June 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 85

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    26-06-2015—வெள்ளி

    “வாழ்க்கையின் இலட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஞானம் தான் நம்வாழ்வின் உண்மையான இலட்சியம்.”              

                                                                                                             …… சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) இது எவ்வாறு சரி?
    2) சிந்தித்து கட்டுரை எழுதி உங்களுக்குள்ளாகாகவும் மகிழுங்கள்.  பகிர்ந்து பிறரையும் மகிழச்செய்து மகிழுங்களேன். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-84

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    25-06-2015 – வியாழன்

     

    “இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் இரு நிலைகளே” என்கிறார் மகரிஷி அவர்கள். இது எப்படி?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

  • யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 2/?   

    யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 2/?

    FFC- 94

                                                   24-06-2015–புதன்

    Scientist of Consciousness 

    ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம்.  அப்படியானால்  ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவு ஆகியவைகளைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிந்து கொள்ளுதல்  அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களில் சிலருக்கு.  அப்போதுதான் இன்றையச் சிந்தனையான  அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

         உயிர் என்பது ஆற்றல்.

         எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது.

         ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர்.

         உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.

         அதனை ஆன்மா என்றும்   சொல்வது உண்டு.   உயிரினம் என்பதற்கு சாட்சியே  உணர்வு. 

         உணர்வதற்கு வேண்டியது அறிவு.

         அறிவு இல்லாமல் உணரமுடியாது.

         ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது.  அறிவு எங்கிருக்கின்றது?

         உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு என்பதால்,

         உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்டால் உணர்வு இல்லை.

        ஆகவே உயிர் வெளியேறும் போது  உடலைஆண்டுகொண்டிருந்த அறிவும் வெளியேறிவிடுகின்றது.

         இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.

         அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை.  இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற  self made mechanism த்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக  உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது.  ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை(magnetic wave-energy)  புலன்கள் வழியாக வெளியிலிருக்கும் புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity)  உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது.  அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.

         மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வருகின்றன.  மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்து வரும் போது மனம்  அலைகின்றது என்கிறோம்.  ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம்  அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.

         ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால்  வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.  அதற்காகத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி, புலன்கள் வழியாக வெளியே சென்று கொண்டிருந்த மனதை திருப்பி, உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.

        ஆலயத்தில் சிலைவணக்கம் செய்யப்பட்டாலும், அங்கும்  அறிவுதான் வணங்கப்படுகின்றது.  இங்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை உற்று நோக்குவோம்.

            கருத்தும் கடவுளும்(16.12.1953)

             கடவுளை வணங்கும் போது,

              கருத்தினை உற்றுப்பார் நீ!

            கடவுளாய்க் கருத்து நிற்கும்

              காட்சியைக் காண்பாய் ஆங்கே! ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சிலை வடிவத்தில்  கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள்.  சிலையைக் கண்கள் பார்க்கும் போது  அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த நம் அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார்.   யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார்.  “ஒன்றே குலம்.  ஒருவனே தேவன்” என்கின்ற திருமூலர் வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.

          சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது.  அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் இந்த சமுதாயத்தில்.

             இயற்கை மனிதனுக்கு இரு கண்களை கொடுத்துள்ளதுபோல், மனிதன் வாழ்விற்கான இருநெறிகளை அறம் தழைக்க ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று அன்பு, மற்றொன்று கருணையுமாகும்.

    1)    அனைவரிடத்திலும் உள்ள ஆத்மா   ஒன்றிலிருந்து உருவான ஒன்றே என உணர்ந்து, பிறர்க்கு துன்பம் நேர்ந்துவிடக் கூடாது எனும் அளவிற்கு அன்பு மலரவேண்டும்.

    2)   அந்த அன்பு மலர்ந்த நிலையில் பிறர் படும் துயரைத் தன்துயராக எண்ணி அத்துயரில் இருந்து அவர் விடுபட்டு நலமடைய உதவி புரியுமளவிற்கு மனம் கனிந்து கருணை வெளிப்படவேண்டும்.

        இந்த இரண்டு நெறிகளை வளரச் செய்வதும் நிலைக்கச் செய்வதும் ஒவ்வொருவரின் முயற்சியாகஇருக்க வேண்டும்.முயற்சிக்கு பயிற்சி அவசியம்.  அந்தப் புனிதப் பயிற்சியினை அளிக்க, இயற்கையின் ஏற்படுத்தியதுதான்  கருத்தியலும், செய்முறையும் ஒருங்கே இணைந்துள்ள, அறிவுத்திருக்கோயிலில் கற்றுத் தரப்படும் மனவளக்கலையாகும்.

        மனித மனம் பண்பட வேண்டும், மனித மனம் பண்படுவதற்கான கல்விதான். அறிவுத்திருக்கோயில்களில் கற்றுத்தரப்படுகின்றது. இறை அருள் வேண்டுகிற மனிதன், இறையே அவனின் அறிவாகவே இருந்தும், அதனை பயன்படுத்தாமல் போனால் என்னென்று சொல்வது? வாழ்க்கை, துன்பம் நிறைந்ததாகத் தான் இருக்கும்.  இறையாகிய அறிவைப் பயன்படுத்துவதற்கு,  அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் இருந்து ஆட்சி செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தின் அறிவாட்சித்தரம் உயரும்.

        நாகரீகம் என்பது உடை உடுத்துவதாலேயே வந்திடாது.  நாகரீகம் என்பது வாழும்முறை, பண்பாடு ஆகியவைகளைப் பொருத்தது. மனிதவாழ்வின் பண்பாட்டின் உச்சமே நாகரீகம். நாக்கு, உள்ளம், மனம் ஆகிய மூன்று சொற்களை இணைத்து வந்த தொடர் சொல் — நா+அக(உள்ளம்)+இரிகம்(மனம்)=நாகரீகம்.  உள்மனம், புறமனம், பேச்சு ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இயக்கி வாழும் உயர்ந்த பண்பாட்டை நாகரீகம் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே எந்த அளவிற்கு அறிவாட்சித்தரம் உயா்ந்து வந்துள்ளதோ அந்த அளவிற்கு நாகரீகம் வளா்ந்து உயர்ந்துள்ளது எனலாம். அதனை நிறைவேற்றவே இயற்கை/இறை விரும்பி, ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள்.  அறிவுத்திருக்கோயில்களின் மகத்துவத்தையும், புனிதத்தையும் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொண்டு அறிவுத்திருக்கோயில்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

        ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதகுல வரலாற்றில், மனித மனம் மேன்மை அடைந்து வருகின்றது.  அவ்வாறு மனித மனம் மேன்மை அடைந்து வரும் சரித்திரத்தில்,  அறிவுத்திருக்கோயில்களின் தோற்றம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்கிறார் உலகின் முதல் அறிவின்-அறிவியலாளராகியதால்,உலகில் முதன்முதலில் அறிவுத்திருக்கோயில் நிறுவிய  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       மற்ற கோயில்கள் அந்தந்த மதத்தினருக்கென்று உருவாக்கப்பட்டன. ஆனால் அறிவுத்திருக்கோயில்களோ எல்லோருக்கும் பொதுவானது. எவ்வாறு பொதுவானது என்று பார்ப்போம்.

       இன்று உலக மக்கள் தொகை 720 கோடி என்கின்றனர். 720 கோடி உலக மக்களுக்கு எத்தனை கண்கள் என வினவினால் 1440(720×2=1440) கோடி கண்கள் என பதில் வரும். எத்தனை கைகள் என்றால் 1440 கோடி கைகள் என அதே பதில் வரும்.  ஆனால் 720 கோடி மக்களுக்கும் எத்தனை அறிவுகள் என்று கேட்கமுடியுமா? கேட்டால், 1440 கோடி அறிவுகள் என பதில் வருமா? எத்தனை அறிவுகள் என பன்மையில் கேட்க முடியுமா?  முடியாது. ஏன் பன்மையில் கேட்க முடியாது?  கண்கள், கைகள் போன்று அறிவிற்கு உருவம் கிடையாது.  உருவம் இருந்தால் ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை வரும்.  அப்படியானால் உருவமற்ற அரூபமாகிய அறிவிற்கு ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை உண்டா?  இல்லை. அப்படியானால் 720 கோடி மக்களுக்கும் இருக்கும் அறிவு அரூபமான ஒரே அறிவுதான். 720 கோடி உலக மக்களுக்கு உள்ள கண்கள் வெவ்வேறானவை என்று கூறுவதுபோல்  720 கோடி மக்களுக்கும் வெவ்வேறான அறிவுகள் என்று சொல்ல முடியுமா?  முடியவே முடியாது!  ஏனெனில் அறிவு அரூபமாக இருப்பதால் அவை அனைத்தும் ஒன்றேதான்.  அருவத்தில் எண்ணிக்கை கிடையாது.

       அடுத்த விருந்தில்(28-06-2015 ஞாயிறு) எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றே என்று மீண்டும் உறுபடுத்தியும், ஆகவே அறிவுத்திருக்கோயில்கள் உலக மக்கள் எம்மதத்தைச் சார்ந்திருந்தாலும், அனைவருக்கும் பொதுவானவை என்றும்,  தெய்வம் எவ்வாறு அறிவு  என்றும், அதன் மூலம் ஒன்றே தெய்வம் என்றும் ஒன்றே குலம் என்றும் ,அறிவுத்திருக்கோயில்களின் பணி என்ன என்பதையும் அறிய இருக்கிறோம்.

    வாழ்க வளமுடன்.                                                                          ……தொடரும் 28-06-2015