இணைய தளத்தின் ஆசிரியர் பற்றி

சுமார் பத்து வருடங்கள் கழித்து அன்பர்களைச் சந்தித்து உரையாட வருகின்றார் இந்த இணைய தளத்தின் ஆசிரியர். பத்து வருடங்களுக்கு முன்னர் வாழ்வியல் வரிசையில்(Science of Living Series) முதல் நூலாக அவர் எழுதிய ‘நான் யார்?’ என்கின்ற நூலின் வாயிலாக அன்பர்களைச் சந்தித்து உரையாடி இருக்கின்றார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர் சிறு வயதிலிருந்தே கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர். அப்போதே இறைவணக்கத்தின் இலக்கணத்தை தானாகவே ஏற்படுத்திக் கொண்டவர். “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்பது போல் அல்லாமல், “கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்’ என்கின்ற இறைக்கோட்பாடு தான் அந்த இலக்கணம்.

வேதாத்திரி மகரிஷியை குருவாக அடைந்தபோது, “இணக்கத்துடன் (இறைக்கு) கூடிய இறைவழிபாடு வேண்டும்” மற்றும் “மனிதனின் செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்று மகரிஷி அவர்கள் வகுத்திருந்த இறைவழிபாட்டின் இலக்கணத்தால் ஆசிரியர் தானாகவே ஏற்படுத்திக் கொண்டிருந்த இறைவணக்கக் கோட்பாடு உறுதி படுத்தப்பட்டது. மேலும், கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான வரையறையை தன்னுடைய குருநாதரிடமிருந்து தெரிந்து கொண்டார்.

ஆசிரியர், தன்னுடைய முதல் குரு ஆதிசங்கரர் என்று கூறுவதற்கானக் காரணம், இணைய தள ஆசிரியர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பில் நடந்த ஒரு சம்பவமாகும். ஒரு நாள் பிற்பகல் சரித்திரப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் சரித்திர ஆசிரியர். அப்போது சரித்திர ஆசிரியர் “ஆதிசங்கரர், மத்வர். இராமானுஜர் போன்ற பெரியோர்கள் தோன்றினர். ஆதிசங்கரர் அத்வைதத்தைப் போதித்தார்” என்று கூறினார். அப்போது, ஆதிசங்கரர் தன்னுடைய சீடர்களுடன் செல்வது போன்றக் காட்சியை, மனதில் கண்டார் இணையதளத்தின் ஆசிரியர்.

அப்போது இணையதள ஆசிரியர் சிறுவனாக இருந்ததால், அந்நிகழ்ச்சி அவருக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை. பின்னர் ‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற அத்வைதத்தை ஆதிசங்கரர் போதித்தது போல், அதே அத்வைத தத்துவத்தைப் போதிக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குச் சீடராகிய பிறகும் இந்நிகழ்ச்சி நினைவிற்கு வரவில்லை. சில நாட்கள் கழித்துதான் இந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. பிறகு அந்நிகழ்ச்சியினை மனதில் கொண்டுவரும் போதெல்லாம் ரம்மியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

அவர் இருபத்திரண்டு வயதிலிருந்தே ‘The Hindu’ ஆங்கில நாளேட்டில்‘Religion’ என்கின்ற தலைப்பில், முந்தைய நாள் சென்னை நகரத்தில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவின் (discourse) சுருக்கம்(gist) வெளிவருவதைத் தவறாமல் அருட்தாகத்துடன் படிக்கும் பழக்கம் உள்ளவர். அது அவருள் மறைந்திருந்த ஆன்ம தாகத்திற்கு ஆன்மநீர் வார்ப்பதாக இருந்தது. இத்தருணத்தில் ‘The Hindu’ நாளேட்டிற்கு உள்ளத்திலிருந்து பூரித்து வருகின்ற நன்றி தெரிவிக்கப் படுகின்றது. இப்படியாக அவருடைய ஆன்மீகப் பயணம் ஆரம்பித்தது. இவ்வாறாகக் குரு கிடைப்பதற்கு முன்னரே. இயற்கை, ஆன்ம தாகத்தை அவருக்கு ‘The Hindu’ நாளேட்டின் வாயிலாக ஏற்படுத்தியது.

பின்னர் ஆன்மீகச் சொற்பொழிவின் சுருக்கத்தையெல்லாம் தொகுத்து ‘The Hindu Speaks on Religious Values’ என்கின்ற தலைப்பில்,  Kasturi & Sons ltd. நிறுவனத்தால், மார்ச்சு மாதம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பதாம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கும் இத் தருணத்தில் அவர்களுக்கு  நன்றியினை செலுத்துகிறார்.

பின்னர் வேதாத்திரி மகரிஷியின் சீடரானார். ஏறக்குறைய முப்பது வருடங்களாக மகரிஷியின் சீடராக இருந்து வருகிறார். அவர் கூறியுள்ள, இயற்கையின் ஆதிநிலையே இறைநிலை, அது எவ்வாறு இன்று காணப்படும் பிரபஞ்சம் முதல் மனிதன் வரை வந்துள்ள சரித்திரம், மனிதனின் துன்பங்களுக்கான காரணம், அதற்கான தீர்வு, உலக சமாதானத் திட்டங்கள் ஆகியவைப்பற்றிய அவரது சிந்தனைப் பள்ளியில் (Vethathiri Maharishi’s school of thought) சிந்திக்கின்ற மாணவனாக இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து அவரது கருத்துக்களை நிரூபணம் செய்து கொண்டு வருபவர். இப்போதும், எப்போதும், மகரிஷியுடன் உறவிலும், கருத்துக்களிலும் அணுக்கச் சீடராக இருந்து வருகிறார்.

மகரிஷி அவர்கள் தலைமை தாங்கிய பிரபஞ்ச ஒருங்கிணைப்புத் தத்துவ விஞ்ஞான கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அறிவை மேம்படுத்திக் கொண்டார் இணைய தளத்தின் ஆசிரியர். குறிப்பாக வேலூர், பெங்க@ரு, டில்லியில் ஐ.ஐ.டியில் நடந்த விஞ்ஞானக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆதிசங்கரர் போதித்த அத்வைத தத்துவமான ஒருமை தத்துவத்தில் தெளிவு பெற்றார். இன்னமும் தினந்தோறும், மேலும் மேலும் தெளிவு பெற்று வருகிறார். ரிஷிகேசத்தில் மகரிஷி அவர்கள் நடத்திய ஐந்து நாள் சிறப்பு பயிற்சியிலும் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளார்.
குரு—சீடர் உறவில், குருவின் நடை, உடை, பாவனையிலிருந்து சீடன் அடையவேண்டியத் தரமாற்றங்களை அனுபவப் பூர்வமாகப் பெற்று மகிழ்ந்து வருபவர். மகரிஷி அவர்களைத் தனியாகத் தரிசிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அவ்வாறு மகரிஷி அவர்களைச் சந்தித்த போது, ஆன்மீகக் கட்டுரைகளை எழுதுமாறு இந்த இணைய தள ஆசிரியரை மகரிஷி அவர்கள் வாழ்த்தினார். சில காலம் கழித்து ஆன்மீகக் கட்டுரைகள் எழுதப்பட்டன. அக்கட்டுரைகள் சிலருக்கு ஆன்ம தாகத்தை தணித்ததாக இருந்தன.

அவ்வையார் மனிதப் பிறவியைப் பற்றிக் கூறும்போது “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அந்த மனிதப் பிறவியின் பயன் என்ன என்பது மற்றும் அந்தப் பயனை அடைய மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவையையும் ஆராய்ச்சியின் மூலம் பெற்றவர். ஆகவே வாழ்வியல் வரிசையில் முதல் நூலாக ‘வாழ்வின் நோக்கம்’ என்கின்ற தலைப்பில் எழுத வேண்டும் என பல நாட்கள் எண்ணியிருந்தார் இணையதளத்தின் ஆசிரியர். வாழ்வியல் என்றாலே வாழ்க்கை எதற்காக நமக்கு இயற்கை வழங்கியுள்ளது என்பதனை அறிந்து கொள்வதுதானே சரியாக இருக்கும்.

அதற்கான குறிப்புகளைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ‘வாழ்வின் நோக்கம்’ என்கின்ற தலைப்பில் முதல் நூல் எழுதமுடியாமல் ‘நான் யார்?’ என்கின்ற நூல்தான் முதல் நூலாக டிசம்பர் மாதம், இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு எழுத முடிந்தது. இதுவும் சரிதான். ஏனெனில் நான் யார் என்கின்ற வினாவிற்கு விடைகிடைத்து விட்டால் வாழ்வின் நோக்கம் தானாக விளங்கிவிடும் எனக்கருதி, இயற்கை ”நான் யார்?” என்கின்ற நூலை எழுத திட்டமிட்டது போலும். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியினைக் கூற வேண்டும்.
ஆசிரியர் எழுதிய ‘நான் யார்?’ என்கின்ற நூலை எழுதியதும் அதனை மகரிஷி அவர்களிடம் நேரிடையாகக் காண்பித்து வாழ்த்தினைப் பெறுவதற்காக ஆழியார் சென்றிருந்தார். மகரிஷி அவர்களைப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். பிறகு மகரிஷி அவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. மகரிஷி அவர்களை அவரது அறையில் தரிசித்தார் இணையதள ஆசிரியர். மகரிஷி அவர்களிடம், இந்த இணையதள ஆசிரியர், தான் எழுதிய ‘நான் யார்?’ என்கின்ற புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை வாங்கிக் கொண்ட மகரிஷி அவர்கள், தன் மேசை மீது வைத்திருந்த திருத்தப்பட்ட ‘edit copy’ யினை ஆசிரியரிடம் கொடுத்தார். காத்திருக்கச் சொன்ன நேரத்தில்தான் மகரிஷி அவர்கள் அந்த ‘edit copy’ ஐ சரிபார்த்து முடித்திருந்தார். அது மகரிஷி அவர்கள் இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் எழுதிய ‘நான் யார்?’ என்கின்ற நூலின் ‘edit copy’ ஆகும். மகரிஷி அவர்கள் அன்புடன் சிரித்தார். வாழ்த்தினார். “படிக்கிறேன்” என்று கூறி பக்கங்கங்களைப் புரட்டிப் படித்தார்.

மகரிஷி அவர்கள் நூல்கள் எழுதும் போது பொதுவாக, அன்பொளியில் நூல் எழுதிக் கொண்டிருப்பது பற்றி முன்னறிவிப்பு செய்வது வழக்கம். ஆனால் ‘நான் யார்?’ என்கின்ற நூலை எழுதும்போது அவ்வாறு எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் ஆழியாரில் நான்யார் என்கின்ற நூலை எழுதும் அதே நேரத்தில் இந்த இணையதள ஆசிரியர் வேலூரில் தனது இல்லத்தில் அதே தலைப்பைக் கொண்ட நான் யார் என்கின்ற நூல் எழுதியுள்ளார். இந்த ஒற்றுமை தெய்வீகமாக (Divine Coincidence) நிகழப்பட்டது என்பதனை நினைக்கும் போது “எல்லாம் அவன் செயல்” என்று ஆன்றோர்கள் கூறுவது எவ்வளவு உண்மை என்பது உறுதியாகின்றது. மகரிஷி அவர்கள் ‘நான் யார்?’ என்கின்ற நூலை எழுதி முடித்து வைத்த நேரத்தில் இவ்வாசிரியர் எழுதிய அதே தலைப்புடைய நூலும் அவரிடம் வாழ்த்தினைப் பெறுவதற்காகச் சென்றது தெய்வீக ஏற்பாடுதானே!
வேதாத்திரியத்தைப், பல்கலைக் கழகங்களில் யோகமும் மனித மாண்பும் (Yoga for Human Excellence) என்கின்ற முதுநிலைப் பட்டப் படிப்பின் வாயிலாகக் கொண்டு செல்வதற்கு முன்னர், ஆழியாரிலேயே, வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையத்தால் (VISION) வேதாத்திரியத் தத்துவம் உள்ளுணர்வுக் கல்வியில் பள்ளியிலேயே தங்கிப்படிக்கின்ற (Residential Schooling) பட்டயப் படிப்பு (Diploma) தொடங்கப்பட்டது. அதற்கு முதன் முதலாக பாடநூல்கள் தயார் செய்யும் குழுவில் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் பணியாற்றியுள்ளார் இந்த இணையதள ஆசிரியர்.

மகரிஷி அவர்கள் இயற்கை தனக்குத் தெரிவிப்பதை சமுதாயத்திற்குத் தெரிவிப்பதாகக் கூறுவார். “Nature reveals to me. I am only a revealator” என்பார். இயற்கை ஒருவருக்குத் தெரிவிப்பது என்பது சமுதாயத்தின் சொத்து என்பார் மகரிஷி அவர்கள். ஆகவே அதனை சமுதாயத்திற்குத் தெரிவித்து விடுவது தனது கடமை என்பார். இது உண்மைதானே! இல்லையெனில் இதுவரை அறிஞர்கள் வழங்கியுள்ள அறநூல்கள் இச்சமுதாயத்திற்கு கிடைத்திருக்குமா?
இயற்கை சமுதாயத்திற்கு தேவையானதை ஒரு சில சிந்தனையாளர்களுக்குத் தெரிவிக்கின்றது. ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கினங்க சிந்தனையாளர்கள் அதனைச் சமுதாயத்திற்குத் தெரிவித்து விடுகின்றனர். இக்கருத்தில் ஆசிரியர் கொண்ட உடன்பாடுதான், இயற்கை தனக்கு தெரிவிக்கின்ற விளக்கத்தையும் தெளிவினையும் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த ‘Prosper Spiritually’ என்கின்ற இணையதள–சத்சங்கத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் தற்போது நான்கு நூல்களை எழுதி வருவதற்கும் அதுதான் காரணம்.

ஆகவே இச்சத்சங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி ஆன்மசெழிப்பு பெற்று வாழ வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. வாழ்க ‘Prosper Spiritually’ இணையதளம். வளர்க ‘Prosper Spiritually’ இணையதளம்.

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.
வாழ்க உலக மக்கள் அனைவரும்.