அறிவுத் திருக்கோயில்

Temple of Consciousness

28-10-2014

அறிவுத் திருக்கோயிலைப் பற்றி மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவா். மற்றவர்களுக்கு அறிவுத்திருக்கோயில் என்பது வியப்பாகக்கூட இருக்கலாம். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகா், அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்ளதை அறிவோம். முருகன் கோயில் முருகனுக்கான கோயில் என்பதுபோல் அறிவுத் திருக்கோயில் என்பது அறிவிற்கானக் கோயில். அறிவிற்கு கோயில் இருக்கின்றது என்றால் அறிவு தெய்வமா என்கின்ற ஐயம் எழலாம். மகாகவி பாரதியார் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், காளி ஆகிய உருவகக் கடவுளர்கள் மீதான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு பக்திப்பாடல்களை இயற்றிவரும்போது, மகாகவி பாரதியார்   “தவமே புரியும் வகையறியேன்” என்று ஒரு கவியில் ஆதங்கப்படுகிறார். பிறகு ஞானப்பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் அறிவையே தெய்வம் என்கிறார்.

அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ?
………………………………………..
………………………………………..
சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? …..
………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி பாரதியார்.

429_Subramanya_Bharati

அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும் “துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்” என்கிறார். அறிவைத் தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory), பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத் தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம் தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில் ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி வருகின்றன. அரிதாக இருந்து வந்த  “தவம் இயற்றுதலை” எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம் இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில் பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத் திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.


1282131249_315467b

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால், அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில் சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில் இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.

அகவழிபாட்டில் சிலைகள் கிடையாது. உள்ளம் தான் அகம் எனப்படுகின்றது. உள்ளத்திற்குள் எவ்வாறு சிலைகளை வைக்க முடியும்? “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலா் வாக்குப்படி, மேலும் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதை அறிந்துள்ள மனவளக்கலைஞர்கள், உள்ளத்திலுள்ள இறை மீதே மனம் வைத்து அகத்தவ இறைவழிபாடு (meditation)செய்கின்றனர்.  புலன்களைக் கடந்து உள்ளே சென்றால் கடவுளைக் (கட+உள்=கடவுள்) காணலாம்.

இறைவனே உயிராக மனமாக அறிவாக இருக்கின்ற தெளிவினை உடையவர்கள் அகவழிப்பாட்டினை மேற்கொள்கின்றனர், அதாவது உயிரிலிருந்து மனம் பிறப்பதால் புறத்தே புலன்கள் வழியாகச் செல்கின்ற மனதை திருப்பி உள்ளே செலுத்தி உயிர் மீது மனம் வைத்து தவம் செய்வதுதான் அகவழிபாடு. எனவே அறிவுத் திருக்கோயில்களில் சிலைகள் அவசியமில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் உள்முகமாக மனதைத் திருப்பி (Inner Travel) தெய்வமாகிய உயிர் மீது மனதை வைத்து தவம் செய்கின்றனா். ஆகவே அறிவுத் திருக் கோயில்களில் சிலை வழிபாடு இல்லை.

கோயில் என்பது இறைவனைத் தொழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதக் கட்டிடம். கோயிலுக்கு ஆலயம் என்றும் பெயா். காரணம், கோயிலுக்குச் செல்லும் பக்தன் கடவுளை வணங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் கோயிலுக்கு ஆலயம் என்கின்ற பெயரையும் வைத்துள்ளனா். “ஆலயம்” என்கின்ற சொல்லில் ஆன்மா என்கின்ற சொல்லின் முதல் எழுத்தான “ஆ” வையும் “லயம்” என்கின்ற சொல்லையும் இணைத்து ஆலயம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆன்மா லயமாவதற்கான புனித இடம்தான் ஆலயம், கோயில்.

அடுத்ததாக ஆன்மா, லயம் என்கின்ற சொற்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் ஆலயம் ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கம் தெரிய வரும். ஆன்மா என்பது உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்(soul). ஆன்மாவை உயிர் என்றும் கொள்ளலாம் தற்போதைக்கு.  “லயம்” என்றால் ஒன்றுபடுதல் என்பதாகும். ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஆன்மா எதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதனையும் தெரிந்து கொண்டு அதுபோல் வழிபாடு செய்தால் ஆலயம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமையாக நிறைவேறும்.

வாழ்க வளமுடன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நாளை சந்திப்போம்.

………………… தொடரும் நாளை