FFC – 179 -தெளிவு—5/?

வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

தெளிவு—5/?                                                

FFC – 179                                                    

10-04-2016—ஞாயிறு.

thelivu_guru_uru_sinthiththal 

 வாழ்க வளமுடன்.

      ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே’ என்பது பற்றி இன்றைய விருந்தில் சிந்திப்போம். ‘தெளிவு’ பற்றி கடந்த நான்கு  அறிவிற்கு விருந்துகளில் தெளிவு அடைந்து வருகிறோம்.  இன்று அறிஞர் திருமூலர் கூறும் நான்காவது வழியான ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே’ என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

 குருவருளே திருவருள்

 தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

              . . . அறிஞர் திருமூலர்.

 ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே!’: 

     இறை உணர் ஆன்மீகத்தில் சாதகர்கள் பயிற்சிகள் செய்வதோடு, கூடவே பெற வேண்டியது ‘தெளிவு’.   குரு சொல்லிக் கொடுத்து பயிற்சிகள் செய்யப்படுகின்றன. மனம் ஒத்துழைப்பு கொடுத்துவிட்டால், குரு சொல்லிக் கொடுப்பதால் பயிற்சிகள் செய்வது எளிது. ஆனால் பயிற்சியில் வெற்றியினைப் பெறுவது, அறிவு பெறுகின்ற தெளிவினைப் பொருத்தது.  தெளிவைப் பெறுவது என்பது தன்னிடமிருந்து வரவேண்டும். பிறர் சொல்லி வருவதில்லை தெளிவு.  ஆனாலும் குருவின் வலிமையான உயர்ந்த எண்ணமும், திருவார்த்தைகளும் சாதகர்களுக்குத் தெளிவினைச்சேர்க்கும். குருவினுடன் சத்சங்கம், குருவை மதித்தொழுகல், ஆன்ம நேய அன்பர்களுடன் சத்சங்கம் போன்றவைகள் தெளிவினை அடைவதற்கு பெரிதும் உதவும்.

        குருஉரு சிந்தித்தல் என்றால் என்ன?  குருவின் திருஉருவத்தை தியானித்தல் வேண்டும் என்று பொருள்.  இது, அவ்வைத்தாய் கூறியுள்ள, ‘அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிதிலும் இனிது’ என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றது. குருவின் திருஉருவைத் தியானித்தல் என்பது சிலைவழிபாட்டு அறிவியலின்/விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைந்ததே!

    எதற்காக குருவின் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும்?  அதற்கு

      இறைவழிபாடு என்பது என்ன என்றும்,

       இறைவழிபாடு வணக்கமா, இணக்கமா என்றும்,

       இறைவழிபாட்டின் அறிவியல் என்ன என்பதனையும் அறிந்து கொள்ள வேண்டும். 

    குரு என்பவர் யார்?  அறியாமையைப் போக்குபவர் குரு.

FFC-179-10-4-16-இறை வழிபாடு என்பது என்ன

        இறைவழிபாடு வணக்கமா, இணக்கமா என்பதனையும் தெளிவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.  அவர் கூறும் ‘இறைவழிபாடு’ இலக்கணத்தின்படி, உணர்ந்தும், ஒத்தும் நடக்கும் முறையினை  இறை இணக்கமாகவேதான் கொள்ள வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இயற்கை/இறைக்கு இணக்கத்துடன் கூடிய இறைவணக்கம் தேவை என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இறைவழிபாடு  இரண்டுவிதமாக செய்யப்படுகின்றது.  ஒன்று சிலைவழிபாட்டின் மூலமாகவும், மற்றொன்று உயிர் வழிபாட்டின்(உயிர் மீது மனம் வைத்து தியானம் செய்தல்) மூலமாகவும் இறைவழிபாடு நடத்தப்படுகின்றது.  இரண்டுதரப்பினருக்குமே, தெய்வம் ஒன்றுதானே. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் தானே‘? எனவே இருதரப்பினருக்கும் பொதுவாக உள்ள அந்த தெய்வம் எது?

     சிலைவழிபாடாக, இருந்தாலும் சரி, உயிர்வழிபாடாக இருந்தாலும் சரி என்ன நடக்கின்றது இரண்டிலும் சிலையை வணங்குபவரின்  அறிவுதானே சிலையினுடைய வடிவம் எடுக்கின்றது.  ஆலயத்தை விட்டு வீட்டிற்கு வந்தாலும், அதாவது அச்சிலையைக் காணாதபோதும்கூட அந்த சிலையை மனதில் நினைத்து வணங்க முடிகின்றதல்லவா?  மனதில் சிலையின் வடிவத்தைக் கொண்டு வருவது எது?  அறிவு, அறிவுதான் சிலை வடிவம் எடுக்கின்றது.  சிலைவணக்கம் செய்பவர் சிலையை வணங்குவதுபோல் தெரிந்தாலும், ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால், அவர் அவரது அறிவையேதான் வணங்குகிறார்.

 கருத்தும் கடவுளும்

கடவுளை வணங்கும்போது,

கருத்தினை உற்றுப்பார் நீ!

கடவுளாய்க் கருத்தே நிற்கும்

காட்சியாய் காண்பாய் அங்கே.

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     இரண்டு தரப்பினருக்குமே தெய்வம் ஒன்றுதான் என்பதால், உயிர் மீது மனம் வைத்து வழிபாடு செய்பவருக்கு எது தெய்வமாக உள்ளது என்கின்ற வினாவிற்கும் ஒரே விடை அதே அறிவேஇது எப்படி என ஐயம் எழலாம்.  உயிர் என்பது எது? பேரறிவாகிய இறையேதான் உயிராக தன்மாற்றம் பெற்றுள்ளது.  உயிரிலிருந்து பிறந்து வெளியே மனமாகச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த  மனதை திருப்பி உயிர் மீதே மனம் வைத்து தியானம் செய்வதே உயிர்வழிபாடு. 

     இங்கு எப்படி அறிவு  தெய்வமாகின்றது?  மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால், புறத்தே ஓடுகின்ற மனதை திருப்பி மனதின் மறுமுனையான உயிர் பிறக்கும் இடமான உயிர்மீதே மனம்  வைத்து தியானம் செய்வது உயிர்வழிபாடு.   மனம் அற்றால்(மனோநாசம்) அறிவு.  எனவே மனம் அற்றநிலையில் அறிவு பேரறிவாகிய இறைவெளியில் கலக்கின்றது.  மனிதனின் சிற்றறிவு பேரறிவுடன் கலக்கின்றது. எனவே உயிர்வழிபாட்டிலும் மனிதன் அறிவையே வணங்குகிறான்.

      யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  யாராக இருந்தாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்கிருந்து வந்தோமோ, அங்கே, அந்த ஒரு நாள்(Date of Return Journey) வரும்போது சென்றுவிடவேண்டியதுதான். ‘எனவே இப்புவிக்கு வந்து போனதற்கு அடையாளமாக அறிகுறிகளை விட்டுச் செல்லுங்கள்’ என்கின்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.  

      இதற்கிடையில் மனம் துன்பமில்லாமல் நிறைவுடன் வாழ விரும்புகின்றது.  நிறைவுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள்தான் இறைவழிபாட்டு முறைகள்.  சிலைவழிபாடு பக்திமார்க்கம் எனப்படுகின்றது.  உயிர்வழிபாடு ஞான மார்க்கம் எனப்படுகின்றது.  இறைவழிபாட்டின் நோக்கமே மனிதன் துன்பமில்லாமல், மனநிறைவுடன் வாழ்ந்திடல்தான்.  வாழ்ந்திட இறையை வணங்கிட வேண்டும்.  எனவே மனநிறைவுடன் வாழ்வதற்கு ஏழு வித சம்பத்துகள் தேவையாக உள்ளன. அவையாவன:

1)   உருவ அமைப்பு

2)   நிறை குணம்

3)   அறிவின் மேன்மை

4)   சமுதாயத் தொண்டால் பெறும் உயர்புகழ்

5)   உடல் வலிவு

6)   உடல் நலம்

7)   செல்வ வளம்

மேற்கூறிய ஏழும் மனிதன் நல்வாழ்வு வாழ்வதற்கு  அவசியமாகின்றன.

     இவற்றில் ஒன்றோ அல்லது சிலவோ குறைவாக இருக்கும் பட்சத்தில், மனிதன் தனது வலிமையை வளப்படுத்தி தொடர் விடா முயற்சியுடன் செயலாற்றி இவற்றைப் பெறுவதற்காக மனிதனுக்கு பயிற்சியளிக்கும் முறையே சிலை வணக்கமாகும் என்கிறார் இறையியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   சிலையை வணங்குவதால், எவ்வாறு மேற்கூறிய பலன்கள் உண்டாகும் என ஐயம் எழலாம்.  சிலைவழிபாட்டின் விஞ்ஞானம் என்பது என்ன?

    பக்தி மார்க்கத்தில் சிலை வணக்கம் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது.  மனித குல வாழ்க்கைச் சரித்திரத்தில் உலகம் முழுவதும், சிலை வணக்கம் என்கின்ற தெய்வீக உணர்வு பிரிக்க முடியாத கருத்தாகத் தொடர்ந்தும், நீடித்தும் வருகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.  மனிதகுலத்திற்கு மூலமான இயற்கையின் ஆதிநிலையின்/இறை வெளியின் மூன்று திறன்களின் ஒன்று இயல்பூக்கம்.  இயற்கையின் ஆதிநிலையில்/இறை வெளியில் இயல்பாக இருந்த ஊக்கம் அதனுடைய தன்மாற்றத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் காரணமாக உள்ளது.  அந்த இயல்பூக்கம் என்பது, வெளியாக இருந்த இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி தனது மாற்றத்தில் உச்ச நிலையாக பூத்தத் திருமலரான மனித உருவத் தோற்றத்துடன் முடிந்து விடவில்லை.

     வண்ணமும் வாசமும் கொண்ட பூவே பூவில் சிறந்ததாக, மனிதனால்  கருதப்படுகின்றது. மனிதனையே தன்மாற்ற உச்சத்தில் பூத்த திருமலர் என்கிறோம்.  எனவே அத்திருமலரான மனித உருவம் வண்ணத்தையும், வாசத்தையும் வீசவேண்டியுள்ளது.  அதாவது மனித குலம் பண்பேற்றத்தில் பலபடிகளை ஏறி வரவேண்டியுள்ளது.  இதற்கும் உதவுகின்றது இயல்பூக்கம். 

    எனவே மனிதன் தனது பூர்விக தெய்வீக உணர்வுகளை வீசச்செய்வதற்கு,  பண்பில் ஏற்றம் பெறச்செய்யும்,  சிலை வணக்கம் என்கின்ற மனித அறிவின் ஆன்மீக இயல்பூக்கம், காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றால் கருத்திலும், செயலிலும் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றது என்கிறார் இயற்கையியல்/இறையியல் அருளியுள்ள நம்குருதேவர் அவர்கள்.

 இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி/அன்பாகிய வெளி  தனது மாற்றத்தில், தனது இயல்பை முழுவதுமாக ஊக்கத்துடன் வெளிப்படுத்தித்தானே ஆக வேண்டும்

ஆதிமனிதனின் தோற்றம் சடுதிமாற்றம் என்பதுபோல், இந்த ஆன்மீக இயல்பூக்கத்தின் வெளிப்பாடே, திடீரென,  சடுதிமாற்றமாக 1911 இல் மலர்ந்ததுதான் திருவேதாத்திரியம்.

    பொதுவாக ஒரு மலர் ஒரு வாசத்தைத்தான் வீசும். ரோஜா அதற்கென உள்ள மணத்தை மட்டுமே வீசும். குண்டு மல்லி அதற்கென உரிய மணத்தை மட்டுமே வீசும். முல்லை அதற்கென உள்ள மணத்தை மட்டுமே வீசும். தாழம்பூ அதற்கென உள்ள மணத்தை வீசும். ஆனால் இந்த திருவேதாத்திரியம் என்கின்ற பாரிஜாத மலரோ பல்வேறு மணங்களான,

1)   இயற்கை இயல்/ இறை இயல்

2)   அமைதி இயல்

3)   இன்பதுன்ப வியல்

4)   பண்பேற்றவியல்

5)   பேரின்பவியல்

ஆகியவற்றைப் அகிலமெங்கும்  பரப்பிக் கொண்டிருப்பதனை அறிந்து உள்ளம் பூரிக்கின்றது. 

கூடுவாஞ்சேரி எனும் சிற்றூரில் மலர்ந்த இம்மலரை உலகெங்கும் சாகுபடிச் செய்யும் கடமையை இயற்கை/இறை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தி நடத்தி வருகின்ற உண்மை நாடகத்தில், முதன் முதலில் பாத்திரங்கள் ஏற்று  பணியாற்ற நம் ஆன்மா, இப்பிறவியில், இந்த  உடல் எடுத்துள்ளது என்பதனை நினைக்கும்போது மனம் பூரிப்பையும், கண்களில் ஆனந்தக்கண்ணீரையும் வெளிப்படுத்தி  நிறைவடைகின்றது. வாழ்க இறைத்தூதுவர்கள். வளர்க இறைத்தூதுவர்களின் பணி.

    இன்றைய தலைப்பு, எவ்வாறு குருவின் திருஉருவை சிந்தித்தல்  தெளிவினை ஏற்படுத்தும் என்பதாக உள்ள நிலையில் இதுவரை இறைவழிபாடுபற்றி சிந்தித்து வந்தோம்.  ஏனெனில் இறைவழிபாட்டு முறைகளில் ஒன்றானது தியானம் என்பதால் இறைவழிபாட்டின் அறிவியலை அறிந்து கொண்டோம்.  இப்போது நேரிடையாக குருவின் திருஉரு சிந்தித்தல் என்பது எவ்வாறு தெளிவினைத் தரும் என்பதற்குள் பயணிப்போம்.

   சிலை வணக்கம்  மனித அறிவின் ஆன்மீக இயல்பூக்கம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றால் கருத்திலும், செயலிலும் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.  எனவே இன்றைய சூழலில் மனித அறிவின் ஆன்மீக அறிவின் இயல்பூக்கத்தை பயன்படுத்தி, குருவின் திருஉருவத்தை சிந்தித்தலின் வாயிலாக தெளிவினைப் பெறுவது  என்பது அறிவியல் அடிப்படையில் உள்ளது.  தெளிவு இறை உணர் ஆன்மீகத்திற்கு மிக மிக அவசியம் என்பதால் இதனை ஆழ்ந்து விரிந்து சிந்தித்து இந்த யுக்தியினைக் கைவல்யமாக்கி்க் கொள்வோம்.  இது பற்றி மகரிஷி அவர்கள் கூறும் பாடலை நினைவு கூர்வோம்.

 குருவின் சேர்க்கை(15-08-1984)

 எப்பொருளை எச்செயலை எக் குணத்தை

  எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

  அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;

இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;

  எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்

  தரத்தில் உயர்த்திப் பிறவிப்பனை நல்கும்.

                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 பாடல் சுயவிளக்கமுடையது(self explanatory). எனினும் என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள் என்பதனை ஆராய்வோம்.

   எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும், எந்த ஒரு உயிரையும் அடிக்கடி நினைந்து வந்தால், அப்பொருளின் தன்மையாய் நினைப்பவரது ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றங்காண்கின்றது  என்கிறார்.  இதுவே இயல்பூக்க நியதி என்கிறார். அருவமாக இருந்த இயற்கையின் ஆதிநிலை/இறைவெளியின் இயல்பூக்க நியதி உருவமாக தன்மாற்றம் பெறுவதற்கு மட்டும் உதவியாக இல்லை.  இயற்கையின் ஆதிநிலை/இறைவெளியின் கடைசி தன்மாற்றம் மனிதன்.  மனிதன் என்கின்ற  இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் தன்மாற்றம் என்பது உருவ அளவிலே மட்டுமே நடந்துள்ளது.  மனிதஉருத் தன்மாற்றம் அறிவினிலும் மாற்றம் பெறவேண்டும்.  எனவே, இதனையே ஒரு சில அறிஞர்கள் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கின்றனர்.  அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யவே இயல்பூக்க நியதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதுவரை இயல்பூக்க நியதி தானாகவே செயல்பட்டு வந்தது.  ஆனால் இப்போது மனித குலத்தில்,  நாகரீகம் தோன்றிய பிறகு, மனிதகுல தன்மாற்றத்/பரிணாமத் தொழிற்சாலையில், மனிதனும் பங்குதாரராகிவிட்டதால், இப்போது மனித இனப் பண்பேற்றத்திற்கு, மனிதன் ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,  இயற்கையின் இயல்பூக்க நியதி தன் கடமையைச் செய்யும். 

 இயல்பூக்க நியதி எவ்வாறு குருவின் திருஉருவை சிந்தித்தலில் பயன்பாட்டிற்கு வருகின்றது என்று பார்ப்போம்.

    அத்வைத விஞ்ஞானம் என்ன கூறுகின்றது? ஒன்றே பலவாகியது என்கின்றது.  பலவாகியதில் ஒன்றுதான் எல்லா மனிதர்களைக் கொண்ட மனிதகுலமும். ஒன்றேதான் எல்லாமனிதர்களாகியுள்ளது என்கின்றபோது எல்லோருமே ஒன்றானவர்கள், சமமானவர்கள்.   ஆனால் 720 கோடி உலக மக்களும் 720 கோடி உருவங்களைக் கொண்டதாகத்தானே உள்ளனர்.  வெவ்வேறு உருவங்களைக் கொண்டு மனிதர்கள் இருந்தாலும், ஒன்றிலிருந்து வந்தவர்கள் அனைவரும் என்பதால், எந்த ஒன்று எல்லோருக்கும் இடையே  பொதுக்காரணியாக உள்ளது? ஆன்மாதான் பொதுக்காரணியாக உள்ளது. எனவே வினைப்பதிவில் முன்பின்னாய் இருந்தாலும், அறிவு நிலையில் அனைவரும் ஒன்றே.  ஆன்மநிலையில் அனைவரும் ஒருவரே.    இது குருவிற்கு பொருந்தும்.   ஆன்மதூய்மையால்,  அறிவை அறிந்த பேற்றால், குரு  அறிவொளியாக இருக்கிறார். 

  இப்போது தியானிப்பதற்கு வருவோம்.  தியானிப்பதால் என்ன பயன்? பொதுவான பயன் என்ன?  மனம் ஒருமைப்படுகின்றது. எந்த ஒரு பொருள் மீது தியானம் செய்யப்படுகின்றதோ அப்பொருளின் தன்மையாக மாறுகின்றது மனம்.

   தியானத்திற்கு உயிரையே பொருளாகக் கொள்ளும் தியான முறையில் என்ன நடைபெறுகின்றது?  மனம் சலனமற்று அறிவாக நிற்கின்றது.  மனம் சலனமற்ற நிலையில் பேரறிவுடன் மனித அறிவு ஒன்றாகிவிடுகிறது. இயற்கையின் ஆதிநிலையோடு/இறைநிலையோடு மனித அறிவு ஒன்றாகி நிற்கும் துரியாதீத தவத்தால் பயன் என்ன?  தன்முனைப்பு கரைந்து இறைஉணரப்படுகின்றது. அன்பு வெளியில்(இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி) அறிவு நின்று  பழகப்பழக, சிவம்(அறிவும் இறைவெளியாகி) அறியப்பட்டு, அன்பு மலர்கின்றது.  அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு என்பது இவ்வகையில் தான் நடைபெறுகின்றது.  இந்நிலையில் சீவனில் சிவனைக் காண்கிறார் அம்மாமனிதர். 

  குருவின் திருஉரு எதனை நினைவு படுத்துகின்றது சீடருக்கு?  குருவினுடைய  செயலையும். குணத்தையும் ஞாபகப்படுத்துகின்றது.  மேலும் குருவானவர் மனித வடிவில் மெய்ப்பொருளாக(இறைவனாக) உள்ளவர்.  அவரது உயிர் எத்தகையது? எல்லோரையும்போல் மனிதனாகப் பிறந்து, புனிதத்தை மீண்டும் பிரதிபலிக்கின்றது. ஆகவே எப்பொருளை, எச்செயலை, எக்குணத்தை, எவ்வுயிரை அடிக்கடி நினைத்தால், இயல்பூக்க நியதியின்படி, அப்பொருளின் தன்மையாக நினைப்பவர் ஆற்றல், அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்றது என்பதற்கினங்க, நம் குருநாதரின் திருஉருவத்தை தியானிக்கும்போது, “உத்தம நண்பர்காள். உங்கட்கும் உரியது” என்கின்ற நம் குருநாதரின் உறுதி மொழிக்கேற்ப நமக்கும் உரியதாகிய இறை உணர்வு பெறுகின்ற பேறு கிட்ட அவரைப்போன்றே அறிவு நிலையில் உயர்வு அடைய முடிகின்றது.  பிறகு, யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகி நடந்தாலும், தப்பாது குருவின் உயர் மதிப்பவரை தரத்தில் உயர்த்தி வீடுபேற்றினை அளிக்கின்றது.

     பக்திமார்க்கத்தில் இறை சிலை வடிவில் வணங்கப்படுகின்றது. அல்லது தியானிக்கப்படுகின்றது.  ஆனால் ஞான மார்க்கத்தில் குருவிற்கு  முக்கிய இடம் தரப்படுகின்றது. குரு வணங்கப்படுகிறார்.  ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ எனப்படுகின்றது.  ‘குருவருளே திருவருள்’ என்கிறார் அறிஞர் திருமூலர்.  ‘குருவருளே திருவருள்’  என்கின்ற தலைப்பின் கீழ்தான், தெளிவு குருவிடமிருந்து நான்கு வழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாடல் அருளியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

   மேலும் அறிஞர் திருவள்ளுவரோ,

 “ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”      குறள் எண்.   702

 சந்தேகமின்றி அகத்தை உணர்ந்தவரை தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

 மேலும் குரு ஸ்லோகம் ஒன்று சாட்சாத் குருவே பிரம்மம் என்கின்றது.  அதனை நினைவு கூர்வோம்.

 குருர்ப்ரம்மாகுருர்விஷ்ணு

குருதேவோமஹேஸ்வரஹ

குருசாட்சாத்பரப்ரம்மா

தஸ்மைஸ்ரீகுரவேநமஹா.

 இந்த குரு ஸ்லோகம்  ‘குருவே சாட்சாத் பரப்பிரம்மா’ என்கின்றது.  ஞான மார்க்கத்தில் குருதான் எது தெய்வம் என உணர்த்துகிறார்.  அரூபமான பேரறிவு(தெய்வம்) தன்னை எவ்வாறு வாய்திறந்து மனிதனிடம் அறிமுகப்படுத்திக்  கொள்ள முடியும்?  அரூபமான பேரறிவு மனிதனிடம் அறிவாக உள்ளதாலும், அது தன்னையே  உணர்ந்துகொள்ளும்போது, அது தெய்வ நிலைக்கு உயர்வதாலும் அதுவே குருவடிவத்தில் மற்றவர்களுக்கு இறைத்தூவராகின்றது.  ஆகவே சுத்த அத்வைதத்தில் ‘குருவே சாட்சாத் பரப்பிரம்மமே எனப்படுகின்றது.’

   ஞான மார்க்கத்தில் உருவ வழிபாடு இல்லையாயினும்,  குருவிற்கு தெய்வத்திற்கொப்ப முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.  எனவே, உருவவழிபாட்டில் கடவுள் சிலையை தியானிப்பதுபோல்(வணங்குவதுபோல்), ஞான மார்க்கத்தில் குருவின் திருஉருவத்தை தியானிப்பது தெளிவைக் கொடுக்கின்றது என்கிறார் அறிஞர் திருமூலர்.

     எனவே இன்றிலிருந்து, அறிஞர் திருமூலரின் நான்காவது வழியான “தெளிவு குருஉரு சிந்தித்தல்தானே” என்பதனை கைவல்யாமாக்கிக் கொண்டு அருட்பயனை அடைவதற்கு,

  FFC-179- பணி ஏதும் செய்யாமல்- message Box   

     நம் குருவை தியானிக்கும்போது, அவரது அன்பு உபதேச மொழிகளும், அருள்மொழிகளும், அவருடைய வாழ்க்கை முறைகளும், அவருடைய தியாக நடத்தையும், அவரது தீர்கதரிசனமும்(உலக சமாதானம்), அதற்காக அவர் கொடுத்துள்ள திட்டங்களும் நம் மனக்கண்முன் வந்து, நாம் அவரது சூக்கும உடலோடு பயணிப்பதை  உணர்ந்து பயன் பெறலாம்.

   எனவே நம்குருதேவரின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலரின் தெய்வ வாக்குப்படி, குருவின் மேன்மையினை நன்கு உணர்ந்து. நான்கு வழிகளிலும் தெளிவினைப்பெற்று இறை உணர்வு பெறுவோம் என்கின்ற உறுதியினை நம் குருதேவருக்கு நினைவாஞ்சலி செலுத்துகின்ற வேளையில் சமர்ப்பிப்போம்.

 வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

 இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-04-2016—புதன்)  கடந்த ஐந்து விருந்துகளில் என்ன அருந்தினோம் என்பதனை சுருக்கமாக நினைவுபடுத்திக்கொண்டு, முடிவாக தெளிவு பற்றி ஆழ்ந்து விரிந்து சிந்தித்து, இந்த தெளிவு நம் குருதேவரின் வாழ்க்கையில் எவ்வாறு நடந்தேறியுள்ளது என்பதனை ‘நம்குருதேவர் பெற்ற தெளிவு’ என்கின்ற துணைத்தலைப்பில் அறிந்து கொண்டு, நாமும் அதேபோன்று ,   தெளிவு பெற இருக்கிறோம் என்கின்ற புனிதச் செய்தி தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.  அத்துடன் ‘தெளிவு’ என்கின்ற விருந்து நிறைவு பெறும். வாழ்க வளமுடன்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments