FFC-209-அருளாளர்கள் உலகம் 2/?

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவ

 N-அருளாளர்கள் உலகம் 2/?

அறிவிற்கு விருந்து—209

20-07-2016—புதன்


vysa_maharishi_and_vethathiri_maharishi

வேத வியாசரும் நவயுக  வியாசரும்


பூதஉடலை உதிர்த்த அருளாளர்களால் பயன்அடைய முடியும் என்பதற்கான சான்று:

எல்லா அருளார்களையும் நினைந்து வணங்குவதால் ஆன்ம சாதகனுக்கு பயன் ஏற்படுகின்றது. இதற்கான சான்று, ஆன்மீக உயர்வில் வெற்றி பெறுவதற்காக, மானசீகமாக குருமார்களை மகரிஷி அவர்கள் ஏற்றுக் கொண்டும் மற்ற அருளாளர்களை நினைவுகூர்ந்து வெற்றி பெற்றதுமே ஆகும். இதனை யுக்தியாகவும் கொள்ளலாம். சாதுரியமாகவும் கொள்ளலாம். இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு என்றும் கொள்ளலாம்.

அருளாளர்கள் யார் ?

மேலும் மற்ற அருளாளர்களை நினைவுகூர்வதில் அருளாளர்களை, அருளாளருக்கான அடைமொழியோடு குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிந்தால் அன்றாட வாழ்வினை அறிந்து அனுபவித்து இன்புறமுடியும் எனக் கண்டுபிடித்து, தானும் அவ்வாறே அனுபவித்ததுபோல்,
உலக மக்கள் அனைவரும் அனுபவிக்க
இறைஆசையினைக் காட்டி உலக மக்களை அன்புடன் அழைக்கிறார்
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
என்று எண்ணுகின்ற அருளாளர் வரிசையில் அவதரித்த நம் குருநாதர் அவர்கள்.

   அவர் காட்டிய இறைஆசையில் விழுந்த நாம் தெய்வீகப் போதையில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எனவேதான் எல்லா அருளாளர்களின் ஆசியினைப் பெறுவதற்காக. ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் என்கிறார்.’

இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது. எது அது? அறம் வலியுறுத்தப்படுவது தெரிகின்றது, ஒரு மனிதன் இறைஉணர்வு பெறுவதென்பது அவனுக்கு இப்பிறவியில் இயற்கையால்/இறையால் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. அதனை தனிமனிதன் அறிந்து இப்பிறவியினைப் பயன்படுத்திக் கொண்டு பேரின்ப வாழ்வு வாழ்கிறான் என்பது உண்மையாக இருந்தாலும், அவன் அடைந்த இறைஉணர்வு சமுதாயத்திற்கும் பெரும் உதவியாக உள்ளது. எவ்வாறு எனில் இறைஉணர்வு பெற்றவர் அறவாழ்வு வாழ்வாரன்றோ! அறவாழ்வு தான் அவரை இறைஉணர்விற்கு அடிகோலியது. ‘ஒழுக்கம், கடமை, ஈகை’ ஆகிய மூன்று கண்களைக் கொண்ட அறவாழ்வு இறைஉணர்வாளரின் பண்பாக இருந்தாலும், பெரும் அளவில் பயன்பெறுவது சமுதாயமே. ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று நெறிகளுக்கு வித்தகரானவரால் சமுதயாத்திற்கு நன்மைதானே ஏற்படும். துன்பமில்லையே!
எனவே எது தேவையோ அது வலியுறுத்தப்படுகின்றது.
இறைஉணர்வு மனிதனுக்கு எதற்காக அவசியமாக இருக்கின்றது?
எல்லா உயிர்களிலும் மனிதனுக்கு மட்டுமே இறை உணர்வு பெறுவது பேறாக இருந்தாலும்,
அதனால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் என்ன பயன் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அருள் என்பது என்ன?

அருள் என்பது இறை, கருணை நோக்கத்துடன் காப்பது, வழிகாட்டுவது, தருவது. அதே நேரத்தில், இறைநீதி என்பது மனிதனின் செயலுக்கேற்ற விளைவாக வருவது இறை என்கின்ற போது இறையின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமெனில், மனிதனின் செயல்கள் நற்செயல்களாக இருக்க வேண்டும். இறையை ஐயமின்றி அறிந்து, இறையாகவே மாறி இருப்பவர்களே அருளாளர்கள். அருள் அவர்களிடம் ததும்பி வழிவதால், அருள் ஒன்றையே நிதியாகக் கொண்டுள்ளதால் அவர்கள் அருள்நிதியாகத் திகழ்பவர்கள். இறைத்தூதுவர்கள் அவர்கள். இறையின் பிரதிநிதி அவர்கள். அருளாளர்களை அருள்நிதி என்று அழைப்பதுபோல், பிரம்மஞானம் மற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற மனவளக்கலைஞர்களை, ‘அருள்நிதி’ என்றே அழைக்கிறார் மகரிஷி அவர்கள். மனவளக்கலைஞர்களை அருள்நிதி என்கின்ற பட்டத்தைச்சூட்டி மகிழ்ந்து, இறைத்தூதுவர் பணி செய்ய ஆசீர்வதிக்கிறார். ஆகவே மனவளக்கலைஞர்களை தெய்வீகப் பொறுப்பை ஏற்கச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

அருளாளர்கள் உலகம் என்பது என்ன? எங்கே உள்ளது?

இப்போது அருளாளர்கள் உலகிற்கு வருவோம். எங்கே உள்ளது இந்த அருளாளர்கள் உலகம்? கற்பனையானதா? இறை அரூபம் என்பது, வெட்டவெளி என்பது கற்பனையோ?! வான் காந்தம் கற்பனையானதோ! வான் காந்தப் பதிவுகள் கற்பனையானதோ? எல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது. அதுபோல் அருளாளர்கள் உலகம் என்பது அவரவர்கள் புரிந்து கொண்டது, மற்றும், பயன் பெறுவதைப் பொருத்து இரண்டுவிதமாகவும் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அருளாளர்கள் உலகம் பற்றி சிந்தித்து தெளிவு பெறுவோம்.

அருளாளர்கள் உலகம் என்றால் என்ன? உலகம் என்றால் தெரியும். உயிரினங்கள் வாழும் இப்புவியை உலகம் என்கிறோம். இதனைத் தவிர்த்து வேறு உலகம் ஏதேனும் உண்டா? அதில் அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா? மனிதன் பாவங்களைச் செய்யக்கூடாது என அச்சுறுத்தி நரகலோகம், சொர்க்கலோகம் என சொல்லி வைத்திருந்தனர். உண்மையில் சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் வாழ்கின்ற போதே இப்புவியிலேயே, ஏற்கனவே பலபிறவிகளில் செய்யப்பட்ட/இப்போது செய்கின்ற வினைகளுக்கேற்ப, இன்பதுன்ப அனுபவங்களைப் பெற்றுவிடுதலில்தான் உள்ளது. அருளாளர்கள் உலகம் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு வருவோம்?

இன்று உலக மக்கள் தொகை எழுநூற்று நாற்பது கோடியாகும். ஆனால் இது வரை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனைகோடி மக்கள் பிறந்தனர் என்று தெரியுமா? தெரியாது. கடலில் உள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று சொல்ல முடியாதோ, அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்றுவரை பிறந்துள்ள மக்களின் எண்ணிக்கையும்.
இந்த மக்கள் எண்ணிக்கையில், முதல் மனிதனிலிருந்து இதுவரை எத்தனை மனிதர்கள் தோன்றி இறையை ஐயமின்றி உணர்ந்தனரோ அவர்களெல்லாம் இறையருளாளர்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவியில்லை. பின்னர் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள்? அவர்களின் பூதஉடல் மறைந்தாலும் அவர்கள் சூக்கும உடலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலக நலத்தின்பால் அக்கறை கொண்டு எண்ணிய எண்ணங்கள் எல்லாம் வான்காந்தத்தில் பதிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வெண்ணங்கள் தங்களின் பணியான ஊடகவேலையை மௌனமாக செய்துகொண்டிருக்கின்றன. அவர்கள், யார் யார் இறையை நோக்கிய பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ, யார் யாருக்கு என்னென்ன தேவையோ அவற்றை எல்லாம், அவர்களுக்கெல்லாம் ஆன்ம உலகில் இருந்து கொண்டு உதவி புரியக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் மகரிஷி அவர்கள் அளித்துள்ள உறுதி மொழியினை நினைவில் கொள்வோம்.

மகரிஷி அவர்கள் கொடுத்துள்ள வாக்கு—

நான் (மகரிஷி) உங்களுடன் இருப்பேன்!

நான் வான்காந்த அலையில்

கலந்துள்ளேன்

உங்களுக்கு நலத்தில்

எந்த இடர் ஏற்பட்டாலும்

என்னை நினைத்துக் கொள்ளுங்கள்!

நினைக்கும் போது நான் உங்களுடன்

கலந்து விடுவேன்.

என் கையைப் பிடித்துக் கொண்டே

நீங்கள் தவத்தில் உயரலாம்.

உங்களுக்கு வரும் எந்த இடரையும்

நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆன்மீகத்தில்

குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு.

அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன்.

உங்களின் சினத்தை பொறாமையை,

உணர்ச்சி வயப்பட்ட எண்ணங்களை

தவறான செயல்களை

எனக்கு குரு காணிக்கையாக

இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்.”

. . .     உலக நல தொண்டன் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிர் அழிவதில்லை என்பதனை யாவருமே அறிவர். எப்படி? மரணமடைந்த பரு உடல்தான் எரிக்கப்படுகின்றதே தவிர உயிர் எரிக்கப்படுவதில்லை. அதாவது உடலைவிட்டு உயிர் வெளியேறி விடுகின்ற சம்பவமே மரணம். ஆகவே மரணம் சம்பவித்த பிறகு புலன்களுக்கு தெரிகின்ற பூதவுடல்தான் எரிக்கப்படுகின்றது. உயிர், ஆற்றல் என்பதால் அது அழியாதது. அதாவது எல்லோருக்குமே ஆன்மா(உயிர்) அழியாதது. எனவே பூதஉடலைவிட்டுப் பிரிந்த ஆன்மா எங்கு செல்கின்றது என்பது அவரவர்கள் செய்துள்ள வினைகள், கொண்டுள்ள நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைப் பொருத்து அமைகின்றது.

அருளாளர்களைப் பொறுத்த வரையில் வினைகள் முடிந்து விடுகின்றன. இறைவனைக்காண வேண்டும் என்று இருந்த ஒரே ஒரு நிறைவேறாத ஆசையும் அவர்கள் இறைஉணர்வு பெறுவதன் வழியாக நிறைவேறி விடுகின்றது. ஆசை என்கின்ற பெயரிலே வேறு ஏதாவது இருக்குமா என்றால், எண்ணம் என்கின்ற பெயரிலே ஒன்று இருக்கும். அதாவது ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பது எல்லோருக்குமே இருக்கும். இதனை வாய்மொழியாகவே, திருமூலர் அன்று சொன்னது இன்றும் நாம் நினைவு கூறுகிறோமே அந்த எண்ணம் உயிரோடுதான் வான்காந்த கலத்தில் உலவி வருகின்றது, எனவே தான் குருவணக்கத்தில் எல்லா அருளாளர்களையும் வணங்கி நினைவு கூறச் சொல்கிறார்.

நம் குருநாதர் போன்றே மானசீகமாக அருளாளர்களை நினைவு கூறுதல் வேண்டும்:

இருப்பினும் இறை-உணர்-ஆன்மீக சாதகன் உரிய பயிற்சிகளோடு அருளாளர்களின் அருளைப் பெற இறைஞ்ச (invoke) வேண்டும். இறை உணர் ஆன்மீக சாதகனின் பரிபக்குவ நிலைக்கேற்ப அருளாளர்களின் விருப்பப்படியோ, ஆன்மீகசாதகனின் முயற்சிக்கு ஏற்பவோ அருளாளர்கள்–ஆன்மீக சாதகர்கள் இணைப்பு. மகரிஷி அவர்களுக்கு உருவானதுபோல் ஏற்பட்டுவிடும்.

தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகிய அருளாளர்கள் அவதரித்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. எனினும் அம்மூன்று அருளாளர்களின் அடிபற்றியதால், அறிவே தெய்வம், அறிவே அகமாக உள்ளது, அறிவை அறிய உற்ற வழிகளை அறிந்து கொள்வதற்கு, அம்முன்று அருளாளர்களும் அருள் புரிந்திருக்கிறார்கள். எனவே அதேபோன்று, மகரிஷி அவர்களின் சீடர்களும், அவ்வாறே அந்த மூன்று மானசீகக் குருமார்களை நினைவு கூறும் யுக்தியினை பயன்படுத்தி அவர்களின் அருளைப் பெறவேண்டி, குருவணக்கப்பாடலை அருளியுள்ளார்.

இந்நிகழ்வில் இம்முன்று அருளாளர்களும், மகரிஷி அவர்களின் ஆன்மீக தாகம் மிகுந்து, வாழ்கின்ற பிறவியிலேயே இறையை உணர்ந்திட வேண்டும் என்கின்ற எண்ணம் அழுத்தம் பெற்று, அதற்கேற்ற செயல்கள் புரிந்ததால், அவர்கள் மூவருமே தாங்களாகவே வந்து அருள் புரிந்திருக்கலாம். அல்லது மகரிஷி அவர்கள் இறைஞ்சி நின்றதால் அதற்கு வேண்டியவாறு இறையின் ஏற்பாடாக, அருளாளர்களின் வாயிலாக அருள் புரிந்தது/செய்தது எனவும் கொள்ளலாம். மேலும் அம்மூன்று அருளாளர்களின் அறநூல்களை மதித்து, ரசித்து, நம்பிக்கை கொண்டு, ஆராய்ந்ததாலும் அருளார்களின் புரிதலே இவருடைய புரிதலாகிவிட்டது. அருளாளர்களின் அறிவும், ஆன்மீக சாதகனின் அறிவும் பேரறிவுதானே! எனவே வேண்டியதெல்லாம், ஆர்வமும், தீர்மானமும், முயற்சியும்தான். சுருக்கமாக உண்மையாக சுத்த அத்வைதப்படி பேரறிவே(இயற்கையே/இறையே) இவ்வாறு நடத்துகின்றது.

இராமலிங்கரையும் குருவாக நினைவு கூறுகிறார். இராமலிங்கர் அவர்களே விரும்பி வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்கி, இராமலிங்கர் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது மொழிந்ததுபோல் அவ்வெண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக. இராமலிங்கர் அவர்கள் வேதாத்திரி அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் வேதாத்திரி அவர்களின் பரிபக்குவ நிலை இருந்துள்ளது என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

இதற்கும் மேலாக வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது சாதுரியத்தையும், அறிவுக் கூர்மையையும் ஏனைய அருளாளர்களின் அருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தியது வெளிப்படையாகவேத் தெரிகின்றது ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூர்வோம்’ என்கின்ற வரிகளிலிருந்து.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(24-07-2016-ஞாயிறு) வள்ளலார் பற்றி அறிந்து கொள்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்!
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.
https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
அல்லது

நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல  click here

https://www.prosperspiritually.com/contact-us/

நன்றி,

வாழ்க வளமுடன்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments