சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

24-05-2022-செவ்வாய்

மேலும் பல உண்மை விளங்க . . .

                          

பிரதான வினா(Main Question): 332

அறிவிற்கு அறிவியல் அருளிய அறிவின் அறிவியலின் தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பேரறிவு உணர்ச்சியாயும், சிந்தனையாயும் உள்ளது’ என்று அறிந்திருந்த நிலையில் மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர்  பேராற்றல் ஒழுங்காற்றலாயும் விளங்குகின்றது என்கின்ற அரிதினும் அரிதான உண்மையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.   அவருக்கு மேலும் விளங்கிய  அந்த உண்மை என்ன?  அந்த உண்மை ஒன்றா, பலவா?  

 துணை வினாக்கள் (Sub questions):

1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

2) மேலும் மகரிஷி அவர்களுக்கு விளங்கிய உண்மைகளை நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்?  அதன் பயன் என்ன?  புலன்கள் வழியாக இன்பத்தை துய்ப்பதைவிட   மேலான இன்பமா புலன்களின் உதவியின்றி உண்மையினை அறிவது?  எவ்வளவு மேலான இன்பம் உண்மையினை அறிவது?  அளவு ஏதாவது கூறமுடியுமா அவ்வின்பத்திற்கு?  அதுதான் பேரின்பமா?

3) மகரிஷி அவர்களின்  சிந்தனை ஓட்டம்,  எப்படி/எவ்வாறு/எந்த திசையில்  இருந்திருந்தால் அவருக்கு உண்மை விளங்கி உணர்ச்சிக்கு முன்னர் அறிவு ஒழுங்காற்றலாய் விளங்குகின்றது எனக் கண்டுபிடித்திருப்பார்?  இதனை அவரது மாணவர்களாகிய நாம் அறிய வேண்டாமா?  அவருடைய மாணவர்கள் உண்மை அறிதலில்  அனுபவிப்பதில் அவரது ஆன்மாவும் சேர்ந்து அல்லவா இன்புறும்?!

4) அறிவின் ஒழுங்காற்றல் என்கின்ற நிலையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று சமுதாயத்திற்கு     முழுமையான அறிவிற்கு அறிவியல் கிடைத்திருக்குமா?

4) அறிவின்  இயக்க படிநிலைகள் என்னென்ன?

5) அவற்றில் எந்தெந்த படிகள் ஒழுங்காற்றலாய் விளங்கும் அறிவின் திருநிலைகள்?

5) அறிவு உணர்ச்சிக்கு முன்னர் ஒழுங்காற்றலாய் விளங்குகின்ற அரிய உண்மையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் அவரால் அறிவின் இயக்கமாக  உள்ள படிநிலைகளை முழுவதுமாக அவர் கண்டுபிடித்திருக்க முடியுமா?

6) அறிவு என்றால் அறிவு?  அதற்கு ஏன் ஒழுங்காற்றல் என மற்றொரு புனிதப் பெயரைச் சூட்ட வேண்டும் மகரிஷி அவர்கள்?

7) இயற்கையின் ஆதிநிலையில் பேராற்றலும், அறிவும் இருந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.   அறிவு என்றால் அது உணர்ச்சியாயும்(எல்லா உயிர்களிலும்) சிந்தனையாகவும்(மனிதனில்) இயங்குகின்றது என்பதனையும் அறிவோம்.  ஆனால் அவ்வாறு அறிவு அறிந்திருக்கும் நிலையில் அறிவிற்கு ஒழுங்காற்றல் என்கின்ற  மற்றொரு பெயர் சூட்டப்படுவதன் காரணம் விளங்கிவிட்டதா அன்பர்களே!?  வாழ்க வளமுடன்!

8) ஒழுங்காற்றல் என்கின்ற அறிவின் மற்றொரு புனிதப்பெயரைக் கொண்டு இப்போது நம் அறிவு என்ன பேரின்பத்தை அனுபவிக்க முடிகின்றது?

(அ)  அறிவைப்பற்றிய தெளிவு கிடைக்கின்றதா?

(ஆ) எப்போது ஒன்றைப்பற்றிய தெளிவு ஏற்படும்?

(இ) அறிவை அறிவு தெளிவாக அறிந்துகொள்வதில் ஏற்படும் ஐயங்கள் தெளிவாகியுள்ளனவா?

(ஈ) என்னென்ன ஐயங்கள் அறிவாற்றுலுக்கு தீர்ந்துள்ளன ஒழுங்காற்றல் என்கின்ற திருப்பெயரால்?

9) அறிவு தன்னை அறிய வேண்டும் என்பதில் இன்றைய சிந்தனையின் முக்கியம் என்ன?

10) நான் யார் என அறிவதில் இன்றைய சிந்தனையும் அடங்குமா?

11) ஒழுங்காற்றலுக்கும், ஒழுங்கிற்கும்,  ஒழுக்கத்திற்கும் உள்ள  தொடர்பு என்ன?   ஆறாம் அறிவின் நடத்தையில்/குணத்தில்/மனிதப்பண்பில்/ மனிதனாக நடந்துகொள்வதில்/இறைவழிபாட்டிலும்  ஒழுங்காற்றலின்(order of function) பங்கு என்ன? ஒழுங்காற்றலின் பங்கிற்கு மனிதன் இடம் தராமல் இருந்தால் அது இறைவழிபாடாகுமா?

12) ஒழுங்காற்றலைக்கொண்டு இயற்கை/இறை மனிதனுக்கு  கட்டிக்கொடுத்த உடலை துன்பம் வராமல் பராமரிப்பது  ஆறாம் அறிவின் கடமைதானே? ஆறாம் அறிவு  ஒழுக்கநிலையில்தானே அந்த கடமையை ஆற்ற முடியும்?! ஆகவே ஒழுங்காற்றலாக உள்ள அறிவு மனிதனில் ஆறாம் அறிவாக செயல்படும்போது  ஒழுக்க நிலையில் செயல்பட மனிதன்தான் பொறுப்பேற்கவேண்டுமல்லவா?  இங்கேதான்  அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் மனித வாழ்வில்  சிக்கல்கள் ஏற்படுகின்றதல்லவா? ஆறாம் அறிவு மனிதனில் ஒழுக்கறிவாக, ஒழுக்கப்பழக்கறிவாக  செயல்பட மனிதன் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையெனில் துன்பம்தான் வருமன்றோ? அதனால்தானே ஒழுக்கம் உயரினும் மேலாகக் கருதப்படவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்?

13) மேலும் ஏதேனும் வினாக்கள் இருப்பின் அவற்றையும் எழுப்பிக்கொண்டு விடைகள்  அறிந்து அறிவைப்(தெய்வத்தைப்) பற்றிய தெளிவினை அடைவோம்  இந்த புனித நாளில்.

அதற்கு நம் குருபிரான் உள்பட இயற்கையின்/இறையின் நேரிடை பிரதிநிதிகளான/தூதுவர்களானஅறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அறவோர்களிள் அருளும் இறையின் திருவருளும் நிச்சயமாக துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்!

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

   உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

 வாழ்க அறிவுச் செல்வ                   வளர்க அறிவுச்   செல்வம்!!


 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments