வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
மேலும் உண்மை விளங்க …………?
சிறப்பு அறிவிற்கு விருந்து – 336
FFC – 336
இணையதள பதிவேற்றம் – 1011
நாள்: 14-08-2024
உ.ச.ஆண்டு: 14-08-39
மூவரையும் வணங்குவோம்:
கிடைத்தற்கரியவும், இரண்டாம் ஜகத் குருவுமாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் 114வது ஜெயந்தி விழாவும், உலக அமைதி விழாவும் கொண்டாடுவதற்கு நல்வாய்ப்பு கிடைத்தமைக்கு நம் பெற்றோர்களையும், குருவையும், இறையையும் வணங்குகிறோம். வணங்குதலும், நன்றி தெரிவித்தலும் மட்டுமே பிறந்தநாள் கொண்டாதுவதன் நோக்கமன்று.
1. சான்றோர்கள் யார்?
பொதுவாக சமுதாயத்தில் எதற்காக சான்றோர் பெருமக்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது? தங்கள் பிறந்த நாளை அன்றிருந்த அல்லது வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டும் என்று சான்றோர்கள் விரும்பினார்களா/விரும்புகிறார்களா? இயற்கைநெறியையே/இறைநெறியையே (ஒழுக்க நெறியை) சார்ந்து இருந்து விழிப்புணர்வில் தவறாமல் வாழ்வாங்கு வாழ்ந்ததால் அவர்கள் சான்றோர்கள் என, அவர்கள் வாழ்ந்த அதே சமுதாய மக்களால்தான் போற்றப்படுகின்றனா். பிறந்தநாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
2.பிறந்தநாள் விழாவின் நோக்கம்:
சான்றோர்களின் பிறந்த நாள் கொண்டாடுவது வெறும் சம்பிரதாய சடங்கல்ல. சான்றோர்கள் யாரும் தங்களைப் போற்ற வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை என்றாலும் நாம் அவர்களைப் போற்றியே ஆகவேண்டும். நம் மூலத்தின் இயல்பூக்க நியதியைப் பயன் படுத்தி அவர்கள் உயர்ந்ததுபோன்றே நாமும் உயர்வதற்கு(ஞா.க. எண்.10–15-08-1984) போற்றத்தான் வேண்டும். ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது; இரசிக்கவும் முடியாது’ என்பது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாக(corollary) இருப்பதால் நாம் குருவின் மேன்மையையும், உயர்வையும் போற்ற வேண்டும்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கேற்ப சான்றோர்கள் விரும்புவது அவர்கள் வாழ்ந்த இன்பவாழ்வினை பிறரும் வாழ வேண்டும் என்று தான் விரும்பினர்/விரும்புகின்றனர். எனவே சான்றோர் பெருமக்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதன் பொருள் அறிந்து, அவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் கூறும் நல்லுரைகளை மதித்து போற்றி ஏற்று நல்வாழ்வு வாழ வேண்டும். அவர்களை மதிப்பதும் நன்றி சொல்ல விரும்புவதும் என்பது அவர்களின் நல்லுரைகளை ஏற்று அவர்களைப் போன்று இயற்கைநெறியை/இறைநெறியை(ஒழுக்க நெறியை) சார்ந்து சான்றோர்களாக வாழ்வதேயாகும்.
இயல்பூக்க நியதியின் பெருமையை அறிந்து, நம் மூலமான வெட்டவெளியின் இயல்பூக்க நியதியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை மகரிஷி அவர்களின் கவியின் வாயிலாகவே அறிவோம்.
3. பிறந்தநாள் விழா – உலக அமைதி விழா:
இன்று நாம் அருட்தந்தையின் 114வது பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம். அதே வேளையில் உலகநலத் தொண்டரும் உலக அமைதிக்காக இயல் ஏற்படுத்தியவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் நோக்கம் உலக அமைதி என்பதால் அவரின் பிறந்த நாளை உலக அமைதி தினமாகக் கொண்டாடுமாறு அவரே சீடர்களான நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுவாக வழக்கம்போல் பிறந்தநாள் விழா வெறும் சம்பிரதாயமாக அமைவதுபோல் அமைந்துவிடக்கூடாது என எண்ணி அவரது நோக்கமான உலக அமைதி ஏற்படவேண்டும் என்பதால் அவரே தன் பிறந்த நாளை உலக அமைதி விழாவாக கொண்டாடுமாறு வேண்டுகோளையும் அவரது சீடர்களிடம் அன்புடன் வைத்துள்ளார். எனவே அவர் பிறந்த நாளை உலக அமைதி விழாவாகவும் மிகுந்த சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம் என்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றால் மிகையன்று.
4. புனர்ஜென்மம் – இரண்டாவது பிறந்த நாள்:
நாம் பூதவுடலுடன் இப்புவிக்கு வந்த நாளை பிறந்த நாள் என்கிறோம். தாய், தந்தையர் கொடுத்தது இந்த பூதவுடல். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் பிறந்த நாளாக இருக்கும். ஆனால் இறையறிந்த குருவினிடம் சீடனாகிவிட்டால் அவனுக்கு இரண்டு பிறந்த நாள் வந்துவிடுகின்றது. ஆகவே வேதாத்திரி மகரிஷியின் சீடர்கள் ஒவ்வொருக்கும் மற்றொரு நாள் பிறந்த நாளாக அமைந்துள்ளது. அதுவே புனர்ஜென்ம நாள். என்றைக்கு வேதாத்திரி மகிரிஷியை குருவாக ஏற்றுக்கொண்டோமோ அந்த புனித நாளே நாம் புனர்ஜென்மம் எடுத்த இரண்டாவது பிறந்த நாளாகும்.
5. ஆன்மாவின் பூர்வீக சொத்தே பிறவியாச்சு:
நம்முடைய தாய் தந்தை, அவர்களின் முன்னோர்கள் ஆகியவர்களின் கருமையப் பதிவுகளில் உள்ள அறமோ அல்லது மற்றவையோ சொத்தாகக் கொண்ட அப்பதிவுகளின் விளைவுகளை இன்ப-துன்பமாக அனுபவிக்கவேதான் நம் ஆன்மா இந்த பூதஉடலை எடுத்து இப்புவிக்கு வந்துள்ளது. நாம் கொண்டு வந்த சொத்தில் இருந்த அறத்தின் (புண்ணியத்தின்) பயனாகவேதான் நாம் கிடைத்தற்கரிய குருவைப் பெற்றதும். நாம் பூதவுடல் எடுத்த நாளை பிறந்த நாள் என்கிறோம். ஆனால் நம் குருநாதருக்கு சீடராக அமைந்த நாளை எவ்வாறு அழைப்பது? வாழ்நாளில் முக்கிய நாளாயிற்றே அந்நன்னாள். அது மற்றொரு பிறந்த நாள். அப்படி சொன்னால் போதுமா? இதே உடலில் அந்த நன்னாளில் மறு ஜென்மம் எடுத்துள்ளோம் என்பதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் அன்றைய தினத்திலிருந்து, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அன்று முதல் புதுவாழ்வு(fresh lease of life) மலர ஆரம்பிக்கும் நாளாக அமைந்துள்ளது. அந்நாளை புனர்ஜென்ம நாள் என அழைக்கிறோம்.
6.குருவின் பிறந்த நாளும் சீடனின் புனர்ஜென்ம நாளும்:
பிறந்த நாளை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகின்றது. குருவின் சீடர்களின் மற்றொரு பிறந்த நாளை சிலர் நினைவில் கொண்டிருப்பர். அந்த புனர்ஜென்ம நாளை சீடர்கள் கொண்டாட வேண்டாமா? ஒவ்வொருவருக்கும் வெவ்வெறு நாட்கள் புனர்ஜென்ம நாளாக இருக்கும். ஆகவே மகரிஷியின் சீடர்களாகிய நாம் அனைவருமே நம் குருநாதரின் பிறந்த நாளை கொண்டாடும் நாளன்றே நம் புனர்ஜென்மா நாளாகக் கொண்டாடுவோமே! வருடத்திற்கு ஒரு முறை வருகின்றது புனர்ஜென்ம நாள். அந்தநாளில் கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நமது பண்பேற்றத்தில் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதனை சுயசோதனை(self-assessment for the year and taking a fresh resolution in the coming year) செய்து பார்க்க வேண்டும்.
7. குரு எவ்வாறு உதவுகிறார்? உதவி இருக்கின்றார்?
இத்தருணத்தில் புனர்ஜென்மம் எடுத்த பிறகு குரு எவ்வாறு உதவுகிறார் என்பதனை மகரிஷி அவர்களின் வாய்மொழியின் வாயிலாகவே இச்சிந்தனையின் தொடக்கத்தில் பாடிய அவரது கவியின் வாயிலாகவே அறிந்து கொண்டோம். இதுவரை பிறந்த நாள் கொண்டாடுவதன் நோக்கத்தை நினைவு படுத்திக்கொண்டோம். அந்நோக்கத்திற்கு பொருத்தமாக இச்சத்சங்கத்தில் சிந்திக்க அவர் மொழிந்துள்ள வார்த்தையையே எடுத்துக் கொள்வோம்.
குருவின் ஆசியுடன் தலைப்பிற்குள் செல்வோம்.
மேலும் உண்மை விளங்க …………?
…. தொடரும்
வாழ்க வளமுடன்! 15-08-2024 அன்று கூடுவோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
![]()








