அறிவிற்கு விருந்து – 289

வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

அறிவிற்கு விருந்து – 289.

இனியொரு விதி செய்வோம்-3

10-05-2020—ஞாயிறு

இயற்கை/இறை நீதி எதுவாக இருக்க முடியும்?

வாழ்க வளமுடன்!

உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது ”

– வேதாத்திரி மகரிஷி.

“அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துணை அருளாளர்களையும் நினைவு கூர்கின்ற” வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகின்ற குருவணக்க யுக்தியின் படி இன்று மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணையுடனும். வழிகாட்டுதலிலும் இன்றைய சிந்தனையைத்  தொடர்வோமாக! 

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!   

          29-04-2020 அன்றைய சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய சிந்தனையைத் தொடர்கிறோம்.  அன்று இயற்கையும் இறையும் ஒன்றே என்பதனை உறுதி செய்தோம்.    இயற்கை நீதி / இறை நீதி என்பது என்ன என்று ஆராய்வோம் என்பதோடு அன்றைய சத்சங்கத்தை முடித்துக் கொண்டது நினைவிருக்கும். இயற்கை நீதி / இறைநீதி எது என்பது இயற்கை / இறை  தானாக மாற்றம் அடைந்ததுபோல்  தானாக இயற்றப்பட்டது இல்லை. அது ஒரு எழுதப்படாத சட்டம்   (can be understood as inbuilt mechanism or due to the inner purpose of entelechy of Nature/Almighty). அந்த எழுதப்படாத ஒரு சட்டத்தைக் காக்கவே எல்லா நாடுகளிலும் அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்களை  எழுதிக்/இயற்றிக்கொண்டு வருகின்றன. பல்வேறு சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.  புதுப்புது குற்றங்கள் நூதனமுறையில் வளர்ந்து கொண்டேதான் போகின்றன.

சட்டப்படிப்பு தேவையில்லை இயற்கை/இறை நீதியை அறிந்து கொள்வதற்கு

    வாழ்வின் வளத்தை அதிகரித்துக் கொடுக்கும் விஞ்ஞானத்தை நேர்வழியில் பயன்படுத்தாமைக்கு,

       விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலேயே உச்ச கட்ட கண்டுபிடிப்பான கணினி அறிவியலில் 

       பெருமளவில் பெருகிவரும்  cyber crimes,

       கணினி உலகையே நிலைகுலையச் செய்ய  வேண்டுமென்றே virus  போன்றவைகளை  

       செயற்கையாக உற்பத்தி செய்து கணியியை செயல் இழக்கச் செய்வது  போன்ற

       அநாகரீக  செயல்களே உதாரணங்களாகும்.

       இயற்கைநீதியை/இறைநீதியை அறிந்துகொள்ள சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை பயில வேண்டியது இல்லை. புலன்வழி வாழ்க்கை நடத்துகின்ற பாமரன் கூட(common man) எழுதப்படாத இயற்கைநீதியை/இறை நீதியை ஆறாம் அறிவால் உணர்ந்துகொண்டு, அறிந்துகொண்டு, மதித்து நெறியுடன் வாழ்தலே  துன்பமிலா இன்பமான வாழ்விற்கு வழிகாட்டும்.  மேலும் கருத்தியல் (போதனை) மற்றும் செய்முறை (சாதனை) தேர்வைக்கொண்ட மனவளக்கலையால் இறையுணர்வு பெற்று,   முதல் வெற்றியாளருக்கு* அடுத்த இரண்டாம் வெற்றியாளர்களுக்கு மத்தியில்  இடம் பிடிப்போம். 

       “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என உறுதியளிக்கும்

    சிறப்பு மிகு மனவளக்கலையின் முதல் வெற்றியாளரும்*,

    தனது முதல் வெற்றியால் மனவளக்கலைக்கே பெருமையைச்  சேர்த்தவருமான  

    நம் குருநாதர்  வேதாத்திரி மகரிஷி அவர்களின் புனித வாக்கினை புனிதமாக்கி,

    அவரது சீடருக்குரிய  இலக்கணத்தோடு அவருடைய எண்ண ஓட்டத்தில் வாழ்வோம்.   

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

 ஆட்சியின்றி ஆளுகின்ற ஒழுங்காற்றல் இயற்கை/இறை

       இயற்கையில் உள்ள அமைப்புகள் எல்லாம் ஒழுங்குடன் இயங்கி வருகின்றன.  இயற்கை என்பது  ஒழுங்குடன் இயங்கும் ஆற்றல் என்பதால் இயற்கையை/இறையை ஒழுங்காற்றல் என்று வெறும் வார்த்தையால் மட்டுமே அழைக்காமல், இயற்கை/இறை மீது உள்அன்புகொண்டு போற்றி ஆனந்தத்துடன்   அழைக்கின்றோம்.    புவியில் மனிதர்களால் ஆட்சி நடக்கின்றது.  ஆனால் பிரபஞ்சத்தை இயற்கை/இறை ஆர்பாட்டமில்லாமல் அரூப ஆட்சி நடத்துகின்றது. அதாவது ஆட்சியின்றி ஆண்டுகொண்டிருக்கின்றது.  இயற்கை/இறை.   நெறி தவறாதும், முறை தவறாதும் செங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றது.   மனிதர்களால் நடக்கும் ஆட்சியில் சட்டம், ஒழுங்கை உறுதிபடுத்த காவல்துறை, உளவுத்துறை என்று பல துறைகள் உள்ளன. ஆனால் இயற்கைக்கு/இறைக்கு அண்டசராசரங்களை மட்டுமே ஆட்சி செய்வதோடு அதன் ஆட்சி முடிந்துவிடவில்லை.  குறிப்பாக மனித இனத்தன்மாற்றத்தையும் உள்ளடக்கிய உயிரினத் தன்மாற்றத்தையும் கண்காணிக்க/நிர்வகிக்க வேண்டியுள்ளது.  

     துவைதத்தில் கூறவேண்டுமெனில், தன்மாற்றத்தில் ஐந்தறிவு உயிரினங்களாகி தொடர்ந்து நடந்து வருகின்ற ஐந்தறிவு உயிரினங்களின் வாழ்வால்  இயற்கைக்கு/இறைக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் மனிதஇன வாழ்வால்தான் இயற்கைக்கு/இறைக்கு சொல்லொன சிக்கல்களும்/சிரமங்களும் ஏற்பட்டுவிட்டன. இதற்குமேலும் மனிதஇன வாழ்வால் இயற்கைக்கு/இறைக்கு சிக்கல்களையோ/சிரமங்களையோ ஏற்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க சடுதிமாற்றத்தால் (sudden exposure)  மலர்ந்ததுதான்  திருவேதாத்திரியம். ஆன்மா நினைக்க அல்லது கேட்க  பேரான்மா நிறைவேற்றும் (Fraction demands Totality supplies) என்கின்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம் நடைபெற்று வருவதால், நல்மனிதர்களாகி மனிதர்கள் வாழவேண்டும் என்கின்ற அவசியத்தை ஆதங்கத்துடன்  எண்ணமாகக் கூறவேண்டியுள்ளது.  இப்படி துவைதத்தில்  கூறினாலும்  நாம் கடைபிடிப்பது சுத்த அத்வைத விஞ்ஞானம்தான்(Pure Advaidic Logic / Science ).  இவ்விடத்தில் நம் குருநாதர் மொழிந்ததை நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்.

ஏன் அசைந்தோம் என்றிருக்கும். யாருக்கு?

    ஒரு முறை ஆளியாறில் பிரம்ஞானப் பயிற்சி நடத்தும்போது  “ஏண்டா அசைந்தோம்? மனித வடிவில்  அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறோமே” என்றிருக்கும் இறைவனுக்கு  என மகரிஷி அவர்கள் நகைச்சுவையாகக் கூறி சிரித்ததை  நினைவுகூர்ந்து இப்போதும் மகிழ்வோம்.  மகிழ்வதோடு மட்டுமல்லாது உலகில் நம்மையும் உள்ளடக்கிய உலக ஆன்மாக்கள் அனைவரும் திருந்தி  பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க நீதிநெறி உணர்ந்த மாந்தர்களாக வாழவேண்டும் என்கின்ற விருப்பத்தை எப்போதும், அல்லும் பகலும் மனதில் விழிப்புணர்வோடு சுழலவிட்டுக்கொண்டே இருப்போம். அவர் சிரித்ததற்கான காரணத்தை மேலும் விளங்கிக்கொள்ள இறைவணக்கம் இரண்டாம்  பாடலிலே கல்லார்(மனிதன் அறியாமையில் செய்யும்) மற்றும் கற்றார்(மனிதன் அறிந்து செய்யும்) செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன் இறைவன் என்பதனையும் நினைவில் கொண்டுவந்து வெறும் வார்த்தைக்காக அவர் சொல்லவில்லை என்றுணர்ந்து  அச்சிரிப்புடன்  இணைத்து சிந்தித்து பயன் பெறுவோம்.  நலம் பெறுவோம். நல் வாழ்வு வாழ்வோம் நாம்!!!

இயற்கை/இறை நீதி எது  என்பது பற்றிய நமது முடிவு     

      இதுவரை சிந்தித்ததில் என்ன முடிவிற்கு வரவேண்டியுள்ளது நாம்?  இயற்கை/இறை ஆட்சியின்றி செங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. எழுதப்படாத சட்டத்தால் இயற்கை/இறை ஒழுங்குடன்(Unfailing Law of Nature) இயங்கி வருகின்றது. 

விளைவிற்கு விதை செயலே!

     உலகில் இரண்டு நடந்து கொண்டு வருகின்றன. ஒன்று செயல். மற்றொன்று விளைவு. மனிதன் அனுபவிப்பது விளைவைத்தான். விளைவு தானாக வராது. விளைவிற்கு மூலம் செயல். விளைவுக்கு விதை செயல்.  ஒன்றை அனுபவிக்க விரும்பினால் மனிதன் செயல் செய்துதான் விளைவை அனுபவிக்க முடியும்.  எதனை அனுபவிக்க விரும்புகிறானோ ஆறாம் அறிவின் நுண்மாண்நுழைபுலன் திறமையால் செயல் புரியும் முன்பே விளைவிற்கான செயலை தீர்மானித்து செயல் புரிய வேண்டும். விளைவு தீமையாக வந்தது  என்றால் மனிதன் விளைவை முன்கூட்டியே சரியாகத் தீர்மானிக்கவில்லை என்றுதான் பொருள்.

சற்று சிந்தித்துப் பார்ப்போமே!

இயற்கையின்/இறையின் ஆட்சியில் செயல், விளைவு ஆகிய இரண்டுமே மனிதனிடம் இருக்க முடியுமா?    செயல் புரிய மனிதனுக்கு உரிமை உள்ளது. ஆனால் தான் செய்யும் செயலுக்கு தான் விரும்புகின்ற விளைவையே கொடுக்க முடியுமா மனிதனால்?  அவ்வாறு இருக்குமானால் மனித சக்திக்கு அப்பால் உள்ள இயற்கை சக்திக்கு / இறைசக்திக்கு என்ன முக்கியத்துவமும், பெருமையும் உள்ளது? தீய செயலை செய்துவிட்டு அதற்கு அவன் விரும்பும் நல்விளைவையல்லவா ஏற்படுத்திக் கொள்வான் மனிதன். அது நீதியாக இருக்க முடியுமா? 

ஒரு கற்பனை!

     ஒரு கற்பனைதான் இது!  தேர்வில் மாணவன் விடை எழுதுகின்றான். விடையைத் திருத்துபவர் ஆசிரியர்.  மாணவனையே அவன்  எழுதிய விடையை திருத்திக் கொள்ளுமாறு அனுமதிக்க முடியுமா?  அப்படி அனுமதித்தால் எல்லா மாணவர்களும் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்து மகிழ்வர்.  தேர்ச்சிக்கு தகுதியில்லையாயினும் எல்லோரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டியதுதான். இது ஒரு கற்பனைதான். உண்மையை உண்மையாக விளங்கிக் கொள்ள அறிவு நாடும் ஒரு கற்பனையே.  ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவைப் கொடுக்க வல்லது இயற்கை/இறை. இயற்கைநீதி/இறை நீதி என்பது செயலுக்கு ஏற்ற விளைவைக் கொடுப்பதுதான்.

இயற்கைநீதி/இறைநீதி மிக மிக எளிமையானதுதான்(Law of Nature/Consciousness is very very simple)

    ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற மூன்று வார்த்தைகளைக் கொண்டது இந்த நீதி. இந்த நீதியின் வார்த்தைகளில் சிக்கலில்லாத(intricate), பிரிவு(பகுதி)கள் இல்லாத(not consisting of various sections of Law) எளிமையான சட்டம். So to say Law of Nature/Concisiousness is not complex, but very simple.  ஆனால் இந்த எளிய இயற்கை நீதியை/இறைநீதியை இயற்கையின்/இறையின் தன்மாற்றமாகிய மனிதகுலம் புரிந்து கொள்ளவில்லை. அறியாமயைிலும் இருக்கின்றது. அறிந்தும் அலட்சியப்படுத்திக் கொண்டும் இருக்கின்றது.  அறிந்தும் உணர்ச்சிவயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளாகியும் இன்னமும் இந்த நியதி மனிதகுலத்தால் மதிக்கப்படுவதில்லை, போற்றப்படுவதும் இல்லை.  இன்று மனித குலத்தில் நிலவுகின்ற  சிக்கல்களுக்கு மேல் முளைக்கின்ற சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ள காரணமே ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கைநீதியை/இறைநீதியை மதியாமை.  ‘நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்’ என்கின்ற ஆன்றோர் மொழியினை அறிந்துகொள்ள வேண்டும்.  அதாவது இயற்கையின்/இறையின் ஆதிநிலையான ஒழுங்காற்றல்(பேரறிவு) தன்மாற்றமாகியதுதான்  மனிதன்.  அவ்வாறிருக்கும்போது மனிதன் வாழ்க்கையில் ஒழுக்கத்தை தவறாது கடைபிடித்து ஒழுங்குடன் வாழவேண்டும்.  மனிதன் ஒழுங்காற்றலான பேரறிவின்  அங்கம்தானே மனிதன்!   மனிதகுலம் இன்னமும் தன்பிறப்பின் நோக்கம் அறியாது மகாகவி பாரதியார் “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?” என்று  கூறுகின்ற நிலையில்தான் மனிதகுலம் புலன் வழி வாழ்க்கை ஒன்றையே பிரதானமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.   ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’  என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  ஆனால் மகாகவி பாரதியார்,

     “புலனில் வாழ்க்கை இனியுண்டோ? –

        நம்மில் அந்த  வாழ்க்கை இனியுண்டோ?

என்று இரண்டுமுறை அழுத்தமாக, உறுதியாகக் கூறுகிறார். 

வேறு என்ன வாழ்க்கை இனி உண்டு என்கிறார்?

மேலும் அவர் கூறுவதாவது

“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”

   என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

    இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

இந்திய உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

    இந்தியா உலகிற் களிக்கும். என்று மூன்று முறை அழுத்தமாகக் கூறியுள்ளார் இருபதாம்  நூற்றாண்டில்.  அருளாளர்களின் அவதார  வரலாறு  முடிவுறா  தொடர் ஓட்டப் போட்டி போல் (never ending relay race) நடந்து வருவதால் மகாகவி பாரதியாரைத் தொடர்ந்து  அதே நூற்றாண்டில் வேதாத்திரி  அவதரித்து முன்னவரின் உள்ளக்கிடக்கையை   பூர்த்தி செய்துள்ளார்.     

    அருளாளர்களின் அவதார  வரலாறு  முடிவுறா  தொடர் ஓட்டப் போட்டி என்பதால், மகாகவி பாரதியார் ஓடி வந்த தொடர் ஓட்டத்தில் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரஷி அவர்கள் எவ்வாறு ஓடி இயற்கை/இறை தனக்கு இட்ட புனிதப்பணியினை பூர்த்தி செய்துள்ளார் என்பதனை வரும் அறிவிற்கு விருந்து பகுதியில் அறிவோம். 

வாழ்க திருவேதாத்திரியம்!      வளர்க திருவேதாத்திரியம்!!

          . . .தொடரும்                                                                                                                 

வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!