வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
இறை அருள் பெற…….5 / 5
FFC – 33
04-12-2014
எண்ணம் இயற்கையின் / இறையின் சிகரமாக இருப்பதால் பரிணாமக் கசடுகளை நீக்கிய நிலையில், ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட எண்ணமும், அதற்கேற்ற செயல்களும், இறை அருளைப் பெற்றுத் தரும் என்று நேற்று பார்த்தோம். இறை அருள் காப்பையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் என்றும் பார்த்தோம். இதன் பயனை அனுபவித்து இன்புறுவீர்களாக என பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் உறுதி அளிப்பதையும் அறிந்து மகிழ்வுற்றோம். இன்றும் அச்சிந்தனையைத் தொடர்வோம்.
இறையருள் ஐந்தறிவு சீவன்களுக்குத் தேவையில்லை. ஐந்தறிவு சீவன்களுக்கு இறையருளை வேண்டவும் தெரியாது. ஆறாம் அறிவுள்ள மனிதனுக்குத்தான் இறையருள் வேண்டியிருக்கின்றது. ஏனெனில் ஐந்தறிவு வரை இயற்கையே / இறையே அவ்வுயிர்களில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றது. ஐந்தறிவு சீவன்கள் தோன்றியதிலிருந்து இன்று வரை, அதாவது பல லட்சம் ஆண்டுகளாக ஒரே மாதிரியாக, இயற்கை வைத்துள்ள வழியில் வாழ்ந்து வருகின்றன.
ஆனால் மனிதன் வாழ்கின்ற நிலை அவ்வாறு இல்லை. இயற்கை வைத்துள்ள வழியில் மனிதன் வாழ்வதில்லை. ஆதி மனிதனிலிருந்து இன்று வரை வாழும் நெறிகள் மாறியுள்ளன. பல நெறிகளில் வாழ்கிறான். அறநெறி மனித குலத்திற்கு மிக மிக அவசியம். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு மனிதனுக்கு காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகள் அவசியமாகின்றன. இவையெல்லாம் மனிதனின் அறச்செயல்களுக்கு இயற்கை / இறை விளைவாகக் கொடுக்கும் அருட்பரிசுகளேயாகும்.
இறையே மனித அறிவாக இருந்தாலும் அதனுடன் பரிணாமக் கசடான விலங்கினப் பண்பும் சேர்ந்து விட்டதால் அது நீங்காத வரையில் மனிதன் என்கின்ற உருவினேலே விலங்காகத்தான் உலவி வருகிறான். இதனை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவா்களின் கவியின் மூலம் அறியலாம்.
முழு மனிதன்(03-01-1959)
மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,
மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு,
மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்
மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
விலங்கினப் பண்பை நீக்கி மனிதனாகி, ஐயப்படாது அகத்தை உணர்ந்து, தெய்வமாவதற்குத்தான் ஆன்மா பிறவி எடுக்கின்றது. அது வரை மனிதன் குறையுடைய மனிதனாகத்தான் இருக்கின்றான்.
குறையுடைய மனிதனிடமும் இறை இருந்தாலும், அவனிடம் உள்ள குறைகள், தெய்வீகத்தை மலரச்செய்யாது, அன்பையும், கருணையையும் வெளிப்படுத்த விடாது.
ஆகவே தெய்வீகத்தையே வெளிப்படுத்தாத குறையுடைய மனிதன் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்?
1) குறையுடைய மனிதன் எவ்வாறு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறவுணர்வில் வாழ முடியும்?
2) ஆகவே அறவுணா்வில் வாழாதவனிடம் புண்ணியமான ஒழுக்கம் இருக்காது. கடமை இருக்காது. கடமைக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதால், கடமையைச் செய்யாதவனிடம் எவ்வாறு இறைத் தொடர்பு இருக்கும்?
”கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்” என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய இயற்கை உண்மை இருக்கும் போது, இறைத் தொடர்பை மறந்தவனுக்கு எவ்வாறு இறையருள் கிட்டும்?
3) அடுத்ததாக ஈகை இருக்காது, ஈகையில்லாதவனிடம் அடுத்த உயிர்களிடம் காட்ட வேண்டிய இரக்கம் இருக்காது.
”ஈதல் இசைபட வாழ்தல்; அது அல்லது
ஊதியமில்லை உயிர்க்கு” ….. என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழிந்திருக்கும் போது ஈகை இல்லாதவனுக்கு எவ்வாறு இறையருள் கிட்டும்.?
இந்த மிகவும் கவலைக்கிடமான மனித நிலையினைக் கருத்தில் கொண்டு மனித சமுதாயத்தை மீட்டெடுக்கத்தான் இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்ற நிகழ்ச்சியில் உரிய நேரத்தில் 14-08-1911 அன்று, இதுவரை மனம் வாக்கினில் தட்டாது இருந்து வந்த பிரம்மத்தை தெளிவாக்கிய இக்காலப் பிரம்ம ரிஷியை குழந்தையாக மனித சமுதாயத்திற்கு அருட்பரிசாகக் கொடுத்தது.
பிறகு இயற்கை அன்னை, மகானாக்கும் நான்கு உன்னதமான வினாக்களை, அத்தெய்வீகச் சிறுவனிடம் பன்னிரண்டு வயதினிலேயே எழுப்பியது. அதனைத் தொடர்ந்து இளைஞரான போது. திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கர் ஆகியவர்களை அந்த இளைஞருக்கு மானசீகக் குருமார்களாக்கியது. மேலும் பேரறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து மகான்களின் அறிவாற்றலையும் உறுதுணையாக்கியது.
கடவுள் நம்பிக்கை இருந்தாலும், அப்படியே ஏற்றுக் கொண்டு இறைவழிபாடு மட்டுமே செய்து விடாமல் கடவுள் என்பவர் யார், மற்றும் அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவினை எழுப்பி அதற்கானத் தெளிவான விடைகளைத் தந்தது. பிறகு அம்மாமனிதரை உலக நலத்தொண்டராக்கியது. உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவிக் கொடுத்தது; இவ்வுலகத்தை உய்விக்க அருட்தந்தையாக்கியது. உலக அமைதிக்கான விதையினை ஊன்றிவிட்டது. அந்த வித்து முளைத்து வளர்ந்து “மா மரமாகி“ அமைதிக் கனிகளைக் கொடுப்பதற்கு அம்மரத்திற்கு உரம், நீர் ஆகியவைகளை அளிப்பதற்கு மனவளக்கலைஞர்களை உருவாக்கி வருகின்றது.
அவர் உயர்ந்த நிலைக்கு உலக மக்கள் அனைவரையும் உயர்த்த மனவளக்கலையை அருட்கொடையாகக் கொடுத்துள்ளது. மனவளக் கலைஞா்கள் இறையருளைப் பெற்று, அவா்களையே அருளைக் கொண்ட நிதியுடையவர்களாக்கி, அருள்நிதியர்களாக்கி மகிழ்கின்றது இயற்கை. இறையருளைப் பெறுவதற்கான வழிகளை மனவளக்கலையில் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வளங்களான உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஆகியவற்றை அளிக்கும் பயிற்சியினை அளித்து, அதனை இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பாடமாக்கி கொண்டு சென்றுள்ளது இயற்கை.
சுருங்கச் சொல்லின், பல பிறவிகளாகக் கருமையத் தொடர்புகளாக விலங்கினப் பண்பைக் கொண்ட மனித குலத்தை உய்விக்க வல்ல மனவளக்கலை, மனவிரிவு பெறுதல், இயற்கை விதி அறிதல், எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்று வளர் நிலைகளைத் தந்து நுண்மாண நுழை புலன், ஏற்புத் திறன், தக அமைதல், பெருந்தன்மை, ஆக்கத்திறன் ஆகிய ஐந்து பேறுகளை மனவளக்கலைஞர்களுக்கு இயற்கை அளித்து வருகின்றது என்பது இயற்கையின் / இறையின் அருளால் தானே நடக்கின்றது?
இசைவு, நிறைவு, மகிழ்வு, மெய்யறிவு, அமைதி ஆகிய ஐம்பெரும் பயன்களையும் அருளுகின்றதே. இது இயற்கையின் அல்லது இறையின் கொடைதானே. இதுதானே இயற்கையின் / இறையின் அருள்? நாம் இந்த விருந்தினை அருந்தி முடிக்கும் நிலைக்கு வந்து விட்டோம். பிரம்மத்தை காண்பித்த பிரம்ம ரிஷி அவர்கள் வாயிலாக இந்த மனித குலத்திற்கு அளித்துள்ள பாடலுடன் இன்றைய விருந்தினை முடித்துக் கொள்வோம்.
வினைப்பதிவுகள் தூய்மை
பல ஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்
பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்.
நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்
நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை
நில உலக மனிதருக்கு அளித்துளது இயல்பென
நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்
பலனடைய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்
பாதையிலே விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி. ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ஒரறிவிலிருந்து ஐந்தறிவு விலங்கினமாக வந்த பிறகுதான் இறை மனிதனிடம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது. அவ்வாறு வரும்போது இரண்டறிவு உயிரினங்களிருந்து ஐயறிவு உயிரினங்கள் வரை, கருமையத் தொடர்பாக வந்த விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்துண்ணல் கசடாக சேர்ந்து விட்டது மனித அறிவுடன். ஆதி மனிதனின் opening balance விலங்கினப் பண்புதான். மனிதனிடம் உள்ள பின்னப்பட்ட பேரறிவு தன்னை அறிய வந்த நோக்கத்தை மறந்து விட்டது.
பரிணாமக் கசடுகளை நீக்காமல் இருந்ததால், அது வேறு பல தீய பண்புகளை ஏற்படுத்தி விட்டது. ஆகவே மனித அறிவிடம் தீய பண்புகளான தன்முனைப்பு . தான், தனது என்கின்ற எண்ணக் கோடுகள். பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் ஆகியவை வந்து சேர்ந்துவிட்டன. பஞ்சமகா பாதகங்களான பொய், களவு, கொலை, சூது, கற்பழிப்பு ஆகியவை உருவாகிவிட்டன. இந்த நிலையுடைய மனிதன் இறையிடமிருந்து எவ்வாறு அருளை எதிர் பார்க்க முடியும்?
பிறவியின் நோக்கம் மறந்ததால், மகான்களைத் தவிர மற்றவர்கள், அதற்கான முயற்சியை எடுக்காமையால் மனித மனங்கள் நிறைவு பெறமுடியவில்லை. மனித மனங்கள் நிறைவு பெறாததால், மீண்டும் பொருள், புகழ், செல்வாக்கு. புலனின்பம் ஆகியவற்றில் புகுந்து அழிந்து மனதை புண்ணாகிக் கொள்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் அருட்தந்தை அவர்கள். இந்தச் சூழலில் இயற்கை/இறை அருளியதுதான் மனித மாண்பில் ஏற்றம் தரும் மனவளக்கலை. மனவளக்கலையைத் தவிர வேறு என்ன அருள் வேண்டும் இயற்கையிடமிருந்தோ அல்லது இறையிடமிருந்தோ மனிதனுக்கு?
வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
வாழ்க அருள் நிதியர்கள். வளா்க அருள்நிதியர்கள்.
வாழ்க உலக அமைதி. வருக விரைவில் உலக அமைதி.
இறை அருள் எல்லா மனித உள்ளங்களிலும் மலரட்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
முற்றும்
நாளைச் சந்திப்போம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.