April 2018

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-276

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-276

    05-04-2018 – வியாழன்.

     

     

    தன்னை கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள், எதனைக் குறிப்பிடுகிறார்?  ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

  • ஆன்ம அலங்காரம் – 3/3

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    lotus

     FFC. C286.

    04-04-2018–புதன்

    3. மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம்

     

           ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும். அந்த உள்ளத்தின் அழுகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

    ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குச் சில விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரம் மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரம் என்பதிலோ ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலைக்கப்படாமல், மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகு கூடிக் கொண்டே இருக்கும். இன்முகமும் எளிமையும் செல்வமாகிவிடும்.

    ஆன்ம அலங்காரம் என்பது

    • ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக,
    • பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான
    • பிராயச்சித்தம்,
    • மேல்பதிவு செய்தல்,
    • பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம்
    • ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்தலாகும்.

    ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது.அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்?

    மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஏதேனும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப்படுகின்றது.
    ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாகத் தெரிவிப்பதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், இயல்பூக்கம் போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

    இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.
    இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறுகிறார்.

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
    ஆகுல நீர பிற.”

    பொருள்: மனிதன், மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அறன் என்பது அவ்வளவுதான் என்கிறார். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை (vain show, pomp-outward show) உடையவை என்கிறார் திருவள்ளுவர். ஆகவே மனத்தூய்மையால் ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.

    மகரிஷி அவர்கள் உடை ஒழுக்கம் பற்றி கூறுவதைக் கவனிப்போம். உடை அணிவதிலும் ஒழுக்கம் அவசியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-107-ஆன்ம அலஙகாரம்
    எனவே தேகாபிமானத்தை(body consciousness) நீக்கி ஆன்மாபிமானம் (soul consciousness) ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியில், உடல் அலங்காரத்தைத் தவிர்த்தல் நலம் பயக்கும். உடல் அலங்காரத்தைவிட ஆன்ம அலங்காரத்திற்கு முக்கியம் அளிக்க வேண்டும். ஆன்ம அலங்காரத்தில் அக்கறை வந்துவிட்டால் உடல் அலங்காரம் எதற்கு என விளங்கிவிடும். உடல் அலங்காரம் அவசியமில்லை என்பது உடலைப் புறக்கணித்தலாகாது. உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மிகையான உடல்  அலங்காரம் உடல் சுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இன்முகமும் எளிமையும்தான் ஆன்மீகத்தின் உச்ச நிலையும் செல்வமுமாகும். இன்முகம் மற்றும் எளிமை பற்றியும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். இதனையெல்லாம் எதற்காக இயற்கை/இறை கூறுவதற்கு ஏற்பாடு(மகான்களின் வாயிலாக கவிகள் மற்றும் அருளுரைகள்) செய்துள்ளது? வருங்கால சமுதாயம் அதனை மதித்து நடக்கவே இயற்கை/இறை மகான்களின் வாயிலாக அருளி அறிவுறுத்துகின்றது.

    FFC-107- ஆன்ம அலங்காரம்-துறவு

    வாழ்க வளமுடன்!

  • சிந்திக்கக் கவிகள் – 4

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்கக் கவிகள் – 4

    lotus

    கவியின் ஆயுளும் எண்ணிக்கையும்

    03-04-2018 – செவ்வாய்.

    உ.ச.ஆ.-03-04-33

    maharishi lighting a new year lamp

    மக்களைப் பற்றி மக்களுக்காகவே பாட்டெழுதியவர் வேதாத்திரி மகரிசி.

    அவர் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரிய செல்வம், ஏன் உலகமக்களின் கருவூலம்.

    அவருடைய அனுபவங்களும் தேடல்களும் வாடாத கற்பகப் பூச்செண்டனையது.

    எளிமை, இனிமை நிறைந்ந மகரிசியின் கவிதைகள் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் படித்து இன்புறும் தன்மையன.

    ஞானக் களஞ்சியக் கவிதைகளை உணர்ந்து படித்து அதன் வழிநடப்போர் தன்னிலை உணர்ந்து இறைநிலையையும் அறிந்து மகிழ்வர்.

    வேதாத்திரி ஒரு இறையுணர்வுத் தேனீ. பாமர ஞானி. அமைதி வழிகாட்டி. கவலையைக் கரைக்கும் கற்கண்டு.

    சினத்தைச் சீரறுக்கும் சிந்தனையாளர். ஆசைக்கு அணைபோடும் அமுதன்.

    காந்தப்புதையலைக் கவிதைப் புதையலாக்கிய காந்தன். இறைத்திறம் பேசும் இனியன்.

    அறவுணர்வு பாடும் அறவோன். குடும்பத்தைக் கோயிலாக்கும் கோமகன். அவரின் கவிதத் திறம்,

    “உள்ளத்துள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை

    தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை”

    என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கவிதைக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

    சி.க.ப.4.-கவி ஆயு எண்ணி-Image

    (கவியை ஓரிரு முறை வாசிக்கவும்)

    kavii

    பொருள் :

    உலகில் தன் கருத்தினை வெளிப்படுத்த மக்கள் அனைவரும் பேசுவர். அவருள் பத்தில் ஒருவர் எழுத்தறிவு பெற்றுள்ளார். அவர்களுள் பத்தாயிரத்தில் ஒருவரே கவி எழுதும் திறமை பெற்றவராவர். கவி எழுதுவோரில் சீவனுள்ள கவிதை எழுதுவோர் சிலரே. சீவனுள்ள கவிதைகளே உலக பொது நோக்கோடு அமைந்து விண்மீன்கள் போன்று நிலைத்து நிற்கும்.

    உட்பொருள்:

    கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் என்னும் தலைப்பிலமைந்த கவிதையில் வேதாத்திரி மகரிசி அவர்கள் பேச்சுத் திறன், எழுத்தாற்றல், கவியியாற்றல், சீவனுள்ள கவிதைகளென அழுத்தமாகவும் எளிமையாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    பேச்சுத்திறன் :

    பேச்சு என்பது அலை இயக்கம். இது எல்லோரிடமும் இயல்பாக எழுவது. அதனால் உலகில் எல்லோரும் பேசுவர் என்கிறார் மகரிசி. இதனையே “அணுத்திரள் ஒலி” என்பார் நன்னூலார். பிரபஞ்சத்தில் அணுமுதல் அண்டங்கள் ஈறாக சுழன்று கொண்டே இருப்பதால் அலை தோன்றிக் கொண்டே இருக்கின்றது. இவ்வலை மோதுதல், சிதறுதல், பிரதிபலித்தல், ஊடுருவுதல், இரண்டிற்குமிடையே ஊடாடுதல் என்ற நிலையிலேயே ஒருவர் மற்றவரிடம் தொடர்பு கொள்ள முடிகிறது. பிரபஞ்ச பரிணாமத்தில் ஒலியைத் தரக்கூடிய அளவுக்கு அணு அழுத்தம் பெறும்போது

    காற்றாகிறது. அதாவது 2% விண்ணும் 98% சுத்த வெளியும் சேர்ந்து ஒலியாகி உடலுக்குள் இயங்கி பேச்சாகிறது.

    தொல்காப்பியர்,

    “உந்தி முதலா முந்துவளி தோன்றித்

    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

    பல்லும் இதழும் நாவும் மூக்கும்

    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

    உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

    எல்லா எழுத்தும் சொல்லுங்காலைப்

    பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

    திறப்படத் தெரியும் காட்சி யான”

    (தொல்காப்பியம் – 83)

    என மொழிவார்.

    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என்பது ஒரு திருமந்திரம். இது எல்லா மந்திரங்களுக்கும் மேலானது. ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போதும் பேசும் போதும் வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவோர் இருவருக்குமிடையே உயிர்த்தொடர்பு ஏற்பட்டு அது நட்புணர்ச்சியாக மலரும். இதனால்தான் ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தந்த தலைவனை’ என்ற பழந்தொடர் ஆட்சிப்பெற்றுள்ளது.

    வேதாத்திரி மகரிசி அவர்கள் பிறர் நலமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு எழும் ஒலியே வாழ்த்து என்பார். வாழ்த்து அலையியக்கத்தைச் சார்ந்தது. பக்தர்கள் இறைவனைப் போற்றிப் பாடல்களால் வாழ்த்துவதும் இறைவனோடு பேசும் பேச்சேயாகும்.

    ‘பேசாத நாவென்ன நாவே’

    ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’

    என்ற பக்திச் சான்றோர் தொடர்கள் பேச்சின் தன்மையினைப் பேசுவன.

    பேச்சின் சிறப்பாலேயே உலக அமைதி நிலைபெறும். அதனால்தான்,

    “உலகில் வாழ்ந்துய்ய வெனில் ஒவ்வொருவரும்

    இவ்வுயர்ந்த எண்ணத்தை

    உலகுக்கு அலையலையாய்ப் பரவவிட

    வேண்டியது கடமையாகும்.”

    . . . ஞா.க.248

    என்பார். உயர்ந்த எண்ணமானது உலகப் பொது ஆட்சி என்ற உயர் திட்டமாகும். வாழ்க வளமுடன் என்ற வாழ்த்து அலையலையாய்ப் பரவும் போதுதான் உலகப்பொது ஆட்சியும் உலக அமைதியும் நிலைபெறும்.

    ஒருவர் கருத்தைப் பிறர்க்கு உணர்த்துதற்கு

    ஓங்கியதோர் ஆர்வமே மொழிகளாகிப்

    பெருகி வந்துள உலக மொழிகள் எல்லாம்

    பேசுதற்கு அனைவருக்கும் சொந்தமன்றோ”

                                                                                                                 . . . ஞா.க.394

    எனப் பேச்சு மொழியின் அவசியத்தை விளக்குகிறார் மகரிசி. பேச்சுதான் மனிதரின் உயிர்நாடி. அந்நாடியே மகரிசியின் அலையியக்கக் கருத்தின் உட்பொருளாக அமைந்துள்ளமை இன்புறுதற்குரியது.

    எழுத்தாற்றல்:

    மகரிசி அவர்களின் எழுத்து வடிவங்களைப் படிக்கும்போது அவரின் ஆன்ம இயக்கத்திற்கும் நமக்குமிடையே ஒரு மெல்லிய அலைத் தொடர்பு இருப்பது புலனாகும். ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பேச்சு பயன்படுவதுபோலச் சமுதாயத்தில் பலரோடு தொடர்பு கொள்ள பலருடைய கருத்துகளை உணர்ந்து கொள்ள பின்னோருக்கும் வழிகாட்ட எழுத்தறிவு இன்றியமையாதது. திருவள்ளுவர்,

    ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு.’            . . .   குறள் – 1

    என முதல் குறளிலேயே எழுத்துக்குச் சிறப்புக் கொடுப்பதைக் காண முடிகிறது.

    ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’

    . . .  நறுந்தொகை – 1

    என்பார் அதிவீரராம பாண்டியர்,

    ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’

    . . .  கொன்றைவேந்தன் – 7

    என ஒளவையார் எழுத்தினைக் கண்ணாகக் காண்பதோடு ஆத்தி சூடியில்,

    ‘எண்ணெழுத்திகழேல்’

    . . .   ஆத்திசூடி – 7

    என எழுத்தின் மேன்மையை மொழிவார். ‘இறைவன் அன்று எழுதியதை அழித்தெழுதப் போவதில்லை’ என்ற பழமொழி நாட்டுமக்களிடையே ஊடாடு மொழியாக நாளும் மலரும்.

    மகரிசியின் குணநலப்பேறு எழுத்து வடிவத்தால் சிறப்புப்பெறும். ஏனெனில் எழுத்து கற்பொறிப்பு போன்றது. எழுத்துக் கல்வியின் சிறப்பைப்,

    “பத்து வயதாவதற்குள் எழுத்துக் கல்வி

    பயிற்சி எல்லாக் குழந்தைகட்கும் முடியும்”

                                                                                                 . . . ஞா.க.914

    என வலியுறுத்தியுள்ளார் வேதாத்திரி. எழுத்தினால்தான் முன்னோரின் அறிவாட்சித் தரத்தினை உணர்ந்து கொள்ள முடியும்.

    “……….முன்னோர் சொன்ன

    அருமைக் கலைகள் அனைத்தும் மொழிபெயர்த்து

    ஆண்டு முப்பதுக்குள்ளே எழுதிக் கொள்வோம்”

                                                                                                                        . . . ஞா.க.915

    என்ற மகரிசியின் கூற்று,

    “சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

    கலைச் செல்வங்கள் அனைத்தும்

    கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்”

                                                            . . . (பாரதியார் பாடல்கள்)

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழில் மொழிபெயர்த்திடல் வேண்டும்”

                                                                   . . . (பாரதியார் பாடல்கள்)

    என்பார் பாரதி. பாரதியின் ‘எட்டுத்திக்கும்’ பிறநாடு’ என்ற சொற்கள் உலகநலத்தொண்டன் மகரிசியின் கவியில் பெருமைப்பட முன்னோர் என்ற சொல்லாளுமை பாரதிதாசனிடம் மானுட சமுத்திரம் நான் எனத் தொடர்புபடுவதைக் கற்பார் காண்பர்.

    எழுத்தின் தன்மையினைக்

    “கடவுள்நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்

    கருத்துணர்த்தும் நூல்கள் பல எழுதிவைத்தான்”

    கடவுள் இரகசியம் அதனை வெளியாய்க் காட்டும்”

                                                                                                               . . . ஞா.க.1119

    எனக் கடவுள் இரகசியத்தை அறிய வைப்பதற்கும் எழுத்து இன்றியமையாதது என்பது தெளிவாகிறது.

    கடவுள்நிலை அறிந்தவன் அறியாதவனுக்கு விளக்க எழுத்தையும் நூல்களையும் கருவியாக்கியுள்ளார் வேதாத்திரி.

    “உச்சரிப்பாய் நாவசைத்து எழுந்த ஓசை

    உருவான வரிவடிவம் எழுத்து ஆகும்

    எச்சப்தம் யாருக்கு விலக்கு சொந்தம்

    எழுத்துக்களும் அவ்வாறே அனைவருக்கும்”

                                                                                              . . .   ஞா.க.916

    என எழுத்துத் தோன்றிய முறையையும் அதன் உரிமையையும் விளக்கியுள்ளார். சப்தம் அனைவருக்கும் பொதுவென்றால் சப்தத்தால் தோன்றும் எழுத்துக்கள் ஒருவருக்கோ சில இனங்களுக்கோ மட்டும் எப்படி உரிமையாகும். இதையே வள்ளுவ ஆசான் தன் முதல் குறளில் எழுத்துக்கு உவமையாக அகரம் எழுத்துக்கு முதன்மை போன்றே உலக முதன்மை இறைவன் என்பார். பிரபஞ்சத்தில் இறைவனே மனிதனாகி வந்துள்ளான். அம்மனிதரில் இறைநிலையை உணர்ந்தவர், உணர விழைபவர் சிலரே. அதுபோன்று எழுத்து அனைவருக்கும் பொதுவாயினும் பேசுவோரெல்லாம் எழுத்துத் திறமை பெற்றவரல்லர் என்பதனை,

    ‘ஒருவரே பத்தில் அதை எழுதுவார்’

    எனும் தொடரால் வெளிப்படுத்தியுள்ளார் மகரிசி. 

    கவியியற்றல்

    உணர்வின் வெளியீடாகப் பிறப்பது கவிதை. “கவிதைப் போல ஆச்சரியம் பாரின்மிசை இல்லை” என்றார் பாரதி. கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணத்தை எழுப்பவல்லது. காய்கறி, பருப்பு, மசாலா எல்லாம் இணைந்தது குழம்பானாலும் அது சமைக்கும் பக்குவத்திலேயே மணக்கிறது. சுவைக்கிறது. பலர் சமைக்கும் போது அது குழம்பாக இருப்பதில்லை. அதுபோலவே பேச்சும் எழுத்தும் மட்டும் கவிதை ஆகிவிட முடியாது.

    தண்ணீர் தாமரை இலையில் பட்டதும் பாதரசம்போல் மணிகளாக உருள்கிறது. புல் நுனியில் இருக்கும் பனித்துளி தனிவடிவம் கொள்கிறது. அங்ஙனம் சொல்லாளுமையின் கருத்து வெளிப்பாடே கவிதை.

    “…………..அறிவுடையோர் எழுதி வைத்த

    புனிதமுள கவிகளெலாம் விலையில்லா நற்

    போதனைக் கூடங்களைப் போல் நலம் விளைக்கும்

    தனியொருவன் திறம் பெருக்கத் தரம் உயர்த்தத்

    தக்க சாதனங்களிலே கவியும் ஒன்று”

                                                                                     . . .   ஞா.க.492

    எனக் கவியின் தன்மையை வெளிப்படுத்துவார் மகரிசி.

    மனித சமுதாயம் சாதி, சமூகம், மதம், மாநிலம், நாடு என ஒவ்வொரு நிலையிலும் பெரும் பிளவுபட்டு நிற்கிறது. இப்பிளவு நீங்க ஓருலக ஆட்சி மலர வேண்டும்.

    “ஓர் உலக ஆட்சியினால் யுத்தபயம் ஒழிந்துவிடும்

    போர் ஒழிந்தால் வீரர்களும் பொருட்களும் நற்சேவைக்காக

    பார் முழுதும் ஏழ்மைபோம் பண்பாடு சிறந்தோங்கும்

    சீர்திருத்த வாழ்வு அப்போ சித்திக்கும் சிந்திப்பீர்”

                                                                                                                                 . . .   ஞா.க.246

     

    என்ற கவிதையில் உலகில் போர் ஒழியவும் ஏழ்மை நீங்கவும் பண்பாடு சிறக்கவும் சீர்திருத்த வாழ்வினை மக்கள் அடையவும் ஓர் உலக ஆட்சி மலர வேண்டும் என விழைகிறார் வேதாத்திரி.

    “சொல்லடுக்காம் கவிகள் தமைப் பாடிப்பாடி

    சுருக்கமாய் உட்கருத்தை உணருமாப் போல்

    பல்வகை நற்செயலடுக்காம் சடங்கு மூலம்

    பாமரரும் வாழ்க்கை நல ஒழுக்கம் கற்பார்”

                                                                                                          . . .   ஞா.க.818

    ஓர் உலக ஆட்சிக்குக் கவிதையை ஊடகப்படுத்திய மகரிசி எந்தக் கவிஞரும் செய்யாப் புதுமையை விளக்குகின்றார். கவிதை எளிமை, இனிமை, காலங்கடந்தது, புதுமை தருவது போன்ற ஆழமான சிந்தனையை வெளிப்படுத்த கவிதையையே உவமையாக்கியுள்ளார். அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவது உவமையாகும் என்பார் இலக்கணிகள். பாமர ஞானியான மகரிசி பாமரரின் நலவாழ்க்கையும் ஒழுக்கமும் சடங்குகளால் கற்கப்படுவதை உரைக்க சொல்லடுக்காம் கவிதையை உவமையாக்கும் திறம் புதுமை பொலிவூட்டுகிறது. இதன்வழி கவிதைக்கு அணி எளிமை ஓரிரு ஆண்டு கல்வியறிவுடையோரும் அதன் கருத்தில் நிற்போருக்கும் கேட்கும் திறத்தார்க்கும் செவியின்பமாகும்.

    கவிதையைச் சிந்தை கொள்வார்க்கு உணர்த்தவே மகரிசி உவமையாக்கியுள்ளார். “கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்” என்ற கம்பராமாயணத் தொடரில் கம்பர் கவிதையைக் கோதாவரி ஆற்றுநீருக்கு ஒப்புமை காட்டும் நுட்பம் மகரிசி கவிதையைப் பாமரரின் சடங்கிற்கு உவமையாக்கிய திறம் கற்பாரைக் களிப்படையச் செய்யும்.

    சீவனுள்ள கவிதை

    கவிதை என்பது மலரின் மணம் போன்றது. எந்த மலரில் மணம் இருப்பினும் அது நறுமலர். அல்லாதவை வெறுமலர். அதுபோன்று உலக பொது நோக்குடைய ஜீவனுள்ள கவிதைகளே நறுமலர். புறநானூற்றில்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே”             (-18)

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா”                                   (-192)

    “நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது

    செய்தல் ஓம்புமின்”                         (-195)

    “செல்வத்துப் பயனே ஈதல்”                                             (-189)

    போன்றன ஜீவனுள்ள தொடர்கள். உணர்ச்சியின் வெளியீடாக மட்டுமின்றி அறிவின் புலப்பாடாகவும் அறத்தின் பயன்பாடாகவும் ஜீவனுள்ள கவிதைகள் திகழும். அவை அனைத்தும் பன்மீன் நடுவில் பான்மதி ஒப்பன.

    கவிஞன் புனைவதெல்லாம் நிலைத்த கவிதைகள் ஆகிவிடுவதில்லை. கவிஞர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் ‘உங்கள் கவிதையில் உங்களுக்குப் பிடித்தது எது’ என்ற வினாவிற்கு என்கவிதைகள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால் என் இறப்பிற்குப் பின்னும் எந்தக் கவிதைகள் மக்களால் பாடப்படுகின்றனவோ அவையே ஜீவனுள்ள கவிதைகள் என்பார். மேலும் தன்கவிதையில்

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    என்ற சீவனுள்ள கவிதையைப் படைத்த கவிஞர் கண்ணதாசன் மரணமில்லா விண்மீன் அனையர் என வெளிச்சமிடுவர். மண்ணில் விளையும் நெல்மணிகளில் பதர்களை நீக்குவன போன்றே கவிதைகளுள்ளும் சில கவிதைகளே சீவனுள்ள கவிதைகளாகின்றன.

    “எல்லோரும் அவனன்றி யார் வேறுள்ளார்”

                                                                                            . . .   ஞா.க. 302

    எனத் தெய்வமே மனிதனாகி வந்தமையையும்,

    “உணவு உடை வீடு என்ற மூன்றைத் தோற்றும்

    உழைப்பாளரே முதல்வர்”

                                                                                      . . .   ஞா.க. 118

    என உழைப்பாளரின் முதன்மையையும்,

    “இயற்கை விளைவுகளை வாழ்வின் வளமாக்கும்

    எச்செயலும் தொழிலாகும் ஏனையவை பணிவகையே”

                                                                                                               . . .   ஞா.க. 110

    எனத் தொழிலுக்கும் பணிக்கும் உள்ள வேறுபாட்டினையும்

    “எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்

    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்

    இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்”

                                                                                                 . . .   ஞா.க.10

    என எண்ணத்தின் வலிமையினையும்,

    “சொல்லால் மட்டும் நம்பாதே

    சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்”

                                                                                                             . . .   ஞா.க.2

    எனச் சிந்தனையைச் சீரமைக்கும் முறையினையும்,

    “அழுத்தம் எனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே

    அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி

    வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும் ஆறும்

    வகைவகையாய் உயிரினங்கள் தோற்று வித்து

    முழுத்திறனுடன் காத்து முடிக்கும் மேலாம்

    முழுமுதற் பொருளே நம்மறிவாய் ஆற்றும்”

                                                                                                                 . . .   ஞா.க.3

    என இறைநிலை அறிவாக இயங்கும் நிலை பற்றியும்,

    “வினைப்பயனைப் போக்காமல் வீடடைய விரும்புவதோ பொருந்திடாது”

                                                                                                                                                            . . .   ஞா.க.4

    என வீடுபேறு அடைவதற்கு வினைப்பயனைக் கழிக்க வேண்டியது நியதி என்றும்,

    “இந்த அரும் பிறவியில் முன்வினை யறுத்து

    எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு

    வந்த ஒருஉதவி குருஉயிரின் சேர்க்கை”

                                                                                                                      . . .   ஞா.க.11

    எனக் குருவின் மேன்மையையும்,

    “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

    தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும்

                                                                                                           . . .   ஞா.க.10

    எனக் குருவின் சேர்க்கைப் பிறவிக்கடலை கடக்கத் தோணியாக வழிகாட்டுவதையும் எளிமையாகவும் இனிமையாகவும் கற்றோரும் கல்லாரும் கற்றும் கேட்டும் சிந்தித்துத் தெளிந்து செயல்படவும் கவிதைகளாக்கியுள்ளார் வேதாத்திரி மகரிசி.

    பாதைகள் பலவாயினும் பரம்பொருள் ஒன்றே என்பதனைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் உரைக்கும் வேதாத்திரியக் கவிதைகள் நில உலகில் என்றும் நிலைத்து நின்று மக்களுக்கு வழிகாட்டும். விண்மீன்கள். சீவனுள்ள கவிதைகளின் நிலைப்புத் தன்மை என்பது நீலவான் மீன்கள் ஒத்தது என மகரிசி கூறியிருப்பது அவரின் கவிதைகளுக்கு மகுடமாகியுள்ளது.

    சங்க இலக்கியத் தொடர்கள், அற இலக்கியங்கள் போன்றன அன்று முதல் இன்றுவரை ஏன்? எதிர்காலத்திலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவன போல மகரிசியின் கவிதைகள் வயதிலும் எண்ணிலும் நீலவான் மீன்கள் ஒக்கும் என்பன வெறும் சொல்லன்று, சத்திய வாக்குகள், உண்மை மொழிகள்.

    வினாக்கள் :

    1. பேச்சு என்பது என்ன?
    2. வேதாத்திரி மகரிசியின் எழுத்து வடிவங்களைப் படிக்கும்போது எழும் உணர்வு யாது?
    3. எது கடவுள் இரகசியத்தை வெளியாய்க் காட்டும்?
    4. எதன் வெளியீடாகக் கவிதைப் பிறக்கும்?
    5. எவை ஜீவனுள்ள கவிதைகள்?

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                 வளர்க அறிவுச் செல்வம்!!