வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க கவிகள் – 15
நாள்– 23-06-2024
உ.ச.ஆ.-23-06-39
துறவு
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.” . . . குறள் எண் 341
பொருள்: யாவரும் அறிந்ததே. எனினும் குறளின் பொருளை நினைவு படுத்திக் கொள்வோம். எந்தப் பொருள்களிலிருந்து பற்று இல்லையோ அந்தப்பொருளினால் துன்பம் அவனுக்கு இல்லை.
பயிற்சி:-
- என்ன உரைக்கிறார் பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர் அவர்கள்?
- வாழ்விற்கு பொருள்கள் அவசியமாயிற்றே! ’பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்கின்ற திருவள்ளுவரா பொருள்களிலிருந்து விலகி இருந்தால் அந்தப்பொருளிலிருந்து துன்பம் இல்லை என்பார்!
- ஒவ்வொரு பொருளிலிருந்தா ஒவ்வொரு தனித்தனி துன்பம் முளைக்கும்? இதில் உள்ள சூட்சுமம் என்ன?
- துறவு என்ற அதிகாரத்தில் முதல் குறளாக வைத்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதல்லவா?
- மனவளக்கலை பாகம் -1 என்கின்ற நூலில் கவலை ஒழித்தல் பாடத்தை இக்குறளுடன் ஆரம்பிப்பதிலிருந்து என்ன அறிய வேண்டியுள்ளது?
- மனவளக்கலை பாகம் -1 ல் கவலை ஒழித்தல் பாடத்தின் ஆரம்பத்தில் உள்ள இக்குறளின் முழுமையான பொருளை ஏற்கனவே அறிந்துகொண்டிருந்தால் அப்பாடத்தில் வருகின்ற 27 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கவலை ஒழிக்கும் யுக்திகள் படிப்பதற்கு முன்னரே அறிவிற்கு வெளிச்சமாகிவிடுமன்றோ?
- வாழ்வை இருவகை வாழ்வாக மாற்றிக்கொண்டு (உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை) சமுதாயத்தில் மானுடம் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப/சௌகரியத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து வாழ்கின்ற எந்த பிரிவினருக்கு திருவள்ளுவரின் இந்த அறிவுரை?
- துறவு என்பதன் சரியான பொருள் என்ன? பற்றற்ற உறவு என்கின்றாரே (detached attachment ) மகரிஷி அவர்கள். அதுவா திருவள்ளுவர் கூறும் இந்த துறவு?
- துறவு பற்றி திருவள்ளுவரின் இரண்டாம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?(ஞானக்களஞ்சியம் கவி எண் – 1849)
- பொருளைத் துய்க்கும்போதோ அல்லது பொருள் மீது பற்றுகொண்டிருக்கும்போதோ ஏன் துன்பம் வருகின்றது
- புலன்கள் வழி்யாக இன்பம் துய்க்கும் போது கவனிக்க வேண்டிய சாம்யம் ஏதேனும் உள்ளதா? என்ன மகரிஷி அவர்கள் கூறுகிறார்?
- மகரிஷி அவாகள் கூறும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் திருவள்ளுவர் கூறுகின்ற இக்குறளின் பொருளுக்கும் தொடர்புள்ளதா?
- ஞானியின் அடையாளத்திற்கும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் தொடர்பு உள்ளதா? சிந்திப்போம் அன்பர்களே!.
- “LESS LUGGAGE – MORE COMFORT” என்கின்ற ரயில்வே துறையின் ஸ்லோகம் நினைவிற்கு வருகின்றதா?
- வேதாத்திரிய ஆன்மீகத்திற்கு அச்சப்படத் தேவையில்லை அன்பர்களே! வாழ்க வளமுடன்! எல்லோருமே விரும்பும் உலகியல் மற்றும் மெய்ஞ்ஞானிகள் மட்டுமே விரும்புகின்ற, வாழ்கின்ற ஆன்மீக வாழ்வும் இணைந்த, மனிதன் மனிதனாக, மாமனிதனாக வாழும் வாழ்க்கை வாழ்வோம் அன்பர்களே! கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களை பின்பற்றி வாழ்வோம். வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!