228-அறியாமை நீக்குதல்

வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

 
அறியாமை நீக்குதல்

அறிவிற்கு விருந்து—228

21-09-2016—புதன்.

 

ariyaamai

வாழ்க வளமுடன்.

சென்ற அறிவிற்கு விருந்தில் அலட்சியம் என்கின்ற அறிவின் வறுமையைப் பற்றி சிந்தித்தோம். இன்றைய விருந்தில் ‘அறியாமை’ என்கின்ற மற்றொரு வறுமையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

‘அறியாமை’ என்றால் என்ன? அறிவின் தன்மையினை அறியாமை என்கிறோம். அறிவின் தன்மை என்னவாக இருக்க வேண்டும்? எது அறிவு? அறிகின்றது எதுவோ அது அறிவு. அறிவதால் அது அறிவு எனப்படுகின்றது. அப்படியிருக்கும்போது அறியாமை அறிவின் தன்மை என்றால் என்ன பொருள்? அறிவு அறியாதிருக்கின்றது என்று பொருளாகின்றது. அறியாதிருத்தல் அறியாமை எனப்படுகின்றது.

பொதுவாக அறியாமை என்றால் என்ன? குழந்தையாக இருக்கும்போது அறியாமை இருக்கும். வயது ஆக ஆக அறியாமை நீங்கி வரும். அப்படியிருக்கும்போது குழந்தையாக இருந்தபோது இருந்த அறியாமை வயது ஆக ஆக நீங்காமல் இருந்தால் அதனை என்னென்போம்? அறிவு வளர்ச்சி இல்லை என்போம். ‘ஆளும் வளரனும். அறிவும் வளரனும்’ என்று திரைப்பட பழம் பாடல் ஒன்று கூறுகின்றது, அறிவு வளர்ச்சி அடையாதது விரும்பத்தக்கதல்ல. இதனால் தனக்கும் மற்றவர்களுக்கும் துன்பமே ஏற்படும். அப்படியானால் அறியாமை என்பது என்ன?

தவறு செய்தால் இன்றோ அல்லது நாளையோ அறிவிற்கோ உடலுக்கோ விளைவு துன்பமாக வரும் என்பது தெரியாதிருப்பது அறியாமையாகும். எனவே இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்கின்ற துன்பங்களே நோய்களாகவும், வாழ்க்கைச் சிக்கல்களாகவும் மனிதனிடம் எழுந்து நிற்கின்றன என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது இயற்கை/இறை நீதியை அறியாமல் இருப்பது அறியாமையாகும்.

அறியாமை என்பது இயற்கை ஒழுங்கமைப்பை உணராமல், ஒரு மனோ வேகத்திலே விளைவை அறியாது செயல்படுதலாகும். சிறு வயதில் இந்த வேகம் அதிகமாக இருக்கும். விவேகம் அடங்கி இருக்கும், பிறகு வயதாக விவேகம் உயர்ந்து வேகம் கட்டுப்படவேண்டும். அப்படியில்லை என்றால் அது கவலை அளிக்கக் கூடிய ஒன்று.
இயற்கை/இறை நீதியினை அறியாதிருத்தல் அறியாமை என்று பொருள். இயற்கை/இறை நீதியினை அறிந்து நடந்தால் என்ன பொருள்? இயற்கை/இறை நீதியினை அறிந்து மதித்து நடந்தால் அதுவே

அறிவுடமை;
அறிவு முழுமை;
இறைஉணர்வு.”

ஆகவே இறைஉணர்வு பெறாதிருத்தல் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனுக்கும் அறியாமை இருக்கின்றது என்று பொருளாகின்றது. அறியாமை இருக்கின்ற வரை மனிதன் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டேதான் இருக்க வேணடும். அறியாமையில் இருக்கும் மனிதன் சிக்கல்களில் சிக்கிக் கொள்வான்; சிக்கல்களை பெருக்கிக் கொண்டே இருப்பான். ஏனெனில் அறியாமையில் இருக்கும் மனிதன் சிந்திப்பதில்லை. சிந்திக்காமல் செய்யப்படும் செயல் பெரும்பாலும் துன்பத்தையே விளைவிக்குமல்லவா?

அறியாமையை ஏன் வறுமையோடு ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்? செல்வங்களிலேயே தலையாயது அறிவுச் செல்வம். செல்வம் எதற்கு? வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இன்பமாக வாழ்வதற்கு. . போதுமான செல்வம் வேண்டும். செல்வத்தில் குறைவு இருந்தால் விளைவு துன்பம். அதேபோன்று அறிவுச் செல்வத்தில் அறியாமை என்கின்ற குறைவு இருந்தால் அறிவுச் செல்வம் முழுமையானதாக இராது. விளைவு துன்பமே. செல்வத்தில் குறைவு இருந்தால் அதனை வறுமை என்பதுபோல் அறிவுச் செல்வத்தில் குறைவு இருந்தால் அது அறிவின் வறுமையாகின்றது.

அறிவின் பணி உணர்தலாகும். அதற்கு புலன்கள் ஐந்தும் கருவிகளாக இருக்கின்றன. ஐந்து புலன்களால் அறிவதால் மட்டும் அறிவு அறிவாகிவிடாது.
தன்மாற்றத்தில்(பரிணாமம்) பேரறிவேதான் ஐந்தறிவு சீவனாகி பிறகு ஆறாம் அறிவு சீவனாகியுள்ளது. அறியாமை என்பதனை ஆறாம் அறிவின் வறுமையாகக் கருதுகிறோம். ஏன்? ஐந்தறிவிற்கு அறியாமை உண்டா? இல்லை. ஐந்து புலன்களால் எதை எதை உணரவேண்டுமோ அவற்றை ஐந்தறிவு சீவன் உணர்ந்து கொள்கின்றது. எங்கே வறுமை உள்ளது? ஆகவே ஐந்தறிவு சீவன் அதற்கு மேலும் உணரவேண்டியது வேறொன்றுமில்லை. எனவே ஐந்தறிவு சீவனுக்கு அறியாமை என்பது கிடையாது. அப்படியிருக்கும்போது,

அறியாமை இல்லாத ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக வரும்போது ஆறாம் அறிவிற்கு மட்டும் அறியாமை

எவ்வாறு வந்தது?

 எங்கிருந்து வந்தது?

ஐந்தறிவிற்கு அடுத்ததாக ஆறாம் அறிவாக புலன்கள் ஏதுமின்றி உயிரினம் தோன்றக் காரணம் என்ன?
ஆறாம் அறிவு பிரத்யேகமாக உணர வேண்டியது உள்ளது. அதுவே தன்னை உணர்வது. அதற்கு புலன்கருவிகள் ஏதும் அவசியமில்லை.
ஐந்தறிவால் உணரப்பட்ட அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகிய ஐந்து பிரபஞ்ச நிகழ்ச்சிகளை உணர்ந்து கொண்டிருந்த அறிவு, இந்த நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இவற்றிற்கு மூலம் என்ன என்று அறிவதற்காகவே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்தது. ஆகவே ஆறாம் அறிவாக வந்தபோது பிரபஞ்ச நிகழ்ச்சிகளுக்குக் காரணம் அறியாதிருத்தலால் அது அறியாமை என்கின்ற குறைபாடாகக் கருதப்படுகின்றது வேதாத்திரிய அறிவிற்கான அறிவியலில். திருவள்ளுவர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார் என்பதனை அறிவோம். அதற்கு அவர் அருளியுள்ள 27 வது குறட்பாவை அறிந்து கொள்ள வேண்டும்.

நீத்தார் பெருமை

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. ”                          . . . குறள் எண் 27

பொருள்:
ஐம்பூதங்களுக்கு மூலமாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தும் தோன்று விதத்தை அறிந்தவன் உலகம் தோன்றியதை அறிந்தவனாகிறான்.

(அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தைப்பற்றியும் அறிய வல்லவனே உலகத்தில் உண்மை இயல்பை உணர்ந்தவனாவான் என்பது பொருள். உலகம் ஐம்பூதத்தின் கூட்டால் அமைந்துள்ளதாலும், ஐம்பூதங்களின் மூலங்களையும், அவற்றின் ஆதி நிலையையும் அறிந்தவர் உலக அமைப்பின் உண்மை உணர்ந்தவராவார், மற்றையோர்க்கு உலகத்தின் மெய்யியல்பு விளங்காது.)

மேலும் அறிவு என்பது எது, அது எவ்வாறு இருக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறுவதனையும் நினைவு கூர்வோம்.

         மெய் உணர்தல்

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.                      . . . குறள் எண் 351

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.”                 . . . குறள் எண் 355

          அறிவு உடைமை

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.”                  . . . குறள் எண் 423 

மெய்ப்பொருளை அறிந்த அறிவே அறிவு என்கிறார். அப்படியானால் மெய்ப்பொருளை அறியாத அறிவு அறியாமையில் இருக்கின்றது என்கிறார். மெய்ப்பொருளை அறியாத அறியாமையில் உள்ள அறிவால் சிறப்பில்லாத துன்பப் பிறவிதான் உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆகவே மெய்ப்பொருளை அறியாத அறியாமையே மற்ற அறியாமைகளுக்குக் காரணமாக உள்ளது.

ஆறறிவாகப் பிறந்த மனிதன் அதற்கு பொருத்தமாகிய பேறாகிய உண்மைப்பொருளை உணரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

எனவே மனக்கவலையைத் தரும் அறியாமையை நீக்கி வாழவேண்டும் மனிதன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? திருவள்ளுவரின் குறளையும் அதற்கு மகரிஷி கூறும் உட்பொருளையும் அறிந்து கொள்வோம்.

             கடவுள் வாழ்த்து

தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.”                     குறள் எண் 7

உட்பொருள் விளக்கம்:

தனக்கு உவமையில்லாத மெய்ப்பொருளை உணர்ந்த குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் அறியாமையால் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; இஃதன்றி வேறு எந்த வழியும் மனக்கவலையை மாற்றுவதற்கு இல்லை. இந்தக் கருத்தைத்தான் திருவள்ளுவர் இறைநிலை அறிந்து அறியாமையைப் போக்கி அதன் வழிவாழ்ந்தால் அன்றி வேறு எந்த வகையிலும் மனக்கவலை மாறாது எனக் கருணையோடு எடுத்துரைக்கின்றார் என மகரிஷி அவர்கள் உட்பொருளாகக் கூறுகின்றார், எனவே மனக்கவலையை மாற்ற மனவளக்கலையை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அழைப்பு விடுத்திருக்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே மனவளக்கலையால் அறிவின் அறியாமையை நீக்கி அறிவை முழுமை பெறச்செய்து இன்புற்று வாழ்வோம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments