சென்ற விருந்தில் எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றேஎன்று உறுதிப்படுத்தினோம். அதனை மேலும் மற்றொரு வழியில் உறுதிப்படுத்துவோம்.
அறிவில்லாத உயிரினமோ, மனிதனோ இல்லை. எல்லோரிடம் அறிவு இருக்கின்றது. அறிவு ஒவ்வொரிடமும் உள்ளது. உடல்கள் வெவ்வேறாக இருப்பதுபோல் அறிவு வெவ்வேறானவையா? இது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
ஆகவே 720 கோடி உலக மக்களிடம் உள்ள அறிவும் ஒன்றுதான். 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றுதான் என்றால் அது ஒன்றிலிருந்துதான் வந்திருக்க முடியும். அப்படியானால் 720 கோடி உலக மக்களின் அறிவிற்கு மூலமும் அந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூலம் எது? அந்த ஒரே அறிவிற்கு இருப்பிடம் அந்த மூலம்தானா? அறிவு இயற்கைதானே! ஆம் அறிவு இயற்கைதான். ஆகவே இயற்கையின் ஆதிநிலையிலிருந்துதான் (Primordial State of Nature) அறிவு வந்திருக்கின்றது. இயற்கையின் ஆதிநிலைதான் இந்த 720 கோடி உலகமக்களின் அறிவிற்கும் மூலம். இயற்கையின் ஆதிநிலையில் இருந்த அரூபமான அறிவை பேரறிவு என்கிறோம். அந்தப் பேரறிவுதான் பின்னப்பட்டு(fractionated consciousness), எல்லோரிடமும் அரூபமான சிற்றறிவாக உள்ளது. ஆறடி உயரமுள்ள மனிதர்களிடம் உள்ள சிற்றறிவு அந்தப் பேரறிவிலிருந்தே வந்துள்ளது.
மண் பாத்திரத்திலுள்ள நீரிலும் சூரியன் தெரிகின்றது. பொன் பாத்திரத்திலுள்ள நீரிலும் சூரியன் தெரிகின்றது. அந்த இரண்டு பாத்திரங்களிலும் தெரியும் சூரியன் ஒன்றே. மண் பாத்திரத்திலுள்ளதால் அந்த சூரியன் வேறு. பொன் பாத்திரத்திலுள்ளது என்பதால் அந்த சூரியன் உயர்ந்தது, வேறானதா? இல்லை. இரண்டு பாத்திரத்திலுள்ள நீரில் தெரிவது ஒரே சூரியன். அதுபோல் 720 கோடி உலக மக்களின் அறிவும், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், படித்தவர், படிக்காதவர் போன்ற ஏற்றத்தாழ்வின்றி ஒரே அறிவுதான் எல்லோரிடமும் உள்ளது.
ஒன்றே பலவாகியது!
அறிவிற்கு உருவமில்லை. அது அரூபம். உருவத்தில்தான் வெவ்வேறு இருக்க முடியும்.அரூபத்தில் வெவ்வேறு இருக்க முடியாது. அரூபம் என்றால் ஒன்றுதான் இருக்க முடியும். உருவம் என்பதற்குத்தான் எல்லை வந்துவிடுகின்றது. எல்லை இருந்தால்தான் உருவம் வரும். உருவத்திற்கு பிரிவுகள் வரும். உருவங்கள் எப்போதும் வெவ்வேறானவை. அவை எப்போதும் ஒன்றாகாது. ஆனால் உருவத்திற்கு எதிரான அருவத்திற்கு/அரூபத்திற்கு எல்லை கிடையாது. ஆகவே அது எல்லையற்றது(infinite). அரூபங்கள் வெவ்வேறு இடங்களில் தனித்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எவ்வாறு எனில் நீரில் மூழ்கியிருக்கும் sponge இல் உள்ள துளைகளில்(pores)தண்ணீர் உள் சென்று எவ்வாறு தொடர்புடையதாக உள்ளதோ அது போல் எல்லா அரூபங்களும் விடுபடாமல், நீக்கமற(தொடர்புடையதாகவே – continuum) உள்ளன. எல்லா அரூபங்களும் ஒன்றேதான். என்கின்ற போது 720 கோடி உலகமக்களுக்கும் உள்ள அரூபமான அறிவும் ஒன்றுதான்.
ஒன்றிலிருந்து வந்ததுதான். அந்த ஒன்று தான் பேரறிவு. ஆகவே அறிவு பொதுவானது. எனவே பொதுவான அறிவை வணங்குவதற்கான அறிவுத்திருக்கோயில்கள் மனிதகுலத்திற்கே பொதுவான கோயில்.
“அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்” என்கிறார் மகரிஷி அவர்கள். என்ன பொருள்? முன்பு சொன்னது போல் அறிவு நிலையில் என்பதனை, இங்கு அறிவை அரூபசக்தி நிலையில் நாம் அனைவரும் ஏகனானோம் என்கிறார். அதாவது ஒன்றாகத்தான் இருக்கிறோம். என்கிறார், ஆகவேதான் அறிவுத்திருக்கோயில்கள் அனைவருக்கும் பொதுவான கோயில்களாக அமைந்துள்ளன.
இங்கு வருபவர்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடில்லாமல் எளியமுறை உடற்பயிற்சி, எளியமுறை தவமும், காயகற்பப் பயிற்சியும், அகத்தாய்வுப் பயிற்சியும் கற்கலாம். இதனால் உடல்நலமும், மனவளமும், கருவளமும், குணநலமும் கிடைக்கின்றது. ஆகவே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறவியல் வளர்கின்றது. வாழ்வின் நோக்கம் அறிந்து இறைநிலையடைய வழிவகுப்பதே அறிவித்திருக்கோயில்களின் பணியாகும்.
மனிதகுலம் உய்வதற்கான ஒளிவிளக்காக அமைந்திருப்பதே அறிவுத்திருக்கோயில்கள் என்கிறார் உலகின் முதன்முதல் அறிவுத்திருக்கோயில் ஏற்படுத்திய மகரிஷி அவர்கள். அறிவுத்திருக்கோயில்கள் ஒரிடத்தில் நிலையாக(stationary) இருந்து கொண்டு பணியாற்றுகின்றன. ஆனால் நிலையான அறிவுத்திருக்கோயில்கள் ஒவ்வொரு மனிதனையும் நடமாடும்(mobile) அறிவுத்திருக்கோயில்களாக உயா்த்தி அமைக்கின்றன.
இந்த நிலையான அறிவுத்திருக்கோயில்கள், ஒவ்வொரு மனிதனையும், நடமாடும் அறிவுத்திருக்கோயிலாக உயர்த்துவதால், அறிவுத்தொண்டு எங்கெங்கு தேவைப்படுகின்றதோ, அங்கு அனுப்பி அறிவுத் தொண்டாற்றச் செய்கின்றன. அறிவுத்திருக்கோயில்கள் இறைத்தூதுவர்களை உருவாக்குகின்ற புனித நிலையங்களாக திகழ்கின்றன. தூதுவர் என்றால் யார்? தூதுவர் என்பவர் ஒரு நாட்டின் பிரதிநிதியாக, மற்றொரு நாட்டிற்கு செய்திகளை எடுத்துச் செல்லும், அரசினுடைய உயர் அதிகாரி.
இறை நேரிடையாக பேச இயலாது. இறை ஆற்றலாக அரூபமாக இருப்பதால், அதற்கென்று தனியாக வாய், நாக்கு இல்லை. ஆனால் மனிதர்களுடைய வாயாகவும், நாக்காகவும் உள்ளதால் மனிதனின் வழியாக பேசுகின்றது, பேசுகின்ற அத்தகையவர்களிலும், வெகுசிலர், வள்ளுவர் கூறுவதுபோல், தன்னை ஐயப்படாது உணரும்போது அவர்களின் வழியாக பேசும்போது அவர்கள் இறைத்தூதுவர்களாகின்றனர், இறையின் அதாவது அருள் அரசினுடைய பிரதிநிதியாக, இறை பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறுகின்றவர் இறைத்தூதுவர். அத்தகைய இறைத்தூதுவர்களை அறிவுத்திருக்கோயில்கள் உருவாக்கி வருகின்றன.
எனவே மக்கள் தொகைக்குத் தேவையான அளவிற்கு உலகெங்கும் அறிவுத்திருக்கோயில்களை உருவாக்கி திருவேதாத்திரியத்தை ஓதுவோம். இயற்கை/இறைநீதி—செயல் விளைவு –கூர்தலறம் உணர்ந்து, நெறிநின்று வாழும் முறையாகிய இறைவழிபாடு மிக மிக அவசியம் என்கின்ற தேவையினை பூர்த்தி செய்வதற்காக இயற்கை/இறை ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால் தன் செயலில் இறைவனை உணா்வதற்கு, அறிவு தன்னை திருத்திக்கொள்ளவதற்காகத் திருக்கோயில்கள் உருவாகிவருகின்றன. வாழ்க அறிவுத்திருக்கோயில்கள். வளர்க அறிவுத்திருக்கோயில்கள். இத்துடன் இச்சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்திற்கு (01-07-2015)கூடுவோம். வாழ்க வளமுடன்.
ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம். அப்படியானால் ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவு ஆகியவைகளைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களில் சிலருக்கு. அப்போதுதான் இன்றையச் சிந்தனையான அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
உயிர் என்பது ஆற்றல்.
எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது.
ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர்.
உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.
அதனை ஆன்மா என்றும் சொல்வது உண்டு. உயிரினம் என்பதற்கு சாட்சியே உணர்வு.
உணர்வதற்கு வேண்டியது அறிவு.
அறிவு இல்லாமல் உணரமுடியாது.
ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது. அறிவு எங்கிருக்கின்றது?
உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு என்பதால்,
உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்டால் உணர்வு இல்லை.
ஆகவே உயிர் வெளியேறும் போதுஉடலைஆண்டுகொண்டிருந்த அறிவும் வெளியேறிவிடுகின்றது.
இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.
அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை. இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற self made mechanism – த்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை(magnetic wave-energy) புலன்கள் வழியாக வெளியிலிருக்கும் புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity) உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது. அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.
மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வருகின்றன. மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்து வரும் போது மனம் அலைகின்றது என்கிறோம். ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம் அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.
ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால் வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி, புலன்கள் வழியாக வெளியே சென்று கொண்டிருந்த மனதை திருப்பி, உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆலயத்தில் சிலைவணக்கம் செய்யப்பட்டாலும், அங்கும் அறிவுதான் வணங்கப்படுகின்றது. இங்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை உற்று நோக்குவோம்.
சிலை வடிவத்தில் கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். சிலையைக் கண்கள் பார்க்கும் போது அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த நம் அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார். யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”என்கின்ற திருமூலர்வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.
சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது. அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் இந்த சமுதாயத்தில்.
இயற்கை மனிதனுக்கு இரு கண்களை கொடுத்துள்ளதுபோல், மனிதன் வாழ்விற்கான இருநெறிகளை அறம் தழைக்க ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று அன்பு, மற்றொன்று கருணையுமாகும்.
1) அனைவரிடத்திலும் உள்ள ஆத்மா ஒன்றிலிருந்து உருவான ஒன்றே என உணர்ந்து, பிறர்க்கு துன்பம் நேர்ந்துவிடக் கூடாது எனும் அளவிற்கு அன்பு மலரவேண்டும்.
2) அந்த அன்பு மலர்ந்த நிலையில் பிறர் படும் துயரைத் தன்துயராக எண்ணி அத்துயரில் இருந்து அவர் விடுபட்டு நலமடைய உதவி புரியுமளவிற்கு மனம் கனிந்து கருணை வெளிப்படவேண்டும்.
இந்த இரண்டு நெறிகளைவளரச் செய்வதும் நிலைக்கச் செய்வதும்ஒவ்வொருவரின் முயற்சியாகஇருக்க வேண்டும்.முயற்சிக்கு பயிற்சி அவசியம். அந்தப் புனிதப் பயிற்சியினை அளிக்க, இயற்கையின் ஏற்படுத்தியதுதான் கருத்தியலும், செய்முறையும் ஒருங்கே இணைந்துள்ள, அறிவுத்திருக்கோயிலில் கற்றுத் தரப்படும் மனவளக்கலையாகும்.
மனித மனம் பண்பட வேண்டும், மனித மனம் பண்படுவதற்கான கல்விதான். அறிவுத்திருக்கோயில்களில் கற்றுத்தரப்படுகின்றது. இறை அருள் வேண்டுகிற மனிதன், இறையே அவனின் அறிவாகவே இருந்தும், அதனை பயன்படுத்தாமல் போனால் என்னென்று சொல்வது? வாழ்க்கை, துன்பம் நிறைந்ததாகத் தான் இருக்கும். இறையாகிய அறிவைப் பயன்படுத்துவதற்கு, அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் இருந்துஆட்சி செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தின் அறிவாட்சித்தரம் உயரும்.
நாகரீகம் என்பது உடை உடுத்துவதாலேயே வந்திடாது. நாகரீகம் என்பது வாழும்முறை, பண்பாடு ஆகியவைகளைப் பொருத்தது. மனிதவாழ்வின் பண்பாட்டின் உச்சமே நாகரீகம். நாக்கு, உள்ளம், மனம் ஆகிய மூன்று சொற்களை இணைத்து வந்த தொடர் சொல் — நா+அக(உள்ளம்)+இரிகம்(மனம்)=நாகரீகம். உள்மனம், புறமனம், பேச்சு ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இயக்கி வாழும் உயர்ந்த பண்பாட்டை நாகரீகம் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே எந்த அளவிற்கு அறிவாட்சித்தரம் உயா்ந்து வந்துள்ளதோ அந்த அளவிற்கு நாகரீகம் வளா்ந்து உயர்ந்துள்ளது எனலாம். அதனை நிறைவேற்றவே இயற்கை/இறை விரும்பி, ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள். அறிவுத்திருக்கோயில்களின் மகத்துவத்தையும், புனிதத்தையும் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொண்டு அறிவுத்திருக்கோயில்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதகுல வரலாற்றில், மனித மனம் மேன்மை அடைந்து வருகின்றது. அவ்வாறு மனித மனம் மேன்மை அடைந்து வரும் சரித்திரத்தில், அறிவுத்திருக்கோயில்களின் தோற்றம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்கிறார் உலகின் முதல் அறிவின்-அறிவியலாளராகியதால்,உலகில் முதன்முதலில் அறிவுத்திருக்கோயில் நிறுவிய வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
மற்ற கோயில்கள் அந்தந்த மதத்தினருக்கென்று உருவாக்கப்பட்டன. ஆனால் அறிவுத்திருக்கோயில்களோ எல்லோருக்கும் பொதுவானது. எவ்வாறு பொதுவானது என்று பார்ப்போம்.
இன்று உலக மக்கள் தொகை 720 கோடி என்கின்றனர். 720 கோடி உலக மக்களுக்கு எத்தனை கண்கள் என வினவினால் 1440(720×2=1440) கோடி கண்கள் என பதில் வரும். எத்தனை கைகள் என்றால் 1440 கோடி கைகள் என அதே பதில் வரும். ஆனால் 720 கோடி மக்களுக்கும் எத்தனை அறிவுகள் என்று கேட்கமுடியுமா? கேட்டால், 1440 கோடி அறிவுகள் என பதில் வருமா? எத்தனை அறிவுகள் என பன்மையில் கேட்க முடியுமா? முடியாது. ஏன் பன்மையில் கேட்க முடியாது? கண்கள், கைகள் போன்று அறிவிற்கு உருவம் கிடையாது. உருவம் இருந்தால் ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை வரும். அப்படியானால் உருவமற்ற அரூபமாகிய அறிவிற்கு ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை உண்டா? இல்லை. அப்படியானால் 720 கோடி மக்களுக்கும் இருக்கும் அறிவுஅரூபமான ஒரே அறிவுதான். 720 கோடி உலக மக்களுக்கு உள்ள கண்கள் வெவ்வேறானவை என்று கூறுவதுபோல் 720 கோடி மக்களுக்கும் வெவ்வேறான அறிவுகள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது! ஏனெனில் அறிவு அரூபமாக இருப்பதால் அவை அனைத்தும் ஒன்றேதான். அருவத்தில் எண்ணிக்கை கிடையாது.
அடுத்த விருந்தில்(28-06-2015 ஞாயிறு) எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றே என்று மீண்டும் உறுபடுத்தியும், ஆகவே அறிவுத்திருக்கோயில்கள் உலக மக்கள் எம்மதத்தைச் சார்ந்திருந்தாலும், அனைவருக்கும் பொதுவானவை என்றும், தெய்வம் எவ்வாறு அறிவு என்றும், அதன் மூலம் ஒன்றே தெய்வம் என்றும் ஒன்றே குலம் என்றும் ,அறிவுத்திருக்கோயில்களின் பணி என்ன என்பதையும் அறிய இருக்கிறோம்.
இன்று 21.06.2015முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. புராதனக் கலையாக இருந்து வந்த யோகாவை இப்போது எல்லோரும் அறியும் வகையில் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுவதை அறிந்து யோகிகளான நாம் மகிழ்வுறுகிறோம். யோகா தினம் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நம் இணைய தள சத்சங்க யோகிகள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் யோகம்
எல்லோருடைய அன்றாட வாழ்வில் இடம் பெற்று,
அதனால் உடல் நலத்தையும், மனவளத்தையும் எல்லோரும் பெற்று
யோகவாழ்வு வாழ வேண்டும் என விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம்.
சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன்.சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன்.சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன்.சர்வதேச யோகா தினம்வாழ்க வளமுடன்.
ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில் என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி? மகரிஷி அவர்களின் மானசீக குருவான அறிஞா் திருமூலா் கூறுவதென்ன?
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார்.
மேலும் திருமூலர் அருளுவதாவது
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.” ….திருமந்திரம் 1857
படம், மாடம்(கோபுரம்) உள்ள கோயில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோயில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம். ஆகவேதான் ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்கின்றனர் பெரியோர்கள்.
அருட்பேராற்றலே ஒவ்வொரு மனிதனிடமும் அறிவாக வீற்றிருப்பதால், “ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில்“ என்பது எவ்வளவு பொருத்தமாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருப்பதனையும் அறியமுடிகின்றது. அதே நேரத்தில், அறிவு தன்னைத் திருத்திக்கொண்டு, தூய்மையாக்கி தனது உள்ளத்தை திருக்கோயில்களாக்கிட வேண்டிய பொறுப்பும், கடமையும்தான், பிறவியின் நோக்கம் என உணரச் செய்கின்றது திருவேதாத்திரியம்.வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.
மனித இனம் உடல் நலத்திலும், மளவளத்திலும் மேம்படவேண்டும். அதாவது அறிவில் உயர்ந்து வாழ்வதற்கு என்ன தேவையோ அதனை கற்றுத்தரும் நிலையங்களை அறிவுத்திருக்கோயில்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உடல் நலத்திற்கு உடற்பயிற்சியையும், மனவளத்திற்கு தவத்தினையும் பயிலும் நிலையங்கள்தான் அறிவுத்திருக்கோயில்கள்.
உடற்பயிற்சியினையும், தவத்தையும் பயில்வதற்கு, இயற்கை/இறை, அறிவின்-அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகில் முதன் முதலாக ஆழியாரில் ஆரம்பித்து, இப்போது உலகெங்கும் அறிவுத்திருக்கோயிலை ஏற்படுத்தி வருகின்றது இயற்கை/இறை. இயற்கை/இறை அளித்த அருமருந்து மனவளக்கலை.அறிவுத்திருக்கோயில் என்றால் அறிவிற்கான கோயில் என்றாகின்றது.
ஆகவே அறிவுத்திருக்கோயிலின் அறிவியலை சுருக்கமாக அறிந்து கொள்வோம். அதற்கு ஒரு வினாவை எழுப்ப வேண்டும்.
எது அறிவாக இருக்க முடியும்? இயற்கையே/இறையேதான் அறிவாக இருக்க முடியும். எப்படி என ஐயம் எழலாம். மனிதன் இயற்கைதானே?! இதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மனிதன் இயற்கை என்றால் அவன் அறிவும் இயற்கைதானே. அது சரி என ஒப்புக் கொள்ளலாம்.
அறிவு எவ்வாறு இறையாக இருக்க முடியும் என அடுத்த ஐயம் எழலாம். இறை என்பது காரணப்பெயர். அதாவது இயற்கை எனும் பேராற்றல் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளதை இறைந்து கிடக்கின்றது என்றுதானே சொல்லமுடியும்! எனவே இயற்கை என்றாலும் இறை என்றாலும் ஒன்றுதான். இயற்கைக்கு மறு பெயர் இறை. யார் யாருக்கு எது பிடித்தமாக உள்ளதோ அவ்வாறு அந்த பேராற்றலை இயற்கை என்றோ, இறை என்றோ அழைக்கலாம்.
இந்த பேராற்றலே தான் தெய்வம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆற்றலுக்கு உருவம் ஏது? இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், மகரிஷி அவர்கள் கூறுவதுபோல்
“முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும் மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்,”……காந்த தத்துவப்பாடல்எண் 10 இல் உள்ள 3,4 வரிகள்
எனவே இறைக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் தெய்வம் என்கின்ற பெயரால் பல உருவங்கள் கொடுக்கப்பட்டன. உருவங்கள் இறையின் உண்மை நிலை அல்ல. இறை பேராற்றலாக உள்ளதால் இறை அரூபம். ஆகவே இறைக்கு உருமில்லை.
ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில்,
“இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்” ……காந்த தத்துவப்பாடல்எண் 10 இல் உள்ள 5,6வரிகள்
என்பதால், மகரிஷி அவர்கள், இறையின் நிலையை விஞ்ஞான ரீதியாக எடுத்துக் கூறி இறையின் இரண்டு தன்மைகளான பேராற்றல் மற்றும் அருள் ஆகியவைகளைக் கொண்டே ‘அருட்பேராற்றல்’ (அருள்+பேராற்றல்)என அழைக்கிறார். தெய்வம் என்பதும் அருட்பேராற்றல் என்பதும் ஒன்றேதான்.தெய்வத்திற்கான அறிவியல் பெயர் அருட்பேராற்றலாகும். அருட்பேராற்றல் என்கின்ற போது இறைக்கு உருவத்தை, மனம் கற்பித்துக் கொள்ளாது.
எப்படி அழைத்தாலும் யார் ஒருவரும் அந்த பேராற்றலின் ‘மனிதனின் செயலுக்கு விளைவைக் கொடுக்கக் கூடிய கூர்தலறத்தை’ உணர்ந்து மதித்து நடக்கவேண்டியதுதான் இன்று சமுதாயம் விரும்புவதாகும். தவறாது, இந்த மதித்து நடத்தல்தான், சமுதாயம் யோகவாழ்வு வாழ வழி வகுக்கும். எனவே சமுதாயம் யோகவாழ்வு வாழ வேண்டும் என்பதனை வலியுறுத்தவே சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது, எனவே இந்த சர்வதேச யோகாதினம் மிகச் சிறப்பாக நடக்க www.prosperspiritually.com இணையதள சத்சங்க அன்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்!
அறிவுத் திருக்கோயிலைப் பற்றி மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவா். மற்றவர்களுக்கு அறிவுத்திருக்கோயில் என்பது வியப்பாகக்கூட இருக்கலாம். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகா், அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்ளதை அறிவோம். முருகன் கோயில் முருகனுக்கான கோயில் என்பதுபோல் அறிவுத் திருக்கோயில் என்பது அறிவிற்கானக் கோயில். அறிவிற்கு கோயில் இருக்கின்றது என்றால் அறிவு தெய்வமா என்கின்ற ஐயம் எழலாம். மகாகவி பாரதியார் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், காளி ஆகிய உருவகக் கடவுளர்கள் மீதான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு பக்திப்பாடல்களை இயற்றிவரும்போது, மகாகவி பாரதியார் “தவமே புரியும் வகையறியேன்”என்று ஒரு கவியில் ஆதங்கப்படுகிறார். பிறகு ஞானப்பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் அறிவையே தெய்வம் என்கிறார்.
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ?
………………………………………..
………………………………………..
சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? …..
………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி பாரதியார்.
அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும்“துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்”என்கிறார். அறிவைத் தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory), பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத் தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம் தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக,உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில் ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி வருகின்றன. அரிதாக இருந்து வந்த “தவம் இயற்றுதலை” எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம் இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில் பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத் திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால், அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில் சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில் இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.
அகவழிபாட்டில் சிலைகள் கிடையாது. உள்ளம் தான் அகம் எனப்படுகின்றது. உள்ளத்திற்குள் எவ்வாறு சிலைகளை வைக்க முடியும்? “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலா் வாக்குப்படி, மேலும் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதை அறிந்துள்ள மனவளக்கலைஞர்கள், உள்ளத்திலுள்ள இறை மீதே மனம் வைத்து அகத்தவ இறைவழிபாடு (meditation)செய்கின்றனர். புலன்களைக் கடந்து உள்ளே சென்றால் கடவுளைக் (கட+உள்=கடவுள்) காணலாம்.
இறைவனே உயிராக மனமாக அறிவாக இருக்கின்ற தெளிவினை உடையவர்கள் அகவழிப்பாட்டினை மேற்கொள்கின்றனர், அதாவது உயிரிலிருந்து மனம் பிறப்பதால் புறத்தே புலன்கள் வழியாகச் செல்கின்ற மனதை திருப்பி உள்ளே செலுத்தி உயிர் மீது மனம் வைத்து தவம் செய்வதுதான் அகவழிபாடு. எனவே அறிவுத் திருக்கோயில்களில் சிலைகள் அவசியமில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் உள்முகமாக மனதைத் திருப்பி (Inner Travel) தெய்வமாகிய உயிர் மீது மனதை வைத்து தவம் செய்கின்றனா். ஆகவே அறிவுத் திருக் கோயில்களில் சிலை வழிபாடு இல்லை.
கோயில் என்பது இறைவனைத் தொழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதக் கட்டிடம். கோயிலுக்கு ஆலயம் என்றும் பெயா். காரணம், கோயிலுக்குச் செல்லும் பக்தன் கடவுளை வணங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் கோயிலுக்கு ஆலயம் என்கின்ற பெயரையும் வைத்துள்ளனா். “ஆலயம்” என்கின்ற சொல்லில் ஆன்மா என்கின்ற சொல்லின் முதல் எழுத்தான “ஆ” வையும் “லயம்” என்கின்ற சொல்லையும் இணைத்து ஆலயம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆன்மா லயமாவதற்கான புனித இடம்தான் ஆலயம், கோயில்.
அடுத்ததாக ஆன்மா, லயம் என்கின்ற சொற்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் ஆலயம் ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கம் தெரிய வரும். ஆன்மா என்பது உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்(soul). ஆன்மாவை உயிர் என்றும் கொள்ளலாம் தற்போதைக்கு. “லயம்” என்றால் ஒன்றுபடுதல் என்பதாகும். ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஆன்மா எதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதனையும் தெரிந்து கொண்டு அதுபோல் வழிபாடு செய்தால் ஆலயம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
வாழ்க வளமுடன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 24-06-2015–புதன் அன்று சந்திப்போம். …… தொடரும் 24-06-2015–புதன்
கடந்த அறிவிற்கு விருந்துகளில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்திலுள்ள அறிவியல் காரணங்களைப் பார்த்தோம். ஆதிமனிதனிலிருந்து பல்லாயிரம் தலைமுறைகளாக கருமையத்தொடர்பால் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள பழக்கப்பதிவுகள் வலிமை உடையதாக இருப்பதால், அவைகள் இப்பிறவியில் மட்டுமே பதிந்துள்ள விளக்கப்பதிவை எளிதாக வெற்றி கொள்கின்றன என்று பார்த்தோம். அப்பல்லாயிரம் பிறவிகளில் குறைந்தது மனிதனுக்கு தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில் அவனுடன் எத்தனை பிறவிகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதனை அட்டவணையின் வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.
ஒரு மனிதனுக்கு இப்பிறவியில் பழக்கப்பதிவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதனை அறிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணைத் தயாரிக்கப்பட்டுள்ளது. மனிதனாகப் பிறந்த ஆன்மா, இறை உணர்வு பெறுகின்ற வரை, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம் தலைமுறைகள் கடக்க வேண்டியுள்ளது ஆன்மா. பல லட்சம் தலைமுறைகள் கடந்து வந்தாலும், இந்த அட்டவணையில் ஏழு தலைமுறைகள் (பிறவி) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
காரணம்
ஒரு மனிதனின் ஆன்மா, இதுவரை அதன் முந்தைய ஆறு(6+1=7) தலைமுறைகளில் செய்யாத ஒரு செயலை,
புதிதாக இந்தப் பிறவியில் செய்து, அதனால் ஏற்பட்டுள்ள கருமையப்பதிவு,
ஏழு பிறவிகளுக்கும் விளைவைக் கொடுக்கும் வலிமை உடையது என்பதால்
அவனுக்கும், அவனுக்குப் பிறகு வருகின்ற ஆறு தலைமுறைகளுக்கும் விளைவைக் கொடுக்கும் எனலாம்.
ஒரு வேளை அந்த ஆன்மா அடுத்த ஆறுபிறவிகளில் அச்செயலை செய்யாமல் இருந்தால் அவனுக்கு பிறகு வருகின்ற ஏழாவது பிறவியில் அவன் செய்துள்ள அந்த செயல்பதிவு ஊக்குவிடப்படாமல் (not activated)இருந்தால், அக்கருமையப் பதிவு செயலிழந்து விடும் என ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது. ஆகவே ஏழு தலைமுறைகள் மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கருமையப்பதிவு மீண்டும் அடுத்த ஆறு பிறவிகளில் ஊக்குவிடப்படாமல் இருந்தால் செயலிழந்து விடும் என்பதனை அவ்வையார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய அறிஞர்களின் பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது. அப்பாடல்களாவன–
நல்வழி – பாடல் எண் 25
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” …..அவ்வையார்.
அதிகாரம் 13- அடக்க உடைமை-குறள்- 126
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்பு உடைத்து,” குறள் எண். 126
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவ்வையாரின் பாடலில், ஒரு தீயசெயலின் விளைவு ஏழ்பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.
அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள குறளில் ‘எழுமையும்’ என்பது ஏழு பிறப்புகள் என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகரால்.
ஆகவே ஒரு மனிதன் ஏற்படுத்தும் ஒரு பதிவு, அவனையும் சேர்த்து ஏழு பிறவிகளுக்கு விளைவைக் கொடுக்க வல்லது என அறிகிறோம். தொடக்கத்திலிருந்து, அதாவது ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனை தலைமுறைகள் ஒரு மனிதனின் ஆன்மா பிறவிச்சுழற்சிப் பயணம் செய்துள்ளது என அறிவது இயலாது.
இருந்தாலும் முடிந்தவரை, கணக்கெடுக்கும் வரையிலாவது எத்தனை தலைமுறைகள் என கணக்கெடுக்கலாமே என எண்ணி ஏழு தலைமுறைகளுக்கான விவர ஓட்டப்படம்(flowchart) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் தலைமுறைகளில், ஏழு தலைமுறைகளில் மட்டும் அவனுடன் கருமையத்துடன் தொடர்புள்ள குறைந்தபட்ச ஆன்மாக்களின் எண்ணிக்கை மொத்தம் 126(127-1=126) அதாவது இன்று பிறக்கின்ற குழந்தை தனது வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப இருப்பாக(opening balance) கொண்டு வந்தது தனது பூர்வீகசொத்தான(சொத்து மூட்டையாக) 126 சஞ்சிதகர்மாக்களை (சஞ்சி என்றால் பை அல்லது மூட்டை என்று பொருள்) அதாவது126 வினைமூட்டைகளை கொண்டுவந்துள்ளது. அதனை வைத்து வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பித்து அதில் லாபம் என்கின்ற இன்பத்தையும், நஷ்டம் என்கின்ற துன்பத்தையும் அனுபவிக்கின்றது.
பொருள் வியாபாரம் என்றால் அதில் லாபமும் இருக்கும். நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு பொருள் வியாபாரம் லாபத்துடன் நடந்திட வேண்டும் என்றே வியாபாரி விரும்புவார். அதாவது லாபத்தையும்(plus Quantity) நஷ்டத்தையும்(minus Quantity) கூட்டினால் வருவது (plus Quantity) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரின் பதில் என்னவாக இருக்கும் விழிப்பதுதான் பதிலாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்றும் எண்ணம் எழலாம்.
பொருள் வியாபாரத்தில் plus Quantity ஐயும் minus Quantity கூட்டுவதுபோல் கூட்டி லாபத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டி வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது? லாபத்தினை கண்டுபிடிக்க முடியாது என்றால் வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டுருக்கக் கூடாது. வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டது சரிதான். வாழ்க்கை எனும் வியாபரத்தில் வரும் இன்ப-லாபத்தினையும், துன்ப-நஷ்டத்தையும் அனுபவிப்பது எது? மனம். மனது நான்கு நிலைகளில் இயங்க வல்லது. அதாவது இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் ஆகிய நான்காகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம், அதிக லாபம் என்பது முறையே அமைதி, பேரின்பமாகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் மற்றும் அதிக லாபத்தினை ஈட்ட வழிகளை சொல்வதுதான் மனவளக்கலை எனும் அருமருந்தாகும்.
7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்-அட்டவணை எதற்காக? கருவில் திரு உடையவர்களுக்காக அல்ல இந்த அட்டவணை. கருவில் திருவை அடையப்போகின்ற ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு இந்த அட்டவணைஉதவும் என்பதற்காக தரப்பட்டுள்ளது.
ஏன் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்? விவேகானந்தர் கூறுவதுபோல்,
விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய கலவைகளால் ஆன மனிதன், தெய்வீக பண்பிற்கு உயர்வதுதான் ஒழுக்கம் என்பதால், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதாலும்,
மற்றும் ‘வினைப்பதிவால் உடல் எடுத்து மனிதனாக வந்துள்ளதால், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே ஆக வேண்டும்’ – (புண்ணியம்=ஒழுக்கம் என்கின்ற சமன்பாட்டின் படி ஒழுக்கமுடன் வாழ்ந்தே ஆக வேண்டும்) என்று மகரிஷி அவர்கள் பகர்ந்துள்ளதாலும், ஒழுக்கப்பாதைக்கு திரும்புவதில் வினைப்பதிவால் ஏற்படும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில் முழுநம்பிக்கையும் தொடர் ஊக்கமும், தளராவிடாமுயற்சியும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த அட்டவணை உதவியாக இருக்கும் என்பதால், விவர ஓட்டப்படம்(flowchart) தரப்பட்டுள்ளது. விவர ஓட்டப்படத்தில் உள்ள தகவல்களை(data) அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்பர்களும் தாங்களாகவே சிந்தித்து இந்த கணித ஆராய்ச்சியின் தகவல்களை சரிபார்த்து விட்டு முடிவினை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்
7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள். எவ்வாறு?
முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மா இன்றைய தலைமுறையின் சஞ்சித கா்மாவாகின்றது.
முந்தைய தலைமுறையின் சஞ்சித கர்மா அவர்களின் முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மாவைப் பொறுத்துள்ளது
எனவே 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள் என்பது முதல் ஆன்மாவின் முந்தைய தலைமுறைகளான தந்தை-தாய், பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி,ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரைஆகியவர்களின் வினை மூட்டைகளை கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகும்.
ஆகவே இப்போது வாழ்கின்ற ஆன்மா குறைந்த பட்சமாக முந்தைய ஆறு தலைமுறைகளின் 126 வினை மூட்டைகளின் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது,
இந்த 126 வினை மூட்டைகளின் தாக்கம் இந்த ஆன்மாவிற்கு இப்பிறவியில் விளைவுகளாக வருகின்றது, இது மட்டுமல்ல.
முந்தைய ஏழு தலைமுறைகளுக்கு முன்னரும், பல்லாயிரக் கணக்கில் தலைமுறைகள் உள்ளதை மறந்து விடக்கூடாது. ஒரு ஆன்மாவிற்கு ஆதிமனிதனிலிருந்தே கருத்தொடராக தொடர்பு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
126 வினை மூட்டைகளில் விலங்கினப்பதிவும், அதனை ஒட்டிய பிறர்வளம் பறித்தலும், அது ஒழுங்கின்மைக்கு காரணமாக இருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆன்மா, இதுவரை முந்தைய ஏழு பிறவிகளில் செய்யாத தவற்றை இந்தப் பிறவியில் செய்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் இப்பிறவியில் நல்லோர் இணக்கத்தால் அந்த தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தால் அதனை திருத்திக் கொள்வது எளிது. ஏனெனில் அந்த தவறான செயலின் பதிவு ஏழு தலைமுறைப்பதிவுகளின் அழுத்தத்தைவிட வலிவு குறைந்தது.
ஒருவேளை இந்தப்பிறவியிலேயே முதன் முதலாக செய்த தவறான செயல்கள் கூட தன் வாழ்நாளில் அதிக நாள்(say 10 years) செய்து பழகியிருந்தால், நல்லோர் இணக்கம் ஏற்பட்டாலும் உடனே திருத்தம் பெறமுடியாமல் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டும். ஆகவே நல்லோர் இணக்கத்தை தன் வாழ்நாளில் இளம் பருவத்திலேயே பெற்றிட வேண்டும். அதுதான் சிறுவர் பருவம். குழந்தைகளுக்கு பெற்றோர்களைவிட, உடனே தரிசிக்கக் கூடிய நல்லோர்கள் யார் உள்ளனர்? வேறு யாருமில்லை பெற்றோர்களேதான்!வருங்காலத்தில் நல்லோர் இணக்கத்திற்கு இலக்கணமாக பெற்றோர்களை உருவாக்க வல்லது அருங்கலையாகிய மனவளக்கலை என்னும் வாழ்க்கைக் கலை.
“Fear is the greatest sin”என்பார் அருட்தந்தையவர்கள். ஏனெனில் அறிவிற்கு துவைதநிலை(இரண்டு நிலை) இருக்கும்வரையில் பயம் இருக்கத்தானே செய்யும். எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றில் நானும் ஒருவன் என்கின்ற அத்வைத நிலை உருவாகிவிட்டால் பயம் ஏது? புலிக்கும் பயப்படத் தேவையில்லை. பாம்பிற்கும் பயப்படத் தேவையில்லை. Anxiety மற்றும் நிலையற்ற உலகியல் வாழ்க்கையில் பற்று (bondage) இருந்தால்தானே ‘என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ’ என்கின்ற பயம் இருக்கும்.
இருந்தாலும் மனிதனுக்கு அச்சம் வேண்டும். எதற்கு பயம் தேவை? ஆன்மா தீய செயல்களை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும். இந்த அஞ்சுதல் கூட வாழ்நாள் முழுவதும் .இராது. இயல்பான ஒழுக்க வாழ்விற்கு switch over ஏற்படும் வரை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல் தேவையிருக்கும். ஆகவே ஆன்மா அயராவிழிப்புடன் இருக்க வேண்டும் ஒழுக்க வாழ்வு இயல்பான பிறகு அச்சம் என்பதற்கே இடமில்லை.. ‘மனிதன் வாழ்கின்றான்’ என்பதனைவிட ‘வினை வாழ்கின்றது’ என்கின்ற ஆதங்கக் கூற்று சரிதோனே?!
முறையான தவம் மற்றும் அறம் இறைஉணர்வு பெறுவதில் முடியும்.
ஒழுக்க வாழ்வின் உச்சகட்டநிலை, இறைஉணர்வை பெறச்செய்யும்.
எவ்வாறு?
தவமின்றி ஒழுக்கமில்லை. ஏனெனில் தவத்தாலான்றி மனஅலைச்சுழலை நுண்ணிய நிலைக்கு கொண்டு வரமுடியாது. மனஅலை நுண்ணிய நிலைக்கு வரவில்லையெனில், மனம் உணர்ச்சிவயத்தில்(14 – 40 cps பீட்டாஅலை) இயங்கும். உணர்ச்சிவயத்தில் உள்ள மனிதனிடம் ஒழுங்கு எவ்வாறு நிலைக்கும்?
ஒழுக்கமின்றி அறமும் இல்லை. ஒழுக்கமின்மையில் எவ்வாறு அறம் இருக்க முடியும்? அதனால்தான் அறம் என்பதில் ஒழுக்கத்தை முதல் நிலையில் வைத்து, இரண்டாவதாக கடமையையும், மூன்றாவதாக ஈகையையும் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.
கடமையின்றி ஒழுக்கம் எவ்வாறு சிறக்க முடியும்?
ஈகையில்தான் வேதாத்திரிய ஒழுக்க வரையறை(Simple Definition for Discipline as per Vethathriam) செயலுக்கு வரும். நிரூபணமாகும்.
அன்பிலும் கருணையிலும் தான் ஒழுக்கம் சிறப்பு பெறமுடியும்.
ஒழுக்க வாழ்வே அறவாழ்வாகும்.
தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பத்தை இயற்றச் சொல்கிறார் மகரிஷி அவா்கள். எதற்காக? ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அன்பும் கருணையும் மலர வேண்டும் என்பதற்காகவே. இயற்கை இந்த சூரிய குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இப்பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்பதால்தான். ஆனால் மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும். வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக உள்ளது. ஆனால் மனிதன் என்கின்ற உயிரினம் பிறப்பதற்கு மட்டுமே சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருக்கின்றது என்றுதான் மனிதனே சொல்ல வேண்டியுள்ளது. ஏன்? மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும் வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருந்தது, ஆனால் மனிதன் பிறப்பதற்கு மட்டுமே இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்றால் என்ன பொருள்? பிறப்பின் தொடர் நிகழ்ச்சியான வாழ்க்கைக்கு ஏற்ற சீதோஷ்ணம் (living climate) நிலவவில்லை அன்றிலிருந்து இன்று வரை? அந்த சீதோஷ்ண சூழல்தான் அன்பும் கருணையும்.இது யாருடைய தவறு? இயற்கையின் தவறா? இயற்கையில் தவறு இருக்க முடியுமா? ஒருகாலும் இருக்க முடியாது? இயற்கையில் குறை இருந்தால் யாரிடம் சென்று முறையிடுவது? அப்படியே இயற்கையில் குறையுடையதாக குறையுடைய மனிதர்கள் யாரோ ஒரு சிலர், ஒருவேளை கருதினாலும், அது இயற்கைக்கு ஒத்த முறையில், இயற்கையின் இசைவிற்கு ஏற்ப இயற்கையின் இனிமை கெடாமல் வாழத் தெரியாமையையே காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.
இப்பூமியில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறையின்படி அமைதி நிரந்தரமாக நிலவி, அதனை, மனிதன் ஏற்படுத்திக் கொண்ட, சொத்துக்களில், பூர்வீகச் சொத்தை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க உரிமை இருப்பதுபோல், அவ்வமைதியினை அனுபவிப்பதற்கான சீதோஷ்ண சூழல் நிலவவில்லை. அதனை மனிதன் தான் வேதாத்திரிய உலகசமாதான திட்டங்களின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க உலக அமைதி. வரட்டும் விரைவில் உலக அமைதி.
ஒழுக்கம் இல்லாதவனிடம் அன்பும், கருணையும் இல்லை. அப்படியிருக்க பிறரிடமிருந்தும் அன்பும் கருணையையும் எதிர்பார்க்க முடியாது. ஒழுக்கமில்லாதவனின் செயலுக்கு வருகின்ற விளைவும், ஒழுக்கமில்லாத மற்றொருவரின் செயலிருந்துதானே வரும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதால் மனித மனம் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டும்.
ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்று அறிஞர்களே சொல்வதால், போராடி ஒழுக்கத்திற்கு வரவில்லையானால், ஒழுக்கமில்லா வாழ்விற்கான கடும்விளைவுகளை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்குமே. ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் நம்மனதுடன் தான் போராட வேண்டும். இது எளிது, சுலபம். தன்னைத்திருத்திக் கொள்வதில் அக்கறையில்லாமல் வாழ்வது எவ்வாறு சரியாக இருக்கும்? ஒழுக்கமின்மையால் வரும் விளைவுகளை போராடுவது என்பது ஒழுக்கத்திற்காக மனதுடன் போராடுவதைவிட கடினமாக இருக்கும். ஒழுக்க வாழ்வு எதற்காக? இறைஉணர்வு பெறுவதற்கே! ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்றிருந்தாலும், இப்பிறவியிலேயே ஒழுக்க வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என பகவான் வேதாத்திரி மகரிஷிஅவர்கள் கூறுவதனை நினைவுகூர்வோம்.
வினைப்பதிவுகள் தூய்மை
“பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்
பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்
நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்
நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை
நில உலகில் மனிதருக்கு அளித்துள்ளது இயல் பென
நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்
பலனடைய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்
பாதையிலே விழிப்புடனே வாழ்வது தான் அவ்வழி” …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ஒழுக்கமில்லாத போது தீயவினைகள் செய்யப்பட்டன. ஒழக்கத்திற்கு வரும் போது நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே வினைத்தூய்மை என்பதே ஒழக்கத்திற்கு வருவதுதான். பல்லாயிரம் பிறவிகளாக, ஒழுக்கமின்மையால் செய்துள்ள பழச்செயல்பதிவுகளை ஒழுக்கத்திற்கு வந்து ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம் என உத்திரவாதம் அளிக்கிறார். மாற்றி நலமடையலாம் என்கிறார். நலமடையலாம் என்பது, அதுவரை விலங்கினப்பதிவில் செயல்பட்டதெல்லாம் அன்பும் கருணையுமாக மாறி மனிதனாகலாம் என்கிறார். மனிதனாகி தெய்வமாக உயரலாம் என்கிறார். தெய்வமாக உயர்வதற்காக ஒழுக்கம் வேண்டாமா? மனிதன் தெய்வமாக வேண்டாமா? சின்னம்மாள்-வரதப்பா் என்கின்ற அருட் தம்பதியினருக்கு ஏழாவதாக பிறந்த குழந்தை தெய்வமாகாதிருந்தால் திருவேதாத்திரியம் என்கின்ற அருமருந்து உலகிற்கு கிடைத்திருக்குமா? அப்படி திருவேதாத்திரியம் என்கின்ற அருள் மருந்து கிடைக்காதிருந்தால் www.prosperspirtually.com என்கின்ற இணையதளம் உருவாகியே இருக்காது. இப்படியொரு இணைய தளம் உருவாகவில்லை என்றால் இந்த இணையதள சத்சங்கம் ஏது? வாழ்க திருவேதாத்திரியம்.வளர்க திருவேதாத்திரியம். வாழ்க www.prosperspirtually.com. வளர்க www.prosperspirtually.com. வாழ்கwww.prosperspirtually.com — இணையதள சத்சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வளமுடன்.
“பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்றுரைத்த மகரிஷி அவர்களே,
நெடுங்காலமாக ஆதிமனிதனிலிருந்து கருமையம் தொடர்புடையதாக இருந்தாலும், எப்படி போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது,
அக்கருமையத்தை அகத்தவத்தாலும், அகத்தாய்வினாலும், தூய்மை செய்து,
இறைஉணர் பாதையிலே விழிப்புடனே ஒழுக்கவழி வாழ்வதுதான் அவ்வழி என்கிறார் அருட்தந்தை அவர்கள். உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது எனும் அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்றும் நம்முள் ஒலிக்கட்டும்.
“நல்ல பயனுள்ள அறச்செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் அனுபவத்தைக்கண்டு இன்புறுவீர்களாக” என்கிறார் மகரிஷி அவர்கள்.
இத்துடன் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்கின்ற சிந்தனையை முடித்துக் கொள்வோம். ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் முடிவிற்கு வரட்டும். ஒழுக்கத்தின் மேன்மையில் மேன்மக்களாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். உலகெங்கும் மூலை முடுக்குளிலும் பரவட்டும் திருவேதாத்திரியம். மீண்டும் அடுத்த விருந்திற்காக21-06-2015 ஞாயிறன்று சந்திப்போம். வாழ்க வளமுடன்.
மற்ற பாடங்கள் உள்ளதுபோல், ஒழுக்கவியல் பாடம் பள்ளியில் விரைவில் கட்டயாமாக்கப்பட வேண்டும். எனவே எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்புவோம். நிரப்புவோம். வாழ்க ஒழுக்கவியல். வளர்க ஒழுக்கவியல்.
இதுவரை ஐந்துவிருந்துகளில், ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் இருப்பதில் உள்ள அறிவியல் உண்மையை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து சிந்திப்போம்.
மகரிஷி அவர்கள் நவம்பா்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதகாலம் அறிவுத்திருக்கோயில் ஆழியாரில் மௌன விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அப்போது அவரது சீடர்களும் அதில் பங்கு கொள்ளலாம். மகரிஷி அவர்கள், மௌன நோன்பு ஏற்றுக்கொண்ட சீடர்களின் நன்மையைக் கருதி, தினந்தோறும் சிந்தனை விருந்திற்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு பக்க அளவிலே, சிந்திக்க வேண்டியதை எழுதி, அதனை சீடர்களிடம் வழங்குவது வழக்கம். அவ்வாறாக தந்த ஞானமுத்துக்களில் ஒன்றுதான் 21-12-1988 அன்று (21-12-03 –உ.ச.ஆ) அருளிய “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?”என்பது.
இதனைக் கூறுவதற்கானக் காரணம் இந்த தலைப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மற்றும் மௌன காலத்தில் சிந்திப்பதற்கு மகரிஷி அவர்கள் அத்தகையதொரு தலைப்பை சிந்திக்க அருளியதுமாகும். ஆன்மீக சாதனையாளர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடத்தைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அதே நேரத்தில், சங்கடமாக வரும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான உறுதியையும் அளிக்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வுறுதி யாதெனில்—
என்பதேயாகும்.
“பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன்” என்கின்ற ஆய்விற்கு, மனம் போராட்டம் செய்வதால் மனதை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள உண்மையினை நினைவு படுத்திக் கொள்வோம். மனம் என்பது என்ன? மனம் என்பதனை உயிரின் படர்க்கை நிலை-–mind is the extended activity of life force என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே மனதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால். உயிரைப்பற்றியும், அது படர்க்கை(extended activity) எய்துதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
மனம் என்பது என்ன? படர்க்கைநிலை என்றால் என்ன?
மனதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் உயிரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிருடன் மனம் தொடர்புடையது. உயிர் இருக்கும் வரைதான் மனம் இயங்கும். உயிர் என்பது என்ன? உயிர் என்பது, உடலில், நுண்ணிய துகள்களான விண்கள் சுழன்று ஓடிக் கொண்டிருப்பதேயாகும். சுழன்று கொண்டிருக்கின்ற துகளின் மையத்தில் சுழலா நிலை உள்ளது. அந்த சுழலாநிலையாகிய இருப்பு நிலைதான் அறிவு. அதாவது உயிர்த்துகளின் மையத்தில் இருப்பது அறிவு. உயிர்த்துகள்கள் சுழல்வதால் விரிவலை உருவாகின்றது. அந்த விரிவலைதான் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவனிலிருந்து காந்தம் உருவாவதால் அது சீவகாந்தம் எனப்படுகின்றது. ஆகவே உயிர்த்துகளின் மையத்தில் இருக்கின்ற அறிவு. உயிர்த்துகளிலிருந்து எழும், விரிகின்ற அலையாகிய சீவகாந்தத்தின் வழியாக, (அவரைச் செடியில், தண்டிலிருந்து கொடி படர்வதுபோல்) படர்க்கைநிலை எய்தி உடலுக்குள்ளாகவும் புலன்களுக்கு வெளியேயும் விரிந்து இயங்கும் நிலையான படர்க்கைநிலையை மனம் என்கிறார் மகரிஷி அவா்கள்.
இப்படியான மனம் பத்து படிநிலைகளில் இயங்குகின்றது. அவைகளாவன—
மனதிற்கான இத்தகையக் கண்டுபிடிப்புகள், இதுவரை வெளிவராத நிலையில் மகரிஷி அவர்கள் மனதை பற்றி வெகு நாள் ஆராய்ச்சி செய்து தந்துள்ளது இயற்கையின்/இறையின் அருட்கொடை. சென்னையில், ஆங்கிலத்தில் ஆசிரியர் பயிற்சி(Master course in English) நடத்துகின்றபோது, அருளுரையின் துவக்கத்தில் அவர் திருவாய் உதிர்த்த முத்தினை இப்போது நினைவிற்கு கொண்டு வந்து மகிழ்வோம், “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind”, என்பதே அம்முத்தாகும்.
உண்மைதானே! தன்முனைப்பின் அறிவியலைக் கூறி, சுத்த அத்வைதத்திற்கு மேலும் சிறப்பூட்டிய மனஇயல் வல்லுனருக்கு தன்முனைப்பு இருக்க வாய்ப்பேது?‘தன்முனைப்பு கரைந்துபோம், காணும் தெய்வம்’என்றும் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். ‘I am not telling out of ego – தன்முனைப்பின்றி நான் கூறுகிறேன்’ என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது அப்போதும் சரி, இப்போதும் சரி, அதே மகிழ்வைக் கொடுக்கின்றது. நீங்களும் அந்த மகிழ்வை அனுபவிக்கலாமே! குருவின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். குருவின் உயர்வை புரிந்து கொண்டு ரசித்து, மதிக்க மதிக்க மனிதனின் தரமாற்றத்திற்கு இயல்பூக்க நியதி உறுதுணையாக இருக்கும். ரசித்தலும், மதித்தலும் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றத்தின்(corollary)நிரூபணமாக இருக்கும்.
மனதைப் பற்றிய, தெளிந்த, தெளிவு இருந்ததால்தான், மகரிஷி அவர்கள் மனதைப் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் நூல்கள் இயற்ற முடிந்தது. மூன்று மறைந்து இருந்த மறைபொருட்களான இறை, உயிர், மனம் ஆகியவற்றை எளிமையாக, அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தி வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் மகரிஷி அவர்கள்.
மேலே உள்ள புகைப்படத்தில் மகரிஷி அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள சீடர்களுக்கு வகுப்பு எடுப்பதை காண்பதற்கு உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. மனதை பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார் மகரிஷி அவர்கள். மனதின் பத்துப்படிகளை கரும்பலகையில் எழுதியிருக்கிறார்கள். 1980 களில் மகரிஷி அவர்களே பாடம் நடத்துவார்களாம். அப்போதெல்லாம் ஐந்து நாள் சிறப்புப் பயிற்சியாக நடத்துவாராம். பொதுவாக ஆன்மீக நிலையங்களில் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கரும்பலகை, மற்றும் chart ஆகியவற்றை வைத்து கல்லூரியிலே பாடம் நடத்துவதுபோல் மனவளக்கலையில் கருத்தியல் பாடங்கள் விரிவாக நடத்தப்படுகின்றது. செய்முறை பயிற்சிகளுக்குக் கூட கருத்தியல் விளங்கங்கள் உள்ளன. ஏன், எதற்காக செய்கிறோம் என்கின்ற விளக்கத்தோடுதான் ஒவ்வொரு பயிற்சியாளரும் செய்முறைப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். மகரிஷி அவர்கள் மூன்றாம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு படித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, பிறகு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அந்த திண்ணைப்பள்ளிப்படிப்பு, பள்ளிப்படிப்பின் எட்டாம் வகுப்பு வரை சமம் என்று கூறுகிறார். ஆனால் அவரது மறைபொருள் கண்டுபிடிப்புகள், வாழ்வியல் உண்மைகள், சமுதாய அக்கறை சார்ந்த நலத்திட்டங்கள், உரைநடைகள், கவிகள் ஆகியவற்றை பாடங்களாக்கி பள்ளியிலிருந்து கல்லூரிகள் வரை முதுகலைப்பட்டப்படிப்புகளாக நடத்தப்படுகின்றன.மேலும் அவரது சிந்தனைகள் முனைவர் பட்டப்படிப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். அமெரிக்காவில், ஒரு நிகழ்ச்சியில் அன்பர்களால் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் பதில்கள் அளித்த மகரிஷி அவர்களின் அருமையையும் பெருமையும் அறிந்து அதிசயத்தில் ஆழ்ந்துவிட்ட ஒரு அன்பர் மகரிஷி அவர்களை “In which University did you study Swamiji?” என்று கேட்டதற்கு, ” I studied in the city of Universe” என்று பதிலளித்திருக்கிறார். உண்மைதானே அவர் கூறியது?! ‘அவனே அதுவானால் எல்லா உண்மைகளையும் அது சொல்லும்’ என்று கூறியுள்ளவராயிற்றே மகரிஷி அவர்கள்.ஆகவே இத்தகைய மாமனிதரை நாம் குருவாக பெற்றது நம் ஆன்மா செய்த பூர்வபுண்ணியம்தான்.
மனம் இயங்கும், இந்த பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள், அதாவது உணர்ச்சி முதல் அனுபவம் வரையில் நடைபெறுவற்கு உடற்கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த ஏழும், செயல்களால் நடைபெறுவதால் செயல் பதிவுகள் எனப்படுகின்றன. ஆராய்ச்சி, தெளிவு, முடிவு ஆகிய மற்ற மூன்றிற்கும் மூளையின் உபயோகம் அவசியமாகின்றது. பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள் பழக்கப்பதிவுகளாகவும், கடைசி மூன்று படிகள் விளக்கப்பதிவுகளாகவும் எடுத்துக் கொள்கிறோம்.
இன்றைய மனிதகுலம் எங்கிருந்து வந்தது? ஆதி மனிதனிலிருந்து தொடங்கி பல லட்சம் தலைமுறைகளாகி இன்று வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய தலைமுறை. ஆகவே ஆதிமனிதனிலிருந்து கருத்தொடர் வழியாக வந்த பழக்கப்பதிவுகள் மிகவும் வலுப்பெற்றவைகளாக உள்ளன. ஆதிமனிதனுக்கு சிந்தனை கிடையாது. சிந்தனையில்லாமல் பல தலைமுறைகள் மனிதகுலம் வாழ்ந்திருக்கின்றது. பிறகுதான் மனிதன் சிந்தனை செய்ய ஆரம்பித்துள்ளான். ஆகவே சிந்தனை ஆற்றல் பெற்ற பிறகு, வந்த தலைமுறைகளைக் கணக்கில் கொண்டு சிந்தனையில்லாமல் மனிதன் வாழ்ந்த தலைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே இருக்கும்.
ஆகவே இதிலிருந்து அறிய வேண்டியது என்னவெனில் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே விளக்கப்பதிவைவிட பழக்கப்பதிவுகள் வலுப்பெற்றுள்ளதனை அறிய முடிகின்றது.
மேலும் ஒரு தனிமனிதவாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும்போது, அவன் குழந்தையாகப் பிறந்தது முதல் விளக்கப் பதிவுகளை வெளியே கொண்டு வர வாய்ப்பில்லை. குழந்தையிடம், புலன்கள் மூலமும், உடலுறுப்புகள் மூலமும் தான் பழக்கப்பதிவுகள் செயல்படுகின்றன. அவனது சஞ்சித கா்மத்தோடு பிராரப்தம் ஆரம்பிக்கின்ற வயதான 12 லிருந்துதான் சிறிது சிறிதாக விளக்கப் பதிவுகள் செயல்பட ஆரம்பிக்கின்றன.
இந்த இரண்டு பதிவுகளுமே செயலாவது என்பது சீவகாந்த ஆற்றலால்தான்.
ஆகவே, புலன்கள் அல்லது உடல் உறுப்புகள் இயங்கும்போது, அவற்றிலுள்ள செல்கள்(cells) வழியாக சீவகாந்த ஆற்றல் ஓடி செல்களுடைய இணைப்பை சீரமைக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு அசைவிலும்(movement), செயலிலும்(action) சீவகாந்தம் ஓடி ஒரு வழித்தடம் அமைகின்றது. உடலில் சீவகாந்தம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் சீவகாந்தம், எவ்வாறு மழைநீர் முன்னர் ஓடிய பாதையிலேயே ஓடுகின்றதோ, அதுபோல் முன்னர் ஓடிய அதே பாதையிலேயே ஓடும். அவ்வாறு ஓடுகின்றபோது, அதே செயலைச் செய்ய மனதுக்கு செயலார்வம் ஏற்படுகின்றது. செயலில் ஆர்வம் ஏற்படுவதால், பழைய செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறான். இதுதான் பழக்கப்பதிவு.
மீண்டும் மீண்டும் அச்செயல் எந்த அளவிற்கு ஆர்வமிகுதியோடு செய்யப்பட்டு வருகின்றதோ, அந்த அளவிற்கு, அச்செயல்பதிவின் அழுத்தம் மிகவும் வலிமையாகிவிடும். அச்செயல் நற்செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அச்செயல் புலன்மயக்கத்தால் தூண்டப்பட்டதாக இருந்தால் அது தீயசெயலாகத்தான் இருக்கும். அவ்வாறிருக்கும் போது, விளக்கம் கிடைத்த பிறகு அத்தீயசெயலிருந்து விடுபட வேண்டும் என அறிவு விரும்பினாலும் மனதுடன் போராட வேண்டியிருக்கும்.
மனதிற்கு மீண்டும், மீண்டும் சமாதானம் சொல்லித்தான்–தீவிர அகத்தாய்வு பயிற்சியால்தான் மெல்ல மெல்ல அத்தீயபழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அதுவரை மனதுடன் போராடத்தான் வேண்டியிருக்கும். தீயபழக்கத்திலிருந்து இவ்வாறாக வெளிவருவதில் 51 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டால்(மனதளவில் தெரிகின்ற அளவு) பிறகு 100 சதவிகிதம் வெற்றி என்பது நிச்சயம். தீயபழக்கத்திலிருந்து நற்பழக்கத்திற்கு மாற்றம் பெற்று வரும்போது சறுக்காமல் இருக்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சறுக்கல்கள். ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாலும் பரவாயில்லை. அதற்கு மேலும், மூன்று அல்லது அதற்கு மேல் சறுக்கி விழுவது நடந்துவிட்டால் பிறகு நற்பழக்கத்திற்கு மாற்றம் என்பது மிக மிக கடினமாகவே இருக்கும். இது எதிர்மறையாகக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, நெருப்பு என்பதால் நாக்கு சுட்டுவிடாது. எனவே நற்பழக்கத்திற்கான மனப்போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கடமையோடும் கருணையோடும் கூறும் வாழ்வியல் உண்மையாகும் இது. ஜாண் ஏறி முழம் சறுக்கினால் முன்னேற்றமே கிடையாது என்கிற எச்சரிக்கையுணர்வு எப்பொழுதும் இருக்கவேண்டும்.
பழக்கப்பதிவு மிகவும் வலிமையாகி விட்டால் விளக்க வழியே வாழவேண்டும் என மனம் விரும்பினாலும், அதனால் முடிவதில்லை. மனம் போராடுகின்றது. தளர்வுறுகின்றது. விளக்கவழியே செல்வதற்கோ, வாழ்வதற்கோ, உடல்செல்களும், மனமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பதில்லை. முடிவில் பழக்க வழியே சென்று செயலாற்றுகிறான் மனிதன். இந்த பழக்கப்பதிவு, விளக்கப்பதிவை வெல்வதுதான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். அதனால் தான் ஆன்மீக பயிற்சியினை தொடர முடியாமல் பலா் கைவிட்டு விடுகின்றனா்.
மனிதனால், விளக்கப்பதிவை விட்டுவிடவும் முடிவதில்லை. அதுவும் குறிப்பாக ஆன்மீக பயிற்சியில் ஆர்வம் கொண்டு, விளக்கங்கள் பெற்று வரும்போது. அவ்விளக்கங்களை விட்டு விடுவது என்பது முடியாது. ஏன்?
காரணம்,அறிவு தன்னை அறிவதற்காகவே மனித உடல் எடுத்து வந்துள்ளது. நல்ல கருமையப்பதிவுகளின் விளைவாக இந்த பிறவியில் தன்னை தூய்மை செய்துகொள்வதற்காகவே ஆன்மீக பயிற்சி செய்வதற்கு வந்துள்ளது.
ஆகவே தூயவாழ்வு வாழ்வதற்கான விளக்கங்களை விட்டு விடவும் முடிவதில்லை. இருப்பினும் பழைய–விளக்கமில்லாப் பழக்கப்பதிவுகளே பெரும்பாலோர்களிடம் வெற்றி பெறுகின்றன. சிலரே போராட்டத்தில் வெற்றி பெறுகின்றனர். பழைய விளக்கமிலாப்–பழக்கப் பதிவுகளை தோல்வி அடையச்செய்து விளக்கப்பதிவில் வெற்றியடையதலே ஞானம் பெறுதலாகும்.
விளக்க வழியே வாழ்வதற்கான பயிற்சியில், ஆரம்பத்தில் ஏற்படும் சிரமங்களைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். போராட்டம் என்பதில் அதில் வெற்றியும், தோல்வியும் உண்டு என்பதால், விளக்கப்பதிவு தோல்வி அடைகின்றது. பழக்கப்பதிவு வெற்றி கொள்கின்றது.
மூளையிலுள்ள செல்களில், விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து செயல்படுவதற்கும் நிலைக்கவும் மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும். அது எப்போது, எவ்வாறு சாத்தியமாகும்?
விளக்கப்பதிவுகளுக்கு வலுவேற்ற வேண்டும். அதுவரை உடல்செல்களின் இயக்கத்திற்கு மூளையில் உள்ள செல்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உடல் மற்றும் புலன்களிலுள்ள செல்களின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறாக மாற்றியமைக்கும் பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் வழியாக, இறை உணர்வும், அறநெறியும் வாழ்வில் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தைக் கொண்டு வந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
திளைக்கும் விளைகடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன்
விளைக்கும் தவம், அறம் மேற்றுணையாமே
என்பது திருமூலர் வாக்கு. எனவே இதனை நினைவில் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு ஆகியவற்றால் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார் மகரிஷி அவா்கள். விழிப்பும், சிந்தனையும், முயற்சியும், திட்டமும், இவற்றிற்கேற்ப செயலும் பின்பற்றி ‘பழக்கத்தை வெல்வோம். விளக்கத்தில் வாழ்வோம்’ என்று 21-12-1988 அன்று மௌனத்தில் மகரிஷி அவர்கள் கூறியதை, இப்போது நமக்குள் இருந்து சொல்வதுபோல் ஏற்றுக் கொண்டு ‘விளங்கிய வாழ்வில் செயல்படுவோம்.’ என உறுதி எடுத்துக் கொள்வோம்.
அடுத்த விருந்தில், ஆன்மா எடுத்துள்ள பல்லாயிரம் பிறவிகளில், குறைந்தபட்சம், தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில், மனிதன் எத்தனை ஆயிரம் ஆன்மாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளான் என்பதனை அட்டவணையின் வாயிலாக அறிய இருக்கிறோம். அதனை அறிவதன் மூலம் அறிவின் முழுமைக்காக, முழு-ஒழுக்க வாழ்க்கை வாழ்வதில் ஏற்படும் போராட்டத்திற்குக் காரணமான பழக்கப்பதிவின் அழுத்தத்தை உணர்ந்து கொண்டு அதனை வெற்றி கொள்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழியில் சத்சங்கம் உள்பட பயிற்சிகளை செய்து வெற்றி பெறுவோம். அதற்கு குருவருளும் திருவருளும் துணை நிற்குமாக. வாழ்க வளமுடன். தொடரும் 17-06-2015 புதன்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.