February 2015

Monthly Archives

  • 58-ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

     ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

    அ.வி.எண்.58—(3/?)

    18-02-2015 – புதன்

     

    கடந்த அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சியாக, இன்று, இயற்கையின்/அறிவின் பயணத்தில் (Journey of Consciousness), அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மை இயற்கைக்கு உண்டு என்பது பற்றியும், இதனைக்குறிக்கும் ‘entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான பொருளையும் அறிவோம்.

    அறிவே இல்லாத வற்றாயிருப்பாக, பேராற்றலாக மட்டும் வெளி இருந்திருந்தால் பிரபஞ்சமும் உயிரினங்களும் உருவானது சாத்தியமாகி இருக்குமா? பேராற்றலால் எவ்வாறு இயக்குனர் இல்லாமல் இயங்க முடியும்? இயக்குவதற்கு காரணமாக இருக்கும் ஆற்றலை என்ன என்று அழைப்பது? நாடக மேடையில் நாடகத்தை இயக்குவது யார்? இயக்குனர். இயக்குனர் என்பவர் யார்? பெயரைச் சொல்லி இன்னார் இயக்கினார் என்போம். இன்னார் என்பவர் யார்? அவர் ஒரு மனிதர். மனிதர் உடலா, உயிரா, அறிவா? இயக்குனரிடம் உள்ள அறிவுதானே அந்த நாடகத்தை இயக்குகின்றது.
    அதே போல் வற்றாயிருப்பாக உள்ள பேராற்றலின் தன்னிறுக்கத்தால் நொறுங்கி தொடர்ந்து துகள்கள் மட்டுமே உருவாகிக் கொண்டு, மேற்பார்வையில்லாமல் (இறைவெளியில் அறிவு இல்லாதிருந்தால்) இந்நிகழ்வு மட்டுமே நடந்து கொண்டிருந்தால், பஞ்சபூதங்கள் உருவாகியிருக்க முடியாது. இந்த மேற்பார்வையிடும் தன்மைதான் அறிவு எனப்படுகின்றது.

    பஞ்சபூதங்கள் உருவாகவில்லை என்றால் இன்று நாம் காணும் இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமா? பஞ்சபூதங்கள் உருவாகவில்லை எனில் ஏது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள்? நிகழ்ச்சிகள் உருவாகவில்லையெனில் அதனை உணர்வதற்கான உயிரினங்களே அவசியமில்லை. உயிரினங்களுமே தோன்றியிருக்காது. மனிதகுலமும் தோன்றியிருக்காது.

    நாமே இல்லாத நமக்கும் ஏது பிரச்சனை (இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும்) ? இறைக்கும் பிரச்சனை இருந்திருக்காது மனிதகுலத்தால். இறைக்கு பிரச்சனையே மனித குலத்தால்தான். பேரறிவாகிய இறை மனிதனிடம் ஆறறிவாகி, அது வரை தானே ஒட்டி வந்த பரிணாம வாகனத்தை, மனிதனிடம் கொடுத்து ஒட்டச் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. பேரறிவு மனித வடிவத்தில் ஆறாம் அறிவாகி தன்னையே இரசிக்க வேண்டும் என எண்ணியதால் வந்த விளைவு இன்று மனித வடிவில் அல்லலுறுகின்றது. இதுதானே சுத்த அத்வைதம் என்பது?

    வெளியிலிருந்து தோன்றிய எண்ணிலடங்கா கோடானு கோடி துகள்களையெல்லாம் ஒழுங்குடன் விண்ணாக்கி, பிறகு காற்றாக்கி, நீராக்கி, நெருப்பாக்கி, மண்ணாக்கியதால்தான் பிரபஞ்சம் உருவாக முடிந்தது. இது ஏதோ ஒரு திட்டம் போட்டது போல் தோன்றுகின்றதா? திட்டம் வைத்திருந்தது என்கின்ற சொல்லுக்கு நேரான பொருள் (literal meaning) எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் மனிதனைப் போல் இறைக்கு முன்னரே திட்டமிடவேண்டிய அவசியமும் இல்லை.

    திட்டமிடாமலேயே அவ்வப்போது திட்டமிட்டதுபோல் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மையையுடையது இயற்கை என்பது இயற்கையின் சிறப்பிலும் சிறப்பு.

    இத்தன்மையை புரிந்து கொள்வதற்கும், வார்த்தையால் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும் ஏதேனும் வார்த்தை உள்ளதா? உள்ளது. அது ஒரு ஆங்கில வார்த்தை. அது ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தை. அந்த ஆங்கில வார்த்தையை மகரிஷி அவர்கள் எழுதிய ‘Logical solution to the problems of the society’ என்கின்ற நூலில் பயன்படுத்தியுள்ளார்.

    அந்த ஆங்கில வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ள நூலின் அந்தப்பகுதியை நினைவிற்கு கொண்டு வருவோம்.
    அந்த நூலில் 35 வது பக்கத்தில் உள்ள முதல் பத்தியிலுள்ள ஒரிரு வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளது. அதனை வாசிப்போம்.

    “The reality of the universe is that everything is the result of Nature’s evolution. All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. All manifestations and, movements in the universe are subject to the unfailing laws of cause and effect. These three — evolution, entelechy, and cause and effect are the inherent character and capability of Gravity—the Unified Force–the radical first principle of the universe

                                                                                                                           …….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் – பொருளின் நிறைநிலை, பொருண்மை. ஆகும். ‘பொருளின் நிறைநிலை’ என்றால் அந்தப் பொருள் எது எது ஆக வேண்டுமோ அததற்கு வேண்டிய எல்லாம் நிறைந்துள்ள நிறைவான நிலை என்று பொருள்.

    பொருண்மை என்றால் பொருளின் தன்மை என்று பொருள்.
    ‘directed by entelechy of Nature’ என்றால் இயற்கையின் நிறைநிலைத்தன்மையின் இயக்கத்தால்’ என்று பொருளாகின்றது.
    All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. — எல்லாத் தோற்றங்களும் ஒழுங்குடனும், இயற்கையின் நிறைநிலைத்தன்மையின் இயக்கத்தால் தோன்றியுள்ளன.
    உருவங்களையே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட பொருளெனக் கொள்ளும் மனித அறிவிற்கு ஒன்றுமில்லாதது போல் வெளி தெரியலாம். வெளி ஒன்றுமில்லாததாக இருந்திருந்தால் நாம் காணும் இவ்வளவு தோற்றங்களும் எவ்வாறு வந்திருக்க முடியும்? இயற்கையின் தன்மை அத்தகையது.

    ஒரு தோற்றத்திற்கு மூலம், இன்னொரு தோற்றம்தான் என்பது ‘தோற்றங்கள் தோன்றிய பிறகு’ சரியாக இருக்கலாம். புலன்களுக்கு தோற்றமாகத் தென்படும் தோற்றத்திற்கு, வேறொரு தோற்றம் மூலமாக இருக்கும். ஆனால் புலன்களுக்கே தெரியாத மிக மிக நுண்ணிய துகளுக்கு மூலம் என்பது எவ்வாறு வேறொரு தோற்றப்பொருளாக இருக்க முடியும்?

    அந்த மிக மிக நுண்ணிய பொருளின் மூலம், தோற்றமில்லாத பொருளாகத்தான் இருக்க முடியும். ‘தோற்றமில்லாத, ஆனால் அது பொருள்’ என்பது வெளியாகத்தான் இருக்க முடியும். ஆகவே துகள்கள் வெளியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். அந்த மூலப்பொருள் வெளி என்பதால் அது ஒன்று மில்லாதது எனக் கருத முடியாது. அந்த வெளியிலிருந்துதான் நாம் காணும் இப்பிரபஞ்சமும் எல்லா உயிரினங்களும் உருவாகியுள்ளது.

    இந்த உண்மையினை தெளிவாக்கும், மகரிஷி அவர்களின் இரு கவிகளை நினைவு கூர்வது நலன் பயக்கும்.

    சூனியமே உறுதிப் பொருள் (1955)

     

         சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்

                                                            சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று.     

    சூனியமே கோடானு கோடி அண்ட

                                                   சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்.

                         சூனியமே வலிமை மிக்க உறுதியாய் நின்று

                                                         சொரூப கோடிகளை இறுக்கிஇயக்கு தன்றோ?

                                       சூனியத்தை, அணு நிலையைக் கொண்டாராய்ந்தே

                                                        சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்.

     

    வெட்டவெளியே பேராற்றல்(08-07-2001)

     வெட்டவெளி சக்தியென்பது இல்லை ஆனால்,

                          வேறுஎந்தப் பொருள் வலிது பிரபஞ் சத்தில்?

    தொட, தொடப்பட்ட இருசீவர்களுக் குள்ளே,

                                                   தொட தொட்டதாய் எண்ணும் அறிவு யாது?  வெளிதான்!

    பட்டப்பகலில் வானில் விண்மீன் தோன்றா.

                                    பார்வை இல்லார்க்கு அவை எப்போதும் காணா

    எட்டவில்லை அறிவுக்கு என்றால், அந்த

                                                                  இயற்கைத் தத்துவம்எங்கே ஒளிந்து கொள்ளும்? அறிவோம்!

                         … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

     ஆதி மனிதன் தோன்றி, நாகரீகம் வளர்ந்து, தகவல் பரிமாறிக் கொள்வதற்கு மொழியை உருவாக்கி வளர்த்து,

        அந்த மொழியில், புலன்களுக்கு காணா ஒன்றினை, ‘ஒன்று மில்லாதது’ எனக்கருதி,  அதனை  ‘வெளி’ என்றும் ‘சூனியம்’ என்கின்ற இரு வார்த்தைகளால் சொல்வதற்கு ஏற்பாடு செய்து விட்ட சொற்களை வைத்துக் கொண்டு,

         இன்று அறிவு வளர்ந்து, அதனுடைய மூலத்தை அறியும் நிலையில்,

        அந்த இருவார்த்தைகளுக்கு  அப்போது வைத்தப்  அர்த்தத்தைக்(பொருளைக்) கொண்டே,

        இப்போது,  இவ்வளவு அறிந்த பிறகும், இன்னமும், ஆதிநிலையாகிய  வெளியை ‘ஒன்று மற்ற சூனியம்’ எனக் கருதி,  வெளியைத் தெய்வம் என ஏற்றுக் கொள்வதில் அவ்வப்போது, ஐயம் சிறிதளவு வந்து கொண்டிருந்தாலும் கூட,  அது அறிவு முழுமைப் பேற்றினை அடைவதற்குத்  தடையாக இருக்கும்.  ‘வெளி தெய்வம்’ என்பதனை முதலில் கருத்தியலாக தெளிவுடன் முடிவு செய்யவும்.  பிறகு ஒரு நாள் தவத்தின் பயனாக செய்முறைப் பயிற்சியிலும் அது உறுதியாகி அறிவு முழுமைப் பேற்றினை அடையும். 

    எனவே, வெளியாக இருக்கின்ற மெய்ப்பொருள், பிரபஞ்ச தோற்றங்களையெல்லாம் வெளிபடுத்தியதால் (வெளிப்படுத்து – வினைச்சொல் –emerge, reveal, become evident, come out become public) அது ‘வெளி’ என்கின்ற காரணப் பெயரையும்  பெறுகின்றது என்று ‘வெளி’ க்கு  இன்றிலிருந்து பொருள் கொள்வோம்.

       மேலே காணும்   இரு பாடல்களையும் மீண்டும் மீண்டும் நினைந்து நினைந்து, மகரிஷியின்  இறைவெளி புரிதலை உள்வாங்கி, அதே அனுபவம் பெற்று,  ‘இப்பிரபஞ்சத்திற்கும் உயிரினங்களுக்கும் மூலம்  வெளி’ என்றும், வெளியில் அறிவின் தன்மை  மேலோங்கி முதன்மையாக இருப்பதால் ‘அறிவே தெய்வம்’ என்று  உணர்வோமாக.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம். 

                      சிந்தனையின் தலைப்பு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது’ என்று இருப்பதால், இங்கே வெளியே தெய்வம் என்கின்ற போது  தலைப்பை விட்டு வெளியே சென்று விட்டதாக நினைக்க வேண்டாம்.  வெளி அறிவாக இருக்கின்றது.  அறிவு வெளியாக உள்ளது.  அதனால்தான் அறிவு கண்களுக்குத் தெரியாமல் உருவமற்று இருக்கின்றது. வெளி வேறு அறிவு வேறு அல்ல.  வெளியையும், அறிவையையும் பிரித்துப்பார்க்க முடியாது.     தொடரும் …

    அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு மேலும் பொருள் அறிந்து, ‘ஆட்சியின்றி எவ்வாறு ஐயன் ஆட்சி செய்கிறான்’ என்பதனை அறிய இருக்கிறோம். தொடரும்…

  • சிந்திக்க வினாக்கள் – 47

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    12-02-2015 — திங்கள்

    வாழ்க வளமுடன்.

    1) ஞானத்தைப் புறக்கணித்த வாழ்வு நிறைவற்றது, இனிமையற்றது. அமைதியற்றது என்கிறாரே மகரிஷி அவா்கள்.  எவ்வாறு?  ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விரிவாக விடை அளிக்கவும்.

    வாழ்க மனித அறிவு       வளா்க மனித அறிவு

  • ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

     

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

    ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.57—(2/?)

    15-02-2015 – ஞாயிறு

         கடந்த சிந்தனையின்  தொடர்ச்சியாக, இன்றைய விருந்தில், ஆதிநிலையில், வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே, அறிவு இல்லாது இருந்திருந்தால், உணர்வற்ற சடமாகிய பஞ்சபூதங்களும்கூட உருவாகியிருக்க முடியாது என்கின்ற கூற்றினை எவ்வாறு சரியென பார்க்க இருக்கின்றோம்.

      விண், காற்று நீர், நெருப்பு, மண் ஆகிய பஞ்சபூதங்கள் உயிரற்ற சடப்பொருட்களாக இருந்தாலும்,  ஆதிநிலை வெளியில் ஒருவேளை(perhaps) அறிவு இல்லாமல் இருந்தால், பஞ்சபூதங்களே  உருவாகி இருக்க முடியாது. பஞ்சபூதங்கள் சடப்பொருட்கள்தான். ஆகவே அவற்றிற்கு உணர்ச்சி  இல்லைதான். உணர்ச்சி இல்லாத சடப்பொருட்களுக்கு ஏன் அறிவு  அவசியம் என்பது, ‘அறிவு என்றால் அறியக்கூடியது’ என்றுமட்டும்  பொருள் கொள்ளும் அளவிலே சரிதான். ஆனால் அறிவிற்கு வேறொரு பணியும் உள்ளது.  அது என்ன என்று அறிவோம்.

       முதல் உயிரினம் தோன்றியது பஞ்சபூதங்களின் கூட்டால்.  பஞ்சபூத கூட்டால்  உருவாகிய உயிருக்கு  எவ்வாறு ‘உயிருக்கு இலக்கணமான  உணா்தல்’ உண்டாயிற்று?  அறிவு என்கின்ற ஒன்று இல்லாமல் அந்த முதல் உயிருக்கு உணர்வு ஏற்பட்டிருக்க முடியாது.  அப்படியானால் பஞ்சபூதக் கூட்டாலாகிய உயிரின்  அறிவு  பஞ்சபூதங்களில் இருந்த  பிரிக்கமுடியாத அறிவுதான். ஆகவே வேதாத்திரிய இயற்கையியலில் – வேதாத்திரிய ஒருமையியலில் – வேதாத்திரிய இறையியலில் – வேதாத்திரிய வெட்டவெளி அறிவியலில்/விஞ்ஞானத்தில் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது அறிவுபூர்வமானதாக உள்ளது.

       ஆதிநிலையாகிய வெளியில் இருந்த பேரறிவுதான்,  துகளாகியபோதும் சரி, துகள்கள் தோன்றுவதற்கும், மேலும், துகள்கள் ஒன்று சேர்ந்து முதலில் விண்ணாகி பின்னர், விண் கூடிய விகிதாசாரத்திற்கேற்ப மற்ற பூதங்களான காற்று, நீர், நெருப்பு, கெட்டிப் பொருளான மண் உற்பத்திக்கும் (தோன்றியதற்கும்) காரணம்.

      பேரறிவின்  மேற்பார்வை எனும் தன்மையால், துகள்கள் ஒழுங்குடன் கூட்டு சேர்ந்து பல்வேறு அணுக்களாகி, பல்வேறு மூலகங்களாகியது.  உயிர்களில் உணர்ச்சியாகத் திகழ்வதற்கு முன்னரும் உயிரற்ற சடப்பொருட்களிலும்  அறிவின் பணி இருக்கின்றது. அறிவிற்கு உருவம் கிடையாது.  உருவம் இல்லாதது  எது?  ஆற்றலுக்கு உருவம் கிடையாது.  ஆகவே உருவமில்லாத அறிவை அறிவாற்றல்  என்றும் சொல்லலாம்.  உருவமில்லாததற்காக மட்டும் அறிவை ஆற்றல் என்று சொல்லவில்லை.  அறிவு ஆற்றலேதான்.

        பொதுவாக ஆற்றல் என்றால் என்ன?  ஆற்றல் என்றால் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி அல்லது  திறன் (Capability, ability, capacity) என்று அர்த்தம்.  ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலையுடைய  அறிவாற்றல், அணுக்கள் ஒன்றுசேர்ந்து  சடப்பொருட்களாக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி மாறாமல், தொடர்ந்து சடப்பொருட்களாகவே காட்சியளிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக்  காரணமாக உள்ளதால், அறிவினை ஒழுங்காற்றல் என்கிறார் மகரிஷி அவா்கள்.

         குடும்பங்களில் நடக்கும்  நிகழ்ச்சியினைக் கொண்டு, ஒரு செயலை ஒழுங்குடன் செயல்பட அறிவுதான் காரணமாக இருக்கின்றது  என்பதனை அனுபவத்தில் உணர்ந்து அறிவை, ஒழுங்காற்றல் என்று சொல்வது எவ்வளவு  பொருத்தமாக உள்ளது என்று அறிவோம்.

        குடும்பத்தில் பெரியவர்கள், பல முறை அறிவுறுத்தியும்,  சில சிறுவர்கள் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் தவறாகவே செய்து கொண்டிருப்பர்.  பெரியவர்கள்,  “அவனுக்கு  அறிவிருந்திருந்தால் அந்தப் பணியை ஒழுங்காக செய்திருப்பான்.  அவனுக்கு அறிவு என்பதே  கிடையாது.  ஞானசூனியம்” என்று சிறுவர்களைக் கடிந்து கொள்வர்.  அறிவு இல்லாது எந்த உயிரினமும் கிடையாது. ஆகவே சிறுவனுக்கு அறிவு இருக்கின்றது.  ஆனால், சிறுவன் பணியைச் சரியாக, ஒழுங்காக செய்யவில்லை.   பணியை சரியாக, ஒழுங்காக செய்யாமைக்குக் காரணம் அவனது அறிவை  சரியாக பயன்படுத்தாததுதான். சிறுவன் பணியை ஒழுங்காக செய்யாதற்கு பெரியவர்கள், ‘அவனுக்கு அறிவு இல்லை’ என்கின்றனர். ஆகவே இங்கே நாம் கவனிக்க வேண்டியது, எந்த ஒரு இயக்கமும் ஒழுங்காக செயல்படுவதற்கு காரணமாக இருப்பது அறிவே. ஆகவே ஒழுங்கு படுத்தும் (order of function) அறிவாற்றலை ஒழுங்காற்றல்  என்கிறோம்.

       அறிவு ஒழுங்காற்றலாய் இருந்து செயல்படுகின்ற உண்மையினை – மகரிஷி அவர்கள் உணர்ந்த அனுபவத்தை அவர் கூறும் கவியின்  சில வரிகளை அறிந்து பேரின்பமடைவோம்.

                 பேரின்ப ஊற்று

            “உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று

                உணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க

                                     உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும;

    உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”

                                                                            …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    உயிரினங்களில் ‘உணர்வதாகவும், சிந்திப்பதாகவும் உள்ளது மட்டுமே அறிவு’ என்று  பல நாட்களாக, அறிந்து வைத்திருந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  மேலும் தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க உண்மை விளங்கியதாகக் கூறுகிறார்.  அதாவது, அறிவின் பயணத்தில் (journey of Consciousness), உயிரினங்களில் உணர்ச்சியாக செயல்படுவதற்கு  முன்னர் உயிரற்ற சடப்பொருட்களில் (விண்ணில்) அறிவு ஒழுங்காற்றலாக விளங்கியது எனக்கூறுகிறார்.  அறிவு, தன் பயணத்தில் உயிர்களிடம்  உணர்ச்சியாக வருவதற்கு முன்னர் உயிரற்ற சடப்பொருள்களிலும்  இருக்கின்றது.  அப்போது அறிவு ஒழுங்காற்றலாய்த் திகழ்கின்றது.

       உயிரற்ற சடப்பொருள்களில்  அறிவு ஒழுங்காற்றலாய் பணியாற்றுகின்றது.    ‘ஒழுங்காற்றல் பணி’ என்றால் என்ன?  அறிவாகிய ஆற்றல்,

       புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தொகுப்புக்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்ற  அணுவானது, தொடர்ந்து தனது அமைப்புடன்(structure) இருக்கவும், அதாவது ‘அணு’ என்கின்ற நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருக்கவும்,

       மேலும் அணுக்களின் தொகுப்பால் ஆன (association of atoms – mass) உயிரற்ற சடப்பொருட்கள் ஒழுங்கோடு,  அந்த அணுத்தொகுப்போடு, தொடர்ந்து இயங்கக் காரணமாகவும் இருக்கின்றது.

       அணு அமைப்பை எடுத்துக் கொண்டால்கூட, அமைப்பு கலையாமல் அது ஒழுங்கோடு இருப்பதற்குக் காரணம் அறிவுதான். எனவே அறிவு சடப்பொருட்களில்  ஒழுங்காற்றலாக செயல்படுகின்றது.  ஒழுங்கிற்கு காரணமாக இருக்கும் ஆற்றலை ஒழுங்காற்றல் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது?

       மலரும் மனிதனும் உரையாடும்,மறைபொருளை விளக்குகின்ற மகரிஷி அவர்களின் கவியில், ஆன்மாவை வருடிக் கொடுக்கின்ற  ஒருசில வரிகள், நம்முடைய இன்றைய சிந்தனைக்கு உதவுவதாக உள்ளன. அவற்றைக் கவனிப்போம்.

     FFC-57-malare malare-படம்

     

    ‘பண்பாய்க்கூடி’  ‘ஒவ்வோர் அளவில் கூட‘ ஆகிய சொற்றொடர்களை நினைந்து நினைந்து மகிழவும்.  பண்பாய்க்கூடி என்பதன் பொருள் என்ன?  ‘பண்பு’ என்றால் தன்மை-இயல்பு-ஒழுங்கு என்றும்,  ‘கூடி’ என்றால் சேர்ந்து என்றும் பொருள். இந்த பொருளை நினைவில் கொண்டு, ‘பண்பாய்க் கூடி ஒரு கூத்து’ என்கின்ற அந்த நிகழ்வினை மனதில் (contemplation) நினைத்துப் பார்ப்போம்.

      முதலில் துகள்கள் தோன்றின.  கூட்டமாக இருந்த துகள்கள் விண்ணாக மாறியது எவ்வாறு? துகள்கள், பிறகு, விண்கள் மற்றும் இதர பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண்ணாக மாறியது ஏதோ தற்செயலான, யதேச்சையான, ஒழுங்குமுறைப்படி இல்லாமல், ஒழுங்கற்ற நிலையில் ஏற்பட்டதன்று  (not in haphazard manner—but in a disciplined manner – in a systematic manner).

        “கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்” என்கின்ற சொற்றொடரைக் கவனிக்கவும்.Then who is the Director to conduct the Divine Drama? மனக்கண்முன் கொண்டு வந்து மகிழுங்கள்.  (Now imagine and go to that situation and visualise the then happening and love Him – God.  Admire Him and adore Him with your own words — the real way to love Formless God and shedding one’s ego totally.)  யார் இந்த நாடகத்தை நடத்தியது.  யாருடைய இயக்கத்தில் நாடகம் நடந்தேறியது? நடந்தேறிக் கொண்டிருக்கின்றது? உங்களையே தீவிரமாகக் கேளுங்கள், உங்களுக்கே  விடை கிடைக்கும்.

        பேரியக்க மண்டலம் முழுவதும் நீக்கமற நிறைந்து எல்லா இயக்கங்களையும் திருவிளையாடலாக நிகழ்த்திக்  கொண்டிருக்கும் வியத்தகு மறைபொருளை நினைக்கும்போது  பேரின்பம் ஏற்படுவதாகக் கூறும் பாடலை இங்கே நினைவு கூர்வோம்.

                    FFC-57-inba ootru-படம்

      அறிவின் பயணத்தில்(Journey of Consciousness), அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல்  முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மை இயற்கைக்கு உண்டு என்பது  பற்றியும், இதனைக்குறிக்கும்  ‘entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான பொருளை வரும்  புதனன்று(18-02-2015-) அறிவிற்கு விருந்தில்(அறியவிருக்கிறோம்.  தொடரும்…