வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
அறிவிற்கு விருந்து-FFC- 338
இணையதள பதிவேற்றம்- 1013
நாள்: 21-04-2025
உ.ச.ஆண்டு: 21-04- 40
அதுவே அதுவானால் அதுவே சொல்லும்
‘அதுவே அதுவானால் அதுவே சொல்லும்’ என்பது தன்னிலை அறிந்த ஆன்றோர்களின் வாக்கு. அதுவே சொல்லும் என்றால் யாருக்குச் சொல்லும்? ஒரு சிலருக்கு மட்டுமே சொல்லுமா? இதில் அறிவியல் உள்ளதா? அறிவியல் என்றால் எல்லாருக்குமே சொல்ல வேண்டுமே?அதைப் பற்றிச் சிந்திப்போம் அன்பர்களே!
அதுவே என்றால் எது? இறையே(இறைவனே) என்பதாகும்.
அதுவானால் என்றால்…? இறையே இறையானால் என்று பொருளாகின்றது.
அப்படியெனில் இறையே இறையானால் எனும்போது இறை இப்போது இறையாக இல்லையா? இது எவ்வாறு சரியாக இருக்கமுடியும்?
இரும்பு உலோகத்தைப் பார்க்கிறோம்; அதனை இரும்பு என்கிறோம். இரும்பைப் பற்றிக் கூறும்போது இரும்பே இரும்பானால் அதனைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தலாம் என்று சொல்ல முடியமா? இரும்பே இரும்பானால் என்கின்ற பேச்சிற்கே அங்கே இடமில்லை. இரும்பே இரும்பானல் என்கின்ற நிபந்தனைக்கே இடமில்லையே! இரும்பாக இருப்பதால்தான் அது இரும்பு எனப்படுகின்றது.
ஆனால், ‘இறையின்மனித தன்மாற்றத்தில் மட்டும் இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனைத் தேவைப்படுகின்றது. காரணம், இறையே(இறைவனே)மனிதனாகத் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், அது இறையாக இல்லை. இறை நேரிடையாக மனிதனாக வந்திருந்தால் ’இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனைக்கே அவசியமில்லை/அவசியமிருந்திருக்காது. .
இறை நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை. விலங்கினமாக தன்மாற்றம் அடைந்தபிறகுதான் மனிதனாக வந்துள்ளது. ஆகவே பிறர் வளம் பறிக்கும் பரிணாமக் கசடான(evolutionary effluent) விலங்கினப் பண்பைக்கொண்டு வந்துள்ளதால் இறையே இறையானால் என்கின்ற நிபந்தனை அவசியமாகின்றது.
இறை, தன்னுடைய மாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்னர் எப்படி இருந்தது? இறையாகத்தான் இருந்தது. ஆனால், இறை மனிதனாக மாற்றம் அடைந்தபோது ’இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனை வந்துவிட்டது.
இறையின் தன்மாற்ற சரித்திரத்தை இறையே மனிதனுக்கு கூறும்போது தான் சரியான விளக்கமாக இருக்கும். இறை எப்போது மனிதனுக்கு தன்னுடைய தன்மாற்றச் சரித்திரத்தை சொல்வது சாத்தியமாகும்? இறை எல்லோருக்கும் தன் தன்மாற்றச் சரித்திரத்தைச் சொல்லத் தயாராகவே உள்ளது. ஆனால் காது கொடுத்துக் கேட்பதற்கு கோடியில் ஒருவர்தான் உள்ளனர் என்பது ஆன்மீக வரலாற்றை ஆராயும்போது நிதர்சனமாகத் தெரிகின்றது. இறை சொல்ல, அதனைக் காது கொடுத்து கேட்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்களைக் காண்பது ’அத்திப்பூ பூத்தாற்போல்’ அரிதாகவும், அதிசயமாகவும் உள்ளது. ஒரு சிலர்தான் விலங்கினப்பண்பை செயலிழக்கச்செய்து மனிதப்பண்பை வளர்த்துக்கொண்ட மாண்புடையாளர்கள்.
“இறைவன் பணித்தான், இறைவனோடு உரையாடினேன்” போன்ற இறையனுபவத்தை அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளல் பெருமான் பெற்றதை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் அருளிய ‘அருட்பேராற்றலின் அன்புக் குரல்’ எனும் நூலின் முன்னுரையில் மூன்றாவது பக்கத்தில் எடுத்துரைக்கிறார். மேலும் தனக்கு ஏற்படும் இறையனுபவமான “ஓசையே இல்லாத சொற்கள் மூலம்” தத்துவ உண்மைகள் தனக்குக் கிடைத்ததாகவும் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அன்பர்கள் அந்தப் பக்கத்தில் உள்ள அருட்செய்தினை முழுவதுமாக படித்து இன்புற வேண்டப்படுகின்றது. வாழ்க வளமுடன்!
’இறையே இறையானால் இறையே சொல்லும்’ என்பது என்னவெனில், மாண்பு நிலையை அடைந்தவர்கள் ஒரு பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, மனதில் கேள்வியாக எழுவதும் அவனே, பதிலாக வருவதும் அவனே. சுருங்கச்சொல்வதெனில் அந்த ’பேரின்ப நிலையே (கேள்வியாகவும். பதிலாக வருகின்ற நிலை) ஆழ்ந்த சீரான தொடர் சிந்தனையாகும்(consistent and persistent pondering).’
மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் இந்த நல்வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. தங்கக் கட்டியாக இருந்தால் என்ன பயன்? ஆபரணமாகும்போதுதான் அது பெருமை பெறுகின்றது. இறையே- இயற்கையே – இறைவனே மனிதனாகியும் அதன் தன்மை வெளிப்படவில்லையே. அதாவது இறையைப் பயன்படுத்தவில்லையே மனிதனால்.
‘எது எதுவாக இருந்தாலும், அது அதுவாகவில்லையோ, அதுதான் மனம் என்கின்றனர்’ இறையை உணர்ந்தவர்கள்.
இது என்ன புதிராக உள்ளதே! இதனை வேறு எவ்வாறு கூறமுடியும்?
தத்துவஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “Evolution is still incomplete – பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்கின்றார்.
அவருக்கு இளையவரானவரும், முதல் மனவளக்கலைஞருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்கை அருளிய மனவளக்கலையை, தானே பயின்று, வெற்றி கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த அனுபவத்தால் அதனை மனிதகுல முழுவதற்குமே இறையின் சார்பாக வழங்கியுள்ளார். உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருள் கூர்ந்து மனவளக்கலையை மனிதகுலத்திற்கு வழங்கியதால் நல்ல காலம் பிறந்துவிட்டது மனிதகுலத்திற்கு. மனவளக்கலை, தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை’ என்கின்ற ஆதங்கத்தை’ பூர்த்தி செய்யும் வகையிலும் மனவளக்கலை அமைந்துள்ளது. இத்தருணத்தில் நல்ல எதிர்காலம் பற்றிய மகரிஷி அவர்களின் கவியினை உற்று நோக்குவோம்.
அன்று, அதாவது 1955 ல் ”நல்ல எதிர்காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கணித்துள்ளார்(predicted). அப்போது அவருக்கு வயது 44. தனது 50 வயதில் உலகிற்கு தொண்டு செய்ய வேண்டும் என எண்னி சுமாா் 1960 ல் மனவளக்கலை பயிற்சியினை உலக மக்களுக்கு அளிக்க ஆரம்பித்தார். அன்று (1955)எதிர்காலம் என்று கூறியது நடைமுறையில் நிதர்சனமாகி இன்று நல்ல காலம் பிறந்து விட்டது. இன்னும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல வேண்டுமெனில் வெகு குறுகிய காலமான ஐந்து வருடத்திலேயே நல்ல காலம் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
எவ்வாறு அவரால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது என்பதைப் பற்றியும் அறிந்து ஆனந்தமடைவோம். கற்பனைக்கே இடமில்லாமல் அறிவியல் பூர்வமாக அறிவின் இருப்பிடத்தையும், இயக்கத்தையும், நிர்வாகத்தையும் அறிவிக்க முடிந்ததால் ஆணித்தரமாக கணிக்க முடிந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற” என உலக மக்களை அழைக்கிறார்.
அவர் எண்ணஓட்டத்தில் கலந்து அவரது எண்ணத்திற்கு வலிமை சேர்த்து நாம் இன்புறுவோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
குறிப்பு- இக்கூற்றிலில் உள்ள அறிவியலை பிறிதோரு சமயத்தில் பார்ப்போம். வாழ்க வளமுடன்!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
![]()







