இன்றைய விருந்து (ஞாயிறு,புதன்)

 • ஆன்ம அலங்காரம் – 3/3

  வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

  lotus

   FFC. C286.

  04-04-2018–புதன்

  3. மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம்

   

         ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும். அந்த உள்ளத்தின் அழுகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

  ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குச் சில விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரம் மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரம் என்பதிலோ ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலைக்கப்படாமல், மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகு கூடிக் கொண்டே இருக்கும். இன்முகமும் எளிமையும் செல்வமாகிவிடும்.

  ஆன்ம அலங்காரம் என்பது

  • ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக,
  • பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான
  • பிராயச்சித்தம்,
  • மேல்பதிவு செய்தல்,
  • பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம்
  • ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்தலாகும்.

  ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது.அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்?

  மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஏதேனும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப்படுகின்றது.
  ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாகத் தெரிவிப்பதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், இயல்பூக்கம் போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

  இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.
  இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறுகிறார்.

  “மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
  ஆகுல நீர பிற.”

  பொருள்: மனிதன், மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அறன் என்பது அவ்வளவுதான் என்கிறார். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை (vain show, pomp-outward show) உடையவை என்கிறார் திருவள்ளுவர். ஆகவே மனத்தூய்மையால் ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.

  மகரிஷி அவர்கள் உடை ஒழுக்கம் பற்றி கூறுவதைக் கவனிப்போம். உடை அணிவதிலும் ஒழுக்கம் அவசியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

  FFC-107-ஆன்ம அலஙகாரம்
  எனவே தேகாபிமானத்தை(body consciousness) நீக்கி ஆன்மாபிமானம் (soul consciousness) ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியில், உடல் அலங்காரத்தைத் தவிர்த்தல் நலம் பயக்கும். உடல் அலங்காரத்தைவிட ஆன்ம அலங்காரத்திற்கு முக்கியம் அளிக்க வேண்டும். ஆன்ம அலங்காரத்தில் அக்கறை வந்துவிட்டால் உடல் அலங்காரம் எதற்கு என விளங்கிவிடும். உடல் அலங்காரம் அவசியமில்லை என்பது உடலைப் புறக்கணித்தலாகாது. உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மிகையான உடல்  அலங்காரம் உடல் சுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இன்முகமும் எளிமையும்தான் ஆன்மீகத்தின் உச்ச நிலையும் செல்வமுமாகும். இன்முகம் மற்றும் எளிமை பற்றியும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். இதனையெல்லாம் எதற்காக இயற்கை/இறை கூறுவதற்கு ஏற்பாடு(மகான்களின் வாயிலாக கவிகள் மற்றும் அருளுரைகள்) செய்துள்ளது? வருங்கால சமுதாயம் அதனை மதித்து நடக்கவே இயற்கை/இறை மகான்களின் வாயிலாக அருளி அறிவுறுத்துகின்றது.

  FFC-107- ஆன்ம அலங்காரம்-துறவு

  வாழ்க வளமுடன்!

 • ஆன்ம அலங்காரம்

  வாழ்க மனித அறிவு!                                                   வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC. C285

  01-04-2018–ஞாயிறு

  2. ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கின்றது

  swamiji_in_coat

          ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒருவரைப் பற்றி எடுத்துரைக்கும்போது ‘அவர் நல்ல மனிதர்’ என்று சொல்வோம். இன்னும் அவரது நற்குணங்களை உண்மையாகப் போற்றிச் சொல்வதற்கு ‘அவர் ஒரு நல்ல ஆத்மா/ஆன்மா’ என்பது வழக்கம். இக்கூற்றில் முதலாவதாக “அவர் ஆன்மா” என்கின்ற ஒன்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அவரை நல்ல மனிதர் என்பதனை எதை வைத்துச் சொல்கிறோம்? அவரது நற்குணங்கள் மற்றும் பண்புகளை வைத்து அவரை நல்ல மனிதர் என்கிறோம். அவரது நற்குணங்கள் அவரது ஆன்மாவில் பதிந்து அவரது ஆன்மாவை அலங்கரித்திருக்கின்றது. அந்த ஆன்ம அலங்காரத்தால்தான், அழகின் இலக்கணமான, மனிதனுக்கேற்ற குணங்கள், மனிதனுக்குத் தகுதியானத் தன்மை, மற்றும் ஒழுக்க முறை ஆகியவைகள் அவரிடமிருந்து வெளிப்படுவதால் அவருடைய ஆன்மா அழகுறுகின்றது. எனவேதான் அந்த நல்லவரை நல்ல ஆத்மா/ஆன்மா என்கிறோம்.

        ஆத்மா/ஆன்மா என்பது என்ன? இதற்கு முதலில் உயிர் என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். உயிரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் உயிரை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறைஉணர் அல்லது ஆன்ம உணர்வு ஆன்மீகத்தில் உயிர் மேல் மனம் வைத்து அகத்தவ வழிபாட்டை மேற்கொள்பவா்கள் உயிரை உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவை அறியமுடியாத ஆன்மீகம் ஆன்மீகமாகுமா? ஆன்மாவை அறியமுடியாத ஆன்மீகம் இருக்கமுடியாது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீகத்தின் நோக்கம், மனிதன் உயிரறிவைப் பெறுதலேயாகும். அதாவது ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுதலாகும். உயிரினுடைய மூலம், அதன்நிலை, உயிரின் முடிவு, அதன் முக்கியத்துவம் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது உயிரறிவாகும். ஆன்மாவிற்கும் உயிருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்றால் உள்ளது என்பதுதான் பதில்.

       உயிர் என்றாலே கண்களுக்குத் தெரியாத ஒன்று. கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய பொருள்தான் உயிர். உயிர் அணுதரிசினியாலும் (microscope) பார்க்க முடியாது. உயிராற்றல் என்று கூறுகிறோமே, அதனை எவ்வாறு ஆற்றல் என்று சொல்ல முடியும்? உடல் ஒர் இயந்திரம். பொதுவாக எந்த இயந்திரமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையிருப்பது போல் உடலாகிய இயந்திரம் இயங்குவதற்கும் ஆற்றல் தேவை. அந்த காந்த ஆற்றலை கொடுப்பது உயிர்தான் எவ்வாறு உயிர் காந்த ஆற்றலைத் தருகின்றது என்பதனை பிரிதொரு சமயத்தில் பார்ப்போம். அந்த காந்த ஆற்றல் சீவனுடைய உடலில் இருப்பதால் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவ காந்த ஆற்றல் தான் உடலியக்கத்திற்கு ஆற்றலாகச் செலவழிக்கப்படுகின்றது. இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு இதயம் மையமாக இருப்பது போன்று, சீவகாந்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். அங்கு சீவ காந்தம் அடர்த்தியாக இருக்கும். அந்த அடர்த்தி பெற்ற சீவகாந்தம் தான் ஆன்மா என்பது. இதன் சிறப்பைப் பார்ப்போம்.

       இப்பிரபஞ்சத்தில் அலை இயக்கம் நடந்து கொண்டே இருக்கின்றது. இயற்கையின் திறன்களில் பதிதல்(recording) என்னும் நிகழ்வு மிகவும் சிறப்பானது. இந்த பதிதல் என்கிற திறன் மட்டும் இல்லாதிருந்தால் உயரினப் பரிணாமமே ஏற்பட்டிருக்காது. ஒன்றிலிருந்து தரம் மாற்றம் ஏற்படுவதே இந்த பதிதல் நிகழ்ச்சியால்தான். பதிதலுக்கு ஒர் ஊடகம்(medium) தேவை. அந்த ஊடகம் தான் காந்தம். இயற்கையாக நடக்கும் பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி அல்லது மனிதனால் செயற்கையாக நடக்கின்ற பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி காந்தம் தான் ஊடகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒலி-ஒளி நாடாவில்(video tape) பிளாஸ்டிக் நாடாவில் காந்தப் பூச்சு (magnetic coating) தான் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் பதிதல் இல்லாமல் இல்லை.

       ஆகவே இயற்கையில், மனிதனில் நடக்கும் எண்ணம், சொல். செயல் ஆகிய முத்தொழிலையும் பதிவு செய்யும் ஒரு மறை காந்த குறுந்தகடுதான் இந்த ஆன்மா. அது என்ன மறை காந்த குறுந்ததகடு? அது கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ளதால் அதற்கு மறை என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. மனிதன் பதிவு செய்யும் குறுந்தகட்டில் உள்ளதை அவன் விரும்பும் போது அதனை அதற்குரிய சாதனத்தின்(deck) வழியாக பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

  ஆன்மாவாகிய மறை குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாகவும் வருகின்றன. அதே சமயத்தில் செயல்விளைவு விஞ்ஞானத்தின் படி ஆன்ம — குறுந்தகட்டில் உள்ள பதிவுகளின் படி, எங்கும் பேரறிவு இருப்பதால் அவ்வப்போது விளைவுகளையும் கொடுக்கும். பதிவுகளின் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம். அல்லது தீயதாகவும் இருக்கலாம். இந்த ஆன்ம – குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் தான் தன்னுடைய வம்சாவளியின் ஆன்ம – குறுந்தகட்டிலும் பதிகின்றது. ஆகவே நல்வாழ்வு வாழ்வதற்கு ஆன்மதூய்மை அவசியமாகின்றது. ஆகவேதான் வம்சாவளியின் ஆன்மா பெற்றோர்களின் செராக்ஸ் நகல் எனப்படுகின்றது. அதாவது குழந்தைகள் பெற்றோர்களின் செராக்ஸ் நகல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       இந்த ஆன்மாவின் விளக்கத்தை வைத்து ஓரளவிற்கு ஆன்மா அலங்காரம் என்பது என்ன என்று யூகிக்க முடிகின்றதல்லவா? ஆன்ம தூய்மை என்கின்ற சொற்றொடர் இருக்கையில் ஏன் ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரால் அழைக்க வேண்டும்?

       தூய்மை என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அலங்காரம் என்கின்ற சொல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றது. இது ஒரு catchy phrase. இந்த சொற்றொடர் ஆரம்பத்திலேயே, அதாவது கேட்பதற்கே இதமாக உள்ளது. அதாவது அச் சொற்றொடரே அலங்காரச் சொற்றொடராக உள்ளது.

       ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கின்றது என்கிறோம். மனிதனிடமிருந்து மனிதம் வெளிப்பட வேண்டும். மனிதம் என்பது அன்பையும், கருணையையும் வெளிப்படுத்துதலே ஆகும். அன்பும் கருணையும் வெளிப்பட வேண்டுமெனில் ஒழுக்கத்தால் தான் முடியும். எவ்வாறு? இதுவரை ஒழுக்கம் என்பதனை சரியாக வார்த்தைகளால் வரையறுக்கப்படாத நிலையில், மகரிஷி அவர்கள் கூறியுள்ள ஒழுக்கத்திற்கான வரையறையைக் கவனிக்க வேண்டும்.

       ஒழுக்கம் என்பது தனக்கோ, பிறருக்கோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ, உடலுக்கோ, உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காத எண்ணமும், செயலும்தான் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே இத்தகைய ஒழுக்கம் என்பது அன்பும், கருணையின் வெளிப்பாடேயாகும். மனிதத்தை வெளிப்படுத்த வேண்டிய மனிதன், தனது கருமையத்தை ஒழுக்கத்தால் அன்றி வேறு எவ்வாறு அலங்கரிக்க முடியும்? ஆகவே தான் ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கும் என்கிறோம். அடுத்த விருந்தில் 04-04-2018—புதனன்று மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம் பற்றி சிந்திப்போம்.

 • ஆன்ம அலங்காரம்

  வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC. C.284

  28-03-2018—புதன்

  1. அலங்காரம் எதற்காக?

  இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள்   ‘ஆன்ம அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?
  ‘அலங்கரி’ என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகு என்ற சொல்லுக்கு,

  • பொருத்தமான குணம்,
  • தகுதியான தன்மை.
  • ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

  அலங்காரத்தில் சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், நகை அலங்காரம் இவ்வாறாக பல வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால், மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
  • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
  • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
  • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
  • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும், தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
  அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

  அசலில்(original) அழகில்லை என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

  சுருங்கச் சொல்வதென்றால்,
  மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
  • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
  • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது.
  • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
  • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
  • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது, அறியாமைதானே!

  இதற்கெல்லாம் காரணம்,
  1. ஆன்மா கண்களுக்குத் தெரியாததே.
  2. ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.
  3. தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாமை.

  ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) பெரும்பாலோர் அலங்காரம் செய்து கொள்வதில்லை.
  அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடையும் மனிதன், அதுபோலவே
  தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்திலும்,
  அதே அரூபமான தெய்வம்,
  மனதின் மறுமுனையாகவும், கருமையாகவும் நீதி வழுவாவமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்,
  கருமையத்தைத் தூய்மை செய்து,
  ஆன்மாவை அலங்காரம் செய்து பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும்.

  கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது? மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக் குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

  அதனால்தான் திருவள்ளுவர்,

  “ ஐயப் படா அது அகத்து உணர்வானைத்
  தெய்வத்தோடு ஒப்பக்கொளல்” . . . . .என்கிறார்

  பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும். இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற்சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

  அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது. அடுத்த விருந்தில் 01-04-2018—ஞாயிறு எது ஆன்மாவை அலங்கரிக்கின்றது என்பது பற்றி சிந்திப்போம்.

 • அறிவிப்பு-14-03-2018-புதன்

  வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

  அறிவிப்பு

  14-03-2018-புதன்

  அன்பர்களே!
  வாழ்க வளமுடன்!

  இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

  சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

  தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  வாழ்க வளமுடன்!

  வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

 • FFC-283-மனவளம் என்றால் என்ன?

  வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

  lotus

  மனவளம் என்றால் என்ன?

  FFC-283

  14-03-2018-புதன்.

  உ.ச.ஆ.14-03-33.

  வாழ்க வளமுடன்!

  வளம் என்பது என்ன என்று தெரியும். இருப்பினும் வளம் என்பதன் பொருளை நினைவுபடுத்திக் கொள்வோம்.

  வளம் என்றால்

  • நிறைவு,
  • செழுமை,
  • மேம்பட்ட நிலை,
  • வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ள தன்மை என்பதாகும்.

  வளம் என்கின்ற சொல்லுக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்களைக்கொள்ளமுடியும். இத்தகைய ‘வளம்’ என்கின்ற சொல் வேறு சொல்லுடன் சேரும் போது என்ன பொருள் வருகின்றது என அறிவோம். உதாரணத்திற்கு ‘வளம்’ என்கின்ற சொல் ‘மண்’ என்கின்ற சொல்லுடன் சேரும்போது என்ன பொருள் வரும்?

  அதாவது ‘மண்வளம்’ என்கின்ற சொல்லிற்கு என்ன பொருள்? பயிரிடப்படுகின்ற பயிருக்கு மண் உகந்ததாக இருந்து நல்ல விளைச்சலைக் கொடுத்தால், அம்மண் வளமாக இருக்கின்றது என்போம்.

  மண்வளமாக இருந்தால் அதில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். பயிருக்கு ஏற்றதாக உள்ளதா என விவசாயத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பயிருக்கு மண் ஏற்றதாக இல்லை என்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டு என்ன குறைபாடு உள்ளது என்று எடுத்துரைத்து பயிருக்கு ஏற்றவாறு மண்வளத்தை அதிகரிக்க என்ன உரம் இட வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றது விவசாயத்துறை. இல்லையெனில் பயிர் விளைச்சல் குறைவாகலாம். அல்லது பயிர் விளைச்சலில் குறைகள் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் இது சாத்தியமில்லை.

  வளம் என்றால் என்ன என்று பார்த்தோம். தலைப்பில் ‘மனவளம்’ என்றிருக்கின்றது. மனதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மனம் உருவமற்றது. ஆனால் இல்லை என்று கூறமுடியாது. மனம் என்பது என்ன என்று தெரிந்தால் தான்,

  • மனம் வளமாக உள்ளதா, இல்லையா,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் என்ன தீமை மனிதனுக்கு,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் மனதை எவ்வாறு வளப்படுத்துவது,
  • மனதை வளப்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்,
  • மனதை வளப்படுத்தியே ஆக வேண்டுமா,
  • மண்ணை பரிசோதித்து வளமில்லாது இருந்தால், அதற்கு ஏற்ற பரிந்துரைகள் விவசாயத்துறை வல்லுனர்கள் அளிப்பதுபோன்று
  • மனவளம் இல்லாமல் இருந்தால் அதனை யார் பரிசோதித்து பரிந்துரைகள் வழங்குவது போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காணமுடியும்.

  FFC-264-5-11-17-Maharishi takin claass

  மனம் என்பது பற்றி அறிவுப்பூர்வமாக திருவேதாத்திரியம் தெரிவிக்கின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் அருளியுள்ளார். ஒரு முறை ஆங்கிலத்தில் திருவான்மீயூரில் சிறப்பு பயிற்சி நடத்தும் போது மகரிஷி அவர்கள் கூறியதை நினைவிற்கொள்வோம். தன்முனைப்பின் அறிவியலை (Science of Ego) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்கள்,

  I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind” என்றார்.

  நம் குருநாதர் சொல்வது உண்மைதானே! அத்தகைய பெருமைக்குரியவரை நாம் குருநாதராக அடைந்தது நாம் செய்த பாக்கியமன்றோ?!. காரணம், துன்பங்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பிற்கான(Ego) அறிவியலைத் தந்து நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க தன்முனைப்பைக்களைய தக்க அறிவுரைகளும் பயிற்சிகளும் தந்துள்ளாரே மகரிஷி அவர்கள்.

  மனம் என்பது என்ன என்று மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

  • உயிரின் படர்க்கை நிலையே மனம்.
  • மனதின் மறுமுனை தெய்வம். (The other end of mind is God.)
  • மனம் என்பது காந்த அலை.

  மேலே கூறியுள்ளவை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  மற்றொரு அறிஞர் கூறுவதனைக் கவனிப்போம்.

  Untitled

  இக்கூற்றில் அறிஞரின்  ஆதங்கம் தெரிகின்றது. மனதைப் பற்றி புதிராக உள்ளது. இக்கூற்றிலிருந்து எது மனமாக உள்ளது என அறிய முடிகின்றதா? மனவளக்கலைஞர்களால் அறிய முடிகின்றது. அறிவதுமட்டுமல்லாமல் புதிரும் விடுவிக்ப்படுகின்றது. என்ன அறிய முடிகின்றது? மனவளக்கலைஞர்கள் மனதை பற்றி அறிந்தவர்கள் என்பதால் எது மனமாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. ஆகவே புதிரும் விடுவிக்கப்படுகின்றது.

  ‘I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind’ என்று நம்முடைய குருநாதர் கூறியதிலிருந்து அவரின் திறமையை, சிறப்பை அறிந்து மகிழ முடிகின்றது. அவரது மாணவர்களுக்கும் அது பொருந்துவதாக அமைகின்றதல்லவா?

  எவ்வாறு?

  ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பதுபோல் நாம் அவருடைய பூரண, முழுமனது கொண்ட மாணவர்களாக (implicit obedient students) இருப்பதால் நாமும் அவரைப்போன்றே மனதைப் பற்றி அறிந்துகொண்டது முதலில் பெருமையும், அதனோடு இணைந்துள்ள பயனையும் தருகின்றதல்லவா? புதிர் எவ்வாறு விடுவிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

  புதிர் விடுவிக்கப்படுகின்றது:

  ‘இறையே மனமாக இருந்தாலும், மனம் இறைவனாக இல்லையே!’ என்பதுதான் புதிர் அவிழ்ந்த பிறகு வெளிப்படையாகவே தெரிகின்றது மனதிற்கான வரையறை. இந்நிலைக்கான காரணத்தையும் மனவளக்கலைஞர்கள் அறிவரே! என்ன காரணம்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட பரிணாமக் கசடான(Evolutionary Effluent) விலங்கினப்பண்பே, இறையே மனமாக இருந்தும் மனம் இறையாக இல்லாமல் செயல்படுவதற்குக் காரணம். இதற்கு வழியே இல்லையா? ஏன் இல்லை? வழி இருந்ததால்தான் இன்று நம் சத்சங்கத்தில் இது பற்றி சிந்திக்கிறோம். 1911 க்குப் பிறகு வழி பிறந்துவிட்டது. இதற்கு வழி மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலையேயாகும்.

  வேறொரு அறிஞர் கூறுவது:-

  Untitled-2

  வளம் என்கின்ற சொல்லின் பொருளுக்கேற்ப வளமுடைய மனம் எவ்வாறிருக்க வேண்டும்? மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே அறமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

  ஆகவே மனம்,

  நிறைவுடையதாகவும், 

  மேம்பட்ட நிலையிலும், 

  வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

  மனம்போல் வாழ்வு எனப்படுகின்றது, மண் வளமாக இருந்தால் எப்படி பயிர் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ, அது போன்று மனம் வளமாக இருந்தால் வாழ்வும் வளமுடையதாகவும் இருக்கும். மனவளத்திற்கு என்ன இலக்கணம்? மனம் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். தூய்மையான மனம் எவ்வாறிருக்க வேண்டும்?

  • எண்ணமே வாழ்க்கையின் சிற்பி என்பதால் நல்ல எண்ணங்களையே எண்ணுவதாக இருத்தல் வேண்டும்.
  • பேராசை பெரும் நஷ்டம் என்பதால் ஆசையை சீரமைக்க வேண்டும்.
  • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் வளமுடைய மனம் சினத்தைத் தவிர்க்க
  • வேண்டும்.
  • வளமுடைய மனதில் கவலை இருக்கக் கூடாது.
  • ஆறாம் அறிவுடைய மனமாக இருப்பதால் தான் யார் என்கின்ற அறிவு இருக்க வேண்டும்.

  இந்த ஐந்தும் இல்லாத மனம் வளமுடையது என்று சொல்ல முடியுமா? முடியாது. இதனை ஆராய்ந்த மகரிஷி அவர்கள் மனதை வளப்படுத்த உளப்பயிற்சியினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

  அப்பயிற்சியே தவமும், தற்சோதனையும் ஆகும்.

  கூடா ஒழுக்கம் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் அருளியுள்ள

  மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம்,
  பழித்தது ஒழித்து விடின்.”

  என்கின்ற கடைசிக் குறளையும்,
  அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் உள்ள

  மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்;அனைத்துஅறன்
  ஆகுல நீல பிற.”

  என்கின்ற குறளையும் மனதில் கொண்டு மனவளக்கலை பயில்வோம். மனதை வளமாக்கி, இதமாக வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.

  வாழ்க மனவளக்கலை!   வளர்க மனவளக்கலை!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                                       வளர்க அறிவுச் செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!


  அறிவிப்பு

                                        14-03-2018-புதன்

  அன்பர்களே!

       வாழ்க வளமுடன்!

  இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும்.

  சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன் படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

  தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

  வாழ்க வளமுடன்!

  www.posperspiritually.com

   வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!