FFC – 177-தெளிவு—3/?

வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

தெளிவு—3/?                                        

FFC – 177                                                    

 03-04-2016—ஞாயிறு

FFC-177-NEW SUB HEADING-குருவின் திரு நாமம் செப்பல்

 வாழ்க வளமுடன்.

                  சென்ற அறிவிற்கு விருந்தில் திருமந்திரத்தில், திருமூலர்  குருவின் திருமேனியைக் காண்பது எவ்வாறு சீடருக்கு இறை உணர் ஆன்மீகத்தில்  மிகவும் அவசியமான(the first and prime most) தெளிவினை ஆறாம் அறிவு பெறுகின்றது என்பதனை விஞ்ஞானப் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் கூறியுள்ளதை அறிந்து கொண்டோம்.  இன்று மற்ற மூன்று வழிகளில் எவ்வாறு தெளிவிற்கு தெளிவினைச் சேர்ப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு கூர்வோம்.

 

thelivu_guruvin

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:  இது குருவின் வழியாக தெளிவு பெறுவதில் இரண்டாவதாகும்.  இதனை இப்போது எடுத்துக் கொண்டு சிந்திப்போம். குருவின் திருநாமத்தை சொல்வதால் ஆறாம் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார். இதனை அறியும்போது குருவானவர்,  அதீத  மரியாதை, மதிப்பு, சிறப்பு  உடையவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளதால், தெய்வத்திற்கு நிகராக வணங்கப்பட வேண்டியவர் குரு, என மிக மிகத் தெளிவாகின்றது. 

      இறை அருவமானது என உறுதியாகிவிட்டபிறகு,

     இறை தன் வம்சாவளியான மனிதகுலத்திற்கு, தன் நிலையினை எடுத்துச் சொல்வதற்கு வேறு யார் வழியாக எடுத்துச் சொல்ல முடியும்?

அருவமாகிய இறை, மனித வடிவில், அனந்த  கோடிகளாகியதில், எந்த மனித வடிவில் தன்னையே  உணர்ந்து கொண்டு வருகின்றதோ,     அந்த மனித வடிவம் தான் குருவாகின்றது, மற்ற மனித வடிவங்களின் அறியாமையைப் போக்குவதற்கு? .  இதுதான் அத்வைதத்தில் சுத்த அத்வைதம்.

     திருவள்ளுவர் பத்தாவது குறட்பாவில் ‘இறைவன் அடி’ என்று கூறியுள்ளதற்கு, மகரிஷி அவர்கள், ‘இறைவன் அடி’ என்பதற்கு மெய்ஞ்ஞானம் பெற்ற இறையின் மனிதவடிவமான குருவினுடைய வாழ்க்கை காட்டுகின்ற வழி  என்று பொருள் கூறுகிறார்.

     திருவள்ளுவர்  கடவுள் வாழ்த்தினை  முடிக்கும்போது, அருளியுள்ள

 “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

 இறைவன் அடிசேரா தார்.”           (குறள் எண் 10)

 என்கின்ற குறட்பாவில் ‘அடி சேர்ந்தார்க்கு’ என்றால் (மகரிஷி அவர்கள் தான் எழுதிய  ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்கின்ற நூலில் கூறியுள்ள விளக்கத்தினைக்(பக்கம்24-28 – காணவும்.)  ‘மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற ஒருவருடைய  வாழ்க்கை காட்டுகின்ற வழியிலே செல்வது’ என்பதை மனம் விரிந்து  ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாக அமையும் என்கிறார். 

     மேலும் குருவைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறியலாம்.  மெய்ஞ்ஞானம் பெற்ற குருவும் ஒரு காலகட்டத்தில் பூதவுடலை உதிர்க்க வேண்டியிருக்கும்.  அதன் பின்னர் வரும் சீடர்களுக்கு, ஆறுதலான, ஆனால் நிறைவான விளக்கமாக மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். குருவானவர் ஓரிடத்தில் இல்லாத நேரத்தும் அல்லது அவரது காலத்திற்குப் பின்னரும் கூட குருவானவர் வழிகாட்டுவதனைப் பற்றிக் கூறுகிறார்.

gurudevar

     குருவானவர் உருவாக்கிய வாழ்க்கை நெறி வருங்காலத் தலைமுறையினருக்கும் பயன் தரும் என்கிறார். ஞானாசிரியருடைய வாழ்க்கையும், சீடர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றது என்கிறார்.  அவரது உபதேசங்கள் வழிகாட்டுவதாகவும் அமைகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள். 

      இவ்வாறு சொல்வதற்குச் சான்றாக விளங்கியவர் மகரிஷி அவர்களே.  எவ்வாறெனில், தாயுமானவரை, திருவள்ளுவரை, திருமூலரை, வள்ளலார் அவர்களையும் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் குருமார்களாக ஏற்றுக்கொண்டு வணங்குகிறார். (காண்க ஞானக் களஞ்சியம்- குருவணக்கம் பாடல் எண்.7)

    இப்போது தெளிவு பெறுவதற்கு இரண்டாவது வழியாகிய ‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்பது எவ்வாறு என்பதனை அறிவோம்.  திருநாமம் என்றால் என்ன? திருநாமம் என்பது பெயர், மற்றும் கீர்த்தி என்றும் பொருள். கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள். FFC-177-NEW-குருவின் திருநாமம்3-4-16

    பக்திமார்க்கத்தில் நாமாவளி எனப்படுவது குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்வது.  உதாரணத்திற்கு ராம நாமாவளி. நாமகீர்த்தனை நல்ல பயனைக் கொடுக்கும் என்பார்கள்.

      மனிதனுக்குள்ள எத்தனையோ உறவுகளில் குரு-சீடர் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இப்படியிருக்கும்போது  பெரும்பாலோருக்கு குரு-சீடா் உறவு ஏற்படாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. எனவே மறுபிறவியும் தொடர்கின்றது. மற்ற உறவுகள் தானாகவே அமைந்து விடுகின்றன. பிறப்பதால் தாய், தந்தை உறவு ஏற்படுகின்றது.  உடன் பிறந்ததால் சகோதர-சகோதரி உறவுகள் ஏற்படுகின்றன.  பெற்றோர்களால் மற்ற உறவுகள் ஏற்படுகின்றன.  சமுதாயத்திற்கு வரும்போது நண்பர்கள் உறவு ஏற்படுகின்றது.  உறவில்லாமல் மனிதன் தனித்து வாழ முடியாது என்பதனை யாவரும்  அறிந்ததே.

FFC-177-இத்தனை உறவுnew

‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பர் பெரியவர்கள். இக்கூற்று  என்ன உரைக்கின்றது? தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் தெய்வங்கள் என்கின்றது இக்கூற்று. தாய்      தாய் தந்தையைக் காட்டுகிறாள். தந்தைதான், தெய்வத்தை அறிவதற்கு வழிகள் கூறும்  குருவைக் காட்ட வேண்டும். குருவைக் காட்டிக் கொடுக்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் இப்போது விடுபட்ட நிலையில் 1911 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிகழ்வு இயற்கையால்/இறையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது (AT LARGE SCALE). அந்த புதுப்பிக்கப்பட்டுள்ள நிகழ்வில் பயன்பெற்றுக் கொண்டிருக்கும்   சமுதாயத்தில், முதலாவது வரிசையில் நாம் இருக்கின்றோம். 

   எனவே பயனையும் அடைய வேண்டும். அதற்கு நன்றியுணர்வாக, அப்பயனை மற்றவர்கள் அடைவதற்கு உதவ அறிவுத் தொண்டும் செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு இயற்கை/இறை அளித்துள்ளது.

     வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக, கண்களில்லாத ஆன்மா உடலெடுக்கும்போது,  உலகை பார்ப்பதற்கான  இரண்டு கண்களைத் திறப்பதற்கு தாயும், தந்தையும் காரணமாகின்றனர்.  ஆனால் மூன்றாவது கண்ணான, நெற்றிக்கண்ணான, அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு அறிவை அறிந்த குருவின் தரிசனம் தேவையாக உள்ளன. குரு-சீடர்  உறவு ஆன்மத் தொடர்பாகின்றது. பெற்றோர்களின் உறவும் ஆன்மத் தொடர்புதான்.  எனினும் இரத்தத் தொடர்பு உள்ளது. குரு எங்கோ இருப்பார். சீடன் எங்கோ இருப்பான்.  இருப்பினும் அவர்களை ஆன்மத் தொடர்பால் இயற்கை/இறை இணைக்கும்.  இந்திய நாட்டைக் கடந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும்  அன்பர்கள், தென் இந்தியாவில் தமிழ்நாட்டில், செங்கல்பட்டில் உள்ள சிறு கிராமமான கூடுவாஞ்சேரியில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைய வில்லையா?!

      பெற்றோர்களின்  ஆன்ம தொடர்பிற்கும் குருவினுடன் ஏற்படும் ஆன்ம தொடர்பிற்கும் வித்தியாசம் உள்ளது.  பெற்றோர்களின் ஆன்மாவின் செராக்ஸ்(xerox) நகல்தான்  குழந்தைகள் என்றிருப்பதால், பெற்றோர்களின், தன்முனைப்பால் விளைந்துள்ள அறுகுணப்பதிவுகளின்  தன்மையையே  பிரதிபலிக்கும். ஆனால், குரு-சீடர் ஆன்மத் தொடர்பு, குருவின் இறை உணர்-பண்பேற்ற-உயர்வு, சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்க வல்லது.

    எனவே குரு-சீடர் உறவில், குருவின் ஆன்மாவும் சீடனின் ஆன்மாவும் தொடர்பு கொள்கின்றது.  எப்படி என்பது பின்னர் பார்ப்போம். ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்கின்ற கூற்றுப்படி பிதா, குருவை காட்டிக் கொடுப்பது என்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் விடுபட்டு விட்ட நிலையில் மனவளக்கலைஞர்களுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக இயற்கை/இறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது நம்முடைய மாதா, பிதா செய்த புண்ணியம்தான். 

      குரு-சீடர் உறவு சிறப்பு வாய்ந்தது என்றோம்.  காரணம்,

     வினைப்பயனின் காரணமாக, ஆன்மா உடலெடுத்த காரணத்தை, பயனைப் பூர்த்தி செய்கின்றது.

    பிறவிப்பயன் என்பது என்ன? 

    எதற்காக பிறவி எடுக்க வேண்டியுள்ளது ஆன்மா? 

    முன் பிறவிகளில் செய்துள்ள வினைகளின் விளைவுகளை அனுபவிக்கவும்,

    மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டிய வினைகளைச் செய்யவும் ஆன்மா பிறவி எடுக்கின்றது. 

      சுருங்கச் சொல்வதானால் ஆறாம் அறிவுடன் பிறந்த மனிதன், அதற்கு ஏற்ப பொருத்தமாக, பண்பேற்றம் பெற்று பிறவிப்பயனை அடையும் பேற்றினைப் பெற்றிடுதல் வேண்டும்.  ஆகவே,   எல்லாத் தீயவினைகளுக்கும், பாவங்களுக்கும்  மூலகாரணமான இறையை மறைத்திருக்கும் தன்முனைப்பு நீங்குகின்ற பண்பில் ஏற்றம் பெருவதற்காகவே குருவை அடைந்திருக்கிறான் சீடன்.

 guru-disciple-relation     குருவிடமிருந்து பண்பில் ஏற்றம்பெரும்  வழிகளை பயிற்சியாகவும், போதனைகளாகவும், அறிவுரைகளாகவும் கற்க வேண்டும்.  குரு-சீடா் உறவு என்பது ஆன்மத் தொடர்பு என்றோம்.  இது எப்படி என்று  இங்கே விளங்குகின்றது. குரு தான் ஏற்படுத்திக் கொண்ட  இறை உணர்வு மற்றும் அறவுணர்வுப் பண்புகள் எங்கே பதிந்துள்ளன?  அவரது ஆன்மாவில் பதிந்துள்ளன.  எனவே சீடன் அவரைப்போன்றே பண்பில் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இயற்கை/இறை, குரு-சீடர் உறவை ஏற்படுத்தியுள்ளது. எனவே எப்படி குழந்தையின் ஆன்மா தாய்-தந்தையரின் ஆன்ம-செராக்ஸ் நகலாக உள்ளதோ, அதுபோல் பண்பில் ஏற்றம் பெறுதவதற்கான சீடனின் ஆன்மாவும், குருவின் ஆன்ம-செராக்ஸ் நகலாக வேண்டுமென்பதால் குரு-சீடர் உறவு ஆன்ம உறவு எனப்படுகின்றது.      

     குருவினுடைய பெயரே அவருடைய இறை உணர்வு பெற்ற பண்பேற்றத்தால் மந்திரமாகி விடுகின்றது.  மந்திரம் என்பது என்பது என்ன?  மந்திரம் என்பது வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள். மந்திரம் ஓதுவதால் எந்த நோக்கத்திற்காக அந்த மந்திரம் ஓதப்படுகின்றதோ அதன் பயனை மந்திரம் ஓதுபவர் பெறுவார். மந்திரங்களில் ஒரு சில வார்த்தைகள் பொருள் உடையதாகவும் இருக்கலாம். ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்ட ஒலியை எழுப்புவதற்காகவும் இருக்கலாம். 

    ஆன்மாவாகிய குரு,  தன்னுடைய இறை உணர்வு பண்பேற்றத்தால், பெற்றப்பதிவுகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே குருவினுடைய திருநாமம் என்பது. நன்கு அறியப்பட்ட  அறிஞர்களின் பெயரைச் சொல்லும்போதே அவரின் ஒட்டு மொத்த சிறப்பும் நம் கண்முன் வந்து நின்று அவரை மானசீகமாக வணங்கச் செய்கின்றது.   உதாரணத்திற்கு 2041 வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் வாழ்ந்திருந்தாலும்,  அவரது பெயரை இப்போது சொல்லும்போதே அவர் அருளியுள்ள 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் எழுதியுள்ளது நினைவிற்கு வந்து அவருடைய, உயர்வையும் சிறப்பையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. அவருக்கு இப்போது நாம் கொடுத்துள்ள உருவம் வந்து நிற்கின்றது. எனவே குருவின் திருநாமம் என்பது அவரது   பண்புகளையும், நெறிகளையும் எடுத்துச் சொல்லும், நினைவிற்கு கொண்டு வரும் ஒரு திருச்சொல்லாக உள்ளது.

      காலங்காலமாக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் குருவினுடைய தரிசனம் அறிவிற்கு  கிடைக்காமல்  இப்பிறவியில் குருவின் தரிசனம் கிடைக்கும்போது அது அறிவிற்கு தெளிவினை ஏற்படுத்துகின்றது.  ஆகவே குருவினுடைய  திருநாமமும் தெளிவினை அளிக்கின்றது என்கிறார் அறிஞர் திருமூலர்.      சீடர் குருவின் திருநாமத்தை சொல்லும் போது அவனுக்கு ஆனந்தத்தைத் தருகின்றது. 

thelivu

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்  யார் ஒருவருக்கு இறைவனின் பெயரைச் சொல்லும்போதே கண்களில் நீர் வருகின்றதோ அவருக்கு இதுவே கடைசிப் பிறவி என்கிறார்.  அதேபோன்று சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளபடியால்,  இறைவன் பெயரைச் சொல்லும்போது கண்களில் நீர்வருவதுபோல், குருவினுடைய  திருநாமத்தைச் சொல்லும் போதோ அல்லது அவரது திருப்புகழை நினைக்கும் போதோ, எடுத்துக் கூறும்போதோ,  கண்களில் நீர்வருகிறதென்றால்,  அவருக்கும்  இதே கடைசிப் பிறவி என்றாகின்றது.  ஏனெனில் சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்னவர் என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகி வாழ்ந்தாலும், குருவின் உயர்வு தப்பாமல், சீடனின் தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை அளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘தப்பாமல்’ என உறுதி அளிப்பதனை, மனதில் இருத்திக் கொண்டு, குருவினுடைய ஆற்றலை, இயல்பூக்க நியதிப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

     ‘அருளாளர்கள்’ என்று கூறுகின்றபோதே, அதில் இன்பம் இருப்பதனை உணரவேண்டும்.       ‘அருளாளர்கள்’ என்பவர் யார்?  அறிவில் அறிவாய் நிலைத்து. அறம் வகுத்து  அதனை வாழ்ந்து காட்டியவர்களாவர்.  எனவே வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் (Never Ending Divine Relay Race) வருகின்றவர்கள் அருளாளர்களாவர்.  எனவே அவர்கள் மீது கொண்ட மரியாதையாலும், மதிப்பாலும் ‘அருளாளர்கள்’ எனக் கூறும்போதே, அறிவு அவர்களை, இன்னார் இன்னார் எனத் தனித்தனியாக அறிய முடியாவிட்டாலும், அவர்களின் ஒட்டு மொத்தமான புனிதத்தன்மையும், அருள்தன்மையும்  நமது கண் முன்னே வந்து நின்று, எல்லோரையும் ஒட்டுமொத்தமாக மானசீகமாக நினைத்துக்  கொள்வதால் அறிவிற்கு ஆனந்தம் கிடைக்கின்றது.

   இதனை ஓர் நடைமுறையில் நடக்கும் சம்பவத்தின் வாயிலாக, எவ்வாறு  குருவின் திருநாமம் ஆனந்தத்தை அளிக்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  காதலிக்கும் போது, காதலர்கள் இருவரும் ஒருவர் பெயரை மற்றொருவர் உச்சரிப்பதில் இன்பம் கொள்வர். காதலர்கள் இருவரும் நேரிடையாக சந்திக்கமுடியாதபோதும் வேறு யாராவது காதலர்களின் பெயரைச் சொன்னாலும் கூட அப்பெயரைக்கேட்ட மாத்திரத்தில் இன்பம் கொள்வர். இது ஐயுணர்வைச் சார்ந்த இன்பம்.  ஆனால் குரு-சீடர் உறவில் குருவின் திருநாமத்தைக் கேட்டாலோ, அல்லது உச்சரித்தாலோ அது ஆனந்தத்தைத் தருகின்றது.  இது மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம்.  மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம் பேரானந்தத்திற்கு கொண்டு சேர்க்கும்.  ஆனால் ஐயுணர்வைச் சார்ந்த  இன்பம் நிரந்தரமற்றது மட்டுமில்லை,  சலிப்பையும் கொடுக்கும், அளவையும்,  முறையும் கடைபிடிக்காமலிருந்தால்.  சீடர் குருவின் மேன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

குருவின் மேன்மை

     எந்த அளவிற்கு குரு கூறும் அறிவார்ந்த விளக்கத்தால் சீடரின் அறிவிற்கு, குருவின் அளவிற்கு ஆழ்ந்த விரிந்தபுரிதல் ஏற்படுகின்றதோ, அந்த அளவிற்கு குருவிற்கும் சீடருக்கும் இடையே புனித ஈர்ப்பு(Divine attraction)  ஏற்படும்.  இதன் விளைவாக  சீடனுக்கு குருவின் மீது

       1)   எல்லையில்லாத் தெய்வீக அன்பு(unconditional Divine Love)ஏற்படும். 

       2)  உயர் மரியாதை,

       3) உயர் மதிப்பு,

       4) உண்மை நம்பிக்கை,

       5) குருவின் விளக்கத்தின் மீது அழுத்தமானப் பிடிப்பு,

      6)  அசையாது மதித்தொழுகுதல்(implicit obedience) ஏற்பட்டு,

குருவிற்கும் சீடருக்கும் இடையே நெருக்கமான, திடமான பிணைப்பு உண்டாகும். இயல்பூக்க நியதியும், அதன் கிளைத்தேற்றமும் உறுதியாகும். எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும். குருவின் உயர்வு மதிப்பவரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் இயற்கை/இறை என்று மகரிஷி அவர்கள் உறுதியாகக் கூறுவதனை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

 எனவே, அப்போது குருவின் திருநாமத்தைச் சொல்வதில் சீடருக்கு ஆனந்தம் ஏற்படுகின்றது.  அறிவிற்கு ஆனந்தம் ஏற்படுகின்றது என்றால் அறிவிற்குத் தெளிவு ஏற்படுகின்றது என்று பொருள்.

      அறிவு என்றாலே அது அறியும் திறனுடையது. அறியும் திறனுடைய அறிவு, சிந்திக்கவல்லமை உடையதாலும், ‘என்ன?’, ‘ஏன்?’, ‘எதற்கு?’ ஆகிய  வினாக்களை எழுப்பி விடைகளைக் கண்டுபிடிப்பதன் மூலமாக, அதன் இயல்பு வெளிப்படுவதால், அது அறிவிற்கு பேரானந்தம்தானே.  எனவேதான் அவ்வைத்தாய் அறிவினருடன் (குருவினுடன்) சேர்வதும், அவரைக் கனவிலும், நனவிலும் காண்பதும் இனிதினிலிலும் இனிது என்கிறார்.  

     அதாவது ஆனந்தத்தின் விளைவாக அறிவு பண்பேற்றத்தின் மீது ஆர்வமும், அக்கறையும் கொள்கின்றது என்று பொருள். எனவே குருவின் திருநாமம் மந்திரம் போல் செயல்படுவதற்கு.  அப்பெயருக்குரியவரின் அரிய, பெருமைகளை, வாழ்க்கை வரலாறுகளை, அவர் புனிதம் அடைந்த விதத்தை எந்த அளவிற்கு சீடரால் ஆழ்ந்து விரிந்து புரிந்து வைத்துக்கொள்ளப்படுகின்றதோ, அந்த அளவிற்கு அச்சீடர் குருவின் திருநாம உச்சாடனம், தெளிவினையும், ஆனந்தத்தையும் அளிக்கும். இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(06-04-2016 புதன்),  மூன்றாவது வழியான  ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பதனைப்பற்றிச் சிந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

 வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments