பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 5/?

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

FFC – 172

16-03-2016—புதன்.

FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

 வாழ்க வளமுடன்!
உலகநல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்து மந்திரமான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை ஆழ்ந்தும் விரிந்தும் கடந்த நான்கு சத்சங்கங்களில் சிந்தித்து வருகிறோம் ஆழ்ந்தும் விரிந்தும் சிந்தித்து வருவதால் வாழ்த்துக்கான நேரிடை பொருளுக்குள்(அர்த்தம்-meaning) செல்வதற்கு நான்கு சத்சங்கக் கூட்டம் தேவையாக இருந்தது. காரணம் அருட்பாக்கள், தெய்வீகத்தை வெளிப்படுத்துவதால், மற்ற பாக்களைவிட மிக மிக சிறப்புடையவை, செறிவுடையவை. எவ்வாறு அருட்பா தோன்றுகிறது என்று, அதனையும் ஒரு பாவின் வாயிலாகவே(ஞானக்களஞ்சியம்-பாடல் எண். 1227) நம்குருதேவர் மாமுனிவர் முழுமனிதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார். என்னே அவரின் அருள் நிலை! என்னே அவருடைய கவித்துவம்!!

மனிதப் பிறவியின் சிறப்பறிந்து, உலகில் வாழ்ந்து, அறிவை அறிந்து, முடிவைக்கண்டவர்,
தான் பெற்ற அனுபவத்தை,
உலகத்தோர் அதனை சரியானபடி பயன்படுத்துவதற்கு,
விரிந்த மனதால் ஆர்வம் கொண்டு,
மழை பொழிந்து உலகத்தோர்க்கு உதவுவதுபோல்,
வரிசையான வார்த்தைகளினால்,
தான் ஆழ்ந்து விரிந்து சிந்தித்ததை சொல்வதற்காக
மேன்மையுள்ள கவிகளாக வருகின்றன அருட்பாக்கள் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எனவே அருட்கவிகளுக்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் உரைநடையில் அதற்கான விளக்கவரிகள் அதிகமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நான்கு வார்த்தைகளை உதித்தது ஒரே ஒரு நாளிலா?! பலநாட்கள், பல வாரங்கள், ஒரு சில அல்லது பல ஆண்டுகள் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கும்போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் திரண்டு வந்து க்ஷண நேரத்தில் உதித்து, துணை எண்ணங்களை எல்லாம் உள்ளடக்கிய சுருக்கப்பட்ட வரிகள்தான் அருட்கவி. அப்படிபட்ட அருட்பாவின் வரிதான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதும்.

அருட்பாவை கண்ணுறுபவர், வாசிப்பவர், மனனம் செய்பவர், உச்சாடனம் செய்பவர், அருட்பா அருளிய கவிஞரை நேரிடையாக பார்க்க பெரும்பாலும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டில் அவதரித்த உலகத்தை உய்விக்க வந்த வேதாத்திரி மகரிஷி அவர்களை நேரிடையாக தரிசித்தவர்கள் அநேகர், அநேகர். லட்சோபலட்சம் மக்கள். அவருடைய பூதவுடல் சமாதியில் உறங்கிக்கொண்டிருப்பதால், அவரை நேரிடையாக பார்க்க முடியாததால், அம்மகானை நேரில் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும், அவருடைய சூக்கும உடலை(அறிவாற்றலை) இன்றும், அவர் விட்டுச்சென்ற அறநூல்கள் வழியாக அறிந்து மகிழலாம்.

அருட்பாவை உச்சாடனம் செய்பவர், அருட்பாவை ஆழ்ந்த விரிந்த சிந்தனைக்கு உட்படுத்தும்போது, அருட்பாவை அருளியவற்கு உதவியாக இருந்த, எண்ணிய துணை எண்ணங்களை(Sub thoughts) எல்லாம் ஒன்றுகூட விடாமல் அறிந்துகொள்வதால், அவரைப்போன்றே அக்கருத்தில் ஆர்வம் மிகுந்து, அருட்பாவை உச்சாடனம் செய்யும்போது, அந்த மந்திரம் உருவேற்றப்பட்டு அம்மந்திரம் சக்தி பெற்று, சீக்கிரம் பலன்கள் கிடைக்கும். விஞ்ஞானப்படி பார்த்தால், மந்திரங்கள் உச்சாடனம் என்பதே எண்ண ஆற்றலைப் பரப்புவதே அல்லது சுயஆலோசனை (auto-suggesstion) தானே. (வான்காந்தத்திலும், ஜீவகாந்தத்திலும் நன்மை தரக்கூடிய மாற்றங்களை பெறுவதற்கே)

எனவே  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரிக்கு நேரிடையாக நான்கு வார்த்தைக்கு மட்டும் பொருள் சொல்லாமல், அவ்வரியில் உள்ள சொற்களுக்கு ‘வார்த்தை விளக்கம்’ காண்பது,

சொல்லப்பட இருக்கின்ற பொருள் பற்றிய விளக்கம்,
கேட்பவர்களை கேட்பதற்கு ஆயத்தப்படுத்தவும்,
கேட்கின்ற உற்சாகத்தைத் தூண்டவும்,
கேட்பவர்களுக்கு மிகத் தெளிவாக சென்றடையவும்,
அடுத்த என்ன சொல்லப் போகிறார் பேசுபவர் என சரியாக யூகிக்கவும் பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக அவ்வாழ்த்தின் அவசியம் என்ன, அவ்வாழ்த்து எவ்வாறு, அதில் கூறும் பயனை நிறைவேற்றும் என்று சிந்தனையை விரித்தால்தான் அவ்வரிகளை அருளியவரே, அவ்வரிகளை உச்சாடனம் செய்வதால்/கூறிவருவதால் என்ன பயன் இருக்குமோ, அதே அளவிற்குச் சமமாக மற்றவர்களும் அவ்வாழ்த்தை உச்சாடனம் செய்யும்போது/கூறும்போது பலன் ஏற்படும். எனவே அதற்காகத்தான் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கிறோம்.

சத்சங்கத்தில் எதனைச் சிந்தித்தாலும், நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிவின் சிறப்பை அறிந்து, அதனை பேரறிவின் நிலைக்கு/இறைநிலைக்கு உயர்த்தி பண்பேற்றத்தை பெறுவதற்காகத்தான். ஆகவே வரிசையாக இதுவரை நான்கு நாட்களாக ஒவ்வொரு நாளும் என்ன சிந்தித்தோம் என நினைவுபடுத்திக் கொண்டு நேரிடையாக பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரத்துக்குள் செல்வோம்.

 table

    ஏற்கனவே இச்சிந்தனையின் முதல் நாளன்றே(02-03-2016—புதன்-FFC-168 Click here) பகுத்துணர்வு மற்றும் தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கு வார்த்தை விளக்கத்தினை அறிந்துவிட்டோம். அதனை நினைவில் கொண்டு, இன்றைய சிந்தனையை நேரிடையாகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதில் செலுத்துவோம்.

 ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்தில்,

பண்பாட்டை உயர்த்தக் கூடியது தொகுத்துணர்வு என்று தெரிகின்றது.
 ஆனால் ‘தொகுத்துணர்வு’ என்று மட்டும் சொல்லாமல் ‘பகுத்துணர்வில்        தொகுத்துணர்வு’ என்பதால் இரண்டு வகையான உணர்வுகள் உள்ளது என்றாகின்றது.
 அதில் பகுத்துணர்வை விட தொகுத்துணர்வு மேலானது என்றும் தெரிகின்றது.
அதே நேரத்தில் பகுத்துணர்வும் இல்லாமலும் இருக்க முடியாது என்றும் தெரிகின்றது.
 அதாவது பகுத்துணர்வை தவிர்க்காமலும் இருக்க முடியாது அறிவினால்.
 ஆனால் தொகுத்துணர்வுதான் மேலானதாக உள்ளது என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று தெரியவருகின்றது.

எனவே இரண்டு உணர்வுகளுக்குள்ள வித்தியாசத்தை அறிவது அவசியமாகின்றது.

ஆகவே பொதுவாக ‘உணர்வு’ என்பது என்ன என்றும்,
 அது ஏன் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது என அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
அவ்வாறு அறியும்போது
 பகுத்துணர்வும், தொகுத்துணர்வும் என்ன என்று தனித்தனியாக அறிவதோடு மட்டுமன்றி,
 பகுத்துணர்வையும், தொகுத்துணர்வையும் இணைத்து ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்றால் என்ன என்றும்,
 அது எவ்வாறு பண்பேற்றத்தைத் தர முடியும் என்பதனையும் அறியலாம்.

உணர்வு என்றால் என்ன? – புலன் உணர்வு-ஐயுணர்வு, மெய் உணர்வு.

அறிவு, உணர்ந்து கொள்வது உணர்வு. அறிவு புலன்களின் துணைகொண்டு உணர்ந்தால் அது புலன் உணர்வு எனப்படுகின்றது. புலன்கள் ஐந்து இருப்பதால் புலன் உணர்வை ஐயுணர்வு என்றும் கூறலாம்.
அறிவு புலன்கள் வழியாக மட்டுமேதான் உணரமுடியும் என்றிருந்தால் அறிவு உணர்வதை, ‘புலன்’ என்கின்ற அடைமொழியைச் சேர்த்து ‘புலன் உணர்வு’ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘உணர்வு’ என்றே சொல்லியிருக்கலாம். அறிவிற்கு வேறொரு உணர்வு உள்ளதால், அதிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்கு, புலன்கள் வழியாக உணர்வதை புலனுணர்வு, ஐயுணர்வு என்கிறோம்.

ஆகவே அறிவு உணரும் கருவிகளாகிய புலன்களின் வழியாக உணர்வதோடு மட்டுமன்றி, வேறு வழியாகவும்/வகையாலும் உணரமுடியும் என்றாகின்றது. அது எவ்வாறு? உணரும் கருவிகள் புலன்கள். புலன்களில்லாமல் அறிவு உணரமுடியும் என்றால் அது எது? அந்த உணர்விற்கு என்ன பெயர்? அறிவு புலன்களில்லாமல் உணர்வதுதான் மெய்ப்பொருள். மெய்ப்பொருளுக்கு உருவமில்லை. அது அரூபம். ஆனால் அரூபம்தான் ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) காரணமாக உள்ளது என்பதனை நினைவில் கொண்டு ஆனந்தமடைய வேண்டும். அரூபமாகிய மெய்ப்பொருளை உணர்வது மெய்யுணர்வு. அறிவு மெய்ப்பொருளை உணர்வதற்கு புலன்கள் அவசியமே இல்லை.

அறிவும் அரூபம். மெய்ப்பொருளும் அரூபம். அரூபத்தில் இரண்டிருக்க முடியாது. அப்படியானால் அரூபமாகிய மெய்ப்பொருளும், அரூபமாகிய அறிவும் ஒன்றே. எனவே அரூபம், அரூபத்தை, தானே உணர்ந்து கொள்ளும். அதாவது உணர்வதற்கு இன்னொரு ரூபமாகிய இடையீட்டுப்பொருளாக, சாதனமாக(medium) புலன் ஏதும் அவசியமில்லாமல் ஆகிவிடுகின்றது. எனவே அரூபத்தை உணர்வதற்கு புலன்கள் ஏதும் அவசியமில்லை.

அறிவு, ரூபங்களையும்(உருவத்தோற்றங்ளையும்), அரூபா-ரூபங்களையும்(ஒலி. ஒளி, சுவை, மணம், அழுத்தம்) உணர்வதற்கு மட்டும் புலன்கள் அவசியம். அறிவு புலன்கள் இல்லாமல் உணர்வது எது என்கின்றபோது அறிவு தன்னையே உணர்வதாகும். அறிவு தன்னையே உணர்வதற்கு புலன்கள் எதற்காக அவசியம்? அவசியமே இல்லை. அறிவு தான் இருப்பதை உணர்வதற்கோ அல்லது ‘நான் இருக்கிறேன் — I exist) என்று சொல்வதற்கோ புலன் அவசியமில்லை.

உணர்வு என்பது என்ன என்றும், அது இரண்டே இரண்டுதான், அது ஐயுணர்வு, மெய் உணர்வு என்றும் அறிந்தோம். அப்படி இருக்கும்போது உலக நல வாழ்த்தில் பகுத்துணர்வு. தொகுத்துணர்வு என்று இரண்டு புதிய உணர்வுகளாகச் சொல்லப்படுவது என்ன? ஐயுணர்வு, மெய்உணர்வு என்கின்ற இரண்டிற்கும், பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு வேறா? அறிவது அறிவு என்றும், அது புலன்கள் வழியாக அறியும்போது அதனை ஐயுணர்வு என்கிறோம் புலன்களில்லாமல் அறிவு உணர்வது மெய் உணர்வு என்றும் தெளிவாக அறிந்துவிட்டோம். எனவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு அறிவின் உணர்வுகளில் வேறு புதிதான உணர்வுகளாக இருக்க முடியாது. ஆகவே ஐயுணர்விற்கும், மெய்யுணர்விற்கும் ஆன மாற்று பெயர்கள்தான் பகுத்துணர்வு, மற்றும் தொகுத்துணர்வு. ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய்யுணர்வை தொகுத்துணர்வு என்றும் அழைக்கப்படுகின்றன இவ்வாழ்த்தில்.

அப்படியானால் ‘ஐயுணர்வில் மெய்யுணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வரிசைப்படுத்தி சொல்லியிருக்கலாமே மகரிஷி அவர்கள். அது கவிஞரின் உரிமையாகும். கவியில் வரிகள் இவ்வாறு அமைத்திருக்கலாமே என நாம் சொல்ல முடியாது. இது ஒரு பக்கம் இருந்தாலும், எதுவும் காரணமில்லாமல் நடக்காது என்பதால் ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணம் அறிந்து, அவரது அறிவுக் கூர்மையையும், அறிவு விசாலத்தையும் நினைத்து, நினைத்து அவரை போற்றி போற்றி மகிழ்வோம்.

இறையே வேதாத்திரி மகரிஷி வடிவில் வந்து உலக மக்களுக்கு கூறியுள்ளதுதான் திருவேதாத்திரியம். அரூபமான இறை எவ்வாறு உருவத்தில் வந்து சொல்ல முடியும்? ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவரே தெய்வத்துக்குச் சமம் என்று திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் வேதாத்திரி என்கின்ற மனித உருவில், பண்பட்டு உச்சத்தினை அடைந்த அவரது அறிவின்வாயிலாக பேரறிவே, இறையே சொன்னதுதான் அவ்வளவு வேதாத்திரிய எழுத்துக்களும். இப்படி சொல்வது அத்வைதம், இருப்பினும், வேதாத்திரிய அத்வைதம் சுத்த அத்வைதம்(Pure advaidic Science). வேதாத்திரியத்தை சுத்த அத்வைதம் என்று சொல்வதற்கான காரணங்களில் ஒன்று, ‘ஒன்றே பலவாகியது என்று சொல்வதனை’, ஒன்றே தன்மாற்றம்(self transformation) அடைந்துள்ளது என்று தைரியமாக, உறுதியாக, தெளிவாகச் சொல்வதே முதலாம் காரணமாகும்.

‘பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நேரிடையான விளக்கத்தனை இன்றே முடித்துக் கொள்ளலாம் என நினைத்துதான் சிந்தனையைத் தொடங்கினோம். ஆனால் அவ்விளக்கச் சிந்தனை இன்றோடு முடியவில்லை. காரணம் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரம் 720 கோடி உலக மக்களையே வாழ்த்துகின்ற மந்திரமாவதால், அதற்கான பொருளை எப்படி ஒரு அறிவிற்கு விருந்திலேயே, 15-30 நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும்?
எனவே அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதற்கான நேரிடை விளக்கத்தை ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணத்தை அறிந்து கொண்டு, அதற்கடுத்து வரும் இரண்டு அறிவிற்கு விருந்தில் முறையே மகான் மகா கவி பாரதியார் இது பற்றி என்ன கூறியிருக்கிறார் என்றும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் என தனித்தனியாக இரண்டு அறிவிற்கு விருந்தில் அறிய இருக்கிறோம்.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. 28-03-2016 நம் குருதேவர் அவர்கள் பத்தாவது மகாசமாதி அடைந்த தினமாக இருப்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘தெளிவு’ என்கின்ற பொருள் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

அடுத்த அறிவிற்கு விருந்திற்காக(20-03-2016 ஞாயிறு) சத்சங்கத்தில் கூடுவோம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments