் திட்டங்களைத் தீட்டி அதற்கான புனிதச் செயல்களை ஆற்றினார். விளைவு பேரின்பப்படிகளின் இரண்டாவது நிலைக்கு உயர்ந்து மகிழ்வுற்றார். எனவே அதேபோன்று இறை உணர் ஆன்மீக சாதகர்கள் முதலில் பிறவியின் நோக்கம் என்ன என்று அவரவர்களே கண்டுபிடிக்க சிந்தனையுடன் சிந்தித்து உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தியதை எந்தவித தயக்கமும் இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வர எத்தனிக்க வேண்டும்.

இறை அருள் தானே துணை புரியும்:

அவ்வாறு ஊக்கத்துடன் முயற்சி செய்து வரும்போது இறையே காப்பாக அமைந்து அந்த சாதகருக்கு அருள் புரிய/தடுத்தாட்க் கொள்ளக் காத்திருக்கும். காரணம் மனிதன் இறையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறை பத்தடி நோக்கிவருவதற்கு காத்திருப்பதே! தன்னை உணர வேறு வழியின்றி மனிதன் வழியாக உணர்வதற்காகத்தானே இறை அசையாத ஆதிநிலையிலிருந்து அசைந்து துகள்களாகி பஞ்சபூதங்களாகி, மற்ற உயிரினங்களாகி கடைசியில் மனிதனாக வந்துள்ளது. எனவே மனிதன் ஒரு அடி எடுத்து வைத்தால் இறை பத்தடி எடுத்து வைக்கும் என்பது உண்மையாகத்தானே இருக்க முடியும். அதனை அனுபவித்துப் பார்ப்போமே!

இதற்கு ஒரு உதாரணத்தைக் கூட அனுபவப்பட்ட பெரியவர்கள் கூறுவதுண்டு. கடலிருந்து நீர் ஆவியாகி மேகமாகி, மழைபெய்து நீர் நதியாகி நெடுந்தூரம் பயணித்து கடலில் சங்கமம் ஆகும் நிலையில் கடலே எதிர்கொண்டு சென்று நதியை தன்னுடன் இணைத்துக் கொள்ளுமாம்.

  இப்போது ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பது பற்றி சிந்தனையுடன் சிந்திப்போம். துறவு என்பது எது என்று அறிவதும், அந்த துறவு நிலையை முடிவாகப் பெறுவதும் பேரின்பப் படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

இதுவரை ஏழு அறிவிற்கு விருந்துகளில் பிறவிப்பயன் பற்றியே சிந்தித்து வருகிறோம். பிறவிப்பயன் அடையும் நான்கு படிகளில் முதல் இரண்டு படிகளை அறிந்து கொண்டோம். மற்ற இரண்டு படிகளான
‘துறவு’ என்பது என்ன என்றும்,
துறவு என்பது வாழ்க்கையைத் (உலகியல்) துறந்து விட்டு, இவ்வுலகில் எவ்வாறு வாழமுடியும் என்கின்ற கேள்விக்கான விடையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். சிந்திப்பதற்கேற்ப செயல்படுவோம்.

உலக அமைதி எந்த அடிப்படை உண்மையின் மீது அமைய இருக்கின்றது?
‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என ஜபிக்கும் அறிவு ‘துறவு என்ன என்பதும் துறவு எய்துவது எவ்வாறு பேரின்பத்தைத் தரும்’ என்பதனை அறிந்து கொள்வது சிறப்பு. வையகத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று உலக சகோதரத்துடன் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுவதற்கு, அந்த சூழ்நிலை எந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்? ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற வேதாத்திரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காலங்காலமாக இருக்கும் பழக்கத்தை, நல்லதைக் கருதி மாற்ற வேண்டுமென்றாலும், மாற்றம் அடிப்படையில் உண்மையைக் கொண்டதாக இருக்கின்றது என்பதனைத் அறிவிற்குத் தெரிவித்தாக வேண்டுமல்லவா?!

‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ – தாரக மந்திரம் வலிவு பெற. . .

‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற உண்மையை அறிந்துகொண்டு, அதில் உறுதியோடு இருப்பது ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற உலகை வாழ்த்தும் தாரக மந்திரம் வலிவு பெறுவதற்கு பேருதவியாக இருக்கும். ‘உணர்ந்து ஓதுவது’ என்பது சிறப்புடையது என்று மகரிஷி அவர்கள் வலியுறுத்துவதால் மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக அமைதியை, நாமும் கனவு காண்கிறோம் என்பதால் உலக அமைதிக்கு’ அச்சாரமான ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு’ என்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் உணர்ந்தவாறு நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை உறுதி செய்ய அவரவர்களின் சுயசிந்தனைஅவசியமாக உள்ளதால் சிந்தனையின் அருமை பெருமைகளைப் பற்றி இதுவரை ஆராய்ந்தோம். சிந்தனையைப் பற்றிச் சிந்தனையுடன் சிந்தித்தோம். இத்துடன் இச்சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(11-09-2016-ஞாயிறு) பேரின்பத்தின் மூன்றாவது படியினையும், நான்காவது படியினையும் சிந்திப்போம்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.