FFC – 163-வினா விடை – 12-2/2

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

வினா விடை – 12-2/2 

FFC – 163

14-02-2016—ஞாயிறு

 

சிந்திக்க அமுத மொழிகள்- 132

 (05-12-2015—சனி)

சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி:

“நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.”

                                                                                      …. அர்னால்டு
பயிற்சி—
1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
என அழைக்கிறார்?
4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

விடை:– தொடர்ச்சி–

சென்ற அறிவிற்கு விருந்தில் அமுதமொழியின் பயிற்சிக்கான முதல் மூன்று கேள்விகளான
1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்” என அழைக்கிறார் என்பதற்கு விடைகளை அறிந்து கொண்டோம்.
இன்றைய விருந்தில் நான்காவது கேள்வியான ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன? என்பதற்கான விடையினை அறிவோம்.
3) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா என்கின்ற கேள்விக்கு ‘ஆம்’ என்பதுதான் பதில். இதன் பயன் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.

வாழ்வியல் உண்மையைப் பற்றி ஒரு அறிஞர் கூறுவதனை ஒரு சிலர் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்வை நடத்த ஆரம்பிப்பர்.
ஆனால் வேறு சிலருக்கு அறிஞர் கூறுவது சரி என்று சில நேரங்களில் மனம் நினைத்தாலும், பிறகு கடைபிடிக்க முயலும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.
ஆகவே ஒரு உண்மையை ஒர் அறிஞர் கூறியிருந்தாலும் வேறு பலர் அறிஞர்கள் அவ்வுண்மையையே வேறு கோணத்தில் கூறியிருந்தாலும், இணைத்துப்பார்த்து சிந்திக்க வேண்டும். அப்போது அவ்வுண்மைக்கு நிரூபணம் கிடைக்கும். அவ்வுண்மை நம்மால் உறுதிபடுத்தப்படும். அதன் பிறகு அது தன்னுடைய கண்டுபிடிப்பாகும். பிறகு கடைபிடிப்பது எளிதாகவும் இருக்கும்.* எந்த ஒன்றும் நம்முடையதாக இருக்கும்போது அதனை பயன்படுத்துகின்ற உரிமை தானாக வந்துவிடும். ஆனால் அதுவே பிறருடையதாக இருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தும் உரிமை இல்லாமல் போய்விடும். அதுபோல்) அறிஞர்கள் கண்டுபிடிப்புகளான வாழ்வியல் உண்மைகளை நிரூபணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அது நம்முடைய கண்டுபிடிப்பாகிவிடும்போது அதனை வாழ்வில் பயன்படுத்துவது என்பது இயல்பாகிவிடும். இந்த இயல்பை இயல்பாக்கிவிடுவதற்காகத்தான் மகரிஷி அவர்கள் ‘நான் சொல்வதனை அப்படியே எடுத்துக் கொள்ளாதே. சந்தேகம் கொள்— Don’t accept what I say. Doubt what I say’ தகவல், உறுதிபடுத்துதல். மாற்றமடைதல்—Information, Confirmation. Transformation என்கின்ற தாரகமந்திரத்தை தந்துள்ளார்.
அறிஞர்கள் கூறிய அமுதமொழிகள் என்பது ஏதோ பொழுதுபோக்கிற்காக கற்பனைக்கதைகள் படிப்பது போன்றதல்ல. அல்லது பத்திரிகைகளில் வரும் துணுக்குகள் போன்றதோ அல்ல.

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாசிப்பதற்காக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காகவே அமிழ்தமொழிகள் உதிர்க்கப்பட்டுள்ளன/உதிர்க்கப்படுகின்றன.

சமுதாயம் அவற்றை கடைபிடித்து இன்ப வாழ்வு வாழும்போதுதான், சமுதாயத்தின் மீது ஆதங்கமும் அக்கறையும் கொண்ட அவ்வறிஞர்களின் ஆன்மா குளிரும், மகிழுறும்..
.

இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முகம் தெரியாத நம்மீது அவர்களுக்குத்தான் ஏன் இந்த அக்கரை; அதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதேனும் ஆதாயம்தான் உள்ளதா? அல்லவே!

நாம் அவ்வாழ்வியல் உண்மைகளை கடைபிடித்து அறிஞர்கள் கூறியுள்ளதுபோல் இன்ப வாழ்வு வாழ்வதேற்கே அறிஞர்களின் வழியாக இயற்கேயே/இறையே ஏற்படுத்திய புனித ஏற்பாடுதான் அது. அறிஞர்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல்

புலன் வாழ்க்கை மட்டுமே வாழ்வின் நோக்கம் எனக் கருதாமல்,
மிகுந்த சிரமப்பட்டு, புலன்களை வென்று அதாவது புலன்களை துன்பவலைகளாக(suffering traps/traps for suffering) மாற்றிவிடாமல் உணர்கருவிகளாக மட்டுமே(sensing tools) பயன்படுத்தி,
அதற்காக சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் தங்கள் வாழ்நாளையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
தியாகம் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. இறையின் அனுக்கிரகம் இல்லாமல் முடியாது.
அவ்வாறாக இறையே அறிஞர்களின் வாயிலாக அருளிய அமிழ்தத்தை பருகாமல் இருப்பது அறிவுக்கண்ணிருந்தும், அறிவொளி இருந்தும், அறிவொளியில் வாழாமல்,
திக்குத் தெரியாத இருண்ட காட்டில் தவித்துக் கொண்டிருப்பது போலல்லவா இருக்கின்றது சாதாரண மனிதர்களின் வாழ்வு!
இருட்டில் குருட்டுவாழ்க்கை வாழ்வதுபோல்தானே உள்ளது?! அப்படி இருக்கலாமா? இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே. இறை அருள் பெற விரும்புகின்றவர்கள்தானே?! அப்படியிருக்கும்போது, இறை அளித்திருக்கும் அறிஞர்கள் வாயிலாக உதிர்த்த மொழிகளின் அமிழ்தத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
உரிய செயலை செய்துதான் வேண்டிய பயனைப் பெற முடியும் என்பது இயற்கைநீதி என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா?
அமுத மொழிகளை மனிதன் பின்பற்றுவது என்பது இறைஉணர்வு பெற துணைநிற்கும், அறநெறியின் இரண்டாவது அங்கமான ‘கடமை’ என்பதனையும் மறந்து விடக்கூடாது.
‘ஆண்டவனுக்கு தரும் மரியாதைக்கு அடுத்தது கடமைதான்’ என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவதனை இப்போது நினைவிற்கொள்வோம்.
நல்லவற்றை பின்பற்றாமல் இறை அருள் கிடைத்திடுமா? அறிஞர்கள் உதிர்த்துள்ள அமுதமொழிகளை எல்லாம் ஆழ்ந்து–விரிந்து சிந்தித்து நாம் மதிக்க வேண்டாமா?!

* அறிஞர்களின் அமுதமொழிகளை தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக்கொள்ள வேண்டும் என்று சற்றுமுன் கூறியிருக்கிறோம்.

‘தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றால் என்ன பொருள்? ஒருவர் அமுதமொழிகளுக்கு நிரூபணத்தைக் கண்டுபிடிக்கும் போது அது அவருடையதாகிவிடும்(அவர் கண்டுபிடித்ததாகிவிடும்). அதாவது நிரூபணம் கிடைக்கும் போது அந்த உண்மையினை மீண்டும் நாமும் கண்டுபிடித்தது போலாகும். (அப்படி கண்டுபிடித்து கடைபிடிப்பதில் முந்திக்கொள்பவர்களே சரித்திரத்திலும் இடம் பிடிக்கின்றனர்) அப்படியென்றால் அவ்வுண்மையினை வாழ்க்கையில் கடைபிடிப்பது சிரமில்லாமல் இருக்கும். எவ்வாறெனில் நமக்கு முன்னர் அவ்வுண்மையைக் கண்டறிந்த அறிஞர்கள் தங்களது ஆழ்ந்து விரிந்த சிந்தனையால்தான், அவ்வுண்மையினை தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டதை/ கடைபிடித்து வருவதனை நமக்குத் தெரிவித்திருப்பதால் நாமும் அதனை வாழ்க்கையில் கடைபிடிப்பதென்பது மிக மிகச் சுலபமாக இருக்கும்.

மேலும் மனிதனாக வாழும் கலையில்,
மனிதனாகப் பிறந்தவர்களில் ‘ஒருவருக்கு முடிந்தது, மற்றொருவருக்கு முடியாமல் போவது’ என்பது எவ்வாறு ஏற்கமுடியும்? ‘உத்தம நண்பர்காள் உங்கட்க்கும் உரியது’ உரியது என்று நவயுக வியாசர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருப்பதை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்படுவோம்.

அறிஞர்கள் கண்டுபிடித்துக் கூறும் வாழ்வியல் உண்மைகளை வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிறகு நமது பங்கிற்கு நாமே மனித வாழ்விலிருந்து உண்மைகளைக் கண்டுபிடித்து நம்முடன் வாழ்கின்ற சக மனிதர்களுக்கும் சொல்லலாமன்றோ? அறிஞர்களாகத் திகழ்வோம். வாழ்க வளமுடன்.

நம் குருநாதரும், உலகநலத் தொண்டரும், உலகத்தையே உய்விக்கக் கூடிய “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்” என்கின்ற மந்திரத்தை அருளியவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனிதகுலத்தின் மீது கொண்ட அக்கறையையும், ஆதங்கத்தையும், 55 வருடங்களுக்கு முன்னர்
அவர் அருளிய பாடலின் வாயிலாக அறிவோமாக!

சாதனையே அறநெறி(21-12-1961)
அறநெறியைப் போதிக்க புதிய நூல்கள்
அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
அறம்பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
அதன் மூலம் அறம்வளரும்; உலகம் உய்யும்,
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

“நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.” என்கின்ற அர்னால்டு அறிஞரின் அமுதமொழி நம்மை எல்லாம் ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வைத்து, அறிவை அறியும் கலையான மனவளக்கலை மேலும் மேலும் விரைவில் உலக மக்கள் அனைவருக்கும் எளிமையாக பரவ நம்முடைய எண்ண அலைகளை பரப்பச்செய்துள்ளது. எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளதால் இயற்கை தான் விரும்புகின்ற மனிதகுலத் தேவைக்கான மாற்றங்களைக் கொண்டுவர மனித எண்ணங்களின் வாயிலாகவே நடத்தி வைக்கின்றது என்கின்ற உண்மையையும் அறிந்து கொள்கிறோம். எந்த ஒரு நெடும் பயணத்திற்கும் வாகனம் தேவையிருப்பதுபோல், பேரறிவின் நெடும்–தொடர்–தன்மாற்ற பயணத்திற்கு தேவையான வாகனம் மனித எண்ணமே என்பதால்( In other words when fraction demands Totality supplies– Vethathri Maharishi) ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்கின்ற உண்மையினை இப்போது பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஆகவே எண்ணமே தன்மாற்றத்தின்(பரிணாமத்தின்) வாகனம் என்றிருக்கும் போது ஒட்டு மொத்த மனிதகுலமும் தன்னுடைய எண்ண ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என நாம் அழுத்தமாக எண்ணுகிறோம்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments