FFC – 131-அறிவிற்கு விருந்து

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

அறிவிற்கு விருந்து 

FFC – 131

28-10-2015—புதன்

FFC-131-28-10-2015-தெய்வப் புலவர்-அறிவிற்கு விருந்து

 

திருவள்ளுவர் 133 அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார் என்றால் என்ன பொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனிதனுக்கு அவசியமானது. சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளிலே சொன்னால் அது போதாது என்று எண்ணி பத்து கோணங்களில் கூறுவதற்குப் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார். ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்துக் குறப்பாக்களை அருளியுள்ளார். அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இயற்கை தனது மனிதகுலத் தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப் பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி அறவுரைகள் வழங்கினாலும் சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை, எப்படி, உடலுக்கு நோய் வந்தால் மருந்தைக் கொண்டு சரி செய்துகொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை இவ்வளவு அறநெறிகளை தனது மூத்த குழந்தைகளில் ஒருசிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும் மனிதசமுதாயம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. ‘நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்றே கிடைக்கும் களாக்காயே மேல்’ என கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அனுபவித்துவிட்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான் அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.

எனவே புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்கவில்லை. அதுதான் பிறப்பிற்கானக் காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு-இறப்பு சுழலில்(mere cycle of birth and death) சிக்கித் துன்பக்கடலில் தத்தளிக்க வேண்டுமா?

சலிப்பிற்கும், நடைமுறையில் மனிதனால், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல் வரும் துன்பங்களுக்குக் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா,

எல்லாம் வல்ல இறை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை,
கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ,

அதுபோல், ஆதி மனிதனிலிருந்து இன்று வரைக் கணக்கிட முடியாத அளவில் பலகோடி கோடி மக்களாக வெறும்,

பிறப்பு –இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்தது?

இதிலே என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? இருக்க முடியும்!

இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனித வடிவில் தன்னை அறியும்போது பெறுகின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Sophisticated GOD” என்பார். காரணம் வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்தபோது கிடையாது. இயற்கை இரகசியங்களை மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றது. முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனித உடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை இரசிக்கக் கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ, அழகியோ எவ்வாறு தன் அழகினை இரசிக்க முடியும்?

அதுபோல், இறைக்கும் தன் சிறப்பினையெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனித வடிவக் கண்ணாடி தேவைப்பட்டது. இந்த நிலையினை ரசித்த ஓர் அறிஞர், இறையை கள்வன் என்கிறார். ஏனெனில் இறைவன் மனித உடலைக் கொண்டுதான் தன்னையே இரசிப்பதால் இறையை கள்வன் என்று இறையை அனுபவித்து, துவைதத்தில் சொல்கின்றார். சொல்வது துவைதம்தான். ஆனால் அறிஞர் அனுபவித்தது சுத்த அத்வைதம். சுத்த அத்வைதத்தை அனுபவிக்காமல் இப்படியொரு “இறைவன் கள்வன்” என்கின்ற உள்ளம் பூரிப்படைந்த ஆனந்த வர்ணனை வெளிவராது.

அத்வைதியானாலும் நடைமுறையில் துவைதியாகத்தான் பேச முடிகின்றது, இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்வைத நினைப்பு அயரா விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். உண்மையில் உடலும், அறிவும் இறைவன் தானே. மனிதன் யாரோ, அறிவு எதுவோ, கடவுள் யாரோ அல்லவே. “இறைவன் கள்வன்” என்பது அத்வைதத்தை அனுபவித்து சொல்வது மட்டும் துவைத்தில் சொல்வதாக உள்ளது. சுத்த அத்வைதத்தை ரசித்து அனுபவித்து, சுத்த அத்வைதத்திலேயே சொல்வ தென்றால் “இறையே தன்மாற்றம் அடைந்து மனித வடிவில் அறிவாக இருந்து கொண்டு தன் பெருமைகளையும், தன்னையும் ரசிக்கின்றது. (God Himself enjoys His beauties, admirations and Himself) காஞ்சீபுரத்தில் இறைவனுக்கு கள்வன் என்கின்ற பெயரிலே கோயில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். ஆகவே ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள் புரியாத அயரா விழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து பெருவாழ்வு வாழ்வதற்கு அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

அறிவிற்கு விருந்தை அருந்துவதற்குச் செய்ய வேண்டியவைகள்:
1) முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
2) அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் “Information, Confirmation, Transformation” சோதித்து அறிய வேண்டும். அறிந்து அதுபோல் நடக்க வேண்டும்.
3) வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளி பரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமா ஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்க வேண்டும்.
4) மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்க வேண்டும்.
5) அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும்.
6) சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ள வேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அந்த அறநூல்கள் அருளிய அறிஞரின் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
7) இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாத போது தானே சிந்திப்பது பேரறிவோடு, சிற்றறிவு
சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.

நவீன தொழில் நுட்பத்தில், www.prosperspiritually.com ஏற்பாடாகி அது சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதற்காகவே உருவானதுதான் இந்த ‘அறிவிற்கு விருந்து’ என்கின்ற பகுதி. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சகோதரிகளும், சகோதரர்களும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்க வளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.
01-11-2015 ஞாயிறன்று வேறொரு தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments