சிந்திக்க அமுத மொழிகள்-336  (997th Posting)-அறிவிற்கு அமைதி எப்போது?

வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்-336 பகுதி – I  (997th Posting)

            

    30-05-2022 — திங்கள்

 

அறிவிற்கு அமைதி எப்போது?

அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது   தன்னையறிந்து முடிக்கும் வரை அமைதி பெறாது.”

. . .   வேதாத்திரி மகரிஷி 

பயிற்சி- பகுதி – I

1) என்ன கூற வருகிறார் மகரிஷி அவர்கள்?
2) ‘அமைதி பெறாது’ என்பது  எதிர்மறை(negative) போல்  அல்லவா தோன்றுகின்றது? அப்படி இருக்க முடியுமா? என்ன சூட்சுமம் உள்ளது இக்கூற்றில்?
3) அமைதி என்பது மனம் இயங்கும் இன்பம், துன்பம் என்கின்ற இரண்டு படிகளைக் கடந்து  மூன்றாவது படியான அமைதியைக் கடந்துதானே  இறுதிப் படியான  பேரின்ப  நிலைக்குச் செல்ல முடியும் என்றல்லவா  பேரின்பவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?
4) ‘அமைதி பெறாது’ என்றால் அமைதியின் கீழ்படிகளான இன்பம் மற்றும்  துன்பம் படிகளுக்கு அல்லவா மனம் சென்றுவிடும்!?  அப்படி இருக்க முடியுமா? மனவளக்கலையின் நோக்கம் அதுவல்லவே!?
5) பேரின்பத்திற்கு இயல் ஏற்படுத்தியுள்ள(ஞா.க. கவி எண். 1849), எப்போதும் பேரின்ப நிலையிலேயே இருக்கும்  நம் குருநாதா்  தன் அனுபவத்தை  இந்த அமுதமொழியின் வாயிலாக வெளிப்படுத்தியதோடு, “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” (ஞா.க. எண். 1650) என்று மகரிஷி அவர்கள் வாழ்த்தியுள்ளதாலும்  நாமும் அவர்  அனுபவத்தைப் பெறவேண்டித்தானே கூறுகிறார் அன்றோ? ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து இந்த பொன்மொழியின் அமுதத்தை பருக வேண்டுமல்லவா அன்பர்களே!? வாழ்க வளமுடன்!
6)  எது வரை  அமைதி பெறாது என்று கூறுகிறார்?  அமுத மொழியின் முற்பகுதியைக் கவனிப்போம் இப்போது?  என்ன கூறுகின்றது?  ‘அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால்’  என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘வரை’ என்றுதானே கூறுகிறார்? அப்படியானால் என்ன பொருள்படுகின்றது(implied meaning)? எதற்குப்பிறகு அறிவு அமைதி பெறும் என்பதைத்தானே கூற வருகிறாரல்லவா?

7) ஆர்வம் எழுந்துவிட்டால் என்றால் என்ன பொருள்?  பொதுவாக ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்பவர் யாராயினும்  அதனை விருப்பத்துடன்  பயிற்சியைத் தொடர்வதுதானே இயல்பு?

8) ‘ஆர்வம் எழுந்துவிட்டால்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவதில் ஆர்வம் என்பது புறத்தே(புறமனதிலிருந்து) எழாமல்,   ஆத்மாவிலிருந்து(அடிமனம்) ஆர்வம் எழவேண்டும் என்பதனைத்தானேக் குறிப்பிடுகிறார்? இதேபோன்றுதானே வாழ்வின் நோக்கம் கண்டறிதலிலும் ஆர்வம் ஆத்மாவிலிருந்துதானே எழவேண்டும்?

9) ‘தன்னை அறிவதில்’,  ‘அறிவை அறிவதில்’ அதாவது ‘நான் யார்?-தன்னைப்பற்றி அறிதலில்’  ஒருவருக்கு  ஆர்வம் இல்லாமலா இருக்கும்!?

10)  அதற்கானத் தவப்பயிற்சியினை செய்து வரும் நிலையில் தன்னை அறிந்து முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

11) ஆக்கினையில் தவம் ஆரம்பித்து. சாந்தி நிலை தவமும் செய்து, துரியநிலை, சக்திகள தவம் செய்து கடைசியில் அறிவை அறிந்து இன்புற அறிவின் இருப்பிடமான வெட்டவெளிக்குச் செல்கின்ற  துரியாதீத தவம் செய்து வந்தாலே போதுமன்றோ- அறிவுக்கு அமைதி கிடைக்குமன்றோ?

12)  அறிவை அறிந்து பேரின்பமுற மேற்கொள்ளும் மனவளக்கலை பயிற்சியில் தவப்பயிற்சி மட்டுமே போதுமா?

13)  பிறகு என்ன செய்ய வேண்டும்?

14) ஒரு பாடத்தில் அல்லது கலையில் (உதாரணத்திற்கு   தொழிற் கல்வி-மருத்துவம், பொறியில், மற்றும் பள்ளியில் இயற்பியல்மற்றும் வேதியல் பாடங்கள்)  வெற்றி பெற கருத்தியல்(theory) மட்டுமல்லாமல் செய்முறை(practical) பாடமும் உண்டு என்பதனை யாவரும் அறிந்தது தானே?  அதுபோன்றுதானே வாழ்வியல் கலையான மனவளக்கலையிலும் வெற்றி பெறுவதற்கு கருத்தியல் பாடமும்(விளக்கமும்), செய்முறை பாடமும் உள்ளன அல்லவா?

15) மனவளக்கலையில் கருத்தியல் பாடத்தினால் விளக்க ஞானம் பெறமுடியுமல்லவா?

16) விளக்க ஞானம் மட்டுமே போதுமானதா?  விளக்கத்தை பயிற்சி செய்து அதனை பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டுமல்லவா? விளக்கமும் பழக்கமும் கைகோர்த்துச் செல்ல வேண்டுமல்லவா?  பழக்கம்  தொய்வில்லாமல், விரைவில் இலக்கை அடைந்து வெற்றி பெற விளக்கஅறிவில் அழுத்தம் ஏற்படவேண்டுல்லவா? 

வாழ்க வளமுடன்! 

ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து பயன் பெற வேண்டியிருப்பதால் மேலும் சிந்திக்க வேண்டியுள்ள வினாக்கள் உள்ளன.  அவற்றை அடுத்த சிந்திக்க அமுதமொழிகள் பயிற்சியில் ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்!

. . .   தொடரும்

 

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!உலகெங்கிலும் வெகு விரைவில் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க அறிவுச்   செல்வம்!!


 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments