வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
மகானாக்கும் மகோன்னத வினாக்கள்7/7
FFC – 27
நேற்றையத் தொடர்ச்சி
25-11-2014
வறுமை ஏன் வருகின்றது?
கொடிது ! கொடிது ! வறுமை கொடிது !
அதனினும் கொடிது இளமையில் வறுமை? …….அவ்வையார்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளளார்.
தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறார் மகாகவி பாரதி மகான்
நேற்று முன்றாவது வினாவான கடவுள் என்பவர் யார் என்று பார்த்தோம். இன்று வறுமை ஏன் வருகின்றது என்கின்ற வினாவிற்கானக் காரணத்தைப் பார்ப்போம்.
மகரிஷி அவர்கள் பத்து வயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கியவர்.. சிறுவனாக இருந்தபோதே தறியில் உழைப்பார் மகரிஷி அவர்கள். ஒரு நாள் காலையிலிருந்து தறியில் வேலை செய்துவிட்டு வந்தவருக்கு நண்பகல் உணவாக கஞ்சிகூட பெற்றோர்களால் கொடுக்கமுடியாத வறுமை நிலையை அனுபவித்தவர். அவ்வையார் கூறியுள்ளது போல் இளமையில் வறுமை என்கின்ற மிகக் கொடிய நிலையை. அனுபவித்தவர்.
ஏன் இளமையில் வருமை கொடியது என்கிறார் அவ்வையார்? இளமையில் பசியினைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் இளமை என்பது வளரும் பருவம். வளரும் நிலையிலேயே வறுமை இருந்தால் உடலளவில் எவ்வாறு வளர முடியும்? பிறகு குணத்திலேயும் வளர வேண்டியதுள்ளது. எனவேதான் அவ்வையார் இளமையில் வறுமை கொடியதிலும் கொடியது என்கிறார்.
எதனையும் அதன் போக்கிலே விட்டுவிடாமல் ஏழ்மை ஏன் வருகின்றது என வினாவினைக் கேட்டார் மகரிஷி அவர்கள். இன்பம்,துன்பம் ஏன் வருகின்றன என வினாவினார். தன்குடும்ப வறுமையைப் போக்க. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்வதன் மூலம் போக்க முடியும் எனக்கண்டறிந்தார். அதுபோலவே வறுமையை ஒரு அளவிற்கு சமாளித்தார். வறுமை இருப்பினும் தன்னுடைய நான்கு வினாக்களுக்கான விடைகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியோடு இருந்து வந்தார்.
தனக்குள்ள வறுமையை மட்டும் தீர்வு காணாமல், சமுதாயத்தில் உள்ள வறுமையையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். பொருள் வறுமை இல்லை, அறிவின் வறுமைதான் உள்ளது எனக் கண்டு பிடித்தார். பகிர்ந்துண்ணும் நிலைக்கு அறிவு நிலை பண்படாததை அறிவின் வறுமை என்கிறார். வறுமை என்கின்ற துன்ப அலை வீசும் போது மற்றவர்கள் எவ்வாறு நலமாக வாழ முடியும்?
இயற்கை அன்னை ஒவ்வொரு உயிரையும் படைக்கும் முன்னரே அது வாழ்வதற்கான வளங்களை வைத்து விட்டுத்தான் படைக்கிறாள். ஏழ்மையில் சிலர் வாழ வேண்டும் என்றா படைத்திருப்பாள்? ஆகவே ஏழ்மை என்பது மனிதனால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. ஆகவே சமுதாயம் நினைத்தால் ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். பொருள்துறையில் சமநீதி தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
”பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த” வாழ்வு காண்போம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
, ” உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்” என்று உலகைத் தினந்தோறும் அவரது மாணவர்களையெல்லாம் வாழ்த்தச் செய்திருக்கிறார்.
உலகநல வேட்பில்.
மக்கள் உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும் ” என்கிறார்.
சமூகச்சிக்கல்களுக்கான காரணங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்று கூறி தீர்வுகளைக் கூறியிருக்கிறார்.
மனித வாழ்க்கை அறநெறியாக இருக்கவேண்டும் என்று எண்ணி., ஒழுக்கம். கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டது அறம் என்று, இது வரை துல்லியமாக வரையறுக்கப்படாத இருந்து வந்த அறத்தை வரையறுத்திருக்கிறார்.
”குலமுதலாய் பேதங்கள் கொள்ளும் நிலைமாற்றி
பலரும் கூடி உழைத்துப் பங்கிட்டு வாழ்ந்திடுவோம்
உலகில் பிறந்து விட்ட ஒவ்வொர் மனிதனுக்கும்
நில உலகம் சொந்தமென்ற நீதிநிலை நாட்டிடுவோம்.” ……. என்கிறார் மகரிஷி அவர்கள்.
இந்த நான்கு வினாக்களும் தனிமனித மற்றும் சமுதாய நலனைக் கருதியதாகின்றன. இந்த வினாக்களுக்கான விடைகள் இன்றுள்ள சமுதாயத்தை உய்விக்கச் செய்யவல்லன. ஏழு நாட்களாக மகானாக்கும் மகோன்னத வினாக்கள் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.
இந்த மகோன்னத வினாக்கள் வேதாத்திரிய சிறுவனை பின்னர் மகானாக்கியது என்பதால், அவரைப் பற்றி மட்டும் சிந்திப்பதற்காக ”மகானாக்கிய மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து சிந்தித்திருக்கலாம். ஆனால் மகானாகுதல் எனும் வாழ்வின் நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கருதாமல், ” மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து மகானாகுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே மனித குலத்தில் அவசியமாகின்றது என வலியுறுத்தப்படுகின்றது..
இதனை எண்ணித்தான் மகரிஷி அவர்கள் “Vision”என்கின்ற ஆன்மீக கல்வி நிறுவனத்தை நிறுவி அதன்வழியாக யோகமும் மனித மாண்பும்” என்கின்ற கல்வியினை பள்ளியிலிருந்து பல்கலைக்கழங்கள் வரை கொண்டுசென்று மனிதர்களையெல்லாம் பண்பேற்றம் பெறுவதற்காக வழிவகைகள் செய்துள்ளார்.
ஆகவே இந்த நான்கு வினாக்களுக்கும் விடைகள் தெரிந்து விட்டது இனிமேல் இந்த வினாக்களை எழுப்பி விடைகாண வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதவே முடியாது. இந்த நான்கு வினாக்களுக்கான விடைகள் சரியா, எவ்வாறு சரி, அறிவுபூர்வமாக உள்ளனவா என ஆராய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரும் ஆராய்ந்து சரி என ஒப்புதல் வழங்கும் போதுதான் வேதாத்திரியம் மேலும் மேலும் பூத்து காய்த்து கனிகளாகிப் பயன்படுவதற்கு மக்களின் ஆத்மார்த்த எண்ண ஆதரவு திரண்டு உலக மக்களால் ஏற்கப்பட்டு, பாரதியாரின் இளைய சகோதரரான மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக சமாதானம் விரைவில் மலரும்.
” எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்”
என்கின்ற பாரதி மகானின் சத்திய வாக்கினை, அவரது தம்பியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக நிஜமாக்குவதற்காக இயற்கை அன்னை, தன்னுடைய தன்மாற்றத்தில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அவளுடைய குழந்தைகளான நாம் துணை நிற்போம். பேரறிவில் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் அறிவாற்றலும் இவ்வுலகத்தை உய்விக்கட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
இச்சிந்தனை இப்போதைக்கு முற்றிற்று.. ஆனாலும் இது பற்றிய சிந்தனை மேலும் உள்ளது.
வாழ்க உலக சமாதானம். வருக உலக சமாதானம் விரைவில் என
வாழ்த்துகிறோம்.
 
 
                
 wpDiscuz
                     
                    wpDiscuz
                