இன்றைய விருந்து

  • FFC-266 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

    வாழ்க மனித அறிவு                                                                       வளர்க மனித அறிவு

    lotus
    FFC – 266
    அ.வி. 266

    12-11-2017-ஞாயிறு

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 1/?

    (தத்துவம் என்றால் என்ன பொருள்?)

    Jun2004-17a

    வாழ்க வளமுடன்!

    செயலுக்கு விளைவு உண்டா, வருமா?

    செயலுக்கு விளைவு வருவது உண்மையைச் சேர்ந்ததா?

    தத்துவைத்தைச் சோ்ந்ததா?

    அல்லது  அறிவியலைச் சேர்ந்ததா?

    செயலுக்கு விளைவு வருவதனை, அறிவியல் அடிப்படையில் நிருபித்தால்தான்  மனிதஅறிவு ஏற்றுக்கொள்ளுமா, இல்லை எனில் ஏற்றுக் கொள்ளாதா  போன்ற வினாக்கள் எழுவதால், 

    முதலில் தத்துவம் என்றால் என்ன என்று அறிந்துகொள்வோம்.

    சிந்தனைக்கு எடுத்துக்கொண்ட தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

    1) செயல்
    2) விளைவு
    3) தத்துவம்
    4) கருமையம்.

    இவற்றில் தத்துவம் என்கின்ற சொல் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தாலும் அதனை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தனை செய்வோம். ஏனெனில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருள் அறிந்து கொண்டால் இத்தலைப்பின் கீழ், இதுவரை அறியப்படாத முக்கியமான வாழ்வியல் உண்மைகள் முழுநம்பிக்கையுடன் உறுதிபடுத்தப்பட்டு, எவ்வளவு தூரம் விலகி உண்மையை கைவிட்டுவிட்டோம் என வருந்தி அறிவு எளிதில் தெளிவினைப் பெற்றுவிடும்.

    சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?

    பொதுவாக ‘தத்துவம்’ அநேகருக்கு ஒவ்வாமையாக(allergy) உள்ளது. தத்துவம் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் .இல்லை. காரணம் என்ன என்று தெரியவில்லை என்று சொல்லவதற்கில்லை. தத்துவம் என்பது தனிநபரின் தேர்வாக(choice) உள்ளது. சுவாசித்தல் என்பது தனிநபரின் தேர்வாகவா உள்ளது? சுவாசித்தல் என்பது இயல்பாகவே நடக்கின்றது. யாராவது ஒரு தனிநபர் ‘எனக்கு சுவாசிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லமுடியுமா?’ ஆனால் ‘தத்துவத்தில் எனக்கு ஆர்வம் இல்லை’ என்பார்கள் பலர். சுவாசிப்பதே உயிர் இருப்பதற்கு அடையாளம். எனவே வாழ்வதற்கு எல்லோருக்கும் சுவாசித்தல் அவசியம் என்பது போன்று தத்துவம் என்பதும் எல்லோருக்குமே அவசியம்தான். ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் பொருளை அறிந்து கொண்டால் தத்துவம் எல்லோருக்கும் அவசியம் என்பது விளங்கிவிடும். எனவேதான் இச்சிந்தனையில் தத்துவம் என்பதனை முதலில் எடுத்துக்கொண்டோம்.

    தத்துவமும் நூல்கண்டும்:

    தத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    தத்துவம் மிக எளிமையானது. அதைத் தெரியாதவர்கள் எடுத்து கையாளும்போதுதான் சிக்கலாகின்றது. உதாரணத்திற்கு நூல்கண்டில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே நூல்தான் உள்ளது. அதை நன்றாகச் சுற்றி வைத்திருப்பதால் அதில் சிக்கல் இல்லை. தையல் கலைஞர்கள் அதை உபயோகிக்கும்போது சரியான முறையில் உபயோகித்துவிட்டு மீண்டும் அதனை அதற்குரிய இடத்தில் வைத்துவிடுவார்கள். ஆனால் அதே நூல்கண்டு இரண்டு வயது குழந்தையிடம் கிடைத்தால் என்னவாகும்? மொத்த நூலையும் பிரித்து கலைத்துப்போட்டு விடும். சிக்கலாக்கிவிடும். குழந்தைக்கும் உபயோகப்படுத்தத் தெரியாது. மற்றவர்களும் அதனை உபயோகப்படுத்த முடியாது. அதுபோல, இன்று உலகத்தில் சிக்கல்கள் இருப்பதற்குக் காரணம் முறையாகக் கையாளாமைதான்.’

    மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    இயற்கை நியதிகளில் சில கருத்துக்கு எட்டுவதாக இருக்கும். ஆனால் கணக்குக்கு எட்டாது. கணக்குக்கு எட்டி அதன் காரணம் கருத்துக்கு எட்டாதபோது அது விஞ்ஞானம் என்று கூறப்படுகின்றது. கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாதபோது அது தத்துவம் அல்லது மெய்ஞ்ஞானம் எனப்படுகின்றது. பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்துமே கணக்குக்கு எட்டாது. ஆனால் நுண்மையாகக் கூர்ந்து தொடர்ந்து, ஆழ்ந்து கவனித்து வந்தால், அறிவுக்கு இயற்கை இரகசியமும் புரியாதது அல்ல. ஏனெனில் இயற்கையே அறிவாகவும் இருப்பதால்.’ 

    . . . வேதாத்திரி மகரிஷி

    தன் கதையை தான் தெரிந்து கொள்வதில் அறிவிற்கு சிரமம் இருக்க முடியுமா என்ன?

    ஏன் தத்துவம் தனிமனிதனின் தேர்வாக இருந்து வருகின்றது?

    அதற்குக் காரணம் தத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது அல்ல என்று நினைப்பதும்,
    தத்துவத்திற்கு அறிவியல் அடைப்படை இல்லை என்று எண்ணுவதும் காரணம்.
    மேலும் தத்துவத்தின் மீது ஆர்வம் கொள்ள சிந்தனைத்திறன் அவசியமாகின்றது.
    எனவே சிந்திப்பவர்களே பெரும்பாலும் தத்துவத்தை விரும்புகின்றனர்.
    புலன்மயக்கத்தில் இருக்கின்ற, அதாவது பஞ்ச கோசங்களில் முதல் இரண்டு கோசங்களிலேயே
    வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு சிந்திக்காமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது.

     ஆகவே பிராணமய கோசத்திற்கும், அதற்கு அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கும், ஆனந்தமய கோசத்திற்கும் அவர்களால் வரமுடிவதில்லை. பிராணமய கோசத்திற்கு வந்தால்தானே வந்தால்தானே தத்துவத்தில் நாட்டம் வரும். மேலும் தத்துவத்தில் நாட்டம் இல்லாது இருந்தாலும் அதனால் உடன்பாதிப்பு(immediate effect) வருவதில்லை என்பதால் தத்துவத்தை உதரித்தள்ளி விடுகின்றனர். ஆனாலும் தத்துவத்தை உதரித்தள்ளுவதால் பாதிப்பு உண்டு. எப்படி? தத்துவம் என்ன சொல்கின்றது? ‘நல்லதையே செய். நல்லவனாக இரு’ என்கின்றது. ‘அறம் செய விரும்பு’ என்கின்ற அமுதமொழியை கவனித்தாரில்லை. அறம்தான் துன்பம் வராமல் காப்பாக அமையும். ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் தான் சமுதாயத்தை காக்க வல்லது.

    அமுத மொழிகள் அபயம் தரும்:

    பல்லாயிரம் அருளாளர்கள் தோன்றி அபயம் தரும் அமுத மொழிகளை பாடல்களாகவும், உரைநடைகளாகவும் உதிர்த்திருந்தாலும் அவைகளை தத்துவங்கள் என்று கூறி ஒதுக்கிவிடுகின்றனர். தத்துவம் என்ன கூறுகின்றது? மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது. எதற்காகக் கூறுகின்றது? அறத்தை வலியுறுத்துவதற்காக மறைபொருட்களைப் பற்றிக் கூறுகின்றது? அறம் சமுதாயத்திற்கு தேவையில்லையா? அறத்தை போதித்தல் தத்துவமா? மூடநம்பிக்கையா? பகுத்தறிவைச் சான்றதில்லையா அறம்?

    மறைபொருட்களைக் காட்டவும் முடியாது. புலன்களால் அவற்றை காணவும் முடியாது. எனவே அவை மறைபொருட்கள் எனப்படுகின்றன. மறைபொருட்களை அவரவர்களேதான் உணரவேண்டும். உணர்வதற்கு அருளாளர்களின் வழிகாட்டுதல்கள் உள்ளன. மறைபொருட்கள் என்னென்ன?

    1) உடலிலே ஓடிக்கொண்டிருக்கின்ற உயிர்,

    2) அதனால் இயங்குகின்ற மனம்,

    3)  இவற்றிற்கு மூலமான இறை.

    தத்துவம் கூறும் மறைபொருட்களை புலன்களால் உணரமுடியாததால் தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை. தத்துவத்தை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியவில்லை. அதாவது மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைக்கப்படவில்லை. ஆகவே தத்துவம் என்பது அநேகருக்கு கசப்பாகவே உள்ளது.

    தத்துவம் ஒவ்வாமையாக இருப்பது ஒரு கற்பனையே!

    கற்பனையான ஒவ்வாமையை, நீக்கிக்கொள்வதற்கு, முதலில் ‘தத்துவம்’ என்கின்ற சொல்லுக்கான வார்த்தை விளக்கம் காண்போம். தத்துவம் என்பது அறிவியல் அடிப்படையில் இல்லாதது, அல்லது மூடநம்பிக்கையானது என்கின்ற தவறான கருத்து உள்ளது. அதனால்தான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனையே உலகப்புகழ் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன்,

    விஞ்ஞானமில்லாத மெய்ஞ்ஞானம் குருடு, மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி என்கிறார்.

    ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கமும் அச்சிடப்பட்டிருந்தால்தான் அந்த நாணயம், பணபரிமாற்றத்தின்போது(transaction) செல்லத்தக்கதாக இருக்கும். ஒரு பக்கம் அச்சிடப்படவில்லை எனில் அந்த நாணயம் செல்லாததாகிவிடும்.

    அதேபோன்று அறிவு நாணயமாக(நேர்மை-honesty) வாழ்வதற்கு, அறிவிற்கு இரண்டு துறைகளின் அறிவும் வேண்டும். அதாவது விஞ்ஞானமும் வேண்டும்; மெய்ஞ்ஞானமும் வேண்டும். இல்லை எனில் வாழ்க்கை செல்லாததாகவிடும். அதாவது வாழ்க்கையில் துன்பம்தான் மிகும். துன்பம் மிகுந்தால் வாழ்க்கை சிறப்புறாது போகும். எப்படி என ஐயம் எழலாம்! திருவள்ளுவர் கூறுவதனை கவனிப்போம்.

    அருளைப் பற்றி திருவள்ளுவர்:

    திருவள்ளுவர் அருள் உடைமை எனும் அதிகாரத்தில் அருளைப்பற்றிக் கூறுவதனை நினைவு கூர்வோம். தலைப்பிற்கு ‘அருள் உடைமை’ என பெயர் வைத்துள்ளது எதனைக் குறிக்கின்றது? உடைமை என்றால் செல்வம் என்று பொருள். எனவே அருள் உடைமை என்றால் அருட்செல்வம் என்று பொருள்.
    கேள்விச் செல்வமே மற்றைய எல்லா செல்வங்களிலும் உயர்வானது (கு. எண்.411) எனக் கூறுகின்ற திருவள்ளுவர், அருளைப்பற்றி கூறும் போது அருளால் வரும் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வமாகும் என்றும் அதைத்தவிர்த்த மற்றைய பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தோரிடமும் உள்ளன(குறள் எண் 241) என்கிறார். மேலும் அருள் உடைமையைப் பற்றி கூறுவதனை அறிவோம்.

    dheaivappulavar

    பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
    அற்றார்மற்று ஆதல் அரிது”                                                            . . .  குறள் எண் 248

    பொருள்: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்ககையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு”                                                            . . . குறள் எண் 247

    பொருள்: பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை இல்லாதவாறு போல, அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

    அறவாழ்க்கையே இறைவழி வாழும் இறைவழிபாடு என்பதனை உணர்ந்தாரில்லை.

    தத்துவத்தின் மீது நாட்டம் இருந்தாலும் தத்துவம் கூறும் அறிவுரைகளை மதிக்கத் தவறிவிடுகின்றனர். தத்துவம் வழிகாட்டும் பாதையில் செல்வதில்லை.

    இந்த சூழலில்தான் இரண்டு அறிஞர்களான சுவாமி விவேகானந்தரும், விஞ்ஞானியான ஐன்ஸ்டீனும், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். சமுதாயத்தில் தத்துவத்தின் மீது நாட்டம் உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. தத்துவத்தை ஆன்மிகம் என்கின்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். தத்துவத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் சரி, அல்லது தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களுக்கும் சரி தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் பயன் உள்ளதாக இருக்கும். அதாவது தத்துவத்தில் ஏற்கனவே நாட்டம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்தும். தத்துவத்தில் நாட்டமில்லாதவர்களை நாட்டம் வருவதற்கு சிந்திக்கவாவது செய்யும். இப்போது தத்துவம் என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிந்துகொள்வோம்.

    amudhamozhi_44

    ‘தத்துவம்’ என்கின்ற சொல்லின் வார்த்தை விளக்கம் அறிவோம்!

    இது சற்று புதியதாக இருக்கலாம். ‘தத்துவம்’ என்கின்ற சொல் ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ எனப்படுகின்றது. ஆங்கிலத்தில் ‘பிலாஸபி’ என்கின்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து உருவானது. லத்தீன் மொழியிலுள்ள ‘ஃபிலோ (Philo)’ மற்றும் ‘ஸோப்ஃபியா’ என்கின்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானதுதான் ‘பிலாஸபி’ என்பது. ‘ஃபிலோ’ என்கின்ற சொல்லிற்கு ‘நேசி’ என்று பொருள். ‘ஸோப்ஃபியா’ என்கின்ற சொல்லிற்கு ‘அறிவு (Wisdom)’ என்று பொருள். ஆக ‘தத்துவம்’ என்றால் ‘அறிவை நேசிப்பதாகும்’.

    ஞானத்தை நேசிப்பதாகும். ஞானத்தை நேசித்தால் என்றால் என்ன பொருள்? ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக வந்தததே ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வதற்காக. ஆறாம் அறிவு தன்னை உணர்ந்து கொள்வது என்பதுதான் ஞானம் பெறுவது. ஞானம் என்றால் தெளிவு என்பது பொதுவான விளக்கம். ஆனால் அறிவை அறிந்த, அறிவிற்கு அறிவியல் ஏற்படுத்தி தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஞானம் என்பதற்கு சிறப்பான விளக்கம் தருகிறார்.

    அந்த சிறப்பான விளக்கம் யாதெனில் ‘அறிவை அறிந்த தெளிவு’. என்பதாகும்.

    எனவே ‘ஞானத்தை விரும்பு’ என்கின்ற பொருள் கொண்ட ‘philosophy’ என்கின்ற தத்துவத்தில் ஆழ்ந்த/மூழ்கிய விருப்பம் கொள்வதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு! அறிவை அறிந்த தெளிவில்தான் அறிவு பரிணாமத்தால் வந்த கசட்டினை, அதாவது விலங்கினப்பண்பை போக்கிக் கொள்ளமுடியும். ஆகவே இந்தப் பிறவி எடுத்த ஆன்மா தன் வினைப்பதிவுகளை போக்க வேண்டுமென்றால் அறிவை அறிகின்ற பயிற்சியில் ஈடுபட்டு முடிவாக தெளிவிலும் தெளிவினைப் பெற வேண்டும். ஞானத்தை நேசி என்கின்ற பொருள் கொண்ட தத்துவம் அனைவருக்கும் அவசியம், அவசியம், அவசியமே!

    கிரேக்க நாட்டில் பிறந்த சாக்ரடீசை தத்துவஞானி என்று கூறுவதற்குக் காரணம் அவர் அறிவை நேசித்து வந்ததே காரணம். அதனால்தான் அறிவு பற்றிய தெளிவினைப் பெற்றவர் அறிவை நேசிக்கத்தானே செய்வார். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற அறிஞர்களின் உன்னத நோக்கத்திற்கிணங்க இளைஞர்களை ‘அறிவை நேசி’ (Love wisdom) என்றும், அதற்கு ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறி சிந்திக்க வைத்தார் சாக்ரடீஸ். 

         அன்று அறிஞர் சாக்ரடீஸ் மனிதன் சிந்திக்கவேண்டும் என்று எண்ணியதை  பலநூற்றாண்டுகள் கழித்து மகரிஷிஅவர்கள் இந்த நூற்றாண்டில் பலலட்சம் மக்களை சிந்திக்க வைத்து நிறைவேற்றி வருகிறார் என்றால் அதுமிகையாகாது

    பேரறிவை நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

    தன் உடல் உறுப்புகளை நேசிப்பதில்லையா மனிதன்? அவை நன்றாக இருந்தால்தானே அவன் சிரமமின்றி வாழமுடியும்! கைகள், கால்கள் ஆரோக்யமாக இருந்தால்தானே நகரவும்(movement), வேலையும்(work) செய்ய முடியம்! அக்கறை கொண்டு உடல் உறுப்புகளை பராமரித்தல் போல் உணர்வதற்கும், அறிவதற்கும் காரணமாகிய அறிவை பராமரிக்க வேண்டாம்.‘? எப்படி? ‘தத்துவம் என்றால் ‘அறிவை நேசி‘ என்றுதான் பொருள் அறிந்துகொண்டோம். அறிவை அறிந்த அறிஞரை குருவாகப் பெற்றதன் பயனாக ‘அறிவே தெய்வம்’ என்பதனை கருத்தியலாகவும், செய்முறையாகவும் மனவளக்கலைஞர்களாகிய நாம் அறிந்து வருகிறோம். எனவே தெய்வம் அறிவாக உள்ளது என்பதனை, தத்துவம் என்பதற்கு இதுவரை அறிந்த பொருளில் எடுத்துக் கொள்ளாமல், ‘அறிவை(ஞானம்-wisdom) நேசித்தல்’ என்கின்ற பொருளில் அல்லவா எடுத்துப் பழக வேண்டும்! அப்படியானால் அறிவாகிய தெய்வத்தை நேசிக்க வேண்டாமா நாம்? Should we not love Consciousness, the God?

    அறிவாகிய தெய்வத்தை நேசிப்பது என்றால் என்ன?

    உருவத்தைத்தான் நேசிக்க முடியும் என்பதல்ல. அருவமாகிய அறிவை(தெய்வத்தை) எவ்வாறு நேசிப்பது என ஐயம் இருக்கலாம். உருவத்தை நேசிப்பது பாசம். பாசம் என்பது எதிர்பார்த்து நேசிப்பது. அது அன்பு அல்ல.
    அறிஞர் திருமூலர் கூறுகின்ற அமுத மொழியினை கவனத்தில் கொண்டால் அரூபாமன அறிவை எவ்வாறு நேசிப்பது என்கின்ற உபாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்

    உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்.
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.                      … திருமந்திரம் 725

    ஓம்புதல் என்றால் பேணிப் பாதுகாத்தல் என்று பொருள். ‘உடற்பயிற்சி செய்வதே இறைவனுக்கு செய்கின்ற சேவை’ என்பார் மகரிஷி அவர்கள். பேரறிவாகிய தெய்வமே நம்மிடம் அறிவாகத் திகழ்கின்றது. அதுவே தான் மனிதன் செய்யும் செயல்களுக்கான இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது.

    கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்பம் துன்பமவன்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் முதல் பாடலிலேயே!.

      எனவே நம்முடைய செயல்களால் நம்முள் இருக்கும் உத்தமனுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்வதே அறிவை நேசிப்பதுதானே!

    எப்படி குழந்தையை நேசிக்கும் தாய் குழந்தையை ஈ, எறும்பு தீண்டாதவாறு பார்த்துக் கொள்வாளோ அதுபோல் எப்போதும் உணர்ச்சிவயத்தை தவிர்த்து அமைதியைப்பேணுவதே அறிவை நேசிப்பதுதானே!

    உணர்ச்சிவயம் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் எப்போதாவது பழக்க தோஷத்தால் (பழக்கப் பதிவின் அழுத்தத்தால்) உணர்ச்சிவயம் ஏற்பட்டதானால் அப்போது ‘உணர்ச்சிவயத்தால் அமைதியே வடிவான இறைக்கு துன்பம் கொடுத்துவிட்டேனே’ என்று மனதார எண்ணி வருந்துதல் வேண்டும்.

       தூங்கும் குழந்தை அதிர்ச்சியால் எழுந்து கொள்ளுமாறு சப்தமிடுவாளா தாய்? அதுபோன்றுதானே உணர்ச்சிவயப்படுவதும். உணர்ச்சிவயப்படுவது விழிப்புணர்வு இழத்தல்தானே. விழிப்புணர்வை இழப்பது அயராவிழிப்புணர்வான இறைக்கு துன்பம்தானே!

     ‘பொறுமை  கடலினும் பெரிது’   என்பது சாதாரணமாக  சொல்லப்படுவது.  ஆனால், மகரிஷி அவர்கள்  ‘பொறுமைக்கு எல்லையே கிடையாது’ என்பார். காரணம், பொறுமைக்கு எல்லை வந்துவிட்டால் அது பொறுக்க முடியாமையாகிவிடும். அதுவரை கடைபிடித்து வந்த பொறுமை நோன்பு கலைந்துவிடும். இயற்கையின் ஆதிநிலைக்கு எல்லையில்லாதது போல் மனிதனின் நற்குணங்களில் சிறந்ததான பொறுமைக்கும் எல்லை என்பதே கிடையாது. அப்படியிருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் பொறுமை காப்பதே அறிவாகிய இறையை நேசிப்பதாகும்.பொறுமையை இழப்பது நம்முள் உறையும் உத்தமனை துன்பப்படுத்துவதற்கு ஒப்பாகாதா?

    ஆகவே அறிவாகிய தெய்வத்தை நேசிக்கவேண்டிய ஆன்ம சாதகன் தன் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றை போக்கி அறிவை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தி அறிவை செல்வமாக்கிக் கொள்ள வேண்டாமா? தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் தன்னை அறிய இச்சை கொண்டு வந்த அறிவு இப்போது புலன்களில் சிக்கித் தவிக்கின்றது.  

       ஆங்காங்கே அத்திப்பூ பூத்தாற்போல் ஞானிகள் தோன்றி மறைவது நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் இப்பூவுலகம் தொடர்ந்த அமைதியினை அனுபவிக்க முடியவில்லையே!

     கிருஷ்ண பராமாத்மா, பகவத் கீதையில் ‘கோடியில் ஒருவர் தான் என்னிடம் வந்து சேர்கின்றனர்’ என்று கூறுகின்ற விகிதாசாரம்தான்(1 : 1,00,00000) அறிவியல் வளர்ந்தும் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கின்றது. அறிவியல் மெய்யறிவியலுக்கு துணை செய்ததாகத் தெரியவில்லை. மனிதன்தான் அறிவியலின் துணை கொண்டு பேரறிவை அறிந்துகொண்டு பேரறிவிற்கு ஒப்ப தன் அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதாவது மெய்ஞ்ஞானத்தை மெய்யறிவியலாக்கி பாடங்களாக்கி கற்பித்தால்தான், ‘கோடியில் ஒருவர்’ என்கின்ற விகிதாசாரத்தை உயர்த்த முடியும்.

    ‘தத்துவம்’ என்பது வாழ்வியல் கண்டுபிடிப்பே!

    பெரும்பாலும் தத்துவத்தில் நாட்டமில்லாத சமுதாயத்தில் இருந்துதான் வந்திருக்கிறோம். எனவே ‘தத்துவத்தில் நாட்டமில்லாதிருக்கின்ற’ வாசனை ஆரம்பகால ஆன்மீக சாதகர்களுக்குள் மறைந்து இருக்கலாம். தத்துவத்தில் நாட்டமில்லாத, நம்பிக்கையில்லாத நிலையில் இன்னமும் இருந்தால், அறிஞர் கண்டுபிடித்த உண்மைகளை ‘தத்துவம்’ என்கின்ற இதுவரை இருந்த அர்த்தத்தில் பொருள்கொண்டால் அறிவை நேசிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆகவேதான் தத்துவம் என்பதனை ‘உண்மையின் கண்டுபிடிப்பு’ என்று கூறிவருகிறோம். காலங்காலமாக அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை தத்துவம் என்கின்ற பெயரால் அழைக்கப்படுவதை ‘வாழ்வியல் உண்மைக் கண்டுபிடிப்புInvention of Life Science Truth)’ என்றேக்கொள்ளலாம்.

    விஞ்ஞானி கண்டுபிடித்தால் அது கண்டுபிடிப்பு என போற்றப்படுகின்றது. ஆனால் மெய்ஞ்ஞானி வாழ்வியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொன்னால் அது தத்துவம் என்று கூறி இந்த சமுதாயத்தில் பலர் மதிப்பதில்லை.

    எனவே செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையினை தத்துவம்(Cause and effect System in English) என்று கூறாமல் ‘செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு’ என்பதனை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம். தத்துவத்திற்கான பொருள் புதிய கோணத்தில் பார்த்தோம்.  இதுவரை தத்துவம் என்றால் ‘அறிவை –ஞானத்தை நேசி’ என்று அறிந்துகொண்டோம். ‘அறிவை நேசி-ஞானத்தை நேசி’ என்கின்ற பொருளுடைய ‘தத்துவம்’ என்கின்ற சொல்லிற்கு ஏற்ப ‘அறிவிற்கான அறிவியலை’த் தந்துள்ளது வேதாத்திரியத்தத்துவம் என்பதனை நினைத்து மனவளக்கலைஞர்கள் பெருமை கொண்டு முழுப்பயனையும் இப்பிறவியிலேயே அடைந்துவிட வேண்டும் என்பதே அவா.

    ஞானத்தை நேசிக்க மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அதன் விளைவைப்பற்றியும் அறியவேண்டும். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(15-11-2017-புதன்கிழமை) அறிந்து கொள்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                       வளர்க அறிவுச் செல்வம்

  • இணையதள சத்சங்கம் பற்றிய அறிமுகம்

    வாழ்க மனித அறிவு                                       வளர்க மனித அறிவு

    lotus FFC – 265 அ.வி. 265

    08-11-2017-புதன்

    அறிவுத்தேனீக்கள்

    இணையதள சத்சங்கம் பற்றிய

    அறிமுகம்

    வணக்கம். வாழ்க வளமுடன். இயற்கையின் அருளால், உலக நல விருப்பத்தால், உங்கள் அனைவரின் நல்லெண்ண ஆதரவுடன் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை சுமார் 6.74 இலட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், மற்றும் இறையை அறிந்து, ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறத்தை வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அறிஞர்களின் ஆசிகளுடனும் இந்த இணைய தளம் ஒரு சத்சங்க அமைப்பைப் பெற்றுள்ளது.

    தொலை நோக்குப் பார்வை:

        உலக மக்கள் அனைவரும், ஒன்றே பலவாகிய ஒருமை தத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் விளங்கிக்கொண்டு, ஆன்மசெழிப்புடன் எல்லா வளங்களும் பெற்று, தங்கள் பூர்வீகச் சொத்தான (hereditary wealth)அமைதியை அனுபவித்து, இன்புற்று வாழ, அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துதல்.

    இணைய தள சத்சங்கத்தின் குறிக்கோள்:

    1. இந்த இணையதளத்தை சத்சங்கமாகப் பயன்படுத்துதல்.

    2. ஆன்மிகத்தின் மீது தவறாக கொண்டுள்ள வெறுப்பையும், அச்சத்தையும் நீக்கி ஆன்மிகத்தை வாழ்வியலாக்குதல்.

    3. மனிதஅறிவின் சிந்தனையைத் தூண்டுதல்.

    4. மனிதஅறிவை வளரச் செய்தல்.

    5. மனிதஅறிவினை முதன்மைச் செல்வமாக்குதல்.

    6. ஏற்கனவே மேற்கொண்டு வரும் ஆன்மிகப் பயிற்சிக்கு மேலும் வலிவு சேர்த்தல்.

    7. ஆன்மிகப் பயிற்சியில் எல்லோருக்கும் ஏற்படும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறச் செய்தல்.

    8. அத்வைத தத்துவத்தின் நுட்பங்களைத் (subtleties of Advaida Philosophy) தெரிவித்து, ஆன்ம தேடுதலையும், தாகத்தையும் (spiritual quest /spiritual thirst) அதிகப்படுத்துதல்.

    9. சமுதாய நல அக்கறையை ஏற்படுத்துதல்.

    10. மொத்தத்தில் மகரிஷி அவர்கள் கூறியபடி  அறிவை முழுமை அடையச் செய்து, தெளிந்த நல்லறிவைப் பெற்று  முக்தியடைதல்.

    பூர்வீகச் சொத்து எது?

    அமைதி ஒவ்வொருவரின் பூர்வீகச் சொத்து. ஆனால் அப்பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடிகின்றதா? இல்லையே! இன்று தனி மனிதனிடத்தில், குடும்பத்தில், ஊரில், நாட்டில், மற்றும் உலகத்தில் அமைதி இல்லை. உத்திரவாதமில்லாத(insecured life) வாழ்க்கைதான் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது. சண்டை, சச்சரவு, போர், பிணக்கு, வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிப்பதில்லை. இந்த அவல நிலையை சமுதாயத்தில் மாற்றி அமைப்பதற்கு,

    1) நான் எனது வாழ்நாளில், யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

    2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்”

    என்கின்ற இரண்டொழுக்கப் பண்பாட்டினைச் (அன்பும், கருணையும்) சங்கல்பமாக(auto suggestion) அகத்தவப் பயிற்சியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அமைதி ஒவ்வொருவரின் பூர்வீகச் சொத்து. எவ்வாறெனில் இயற்கையின் ஆதிநிலை அமைதியானது. ஆதிநிலைதான் இப்பிரபஞ்சம் மற்றும் மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் மூலநிலை. ஆவே மனிதனின் பூர்வீகம் அமைதியான இயற்கையின் ஆதிநிலை. எனவே அமைதி மனிதனின் பூர்வீகச் சொத்தாகின்றது(hereditary wealth). தங்கள் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க, ஒவ்வொருவரும் ஆன்மாவை உள்ளுணர்வாக உணர்ந்து கொள்ள வேண்டும். இரண்டொழுக்கப்பழக்கம் நிலவினால்தான் பூர்வீகச்சொத்தினை சமுதயாம் அனுபவிக்க முடியும்.

    தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறுவது …….

    இங்கே முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை– Evolution is still incomplete” என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதஇனப் பரிணாமம் உருவத்தில் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் பரிணாமம் மனிததரத்தில் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்தனை ஆதங்கத்தோடு கூறுகிறார்

    அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் வகையில் மனித நேயம் மலரவில்லை. மனித நேயம் மலர மனிதன், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “உயிரறிவை  உள்ளுணர்வாக” ப்  பெறவேண்டும். இல்லாவிடில், மனிதகுலம் விலங்கினத்திலிருந்து தோன்றியுள்ளதால், விலங்கினப் பண்பு செயலிழக்காமல் மீண்டும் மீண்டும், செயலுக்கு வந்து வந்து மனித நேயம் முழுவதுமாக வெளிப்படாத நிலை ஏற்பட்டு விடும்.

    இயற்கையின் எதார்த்தம்:

    பெரியவர்கள் வாழ்த்தும் போது ‘செழிப்புற்று வாழ்(prosperous new year, prosperous wedded life)’ என வாழ்த்துகின்றனர். செழிப்பு என்பது எதனைக் குறிக்கின்றது? உலகில் வாழப் பிறந்தாகிவிட்டது. ஆனால் உலகில் வாழ்வது தற்காலிகத் தங்குதல்தான்(Temporary stay). மரணம் காத்துக் கொண்டிருக்கின்றது. இது எதிர்மறைச் சிந்தனையல்ல (not a negative thought). இதுதான் இயற்கையின் எதார்த்தம். உடல் அழிந்து விடக்கூடியது. ஆனால் ஆன்மா அழியாதது. உடல் வாழ்வதில்லை. உடலிலுள்ள உயிர்தான் வாழ்கின்றது. ஆகவே “செழிப்புடன் வாழ்” என்றால் உயிர் (ஆன்மா) செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் பொருள்.

    மனிதன் வாழ்வது என்பது ஆன்மா செழிப்புற்று வாழ்வதைத்தான் குறிக்கின்றது. ஆன்மா எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அதாவது வாழ்க்கை என்பது ஒன்றுதான். உலகியல் மற்றும் ஆன்மிகம் என இரண்டு தனித்தனியாகக் கிடையாது. உலகியல் மற்றும் ஆன்மிகம் ஒன்றோடொன்று பிணைந்த(inter-woven), வாழ்க்கைதான் மனிதவாழ்க்கை(man’s life). வாழ்க்கைத் தூய்மையற்று இருக்குமளவிற்குத் துன்பங்கள் இருக்கும். ஆன்மா செழிப்புற்று வாழ ஆன்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும். காரணம் மனிதன் விலங்கினத்திலிருந்து வந்ததால், விலங்கினக் குணங்கள்(பண்பு) மனிதனின் தன்மையாக உள்ளன. விலங்கினப் பண்பைப் போக்குவதுதான் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவது என்பது. இந்த ஆன்ம தூய்மைக்குத்தான் மனிதன் பிறந்திருக்கிறான்.

    ஆன்மாவிற்கு குறைந்த பட்ச உணவாவது வேண்டாமா?

    அழியக்கூடிய உடலுக்கு மட்டுமே உணவையும், விருந்தையும் கொடுத்துக் கொண்டு, அழியாத உயிருக்கு/ஆன்மாவிற்கு, விருந்து இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் உணவுகூட அளிப்பதில்லை மனிதன். ஆன்மா ஒன்று உள்ளதே என்கின்ற கவலையும் கிடையாது. முன்வினைப்பயனை அனுபவிக்க, ஆன்மாவால்தான் (உயிரால்தான்) உடல் வந்தது. “வினைப் பயனே தேகம் கண்டாய்” என்கிறார் அறிவை அறிந்த பட்டிணத்தார் சுவாமிகள். வினைப் பயனால்தான் ஆன்மா உடல் எடுத்தது. ‘மனிதன் வாழ்கிறான்’ என்று சொல்வதைவிட ‘வினை வாழ்கின்றது’ என்று சொல்வதுதான் பொருத்துமாக இருக்கும். அதாவது அவன் ஆன்மாதான் வாழ்கின்றது. முன்வினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய வழிகளை ஆராய்ந்து அதற்குரிய பயிற்சிகளை முறையாகத் தகுந்த வழிகாட்டியுடன்(அறிவை அறிந்த அறிவினர்-குரு) செய்து வெற்றி பெற்று, ஆன்மா தனது பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க வேண்டும். இதைத்தான் ஆன்மா செழிப்புற்று வாழ்கின்று என்று நாம் கருதுவது. ஆகவே மனித ஆன்மா செழிப்புற்று வாழ்வதற்கு:

    1) நல்ல உடல் நலம்,

    2) நீண்ட ஆயுள், 3) நிறைந்த செல்வம், 4) தன்னலமற்றத் தொண்டு செய்வதால் வருகின்ற உயர்புகழ், 5) இறைஞானம்(இயற்கையைப் பற்றிய தெளிந்த அறிவு)ஆகிய வளங்கள் தேவையாக உள்ளன.

    ஆன்ம வளம் என்பது, அன்றாடம் உயிர் பிழைத்து வாழ்வதற்கு வேண்டிய உலகியல் வாழ்க்கைக்கும் (temporary stay on earth) அழியாத ஆன்மா வாழ்வதற்கும் வேண்டிய எல்லாவளங்களையும் உள்ளடக்கியதுதான்.

    உலகியல் வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை என இரண்டு தனித்தனியாகக் கிடையாது. விரும்புபவா்கள் ஆன்மிக வாழ்க்கை வாழலாம். விரும்பாதவர்கள் ஆன்மிக வாழ்க்கையை கைவிட்டுவிடலாம் என்பதல்ல. இரண்டும் ஒன்று சோ்ந்ததுதான் வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை இரண்டும் சோ்ந்ததை “வாழ்வியல்” (Science of Living)என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

    வாழ்வியல் கல்வி அல்லது ஒழுக்கவியல் கல்வி:

    மனிதன் வாழத் தெரிந்து வாழ வேண்டியிருப்பதால் எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற வாழ்க்கை முறையை இயலாக்கிய, வாழ்வியல் கல்வி அல்லது ஒழுக்கவியல் பாடம் பள்ளியிலிருந்தே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். பல தலைமுறைகளாகக் கருத்தொடராக சீர்கெட்டுப்போன ஒழுக்கத்தைப் பழக்கமாக்கிட, பன்னிரண்டு வருடங்கள் நடத்தப்பட வேண்டிய பாடங்களுக்கான கருத்தியல் மற்றும் செய்முறை பாடத்திட்டங்கள்(syllabus) உள்ளன. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” மற்றும் “தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்” என்கின்ற பழமொழிகள் எதனைத் தெரிவிக்கின்றன என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஆகவே நற்பழக்கங்களை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியுடன் கட்டாயப் பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான், “ EDUCATION IS THE MANIFESTATION OF PERFECTION ALREADY PRESENT IN MAN” என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ள கல்வியினைக் கொண்டுவர முடியும்.

    இணையதள ஆங்கிலப் பெயரின் பொருள்:

    வாழ்வது ஆன்மா. அப்படி இருக்கும்போது ஆன்மா செழிப்புறுவதற்கு, வளம் சோ்க்காமல் இருப்பது தான் இன்றைய தனிமனித துன்பத்திற்கும் சமுதாயத் துன்பத்திற்கும் காரணம். ஆன்மாதான் (மனிதன்) வாழ்கின்றது. எனவே மனிதன் ஆன்ம வாழ்வு வாழவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான், ஆன்மா செழிப்புற, ‘Prosper Spiritually’ என்கின்ற இந்த இணையதள-சத்சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இணையதள ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் “ஆன்மசெழிப்புறு’ என்பதாகும்.

    ஆன்மாவை உணரும் ஆன்மிகத்திற்கு முறையான பயிற்சி தேவை. பயிற்சி மட்டுமல்லாது பயிற்சிக்கு வலிவு சேர்க்கக் கூடிய சத்துள்ள சத்சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லது சத்சங்கத்தில் சோ்ந்து கொள்ள வேண்டும்.

    இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் (without disturbing Natural Rhythm) வாழ்வதற்கு, இயற்கையிலுள்ள வழிவகைகளை ஆராய்ந்து அவ்வழி நடப்பதற்கான ஆலோசனைகளை அன்பர்களுடன் அன்றன்று பகிர்ந்து மகிழவே, இயற்கை கருணையோடு ஏற்படுத்தியதுதான் இந்த இணையதள சத்சங்கம்(Satsangh through Web Site).

    திருவள்ளுவரும் ஆதிசங்கரரும்:

    இந்த இணைய தளம், ஆதிசங்கரர் கூறும் சத்சங்கத்தின் பயன்பாட்டினைக் கொண்டதாக இருக்கும். சத்சங்கம் என்பது சத்(இறை) என்கின்ற உண்மையை அறியும் நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்திக் கொள்கின்ற சத்துள்ள ஓர் உன்னத அமைப்பு.

    ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் ஒன்பதாவது ஸ்லோகத்தில் சத்சங்கத்தைப்பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.

    “ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்.

    நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி: II …… என்று சத்சங்கத்தின் அா்த்தத்தையும், அவசியத்தையும், பயனையும் அறிவுறுத்துகிறார் ஆதிசங்கரர். இதன் பொருள்: —

    1) திருவள்ளுவர் 349* மற்றும் 350* ஆம் குறளில் மொழிந்துள்ளது போல் நல்லோர்களுடன் சோ்ந்திருப்பதால், நீக்க வேண்டியத் தேவையற்ற பற்று நீங்கி பற்றில்லா பற்றாக (undue attachment becomes detached attachment) மாறும். அதாவது தாமரை இலை தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இலை தன் மீது நீரை ஒட்டச் செய்வதில்லையோ அது போன்று உலகியல் வாழ்க்கை நடத்த முடியும்.

    * பற்றற்றே கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று

    நிலையாமை காணப்படும். …… குறள் எண் 349

    * பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு ……. குறள் எண் 350 2)

    திருக்குறள் எண் 355* மற்றும் 423* ன்படி தேவையற்ற பற்று நீங்கினால் மாயையிலிருந்து விடுபடலாம். பொய்யை மெய் என நம்பிக்கொண்டிருத்தல் மாயையாகும்.

    * எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

     மெய்ப்பொருள் காண்பது அறிவு. ….. குறள் எண் 355

    * எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ….. குறள் எண் 423

    3) மாயையிலிருந்து விடுபட்டால் விடுதலை(liberation) ஏற்படும். விடுதலை வேண்டாமா? விடுதலை இல்லை என்றால் தன்வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால கைதியாகவே வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதானா?

    4) விடுதலை கிட்டினால் என்றும் மாறாத உண்மை(மெய்ப் பொருள் –The Truth) விளங்கும். என்றும் மாறாத உண்மையை உணரும்போது நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் அறிவு முழுமை – ஜீவன் முக்தி ஏற்படும். இவ்வளவு பயன்களையும் ஆன்மிகப் பயிற்சியால் பெற வேண்டும்.  ஏற்கனவே, ஆன்மீகப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர் வாழத் தெரியாமல் வேறு ஏதேதோ முறையில் வாழ்ந்து விட்டோம். இப்போது ஆன்மிகப் பயிற்சியைத் தொடங்கிய பிறகு வாழத்தெரிந்து வாழ ஆரம்பித்துள்ளோம்.

    தரமாற்றம் ஏற்படவிருக்கின்ற இடைவெளி(transitory period):

    முன்பு வாழ்ந்ததற்கும் இப்போது வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இது ஒரு தரம் மாற்றம் ஏற்படுத்தும் இடைவெளி (transitory period).  எனவே இந்த இடைவெளிக்காலத்தில், பயிற்சியில் சலிப்பும், தொய்வும் ஏற்படலாம். ஆகவே, ஆன்மீகப் பயிற்சியாளர்கள் சலிப்பும், தொய்வும்; பயிற்சியில் ஏற்படாதவாறு மேலும் மேலும் ஆர்வத்தை ஆர்வத்துடன் ஏற்படுத்திக் கொண்டே (ardent desire) இடைவிடாது, ஆன்மீக பயணமாகிய வாழ்க்கையில் அன்றன்று வெற்றி பெற்று முடிவில் அப்பேரின்பத்தை அடைந்துவிட வேண்டும் என்பதே இந்த இணையதள–சத்சங்கத்தின் (Satsangh through Website) நோக்கமாகும்.

    இனியது எது?

    பொதுவாக மனிதன் இன்பம் அனுபவிப்பது ஐந்து புலன்களின் வழியாக. அந்த இன்பத்தை அதிகமாக நுகரவேண்டும் என்பது பெரும்பாலும் மனிதனின் விருப்பமாக இருக்கும். ஆனால் இன்பமே துன்பமாக மாறும் திருவேதாத்திரியத்தின் கண்டுபிடிப்பினை அறிந்தானில்லை. புலன்கள் இல்லாமல் இன்பத்தை அதிகமாக அதாவது பேரின்பத்தை அனுபவிப்பது பற்றி அவ்வைத்தாய் மொழிவதனை அறிவோம். இங்கே அவ்வைத்தாய் இனியவைப் பற்றிக் கூறுவதைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

    இனியது எது?

    “இனிது! இனிது! ஏகாந்தம் இனிது!

    அதனினும் இனிது! ஆதியைத் தொழுதல்.

    அதனினும் இனிது! அறிவினர்ச் சேர்தல்

    அதனினும் இனிது! அறிவுள்ளோரைக்

    கனவிலும் நனவிலும் காண்பது தானே!”  என்கிறார் அவ்வைத்தாய்.

    ஆகவே ஆன்மா விழிப்புற்று வாழ்வதற்கு, அதற்கான பயிற்சிகளைச் செய்வதோடு அறிவினருடன் சேர்ந்திருத்தலும், அவரைக் கனவிலும் நனவிலும் காணவேண்டும் என்கிறார் அவ்வையார்.

    அறிவினருடன் சேர்ந்திருத்தலும் அவரைக் கனவிலும் காண்பதுதான் சத்சங்கம்.

    சத்சங்கம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத போது அறிவினரின் அறநூல்களின் வாயிலாக அறிவினருடன் மானசீகமாக சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அப்படியும் வாய்ப்பில்லை என்றால் தனக்குத் தானே சத்சங்கம் நடத்திக் கொள்ளலாம். அதுதான் சுயசிந்தனை. இதற்குப் பழகவேண்டும். சுயசிந்தனையைப் பயில இந்த இணையதள–சத்சங்கம் பெரும் அளவில் உதவியாக இருக்கும்.

    Must be read in between lines:

    அறிஞர்களின் அறிவுரைகள் செய்யுட்களாகவும் உரைகளாகவும் உள்ளன. அதனைப் படிக்கும்போது வார்த்தைகளுக்கு இடையே மறைந்துள்ள பொருளையும் சேர்த்து விளங்கிக் கொள்ள வேண்டும் (must be read in between lines). ஆன்மிகத்திலிலுள்ள நுண்ணியக் கருத்துக்களை( subtleties of spirituality) வெளிக் கொண்டு வர இந்த இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மனிதன் தன்னுடைய எண்ணங்களை சக மனிதருடன் பரிமாறிக் கொள்வதில் இன்பம் காண்பவன். இப்படியாகத்தான் பல கலைகள் வளர்ந்துள்ளன. அவ்வாறு எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வது என்பது, நேரிடையாக உரைகள் (speeches) நிகழ்த்துவது, நூல்கள் எழுதுவது, தொலைபேசி, மின் அஞ்சல், இணைய தளம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட குறுந்தகவல்கள் மற்றும் கட்செவிஅஞ்சல் ஆகிய சாதனங்கள் வாயிலாக சாத்தியமாகிறது.

    இந்த பரபரப்பான உலகில் எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் சாதனம் வலைதளமாக இருப்பதால், இந்த ‘Prosper Spiritually’ (தமிழில்–ஆன்மசெழிப்புறு) என்கின்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தோசையைச் சுடச்சுட பரிமாறுவது போல், அன்றன்று இயற்கை அறிவிற்கு நல்கும் அரிய சிந்தனைகளை அன்றன்றே அன்பர்களின் அறிவுப்பசிக்கு(Quest for truth – the consciousness) அவ்வப்போதே விருந்தாகப் பரிமாறுவதற்கே இந்த ‘Prosper Spiritually- ஆன்மசெழிப்புறு இணையதள–சத்சங்கம்.

    மற்ற ஊடகங்களில்….

    ஏற்கனவே வானொலியில் குறளமுதம், சான்றோர் சிந்தனை ஆகிய நிகழ்ச்சிகள், காலையில், மற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்னரே ஒலிபரப்பப்படுகின்றது.

    ஆனால் ஒரு சில நிமிட நேரம்தான் ஒலி பரப்பப்படும்.

    ஒலி பரப்பப்படும் நேரத்தில் கேட்டால்தான் கேட்க முடியும். மீண்டும் கேட்க முடியாது.

    அந்த நேரத்தில் கேட்டு மனதில் இருத்திக் கொண்டு அன்று முழுவதும் அசை(assimilation) போடவேண்டும்.

    ஒரு சில வார்த்தைகள் நினைவிற்கு வராமல் போனாலும் போகும்.

    நினைவிற்கு வரவில்லை என்றால் எவ்வாறு சிந்தனை விருந்தை அசைபோடுவது?

    வேண்டுமென்றால் ஒலி நாடாவில் பதிவு செய்து மீண்டும் கேட்க வேண்டும். இது சிரமமான காரியம்.

    வானொலியில் ஒலி பரப்பப்படுவது போல் தொலைக்காட்சியிலும் அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அதுவும் குறுகிய நேரம்தான் இருக்கும் ஆனால் இணைய தளத்தில் அவ்வாறு இல்லை. ஒரு முறை அல்ல, நீங்கள் விரும்பியபடி பல முறை படித்தே மகிழலாம். மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்கு எழுத்து வடிவில் சில நாட்கள் இருக்கும். அதனால் இணைய தளத்தில் பகிர்ந்து கொள்பவைகள் மீண்டும் மீண்டும் படித்து பயன் பெற ஏதுவாக இருக்கும்.

    வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகள் வைத்துள்ளதற்கான காரணம் காலை வேளையில், நீங்கள், உங்கள் வழக்கம் போல் மேற்கொள்ளும் இறைவணக்கத்துடன், ‘சான்றோர் சிந்தனை’ நிகழ்ச்சியைக் கவனித்து வந்தால் அன்று முழுவதும் எங்கெங்கு சென்றாலும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் இறை விழிப்புடனும்(Godly awareness), புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கமுடியும்.

    வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!! வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க உலக நல நாட்டம்! வளர்க உலக நல நாட்டம்!!

    வாழ்க உலக மக்கள் நலமும் வளமும் பெற்று!

    வாழ்க உலக அமைதி! வருக உலக அமைதி விரைவில்!!

    “நீங்களும், உங்கள் அன்புக் குடும்பமும் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர்ந்த புகழ், மெய்ஞ்ஞானத் தெளிவு ஓங்கி வாழ இயற்கையின் ஆதிநிலையான இறைநிலை நின்று வாழ்த்தப்படுகின்றது.

    “Prosper Spiritually”

    —————————————————————————————————————————————————————– வாழ்க வளமுடன்!

    வருகின்ற 12-11-2017 ஞாயிறன்று அறிவிற்கு விருந்து நிகழ்வில் ‘செயல்விளைவுத் தத்துவமும், கருமையமும்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க சத்சங்கத்தில் கூடுவோம்.

    வாழ்க வளமுடன்

  • FFC-264 சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?3/3

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    FFC-264

    05.11.2017-ஞாயிறு

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 3/3

     

    [rev_slider home-slider-1]

    FFC-264-5-11-17-Maharishi takin claass

     

    கடந்தஅறிவுக்குவிருந்தில்

    1) சிந்திக்க வினாக்கள்

    2) சிந்திக்க அமுதமொழிகள்

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்.

    4) சிந்திக்ககுரு – சீடர்உரையாடல்.

    ஆகியநான்கு செய்முறைப்பயிற்சிகள் (PRACTICALS) மற்றும்அதன்நோக்கங்களைஅறிந்து கொண்டோம்.  இனிஅடுத்தபயிற்சிக்குள்  செல்வோம்.

    சிந்தித்தலின்அன்றாடசுயசோதனை:

    இப்பயிற்சியின்நோக்கம்:

       அவரவர்களே தங்களை சோதித்துக்கொள்ளுதலாகும்.  பயிற்சி என்றிருந்தால் அதன் முடிவில் தேர்வும், தேர்ச்சியும் இருக்க வேண்டுமல்லவா? நான்கு பயிற்சிகளையும் செய்து வரும்போது, தினந்தோறும் இரவில் தாங்களே சோதனை செய்து சிந்தித்தலில் தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிந்து கொள்வதாகும். அதாவது பயிற்சியின் முடிவில் சிந்தனை என்பது இயல்பாகிவிட வேண்டும். எவ்வாறு உயிர் வாழ்வதற்கு தொடர்ந்து சுவாசித்தல் அவசியமாகின்றதோ, அதுபோல் சிந்தனை என்பதும் வாழ்க்கையில் அவசியமாகிவிடவேண்டும்; இயல்பாகிவிட வேண்டும்.

       சிந்தனையுடன் செயலும்,  செயலுடன் சிந்தனையும் ஒன்றுக்கொண்டு பிரியாது இணைந்திருக்க (பந்தித்து நிற்க-உறவு கொண்டிருக்க வேண்டும்). இது நல்லோர் இயல்பு என்றும், பண்பு என்றும் கூறுகிறார் சிந்தனைச் செல்வரும், மற்றவர்களையும் சிந்தனைச் செல்வர்களாக்கி, மனிதனை தெய்வ நிலைக்கு உருவாக்கி வருகின்ற சிற்பியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல்லோர் இயல்பு பற்றி அவரே மொழிவதனைக் கேட்போம்.

    பயண வாகனமான ரயில் வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியம்போல், வாழ்க்கை எனும் அறிவின் பயணத்திற்கு சிந்தனையும், செயலும் அவசியம்.  சிந்தனை செய்து விட்டு செயலில் இறங்காமலும்.இருக்கக் கூடாது.  செயல்செய்யும் முன்னரே சிந்தித்தும் செயல்பட வேண்டும்.  அப்போதுதான் அறிவின் திறனான நுண்மாண் நுழை புலன் வெளிப்படும். இவ்வாறு பழகி வர, வர.  வினைகள்  நல்லவைகளாகவே இருக்கும்.  பழைய தீயவினைப்பதிவுகளும் செயலுக்கு வராமல் தடுக்கப்பட்டு. எப்போதும் பேரறிவின் அயராவிழிப்புணர்வு நிலையிலேயே இருக்கலாம்.  

    எவ்வாறு தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்? 

    இப்பயிற்சிக்கு,  குறிப்பெடுத்துக் கொள்வதற்காக, ஒருநாட்குறிப்பை (diary)  வைத்துக் கொள்ளுங்கள்.

    அதில் காலையிலிருந்து இரவு படுக்கைக்குச்செல்லும்வரை நீங்கள்சிந்தித்ததை எழுதுங்கள்.  

    ‘ஒன்றே பலவாகியும், அந்த ஒன்றே எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்ற’அத்வைத விஞ்ஞானத்தை அறிந்ததால், காலை உறக்கத்திலிருந்து விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை சந்திக்கின்ற மனிதர்கள், கண்ட காட்சிகள், நடந்த நிகழ்வுகள், தான் செய்த செயல்கள் அனைத்திலுமே  அந்த ஒன்றாகிய இயற்கையை/இறையின் திருவிளையாடல்களை  காணக்கூடிய வல்லமை இருப்பதால், விழிப்புணர்வோடு சிந்திக்க முடிவதால், ஒவ்வொரு நிகழ்விலும் கண்ட உண்மைகளை எழுதி வாருங்கள்.

    ஏற்கனவே அறிஞர்களின்வாயிலாகஅறிந்து கொண்டதில் எது உங்களுடன் ஒத்து வருகின்றதோ அதனையும் எழுதுங்கள்.

    அதுவரை அறிஞரின் சிந்தனை அவருடையதாக இருந்து வந்தது, இன்று உங்களுடையதாகி விடுவதை உணரலாம்.

    நினைவுபடுத்தி நீங்கள் தெரிந்துகொண்டது, மற்றும் நீங்கள் சிந்தித்தது ஆகியவைகளை குறித்து வாருங்கள்.  

    உலாவச் செல்லும்போதுகூட  நாட்குறிப்பை எடுத்துச்செல்லுங்கள்.

    சிலநேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும்.

    அவற்றைக்குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    இல்லையெனில்அக்கருத்துக்கள் மறந்து போகலாம்.

    மீண்டும் நினைவிற்குவராமல் கூட போகலாம்.

    ஏன் வராமல் போகின்றது? எந்த அலைச்சுழலில் ஒரு எண்ணம் வந்ததோ, மீண்டும் அந்த அலைச்சுழல் வரும்போதுதான் அவ்வெண்ணம் மீண்டும் வரலாம். அது பிறருடைய எண்ணங்களாக இருந்து நம்முள்ளே நுழைந்திருக்கலாம்.  அதனை சிந்தித்து சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி நம்முடையதாக்கிக் கொண்டால் அது மறந்து போகாது. சரியில்லை எனில் ஒதுக்கி விடலாம். 

     உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.

      பழக்கம்: 

        பழக்கத்தை(Habits) எடுத்துக் கொள்வோம். 

        ‘ஒரு செயலின் விளைவு நல்லதல்ல’ என்று

         அறியாமலோ, (அதாவது அறியாமையில் விளைவை அறியாமலோ)

                          அல்லது

         அறிந்து அலட்சியப்படுத்தியோ

                          அல்லது

          உணர்ச்சிவயத்தாலோ,

    அச்செயலை   மீண்டும் மீண்டும்  செய்து பழகிவிட்ட பிறகு, ‘அச்செயல்  நல்லதல்ல’ என்று அறிவிற்கு எட்டிய பிறகு, அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பயிற்சிகளை செய்து வரும்போது, பல இடர்பாடுகள் வருவதனைக் காண முடியும்.  திருந்த வேண்டும் என்று உளமார நினைக்கின்றவர்கள்  இச்சிரமத்திற்கு உள்ளாவர்.   ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருசில வேண்டாத பழக்கங்களாவது  இருக்கலாம்.  சிலருக்கு வேண்டாத பழக்கங்கள் நிறைய இருக்கலாம். அப்பழக்கத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்து வெற்றி பெறாமல் போனால் ‘இப்பழக்கத்தை நம்மால் மாற்றி அமைக்க முடியாது’ என்று  தீர்மானித்து,  தீமை தரக்ககூடிய அப்பழக்கத்தை மீண்டும் தொடர ஆரம்பித்து விடுவதனை கண்கூடாகப் பார்க்கலாம். 

       அந்நிலையில் இருக்கும் ஒருவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள பல்லாயிரம் அமுத மொழிகளில் ஒன்றைான ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற சீவன் மனிதன்’ என்பதனை கண்ணுறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  தன்னிலையையும், பழக்கத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.  அவ்வாறு இணைத்துப் பார்க்கும்போது தனக்கு மட்டும் அந்நிலை இல்லை, எல்லா மனிதர்களுக்குமே அந்நிலை உள்ளது என்பதனை அறிய முடியும்.  எனவே

         ‘திருந்த முடியவில்லையே’ என்கின்ற தன் தாழ்வு நிலையைத் தள்ளி வைத்துவிட்டு,  

         மீண்டும் வேண்டாத பழக்கத்தை மாற்றி அமைப்பதற்கு, கைவிட்டு விட்ட பயிற்சியினை மீண்டும்  

         தொடர்வதற்கு உந்துகோலாக அமையும்.  

       தன்னம்பிக்கை பிறக்கும். இறுதியில் வெற்றியும் பெறமுடியும். ஒன்றில் வெற்றி பெற்று விட்டால்,  மற்ற வேண்டாத பழக்கங்களிலும், விட்டுவிடுதலில் வெற்றி பெறுவது சுலபமாகிவிடும்.  இது எதனால் சாத்தியமாகின்றது?  சிந்திப்பதால் சாத்தியமாகின்றது.  மற்றொரு பழக்கத்தைப் பற்றி மற்றொரு அமுதமொழியின் வாயிலாகக் கவனிப்போம்.

    மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்’   . . .வேதாத்திரி மகரிஷி

       தற்போதைய மனிதனையும், அவனிடம் இருக்க வேண்டிய மனிதத்தையும், ஆனால் நடைமுறையில் அவனிடம் காணப்படும் மனிதத்தையும் ஆராய்ந்து உதிர்த்திருக்கிறார் உலக அமைதி அறிவியல்(Science of World Peace) அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள். சமுதாயத்தின் இன்றைய நிலைக்கு காரணம் ‘மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்’ என்பதுதான்.  760 கோடி மக்களைக் கொண்டதுதானே இன்றைய உலக சமுதாயம்.

        ஒழுக்கத்தில் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்று இரண்டு இருப்பதுபோல் பழக்கத்தில் நற்பழக்கம், தீயபழக்கம் என்று இரண்டு உள்ளன. தீமையைத்தருமானால் அது தீயபழக்கம். நன்மையைத் தருமானால் அது நற்பழக்கம்.      ‘பழக்கம்’ என்று பொதுவாகக் கூறக்காரணம் பழக்கத்தின் வலிமையை  உணர்த்துவதற்காகவே.    

    நல்வழி நடப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டும், அதனை செவிமடுக்காமல் இருப்பது ஒரு நிலை.  செவி மடுத்தாலும், நல்வழிக்கு திரும்புவதற்கு  பழகிய பழைய வேண்டாப் பழக்கங்கள் (பழக்கப்பதிவுகள்) தடையாக இருந்து கொண்டு அழுகணிசித்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சம்பவிப்பது மற்றொரு நிலை. ஆனால் அவருக்கு அச்சம்பவங்கள் ஏற்பட்டாலும் உறுதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் அவர். அதனால்தான் அவரை நாம் இப்போதும் நினைவு கூர்கிறோம். 

    பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்:

     ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்’

    என்கின்ற ஆன்றோர் மொழிகளைக் கவனிக்க வேண்டும்.  எந்த நற்பழக்கத்தையும் இளம் வயதிலேயே பழக வேண்டும்.  இதற்கு முதல் ஆசிரியர்களான பெற்றோர்களின் கடமை பெரும் பங்கு அளிக்கின்றது.    பிறகு ஐந்து வயதிலிருந்து  கற்பிக்கப்படும்  ஒழுக்கவியல் கட்டாயப் பாடம்தான் ஒழுக்கத்தை பழகச்செய்து ஒழுக்கப்பழக்க அறிவினை ஏற்படுத்த முடியும்.

    அமுத மொழிகள் அபயம் தருபவை:

     ‘அமுத மொழிகள் அபயம் தருபவை’ என்று அறிஞர்கள் கூறுவதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  அபயம் என்றால் என்ன?  அபயம்(அ+பயம்=பயமின்மை) என்றால் அச்சமின்மை, அடைக்கலம், பாதுகாப்பு(refuge, protection) என்று பொருள்.  குருவருள் இன்றேல் திருவருள் இல்லை. ஆகவே மகான்களின் அமுத மொழிகள் அபயம் தருகின்றன என்றால் என்ன பொருள்? மகான்களின் சன்னிதானத்தில்(அமுதமொழிகளில்)  அடைக்கலம் புகுதல் என்றாகின்றது. அடிமைப்படுத்திக் கொள்வது என்று பொருளல்ல. மகரிஷி அவர்கள் கூறும்  ‘சுயமாக சிந்தித்தே தெளிவாய்’ என்பதற்கான   ‘information, confirmation, transformation’ ஆகிய மூன்று வழிகளைப் பின்பற்றி ஏற்றுக்கொள்வதாகும்.

    அறிவு, குரு/மகான்களிடம் அடைக்கலம் புகுந்தால் என்ன பயன்?  எப்போதும், பூதஉடலோடு வாழும்போதும் சரி அல்லது பூதவுடலை நீத்தநிலையிலும், அவர்களின் சூட்சும–கண்காணிப்பு நம்மீது இருந்து கொண்டு நம்மை நற்பாதையில் வழிநடத்தும்.  நற்பாதையில் வழிநடத்துதல் என்பது தவறான பாதையில் செல்ல விடாது. அதாவது எச்சரித்துக் கொண்டே இருக்கும். அது பாதுகாப்புதானே! அருட்காப்பு தானே!

    எனவே அமுதமொழிகளை  சிந்தித்து பின்பற்ற வேண்டியது அறிவின் பயணமாகிய வாழ்வில்(Journey of Consciousness) அவசியம்தானே! மேலும் குரு/மகான்களின் அமுதமொழிகளில் தோய தோய, அது ‘எப்படி வாழ வேண்டுமோ அப்பாதைக்கு  மாற்றிக்கொள்வதில் ஏற்படும்  பயத்தை நீக்கி அஞ்சாமல் இருக்கவும்,  பழைய பழக்கப்பதிவால் தடங்கல்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறச் செய்யவும் உதவும்.

    ‘Fear is the Greatest Sin’ என்பார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சிந்தனை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்:

    இதுவரை இப்பூவுலகம் காணாத மாபெரும் சிந்தனாவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘சிந்தனை’ பற்றி கூறுவதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.  

     1) சொல்லால் மட்டும் நம்பாதேசுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்.  

     2) தெய்வத்தைப்போற்றி வழிபாடு செய்துவாழ்பவர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துய்வார்.

     3) இன்பத்தும் துன்பத்தும்,  இயற்கையும் கற்பனையும், சிந்தித்து அறிபவன்,  சிறப்பாகவாழ்வான்.

     4) சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு. 

     5)சிந்தனையாளர்களின் கடமைதான் முதன்மையானது.   மற்றோரும் சிந்தனையில் உயரவேண்டுமெனில். அதற்குச்சிந்தனையாளர்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

    1985 சனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ள, சென்னை தலைமை மன்றத்தில் 1984 ல் ‘சிந்தனை மூலம் சீரான வாழ்க்கை’ என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் ஆற்றிய உரையின்  ஒரு சிறு பகுதியினை நினைவு கூர்வோம்.

    ANBOLI95-3-14-11-2017

    “சிந்தனை செய்வது அவசியம் தானா; அது தேவைதானா; அப்படியென்றால் எப்படி அதைச்செய்ய வேண்டும்?”  என்றால் அது மிக மிக அவசியம்; தேவை.  அளவு, முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால் உலகமே அமைதி நிலைக்கு வந்துவிடும்.  இந்த தத்துவம் கடினமானதே அல்ல.  முனைந்து பயின்றால் இயல்பாகிப்போகும்.   ஏற்கனவே உள்ள பழக்கப்பதிவுகளின் காரணமாக தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும்—– மோட்டார் சைக்கிளை start செய்வதுபோல,  வண்டி ஓடத் தொடங்கிவிட்டது என்று சொன்னால் balance தானாக வந்துவிடும்.”

    நாம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும் பொழுது அந்த சிந்தனையில் தவறு வந்தால் அதைத் திருத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.  சிந்தனையே  இல்லாமல் வாழ்வது மிதந்து கொண்டிருப்பதற்கு ஈடாகும்.  வெள்ளம் வந்தால் நம்மை அடித்துக்கொண்டு போகும்; அவ்வளவுதான்; நாம் எங்கே போகின்றோம் என்று தெரியாது; எதை பிடிக்க வேண்டும் என்று தெரியாது.  இந்த நிலையிலிருந்து மாறி நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் சிந்தனை செய்ய இன்றே, இப்பொழுதே தொடங்க வேண்டும். 

                                                                                   … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்நாளில் தனது வம்சாவளிக்கு சொத்து சேர்த்து வைப்பதுபோன்று,  ஒவ்வொருவரும் தனது அனுபவம், ஆராய்ச்சி, சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு  ஐம்பது அமுத மொழிகளையாவது உருவாக்கித் தருவோம்.

    சிந்திப்போம்   சீர்பெறுவோம்.

    வாழ்க வையகம்         வாழ்க வளமுடன்

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு.

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச்செல்வம்.

    வாழ்க திருவேதாத்திரியம்  வளர்க திருவேதாத்திரியம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                                                வளர்க அறிவுச் செல்வம்

  • FFC-263 சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?2/3

     வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    FFC-263

    01.11.2017-புதன்

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 2/3

    Analysis_of_Thought

    கடந்த அறிவுக்கு விருந்தில் சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY) அறிந்துகொண்டோம். இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.

    சிந்திக்கும் அரிய கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அவசியம். அந்த பயிற்சி இந்த இணைய தள சத்சங்கத்தின் வாயிலாக வழங்கப்படுகின்றது. இந்த சிந்தனைப் பயிற்சி ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    1) சிந்திக்க வினாக்கள் மட்டும். 2) சிந்திக்க அமுத மொழிகள் 3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள். 4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல் 5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை.

    இப்பயிற்சிகளின் நோக்கங்கங்களைத் தனித்தனியாக அறிவோம். நோக்கம் அறியாமல் எந்த ஒன்றையும் செய்யக் கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவு எதனையும் அறிவு பூர்வமாகத்தான் அறிய விரும்பும். அதாவது அறிவு உண்மையை அறியத்தான் விரும்பும். ஏனெனில் அறிவு மெய்ப் பொருளிருந்து வந்ததுதானே? அதுவே மெய்ப் பொருள்.

    அறிவுபூா்வமாக அறியும் போதுதான் அது உள்ளத்திற்குச் சென்று, தரம் மாறுவதற்கு, மனம் ஒத்துழைக்கும். சிந்தனைப் பயிற்சியினை ஒரே பயிற்சியாக வைக்காமல் சிந்திக்கப் பழகுவதற்காக ஐந்து வகைகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதன் நோக்கத்தைத் தனித்தனியாக அறிய வேண்டும்.

    1) சிந்திக்க வினாக்கள் மட்டும் – இப்பயிற்சியின் நோக்கம்:

     “அறிவிற்கு விருந்து”  பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இது அறிவிற்கு விருந்தாகவும் மட்டுமல்லாது, சிந்தனையையும் மேலும் தூண்டி விடும். ஆனால்  “சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு அவற்றிற்கான விடைகளைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினாக்கள் (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளன.

    வினாக்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு விடைகளைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்விகளைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில்.

    2) சிந்திக்க அமுத மொழிகள் – இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அதனை ஏன் அமுத மொழிகள் என நாம் கூறுகிறோம்? அமுதம் என்கின்ற சொல்லுக்கு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

    வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் மூன்று இன்பங்கள் கிடைக்கின்றது. ஒன்று தாகம் தீர்கின்றது. மற்றொன்று நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது. உணவாகவும் அமைந்தது. நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தணிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்பங்கள் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

    இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும். தெளிவானால் அறிவு அறிஞர்களின் மொழிகளைக் கேட்பதற்கு விழையும். விழைந்தால் அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். இருட்டில் இருந்த அறிவு ஒளியை வீசும். அறிவொளியாகத் திகழும்.

    வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு? அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

    வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது மலமாகி வெளியேறிவிடும். ஆனால் அறிஞர்களின் அமுத மொழிகள் அறிவிற்கு என்றென்றும் அமுதமாக கருமையத்தில் பதிந்து தங்கிவிடும். ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும். இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும். மன தைரியத்தை ஊட்டும். நம்பிக்கையை வளர்க்கும்.

    எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையைத் தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல்) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

    அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

    வாழ்வியலைப்பற்றிய உண்மைகளைக் கூறும்.

    பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

    அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

    ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

    ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

    ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

    கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

    இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

    மன தைரியத்தை ஊட்டும்.

    நம்பிக்கையை வளர்க்கும்.

    பத்திற்கு மேற்பட்ட இவ்வளவு பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால் ஏன் அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறியவில்லை.

    பயனை  இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனிமேலாவது அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம்.

    அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடவேண்டும்.

    சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தெரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பாருங்கள்.

    அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும்; சலிப்பே இராது.

    நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள்.

    வாழ்க வளமுடன்.

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள் –   இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி, மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள். ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள் இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள். மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

    கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம். கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள். எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்

    கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது, அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி என்றால் வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப்பெருங்கடலை நீந்தி பிறவிப்பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

    1. நல்ல கவி (19-12-1962),

    2. கவியின் சிறப்பு (1954),

    3. சிறப்புடைய கவிகள் (1954),

    4. கவியின் பெருமதிப்பு,

    5. கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் (1954),

    6. கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல் (1954),

    7. கவியின் ஆற்றல் (1954),

    8. அருட்பா (1954),

    9. பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும் (1954),

    10. கவிகள் எவ்வாறு வருகின்றன? (1954)

    11. கீழ்த்தரமான கவிகள் (1954),

    12. கவிகள் பொதுச் சொத்து (1954),

    13. நிறைவாய் இருக்க (1988)

    ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார். 

    இக்கவிகளை ஞானக்களஞ்சியம் பாகம் – 1 ல் உள்ளன.  அதனை ஒரு முறை வாசித்து பயனடையுங்கள்.  மேலும் சிந்கிக்க கவிகள் பயிற்சியின் அவசியம் விளங்கும்.

    கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.

    பேச்சினைப் பெய்கின்ற மழையோடும்,

    எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும்,

    கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார்.

    இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.

    கவியின் பெருமதிப்பு (1954)

    ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம் பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம் உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம் பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும் பேரோட்ட முடை சீவநதி போலாகும்.                — வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும். கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும். . கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும். அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள்.. மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேலாகக் கவிகள் எழுதியுள்ளார்.

    கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது

    கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

    அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார்.

    அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு, அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும், மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனை ஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும். அவர்களின் கவிகளை வாசிப்பதும், நினைவில் கொள்வதும், உட்பொருளை நினைவில் கொள்ளுதலும் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.

    இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே   “அங்கிங்கெனாதபடி”  எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.

    FFC-62 -PIC - மகான்களின் படம்

    FFC-62-PNG-குரு வணக்கம்- அறிவே-பாடல்

    திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்? அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன, எனவேதான் மகரிஷி அவர்கள், அவர்களது சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார், ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அவா்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

    கவிகளால் சிந்தனை வளம் பெருகும். ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில்  “சிந்திக்கக் கவிகள்” என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    கவிகளால் பயன் பெறுவதில் நான்கு நிலைகள்:

    முதல் நிலை:  கவிகளை வாசிப்பது என்பது மூளை வரை மட்டுமே செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும்போது, அதற்கு மூளை உதவியாக உள்ளதால் ‘மூளை வரை செல்லும்’ எனப்படுகின்றது.  அதற்கு மேல் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்

    இரண்டாம் நிலை: இந்நலையில் மனம் வரை செல்லும்.  அதாவது கவியின் உட்பொருள் மூளையைக் கடந்து மனம் வரை செல்லும்.  அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    மூன்றாம் நிலை: மூளை, மனம் வரை சென்ற உட்பொருளை அறிவு பின்னர் உருவகப்படுத்திப்பார்ப்பது மூன்றாம் வகை.   இந்த நிலையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது  என்று பொருளாகின்றது.  அதனால்தான் அறிவு அதனைத் தீவீரமாக சிந்திக்கின்றது.

    நான்காம் நிலை:  கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் முழுப்பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருக்கும். கவியை வாசிக்கும்போது, கவி அருளிய அருளாளரை நினைந்து, நினைந்து, போற்றி, போற்றி அவரது அரிய திறமைகளைம் பெருமைகளையும் நினைத்து தனக்குள்ளாகவே மகிழலாம்.  வாய்ப்பு இருந்தால், ‘யான் பெற்ற இவ்வின்பம் பெரு இவ்வையகம்’ என்பதற்கிணங்க மற்றவர்களிடம் அதனைப் பற்றிப்பேசி தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும் மகிழ வைத்து ஊக்குவிக்கலாம்.  ஆனால் நம் கவனம் அறிவின் முழுமையை அடைவதிலேயே இருக்க வேண்டும். இது போன்ற மகிழ்ச்சி அவ்வைத்தாய் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் அவ்வைத்தாய் அறிவினரைச் சேர்ந்திருந்து அவரை கனவிலும், நனவிலும் நினைப்பதை இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய்.

    FFC-70-இனிது இனிது அவ்வையார் பாடல்

    4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்-இப்பயிற்சியின் நோக்கம்:

    மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம். தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமையும். ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்தை நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

    ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும். 

        இதுவரை சிந்தித்தலின் நான்கு பயிற்சிகளைப் பார்த்தோம்.  அடுத்த பயிற்சியான சிந்தித்தலின் அன்றாடசுயசோதனை பயிற்சியினை அடுத்த அறிவிற்கு விருந்து பகுதியில் 05.11.2017 அன்று அறிந்து கொள்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க  அறிவுச் செல்வம்


  • FFC-262 சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?1/3


    வாழ்க மனித அறிவு                                        வளர்க மனித அறிவு 

    lotus

    [rev_slider home-slider-1]

    FFC-262

    29.10.2017-ஞாயிறு

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 1/2

    ஆம்! அவசியம் தான்!

    சிந்தனை ஆறாம் அறிவின் வளம்:

    சிந்தனைவளம் இயற்கைவளங்களில் மிக மிகச் சிறப்பானதும், முதன்மையானதுமாகும். ஆறாம் அறிவின் துணை கொண்டு இயற்கை வளத்தைக் கண்டுபிடித்து, வாழ்வின் வளமாக்கி பயன் அடைந்து வரும் சமுதாயம் அதே இயற்கையின் ஆறாம் அறிவினுடையப் பயனாகிய சிந்தனை வளத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றது மிகவும் வருத்தப்படுவதாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிந்தயைாளர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மலர்கின்ற அச்சிந்தனைப் பூக்களின் வாசனையாவது நுகரப்படுகின்றதா என்றால் அதுவும் மிகமிகக் குறைவே.

    அவர்கள் கூறிய அறநெறி அறிவுரைகளையாவதுக் கேட்டு மனித குலம் திருத்திக் கொண்டு வாழ்கின்றதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை ஆகிய அதிகாரங்களை ஒதுக்கி அதில் பத்து குறட்பாக்களின் வாயிலாக ஒரு பொருள் பற்றி வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கூறியும் இதுவரை இந்த சமுதாயத்தில் ஒழுக்கமும் அறிவுடைமையும் சிறப்புற்றுள்ளதா? சமுதாயம் திருந்தியுள்ளதா?

    11230650_1612478765690891_6536263016119760624_n

    இயற்கைக்கு/இறைக்கு நாக்கு இல்லை:  

    தனக்கு நாக்கு இல்லை என்பதால் சிந்தனையாளர்களின் நாக்காக இருந்து கொண்டு, சிந்தனையாளர்களின் வழியாக, இயற்கை தன் குழந்தைகளுக்கெல்லாம் சொல்லியும் குழுந்தைகளின் கேளா அலட்சிய நிலையைப் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் இயற்கை அன்னைக்கு? சிந்தனையைாளர்கள் கூறுவது யாருடையது? இயற்கையினுடையதுதானே! இப்போது கூறிய இந்த இரண்டு கூற்றுக்களும் ஒருமை விஞ்ஞானத்தின் புரிதலின் வெளிப்பாட்டின் கீழ் கூறப்பட்டதாகும். ஏதோ மொழி வளத்திற்காக கூறுவதன்று.

    அமுதமொழிகளை ரசிப்பதே சிந்தனை-உயர்தலின் அறிகுறி:

    சிந்தனையாளர்கள் கூறும் வாழ்வியல் அறிவுரைகளைக் கேட்பதற்கே சிந்தனை அவசியமாகின்றது. முதலில் அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு உண்ண ஆர்வம் இருப்பது போல் அறிவுப்பசிக்கு உண்ண ஆர்வம் இருக்க வேண்டும். அதுதான் சிந்தனையாளர்கள் உதிர்க்கும் அமுதத்தை தேனமுதமாக்கி உண்ணுவதாகும். சிந்தனையாளர்களின் அமுதமொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருப்பதே சிந்திக்கக் கற்றுக்கொள்வதன் அறிகுறியாகும். அதுதான் சிந்திக்கும் கலையின் முதற்படியாகும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் அங்கே சிந்தனை வாடாப் பூ மலர ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    செல்வங்களில் முதன்மையானதுஅறிவுச்செல்வமாகும்:

    மனிதன் சிக்கலின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பல வளங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளங்களில் ஒன்று செல்வம். செல்வம் என்றால் பொதுவாக சமுதாயத்தால் கருதப்படுவது யாதெனில் பொருட்செல்வம் மட்டும் தான். ஆனால் செல்வ வளங்களில் முதன்மையானது அறிவுச்செல்வம். பொருட் செல்வத்தை ஈட்டுவதற்குக்கூட அறிவு தேவைப்படுகின்றது.

    சீர்திருத்தம்(06.05.1994)  

    சிந்தனையும் சிக்கனமும் சீர்திருத்தம் மூன்றும்,

    சிறப்பான செல்வவளம், வாழ்வின் வளம் நல்கும்.  — ஞா.க.: 1773

    Scientist of Consciousness

    நல்லோர் இயல்பு

    பண்பு(02.01.1955)

             சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,

               பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு.”     …       ஞா.க. 632

    பொருட் செல்வத்தை ஈட்டுவதற்கானத் திறமையை முதலில் அறிவு பெற வேண்டும். இங்கேயும், அதாவது பொருட்செல்வத்தைத் தேடும்போதுகூட அறிவு தேவையாய் இருக்கின்றது. பொருட்செல்வத்தை,

    • எவ்வாறு,
    • எவ்வழியில்,
    • எவ்வளவு ஆகிய அறவழிகளில் ஈட்டுவது,
    • ஈட்டியதை எவ்வாறு அறவழியில் சேமிப்பது.

    எவ்வழியில் தனக்கும், குடும்பத்திற்கும், மற்றும் வறியோர்க்கு ஈகையாக செலவழிப்பது ஆகிய முடிவுகளை அறிவுதான் எடுக்க வேண்டும். பொருட் செல்வம் ஈட்டுவதற்கும் அறிவு தேவையாக இருக்கின்றது. இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்குவதற்கும் அறிவுதான் தேவைப்படுகின்றது.

    ஆகவே செல்வத்தில் முதன்மையானது அறிவுச் செல்வமாகும். ஆனால் இத்தகைய அறிவைப் பற்றிய அறிவு(Knowledge of Consciousness) இல்லாமல் உள்ளது மனித சமுதாயத்தில். இது பெரும் குறை. இப்பெரும் குறையை வைத்துக் கொண்டு சமுதாயம் எவ்வாறு வளமாக, நலமாக, அமைதியாக வாழ முடியும்?

    அறிவைப் பற்றிய விஞ்ஞானத்தை(Science of Consciousness) இயற்கை, சாதாரண குடும்பத்தில், பேறு பெற்ற, கொடுத்து வைத்த சின்னம்மாள், வரதப்பன் தம்பதியினர் தவமிருந்து பெற்ற வேதாத்திரி எனும் தெய்வீகக் குழுந்தையும், பின்னர் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக எடுத்து இயம்புகின்றது, தயவு செய்து அதனைப் படித்து நலம் பெறுங்கள்.

    Studied in the city of the Universe:

    Who studied in the city of the Universe? நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி தான் பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் படித்து மகத்தான வெற்றியும் பெற்றிருக்கிறார்.  

    அதன் விளைவுதான்

         இயற்கையியல்,

         ஒருமையியல் (Science of Oneness–Science Of Pure Advaida),

         அறிவின் அறிவியல்(Science of Consciousness)

         வாழ்வியல், 

        குடும்பவியல்,

         உலக அமைதியியல்(Science of World Peace).    ஆகிய இயல்களின் தோற்றம்.

    மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள வேதாத்திரி மகரிஷியினுடைய, இயற்கையியல் மற்றும் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை இயற்கையால் கொண்டு போக முடிந்துள்ளதற்கான காரணம் மகரிஷியின் சிந்தனைகள் தான்.

    திருவள்ளுவர், திருமூலர், அவ்வையார் போன்ற அறிஞா்கள் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றனர்? அவா்கள் இயற்றிய அறநூல்கள் தான் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகின்றனர் மாணவர்கள். அறிஞர்கள் சிந்தித்ததன் பயனாக பின்னர் வரும் சமுதாயம் பயன் பெறுகின்றது.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக்கழக்தில் படித்த இரகசியம் வெளிவந்த நிகழ்ச்சி ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்ததை அறிந்து கொள்வோம்.

    மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகக் கூட்டத்தில் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்தாராம். மகரிஷி அவர்களின் பேச்சால் ஆச்சரியமடைந்த அமெரிக்கர்கள் மகரிஷி அவர்களிடம் “You are speaking on a wide variety of topics. Which was the University you studied in, Swamiji?” எனக்கேட்டார்களாம். அதற்கு மகரிஷி அவர்கள் “ I did not study in any University; I only studied in the city of the Universe” என்றாராம். மகரிஷியின் இக்கூற்று உண்மைதானே!

    அதாவது இயற்கை அவருக்கு அறிவுறுத்தி அவர் சிந்தித்ததை மற்றும் உள்ளுணர்வாகப் பெற்றதை வாழ்க்கையில் நடைமுறையில் சரியாக உள்ளதா, என உறுதி செய்ததை, எல்லாவற்றையும் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார் உலநலத்தொண்டரான அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதுவும் அவர் படித்தது பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் என்பதும் சரிதானே! அருந்தவத்தால், அவர் மனதை பிரபஞ்சம் வரை விரித்து அங்கேயே நிற்கின்ற பழக்கத்தை கைவல்யப்படுத்திவிட்டார். ஆகவே, இது வரை வாழ்ந்த அறிஞர்களின் வாயிலாகவும், இயற்கை அவருக்கு, உணா்த்தியதை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் சாத்தியம் என்றும் கூறுகிறார்.

    தாத்தா விதைத்த அவரைச் செடி:

    ஒரு முறை. கும்பகோணத்தில் நடந்த பயிற்சியின் முடிவு நாளன்று, அவரது உலக நலத்தின்பால் உள்ள எண்ணத்தை, அவா் ஒரு கதையின் வாயிலாகக் கூறினார். தாத்தா ஒருவர் அவரை விதையை நிலத்தில் ஊன்றி, நீர் ஊற்றி, அது முளைத்து, வளர்ந்து கொடியாகி, அதற்கு பந்தலும் போட்டு விட்டார். கொடி உயர்ந்து காயும் காய்த்து விட்டது. ஆனால் பந்தலுக்கு மேல் உயர்ந்த கொடியில் காய்த்திருக்கும் காயை அவரால் எட்டிப் பறிக்க முடியவில்லை. அதற்கு அவரது பேரன் அவரிடம்  “தாத்தா! என்னை உங்கள் தோள் மீது ஏற்றி உட்கார வையுங்கள். உங்கள் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு காயைப் பறிக்கிறேன் என்று கூறினானாம்.

    இந்த கதையைக் கூறிவிட்டு மேலும் மகரிஷி அவர்கள் தொடர்ந்தார். அவரது மாணவ–நண்பர்களிடம் கூறியதாவது:-  

    அதுபோல் நான் அவரைச் செடியின் விதை ஊன்றி, செடியும் முளைத்து, பந்தலும் போட்டு விட்டு. கொடி படர்ந்து பூ பூத்து காய்க்க ஆரம்பித்து விட்டது. நீங்கள் என் தோளின் மீது உட்கார்ந்து காயைப் பறியுங்கள். இயற்கை எனக்குத் தெரிவித்ததை எல்லாம் நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். ஒன்றையும் விட்டு விடவில்லை. இனி இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் எளிதாக சிந்திக்க முடியும். நீங்கள் ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள். ஆன்மீகத்தில் ஆழ்ந்து போனால், இச்சை இல்லாமலாகி, புலன் இன்பமே அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்கின்ற மாயையான அச்சத்தை நீக்கி, ஆன்மீகத்தை வாழ்வியலாக்கி அரும்பெரும் சாதனைகளைப் படைக்க இருக்கின்றீர்கள்” என்றார்.

    சிந்திக்கவில்லை எனில் அது ஐந்தாம் அறிவு:  

    அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கு அறிவு சிந்திக்க வேண்டும். சிந்தனை என்பது மனித வாழ்விற்குத் தேவையான வளமாகும் மனித இனத்திற்கும் ஐயறிவு விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடே ஆறாம் அறிவுதான். சிந்திக்கின்ற அறிவுதான் ஆறாம் அறிவு. சிந்தித்தால்தான் அது ஆறாம் அறிவு. இல்லை எனில் அது ஐந்தாம் அறிவு. எப்படி? சிறு நடைமுறை நடப்புகளின் வாயிலாக அறிவோம்.
    இருவருக்கு இடையே வாய்ச்சண்டை நடக்கும் போது, அது அதிகமாகி, முதலாமவர், இரண்டாமவரை  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே.” என்றால் இரண்டாமவருக்குச் சினம் பொங்கி, அதிகமாகி, கையை ஓங்கி முதலாமவரை அடிப்பதற்கு செல்வதைப் பார்த்திருக்கலாம். காரணம் என்ன?

    ஒரு காரணம், முதலாமவர் இரண்டாமவரை சொன்னது முதலாமவருடைய கீழ்த்தரத்தைப்(மிருகம் என்று கூறியது) பற்றிய உண்மைக்கூற்று.

    இரண்டாவது காரணம், மனிதர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள், ஏங்குபவர்கள். தன்னைப் பற்றி கற்பனையாக, பொய்யாக பிறர் புகழ்ந்துரைத்தாலும், அதில் மகிழ்ச்சி அடையும் இயல்புடையவர்கள். எனவே,  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே” என்று இரண்டாமவரின் கீழ்த்தரத்தைச்சுட்டிக்காட்டியது இரண்டாமவருக்கு அவமானமாகி விட்டது.

    சிந்தித்திருந்தால் அங்கே சண்டைக்கே வாய்ப்பில்லை. சிந்திக்காததால் சினம் அதிகமாகி கைகலப்பு ஏற்படும் அளவிற்கு சென்று விடுகின்றது, சில நேரங்களில் கொலை நடக்கும் அளவிற்கும் சென்றுவிடுகின்றது நிலைமை. பிறகு வாழ்நாள் முழவதும் வருந்த வேண்டியுள்ளது, சிந்தித்தல் பொறுமையைத் தரும். அறிவு ஆட்சி செய்திருக்கும் அந்த நிகழ்வில். பின் விளைவுகளைத் தடுத்திருக்க முடியும். நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர் மிருகமாகி விட்டார்.

    சிந்தித்தல் ஆறாம் அறிவின் சிறந்தகலை:

    சிந்தித்தால்தான், ஆறாம் அறிவு,

     பரிணாமத்தில் மனித இனத்திற்கு முந்தைய இனமான விலங்கினப் பண்பின் வாசனையால், மறந்தும்,

     ஐந்தாம் அறிவாக செயல்பட விடாமல்,

     ஆறாம் அறிவாகச் செயல்பட முடியும்.

    சிந்தித்தல், ஆறாம் அறிவை முதன்மைச் செல்வமாக்கும், துன்பங்கள் நீங்கி பேரின்பத்தை அனுபவிக்கச் செய்யும். சிந்தித்தல் என்பது ஆறாம் அறிவின் சிறந்த கலை.

    எல்லாக் கலைகளிலும் எல்லோராலும் சிறந்து விளங்க முடியாது. ஏதாவது ஒரு கலையிலும் எல்லோராலும் சிறந்து விளங்குவது சாத்தியமில்லை. ஆனால் சிந்தித்தல் கலை எல்லோருக்கும் பொதுவானது. ஏனெனில் மனிதன் என்கின்ற உயிரினத்திற்கு அடையாளம் ஆறாம் அறிவே. மனிதனுக்கு அடையாளமான ஆறாம் அறிவினுடைய அடையாளமே சிந்தித்தல் தானே. ஆகவே சிந்தித்தல் எல்லோருக்கும் பொதுவானதாகின்றது. சிந்தித்தல்தான் ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும். ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலோர் சிந்திப்பது கிடையாது. சிறந்த சிந்தனையாளர் என்று புகழப்படும் அளவிற்கு சிந்திக்கமுடிய வில்லையாயினும் வாழப் பிறந்துவிட்ட மனிதன் வாழ்க்கையை வெற்றிகரமாக துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்காவது கீழ் கண்டவாறு சிந்திக்க வேண்டாமா?

    • நல்லெண்ணமாக இருப்பதற்கு எண்ணத்தை ஆராய வேண்டாமா?
    • பேராசை ஆட்டிப்படைக்காமல் இருக்க, ஆசையை சீரமைக்க வேண்டாமா?
    • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலை என்று தெரிந்தும் சினம் தவிர்க்க வேண்டாமா?
    • இன்பத்தைச் சுரண்டும் கவலையை ஒழிக்க வேண்டாமா?
    • அறிவிற்கு விருந்தளிக்க நான் ஏன் பிறந்தேன் என தெரிந்து கொள்ள வேண்டாமா?

    சிந்தனையின்மையால் தான் வாழ்க்கையில் தவறுகள் நடக்கின்றன. அதன் விளைவுதான் துன்பமாகின்றது. தனக்கு மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் துன்பம் ஏற்படுகின்றன.

    கூர்மை என்பது எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்?    

    அறிவு தன்னுடைய திறனைப் பற்றிக் கூறுவதற்கு  ‘அறிவுக்கூர்மை’ என்கின்ற சொல்லை ஏற்படுத்திக் கொண்டது. கூர்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்? உருவம் உள்ள பருப்பொருளுக்கு கூர்மை இருப்பது சாத்தியமாகும். உதாரணத்திற்கு காய் நறுக்கும், உருவமுள்ள கத்தி கூர்மையாக இருக்கும். இருக்க வேண்டும். இல்லை என்றால் காய் நறுக்கவே முடியாமலும் போகலாம். அல்லது எளிதாக நறுக்க முடியாது. சிரமப்பட்டுதான் காயை நறுக்க வேண்டும். காய் நறுக்குவதில் நளினம் இருக்காது. கத்தி கூர்மையாக இருந்தால் தேவையில்லாது சிரமப்பட வேண்டியதில்லையே! இந்த விளக்கம் உருவமில்லா கத்தியைப் பற்றியது.

    ஆனால் நாம் இப்போது சிந்திப்பதோ உருவமில்லா அறிவினுடையக் கூர்மையைப் பற்றி. அறிவிற்கு உருவமில்லை என்பதால் அறிவில் எவ்வாறு கூர்மை சாத்தியம் என ஐயம் எழலாம். குழந்தையின் அழகை வர்ணிக்கும் போது மூக்கு கூா்மையாக உள்ளது என்கிறோம். ஏனெனில் மூக்கிற்கு உருவம் இருக்கின்றது. ஆனால் உருவமில்லாத அறிவிற்கு கூர்மை என்பது என்ன? சிந்தித்தல்தான் அறிவின் கூர்மை. அறிவு கூர்ந்து கவனிப்பதையே அறிவின் கூர்மை என்கிறோம். அறிவின் கூர்மையேதான் சிந்தனை என்பதாகும். இப்போது சிந்தனைப் பயிற்சி பற்றி அறிவோம்.

    சிந்தனைப் பயிற்சி:

    எந்த ஒரு கலையையும் பயிற்சி செய்துதான் அக்கலையில் வெற்றி பெற முடியும். சிந்தித்தல் என்பது ஒர் அரிய கலையாக உள்ளது மனித குலத்திற்கு. ஏனெனில் மனிதர்களில் சிந்திப்பவர்கள் மிக மிகச் சிலரே. ஏன் பிறந்தோம், எங்கே செல்ல இருக்கிறோம், இன்பதுன்பம் ஏன் வருகின்றது என்றுகூடத் தெரியாமல் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.சிந்தனை என்பதும் எண்ணம் தான், ஒரு பொருள் பற்றி ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுந்து விடை கண்டுபிடித்து தெளிவு பிறக்கும் வரை மனதில் தொடர்ந்து எழுபவைகள் அனைத்தும் எண்ணங்கள்தான். மனம் எண்ணுகின்றது. எண்ணும் நிலைகள் மற்றும் தரத்தை வைத்து மனம் ஐந்து நிலைகளில் இயங்கக் கூடியதாகக் கண்டுபிடித்துள்ளனர். அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்ற அறிதல் கலைஞா்களாகிய அறிஞர்கள்(அறிவை அறிந்த கலைஞர்கள் அறிஞர்களாவர்)

    முதல் இரண்டு நிலைகளிலேயே வாழ்கையின் முடிவு:

    1) அன்னமய கோசம்
    2) மனோமய கோசம்
    3) பிராணமய கோசம்
    4) விஞ்ஞானமய கோசம்
    5) ஆனந்தமய கோசம்

    ஆகிய ஐந்து நிலைகளில் மனம் இயங்கும். கோசம் என்றால் உறை என்று பொருள். பெரும்பாலோருக்கு அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய முதல் இரண்டு நிலைகளிலேயே மனம் இயங்குகின்றது. சாப்பிடுவது மற்றும் அன்னத்தின் மீது மனம் செல்வது. ஆகவே பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அன்னமய கோசம் மற்றும் அன்னைத்தைப் பற்றிய மனோமய கோசத்திலேயே மனம் இயங்குகின்றது. 

    “தின்றுத் திரிந்து உறங்கவோ பிறந்தோம்?” என்கிறார் மகரிஷி அவர்களும் 

    சமூகநல ஆர்வலர்களின் எண்ணம்:

     “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கிறாரே அவ்வைத்தாய். எப்படி மானுடப் பிறவி அரிதாக இருக்க முடியும்? சிந்திக்காமல் இருந்தால் இந்தப் பிறவி அரிதானதாக இருக்கமுடியுமா? எல்லோருமே சிந்தித்து விஞ்ஞானி ஆக முடியுமா என்று கூட ஐயம் எழலாம். விஞ்ஞானியாக இருந்தாலும் அஞ்ஞானியாக இருந்தாலும், இருவருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே வாழ்வியல் விஞ்ஞானம் எல்லோருக்குமே பொது. ஆகவே எல்லோரும் வாழ்வியல் விஞ்ஞானிகளாக வேண்டும். இதுவும் சற்று இயலாத காரியமாக இருப்பதால் வாழ்வியல் சூழலையாவது அறிஞர்கள், பொறுப்புடைய தலைவர்கள் ஏற்படுத்தி மனிதகுலம் தன்னுடைய பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமும் ஆர்வமும்.

    ஆனந்த வாழ்விற்கு மூச்சு போன்று தொடர் சிந்தனை அவசியம்:

    வெகு சிலருக்குத்தான் மனம் மூன்றாவது நிலையான பிராணமய கோசத்தில் இயங்குகின்றது. அவர்களிலும் வெகுச் சிலருக்குத்தான் மனம் நான்காவது நிலையான விஞ்ஞானமய கோசத்தில் இயங்குகின்றது. இவர்களே சிந்திப்பவர்கள். இந்த சிந்திப்பவர்களிலும் ஒரு சிலரால்தான் ஆனந்தமய கோசத்தில் மனதை இயங்க வைக்க முடிகின்றது. ஆகவே மனிதன் ஆனந்த வாழ்வு வாழ சிந்தனை, தொடர் சிந்தனையாக அமைய வேண்டும். பெரும்பாலோர் சிந்திக்காததுதான் இன்றைய மனிதகுல அமைதியின்மைக்குக் காரணம். இதுவரை சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY)அறிந்து கொண்டோம்.

    இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.  

     வரும் 01.11.2017 புதன் அன்று அறிவிற்கு விருந்து பகுதியில்  இதன் தொடர்ச்சியைக் காண்போம்.  ….தொடரும்

    வாழ்க மனித அறிவு!     வளர்க மனித அறிவு!!