பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 6/?

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

FFC – 173

20-03-2016—ஞாயிறு.

 

FFC-168- மகரிஷி படம்

வாழ்க வளமுடன்.

சென்ற அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதற்கான நேரிடையான விளக்கத்திற்குள் சென்றோம். அன்று அச்சிந்தனை முற்றுபெறாததால்  இன்றும் அதனைப்பற்றிய நேரிடையான சிந்தனையையே தொடங்குவோம். இன்று, மகரிஷி அவர்கள், ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் சொல்வதற்கானக் காரணத்தை அறிவோம்.

உணர்வு’ பற்றி சிந்தனை செய்து வருகின்றோம். உணர்வது அறிவு என்பதால், திருவேதாத்திரியத்தில், அறிவிற்கு என்று அறிவியலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள், அறிவின் இயக்கத்தைப் பற்றிக் கூறுவது என்ன என்று அறிந்து கொள்வோம். அறிவு அரூபமாக இருந்தாலும், அது நம்மிடமே உள்ளதால், அதனைக் கண்டுபிடித்து, அதன் செயல்பாடுகள் பற்றி கூறியுள்ளார். அறிவு இயங்கும் நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். பஞ்சபூத பூங்காவிலே உலவி(எனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் அவரே குறிப்பிட்டுள்ளார்) பஞ்சபூதங்களின் உருவாக்கத்தினைக் கண்டுபிடித்ததுபோல், ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயனின் பேராட்சியில் அங்கம் வகித்து, அறிவின் இயக்க நிலைகள்/செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

உயிரினங்கள் உணர்வதால், உணரக்கூடிய அறிவு உயிரினங்களில் மட்டுமே இருக்கின்றது எனப் பொதுவாக எல்லோராலும் நினைக்கப்படும். ஆனால் மகரிஷி அவர்களின் ‘அறிவின் அறிவியல்’, அறிவு உயிரற்ற சடப்பொருட்களிலும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. இது மனவளக்கலைஞர் அல்லாதவர்களுக்கு வியப்பையேத் தரும். ஆனால் மனவளக்கலைஞர்களுக்கு இக்கூற்று வியப்பைத் தராது. மாறாக அதனை நினைக்க நினைக்க ஆனந்தத்தை தரும். எனவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கேற்ப, விரும்புகின்ற உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சிறப்புற வாழ்வதற்கு, அருமருந்தாகிய மனவளக்கலையின் மகிமையை எடுத்துச் சொல்லி அவர்களையும் மனவளக்கலை பயில்வதற்கு வழிகாட்டிடுவோமாக. வாழ்க வையகம். வளர்க திருவேதாத்திரியம்.

அறிவு சடப்பொருட்களிலும் உள்ளது என்பது மனவளக்கலைஞர் அல்லாதவர்களுக்கு, நம்பமுடியாமலும் இருக்கலாம். அல்லது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஏனெனில் எப்படி அறிவு சடப்பொருட்களுக்குள் இருக்கின்றது என்பது தெரியாது அவர்களுக்கு. ஆனால். மனவளக்கலைஞருக்கு, அறிவு உணர்வற்ற சடப்பொருட்களிலும் உள்ளது என்பதனை அறிவது என்பது ஆனந்தத்தைத் தருகின்றது. காரணம் ஒன்று, அறிவு தன்னைப்பற்றியே அறிந்து கொள்கின்றது. மற்றொரு காரணம், மகரிஷி அவர்கள் அறிவிற்கான அறிவியலில் சடப்பொருட்களில் அறிவைப்பற்றிக் கூறும் விளங்கங்களேயாகும். அவையாவன:

1) உணர்வற்ற சடப்பொருட்களுக்கு ஏன் அறிவு அவசியமாகின்றது,
2) அப்படி அவசியமாகிய அறிவு சடப்பொருட்களில் எவ்வாறு தன் பணியை ஆற்றுகின்றது,
3) அறிவிற்கு அப்போது என்ன பெயர்,

என்பதற்கான விளக்கம் மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இது திருவேதாத்திரிய அறிவின் அறிவியலுக்கு சிகரத்தை அணிவிக்கின்றது. ஏனெனில் விஞ்ஞானம்,

அணுக்கள் அமைப்பாவதற்கும்,
அணுக்களின் அமைப்பு நீடித்துக் கொண்டிருத்தலுக்கும்

அறிவுதான் காரணம் என்பதனைச் சொல்வதில்லை.

அறிவு உணரக்கூடியதாகவும், சிந்தனை செய்ய வல்லதாகவும் மட்டுமே உள்ளது என்று பல நாட்கள் நினைத்திருந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். நியாயம் தானே?! அறிவு என்றால் அது உயிரினங்களில் உணரக்கூடியதாகவும், மனிதனில் கூடுதலாக சிந்தனை செய்ய வல்லதாகவும் உள்ளது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே சிந்தனையாளரான மகரிஷி அவர்களும் அதுபோல் நீண்ட நாள் நினைத்திருந்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு சுவாசமே சிந்தனையாக இருப்பதால்,
அம்முயற்சிக்கு வெகுமதியாகவும்,
அவர் நமக்கெல்லாம் சொல்வதற்காகவும்,
இயற்கை/இறை மேலும் அவருக்கு உண்மையை விளக்கி,
‘உணர்ச்சிக்கு முன்னர் அறிவு உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் செயலாற்றுகின்ற’ உண்மையினை,
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மகரிஷி அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்துள்ளது.

எவ்வாறு, மேலும் அவருக்கு உண்மையை, இயற்கை/இறை விளக்கியிருக்கும் என்று நாம் இப்போது கண்டுபிடிப்போம்.

பஞ்சபூதங்களிலிருந்துதான் உயிரினங்கள் தோன்றின. அவ்வாறு இருக்கும் போது உயரினங்களிலுள்ள அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்? பஞ்சபூதங்களிலிருந்துதான் வந்திருக்க முடியும். அப்படியானால் பஞ்சபூதங்களில் அறிவு இருந்திருக்கின்றது/இருக்கின்றது என்பது உண்மையாகின்றது.

உணர்ச்சியில்லாத, பஞ்சபூதங்களில் அறிவு இருக்கின்றது என்றால், அறிவின் பணி என்னவாக இருக்கும்? அறிவின் பணி, பலகோடி பரமஅணுக்கள் ஒன்று சேர்த்து ஒழுங்காக, இயக்கமாக நீடித்து வெவ்வேறு பூதங்களாக இருப்பதற்குக் காரண ஆற்றலாக இருக்கின்றது.

இந்த விளக்கத்தைத்தான் ‘மேலும் அவருக்கு விளங்கிய உண்மை’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
எனவே ஒழுங்காகவும், அணுவின் இயக்கம் நீடித்து இருப்பதற்கு ஆற்றலாக அறிவு இருந்ததால் அதற்கு (ஒழுங்கு+ஆற்றல்) ஒழுங்காற்றல் என்கின்ற பெயர் வழங்கப்படலாயிற்று. விண்ணில் அறிவு ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என்கின்ற அருட்செய்தியினை தெரிவிக்கும் பாடல் வரிகளை நினைவு கூர்வோம்.

FFC-173-உணர்ச்சியாய் சிந்தனை

இதனைக் கண்டுபிடித்த பிறகே அறிவின் செயல்கள் ஏழு என்கின்ற முடிவிற்கு வந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் ஏழு செயல்கள் என்னென்ன?

FFC-173-N-அறிவின் செயல்பாடுகள்

பகுத்துணர்வு மற்றும் தொகுத்துணர்வு பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் அறிவின் 4, 5, 6 மற்றும் 7 வது செயல்பாடுகள் பற்றி மட்டுமே சிந்திப்போம் இப்போது. அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது பற்றி விரிவாக வேறொரு சமயத்தில் ஐயனின் திருவுளப்படி சிந்திப்போம்.

அறிவு உயிரினங்களில் மூன்று வகைகளில் செயல்படுகின்றது. புலன்களின் எண்ணிக்கைக்கேற்ப அறிவு உணர்தலாக இயங்குகின்றது.

உணர்தலிலும் மூன்று நிலைகளில் இயங்குகின்றது.
அதாவது உணர்தல்(உணர்ச்சி),
அதனால் ஏற்படுகின்ற இன்ப துன்ப அனுபவம்,
ஒன்றோடு மற்றொன்றை பிரித்து உணர்தல் ஆகியவைகளாகும்.

இதே அறிவு மனிதனில் வரும்போது,
தனது ஆறாவது நிலையான சிந்தனை ஆற்றலாகவும்,
அதனால் இயற்கையின் முழுமையை உணர்ந்து கொள்ளக்கூடிய பேராற்றலாகவும்,
தன்னுடைய மூலத்தையும் முடிவையும் அறிந்து ‘தான் யார்’ என்ற தன்னிலை விளக்கம் பெறும் சிறப்பாற்றலாகவும் உயர்வு பெறுகின்றது.

இங்கே நாம் மகரிஷி அவர்களைப்போல், ஆழ்ந்தும் விரிந்தும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

அறிவைப்பற்றிய, மகரிஷி அவர்களின் இந்த கண்டுபிடிப்பு ஆன்மீகமா? விஞ்ஞானமா?/ஆன்மீகத்தைச் சேர்ந்ததா? அல்லது விஞ்ஞானத்தைச் சேர்ந்ததா? அல்லது ஆன்மீக-விஞ்ஞானமா(Spiritual Science)?

அறிவு இருக்கின்றது என்பதனை அறிவே ஒப்புக்கொள்ளாதா? விஞ்ஞானம் சொல்லித்தான் அறிவு, தான் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா என்ன?

அடுத்ததாக. அறிவு சீவ இனங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் ஆகிய மூன்று நிலைகளில் இயங்குகின்றது என்பது ஆன்மீகமா அல்லது விஞ்ஞானமா? அதுவும் விஞ்ஞானம்தான். அறிவு ஏற்றுக்கொள்ளாதா இதனை? அறிவுப்பூர்வமாகத்தானே உள்ளது. நடைமுறையில் நடப்பதுதானே ‘உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல்’ என்பது.

அறிவு இருப்பது என்பதும், அது உயிரினங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் என்பதும் விஞ்ஞானமேதான். அறிவு, தான் இருப்பதை அறிவதும், உயிரினங்களில் தன் இயக்கங்களைப்பற்றி அறிவதும் விஞ்ஞானமே அல்லது இயற்கையின் தன்மை அது.

அறிவின் 4, 5, 6 ஆம் நிலைகளான உணர்தல், அனுபவம், பிரித்துணர்தல் என்பது எல்லா சீவராசிகளுக்கும் பொதுவானது. அதாவது ஐந்தறிவு சீவனான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவு சீவனான மனிதனுக்கும் பொதுவானது. அறிவின் இந்த மூன்று நிலைகளுக்கும் புலன்கருவிகள் அவசியம்.

அறிவின் ஆறாவது செயல்பாடான ‘பிரித்துணர்தல்’ என்பது பிரித்து பிரித்து உணர்தல் என்பதால் அதனை பகுத்துப்பார்க்கும் பகுத்துணர்வு என்றும் கொள்ள வேண்டும். எனவே பகுத்துணர்வு என்பது அறிவின் செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்து விடுகின்றது. எனவேதான் இதனை தவிர்க்க முடியாது என சென்ற விருந்தில் அறிந்தோம்.( FFC 168 click here)

தன் செயல்பாடுகளில் கடைசி நிலைக்கு(7 ஆம் நிலை) வரும்போது, அறிவு ஆறாம் அறிவு எனப்படுகின்றது. ‘தான் யார்?’ என அறிவு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் அறிவு முழுமை பெறுகின்றது/பெறமுடியும். அரூபமான அறிவு முழுமை பெறுவது என்பது என்ன? அரூபத்தில் முழுமை என்பது என்ன? உருவத்தில் முழுமை இருக்க முடியும். அரூபத்தில் முழுமை என்பது அதன் முழுமைத்தன்மையை வெளிப்பிடுத்துவது; அதாவது அறிவு நிலையில் பண்பேற்றம் பெறுவது.

ஒரு துளி விந்துநாதத்தில் ஆரம்பித்து பத்து மாதங்களில் குழந்தைக்கான உடல் முழு வளர்ச்சி அடைந்து குழந்தை பிறக்கின்றது. பின்னர் உடல் ரீதியாக முழு வளர்ச்சி அடைந்து குழந்தை, சிறுவனாக, வாலிபனாக ஆகின்றது. பிறகு உற்ற வயது வந்ததும் வம்சாவளி உற்பத்திக்குத் தயராகிறான் மனிதன். எனவே உடல் ரீதியாக மனிதனால் முழு வளர்ச்சி அடைய முடிகின்றது. ஆனால், அதுபோல், மனிதன்,

அறிவின் செயல்பாடுகளில் கடைசி நிலையான ‘தன்னை உணர்தல்’ என்கின்ற நிலைக்கு,
ஆறாம் அறிவு தரத்தில் உயர்ந்து வளர்ச்சி பெற்று முழுமை அடைய முடிவதில்லை.

ஒரு சிலரைத் தவிர, அதாவது தெளிவு(ஞானம்) அடைந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அறிவின் நிலையில் ‘தன்னை உணர்கின்ற நிலைக்கு’ உயர்ந்து வளர்ச்சி பெற்று முழுமை அடைய முயற்சிப்பதில்லை. காரணம், அதற்கான விளக்கமோ, பயிற்சியோ அளிக்கின்ற நிலையோ, சூழலோ சமுதாயத்தில் பரவலாக ஏற்படவில்லை, உருவாக இல்லை. இங்கேதான் மனிதகுலத்தின் சிக்கல்கள் எல்லாம் மையம் கொண்டிருக்கின்றது. எனவேதான் இப்போது, இயற்கை/இறை, ஆன்மீகத்தில் ஏற்படுத்திய சடுதி மாற்றமமாக, வேதாத்திரியம்(Sudden exposure to Spirituallism) அந்நிலையினை மாற்றி ஆறாம் அறிவின் கடைசி செயலான ‘தன்னிலை உணர்தலை’ பாடமாக்கிட அறிவிற்கு அறிவியலை ஏற்படுத்தித் தந்துள்ளது.

தன்னிலை உணர்தல் என்பது என்ன? அறிவு தன்னுடைய மூலத்திலிருந்து ஆரம்பித்து தன்னுடைய முழுப்பயணத்தையும் அறிந்து கொள்ளுதலாகும். முழுப்பயணத்தையும் அறியும்போது இறையே நானாகவும், மற்றவர்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லாமாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்ற புரிதல் ஏற்படும்போது ‘நானே எல்லாமாகவும் இருக்கிறேன்’ என்கின்ற மிக உயர்ந்த நிலையான தெளிவு ஏற்படுகின்றது. இந்த நிலையில்தான் அறிவு தொகுத்துணர்கின்றது. அதாவது தொகுத்துணர்வு(Holistic view) என்பது எல்லாவற்றையும் ஒன்று படுத்தி உணர்தல்  (FFC -168 Click here)என்றாகின்றது. இந்த நிலையில்தான் சமுதாயத்தில் மனிதன், மதி நிலைத்த மனிதாக வாழமுடியும். மனமறிந்து மன இதமாய், மனிதன் உள்பட பிற உயிர்களுக்கும் மனம் விரும்பி, தொண்டாற்றி மாமுனிவனாக திகழும் மாமுனிவனே முழுமனிதன் என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

அறிவு மனிதனாக வந்த பிறகும், தனது கடைசி செயல்பாடான ‘தன்னிலை உணரவில்லை’யென்றால் என்ன பொருள்? அறிவு அதன் முந்தையை செயல்பாடுகளான 4, 5, 6 ஆம் நிலைகளான ஐயுணர்விலே—பகுத்துணர்விலே மட்டுமே வாழ்கின்றது என்றல்லவா பொருளாகின்றது. ஐயுணர்வு, விலங்கிற்கும் மனிதனுக்கும் பொது என்றாலும்கூட அறிவு மனிதனாக வரும்போது தனது கடைசியும், சிறப்புடைய செயல்பாட்டிற்கு (7 ஆம் நிலை) வரவில்லையானால் என்ன பொருள்? மானுடவியல் தந்த அருட்தந்தை அவர்கள் கூறுவது போல் ‘மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு’ என்கின்ற நிலைதான் என்று பொருள். எனவே இந்த நிலையில் உள்ள பண்பாடு உயர வேண்டும் என்கிறார் உலக நல ஆர்வலரும், அதனால் உலக நலத் தொண்டராக அறிவுத்தொண்டாற்றியதன் பயனாக லட்சோபலட்சம் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தவரான அருட்தந்தை அவர்கள்.

அறிவு இருப்பதையும், அறிவு உயிரினங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் ஆகிய மூன்று நிலைகளில் இயங்குகின்றது என்பதற்கும் விஞ்ஞானமே என சற்று முன்னர் ஒப்புக் கொண்டோம்.

அதுபோல், அறிவு மனிதனில் ‘தன்னை உணரவேண்டும் என்பதும் ’ விஞ்ஞானமா என்கின்ற வினா எழலாம். வினாவிற்கே அவசியமில்லை. அறிவு மனிதனில் தன்னிலை உணர்வது என்பது இயற்கையின் நிகழ்ச்சி. எனவே அது விஞ்ஞானமே! இதுவரை விஞ்ஞானம் அதனைக்கண்டுபிடித்துச் சொல்லவில்லை. ஆனால் மெய்ஞ்ஞானம் அதனை எப்போதோ கண்டுபிடித்துவிட்டது. இங்கேதான் அறிவின் வளர்ச்சிக்கண்களான விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் இணைந்து பார்க்க வேண்டும் இந்த உலகை. அதாவது உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்“மெய்ஞ்ஞானமில்லாத விஞ்ஞானம் குருடு. விஞ்ஞானமில்லாத மெய்ஞ்ஞானம் நொண்டிScience without Religion is blind and Religion without Science is lame” என்று ஆதங்கப்பட்டதை திருவேதாத்திரியம் நிறைவு செய்திருக்கின்றது.

அறிவே, திருவேதாத்திரியம் அறிவைப்பற்றிக் கூறும் விளக்கத்தாலேயே எளிதாக தன்னை விளங்கிக் கொள்ள முடிகின்றது. அறிவு, அட்டவணையிலுள்ள 4, 5, 6 ஆம் நிலைகளில் உயிரினங்களில் செயல்படுகின்றது என்பது விஞ்ஞானமாகவே உள்ளது என்கின்ற போது அறிவு மனிதனில் தன்னை உணரவேண்டும் என்பதும் விஞ்ஞானமாகவேதான் உள்ளது.

ஆறாம் அறிவு தன்னை உணர்தல் வேண்டும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம் என்பது விஞ்ஞானமே. எப்படி சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் அவசியம் என விஞ்ஞானம் கூறுகிறதோ அதுபோல் மனித குலத்திற்கு ‘தன்னை அறிவது’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அவசியமாகின்றது. ‘தன்னை அறிவதும் அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது வெறும் ஆன்மீகப்பேச்சு அன்று. தற்போதைய ஆன்மீகத்தின் நிலை யாவரும் அறிந்ததே! மனிதன் விரும்பினால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளலாம். விரும்பாவிட்டால் ஆன்மீகத்தை விட்டும் விலகியே இருந்து வாழ்க்கை நடத்தலாம் என்பது மனிதனின் சுதந்திரம் என்கின்ற கருத்தாக இருக்கின்றது. ‘தன்னை உணர்வதும் அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பதும் மனிதஇன பரிணாமத்தில் நடக்கவேண்டிய இயற்கையின் நிகழ்வு அது. இயற்கையின் நிகழ்வான, ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பதும் மனிதகுலத்திற்கே மிக மிக அவசியமானதும், கட்டாயமானதுமாகும். இந்த நிலையை வாழ்த்து என்கின்ற எண்ண அலைகளால் மலரச்செய்ய விரும்பியே வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை/இறை எழுதிய மந்திரமே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகநல வாழ்த்து மந்திரமாகும்.

இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-03-2016-புதன்), ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது எவ்வாறு இயற்கையின் நிகழ்வு என அறிந்து விட்டு, பண்பாட்டை உயர்த்தும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு, மனிதகுலத்தின் பூர்விக சொத்தான அமைதியினை அனுபவிக்கச் செய்து, பேரின்பநிலையை அனுபவிக்கச் செய்கின்றது/செய்ய முடியும் என்பதனை அறிவோம். வாழ்க வளமுடன்.

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments