இன்றைய விருந்து

  • 221-பிறவிப் பயனை நல்கும்! 5/?

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     
    பிறவிப் பயனை நல்கும்! 5/?

    அறிவிற்கு விருந்து—221

    28-08-2016—ஞாயிறு

    மகரிஷி அவர்களின் 106 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இரண்டு வாரங்களாக மனவளக்கலையின் இறுதிப்பயனை அடைவதற்கு நம்குருநாதர் அவர்கள் அளிக்கின்ற உறுதியாகிய ‘பிறவிப்பயனை நல்கும்’ என்பதனை ஆராய்ந்து வருகிறோம்.
    பிறவிப்பயன் என்ன என்பது ஏற்கனவே அறிந்திருந்தாலும், அந்த அறிதல்/புரிதல் வெறும் வார்த்தை அளவில் இருந்துவிடமால், செயலாவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘பிறவிப்பயன்’ என்ன என்பது பற்றி வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். பிறவிப்பயன் என்பது இறைஉணர்வு என்றாலும், இறைஉணர்வின் மனவுரு(CONCEPT OF GOD REALISATION) பற்றி சிந்தித்து வருகிறோம். இந்த ஆராய்ச்சியின் முடிவில் கிடைக்கும் தெளிவைக்கொண்டு, எவ்வாறு குருவை மதித்து ஒழுகி பிறவிப்பயனை அடைவது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    ஆகவே இன்றைய விருந்தில் பிறவிப்பயனை அடைவதற்கான பேரின்பப்படிகளில் இரண்டாவது படியான மனத்தூய்மை பற்றி சிந்திப்போம். மகரிஷி அவர்கள் அருளிய அப்பாடல் வரிகளை நினைவு படுத்திக்கொள்வோம்.

    “பின்அந்த எல்லையினை அடைவதற்கு
    அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து,
    ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்”

    பாடலின் வரிகளை உற்று நோக்குவோம். உற்று நோக்கும் போது ‘பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெறுதலுக்கு’ மகரிஷி அவர்கள், என்னென்ன செயல்கள் செய்தார் என்பதனை அறிய முடிகின்றது. முதலில் பிறவிப்பயனை அறிந்திருக்கிறார். ‘இறை உணர்வு பெறுதல் என்பது மனம், செயல் தூய்மை அடைவது’ என்பதால், விழப்புடன் பயிற்சிகள் செய்தும், மனத்தூய்மைக்கு, பொறுப்புணர்ந்து செயல்கள் ஆற்றி மனம் தூய்மை பெற்றார்.

    தன்முனைப்பு நீங்கிய மனத்தூய்மை அவசியம்:

    ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்ற அகத்திய மகரிஷிகளின் அருள் மொழி நம் கவனத்திற்கு வருகின்றது. என்ன கூறுகிறார் அகத்திய மகரிஷி அவர்கள்?

    மந்திரங்கள் உச்சாடனம் செய்து இறையை உணர்வது ஒரு முறை. எவ்வாறு மந்திரங்கள் உச்சாடனம் செய்வது இறையை உணரச் செய்யும் என்கின்ற ஐயம் எழுகின்றது. மந்திர உச்சாடனம் என்பது மனம் தூய்மை அடைவதற்காகச் செய்வது. மனம் தூய்மை அடையாமல் மனதின் மறுமுனையான இறையை எவ்வாறு உணரமுடியும்? அவ்வாறு மந்திர உச்சாடனம் செய்து மனம் தூய்மை அடைந்து, இறைதரிசனம் கிட்டிய பிறகு மந்திர உச்சாடனம் அவசியமில்லை  என்று கூறுவதுபோல் தெரிகின்றது. அப்படியல்ல. இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில், இறைஉணர்வு பெற ‘தன்முனைப்பு நீங்கிய மனத்தூய்மை அவசியம்’ என்பது தெளிவாகின்றது. தூய்மையாகிய மனம் இறை உணர்வில் தோய்ந்து விடுகின்றது. ‘மந்திர ஜபிப்பதனை விட்டுவிடுவது’ செய்தியல்ல. எத்தனை காலம் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே இருப்பது; அதன் பயனை அடையும் வகையில் மந்திரத்தை சிரத்தையோடு ஜபித்து செயல்கள் ஆற்றி மனம் தூய்மையாக வேண்டும் என்பதனைத்தான் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    பிறவிப்பயன் இறை உணர்வு பெறுவது, அதற்கான பயிற்சிகள் தவமும் தற்சோதனை சிறந்த வழி என்றிருந்தாலும், இறை உணர்வு பெறுவதன் உட்பொருள் மனம் தூய்மை அடைய வேண்டும் என்பதால் மனம் தூய்மை அடைந்ததையே இரண்டாவது பேரின்பப் படியாகக் கூறுகிறார்.

    எவ்வாறு மனத்தூய்மை பேரின்பத்தை நல்கும்?

    அவ்வைத்தாய், மனிதப்பிறவியினை அரிதானது என்றும், அவ்வாறு மனிதப்பிறவி எடுத்ததன் பயனை யாரும் அடைவதில்லை என்பதனை அரிது அரிது மானுடனாய் பிறத்தல் அரிது என்று துவங்கும் பாடலில் கூறுகிறார். இதேபோன்று மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலர் கூறுவதனைக் கவனிப்போம். அரிதான ஒன்றை அடைவது சாதாரண புலன் வழி இன்பத்தைவிட அளவில் அதிகமாகத்தானே/பெரியதாகத்தானே இருக்கும். எனவே அது பேரின்பமாகின்றது,

    ஏழாவது தந்திரத்தில் ‘கேடுகண்டிரங்கில்’ என்கின்ற அதிகாரத்தில், மனித வாழ்க்கையின் நிலையினைக்கண்டு இரங்கி பாடியுள்ள ‘மனிதப் பிராணிகள் இவர்’ என்கின்ற பாடலை நினைவு கூர்வோம்.

    மனிதப் பிராணிகள் இவர்

     பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
    பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்
    பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
    பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.          . . . திருமந்திரம் 2090

    அரிதான மானிடப் பிறவி எடுத்தும், பெறுவதற்கு அருமையான மெய்ப்பொருளின் திருவடிகளைப் போற்றித் துதிக்க நினைக்க மாட்டார்கள். பெறுவதற்கு அருமையான மனிதப் பிறவியைப் பெற்றிருந்தும் சிந்திக்கும் உணர்வின்றி விலங்குகளைப் போல வாழும், இந்த மனித மிருகங்களெல்லாம் பிறவியின் பயனை பெற முடியாத பேரின்ப வாழ்வு பெறும் வாய்ப்பை இழந்தவராகிவிட்டனர் என்கிறார் திருமூலர். ஐயோ பாவம் என்கிறார் திருமூலர் என்பது குறிப்பு.

    மற்றொரு பாடலையும் நினைவு கூர்வோம்.

    பிறவிக்கடல் நீந்தப் பாருங்கள்:

     இக்காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
    புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
    எக்காலத்து இவ்வுடல் வந்தெமக்கு ஆனதுஎன்று
    அக்காலம் உன்ன அருள் பெறலாமே.                      . . . திருமந்திரம் 2106

    இப்பாடலுடன் மகரிஷி அவர்கள் முழு மனிதன் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலை இணைத்துப்பார்த்து, அறிவை திடமாக்கி, அருளாளர்களோடு இணைந்து அவர்களின் அறிவுரைகளை செவிசாய்த்து, ஆய்விற்கு உட்படுத்தி முடிவு செய்து அருளைப் பெறுவோம். இத் திருமூலமந்திரத்தின் பொருளைக் கவனிப்போம். மரணம் அடைந்த உடன் இந்த உடம்பு இன்னொரு உடம்பில் புகுந்து மற்றொரு பிறவி எடுக்காமல், அதாவது பிறந்து பிறந்து இறக்காமல், பேரின்பம் அடையச்செய்யும் வழியினைப் பாருங்கள் என்கிறார். இந்தப்பிறவியைப் பெற்றதற்கான காரணத்தை எண்ணிப்பார்த்தாலே இறை அருள் கைகூடும் என்கிறார். அதாவது அப்படி எண்ணிப்பார்க்கும்போது, அறிவு சிந்திக்க ஆரம்பித்து பிறந்த நோக்கத்தை அறிய ஆரம்பித்துவிட்டது என்றாகிவிடுகின்றது. எனவே வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தயாரான ஆன்மாவிற்கு பேரான்மாவே துணைசெய்ய, அருள்புரிய காத்திருக்கின்றது. அவ்வாறு சிந்திக்கும்போது வினைப்பயனே பிறவிக்குக் காரணம் என்றும், அதை உணர்ந்து கொண்டால் தீவினைகளை விலக்கி வாழ்ந்தால், அப்படி வாழ்பவர் இறையருள் பெறலாம் என்கிறார்.
    எனவே வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் வந்துகொண்டிருக்கும் அருளாளர்களின் ஒருமித்த உண்மை–கண்டுபிடிப்பு (கருத்து) மனிதப்பிறவியின் பயன் இறைஉணர்வு பெறுதலே என்பதேயாகும்.
    மனிதப்பிறவியின் நோக்கத்தை அறிதலே பேரின்பமாக இருக்கும்போது, அதனை முடிவாக அடைய, மனதை தூய்மையாக்குதல் என்பது என்பது பேரின்பமாகத்தானே இருக்கும்!
    3047 மந்திரங்களில் குறிப்பாக இந்த இரண்டு திருமந்திரங்கள் இதுவரை நினைவுகூறப்பட்டு விளக்கம் அறிந்த பயனாளிகள் யார் யார் என்பது நமக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் ஆன்ம சாதகர்கள் பலர் இந்த இரண்டு மந்திரங்களைக் கண்ணுற்றிருப்பார்கள். பயனடைந்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மந்திரங்களை நாம் அறிந்து சிந்திக்க எடுத்துக்கொண்டது யாரால் சாத்தியமாகியது? வேதாத்திரியத் தந்தை தன்னுடைய இறைஉணர்வு பெற்ற அனுபவத்தை பாடலாக இயம்பியுள்ளதால் அன்றோ சாத்தியமாகியது.

    புத்தர் பெருமான் பல பொன்மொழிகளை உதிர்த்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக சொல்வது யாதெனில்
    “நீங்கள் நல்லவராக இரு ங்கள்; அதுபோதும்” என்பதே. எனவே யார் எப்போது நல்லவராக இருக்க முடியும்? மனிதன் மனிதனாகப் பிறந்த பொறுப்பை உணர்ந்து, மனத்தூய்மையோடு வாழ்ந்தால்தானே நல்லவர்.

    எனவே இப்போது மனம் தூய்மை அடைந்ததில் மகரிஷி அவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்வோம். முதல் படியான பிறவிப்பயனை அறிந்ததிலேயே பேரானந்தம் அடைந்து பின்னர் அதனை அடைய மனம் தூய்மை அடைந்ததனை இரண்டாம் படியாகக் கூறுகின்றார்.

    ‘பிறவியின் நோக்கத்தை அறிந்த போதும்,
    பின் மனம் செயல் தூய்மை ஆனபோதும்,
    துய்த்த பேரின்பம் எவ்வாறுரைப்பேன்!’

    என்று பாடலை முடிக்க வில்லை. மனம் தூய்மை ஆன வழியினைக் (PROCESS OF PURIFICATION OF MIND) குறிப்பிடுகிறார். அதனை மகரிஷி அவர்கள்,

    ‘பின்அந்த எல்லையினை அடைவதற்கு
    அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து ஆற்றி’,

    என்கின்ற இரண்டு வரிகளில் கூறுகிறார்.

    பேரின்பப்படிகளில்(MAIN LADDER FOR ENJOYING ECSTASY) ஒன்றான மனம் தூய்மை அடைவதில் மற்றுமொரு துணை ஏணிப்படியினை (SUB LADDER) அறிவிக்கின்றார்.

    மனம் தூய்மை அடையும் ஏணிப்படிகள்:

    1) முதலில் மனம் தூய்மை அடைவதில் உள்ள எல்லையினை உணர்தல்
    2) அவ் எல்லையினை அடைவதற்கு வேண்டிய அறநெறி
    அ) ஒழுக்கம்
    ஆ) கடமை
    இ) ஈகை
    3) பொறுப்புணர்வு
    4) விழிப்புணர்வு
    5) செயல்கள் புரிதல்
    6) மனத்தூய்மையில் பேரின்பம் துய்த்தல்

    மனம் தூய்மை அடைவதற்கு மேலே கூறப்பட்டுள்ள ஆறு துணைப்படிகள் அவசியமாகின்றன. ஒவ்வொரு படிகளாக ஆராய்வோம்.

    1) மனம் தூய்மை அடைவதில் உள்ள எல்லையினை உணர்தல்:

    எல்லை என்பதன் பொருள் என்ன இங்கே?! இங்கு எல்லை என்பதனை இலட்சியம் என்றும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக எல்லை என்றால் என்ன? ஒரு நாடு, மாநிலம் முடியும் இடம். நகரம், ஊர் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு. இப்போது மனம் தூய்மைக்கு உள்ள எல்லையினை அறிய வேண்டுமா? அல்லது மனதின் எல்லையினையே அறிய வேண்டுமா? மனதின் எல்லையினை அறிந்துவிட்டால், பின்னர் மனத்தூய்மையின் எல்லையினை அறிவது சுலபம். பொதுவாக எல்லை என்றால் ஒரு இடத்தின்(பருப்பொருள்) பரப்பைக் குறிக்கும். இடம் என்பது பருப்பொருள் வகையைச் சார்ந்தது.

    ஆனால் மனமோ அரூபம். மனம் அரூபம் என்று சொல்வதைவிட அரூபா-ரூபம் என்றே சொல்லலாம். மனதிற்கு உருவமில்லை என்பதால் அது அரூபமாகிறது. ஆனால், மனதிற்கு உருவமில்லை என்பதால். அதனைக் காட்ட முடியாததாக இருந்தாலும் மனம் இல்லை எனக் கூறமுடியாது. எனவே மனம் அரூபா-ரூபம். பருப்பொருளல்லாத இத்தகைய தன்மை உள்ள மனதிற்கு எல்லை இருக்கின்றதா என்கின்ற கேள்விற்கு வருவோம்.னம் என்பது அலைதானே. எனவே அலைக்கு ஆரம்ப இடமும் உண்டு. அது போய்ச் சேரும் இடமும் உண்டு. எனவே மனதிற்கு எல்லை இருக்கின்றது. மனம் மனிதனின் உயிரிலிருந்து ஆரம்பித்து அது எல்லையில்லா அப்பாலுக்கப்பாலாய் உள்ள இறைவெளி வரும் செல்லக் கூடியது. இறைவெளிதானே மனமாக உள்ளது மனிதனிடம். மனதிற்கு எல்லை உள்ளது என்கின்ற தீர்மானத்திற்கு வருகிறோம். அடுத்தது, மனதின் தன்மையினை எல்லையாகக் கொண்டு ஆராய்ந்தாலே மனம் தூய்மை அடைவதற்கு அது கடந்த வரவேண்டிய எல்லை தெரிய வரும்.

    எங்கே எல்லையுள்ளது?

    மனம் தூய்மை அடையவேண்டும் என முடிவு செய்திருக்கும் அறிவும், தூய்மை அடைய இருக்கும் மனமும் இருப்பதோ ஒரிடத்திலேயேதான். எங்கே எல்லை உள்ளது? அதாவது ஆறடி உயரமுள்ள இந்த மனிதனின் உடலில்தான் இரண்டுமே உள்ளது. பின்னர் ஏன் மனம் தூய்மை அடைவதற்கு ஒரு எல்லையிருப்பதாகக் கூறுகிறார்? மனத்தூய்மை என்பது என்ன? பல்லாயிரம் பிறவிகள்தோறும், அறிவை அறியாத அறியாமையால் ஏற்பட்டுள்ள பழக்கமாகிவிட்டப் பழிச்செயல்களின் மிகஅழுத்தமானப் பதிவுகளை, பிறவியின் நோக்கத்தை தெளிவாக அறிந்த பிறகு, அவ்வேண்டாத பழக்கப்பதிவுகளை செயலிழக்கச் செய்யவேண்டியதே மனத்தூய்மை. ஆன்மீக சாதகர்களில் இருவகை உள்ளனர். ஒருவர் கருவில் திருவுடையவர். மற்றொருவர் இப்பிறவியில் கருவில் திரு இல்லாதவர். முதல் வகையினருக்கு மனம் தூய்மை அடைவதில் உள்ளை எல்லை அருகிலேயே இருக்கும். எல்லை என்பதே கிடையாது. திருமூலர் கூறும் ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்பதற்கிணங்க குருவைத் தரிசனம் செய்த ஷணத்திலிருந்தே அவர்களுக்கு இறையின் திவ்யதரிசனத்திற்கான(இறை உணர்விற்கான) திருப்பாதை திறந்துவிடப்படும்.

         ஏனெனில் ஏற்கனவே முற்பிறவிகளில் மனம் தூய்மை அடைந்து மனம் பரிபக்குவ நிலையில் இருக்கும். மற்றவருக்கு இனிமேல்தான் பிறவியின் நோக்கத்தை அறிந்து இப்பிறவியிலேயே பரிபக்குவ நிலைக்கு எழுச்சி பெற்று இறை உணர்வு பெறவேண்டும். எனினும் அவருக்கும் இப்பிறவியிலேயே இறை உணர்வு பெறுவதற்கு இயற்கை கருணையோடு செய்த ஏற்பாடுதான் தவமும், அறமும் என்கிறார் ஒர் பாடலில். இந்த இரண்டாமவருக்கு மனம் தூய்மை அடைவதில் உள்ள கால இடைவெளி அதிகமாகத் தேவையிருக்கலாம். அப்போது இப்போது இருக்கும் நிலைக்கும் அடையவேண்டிய நிலைக்கும் உள்ள இடைவெளியை எல்லை எனக் கொள்ள வேண்டும். கருவில் திருவுடையவர் என்பதற்கு ஒரு உதாரணப்புருஷர் சுவாமி விவேகானந்தர்.

    எதனை வைத்து கருவில் திருஉடையவர், திருவில்லாதவர் என்று பிரிக்க முடியும்!? பரிபக்குவ நிலை வந்துவிட்டால் இருவருக்குமே குருவை தரிசித்த ஷணநேரமே போதுமானது இறையின் திவ்யதரிசனத்திற்கானத்(இறை உணர்வு) திருப்பாதை திறக்கப்படுவதற்கு. இதுவரை ‘மனம் தூய்மை அடைவதற்கான எல்லை’ யைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தோம்.

    மனம் தூய்மை அடைதல் என்றால் என்ன?

    அடுத்ததாக மனம் தூய்மை ஆதல் பற்றி ஆராய்வோம். மனம் தூய்மை அடைதல் என்றால் என்ன? மனம் என்ன பருப்பொருளாகவா உள்ளது? தூய்மை செய்வதற்கு? பருப்பொருளாக இருந்திருந்தால் அதனைத் தூய்மை செய்வது எளிது. மனிதன் என்பவன் யார்? எண்ணங்களின் தொகுப்பே மனிதன். MAN IS A BUNDLE OF THOUGHTS. இங்கேயும் மனம் தூய்மை என்பதன் மனவுருவை(CONCEPT OF PURIFICATION OF MIND) அறிதல் வேண்டும். அன்பும் கருணையுமான இயற்கையின்/இறையின் குழந்தைதானே ஒவ்வொரு மனிதனும். ‘தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை’, என்கின்ற பழமொழி பழமொழியாகவே இருந்துவிடாமல், தாயின் இயல்பை வெளிப்படுத்துவதே இறை உணர்வாகுமன்றோ. இறை உணர்விற்கு மற்றொரு மனவுரு (CONCEPT)கூறுகின்றார் மகரிஷி அவர்கள். ‘அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகைமையே இறைஉணர்வு’ என்கிறார். இதனை மனதில் கொண்டுதான் இரண்டொழுக்கப் பண்பாட்டினை வகுத்து பின்னாளில் தனது மாணவர்களுக்கு அறத்தை சொல்லவந்த மகரிஷி அவர்கள் தன் சொந்த இறை உணர் ஆன்மீக அனுபவித்திலே அதனை கடைபிடிக்க முயன்றிருக்கிறார் மகரிஷி அவர்கள்.

    32 ஆக இருந்த அறம் வரையறுக்கப்பட்டு மூன்றிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது:

    பண்டைக்காலத்தில், ஆன்மீக நெறியில் அறம் 32 வகைகளாக பிரிக்கப்பட்டிருந்ததை எளிமையாக்கி மனதில் எப்போதும் நினைவில் இருக்கும்படியாக அந்த அனைத்து 32 அறநெறிகளின் சாராம்சமாக மூன்றாக வகைப்படுத்தி அறநெறி என்பது என்ன என்பதனை திட்ட வட்டமாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
    அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகையாகும் அறநெறி மூன்று அங்கங்களாகத் தெரிந்தாலும் ஒழுக்கமே அறநெறியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். தங்கு தடையில்லாமல் வாழ்வில் ஒழுக்கம் வந்துவிட்டால் அதுவே அறஉணர்வு. ஒழுங்காற்றலே(பேரறிவு) தன்மாற்றத்தில் மனித அறிவாக மலர்ந்துள்ளதால் அது ஒழுங்குடன்தானே செயல்பட்டாக வேண்டும்?! IS IT NOT LOGIC?

    ஒழுங்கு வந்துவிட்டால் அது கடமையைச் சரிவரச் செய்யும். கடமையைச் சரிவரச் செய்யாதவர் எவ்வாறு ஒழுக்கமுள்ளவராவார்? எனவே ஒழுக்கம் வந்துவிட்டால் கடமையும் வந்துவிடும்.

    அடுத்தாக ஈகைக்கு வருவோம். ஈகை என்பது என்ன? இல்லாதவருக்கு தன்னால் முடிந்ததை அளிப்பது. இது ஒழுக்கத்தின்பால் சேர்ந்ததுதானே! ஒழுங்காற்றல்(பேரறிவு) அன்பும், கருணையுமானதுதானே! எனவே ஒழுக்கம் தங்கு தடையின்றி வாழ்வில் வந்துவிட்டால் கருணையின் அடிப்படையிலான ஈகையும் மலர்ந்துவிடும். எனவே அறநெறியில் சிறந்து விளங்குவதே மனத்தூய்மையாகும் என்பதனை முடிவுசெய்யவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இறைஉணர்வும், அறஉணர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இறை உணர்வில்லாமல் அறஉணர்வில்லை. அறநெறியில்லாமல் இறை உணர்வில்லை. இரண்டிலுமே இறை உணர் ஆன்ம சாதகன் இணைந்தே முன்னேறி வரவேண்டும். ‘நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்’ என்கின்றது ஆன்றோர் மொழி. உள்ளம் பெரும் கோவில் என்கிறார் திருமூலர். மனித சமுதாயாத்திற்கு என்ன தேவை? மனித சமுதாயம் என்கின்ற மாமரத்தில் அறஉணர்வு மொட்டுக்கள் பெரும்பாலானக் கிளைகளில் மொட்டாகவே இருந்து மலராமலேயே கருகிவிடுகின்றதே?
    இப்படியிருக்கும் நிலையில் மனித சமுதாயம், தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க எவ்வாறு முடியும்? பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியாத நிலை பெரும் கவலையை அளிக்கின்றது உலகநல விரும்பிகளுக்கும், உலகநலத் தொண்டர்களுக்கும். இருப்பினும் பரிணாமம் பூர்த்தியாக, ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதால், எண்ணத்தை ‘வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!’ என்கின்ற தாரக மந்திரத்தின் வாயிலாக பயன்படுத்தி வருகிறார்கள். சமுதாயம் என்கின்ற மாமரத்தில் மறைந்துள்ள அறநெறிமொட்டுக்கள் மலர்ந்தால்தானே பிஞ்சாகி, காயாகி, கனியாகி இனிப்பான அமைதிக்கனியைச் சுவைக்க முடியும்? இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(31-08-2016-புதன்)

    இன்றைய விருந்தின் சாராம்சம் என்ன?

    1) பேரின்ப ஏணிப்படிகளில் முதல் படி, பிறவிப்பயன் இறை உணர்வு பெறுதல்தான் என்பதனை உறுதி செய்த பிறகு,
    2) இரண்டாவது படியில் ஏறிவருவதற்கு தகுதி படைத்துக்கொள்வதற்கு மனம் தூய்மை அடைதலே என்றும் அறிந்துகொண்டோம்.
    3) மனம் தூய்மை அடைதலுக்கு அறம் அவசியம் என்றும் உணர்ந்து கொண்டோம்.
    4) அந்த அறத்தின் உச்சத்திற்கு செல்ல துணை ஏணியுள்ளது என்பதனையும்,
    5) அவற்றின் ஒவ்வொரு படியான ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவற்றின் அவசியத்தையும் அறிந்துகொண்டோம்.
    இனி அடுத்த விருந்தில் மனம் தூய்மை அடைய அறம் காப்பதில் உள்ள பொறுப்பினையும், அதற்கு வேண்டிய விழிப்புணர்வு, செயல்கள் புரிதல் பற்றியும் அறிவோம்.

                வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 220-பிறவிப் பயனை நல்கும்! 4/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     
    பிறவிப் பயனை நல்கும்! 4/?

    அறிவிற்கு விருந்து—220

    24-08-2016—புதன்

    கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் ‘பிறவிப் பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். ‘உண்மைப் பொருள் உணர்தலை’ பிறவிப்பயன் என்றும், உள்ளம் தூய்மை அடைதலை பேறு என்றும் அறிந்தோம். இன்று இந்த இரண்டையும் உள்ளடக்கிய தனது அனுபவமாக பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். அவற்றை உற்று நோக்குங்கால் நமது சிந்தனையை ஆட்கொண்ட சில –சொற்றொடர்களை(PHRASES) களை ஆய்வு செய்வோம்.

    உண்மைப் பொருளை உணர்தல்,
    பிறவிப்பயனை அடைதல்,
    இறைஉணர்வு பெறுதல்,
    அறஉணர்வில் சிறந்து விளங்குதல்,
    வீடு பேற்றினை அடைதல்,
    ‘இன்னும் வேறென்ன வேண்டும்–இப்பேறு பெற்ற பின்னர்?’ என்று இயம்புவது,
    மனிதப்பிறப்பு முழுமை அடைதல்

    ஆகிய பல சொற்றொடர்கள் உள்ளன. இவையெல்லாம் ஒரே பொருளைக்(அர்த்தத்தை-meaning) குறிக்கின்றனவா? அல்லது வெவ்வெறு பொருளைக் குறிக்கின்றனவா என்கின்ற ஐயம் எழலாம்.

    இவற்றிற்கெல்லாம் விடை கூறும் வகையில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் இயற்றிய நாள் தெரியவில்லை. ஆனால் முதன்முதலில் இப்பாடல் 1998 ஜனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ளது. மகரிஷி அவர்கள் ஐம்பதாவது வயதில்(1961) இல் மனவளக்கலையை வடிவமைத்து அன்பர்களை, வாழ்வியலையும், இறையியலையும் இணைத்து, இன்றைய சமுதாயத்தையும், இனி வரப்போகின்ற சமுதாயத்தையும் சுயமாகவேச், சிந்திக்க வைக்கும் அறிவுத் தொண்டு புரிய தன்னை அர்பணித்துக் கொண்டார். அதன்பிறகும் பல அருட்பாக்களை இயற்றியுள்ளார். அவற்றில் 37 வருடங்கள் சென்று இயற்றப்பட்ட இப்பாடல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. எப்படி?

       மனவளக்கலை என்பது இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சி. இறையை உணர்வதற்காகவே ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் உண்டு. இறை மீது நம்பிக்கை கொண்டு துவைதநிலையில் பக்திவழிபாடு மேற்கொள்பவர்கள் உண்டு. ஆனால் பக்தியில் சிறந்து விளங்கிய அருளாளர்களைப் போன்று ஆழ்ந்து இறைமீது பக்தி கொள்வதில்லை. காரணம் ஆழ்ந்து பக்தியில் செல்வதற்கு பயம். என்ன பயம்? என்ன காரணம்? புலன் இன்பத்தைத் துறந்து துறவியாகிவிட வேண்டுமோ என்கின்ற அறியாமை. புலன் வழி இன்பத்திற்கும்(SENSUAL PLEASURE) புலன்கடந்த இன்பத்திற்கும்(பேரின்பம்) இடையே ஏற்படுகின்ற போராட்டம், நம்பிக்கையின்மை, புலன்கடந்த இன்பத்தைப்பற்றிய(பேரின்பத்தைப்பற்றிய) தெளிவின்மை, ஆகியவைகளே காரணமாக உள்ளன. A STUDY OF PLEASURE THROUGH SENSES VERSUS PLEASURE BEYOND SENSES MUST BE EVOLVED. இந்நிலை இல்லாத காரணத்தால் ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்வதற்கு தேவையற்ற அச்சம் இருந்துவருகின்றது. உலகியல் வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் பிரித்து வைக்கப்பட்டு, ஆன்மீக வாழ்க்கையை தனிப்பட்டவரின் விருப்பத்தைச் சார்ந்தது என்றாக்கப்பட்டுவிட்டது.(IT IS SAD AND PAINFUL TO NOTE THAT SPIRITUALISM HAS BEEN MADE OPTIONAL IN MAN’S LIFE).   ஆன்மீக வாழ்வு என்பது என்ன? எல்லோருக்கும் பொதுவான/இயற்கையின் அம்சமான எல்லோரும் இயற்கையை அறிந்து, இயற்கையை அறிவதால் எவ்வாறு வாழவேண்டுமோ, அதனை அறிந்து அப்படி  வாழ்வது என்பது எவ்வாறு அவரவர்கள் விருப்பத்தைப் பொருத்ததாக இருக்க முடியும்.?   

        ஆன்மா உள்ள மனித இனம் ஆன்மீக வாழ்க்கை வாழவில்லை எனில் வேறு யார் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது? அல்லது வாழ முடியும்?

         இயற்கையே/இறையே மனிதனின் ஆன்மாவாக உள்ளபோது, மனிதன் ஆன்மாவை அறிந்து இயற்கைநீதி/இறைநீதியினை மதித்து வாழவில்லையானால்; இருப்பினும், ஆன்மாவைக் கொண்டே வாழ்கின்ற மனிதன், ஆன்மாவை அறியாத உலகியல் வாழ்க்கையில் எவ்வாறு துன்பமிலா ஆனந்த வாழ்வு வாழ்ந்து சிறக்க முடியும்? உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்று தனித்தனியாக இல்லை.

     ஒரு முறை மகரிஷி அவர்களை  பெரியவர் ருவர்  ‘பிரம்ம ஞானத்தில் என்ன கற்றுத்தருகிறீர்கள்’ எனக் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள், ‘மனிதன் பிறக்கிறான். ஒருநாள் இறக்கப்போகிறான், இதற்கிடையில் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்றுத்தரப்படுகின்றது’ என்றாராம்.

    என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    எனவே ஆன்மீகத்தின் மீதுள்ள அறியாமையால் கொண்டுள்ள அச்சம் நிலவுகின்றச் சூழலில் மகரிஷி அவர்கள், அந்த அச்சத்தை நீக்கித் தெளிவினை ஏற்படுத்தவே இறை-உணர்-ஆன்மீகத்திற்கான பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தாலும் சாதனையாளர் அறிவு தெளிவினும் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறை-உணர்-ஆன்ம சாதனையையே பாடலாக அருளியுள்ளார்.

    Perinbappadigal_Spiritual_ladder_reduced size

    பாடல் விளக்கம்:

    பாடலின் தலைப்பில் ‘இன்பம்’ என்று மட்டும் ஒரு முறை கூறாமல், நான்கு முறைகள் கூறியுள்ளார். எனவே பிறவியின் நோக்கத்தை அடைவது நான்கு நிலைகளில் நடைபெறுகின்றது எனத் தெரிகின்றது. ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும் இன்பத்தை தந்ததாகக் கூறுகிறார். கடைசி நிலையில் பேரின்பத்தைத் துய்த்ததாகக் கூறுகிறார். அந்த நான்கு நிலைகளும் என்னென்ன?

    1) பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
    2) மனம் செயல் தூய்மை ஆனபோதும்
    3) உறவுகளில் உண்மை நிலை அறிந்தபோதும்
    4) முடிவாகத் துறவு நிலை எய்தியபோதும்.

    ஒவ்வொரு நிலைகளைப்பற்றியும் சிந்திப்போம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகள் நம் குருதேவருக்கு ஏற்பட்டது.  எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உத்திரவாத உண்மையினை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருவதால் நம்குருதேவர் அவர்களுக்கு ஏற்பட்ட ஆன்ம அனுபவத்தை சிந்தித்தே ஆகவேண்டுமல்லவா?

    பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்:

    பிறவியின் நோக்கத்தை அறிந்த போது பேரின்பம் அனுபவித்ததாகக் கூறுகிறார். இக்கூற்றினை ஆராயும்போது தெரியவருவது:

    1) ஏற்கனவே மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில், பிறவியின் நோக்கம் இறைநிலை உணர்வது என்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாதலால் அதனை மீண்டும் இங்கே கூறவில்லை.

    2) பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்தார் என்றும் கூறவில்லை. ஏற்கனவே பிறவியின் நோக்கத்தை அடைய பயிற்சிகள் அவரது சிந்தானப்பள்ளியில் உள்ளதால், பயிற்சிகள் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் அதனையும் கூறவில்லை.

    3) மற்றொன்றை இங்கே கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சிகளை வகுத்துக் கொடுக்கும்போதே, அதனுடன் இப்பாடலை சேர்த்து வழங்குவதற்கு இப்பாடல் இயற்றப்படவில்லை. 37 வருடங்கள் சென்ற பிறகுதான் இப்பாடலை இயற்றியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிய வருகின்றது? அன்று இப்பாடலின் தேவை அறியப்படவில்லை அல்லது வேறு சில அடிப்படை கருத்துக்களை நமக்கு தெரிவிப்பதில் அவர்தம் அறிவைச் செலுத்தியிருக்கலாம். ஆனால் மனவளக்கலையை அன்பர்களுக்கு கற்றுக் கொடுத்த பிறகு, இடைப்பட்ட காலத்தில்(37 வருடங்கள்) இப்பாடலின் தேவை உணரப்பட்டதால் இப்பாடலை அருளியுள்ளார். அதற்கு தான் எவ்வாறு முறையாகப்பயின்று இறைஉணர் வெற்றிக்கனியைப் பறித்தாரோ அந்த அனுபவத்தையே பாடலாக அருளியுள்ளார். அப்படி ஒரு பாடலை அன்று (1998-ஜனவரி) அருளியிருந்ததால்தான் நாம் இன்று அதனைப்பற்றி, எந்த நோக்கத்திற்காக அருட்கவிஞரான நம் குருதேவரால் அருளப்பட்டதோ, அவரின் கருணைமலர்ந்த அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றுவதற்காக அப்பாடலைத் துருவித் துருவி ஆராய்கிறோம்.

    4) பொதுவாக ஒரு சிறந்த நோக்கத்தை அடைய அதனை ஒட்டியச் செயல்கள் அமைந்து, அச்செயல்களை செவ்வனே ஆற்றி, அதன் பயனை அடைகின்றபோதுதான் இன்பம் வரும். ஆனால் ஒன்றின் பயனை அடைவதற்கு முன்னரே பேரின்பம் கிட்டியதாகக் கூறுகிறார் இப்பாடலில்.

    இது எவ்வாறு சாத்தியம்? இது எதனை அவரது மாணவர்களுக்குத் தெரிவிக்கின்றது?

    (அ) அந்த காரியம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது,
    (ஆ) அந்த சிறப்பின் மீதுள்ள பற்று,
    (இ) அதன் முக்கியம்,
    (ஈ) அதனை அடைவதில் உள்ள பிரகாசமான உறுதி.

    ஆகிய நான்குமே அந்தக்காரியம் முடியும் முன்னரே அவருக்கு பேரின்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம்.
    ஒரு மனிதன் பேரின்பத்தை விரும்புவானேயாகில் அவன் பேரின்ப ஏணிப்படிகளில் ஏறித்தான் அந்த உயர்நிலைக்கு வரமுடியும். பேரின்ப படிகளில் எத்தனைப்படிகளில் ஏறி வரவேண்டும் என்கின்ற மலைப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இயற்கையே/இறையே தெளிவுபடுத்துவதற்காக இப்பாடலை வேதாத்திரி மகரிஷி அவர்களை காகிதத்தையும், எழுதுகோலையும் கொடுத்து எழுத வைத்துள்ளது என்று நினைக்கும்போது இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் இறை-உணர்-படலம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகின்றது. உயரே சென்று ஒரு அரிய காட்சியினைப்பார்த்து மகிழ ஏணி தேவைப்படுகின்றது. ஏணி கிடைத்தபிறகு உயரே சென்று அக்காட்சியினை கண்டு களிப்பது உறுதியாகிவிடுவதால் முதல் படியில் காலை வைக்கும்போதே உயரே செல்ல இருப்பவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே. எனவேதான் பிறவியின் நோக்கத்தைஅறிந்தபோதே அவருக்கு பேரின்பம் ஏற்பட்டிருக்கின்றது.

    ஒரு நடைமுறை உதாரணத்தை வைத்து இந்த பேரின்ப நிலையினை உணர்ந்து கொள்வோம். சில உயர் கல்வி படிப்பிற்கு(உம்- மருத்துவம்), அதற்குரிய அடிப்படைக்கல்வித்தகுதியில்(ESSENTIAL QUALIFICATION) தேர்ச்சியும் பிறகு நுழைவுத்தேர்வு (QUALIFYING EXAMINATION) எழுதுவது (தமிழகத்தில் தற்போது இளநிலை உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கிடையாது). உயர் கல்வி படிப்பிற்கு மனுசெய்யும் மாணவன் அடிப்படைக் கல்வியிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அதற்குரிய நுழைவுத்தேர்வு எழுதி அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அம்மாணவனின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியினை அடையுமோ, அந்த மனநிலைதான் இறை-உணர்வு-ஆன்மீகப்பயிற்சியில் முதல்படியான வாழ்வின் நோக்கம் அறிதலில் ஏற்படும். இறை உணர் ஆன்மீகத்தில், சாதகர் பேரருளார்களின் வழிகாட்டுதலைக்கொண்டு, சுயமாகச் சிந்தித்து பிறவியின் நோக்கத்தை கண்டுபிடித்தலில் வெற்றி அடைவது முதல் அம்சமாகும். இதனையே வேறுவிதமாக சொல்வதென்றால் அறிவிற்கு தெளிவை ஏற்படுத்துதல் அவசியமாகின்றது என்பதனை மகரிஷி அவர்களின் அனுபவத்தால் அறியலாகின்றது.

    எதனை வைத்து அம்மாணவனுக்கு அந்த உயர் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு முன்பே மகிழ்ச்சியினைத் தருகின்றது? காரணம் அம்மாணவர் அவ்வுயர் படிப்பின் சிறப்பைப் பற்றியும், அதனை முடித்துவிட்டு சமுதாயத்திற்கு அவர் புரிய விருகின்ற சேவையைப்பற்றியும் அவர் முன்னரே மனவுருவாகத் தெரிந்திருக்கிறார். எனவே அவ்வுயர் படிப்பிற்கான காலம் நான்கு/ஐந்து வருடங்கள் முடியும் முன்னரே அம்மாணவர் மகிழ்ச்சியினை ஆரம்ப கட்டத்திலேயே அடைந்திருக்கிறார். அந்த உயர் படிப்போ உலகியல் வாழ்க்கையையோடு தொடர்புடையதாக இருக்கும். ஆனால் மகரிஷி அவர்களின் விஷயத்தில் இந்த படிப்பு மனிதனாகப்பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்ளதால் பேரின்பம் அடைந்ததாக இருந்திருக்கின்றது. எப்போதுமே பேரின்பம் என்பது உலகியல் சார்ந்த விஷயங்களில் ஏற்படாது. பேரின்பம் என்பது ஆன்மா உய்வதற்கான காரியங்களுடன் தொடர்புடைய விஷயங்களில்தான் ஏற்படும்.
    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்து(28-08-2016-ஞாயிறு) வரை இச்சிந்தனையையே அசை போட்டுக் கொண்டிருப்போம். அடுத்த விருந்தில் இறை-உணர்-பேரின்பம்-ஏணியின் இரண்டாவது படியினைப்பற்றி சிந்திக்க இருக்கிறோம். இரண்டாவது படியில் ‘இறைஉணர்வு என்பது’ என்ன என்பதனைப்(WHAT ACTUALLY IS GOD- REALISATION AND WHAT DOES IT MEAN ACTUALLY) பற்றிய தெளிவினை அடைய இருக்கிறோம். எனவே அதற்கான சிந்தனையையும் அசைபோடுவோம்(LET US ASSIMILATE). வாழ்க வளமுடன்.

    இன்றைய சிந்தனையின் சாராம்சம் யாதெனில், பிறவியின் நோக்கத்தை ஆய்ந்து சரியாகக் கண்டுபிடித்தால், அதுவே பிறவியின் நோக்கத்தை அடைவதற்கு மேலும் ஒரு சில படிகள் இருந்தாலும், அதாவது முதல் படியிலேயே, ஆரம்பத்திலேயே, பிறவியின் நோக்கத்தை முடிவாக அடையும்போது என்ன பேரானந்தம் கிட்டுமோ அதனை இப்போதே அடையலாம் எனத் தெளிவாக இயம்புவதை மகரிஷி அவர்களின் தன் ஆன்மீகவெற்றி அனுபவப் பாடலிருந்து அறிய முடிகின்றது. இறை உணர் பாதையில் பயணிக்கும் ஆன்மசாதகர்களுக்கு வெற்றி அடையும் உறுதிப்பாடும் கிட்டிவிடுகின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்


     

    என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    Loading

  • 219-பிறவிப் பயனை நல்கும்! 3/?

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 3/?

    அறிவிற்கு விருந்து—219

    21-08-2016—ஞாயிறு

     peeRu_uNmaipporuLuNarthal

    பிறவிப்பயன் என்ன என்பதனை அருளாளர்களின் துணையுடன் உறுதி செய்துவருகிறோம். இன்றைய விருந்தில் மகரிஷி அவர்கள் அருளிய ‘மலரே மலரே’ எனத்துவங்கும் பாடலின் கடைசி இரண்டு வரிகளான

    ‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
    பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

    என்ன அறிவுறுத்துகின்றது என்பதனைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்வது என்பது உண்மைப் பொருள் உணர்ந்து வாழ்தலேயாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் உண்மைப்பொருள் உணர்ந்து வாழ்தல் என்பதனை பேறாகக் கருதுகிறார். இந்தப் பேற்றினைப் பெற்றுவிட்டால் அதுவே மனிதப் பிறவி எடுத்ததன் பயனாகவும் கூறுகிறார்,

    உண்மைப் பொருள் என்றால் என்ன?

    உண்மைப் பொருள் என்கின்றபோதே பொய்ப் பொருள் உள்ளதென தெரிகின்றது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறாரே திருவள்ளுவர். காண்கின்ற பொருட்களெல்லாம் உண்மைப் பொருட்களல்ல. அவையெல்லாம் மாறக்கூடியவை. இன்றிருக்கும், நாளை இல்லாமல் போகும். ஆனால் இவற்றிற்கெல்லாம் மூலமான என்றும் அழியாத பொருள்தான் மெய்ப்பொருள் எனப்படுகின்றது. அந்த மூலப்பொருள் எவ்வாறு இருக்கும்? பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அது அணுக்களால் ஆனது. அணுக்கள் புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தற்சுழற்சி உடைய துகள்களால் ஆனது. ஒருவேளை இப்பிரபஞ்சமே இயக்கமற்று விடுகின்றது என வைத்துக்கொண்டால். என்னவாகும்? தற்சுழற்சி உடையவைகள் நின்று விடும். நின்று விட்டால் எஞ்சியிருப்பது வெளியே. அந்த வெளி என்றும் இருப்பது. அந்த வெளியிலிருந்துதான் துகள்கள் தோன்றின. பின்னர் பஞ்சபூதங்கள் தோன்றின. என்றும் அழியாத அந்த வெளியே உண்மைப்பொருள் எனப்படுகின்றது அறிவை அறிந்த அறிஞர்களால். அந்த உண்மைப்பொருளை(Truth) ஆறாம் அறிவு அறிவதுதான் பேறு எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். உண்மைப் பொருளை அறிதலை வேறு எவ்வாறு சொல்லலாம்?

    அறிவு தன்னையே அறிதல் எனலாம்:

    உண்மைப் பொருளை அறிதலை அறிவு தன்னையே அறிதல் எனலாம். அறிவும் அந்த மூலப்பொருளும் ஒன்றுதான். எனவே அறிவு மெய்ப்பொருளை அறியும்போது தன்னையே அறிந்துகொள்கின்றது. எனவே இதற்கான மறு பெயர்தான் ‘அறிவு தன்னை அறிதல்(Self Realisation)’ எனப்படுகின்றது. இன்னமும் சற்று கூடுதலாக/விரிவாக விளங்கிக் கொள்ளலாம். அறிவு ஐந்தறிவு வரை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமேதான் உணர்ந்து கொண்டிருந்தது. அதற்காக ஒரறிவு சீவனிலிருந்து ஐந்தறிவு சீவன்கள் வரை ஒவ்வொரு உணர் கருவிகளாக(five senses) படிப்படியாக உருவாகி வந்தன. மனிதனாக வந்தபோது கூடுதலாக உணர்கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வித்தியாசப்படுத்தி ஆறாம் அறிவுடையவன் எனக் கூறிக்கொள்கிறான். கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் ஒரறிவை(உணர்தலை) கூடுதலாகப் பெற்றிருக்கிறான் மனிதன் எனில் அந்த கூடுதலான அறிவிற்கான உணர்தல் என்பது என்ன? ஆறாம் அறிவின் சிறப்பு சிந்திக்க முடியும். ஐந்தறிவு வரை விலங்கினங்கள் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, காந்த தன்மாற்றங்களான, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உள்ளதை உள்ளவாறே உணர்ந்து வந்தன. அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்பது என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன என்கின்ற வினாக்களை எழுப்ப ஐந்தறிவால் இயலாது. ஆனால் சிந்திக்கும் திறனுள்ள ஆறாம் அறிவு ஐந்தறிவு வரை ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்ததோடு, மனிதனிடம் வரும்போது ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்களின் வழியாக சிந்தனை மலர ஆரம்பித்ததன் விளைவே, ‘ஐவகை நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்’ என்கின்ற வினா எழுந்து விடைகண்டதே தன்னிலை உணர்தலானது. இவ்வாறான விளக்கமும், அதற்காக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளும் வாக்கியங்களுமே இருபதாம் நூற்றாண்டில் பெருமளவிற்கு வெளிவருவதற்கானக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் உதயமான திருவேதாத்திரியமேயாகும்.

    தன்னை அறிதல் என்பது பேறா? எப்படி?

    இதனை விளங்கிக்கொள்ள, ‘பேறு’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும், பேறு என்பது கிடைத்தற்கரிய ஒன்றைப் பெறுவதற்காக பாக்கியம்-புண்ணியம்(good fortune) என்று பொருள். அவ்வையார் மொழிந்துள்ளது போல், மானிடராய் பிறத்தல் அரிது. மனிதராகப் பிறந்தாலும் ஞானம் அடைய விரும்புவது அரிது என்கிறாள். அவ்வையார் என்றோ சொன்னது இது. ஆனாலும் 1911 வரை இந்நிலை தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் இப்போது ஞானம் என்பது என்ன என்று தெளிவாக விளக்கப்பட்டு வருகின்றது. ‘பொதுவாக ஞானம் என்றால் தெளிவு என்று பொருள். சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்பதாகும்.’ என்கின்றது திருவேதாத்திரியம். அறிவை அறிந்த தெளிவு என்பது அறிவு தன்னை அறிதல் தானே!? ஆகவே ஞானம் அடைய-அறிவு தன்னை அறிதல் என்பது அரிதாக உள்ள குடும்பத்தில், சமுதாயத்தில் தன்னை அறிதல்- உண்மைப் பொருள் உணர்தல் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாகத்தானே கருதமுடியும்?!

    உண்மைப் பொருளை உணர்தலே-தன்னை அறிதலே பிறவிப்பயனா?

    பயன் என்பது என்ன? ஒரு செயலின் விளைவு பயன் எனப்படும். அந்த விளைவு நன்மையாக இருந்தால் மகிழ்ச்சி. ஒரு செயலின் நன்மை விளைவை மனிதன் பயன் எனக் கொள்ளலாம். பிறவிப்பயன் என்கின்ற சொல்லை இரண்டாகப் பிரித்து விளக்கம் காணவேண்டும். அப்படியானால் ‘பிறவி’ மற்றும் ‘பயன்’ என்று பிரித்தால் பிறவி என்கின்ற செயலால் பயன் ஏற்படுகின்றது என்பது விளங்கும். மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்வுகளில்(செயல்கள்) ஒன்று. இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்றான பிறவிக்கு ஏற்படும் நல்விளைவுகளே பயன் எனப்படுகின்றது.

    மனிதர்கள் வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்போதுமே இன்பம் உள்ளதா? துன்பமும் கலந்துதானே உள்ளது. மனிதனுக்கு மனிதன் வாழ்க்கையில் நடக்கும் இன்பம்-துன்பம் விகிதாசாரத்தில் வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கும். சிலருக்கு பெரும்பாலும் துன்பம் அதிகமாக இருந்து, இன்பம் குறைவாக இருக்கும். சிலருக்கு துன்பமேதான் வாழ்க்கையாக அமைகின்றது. பயன் என்றால் செயலின் விளைவு என்று சற்று முன்னர்தான் வரையறுத்துள்ளோம். விளைவாகிய இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மூலம் செயல்தான். பிறவிப்பயன் என்பதில் பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி(செயல்) என்று பார்த்தோம். இயற்கையின் நிகழ்ச்சியாகிய மனிதப்பிறவியில் விளைவாகிய இன்பம்/துன்பம் வருவதற்கு யார் காரணம்? மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி என்பதால் இன்ப-துன்பம் வருவதற்கு பிறவியாகிய இயற்கையின் செயல்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? இயற்கை வேறு மனிதன் வேறா? அல்லவே! இயற்கையேதான் மனிதனாக வந்துள்ளது. இப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த திறன் எங்கிருந்து வந்தது? இயற்கை ஆறாம் அறிவாக மனிதனிடம் இயங்கிக் கொண்டிருப்பதால்தானே சிந்திக்க முடிகின்றது.!

    மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்தவன் ஆறாம் அறிவைக் கொண்டு/ஆறாம் அறிவை இயக்கி வாழவேண்டும். அவ்வாறு மனிதன் செயல்புரிந்தால்(வாழ்ந்தால்) மனிதப்பிறவிக்கான பயன் நல்விளைவுகளாக இருக்கும். நல்விளைவுகளே இன்பம் எனப்படுகின்றது. மனிதனின் செயலுக்கேற்ற விளைவுகள் உண்டு என்பது இயற்கை நீதி என்பதனை மனிதன் எப்போதும் நினைவில் கொண்டு அயராவிழிப்போடு வாழவேண்டும். எனவே ஆறாம் அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

    அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

    அறிவு தன்னை உணர்தல் என்பது மனிதனிடம் உள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் நீங்கினால் அனைவருக்குமே சாத்தியம். மும்முலங்கள் நீங்கினால் விளைவு என்னவாக இருக்கும்? விளைவு இன்பமாக இருக்கும். சாதாரண மனிதனின் வாழ்வில் மும்மலங்கள் நீங்காமல் இருந்தே இன்பத்தையும் அனுபவிக்கிறான் அவனுடைய அவ்வப்போது புரிகின்ற நற்செயலைப் பொறுத்து, மும்மலங்கள் நீங்கிய நிலையில் அறிவு தன்னை உணர்ந்து கொள்ளும்போது அவ்வப்போது நற்செயலைப் புரிவது என்பது மாறி எப்போதுமே நற்செயல்கள் புரிகின்ற விழிப்பு நிலை வந்துவிடுவதால் எப்போதுமே இன்பமே. சலிப்பில்லாத இன்பம். புலன்வழி இன்பத்தில்தான் இன்பம் மிக மிக அதுவே துன்பமாக மாறிவிடும். எனவே மனிதனின் வாழ்வில் ஆறாம் அறிவிற்கேற்ப வாழ்ந்து உண்மைப்பொருளை-தன்னை அறிந்துகொள்கின்ற பேறு கிட்டும்போது அது பிறவியின் பயனாகக் கருதப்படுகின்றது. இதுவரை அவ்வையார் அரிதான மனிதப்பிறவிக்கான பயன் என்ன என்றும், மற்றும் மகரிஷி அவர்கள் மலர் வழியே மறைபொருள் விளக்கப்பாடலில் மனிதப்பிறவிக்கான பயன் தன்னை உணர்தலே என்று கூறுவதனை அறிந்து கொண்டோம்.

    மகரிஷி அவர்கள் தனது 35 வது வயதில் இறை உணர்வில் தெளிவாகிவிட்டார், அதன் பிறகு ஐம்பதாவது வயதில் உலக சமுதாயத்திற்கு தன்னை உலகநலத் தொண்டனாக அர்பணித்துக் கொண்டு, சுமார் 46 வருடங்கள் அன்பர்களை சிந்திக்க வைக்கும் அருட்பணியாகிய அறிவுத் தொண்டாற்றினார். மகரிஷி அவர்கள் ஒரு முறை அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் கூறியதாவது—‘இறை உணர்வு பெறுபவர்களில் பெரும்பாலோருக்கு இறை-உணர்வு என்கின்ற அரிய நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் தற்செயலாக நடந்துவிடுகின்றது. எனவே அவர்களால் இறை உணர்வு பெற்ற அந்த பாதையை படிப்படியாக(stage by stage) பிறருக்கு உணர்த்த முடியவில்லை. ஆனால் தனக்கு முறையாக (through Process) இயற்கை/இறை அதனை உணர்த்தியது. அதனால்தான் தன்னால் பிறருக்கு இறைஉணர்வு பெறும் வழியை முறையாக தெரிவிக்க முடிந்தது’ என்றார். அப்படி உருவாகியதுதான் ‘மனவளக்கலை’ எனும் அரிய வாழ்வியல் கலை என்று நாம் அறிகிறோம்.

    மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்த்தைகளால் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கவனிப்போம். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலின் கடைசி சரணத்தைக் கவனிப்போம்.

    உன்னிலே நானடங்க, என்னுளே நீ விளங்க,
    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்,
    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?
    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.’

                                                                 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலில் அவரது தெய்வீக அனுபவத்தை இயம்புகிறார். எனவே இச்சரணத்தின் உட்பொருளை ஒவ்வொன்றாக(list out) அறிவோம்.

    1) எடுத்த மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததை பேறாகக் கருதுகிறார்.

    2) தூய்மை அடைந்ததால் மனிதப்பிறப்பு முழுமை அடைந்தது என அறியப்படுகின்றது.

    3) தூய்மை பெறுவது என்பது மனிதனின் முயற்சியால்தான் என்றிருந்தாலும் அதாவது மனிதனது செயல்களால்தான் என்றிருந்தாலும் விளைவு இறைவனது கருணையினால் அன்றோ! இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற்றதாகக் கூறுகிறார். இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற முடிந்தது அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று ஒர் அருளாளா் தன் அனுபவத்தைக் கூறுகின்றார்.

    4) மகரிஷி அவர்கள் பேரறிவுடன் தன் அறிவை முழுமையாக இணைத்ததால், இறையே அவருள் விளங்கியதாகக் கூறுகிறார். ‘விளங்க’ என்றால் சிறப்பாக அமைதல் என்று பொருள். ஆகவே பேரறிவு மகரிஷி அவர்களை ஆட்கொண்டு விட்டது என்று சொல்வதற்குமேல் வேறு என்ன பொருள் கொள்ள முடியும் ‘என்னுளே நீ விளங்க’ என்பதற்கு?

    மலரே நீ யார்? என்கின்ற பாடலில் உண்மைப் பொருளை உணர்தல் பேறாகக்கருதியும், அதுவே பிறவிப்பயனாகவும் கூறுகிறார். இப்பாடலில் மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததனை பேறாகக் கருதுகிறார். இரண்டு பாடல்களிலும் பேறு என்பதனைக் குறிப்பிடுகிறார். இதனை சமன்பாடுகளை (Equations) ஏற்படுத்தி ஆராய்வோம்.

    உண்மைப்பொருள் உணர்தல்=பேறு   ….. சமன்பாடு-1

    உள்ளம் தூய்மை பெறுதல்      =பேறு   …..சமன்பாடு -2

    உண்மைப்பொருள் உணர்கின்ற பேறும், உள்ளம் தூய்மை அடைகின்ற பேறும், பேற்றை அனுபவிக்கக்கூடிய மனதை பொருத்த வரை ஒன்றாகத்தான் இருக்க முடியும். எப்போதும் நிறைவில்லாத மனிதமனம் மனநிறைவிற்கு வந்துவிட்டது, மனம் நிறைவிற்கு வந்துவிட்டதால்தான் ‘இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்றது அவரது மனசாட்சி.

    சமன்பாடுகளிலிருந்து அறிய வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. இரண்டு பேறுகளும் ஒன்று என்பதால் உண்மைப்பொருள் உணர்தலும், உள்ளம் தூய்மை அடைதலும் வேறு வேறல்ல. ஒன்றேதான்.

    ஆகவே இரண்டு சமன்பாடுகளை சேர்த்துப் பார்த்தால், கீழ்கண்ட புதிய முடிவு கிடைக்கிறது.

    உண்மைப்பொருள் உணர்தல் =  உள்ளம் தூய்மை பெறுதல்  = பேறு  

    இதுதான் வேதாத்திரிய சுத்த அத்வைத ஆன்மீகமான மனவளக்கலையின் நான்கு அங்கங்களான தவம், தற்சோதனை, குணநலப்பேறு, முழுமைப்பேறு என்பதன் முடிவான முடிவு(end result).

    உள்ளம் தூய்மை அடைதலும். இன்னும் வேறென்ன வேண்டும், இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்ற மனநிறைவை இப்பாடலிலும், வேறோரு பாடலில் ‘concept of Realisation’  ஐக் கூறுகிறார். (இறைஉணர்வின் பொதுக்கொள்கை, மனவுரு, மனத்தோற்றம்). அப்பாடலை அடுத்த அறிவிற்கு விருந்தில் நினைவு கூர்வோம். அது என்ன பாடல் என்பதனை அன்பர்களும் யோசித்து மௌன ஊடகமான எண்ணத்தைப் பயன்படுத்தலாமே அடுத்து அறிவிற்கு விருந்து(24-08-2016-புதன்) சிறப்பாக அமைய. வாழ்க வளமுடன்

    இன்றைய சிந்தனையின் சுருக்கம்:
    ‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
    பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

    என்கின்ற பாடல் வரிகளை எடுத்து ஆராய்ந்தோம். அதன் பயனாக உணர்ந்து கொண்டதை சுருக்கமாக பார்ப்போம்.

    1) உண்மைப் பொருள் என்பது அறிவு தன்னையே அறிதல் என்றும்,
    2) உண்மைப் பொருளை உணர்தலே பேறு என்றும்,
    3) அப்படியானால் தன்னையே அறிதலும் பேறு என்றும்,
    4) தன்னை அறியும் பேறு எப்போது சாத்தியம் என்றும்
    அறிந்து கொண்டோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளர்க அறிவுச்செல்வம்.


     

    Loading

  • 218-பிறவிப் பயனை நல்கும்!2/?

    வாழ்க மனித அறிவு                                                            வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்!2/?

    அறிவிற்கு விருந்து—218

                17-08-2016—புதன்

    நம் குருதேவர் ‘பிறவிப்பயன்’  என்ன என்று கூறுகிறார்?

          இயற்கை/இறை கருணையோடு அளித்துள்ள  (சுத்த அத்வைத பொருளில்) மனவளக்கலையின், முதல் வெற்றியாளர், நம் குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆவார்.  மானுடனாக அவதரித்த பாலகன் வேதாத்திரியை பின்னர் மகரிஷியாக உயர்த்தி அவர் வழியாக சமுதாயத்திற்கு வாழும் கலையாகிய வாழ்வியலை அளித்துள்ளதால், இதற்கு வேதாத்திரியம் என்கின்ற நாமத்தை சூட்டியுள்ளது இயற்கை/இறை.  பின்னர் அதன் சிறப்பையும், மதிப்பையும், பயனையும் உணர்ந்தும், அடைந்தும்  வருகின்றபோது வேதாத்திரியம் என்பது ‘திரு’ என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருவேதாத்திரியம் என அழைக்கலாகின்றது,  திருவேதாத்திரியம் பிறவிப்பயன் எது என்று கூறுகின்றது?

    malare_malare_nee_yaar

         மலர் வழியே மறைபொருள் விளக்கத்தை இருவர் பங்குபெறும் நாடக வடிவில் மலருக்கும் மனிதனுக்கும் நடைபெறும் உரையாடலாக  பன்னிரண்டு சரணங்களில்(stanzas) கூறுகின்றது. வருங்காலத்தில் இந்தப்பாடலை பட்டி தொட்டியிலெல்லாம் குழந்தைகள்  மனனம் செய்து ராகத்தோடு இசைப்பார்கள் என்று திரிகால ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்  கூறியிருக்கிறார்.  எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த  பாடலின் பெருமையினை முதலில் அறிந்துவிட்டு பிறகு பிறவிப்பயனாக,  என்ன கூறப்பட்டுள்ளது என்று அறிவோம்.

      அந்த உரையாடலில்  மனிதன் ‘மலரே நீ யார்?’ என்று ஒரு  சரணத்தில்,   கேட்டது  ஒரு கேள்விதான் என்றாலும், மலர் கூறும் பதில் இதுவரை, இயற்கையின் ஆதிநிலையைப்பற்றி /இறையைப்பற்றி கூறுவது  தத்துவமாக இருந்து வந்ததை, இன்றைய  விஞ்ஞான உலக அறிவின் துணை கொண்டு உண்மையினை ஒன்பது  சரணங்களில்  (9×4=36) முப்பத்தாறு வரிகளில் கண்டுபிடிப்பாகவே எடுத்து இயம்புவதாக உள்ளது. தத்துவம் என்கின்ற நிலைமாறி கண்டுபிடிப்பு என்று ஆன்மீக சாதகர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் அமைந்துள்ளது

         இப்பாடலில் அறிவிக்கப்பட்டுள்ள இயற்கையின் ஆதிநிலை/இறை பற்றிய கண்டுபிடிப்பினை எடுத்து சொல்லிய பாங்கு  எளிமையாகவும், விரிவாகவும்,  வருங்காலத்தில் குழந்தைகளும் புரிந்து கொண்டு பாடுகின்ற பாடலாகவும் உள்ளது.      பன்னிரண்டு  சரணங்களில், முதல்   சரணத்தில் மனிதன், மலரின் அழகு, வண்ணம், மணம் ஆகியவற்றை ரசித்ததால், பேரின்பமுற்று, தன்நிலையினைக் கூறி மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக் கேட்பது இடம் பெற்றுள்ளது.  மனிதனின் இரண்டு வார்த்தைகளைக் கொண்ட ‘நீ யார்?’ என்கின்ற சிறு கேள்விக்கு விடையான மாபெரும் உண்மை ஒன்பது சரணங்களில் இடம் பெற்றுள்ளது.

         பதினொன்றாவது சரணத்தில், கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையும், அரியதுமான மலர் கூறிய கண்டுபிடிப்பாகிய மறைபொருள் (mother-source of all inventions so far invented and to be invented in future) வரலாற்று உண்மையினை, தான்  தெளிவாக ஏற்றுக் கொண்டதை(confess) மனிதன் தன் வாய்மொழியின் வாயிலாக நன்றி பெருக்கோடு கூறுவதாக அமைந்துள்ளது.

        இறுதியாக பன்னிரண்டாவது சரணத்தில் மலருக்கும் மனிதனுக்கும் நடந்த உரையாடலில், பிறவிப்பயனை உணர்ந்து விட்டதனையும், மேலும் அப்பயனை  அடைந்து விட்டதாகவே தெரிவிப்பது முத்தாய்ப்பாக உள்ளது  கேள்வி கேட்டு பதிலை அறிந்த மாத்திரத்திலேயே பிறவிப்பயன் அடைந்து விட்டதாக பாடலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக பாடல்களில் கற்பனையும் உண்டு என்பதால் இதுவும்  கற்பனை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.  கேள்வி கேட்ட அந்த மனிதர் ஆன்மீக பயிற்சியாளரா அல்லது இனிமேல் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள இருப்பவரா?  அதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வை இயற்கை/இறை நிகழ்த்தி வைத்ததா? இது நிஜமாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான்.  அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதுதான்.  இனி வரும் காலங்களில் இது எல்லோரிடம் நடக்கவிருப்பது.  தனது தந்தையை (பரமபிதா-இறை-பிதாவிற்கெல்லாம் பிதா) அறிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது?  அதற்காகத்தானே இறை மனிதனாகத் தன்மாற்றம் அடைந்துள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சியில்,  ‘தெளிவு’ பெரும் பங்கு வகிக்கின்றது.  இறை-உணர்-ஆன்மீகப்பயிற்சியின் முடிவு இறைஉணர்வு பெறுதல் என்று தமிழில் கூறுவதனை ஆங்கிலத்தில்   ‘Enlightenment’ எனப்படுகின்றது.   ‘Enlightenment’ என்பதற்கு தமிழில் ‘அறிவு ஒளி’ என்று பொருள்.   இன்னும் சற்று விளக்கமாக ஆங்கிலத்தில் சொல்வதானால்- Enlightenment is the advanced state of mind. ‘அறிவு ஒளி – அறிவொளி’ என்பதற்கான பொருள் என்ன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்? அறிவு ஒளியைப் பெறுகின்றபோது  அறிவு ஒளி-அறிவொளி எனப்படுகின்றது. ‘தெளிவு’ என்பதே இருட்டில் இருக்கின்ற அறிவிற்கு அதாவது அறியாமையில் இருக்கும் அறிவிற்கு ஒளியைச் சேர்ப்பது.       

          பன்னிரண்டாவது சரணம்தான் மனிதப்பிறவியின் பயன் என்ன என்று கூறுவதால் அதனை  இங்கே நினைவு கூர்வோம்.

         பன்னிரண்டாவது சரணத்தின் உட்பொருள்:

     12.  “ஆறறிவாக வாழ் மனிதர்

        அதற்கு ஏற்ப பொருத்தமுள

        பேறு உண்மைப் பொருளுணர்தல்

        பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.”

                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      முதலில் இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொள்வோம்.  பிறகு சரணத்தின் பொருளுக்குள் செல்வோம். இந்த கடைசி சரணத்தில்,  மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக்கேட்டு, அதற்கு பதிலாக, மலர்கூறுவதனைக் கேட்ட மாத்திரத்திலேயே தெளிவடைந்து பிறவிப்பயன் அடைந்து விட்டதாக மனிதன் கூறுவதாக அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வரிகளை அமைத்துள்ளார்.  இவ்வாறாக வரிகள் இயற்கை/இறை(சுத்த அத்வைதத்தில்) அமைத்ததன் காரணம் அல்லது மகரிஷி அவர்கள்(துவைதத்தில்) எழுதியதன் காரணம்,  இருவருமே(இறைமற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள்) அவ்வாறு கனவு காண்கின்றனர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  அல்லது திரிகால ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள், இறையைப்பற்றிய புரிதல்  அவ்வளவு எளிமையாகிவிடும் என்பது நிதர்சனமாகத் தெரிவதால் அவ்வாறு வரிகளை அமைத்துள்ளனர் இருவருமே.  இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொண்டோம்.

       சரணத்தின் பொருள் என்ன? வரிகள் எளிமையாக, தானே பொருள் கூறக்கூடியதாக  உள்ளன.  (It is self explanatory.) இருந்தாலும் அருட்பாடல்களில் சொல்ல வந்த  உண்மை சுருக்கித்தானே சொல்லப்படும் (In condensed form).  எனவே பாடலுக்கானப்  பொருளை சிந்தித்து அறிவோம்.  நான்கு வரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொருளை ஆராய்வோம்.

    1)   ஆறறிவாக வாழ் மனிதர்.

    2)   அதற்கு ஏற்ப பொருத்தமுள.

    3)   பேறு உண்மைப் பொருளுணர்தல்.

    4)   பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.

    ஆறறிவாக வாழ் மனிதர்:

         உயிரினங்கள் அவைகள் உணரும் தன்மைக்கேற்ப/எண்ணிக்கைக்கேற்ப ஒன்றிலிருந்து ஆறு வகையாக மனிதனால் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரித்த மனிதனுக்கு ஆறு வகையான உணர்வுகளை உணரக்கூடிய ஆற்றல் உள்ளதால் அவனே, அவனை ஆறாம் அறிவுடையவன் மனிதன் என்று வகைப்படுத்திக் கொண்டான்.  ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து  ஆறாம் அறிவான உயிரினமான மனிதனாக வந்தபோது அந்த ஆறாம் அறிவிற்கான பயன் என்ன என்று இன்னமும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாக உள்ளது என்றே சொல்லலாம். 

        ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை உயிரினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்தபோது ஒன்றிலிருந்து – இரண்டிற்கு, இரண்டிலிருந்து – மூன்றிற்கு இவ்வாறாக ஐந்தாக வரும்  வரை ஒவ்வொரு உணர்வுகளாக கூடிக் கொண்டே வந்தன.   ஆனால் ஆறாம் அறிவாக வந்த மனிதகுலத்திற்கு என்ன பிரத்யேக உணர்வு கூடி இருக்க வேண்டும் அல்லது இயற்கை/இறை என்ன உணர்விற்காக மனிதனாக தன்மாற்றம் அடைந்துள்ளது  என்பது  1911 வரை வரை சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் இந்நிலையினை மாற்றி வருகின்றது வேதாத்திரியம். அது வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் மிகச் சிறந்ததாகும்.

         பாடலின் ‘ஆறறிவாக வாழ் மனிதர்’ என்கின்ற பாடல் வரியில்  ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கினங்க மனிதன் ஆறறிவுடையவன் என்கின்ற நினைவை நினைவூட்டி, ‘எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற வைரவரியின் ஆதங்கமும் தெரிய வருகின்றது,  

    ‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ –

     எதற்கு ஏற்ப பொருத்தமுள?   ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக என்று பொருள்.   பொருத்தமாக இருந்து என்ன செய்யவேண்டும்?  அதனை மூன்றாவது வரியில் காணலாம்.   ‘பொருத்தம்’ என்று சொல்வதால் ஆதிமனிதன் தோன்றி இன்று வரை பல லட்சம் ஆண்டுகள் ஆகியும்,  ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படவில்லை என்றுதானே பொருளாகின்றது.   ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக செயல்படவில்லை எனில் எந்த நிலையில் ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படுகின்றது?  விலங்கினத்திலிருந்து மனிதன் வந்துள்ளதால், மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் ஏதேனும் காணப்பட்டால் அப்போது, காரணத்தை அறிந்து தீர்வு காண, மனித இனத்திற்கு  முந்தைய இனமான விலங்கினத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துதானே தீர்வினைக் காண்பது சரியாக இருக்கும்.  மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் காணப்படுகின்ற நிலையை ஆதங்கத்தோடு இயம்புவதனை மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பாடலின் வாயிலாக அறிவோம். ஏற்கனவே  இப்பாடல் தெரிந்திருப்பினும், அதனை மீண்டும்  நினைவு படுத்திக் கொள்வோம்.  பாடல்கள் அருட்பாக்கள் என்பதால், பாடல்களை முதல் முறை படிக்கும்போதே உட்பொருள் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மறுமுறை படிக்கும்போது மேலும் உட்பொருளைத் தெரிவிக்கும்.  

       எனவே அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வோம். மேலும் ஒரே பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம். எனவே பாடல்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும்போது எந்த சூழ்நிலையை எடுத்து இயம்புவதற்காக நினைவுபடுத்திக் கொள்ளப்படுகின்றதோ அந்த சூழ்நிலையை/உண்மையினை அறிந்து கொள்வதுதான் முக்கியம். ஒரு பாடலின் உட்பொருளை விளங்கிக்கொள்வதற்கு வேறொரு பாடலைத் தேட வேண்டியுள்ளது. இங்கேயே உள்ளது உதாரணம். ‘மலரே மலரே’ பாடலின் கடைசி சரணத்தில் வரும் இரண்டாவது வரியின் உட்பொருளை அறிவதற்கு வேறொரு பாடலான ‘மனிதருள் உயர்ந்தோர்’ என்கின்ற தலைப்பில் உள்ள பாடலை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

          மனிதருள் உயர்ந்தோர்(3-1-59)

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

      மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

      மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.

                      . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலை 1951 ஆம் வருடம் இயற்றியுள்ளார்.  அது வரை ஆதிமனிதன் தோன்றி எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தும், அவ்வாறு அப்பாடலை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அப்பாடல் இயற்றி அறுபத்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னமும் அப்பாடலை அவசியம் நினைவு கூறப்படுவதாகத்தான் உள்ளது சமுதாயத்தின் நிலை.  பாடல் மனிதருள் யார் உயர்ந்தோர் எனக் கூறுகிறார்.  எனவே அப்படிப்பட்டவர்களே ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்பவராக உள்ளார்.  முதல் வரியில் இன்னமும் மனித உருவத்தில் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், இயல்பூக்க நியதியான உருவமாற்றத்திற்கான குணங்கள் மாறவில்லை என்பதனையேத் தெரிவிக்கின்றது.  அப்படியானால் இயற்கையின் ஆதிநிலை/இறையின் திறனான இயல்பூக்க நியதி இதுவரை செயல்பட்டு வந்தது இப்போது மனிதனிடத்தில் செயல்பட முடியவில்லை என பொருள் கொள்ள முடியுமா?  முடியாது.  அப்படியானால் எவ்வாறு பொருள் கொள்வது? 

          ஓர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.  ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்வோம்.  குழந்தை பிறந்த உடனேவா நடக்கின்றது?! பேசுகின்றது?!! பதினோரு மாதம் கழித்துதான் தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்கின்றது. பேச ஆரம்பிக்கும் போது முதலில்  ‘ஒரு வார்த்தை சொல்’ பிறகு  ‘இரண்டு வார்த்தைச் சொல்’ என முயற்சிக்கின்றது. இதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது.  எனவே ஒவ்வொரு உயிரினத்தின் தன்மாற்றத்திலும் அததற்குரிய குணங்கள் மலர்ந்து அந்த தன்மாற்றம் முழுமை அடைய அததற்குரியநேரத்தை கடக்க வேண்டியுள்ளது.

    அதேபோன்று மனித இனம் தன்மாற்றத்தில், ஆதிமனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தன்மாற்றம் சீரடைந்து சிறந்து விளங்குவதற்கான நேரம் இருபதாம் நூற்றாண்டில்தான் இயற்கைக்கு/இறைக்கு சாத்தியமாகியது என்றுதான் இயற்கையின்/இறையின் அம்சமான நாம் எடுத்துக் கொள்ள முடிகின்றது.  

     ஆறறிவாக வாழ் மனிதர்’, ‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ என்கின்ற இருவரிகளையும் சேர்த்து படிக்கும்போது  அறிய வருவது யாதெனில், ‘மனிதன் ஆறறிவுடையவனாக இருந்தும், அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழவில்லை என்பதனை மகரிஷி அவர்கள் தெரிவிக்கின்றார் என்பது தெரிகின்றது.’  அடுத்த வரியில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையும், கடைசி வரியில் அதுவே பிறவிப்பயன் என்பதனை அறிவித்துள்ளார்.  அவற்றை அடுத்த விருந்தில் (21-08-2016-ஞாயிறு) அறிவோம்.

         வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்.


    Loading

  • 217-பிறவிப் பயனை நல்கும்! 1/?

    வாழ்க மனித அறிவு                                                            வளர்க மனித அறிவு
    பிறவிப் பயனை நல்கும்!  1/?
    அறிவிற்கு விருந்து—217
                14-08-2016—ஞாயிறு
    வாழ்க வளமுடன்.
    அமைதி வேள்வி

    vv

    ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!

    gurudevar

         இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் 106 வது ஜெயந்தி தினம். குருபூர்ணிமா தினத்திலிருந்து (19-07-2016) ஒன்பது அறிவிற்கு விருந்துகளில் ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்தித்து வந்தோம்.  அவ்வையார், மற்றும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் பெரியோரை/சான்றோரை துணைகொள்ளச் சொல்கின்றனர். எதற்காக துணைக் கொள்ளச் சொல்கின்றனர் என்பதனையும் அறிந்து கொண்டோம்.

         சான்றோர்கள் என்பவர் யார்?

         ஒழுக்க நெறியினைக் கடைபிடித்து சான்றாக வாழ்ந்தவர்கள்/வாழ்கின்றவர்கள் சான்றோர்கள்.

         எதற்காக அவர்களைத் துணை கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்?

         சான்றோர்கள்,  நல்வாழ்வு வாழ்வதற்கு நமக்கு நல்வழிகாட்டுவதற்காக, அவர்களை துணை

         கொள்ளச் சொல்கின்றனர்.

         ‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் சிந்தனை முடிவுபெற்றதைத்  தொடர்ந்து இன்று நேரிடை அருளாளர்-குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினமாக இருப்பதால்  அவரை வணங்கி நினைவு கூர்வோம்.

       அவர் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி எனும் கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14-ம் நாள் அவதரித்தார்.  இன்று நாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினாலும்,  என்று நாம் மனவளக்கலையை ஏற்றுக்கொண்டோமோ அன்றிலிருந்தே அவருடன் கலந்து விட்டோம்.  அவரை நினையாத நாளில்லை, நொடி இல்லை என்றே சொல்லலாம்.  ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று மகரிஷி அவர்கள் அருளியுள்ள உறுதி,  இறை-உணர் சாதனைக்கு காப்பாகவும், துணையாகவும் அமைகின்றது.   மகரிஷி அவர்கள்  ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உறுதியினை எந்த இடத்தில்/எப்பாடலில் அளித்திருக்கிறார்?  15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் இந்த உறுதியினை அளித்துள்ளார்.     

    மாதா பிதா குரு தெய்வம்:

       மாதா பிதா குரு தெய்வம் என்பது ஆன்றோர் மொழி.  இது எதனைத் தெரிவிக்கின்றது?  மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டும். 

          குழந்தை தாயை அதுவாகவே அறிந்து கொள்கின்றது. 

          தாய், தந்தையைக் காண்பித்து, தந்தையை அறிந்து கொள்கின்றது. 

          தாயையும், தந்தையையும் குழந்தை அறிந்துவிட்டது. 

          அடுத்ததாக அறிய வேண்டியது யாரை? குருவை அறிய வேண்டும்.  அதற்கு தந்தை குருவைக் காட்டிட குழந்தை குருவை அறியவேண்டும். 

         பண்டைக்காலத்தில், மக்கள் தொகை குறைவாக இருந்தபோது, குருகுலக்கல்வி  முறையில் இந்நிகழ்வு நடந்து  வந்துள்ளது.  குருகுலத்தில் அரசன் மகனும், சாதாரண பிரஜையின் மகனும் சமமாகத்தான் கருதப்படுவர். மக்கள் தொகை பெருகிவிட்ட இந்த விஞ்ஞான யுகத்தில்,  இம்முறை தானாகவே மாறிவிட்டது. குருகுலத்தில் மாணவன் உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் அற்பணித்து கல்வி பயின்றான். குருவானவர் தெய்வநிலையை உணர்ந்தவராக இருப்பார். குருகுலக் கல்வியில் மாணவனுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுடன், அறியாமையை நீக்கி  பண்பேற்றக்கல்வியையும் சேர்த்து கல்வி கற்பிப்பார் குரு.

        மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்ற ஆன்றோர் மொழிப்படி குருவை தந்தை காண்பித்து வைக்கும் நிகழ்வு நடைமுறையில் இல்லாத நிலையில், கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும், பண்பேற்றத்தையும் சேர்த்துக் கற்க சிறந்த வாய்ப்பினை இயற்கை/இறை வேதாத்திரியத்தின் வாயிலாக இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ளது. அதுதான் கலைகளிலேயே அரிய கலையாகிய மனவளக்கலை எனும் ஒழுக்கவியல் கல்வியாகும்.  அந்த அரிய வாய்ப்பினைப் பெற்ற நாமெல்லோரும் பாக்கியசாலிகள்.  இறை-உணர்வு-கல்வியினை கற்கும் பாக்கியசாலிகள் என்பதோடு மட்டுமல்லாது, இக்கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க நம்மை எல்லாம் இறைத்தூதுவர் என்று சொல்கின்ற அளவிற்கு இயற்கையியல்/இறையியல் கல்வியினையும் ஐயமற விளங்கிக் கொள்ளும் வகையில் வழங்கி வருகின்றது மனவளக்கலை.  இது சாதாரண நிகழ்ச்சி அல்ல.  இயற்கையின்/இறையின்/பேரறிவின் தன்மாற்ற பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.  இறையின் இயல்பூக்கத்தால் இது நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.

     ஒழுக்கவியல் கல்வி கட்டயாப்பாடமாக்க வேண்டும்:    

       சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய படி, பள்ளிக்கல்வியில், மற்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதுபோல், முழுமையான ஒழுக்கவியல் கல்வியினைஏற்படுத்தி அதனைக்  கட்டாயப் பாடமாக இணைக்கப்படாத நிலையில், தற்போதுள்ள சமுதாயத்திற்கு ஒழுக்கவியல் கல்வியினைக் கற்பிக்க, பண்டைக்கால முறைப்படி அறிவை அறிந்த குரு  தேவைப்படுகிறார். இந்த தேவையினை இருபதாம் நூற்றாண்டில் இயற்கை/இறை கருணையோடு,பிரம்ம ரிஷி வரிசையில் நவயுகத்தில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக  மனிதகுலத்திற்குத் தந்துள்ளது.  மனவளக்கலை எனும் பண்பேற்றக்கல்வியில் கருத்தியல், அதனோடு கருத்தியலில் அறிந்ததை சரிபார்க்கும் செய்முறைக் கல்வியியும் இணைக்கப்பட்டுள்ளது.  அதாவது மனவளக்கலை என்பது ஆன்மா உய்வு பெறத்கக்க ஆன்மீகப்பயிற்சியாகும்.  இது போதனையும், சாதனையும் இணைந்த கல்வியாகும். 

        இத்தகைய கல்வியில் தேர்ச்சி பெற கருத்தியல் பாடமும், செய்முறைப்பாடமும் இருந்தாலும், விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனிதகுலம், விலங்கினப்பண்பிலிருந்து மனிதப்பண்பிற்கு முழுவதுமாக ஏற்றம் பெறுவதற்கான கல்வி பல்லாயிரம்  பிறவிகளாக முறைப்படி கற்காததால், அந்தப் பழக்கப்பதிவிலிருந்து புதிய விளக்கப்பதிவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள, பயிற்சிகளோடு இயற்கையின்/இறையின் இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதனை மனதில் வைத்து 15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை பற்றி இந்த மனிதகுலத்திற்கு பாடலின் வாயிலாக அறிவிக்கிறார். அப்பாடலை அருளி சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகள் முடிந்து முப்பத்திரண்டாவது ஆண்டு ஆரம்பிக்கும் இன்நன்நாளில் நினைவு கூர்கிறோம்.

    பண்பேற்றம் பெறுவதற்கு குருவின் சேர்க்கை:

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

         இப்பாடலில் முதல் ஐந்து வரிகளுக்கான விளக்கத்தை ‘அருளாளர்கள் உலகம்’  என்கின்ற தலைப்பில்  சிந்தித்து  அறிந்து கொண்டோம்.  இன்றைய தலைப்பு ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று உள்ளதால் இப்பாடலின் கடைசி மூன்று வரிகளான

       “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

      தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.” என்பதற்கு விளக்கம் காண்போம்,

         இம்மூன்று வரிகளில் ஒர் உண்மை சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.  அதுதான் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்பது.  இது மனிதவாழ்வில் நடைபெறவேண்டிய நிகழ்வு(விளைவு) ஆகும்.  ஆனால் எந்த ஒரு விளைவும்  செயலின்றி நடக்காது என்பது இயற்கையின்/இறையின் நீதியாக இருப்பதால் அதற்கான செயலையும் இப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.  அதே நேரத்தில் அச்செயலை ஆன்மதாகத்துடன்   நாம் இப்போது இப்பாடலின் கடைசி மூன்று வரிகளுக்கான பொருளை ஆழ்ந்து சென்று சிந்திக்க வேணடும். என்னென்ன சிந்திக்க வேண்டும் என பட்டியலிட்டுக்கொள்வோம்(list out).

    ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடலின் வரிகள்:

     1)   பிறவிப்பயன் என்பது என்ன?

    2)   குருவை மதித்து ஒழுகுதல்

    3)   குரு உயர்வு

    4)   தப்பாது மதிப்பவரின் தரத்தை உயர்த்துதல்.

    பிறவிப்பயன் என்பது என்ன?

         பிறவிப்பயன் என்பது செயலைச் செய்து முடிவாக விளைவைப் பெறவேண்டும். (எனவே மனிதனாகப் பிறந்துவிட்டதாலேயே பிறவிப்பயனை அடைய இயலாது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.). எனவே இது சிந்திக்க வேண்டிய பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், இதனை சிந்திக்க வேண்டி பட்டியலில் முதலில் எடுத்துக் கொண்டோம்.  காரணம் மனித மனம் எப்போதும் ஆதாயம் தேடும் இயல்புடையதாதலால்(Human mind is so calculative) மனிதப்பிறவியினால் என்ன பயன் என்று அறிந்து கொள்ள மனம் விழையும்.  பிறவிப்பயன் என்பது மனிதப்பிறவியின் நோக்கத்தை வாழ்நாளில்நிறைவேற்றிக் கொள்ளுதலே ஆகும்.

        மனிதப் பிறவிக்கான பயன்  என்ன?  இவ்வாறு கேட்பதை விடுத்து, ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.  எப்படி?  முதல் கேள்விக்கு கண்டுபிடிக்கும் விடை மனிதப்பிறவிக்கான பயனை நாம் முடிவுசெய்ததாக அமையும். அது தவறாக இருக்கலாம். அல்லது சரியாகவும் இருக்கலாம் அன்றோ?!காரணம் மனிதப் பிறவிக்கான பயன்  என்ன என்கின்ற கேள்விக்கு விடை உடனே சொல்லி விடமுடியாது.  மனிதன் சுவாசிக்க என்ன தேவை என்கின்ற கேள்விக்கு, விடை  ‘ஆக்ஸிஜன் தேவை’ என்று சட்டென்று விடை சொல்வது போல் மனிதப்பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்கின்ற கேள்விக்கு சட்டென விடை சொல்லி விட முடியாது. சிந்தித்துதான் விடையைச் சொல்ல முடிகின்ற நிலையில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

        எனவே அப்படிப்பட்ட நிலையில், கூறும் அந்த விடை

            பூரணமாக(முழுமையாக) சிந்திக்காமையாலோ

            அல்லது ஓரளவிற்குமேல் சிந்திக்க முடியாமல் போவதாலோ(stagnated pondering)அல்லது உறுதிப்படுத்தப்படாத சிந்தனையாலோ,

           அறியாமையாலோ,

           அல்லது அறிந்து அலட்சியப்படுத்துவதாலோ,

           அல்லது அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவும், வசதிக்கு ஏற்பவும்,

           தன்னையே ஏமாற்றிக் கொள்வதாக அல்லது கொண்டிருக்கின்ற சரியில்லாத  விடையாக இருக்குமன்றோ!  அப்படியிருக்கும்போது விடை சரியாக இல்லாமலும் இருக்கலாம், அல்லது சரியாகவும் இருக்கலாம். எனவே ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கோணத்தில் ஆராயும்போது விடை சரியாக இருக்கும்.  அப்போதும், இரண்டு நிலைகளிலும் ஆறாம் அறிவுதான்  விடையை முடிவு செய்யவிருக்கின்றது.  எனினும் இரண்டாம் நிலையில் ஆறாம் அறிவு தன்முனைப்பை விலக்கிவிட்டு இயற்கையோடு/இறையோடு இணைந்து விடைதேடும்.  முதல் நிலையில் ஆறாம் அறிவு உலகியல்அனுபவத்தைக் கொண்டு தன்முனைப்போடுதான் விடையைக் கூறும்.

         மனிதப்பிறவி என்பது இயற்கையின் அரிய நிகழ்வாகும். ஆகவே,  ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கேள்விக்கு  இயற்கை/இறை  வைத்துள்ளதை விடையாக  ஆறாம் அறிவு அறிகின்றது.  இதில் தவறு ஏற்பட வழியே கிடையாது.  மேலும் இந்த விடை மனிதகுலத்திற்கே பொதுவானது.  ஒருவர் கண்டுபிடித்ததை மற்றவர் அவ்வழியாகச் சிந்தித்து உறுதிபடுத்த வேண்டியதுதான்.  மனிதப்பிறவியின்   பயன் என்ன என்று ஒவ்வொருவரும் அவரவர்களாகவே தெரிந்து கொள்ள முன்வரவேண்டும்.  பயனை உணர்ந்தால் பயனை அனுபவிக்கலாமன்றோ! மனிதப் பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?  மனிதப்பிறவிக்கான பயனை சிறுவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. ஆனால் மனிதப்பிறவிக்கான பயனை அறியும் வகையில் குழந்தைகளை வளர்க்கலாமன்றோ!  சிந்திக்கும் திறன் வளர்ந்து வருகின்ற நிலையிலுள்ள இளைஞர்கள் மனிதப்பிறவியின் பயனைக் கண்டுபிடிக்க வேண்டும். 

        சிந்திக்கும்போது, என்னென்ன உண்மைகளை/எதார்த்தத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்? 

        இதுவரை வாழ்ந்துள்ள நம் முன்னோர்கள் என்ன பயனை அடைந்தார்கள் மனிதப்பிறவியினால் என்பதனை கவனத்தில் கொள்ளலாம். 

       அது சரியாக இருந்தால் மீண்டும் நாம் அதனை சரிபார்த்துவிட்டு அந்த பயனை நிறைவெற்றிக் கொள்ள ஆயத்தமாகலாம். 

        இல்லை வெற்றிவாழ்க்கை வாழ்ந்த சான்றோர்கள் பிறவிப்பயன் பற்றி என்ன கூறுகின்றனர் என்பதனை கவனத்தில் கொண்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பண்பேற்றத்திற்கான மூன்று தாரக மந்திரங்களான – தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்–Information, Confirmation, Transformation ஐ பிரயோகப்படுத்தலாம்.

        இதுவரை வெற்றி வாழ்க்கை வாழ்ந்துள்ள சான்றோர்களின் அறிவுரையை கவனத்தில் கொள்ளலாம் என்கின்ற வரிசையில் அவ்வைத்தாய் மனிதப்பிறவியின் பயன் என்று என்ன கூறுகிறாள் என்பதனை ஆய்வு செய்யலாம்.  அவ்வைத்தாய் என்ன கூறுகிறாள் மனிதப்பிறவியின் பயனாக என்பதனை நினைவு கூர்வோம்.

        அரியது எது?

    அரிதரிது மானிடர் ஆதல் அரிது!

    மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,

    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!

    பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

    ஞானமும், கல்வியும், நயத்தல் அரிது!

    ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,

    தானமும், தவமும் தான்செய்தல் அரிது!

    தானமும், தவமும் தான்செய்வர் ஆயின்

    வானவர் நாடு வழிதிறந்திடுமே!

                        . . . அவ்வையார்.

    பாடல் வரிகள் பொருளை எளிமையாகத் தெரிவிப்பதாக இருந்தாலும், வேதாத்திரிய வழியில்  சற்று சிந்திப்போம். உயிர் மனிதனாகப் பிறத்தல் அரிது என்கிறார்?  ஏன்?  நம் உயிரோ, அல்லது பெற்றோர்களின் உயிரோ, அல்லது அவர்களின் பெற்றோர்களின் உயிரோ அவர்கள் எடுத்துள்ள இந்தபிறவியில் நேரிடையாக முதன் முறையாக மனிதஉடல் எடுக்கவில்லை.  உயிர் தோன்றி பலலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான், ஒரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாகி, பின்னர் ஆதிமனிதனாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகி, அவன் வம்சாவளியாகத்தான் நாம் அனைவரும் மனிதப்பிறவி எடுத்துள்ளோம்.  எனவே உயிருக்கு மனிதப்பிறவி என்பதனை அரிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய். உண்மைதானே! அப்படியே மனிதனாகப்பிறந்தாலும் ஊனங்கள்-குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் அரிது என்கிறாள். ஊனங்கள், மற்றும் மூன்று இன்றியமையாத தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவை பூர்த்தியானாலும் ஞானக்கல்வியினை விரும்புவதில்லை மனிதன்.  அப்படியே     ஞானக்கல்வியினை அறிந்தாலும், அதாவது வாழ்வின் நோக்கம் அறிந்தாலும் – பிறவியின் பயனை அறிந்தாலும்,  அதனை அடைவதற்கான வழிமுறைகள் தெரிந்தாலும் அதனை மேற்கொள்வதில்லை என்கிறாள் அவ்வைத்தாய். பிறவிப்பயனை அடைவதற்கான வழிமுறைகளான  தவமும்(இறைவழிபாடு), தானமும்(அறம்), செய்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு கிட்டும் என்கிறாள் அவ்வைத்தாய்.இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-08-2016-புதன்) நம் குருதேவர் பிறவிப்பயன் என்ன என்று கூறுகிறார் என்பதனை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்.


     

    Loading