யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 3/3
FFC 95
28-06-2015–ஞாயிறு
சென்ற விருந்தில் எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றே என்று உறுதிப்படுத்தினோம். அதனை மேலும் மற்றொரு வழியில் உறுதிப்படுத்துவோம்.
அறிவில்லாத உயிரினமோ, மனிதனோ இல்லை. எல்லோரிடம் அறிவு இருக்கின்றது. அறிவு ஒவ்வொரிடமும் உள்ளது. உடல்கள் வெவ்வேறாக இருப்பதுபோல் அறிவு வெவ்வேறானவையா? இது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
ஆகவே 720 கோடி உலக மக்களிடம் உள்ள அறிவும் ஒன்றுதான். 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றுதான் என்றால் அது ஒன்றிலிருந்துதான் வந்திருக்க முடியும். அப்படியானால் 720 கோடி உலக மக்களின் அறிவிற்கு மூலமும் அந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூலம் எது? அந்த ஒரே அறிவிற்கு இருப்பிடம் அந்த மூலம்தானா? அறிவு இயற்கைதானே! ஆம் அறிவு இயற்கைதான். ஆகவே இயற்கையின் ஆதிநிலையிலிருந்துதான் (Primordial State of Nature) அறிவு வந்திருக்கின்றது. இயற்கையின் ஆதிநிலைதான் இந்த 720 கோடி உலகமக்களின் அறிவிற்கும் மூலம். இயற்கையின் ஆதிநிலையில் இருந்த அரூபமான அறிவை பேரறிவு என்கிறோம். அந்தப் பேரறிவுதான் பின்னப்பட்டு(fractionated consciousness), எல்லோரிடமும் அரூபமான சிற்றறிவாக உள்ளது. ஆறடி உயரமுள்ள மனிதர்களிடம் உள்ள சிற்றறிவு அந்தப் பேரறிவிலிருந்தே வந்துள்ளது.
மண் பாத்திரத்திலுள்ள நீரிலும் சூரியன் தெரிகின்றது. பொன் பாத்திரத்திலுள்ள நீரிலும் சூரியன் தெரிகின்றது. அந்த இரண்டு பாத்திரங்களிலும் தெரியும் சூரியன் ஒன்றே. மண் பாத்திரத்திலுள்ளதால் அந்த சூரியன் வேறு. பொன் பாத்திரத்திலுள்ளது என்பதால் அந்த சூரியன் உயர்ந்தது, வேறானதா? இல்லை. இரண்டு பாத்திரத்திலுள்ள நீரில் தெரிவது ஒரே சூரியன். அதுபோல் 720 கோடி உலக மக்களின் அறிவும், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், படித்தவர், படிக்காதவர் போன்ற ஏற்றத்தாழ்வின்றி ஒரே அறிவுதான் எல்லோரிடமும் உள்ளது.
அறிவிற்கு உருவமில்லை. அது அரூபம். உருவத்தில்தான் வெவ்வேறு இருக்க முடியும். அரூபத்தில் வெவ்வேறு இருக்க முடியாது. அரூபம் என்றால் ஒன்றுதான் இருக்க முடியும். உருவம் என்பதற்குத்தான் எல்லை வந்துவிடுகின்றது. எல்லை இருந்தால்தான் உருவம் வரும். உருவத்திற்கு பிரிவுகள் வரும். உருவங்கள் எப்போதும் வெவ்வேறானவை. அவை எப்போதும் ஒன்றாகாது. ஆனால் உருவத்திற்கு எதிரான அருவத்திற்கு/அரூபத்திற்கு எல்லை கிடையாது. ஆகவே அது எல்லையற்றது(infinite). அரூபங்கள் வெவ்வேறு இடங்களில் தனித்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எவ்வாறு எனில் நீரில் மூழ்கியிருக்கும் sponge இல் உள்ள துளைகளில்(pores)தண்ணீர் உள் சென்று எவ்வாறு தொடர்புடையதாக உள்ளதோ அது போல் எல்லா அரூபங்களும் விடுபடாமல், நீக்கமற(தொடர்புடையதாகவே – continuum) உள்ளன. எல்லா அரூபங்களும் ஒன்றேதான். என்கின்ற போது 720 கோடி உலகமக்களுக்கும் உள்ள அரூபமான அறிவும் ஒன்றுதான்.
ஒன்றிலிருந்து வந்ததுதான். அந்த ஒன்று தான் பேரறிவு. ஆகவே அறிவு பொதுவானது. எனவே பொதுவான அறிவை வணங்குவதற்கான அறிவுத்திருக்கோயில்கள் மனிதகுலத்திற்கே பொதுவான கோயில்.
“அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்” என்கிறார் மகரிஷி அவர்கள். என்ன பொருள்? முன்பு சொன்னது போல் அறிவு நிலையில் என்பதனை, இங்கு அறிவை அரூபசக்தி நிலையில் நாம் அனைவரும் ஏகனானோம் என்கிறார். அதாவது ஒன்றாகத்தான் இருக்கிறோம். என்கிறார், ஆகவேதான் அறிவுத்திருக்கோயில்கள் அனைவருக்கும் பொதுவான கோயில்களாக அமைந்துள்ளன.
இங்கு வருபவர்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடில்லாமல் எளியமுறை உடற்பயிற்சி, எளியமுறை தவமும், காயகற்பப் பயிற்சியும், அகத்தாய்வுப் பயிற்சியும் கற்கலாம். இதனால் உடல்நலமும், மனவளமும், கருவளமும், குணநலமும் கிடைக்கின்றது. ஆகவே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறவியல் வளர்கின்றது. வாழ்வின் நோக்கம் அறிந்து இறைநிலையடைய வழிவகுப்பதே அறிவித்திருக்கோயில்களின் பணியாகும்.
மனிதகுலம் உய்வதற்கான ஒளிவிளக்காக அமைந்திருப்பதே அறிவுத்திருக்கோயில்கள் என்கிறார் உலகின் முதன்முதல் அறிவுத்திருக்கோயில் ஏற்படுத்திய மகரிஷி அவர்கள். அறிவுத்திருக்கோயில்கள் ஒரிடத்தில் நிலையாக(stationary) இருந்து கொண்டு பணியாற்றுகின்றன. ஆனால் நிலையான அறிவுத்திருக்கோயில்கள் ஒவ்வொரு மனிதனையும் நடமாடும்(mobile) அறிவுத்திருக்கோயில்களாக உயா்த்தி அமைக்கின்றன.
இந்த நிலையான அறிவுத்திருக்கோயில்கள், ஒவ்வொரு மனிதனையும், நடமாடும் அறிவுத்திருக்கோயிலாக உயர்த்துவதால், அறிவுத்தொண்டு எங்கெங்கு தேவைப்படுகின்றதோ, அங்கு அனுப்பி அறிவுத் தொண்டாற்றச் செய்கின்றன. அறிவுத்திருக்கோயில்கள் இறைத்தூதுவர்களை உருவாக்குகின்ற புனித நிலையங்களாக திகழ்கின்றன. தூதுவர் என்றால் யார்? தூதுவர் என்பவர் ஒரு நாட்டின் பிரதிநிதியாக, மற்றொரு நாட்டிற்கு செய்திகளை எடுத்துச் செல்லும், அரசினுடைய உயர் அதிகாரி.
இறை நேரிடையாக பேச இயலாது. இறை ஆற்றலாக அரூபமாக இருப்பதால், அதற்கென்று தனியாக வாய், நாக்கு இல்லை. ஆனால் மனிதர்களுடைய வாயாகவும், நாக்காகவும் உள்ளதால் மனிதனின் வழியாக பேசுகின்றது, பேசுகின்ற அத்தகையவர்களிலும், வெகுசிலர், வள்ளுவர் கூறுவதுபோல், தன்னை ஐயப்படாது உணரும்போது அவர்களின் வழியாக பேசும்போது அவர்கள் இறைத்தூதுவர்களாகின்றனர், இறையின் அதாவது அருள் அரசினுடைய பிரதிநிதியாக, இறை பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறுகின்றவர் இறைத்தூதுவர். அத்தகைய இறைத்தூதுவர்களை அறிவுத்திருக்கோயில்கள் உருவாக்கி வருகின்றன.
எனவே மக்கள் தொகைக்குத் தேவையான அளவிற்கு உலகெங்கும் அறிவுத்திருக்கோயில்களை உருவாக்கி திருவேதாத்திரியத்தை ஓதுவோம். இயற்கை/இறைநீதி—செயல் விளைவு –கூர்தலறம் உணர்ந்து, நெறிநின்று வாழும் முறையாகிய இறைவழிபாடு மிக மிக அவசியம் என்கின்ற தேவையினை பூர்த்தி செய்வதற்காக இயற்கை/இறை ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால் தன் செயலில் இறைவனை உணா்வதற்கு, அறிவு தன்னை திருத்திக்கொள்ளவதற்காகத் திருக்கோயில்கள் உருவாகிவருகின்றன. வாழ்க அறிவுத்திருக்கோயில்கள். வளர்க அறிவுத்திருக்கோயில்கள். இத்துடன் இச்சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்திற்கு (01-07-2015) கூடுவோம். வாழ்க வளமுடன்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.