அறிவிற்குவிருந்து – 291

வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

அறிவிற்குவிருந்து – 291

 

20-5-2020புதன்.

இனியொரு விதி செய்வோம்- Episode-5     

புலன்வழி வாழ்க்கை இனியில்லை!

வாழ்க வளமுடன்!

நெஞ்சுருகி இறைஞ்சுகிறோம்!     

அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்தல் முகமாக தொடர்ந்து இன்றும் மகாகவி பாரதியாரை, ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்கின்ற அவரது புனிதவாக்கினை எடுத்துக் கொண்டுள்ளோம்.  அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக அவர் கூறிய ‘புலனில் வாழ்க்கை இனி உண்டோ?!’ என்கின்ற ஆணித்தரமான சத்யவாக்கினை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சூக்குமமாக எழுந்தருளி ஆசிர்வதித்து நமக்கு இச்சிந்தனையில் வழிகாட்டுவாராக. நம் குருநாதர் இப்பொருள் பற்றி என்னென்ன சிந்தித்திருப்பாரோ அவையெல்லாம் நம் சிந்தனையில் வெளிப்பட நெஞ்சுருகி அவரை இறைஞ்சுசிறோம். குருவருள் இன்றேல் திருவருள் இல்லை. வாழ்க குருவின் புகழ்!  வளர்க குருவின் புகழ்!!.

இயற்கை/இறை நிர்ணயம் செய்துள்ளதுபோல் ….

     “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?  நம்மிலந்த வாழ்க்கை இனியுண்டோ?” என்கிறார் பன்முகக் கவிஞர் மகாகவி பாரதியார். அவர் அறிவை அறிந்த அறிஞர்.  “அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ?”  என்றும் “ சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?” என சமுதாயத்தைப் பார்த்து வினவுகிறார்.

 “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?” என்று ஒரு முறைகூறுவதோடு நில்லாமல் மீண்டும் அதனைக் கூறுவதால் என்ன பொருள்?  அவரின் நோக்கம் என்ன?  கூறுவதனை ஆணித்தரமாகவும், தான் கூறியது நடக்கும் என்று சத்யவாக்காகவும் கூறுகிறார்.   இதனைக் கண்ணுறும் மனவளக்கலைஞர்களாகிய நாம் இதிலிருந்து என்ன அறிந்து கொள்ள வேண்டும் என இயற்கை/இறை அறிவுறுத்துகின்றது? புலனில் வாழ்க்கை இனி உண்டோ என்பதால் நடைமுறையில் சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கும் முறை சரியில்லை என அறிகிறார் மகாகவி பாரதியார்.  எப்படி சரியில்லை என அறிந்தார்?  மனிதன் புலனில் எப்படி வாழ வேண்டும் என்று இயற்கை/இறை நிர்ணயம் செய்துள்ளதோ அதனை அறிந்தவர் அவர்.   அதற்கேற்ப அவர்  புலனில் சரியாக வாழ்ந்து மகிழ்ச்சியினை அனுபவமாகக்  கண்டிருக்கிறார். திருவள்ளுவரைப்போல் இப்புவி உள்ளவரை அவரது புகழ் ஓங்கி நிற்பதோடு மட்டுமின்றி அவரின் அறிவாற்றல் நம்மை சிந்திக்க வைத்துள்ளதுபோல் வருங்கால சமுதாயத்தையும் சிந்திக்க வைக்கும். ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பெருநோக்கமுடைய அருளாளர்களைப்போன்றே அவதரித்தவர் மகாகவி பாரதியாரும். ஆகவே இந்த சமுதாயமும் தான் பெற்ற இன்பத்தை பெறவேண்டும் என்கின்ற சமுதாயநல அக்கறை கொண்ட பெருமகனார் மகாகவி பாரதியார் புலனில் வாழ்க்கை இனியில்லை என்கின்ற புனித எண்ணத்தை வான்காந்த களத்திலே பரப்புவதற்காகவும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் கருதியே அவ்வாறு உரைக்கின்றார்.

எந்த துன்பமும் எதனால் வருகின்றது?

ஆகவே சமுதாயத்தை ஆராய்ந்த  மகாகவி பாரதியார், சமுதாயம்  புலனில் சரியாக வாழாததால்  அல்லலுறுகின்றது என்பதனைக் கண்டுபிடித்தார்.  சமுதாய நலத்தின் மீது அக்கறைகொண்டு சமுதாயம் அல்லலுறாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தீர்வையும் மனதில் வைத்துக் கொண்டு  புலனில் வாழ்க்கை இனியுண்டோ என்கிறார் என்பது அறியலாகின்றது.

புலனில் வாழ்க்கை தவிர்க்கவேண்டுமெனில் மனிதன் எவ்வாறு வாழவேண்டும்?  புலன்கள் இருப்பதே அனுபவிப்பதற்காகத்தானே?! அனுபவித்தலில்தானே  இன்பம் உள்ளது.  அனுபவித்தலில் துன்பமும்  உள்ளது என்பதனையும் நாம் அறிவோம் அல்லவா? எந்த துன்பமும் எதனால் வருகின்றது?  பாவச்செயல்களால்/ஒழுக்கமற்ற-தீயொழுக்கச் செயல்களால் வருகின்றது. செயல்கள் எதன் மூலம் நடக்கின்றது. ஞானேந்திரியமாகிய ஐம்புலன்கள் மூலமாகவும் ஐந்து கர்மேந்திரியங்கள் மூலமாகவும் நடக்கின்றது.  ஆகவே பாவச்செயல்களும், புண்ணியச்செயல்களும் புலன்களைக் கொண்டு புலன் வழியாக வருகின்றன. பாவச்செயல்களால் (தீயொழுக்கத்தால்) விளைவு துன்பமாகவும், புண்ணியச் செயல்களால் (ஒழுக்கத்தால்) நன்மையும் வருகின்றன. அப்படியிருக்கும்போது புலன்கள் வழியாக புண்ணியச்செயல்களை/ஒழுக்கச்செயல்களை செய்தால்  இன்பமே எப்போதும் வரும் என்பதனையும் அறிவோம் நாம்.  எப்போதுமே இன்பம் செயலை அறிகின்ற திறன் ஆறாவது அறிவிற்கு உள்ளது.  அத்திறன்தான் நுண்மாண்நுழைபுலன். அதனைப்பற்றி  பின்னர் அறிவோம். புலன்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்.

உணர்வதற்கான கருவிகளே புலன்களல்லவா?

ஆம்! உணர்வதற்கான கருவிகளே புலன்கள்.  தோற்றங்களில் உயிரற்ற சடப்பொருட்களும்  உயிரினங்களும் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லை.  உயிரினங்களுக்கு உணர்வு உண்டு.  உணர்வை அறிவு அறிந்துகொள்வதற்கு ஏற்பட்ட கருவிகளே புலன்களாகும். பிறப்பிலிருந்து மரணம்வரை உள்ள காலத்தை வாழ்நாள் என்கிறோம். அதாவது வாழ்வதால் அது வாழ்நாள் காலம் எனப்படுகின்றது.  வாழ்வது என்றால் என்ன?  இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிப்பதுதான் வாழ்வது என்பதாகின்றது.  மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் எதன் மூலம் அனுபவிக்கின்றான்?  புலன்கள் மூலம் அனுபவிக்கின்றான். ஆகவே வாழ்க்கை புலன்கள்  வழியாகவே நடக்கின்றது.

இன்றைய விருந்தில் சிந்திக்க வேண்டியது

புலனில் வாழ்க்கை இனி கிடையாது என்றால், வேறு எப்படி வாழ்வது? எப்படி வாழ முடியும்?

எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றான் மனிதன் தற்போது?

புலனில் வாழ்க்கை இனியில்லை என்பதால் புலன்களைத் தவிர்த்தும் வாழ முடியுமா, அப்படி அவசியமா?

மேலும்

புலனில் வாழ்க்கை என்பது என்ன,

அதனால் எவ்வாறு நன்மையும், தீமையும் வருகின்றது,

மனித இலக்கணத்திற்கேற்ப எவ்வாறு வாழ்வது என சிந்திக்க இருக்கிறோம்.

புலனில் வாழ்க்கை இனியில்லை என்று கூறிய தீர்க்தரிசியான மகாகவி பாரதியார் இன்ப வாழ்விற்குத் தீர்வாக என்ன கூறியிருக்கிறார்?  (பாடலில் அடுத்து வரும் வரிகளில் மனிதசமுதாயம் வாழவேண்டிய அந்த நன்முறையை ஆணித்தரமாக சத்யவாக்காகக் கூறுகிறார். அவர் என்ன கூறுகின்றார் என்பது மனவளக்கலைஞைர் அறிந்ததே.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் விரிவாக அருந்தி மகிழ்வோம்.)

இயற்கையில் உருவான புலனில் வாழ்க்கையையும் நடத்தி எவ்வாறு துன்பத்தை தவிர்த்து மகிழ்ச்சியாகவும் வாழ்வது என்பது பற்றி நம் குருநாதர் அறிவுறுத்தியதை நாம் நினைவில் கொண்டுவந்து அந்த விளக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து விளக்கப்பதிவால் பழக்கப்பதிவை வெற்றிகொள்ளச் செய்வதே இன்றைய சிந்தனையின் நோக்கமும் பயனுமாகும்.

ஏன் புலன்கள் உருவாயின?

    உடலுக்கு வெளியே நடக்கின்ற நிகழ்ச்சிகளை அறிவிற்கு புலப்படுத்தவே கருவிகள் உருவாகின.  அக்கருவிகள் அறிவிற்கு புலப்படுத்துவதால்   புலன்கள் எனலாகின்றது. கருவிகள் இல்லையெனில் அறிவு புற நிகழ்ச்சிகளை உணர முடியாது.  புற நிகழ்ச்சிகள் என்னென்ன?   அழுத்தம், ஒளி, ஒலி, சுவை மற்றும் மணம்   ஆகிய ஐவகை காந்த நிகழ்ச்சிகளே ஆகும். அதனை உணர்கின்ற கருவிகள் ஐம்புலன்கள் எனப்படுகின்றன.  உயிர் வாழும்போது ஐம்புலன்களும் தனக்கு வெளியே நடக்கின்ற நிகழ்ச்சிகளை உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உணர்ந்து கொண்டுதான் இருக்க முடியும்.  புலனில் வாழ்க்கை இனி இல்லையெனில் ஐம்புலன்களும் புற நிகழ்ச்சிகளை உணராமல் இருக்கவேண்டும் என்று பொருளா?  புலன்களை  செயல்படுத்தாமல் இருக்க வேண்டுமா(shut down the senses)?   அப்படி இல்லை.   உறங்கும்போதும், தியானத்தில் இருக்கும்போதும்  புலன்கள் தங்கள் உணர்தல் பணியினை செய்வதில்லை.  உறங்காது விழித்திருக்கும் நிலையில்  கண்கள் பார்க்கும்.  காதுகள் கேட்கும், தோல் தொடுவதை உணரும், மூக்கு மணத்தை உணரும், நா சுவை உணரும்.  உணர்தல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  அப்படியிருக்கும்போது புலனில் வாழ்க்கை இனி இல்லை என்பதற்கு என்ன பொருள்?

ஒன்றால் ஒன்று கெடக்கூடாது

ஒன்றால் ஒன்று கெடக்கூடாது. உணர்வது செயல்.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு என்பதால் உணர்தலாகிய செயலுக்கும் விளைவு உண்டு.  மனித மனம் எப்போதும் ஆதாயத்தைத்தான்  விரும்பும்(Human mind is calculative). ஆகவே உணர்தலாகிய செயலிலும்  மனம் ஆதாயத்தைத் தான் விரும்பும்.  அப்படியானால் என்ன பொருள்?  ஆதாயம் என்பது என்ன? இன்பம் இருந்தால் அது ஆதாயம். துன்பம் இருந்தால் அது ஆதாயமில்லை.  மனம்  துன்பத்தை விரும்புவதில்லை; துன்பத்தை தவிர்க்கும். உணர்தல் என்பதும் செயல்தான். ஆகவே அதற்கும் (உணர்வாகிய செயலுக்கும்)  விளைவு உண்டு. உணர்தலின் விளைவில்  அறிவிற்கு துன்பம் வராமல்  இன்பம் மட்டுமே வருவதாக  இருந்தால் அந்த செயல்  சரியானதுதான்.   ஆகவே மகாகவி “புலனில் வாழ்க்கை இனி உண்டோ”  என்று கூறுவது புலன்களால் துன்பம் தரும் வாழ்க்கையில் இனி மனிதசமுதாயம்  வாழாது என்பதே ஆகும். அப்படியானால் புலன்களால் உணராமலும் வாழ்க்கை உண்டா?  அதற்கு சாத்தியம் இல்லை. உணர்ந்தால்தான் உயிர். ஆகவே புலன்களால் உணர்ந்தும் இன்பம் அனுபவிக்க வேண்டும். உணர்தலால் துன்பமும் ஏற்படக்கூடாது என்றால் என்ன பொருள் கொள்ள வேண்டும்?  புலன்களையும் பயன்படுத்தி ஆகவேண்டும். ஆனால் அதே நேரத்தில் துன்பமும் வரக்கூடாது எனில் புலன்களினால் உணர்வதில்/அனுபவித்தலில் நடுவுநிலை(via media) இருக்க வேண்டும்.  நடுவுநிலை என்றால் என்ன?  அதற்கு இன்பம் துன்பம் என்பது என்ன? இன்பதுன்பம் ஏன் வருகின்றது, எவ்வாறு வருகின்றது என்பதனை அறிந்து கொண்டால் உணர்தல் ஆகிய செயலுக்கு நடுவுநிலை சாம்யத்தை அறிந்து கொள்ள முடியும்.  இங்கே நம் குருநாதரின் துணையை நாடுவோம்.  நம் குருநாதர் இதுவரை மருத்துவத்துறை கூறாத  இன்பதுன்ப அறிவியலைத் (Science of Enjoyment and suffering) தந்துள்ளார்.  அதனை நினைவில் கொண்டு இப்போது “புலனில் வாழ்க்கை இனி இல்லை” என்பதற்கான உட்பொருளை அறிந்து கொள்வோம். வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

அறிவியல் என்பது என்ன?

முதலில் அறிவியல் என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.  அறிவு, அறிவை(தன்னையே) அறிவு பூர்வமாக அறிந்துகொள்வது அறிவியல்அறிவு+இயல்=அறிவியல்.  இயல் என்றால் என்ன? ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றன் இயல்பை பற்றிக் கூறுவது இயல்.  அறிவைப்பற்றி அறிவு அனுபவமாக அறிந்து கொண்டு அதன் மூலத்தை, இயல்பை, செயல்பாட்டினை அறிந்து கொண்டு அதனை சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் இயல் அறிவியல் என்கிறோம் நாம்.   எனவே அறிவியல் என்பது — Science of Consciousness.  அறிவைப்பற்றிய அறிவியலில் ஒரு பகுதி தான் இன்பதுன்ப அறிவியல். Science of Enjoyment and suffering is is one of the branches  of Science of Consciousness என்று கூறி வருகிறோம்.

இன்ப துன்ப அறிவியல் பற்றி . . .

இதில் இன்பம் என்பது என்ன,  துன்பம் என்பது என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். இவ்விரண்டும் என்ன என்று தெரிந்து கொண்டால் துன்பத்தை தவிர்த்து இன்பத்தையே அனுபவிக்கலாம். மேலும் துன்பத்தை தவிர்த்து இன்பத்தையே மட்டும் அனுபவிப்பது பற்றி சொல்வது மட்டுமே இன்ப துன்ப அறிவியலாகாது.   எது  இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றது?  மனம் தான் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது. அதாவது மனம் இரண்டு நிலைகளில் இயங்குகின்றது. மனம் இன்ப துன்ப நிலை என்கின்ற இரண்டு நிலைகளில் மட்டும் இயங்குவதில்லை. அதன் தொடர்ச்சியாகவும் அதற்கு மேலாகவும் வேறு நிலைகளிலும் இயங்கும்.  அவை என்னவாக இருக்கும்?   அமைதி நிலையிலும்  (பூர்வீக சொத்தை அனுபவிக்கின்ற நிலை), பேரின்ப நிலையிலும் இயங்கும்.  ஆக மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளிலும் இயங்கவல்லது.  இன்ப துன்ப அறிவியலில் இந்த நான்கைப்பற்றியும் அறிவு பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.  அப்போதுதான் துன்பம் தவிர்த்த இன்பத்தின் சாம்யம் அறிந்து கொள்ள முடியும்.. அதற்கு வேதாத்திரிய அறிவியலில் ஒரு பகுதியான இன்ப துன்ப அறிவியலை மகரிஷி அவர்களின் துணையோடு அறிந்துகொள்வோம்.

அதிர்ச்சி! ஆச்சரியம்!! ஆனால் உண்மை!!!

மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் உள்ளத்தில் எழுந்த நான்கு மகோன்னத  வினாக்களில் (Click here) முதலாவதுதான்  ‘இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை?  அவற்றின் மூலமும் முடிவும் என்ன?’ என்பது.  நான்கு வினாக்களையும் அவரது உள்ளம் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியதாக அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்.  அந்த நான்கு வினாக்களுக்கும் இயற்கை/இறை விரைவில் பதில்களை அளித்துள்ளது “Nature reveals to me” என்பார்.  அந்த பதில்களால் மலர்ந்த பல இயல்களில் ஒன்றுதான் இன்ப துன்ப இயல்.   இன்ப துன்பத்தை பற்றி அவர் கூறும் விளக்கத்தை அறிய அவரது கவி ஒன்றினை இப்போது நினைவு கூர்வோம்.

இன்பம் துன்பம்

இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;

இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

   எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு

இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,

ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,

இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,

இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.   . . .  ஞா.க.க.எண்.  1247

 . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 

இயற்கையிலே துன்பம் இருக்க முடியுமா? இருக்க முடியாது. அப்படியானால் இருப்பது இன்பம்தான். ஒரு வேளை இயற்கையில் துன்பம் இருப்பதாக இருந்தாலும் இயற்கையை எதிர்த்து போராட முடியாது!  அப்படியானால் மனிதன் துன்பத்தை  அனுபவித்தேதான் ஆகவேண்டுமா?.   இல்லை.  துன்பம் என்பது செயற்கை (man made), மனிதர்கள்  உருவாக்கிக்கொள்வது. ஆனால் இயற்கையிலே உள்ளது இன்பம்தான்.     அதாவது துன்பம் என்பது மனிதனே ஏற்படுத்திக் கொள்வதாகும். எப்படி மனிதன் துன்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்? இன்பமே துன்பமாகிவிடுகின்றது.   இன்பம், தானாக துன்பமாக முடியாது.  இன்பத்தை நாடுகிறான் மனிதன். தேவையின் காரணமாக  இன்பத்தை நாடுவதில் தவறில்லை. இதனை சரியாக விளங்கிக் கொள்ள ஓர் உதாரணம் எடுத்துக் கொள்வோம். பசிக்கின்றது. பசி தீர்வதற்கு புசிப்பது தேவையே.  ஆனால் இன்பத்திற்காக புசிப்பதில்லை. சத்துள்ள உணவு  உண்ணலாம்.

இன்பமே துன்பமாக மாறுகின்றது

இன்பமே துன்பமாக மாற  யார் காரணம்?  இயற்கை காரணமாக இருக்க முடியாது.  மனிதனால்தான் இன்பம் துன்பமாகின்றது. இன்பத்தை நாடிய மனிதன் எப்படி அதனை துன்பமாக்கிக் கொள்கிறான்?  மனிதஅறிவின் மூன்று குறைபாடுகளான அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் இன்பத்தை துன்பமாக்கிக் கொள்கிறான்.  இதுவரை (1911 வரை) இன்ப துன்ப  அறிவியல் உருவாகவில்லை.  இப்போது(1911 ற்கு பிறகு) இன்பத்தின் அறிவியல் வேதாத்திரி அறிவியலில் உருவாகியுள்ளது.

வேதாத்திரிய இன்ப துன்ப அறிவியல் என்ன கூறுகின்றது?

இன்பம் துன்பமாக மாறுவதற்கான காரணம் எளிமையானது?  தமிழில் எளிமையான இரு வார்த்தைகள் உள்ளன.   அவை அளவு(Limit), முறை(Method). இவ்விரண்டு வார்த்தைகளும் அதன் பொருளும்  தமிழ் தெரிந்த யாவரும் அறிந்ததேதான். ஆனால் அவ்விரு வார்த்தைகள்  மகத்துவம் வாய்ந்தது என்பது யாவரும் இதுவரை அறிகிலர்.  எளிமையான வார்த்தைகள் இரண்டும் புனிதமான வார்த்தைகளாகியது திருவேதாத்திரியத்தால்.  ஞானத்தின் திறவுகோல்கள் அவ்விரண்டு வார்த்தைகளும்.  ஞானிக்கு லட்சணம் அளவும், முறையும் காப்பது என்பார் நம் குருநாதர்,  இன்பம் துய்க்கும்போது அதில் மயங்காது அளவையும், முறையையும் பின்பற்றினால் துய்த்த அந்த இன்பம் துன்பமாக மாறாது.   இல்லையெனில் அளவு மீறும்போதும், முறை மாறும்போதும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது.  எப்படி துன்பமாக மாறிவிடுகின்றது என்பதில்  ஐயம் ஏற்படுகின்றது மனிதனுக்கு. அளவு மீறும்போதும்,  முறை மாறும்போதும்  இன்பம் எப்படி துன்பமாகின்றது என சிந்தித்தால் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களாலேயே இதற்கு விடை காணமுடியும்.   உதாரணம் ஜாங்கிரி உண்பதனை எடுத்துக்கொள்வோம்.  ஆரம்பத்தில்  இன்பமாக இருந்த ஜாங்கிரி அளவுக்கு அதிகமாக  உண்டால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்த ஜாங்கிரி துன்பமாக மாறுகின்றது.  அதாவது சலிப்பு ஏற்படுகின்றதல்லாவா? 

     இருப்பினும் இன்பம் துன்பமாக மாறுவதில் உள்ள அறிவியலை அறிவு அறிந்துகொள்ள அவா (மற்றொரு ஐயம்). ஏற்படும்.  எப்படி அளவும், முறையும் இன்பத்தை துன்பமாக்குகின்றது என்கின்ற வினா எழுகின்றது. இதற்கு வேதாத்திரிய அறிவியலில் இன்னொரு இயலான காந்த இயலை அறிந்துகொள்ள வேண்டும். காந்த இயலை முழுவதுமாக இச்சிந்தனையில் அறிந்து கொள்ள இயலாது. அதனை பின்னாளில் விரிவாக அறிந்து கொள்வோம். ஆனால் எவ்வாறு இன்ப துன்பத்தில் காந்தம்(சீவ காந்தம்) இடம்பெறுகின்றது என்பதனை மட்டும் அடுத்த அறிவிற்கு விருந்தில்புலன் மயக்கம்’ என்கின்ற தலைப்பில் அறிந்துகொள்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்!                                                   வளர்க அறிவுச் செல்வம்!!