C248-எல்லாப் புகழும் இறைக்கே! – 8/?

 வாழ்க மனித அறிவு                                          வளர்க மனித அறிவு

FFC – C248

30-11-2016 -புதன்

மீண்டும் காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

FFC-144-பொருள் புகழ் செல்வாக்கு

 

        காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடல் எட்டு வரிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் காந்த தத்துவ நூலில் மகரிஷி அவர்கள் அதற்காக அளித்துள்ள விளக்கவுரை 86 வரிகளில் அமைந்துள்ளது. இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்துகொள்வோம். இருப்பினும் அன்பர்கள் மீண்டும் மகரிஷி அவர்களின் விரிவுரையை வாசித்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     மனிதப் பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து, விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறநெறியை பழகிக் கொள்வதில்லை. ஆகவே பல பிறவிகளாக, கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவாகிய ‘பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை’ சஞ்சித கா்மாவாக வந்துவிட்டது. அது பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம் (செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகிவிட்டது. ஆசை பெருகுவதால்,

1)   எவ்வளவு இருந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.

2)   அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு விடுகின்றது. உள்ளமும் கெடுகின்றது. அதற்கும் மேலாக மனித உறவில் இனிமை கெடுகின்றது.

3)   தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடிவதில்லை. நிறுத்தவும் முடிவதில்லை. தேக்கம் ஏற்படுகின்றது.

4)   விளைவு, மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்பவர்களுக்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார் இப்பாடலின் விரிவுரையில்.

   பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகியவைகளில் புகுந்தழுந்தி மனித மனத்தைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் இருள் வாழ்க்கையில் வாழ்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே புகுந்து, அழுந்தி, புண்ணாகுதல், மனித மனம் ஆகிய நான்கு சொற்களைக் கவனிக்க வேண்டும்.

1)   புகுந்து — தடையில்லாமல், யோசனை இல்லாமல், உள்ளே நுழைதல்

 

2)   அழுந்தி – உள்ளிறங்குதல், புதைதல், ஒட்டிக் கொள்ளுதல், நிலை கொள்ளுதல்.

எனவே புகுந்து, அழுந்தி என்கின்ற இருசொற்களின் பொருளை உற்று நோக்கினால், ‘புகுந்தழுந்தி” என்று மகரிஷி அவர்கள் கூறும் உட்பொருளை புரிந்து கொள்ள முடியும்.

முன் யோசனை இல்லாததால்,

நுண்மாண் நுழைபுலனறிவு  இல்லாது – விளைவறியாது,

பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புதைந்து கொள்ளுதலை,

புதைகுழியில் விழுந்து தானாகவே எழுந்து வரமுடியாத நிலையோடு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது.

புதைகுழியில் விழுந்தவர் வேறொருவரின் உதவியின்றி எழுந்து வர முடியாது. அதுபோல் இருளிலுள்ள இந்த சமுதாயம் மருள் என்கின்ற மயக்க நிலையில் ஏற்ற ஆசை, அதனால் வருகின்ற பழிச்செயல்களிலிருந்து மீள்வதற்கு, புதைகுழியில் விழுந்தவருக்கு உதவும் வேறொருவர் போல், மகரிஷி அவர்கள் விளக்கம் தந்து உதவுகிறார்.

3)   புண்ணாகுதல் –

     உடல் உறுப்புகளில் புண் உண்டாவதை அறிவோம். உறுப்புகளில் சதை, இரத்தம் இருக்கும். அங்கே புண் உண்டாகும். புண் சரியாகவில்லையென்றால் சீழ் வரும். ஆனால் அரூபமாக இருக்கின்ற மனதில் எவ்வாறு புண் வரும்? புண்ணாகும் என்று கூறிச் சிந்திக்கச் செய்கிறார்   இங்கே மகரிஷி.

 

4)   மனித மனம்

‘மனித மனம்’ என்று கூறியிருப்பதனை கவனிக்க வேண்டும். மனம் என்றே சொல்லியிருக்கலாம்.      ஆனால் மனித மனம் என்கிறார். மனம் இதமாக இருப்பவன் மனிதன் (மனம்+இதம்=மனிதன்). மனிதனுக்கு மனம் இதமாக இருக்கவேண்டும். மனம் ‘புண்ணாகி’ என்பது இதமாக இருக்க வேண்டிய மனம், இதமிழந்து இருப்பதனைக் குறிப்பிடுகின்றது.

   ‘இதம்’ என்பது சுகத்தைக் குறிக்கின்றது? எப்போது சுகம் கிடைக்கும் மனதிற்கு?

     மனம் இசைவாக இருக்கும்போது சுகம் கிடைக்கும். இசைவு என்பது ஒத்துப்போகுதல். அதாவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமல் இருப்பதும், முடிந்தால் நன்மை செய்வதும்தான் இசைவும், ஒத்துப் போகுதலுமாகும். இதுவே இயற்கையின் நோ்மறை(positiveness) யாகும். ஆகவே மனதிற்கு சுகமளிக்கும்.

     அளவாகவும், அனுபவிக்கத் தகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும் மனம், இதமாக இருக்கும். மனம் எந்த ஒன்றையும் அனுபவித்தாலும், இன்பவியல் சூத்திரமான(formula) அளவையும், முறையையும் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் இன்பமே துன்பமாகும் விந்தையினை சந்திக்க வேண்டிவரும்.

   ஆகவே உருவமில்லாத மனம் புண்ணாகுதல் என்பது, இசைவில்லாமலும், அளவையும்,    முறையையும் முறையே மீறுதலும், மாற்றுதலாகும்.

      பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் ஆகிய நான்கில் புகுந்து அழுந்தி மனித மனம் புண்ணாகி, இருளடைந்துவிட்ட வாழ்க்கையில் ஒளியைக்கொண்டு வர தனது விளக்கத்தினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். புகுந்து அழுந்தி அனுபவிக்கும்போது இன்பவியல் (இன்பம்+இயல்) மறக்கப்படுவதால், இயற்கையின் இனிமை கெட்டு வாழ்வில் துன்பங்களே விளைகின்றன.

   இன்பவியல் என்பது என்ன? இன்பதுன்ப நிகழ்ச்சியினை வேதாத்திரியம் அறிவியல் அடிப்படையில் விளக்குவதால் இன்பதுன்ப நிகழ்ச்சியினை இயல் என்கிறோம்.

மனிதனின் உறுப்புகள் இயங்குவதனை மருத்துவ இயலாகக் கொள்கின்ற போது,

உறுப்புகள் இயங்குவதே இன்பம் அனுபவிப்பதற்கே என்றிருக்கும் போது,

அந்த இன்பம் என்பது என்ன என்று இதுவரை மருத்துவ விஞ்ஞானம் கூறாத நிலையில்

வேதாத்திரியம் இன்ப துன்ப நிகழ்ச்சியினை அறிவுபூர்வமாகக் கூறுவதால்

இன்பதுன்ப நிகழ்ச்சியினை அறிவியலாகக் கருத வேண்டியுள்ளது

வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களால்.

இன்பவியலின் சூத்திரத்தை மட்டும் இங்கே நினைவு கொள்வோம். இன்பவியலை முழுவதுமாக   வேறொரு விருந்தில் விரிவாக அறிவோம். இன்பவியலின் சூத்திரம் என்ன?

ஒன்று அளவை (limit) மீறக்கூடாது; மற்றொன்று முறையை (method) மாற்றக்கூடாது என்பதாகும்.

துன்பத்திற்குக் காரணமான அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.

   இன்பம் அனுபவிப்பதில், இன்பவியல் முன்னரே தெரிந்திருந்தாலும் பழக்கத்தால் அலட்சியப்படுத்தினாலும், தெரியாதிருந்தால் அது அறியாமையாகி, இரண்டுமே மனிதஅறிவின் குறைபாடுகளாக இருப்பதால் இயற்கையின் இனிமை கெடுகின்றது. விளைவு – வாழ்வில் துன்பங்களாக விளைகின்றது.

அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை அறிந்து கொள்வோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments